பாரதி யார் நாடகம் முடிந்தவுடன் இதை எழுதியிருக்க வேண்டும்!
அமரன் படத்தில் ‘அச்சமில்லை! அச்சமில்லை!!’ பார்த்த பிறகாவது பகிர்ந்திருக்க வேண்டும்!!
டிச. 11 பிறந்த தினத்திற்காகவாது முடித்திருக்க வேண்டும்.
மனதிலேயே இருப்பதை எப்படி முகநூலிற்கான கவர்ச்சிகரமான பதிவாக்குவது?
அமெரிக்காவில் வசிக்கும் முக்கால்வாசி (நான்கில் மூன்று) பேர் தங்கள் மழலைச் செல்வங்கள் பங்கேற்காவிட்டால் பார்க்க வர மாட்டார்கள் என்னும் அங்கலாய்ப்பு எழக்கூடாது.
பாரதியார் பற்றித்தான் எல்லாம் தெரியுமே என்று பாக்கி 25% சதவிகிதத்தினர் ‘பாரதி சின்னப் பயல்’ ஆக தங்களை எண்ணுகிறார்கள் என்னும் விமர்சனம் சொல்லக்கூடாது.
ஞாயிறு பின் மதிய வேளையில் – சாப்பிட்டோமா… தூங்கினோமா! என்று ஓய்வு வேளையில் இந்த அரங்கப் புயலைக் கொணர்ந்தோம் என்னும் ஏற்பாட்டு புலம்பல்களைப் பகிரக் கூடாது.
இதை எழுதுவதால் பாஸ்டன் தமிழர் அடுத்தடுத்த நிகழ்வுகளுக்கு வரமாட்டார்கள் என்னும் முன் முடிவு.
நியு இங்கிலாந்து தமிழ்ச்சங்கமோ; தமிழ் மக்கள் மன்றமோ; மாஸசூஸட்ஸ் தமிழ் அமைப்புகளோ; தமிழ்ப் பள்ளிகளோ; சிஷு பாரதி ஆசிரியர்களோ – எல்லோருமே ‘நல்லா நடக்கட்டும்!’ என வாழ்த்தினார்களே தவிர, நுழைவ்வுச்சீட்டையோ, தங்கள் நண்பர்களையோ, குடும்பத்தினரையோ முடுக்கிவிட்டு அலைகடலென திரளாமல் ஐபிடிவி.யில் அரதப் பழசான ‘கயல்’, ‘இdli சட்னி காபி’ என்று நெடுந்தொடர் பிக் பாஸாக உதாசீனாம் செய்தது பின் விளைவு.
புலம்பல் போதும்.
இரமணன் வந்தார்; Isaikkavi Ramanan
நியூ ஜெர்சி தமிழர்கள் அரங்கேறி ஸ்டேஜ் ஃப்ரெண்ட்ஸ் என துணை நின்றார்கள்.
தமிழ் மக்கள் மன்ற அறங்காவலர்களும் அமைப்பாளர்களும் நிகழ்ச்சிக்கு ஆரம்பம் முதல் இறுதி வரை கரம் பற்றி கூட நடந்தார்கள்.
நன்றி டி.எம்.எம். Tamil Makkal Mandram, USA
பாரதியை எங்களுடன் கர்ஜிக்கவிட்ட இசைக்கவிக்கு நன்றி.
பிராட்வே அரங்கை உருவாக்கிய எஸ்.பி. கிரியேஷன்சுக்கு நன்றி. SB Creations / Raman Sbs
அவரை பாஸ்டனுக்கு அழைத்து நாடக நடிகர்களை உபசரித்து என் தொல்லைகளைப் பொறுத்துக் கொண்ட ரமணனின் மகன் ஆனந்திற்கு அவர் குடும்பத்திற்கும் கோடானுகோடி நன்றி.
சரி…. நாடகம் எப்படி?
இரமணன் எழுதிவிட்டார்.
இணையத்திலும் கிடைக்கிறது.
அந்த நிகழ்வு முடிந்தவுடன், நம்மவர், என்னிடம் கேட்ட கேள்வி: “வீடியோ கிடைக்குமா?”
இந்த மாதிரி கொண்டாட்டம் எல்லாம் மனதிற்கு விரும்பியவர்களுடன் நேரில் பார்த்து ரசிக்க வேண்டிய நிகழ்ச்சி.
தமிழர்கள் எதையும் திருட்டி விசிவி-யில் பார்த்து ரசிப்பவர்கள்.
அவர்களுக்கு இந்த மனநிலை வாய்க்குமா!
அந்த அரங்கிற்குள் பாராதியார் காலத்திற்கு சென்றிருப்பார்களா!?
அப்படியே அவரின் எண்ணங்களுக்குள், பாடல்களுக்குள், வசன கவிதைகளுக்குள் தங்களை மீட்டெடுப்பார்களா!
இருநூறு டாலர் கொடுத்து (நியூ யார்க்கில்) லயன் கிங் பார்ப்பார்கள்.
வேட்டையனுக்கு (ஒருவருக்கு) 28$ கொடுப்பார்கள்.
இளையராஜாவின் திரைப் பாடல்களை ரஞ்சனி – காயத்ரி பாடினால் ($50) காசு கொடுத்து லயித்துக் கேட்பார்கள்.
அவர்களிடம் எட்டயபுரத்துக்கும் காசிக்கும் புதுச்சேரிக்கும் திருவல்லிக்கேணிக்கும் அழைத்துச் செல்கிறோம் என்றால் – ‘நாங்களே போயிக்கிறோம்!’ என்று ஒதுங்கி விடுகிறார்கள்.
’என் பையன்…’, ‘என் மகள்…’, என் குடும்பம் என்று ரத்தமும் சதையுமாக தங்களின் வழித்தோன்றலின் தத்தக்கா பித்தக்கா ஆட்டத்தை ரசிப்பர்வகள், – பாரதிதாசன், சுப்பிரமணியம் சிவா, வ.உ.சி. என்றால் எதற்கு அந்த ஆளையும் அவரின் விழுமியங்களையும் இலட்சியங்களையும் தெரிந்து கொள்ள வேண்டும்… என ஜகா வாங்குகிறார்கள்.
’பாரதி யார்’ நாடகம் என்பதை விட அனுபவம்.
பாரதியாரின் வாழ்வு; பாரதியின் நியாயங்கள்; பாரதியின் பாடல்கள்; பாரதியின் சொற்றொடர்கள்; பாரதியின் எண்ணங்கள் – ஏற்கனவே நீங்கள் சீனி. விசுவநாதனாக இருந்தாலும் பாரதியைக் கண் முன்னேக் கொணரும் மகா காவ்யம்.
’பாரதி யார்’ அரங்க அனுபவம் என்பது சொல்லால் எழுதப்பட்டு புரிந்து கொள்வது அல்ல. அந்த அரங்கத்தில் பல்வேறு பார்வையாளர்களருடன் ஒருங்கிணைந்து இலட்சியப் பாதையில் பயணிக்க உறுதி மொழி கொள்வது.
அடுத்த முறை இது போன்ற வாய்ப்பைத் தவற விடாதீர்கள்.



















