துக்ளக் சோவிற்கு மிகவும் பிடித்தமான மயிலை ஸ்ரீனிவாசர் கோவிலுக்கு பெருமாள் அழைத்திருந்தார். பிரும்மோத்ஸவ அழைப்பிதழும் கொடுத்தார். புழு, பூச்சிக்கும் அடைக்கலம் உண்டென்பதை, நரசிம்மர் மேல் கரப்பான் பூச்சி(கள்?) ஊர்வதை வைத்து உணர்த்தினார்.
முன்னுமொரு காலத்தில் ஏர் இந்தியாவில் பயணம் சென்றபோது நட்ட நடுவில் ஒரேயொரு வெள்ளித்திரை. அதில் ஒரேயொரு படம். அந்தப் படத்தில் டயான் லேன் (Diane Lane) முயங்குவதைப் பார்த்து, பக்கத்து இருக்கை பாப்பா ‘அங்கிளும் ஆன்ட்டியும் ஏன் அம்மணத்தோண்டியா சண்ட போடறாங்க?’ என்று கேட்க வைத்தார்கள்.
தோஹாவில் இருந்து கிளம்பிய கத்தார் விமானத்தில் வந்த ‘வாரணமாயிரம்’ மகா சைவம். ‘அஞ்சல… அஞ்சல’ பாட்டுக்கு கூட கத்திரி. ஒழுக்கசீலராக்குவதில் வளைகுடாவை விஞ்ச இன்னொரு குடா இருக்கிறதா என்ன?
நியு யார்க்கில் இருந்து கிளம்பிய விமானம் ஏ1 தரம். ஆயிரம் படங்கள்; ஆயிரத்தொரு விளையாட்டுகள்; ஆயிரத்திரண்டு பொழுதுபோக்கு வைத்து அசத்தி இருந்தது கத்தார் வான்வழி. அதில் ‘லாடம்’ படத்தின் ஆங்கிலப் பதிப்பான ‘Lucky Number Slevin’ கொஞ்சமும், நடுத்தர வர்க்க நடு வயது இந்தியரின் வாழ்க்கைக்கு பொருத்தமான ‘Revolutionary Road’ கொஞ்சமும், ‘Seven Pounds’ முழுதுமாக தரிசனம் கிடைத்தது.
வந்த சூட்டோடு வலையுலக முன்னாள் பதிவர் சிலரோடு சந்திப்பும் இனிதே நடந்தேறியது. பிரபாகரன் எங்கே இருக்கிறார், தமிழக முக, சாரு, ஜெயமோகன் என்று மைய நீரோட்டத்தை விட்டு விலகாத உரையாடல்.
தானி ஓட்டுநர்களுடன் பேச்சுத் தொடுத்ததில் ஜெயலலிதாவின் அலம்பலை நாடி பிடித்து வைத்திருக்கிறார்கள். ‘தனி ஈழ அறைகூவல் எல்லாம் டுபாக்கூர்’ என்றார். ‘அவங்க நாடு; அவங்க பிரச்னை’ என்றார்.
இன்னொருவர் ‘பிரபாகரனும் ராஜபக்சேவும் டீலு போட்டாங்க. பிரபாகரன எங்காவது கண்காணாத ஊருக்கு அனுப்பிவைச்சுட்டு, அவன சுட்டுட்டதா கத கட்டிவிட்டுட்டு, நம்ம மக்கள சாவடிக்கிறான் சிங்களக்காரன்’ என்று முடித்தார்.
சென்னையில் ஒரு பேனர் கண்ணில் படவில்லை. சுவரொட்டியும் காணக் கிடைக்கவில்லை. தோரணம், வண்ணவரைபடம் எல்லாமே மாயம். அந்தக் காலத்தில்… ஹ்ம்ம்ம்…
குருவாரம். ஷீர்டி சாய்பாபா சின்னத்தில் தேர்தலில் நின்றால் நிச்சயம் வெற்றி. ஆனால், இந்தியா என்ன ஐரோப்பாவிலா இருக்கிறது? தமிழக பொதுசனம் ஆன்மிகத்தையும் அரசியலையும் என்றும் கலந்து பார்த்து வாக்களிப்பதில்லையே!
இந்தியா இறங்கியவுடன் ப்ளாக்பெரி உயிர் கிடைத்தது. கையளவு அமெரிக்க செல்பேசியில் சகலமும் உடனடியாக தெரிகிறது. அமெரிக்காவில் கூட தொழில்நுட்பம் இம்புட்டு முன்னேறி இருக்குமா? இந்த தடவை இந்தியா வந்தாலும் கூட இணைபிரியாத இணையம்.
Posted in Tamil Blog
குறிச்சொல்லிடப்பட்டது Airports, Airways, Auto, Blackberry, Chat, Chennai, Cinema, Doha, Eelam, Eezham, Films, GoSL, Life, LTTE, madras, Meets, Movies, Net, Opinions, Personal, Prabhakaran, Qatar, SL, Srilanka, Tech, TN, Travel, Visits, Web