Tag Archives: Sports

அம்பையர் அவுட்!

மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்!’ என்று ஸ்ரீகிருஷ்ணர் சொல்லலாம்.
கிராண்ட் ஸ்லாம்களில் சிறந்தது அமெரிக்க ஓப்பன் டென்னிஸ்.

ஏன் என்றால், இங்கே பந்து, ‘உள்ளேவா? வெளியேவா?’ என சோதிக்கும் நடுவர்கள் கிடையாது.

கிரிக்கெட்டுக்கும் இது தேவை. சுவாரசியமான ஆட்டத்தின் நடுவே அந்த கறுப்பு+வெளுப்பு ஆடை மத்தியஸ்தர்கள் தேவையே இல்லை.
ஏன்?

1. எல்லாவற்றுக்கும் தொலைக்காட்சியில் அசரீரியாக ஒலிக்கும் மூன்றாம் நடுவர் இருக்கிறார். அவர் போதும்.

2. ஒரு ஓவருக்கு ஆறு பந்து. அதை அரங்கில் இருக்கும் வெள்ளித்திரை காண்பிக்கும். அது போதும்.

3. தொப்பியையும் கம்பளி ஜாக்கெட்டையும் தாங்கிக் கொள்ள கோட் தலைப்பாமாட்டி போதும்.

4. பந்து வீசுபவர் எல்லைக் கோட்டைத் தொட்டாரா; இடுப்புக்கு மேல் போட்டாரா என்பற்கு எல்லாம் கேமிராக்கள் போதும்.

5. காலில் வாங்கி ஓடினாரா, கையைத் தொட்டுப் போனதா எல்லாம் தப்பு தப்பாகவோ, குத்துமதிப்பாகவோ சொல்லாமல் இருக்க கணினி போதும்.

6. சண்டையோ கலகலப்போ சூடான தடித்த வார்த்தைகளோ இருந்தால்தான் ஆட்டம் களை கட்டும். அவற்றை விலக்கி விடாமல் இருக்க நடுவர் இல்லாவிட்டால் போதும்.

7. பந்து, ஆடுகளம் எல்லாம் தேர்ந்தெடுக்க ஐ.சி.சி (அல்லது பி.சி.சி.ஐ.) போதும்

8. இடக்கை ஆட்டக்காரரும் வலக்கை ஆட்டக்காரரும் ஆடும் போதும் அங்குமிங்கும் ஒட சதுரக்கால் அம்பையர் வேண்டாம். ஃபீல்டிங் அரணை மாற்றுவது மட்டும் போதும்.

9. அம்பையர் மாதிரி நடுவில் நின்று கொண்டு ஆட்டத்தைப் பார்க்க வேண்டுமென்றால் காசு கொடுத்தால் போதும் என்னும் ஷரத்து வரவேண்டும்.

அந்த இரண்டு பேர் இன்னும் தேவையா? என்ன சாதிக்கிறார்கள்? எதற்காக இன்னும் ஏதோ வேலை செய்வது போல் நடிக்கிறார்கள்?

களவுபூசல் – லடாய் ப்ளே

ஜிம்பாப்வே இன்னும் கிரிக்கெட் ஆடுகிறது. தெரியுமா?

எப்படி தெரிய வைப்பது… இப்படித்தான்!

அயர்லாந்து நாட்டுடன் ஆன போட்டியில், சிக்கந்தர் ராஜா தன் மட்டையை ஓங்கிக் காண்பித்து ‘ஒண்டிக்கு ஒண்டி வரியா’ என ஜோஷ் லிட்டில் என்னும் பந்து வீச்சாளரை அழைத்திருக்கிறார். கர்ட்டிஸ் காம்ஃபர் என்னும் அயர்லாந்து வீரரும் சண்டைக்குத் தயாராக சிக்கந்தருடன் மல்லுக்கட்ட களமிறங்குகிறார். நடுவர் ஒருவழியாக கைகலப்பை விலக்கி விட்டிருக்கிறார்.

அதே போல் இந்தியாவில் கேப்பிடல்ஸ் அணியும் குஜராத் ஜியண்ட்ஸ் அணியும் போட்டியில் ஆடியிருக்கின்றனர்.

இந்த ஆட்டம் எல்லாம் எவர் பார்ப்பார்கள்? ஆனால், கவுதம் கம்பீரும் ஸ்ரீசாந்த்தும் இதைத் திரும்பிப் பார்க்க வைக்கின்றனர். இருவரும் அரசியல்வாதிகள். அதனால், வாய்ச் சவடாலுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டுமா… என்ன!?

ஆட்டத்தின் நடுவில் ஸ்ரீசாந்த்தை “எத்தன்” (ஃபிக்ஸர்) என அழைக்கிறார் கௌதம் கம்பீர். அசாரூதீன், ஜடேஜா, தோனி என்னும் நெடிய வரிசையில் ஸ்ரீசாந்த் சகதலப்புரட்டன். எந்த ஆட்டத்தில் எவர் ஆடுவார், எப்பொழுது தலைக்கு மேல் பந்து போடுவார், துடுப்பாட்டத்தில் என்னவெல்லாம் நடக்கும் என்பதை முன்கூட்டியே ஆரூடம் சொல்வது மட்டும் அல்லாமல், சொன்னதை சொன்னபடி நிறைவேற்றிக் காட்டுபவர்.

இப்பொழுது அவரிடம் புதிய பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. கிரிக்கெட் மழையில் மூழ்கித் தவிக்கும் பார்வையாளரை எப்படி உப்பு சப்பில்லாத உள்ளூர் போட்டிகளையும் பார்க்க வைப்பது?

எனவே, கீழ்க்கண்ட புதிய பவர்ப்ளே – லடாய் ப்ளே முறையை அறிமுகம் செய்யுமாறு பரிந்துரைக்கிறேன்:

  1. ஓரு போட்டியில் மூன்று சண்டைகள் வரை போடலாம். (டி10 ஆட்டம் என்றால் அதிகபட்சமாய் இரண்டு சண்டைகள்)
  2. ஒரு அணிக்கு ஒரு சண்டை. நடுவர்களும் ஒரு சண்டையைத் துவக்கலாம். சண்டைகள் ட்விட்டரில் வைரல் ஆனால், துவக்கிய அணிக்கு ஒரு புள்ளி கிடைக்கும். நடுவர் துவங்கினால், மூன்றாவது அம்பையரின் முடிவே இறுதி முடிவாகக் கொண்டு புள்ளிகள் கொடுக்கப்படலாம்/
  3. மட்டையை வைத்துக் கொண்டு அடித்துக் கொள்ளக் கூடாது. குறிபார்த்து பந்தை எறிவது என்றால் நாற்பது மீட்டராவது தள்ளி நின்று வீச வேண்டும்.
  4. ஒரு பந்தயத்தில் ஒருவர் அதிகபட்சமாய் ஒரு முறை மட்டும் களத்தில் குதித்து கட்டிப் புரண்டு சேற்றை வாரி இரைக்கலாம்

சண்டைகளை சமூக ஊடகத்திலும் தொடரலாம். விரைவிற் பரவுகின்ற வரையில் கொண்டு செல்லும் அணிக்கு ஒரு புள்ளி தரப்படும்.

பார்வையாளர்கள் பகுதியில் நடக்கும் கைகலப்புகளுக்கு மதிப்பெண் கிடையாது.

அப்படியாவது இந்த ஆட்டங்களை தொலைக்காட்சியில் பார்ப்பீர்களா? என்ன விதிகளை சேர்க்கலாம்? யார், யார் சிறப்பாக வாய்ச் சவடால் விடுபவர்கள்?

காற்றும் கழுகும் பறந்த சேப்பாக்கம்

சேப்பாக்கத்தை சி.எஸ்.கே ஆடும் போது பார்க்க வேண்டும் என்பது வாழ்க்கையில் பாக்கி இருக்கும் 47 இலட்சியங்களுள் ஒன்று. அது இல்லாத பட்சத்தில், ஆப்கானிஸ்தானும் பாகிஸ்தானும் மோதிய ஒரு நாள் ஆட்டம் காணக் கிடைத்தது.

நுழைவுச்சீட்டை வாங்கிக் கொண்டுத்த என் அண்ணாவிற்கு எம்.ஏ. சிதம்பரமே தெரியும் போல… அவர் விருந்தோம்பல் வழியாக அழைத்துச் சென்றார்.

பூரி, பிரியாணி, பிஸிபேளே பாத், பப்படாம், பாயாசம், பொறித்த கோழி, பரோட்டா என ஒரு மணி நேரத்திற்கு மெனுவை மாற்றி மாற்றி கொடுத்துக் கொண்டே இருந்தனர். கே. பாலச்சந்தருக்குப் பிடித்த கோத்தாஸ் காபியும் வணிகச்சின்னம் போடாத தேநீரும் திரிவேணி சங்கமாக ஓடிக் கொண்டிருந்தன. கொஞ்சம் பியரும் கூடக் கிடைத்தால் எப்படியிருந்திருக்கும் என அந்த மரத்தின் கீழ் படுத்து பேயை ஆட்கொள்ளவைத்தவன் கதையாக கற்பனையில் திளைத்தேன்.

ஆட்டம் என்னவோ இரண்டு மணிக்குத்தான் துவக்கம். ஆனால், அமர்க்களம் எல்லாம் மதியம் பன்னிரெண்டு மணிக்கேத் துவங்கி விட்டது. வாசலில் பாரம்பரிய ஆஃப்கன் ஆடையில் மிளிர்ந்தார்கள். முகத்தில் பாகிஸ்தான் கொடியை பச்சைக் குத்திக் கொள்ள வைக்கப்பட்டார்கள் சிறுவர்கள். பாபர் ஆசாம் பெயர் தாங்கிய தெற்காப்பிரிக்க சொக்காய் கூட விற்றுக் கொண்டிருந்தார்கள்.

தி ஹிந்து நாளிதழின் அந்நாள் ஆசிரியர் என். ராம் காணக் கிடைத்தார். தற்படம் எடுத்துக் கொள்ள சபலப்பட்டேன். அவர் ஆட்டத்தைப் பார்க்காமல், செல்பேசியிலேயே கண்ணும் கருத்துமாக இருந்தார். பாதி பாகிஸ்தான் ஆட்டத்தில் கிளம்பிப் போய்விட்டார்.

பாடகர் உன்னி கிருஷ்ணன் எல்லோருடனும் தற்படம் எடுத்துக் கொள்ள இன்முகத்துடன் ஒத்துழைத்தார். பிரபலங்களை நினைத்தால் சற்றே பாவமாக இருந்தது. பொது இடத்தில் வந்தாலும் நிம்மதியாக நாலு தயிர் வடை சாப்பிட்டோமா, நான்குகள் விளாசுவதைப் பார்த்தோமா என சும்மா விடாமல், துரத்தித் துரத்தி காதலிக்கிறார்கள்.

அவர்களை விட எல்லைக்கோட்டில் நின்றவர்கள் இன்னும் பாவம் செய்தவர்கள். நவீன் என்று பக்கத்து வீட்டுப் பொடிசை அழைப்பது போல் திசை திருப்பினார்கள். அவர்களும் பந்திலேயே கண்ணும் கருத்துமாக இருக்க இந்த விசிலடிச்சான் குஞ்சுகளை கண்டுகொள்ளவில்லை.

அதைவிட முக்கிய சந்தேகம்… ஏன், எல்லா வீரர்களும் முட்டி போட்டு தங்கள் பானங்களை அருந்துகிறார்கள்? சாட்ஜிபிடி-யிடம் கேட்க வேண்டும். அல்லது நான் பார்த்த ஆட்டம் அந்த மாதிரி இருக்க வேண்டும். ஓரிருவர் அவசரமில்லாவிட்டால் கூட ஹாராமாக நின்றே குடித்தார்கள்.

அப்புறம், புகைப்படத்தில் இருக்கும் இந்த ஸ்தூபி, நினைவுச் சின்னம் என்னது? அதையும் கூகுள் லென்ஸிடம் தேட வேண்டும்.

கடைசியாக பாகிஸ்தான் கிஷான் (கிசான்?) என்னும் கொடியை ஆட்டிக் கொண்டே இருந்தார்கள். அதனாலோ என்னவோ தரையில் உருண்டு புரண்டு உழுதார்களேத் தவிர பந்துகளையும் பந்தயத்தையும் பாக். கோட்டைவிட்டது.

Mayanti Langer – Indian Cricket Commentators

இந்த உலகக் கோப்பையில் நான் ரசித்த முதல் அம்சம் மயந்தி லங்கர்.

வெறுமனே கவர்ச்சிக்கும், ஊறுகாயாகத் தொட்டுக் கொள்ள பெண் தொகுப்பாளினியும் இருந்த காலகட்டம் காணாமல் போயிருக்கிறது. இவர், “நீயா… நானா?” கோபிநாத் ரகம். தரமான கேள்விகள்; சுனில் கவாஸ்கார் போல் ஒயிலான மிடுக்கு; காதில் வருவதையும் எதிராளி பேசுவதையும் நேரமும் இடமும் அறிந்து முன்னெடுக்கிறார்.

நான் மந்திரா பேடி காலத்தவன். அவர் டி.டி.எல்.ஜே (தில்வாலே துல்ஹானியா லே ஜாயேங்கே) படத்தில் நடித்த ஒரே குற்றத்திற்காக, கிரிக்கெட் போட்டிகளிலும் நடுவே வந்து போனார்.

அதற்கும் முந்தைய ஹிந்தி மட்டுமே அரசாண்ட பிஷன் சிங் பேடி, லாலா அமர்நாத், கிஷோர் பேமானி, சுஷில் ஜோஷி போன்றவர்கள் பேச்சைக் கேட்டால், குளக்கரையில் கரையும் காகங்களின் இனிமை புரியவரும். ஹிந்தி தெரிந்திருந்தால் அந்த மொழியை இப்படியாக உபயோகிக்கக் கூடாது என்பதும் தெரியவரும். டிவியின் ஒலியை மொத்தமாகக் குறைத்துவிட்டு, வெறுமனே காட்சியை மட்டும் பார்க்கலாம். அதாவது, இளையராஜா பாடலை ரேடியோவில் ஒலிக்க விடுங்கள். தொலைக்காட்சியில் ஒரு நாள் போட்டி ஓடும்.

ஆங்கில காமெண்டரி எப்பொழுதுமே தேவலாம். நரோத்தம் பூரி போன்றவர்கள் ஜமாய்ப்பார்கள். எனினும், பென்சன் அண்ட் ஹெட்ஜஸ் உலகக் கோப்பையில் ஆஸ்திரேலிய வர்ணனையாளர்களை எந்த இங்கிலீஷ்காரராலும் தொட இயலவில்லை. ரிச்சி பெனாட், டோனி கிரெக் – இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரங்கள் சரிந்தால் கூட மென்மையாகச் சொல்வார்கள். ஸ்டீவ் வாக் வெளுத்து வாங்கினால் கூட குறைகளைச் சுட்டுவார்கள்.

அதன் பிறகு நிறைய பேர் வந்ததாகக் கேள்விப்பட்டேன். ஹர்ஷா போக்ளே, சித்து – இவர்கள் மைக்கை பிடித்த போது எனக்கு கிரிக்கெட் எட்டாத கனியாகி விட்டிருந்தது.

மீண்டும் ஐ.பி.எல். மூலமாக வந்த போது அறிமுகமான பெண் வர்ணனையாளர் மாயாந்தி. லட்சணமாக இருந்தார். இன்னொரு மந்திராவோ என மிரட்சியுடன் அலட்சியமாகக் கேட்டேன். சுனில் கவாஸ்கரின் ஒய்யாரமும் ரவி சாஸ்திரியின் ஆங்கிலப் புலமையும் கவனிக்க வைத்தது. ஆனால், அவரை பின் தொடர வைத்தது — அந்த ஆஸ்திரேலியாக்காரர்களின் வாக்கு வன்மை.

கொஞ்சம் தேடினால், என்னென்னவோ சாதித்து இருக்கிறார் மாயந்தி. எப்பொழுது இருந்தோ அளவளாவுகிறார் லங்கார். எதெதற்கோ நேரடி ஒலிபரப்பாளர் ஆக இருந்திருக்கிறார் லங்கர். கணவன் கூட புகழ் பெற்றவராம். நம்ம 83 ரோஜர் பின்னியின் மகனை மணமுடித்திருக்கிறார்.

சந்தோஷமாக இருந்தது. கிளப் ஆட்டம் போல் இறக்கிவிடப்பட்ட மசாலா பதார்த்தங்கள் இன்று லியோ சிங்கமாக முழுமுதல் திரையையும் காத்திரமாக ஆக்கிரமித்து விவரணையை விவரமாகத் தருவது – புதிய தலைமுறையின் சாதனை.

IPL, LPL, LTTE, IPKF – T20 and Team Names

பத்து வயதிருக்கும். வீட்டில் எதையும் படிக்கும் சுதந்திரம். அந்த அட்டை கிழிக்கப்பட்ட நூல் வாசிக்கக் கிடைத்தது. ரஜினியின் படமான ‘தர்ம் யுத்தம்’ போல் அந்த 1983 கொலைகாரர்கள், கறுப்பு ஜூலை அராஜகவாதிகள் எல்லோரையும் தீர்த்துக் கட்ட எவராவது பிறக்க மாட்டார்களாக என மனம் துடிதுடிக்க வைத்த புத்தகம். கற்பனையில் பல்வேறு சண்டைகளை எண்ணிப் பார்த்து சமாதானம் அடைவேன்.

இன்றைய காலகட்டத்தில் இலங்கை பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் நடத்துகிறது. அதற்கான அணிகளின் பெயர்களில் இயக்கங்களின் பெயரைப் போட்டால் எப்படி இருக்கும்!?

இலங்கையில் இருக்கும் தமிழருக்கான சுதந்திரப் போராட்ட வரலாற்றில் பல நிலைகளில் பல்வேறு காலகட்டங்களில் இயக்கங்கள் செயல்பட்டன. ஈழ இயக்கங்களில் புகழ்பெற்றவற்றின் பெயர்கள் (அகரவரிசைப்படி):

1. ஈழ தேசிய விடுதலை முன்னணி (ஈ.என்.டி.எல்.எஃப். – Eelam National Democratic Liberation Front (ENDLF))
2. ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி) (Eelam People Democratic Party (EPDP))
3. ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனி (ஈ.பிஆர்.எல்.எஃப். – Eelam People’s Revolutionary Liberation Front (EPRLF))
4. ஈழ புரட்சிகர மாணவர் இயக்கம் (ஈரோஸ் – Eelam Revolutionary Organization of Students (EROS) – ஈ.ஆர்.ஓ.எஸ்.)
5. தமிழீழ விடுதலைப் புலிகள் (எல்.டி.டி.ஈ – Liberation Tigers of Tamil Eelam (LTTE) – எல்.ரி.ரி.ஈ.)
6. தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (ப்ளாட் (அ) புளொட் – People’s Liberation Organization of Tamil Eelam (PLOTE) – பி.எல்.ஒ.டி.ஈ.)
7. தமிழீழ விடுதலை இயக்கம் (டெலொ (அ) ரெலா – Tamil Eelam Liberation Organization (TELO) – டெலோ)
8. தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகள் (டி.எம்.வி.பி. – Tamileela Makkal Viduthalai Pulikal (TMVP))
9. தமிழர் விடுதலைக் கூட்டணி (அரசியல் கட்சி) (டுல்ஃப் (அ) ரி.யு.எல்.எப் – Tamil United Liberation Front (TULF) – டி.யு. எல்.எஃப்)

இலங்கை ப்ரீமியர் லீக் எல்.பி.எல் டி20 அணிகளின் பெயர்கள்:

1. Colombo Strikers – கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் என்பதற்கு பதில்: கொழும்பு கொமாண்டோக்க‌ள்
2. Dambulla Aura – டம்புல்லா ஆரா என்பதற்கு பதில்: தம்புள்ளை துள்ளர்கள்
3. Galle Titans – கேலே டைட்டன்ஸ் என்பதற்கு பதில்: கல்லே கெரில்லாக்கள்
4. Jaffna Kings – ஜாஃப்னா கிங்ஸ் என்பதற்கு பதில்: யாழ்ப்பாண புலிகள்
5. B-Love Kandy – கண்டி பி-லவ் என்பதற்கு பதில்: கண்டி கழுகுகள்

இன்னும் ஆர்வமாக இலங்கை டிவெண்டி 20 பார்ப்போமோ?

சென்னை வீரர்களும் சி.எஸ்.கே.வும்

சென்னை சூப்பர் கிங்ஸ் என்று பெயர்.
ஆனால், தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு வீரர் கூட இல்லை.

சோனு யாதவ் – ஆர்.சி.பி – பெங்களூர்
சாய் சுதர்சன் – குஜராத் டைட்டன்ஸ்
முருகன் அச்வின் – ராஜஸ்தான் ராயல்ஸ்
என் ஜெகதீசன் – கல்கத்தா க்நைட் ரைடர்ஸ்
விஜய் ஷங்கர் – குஜராத் டைட்டன்ஸ்
ரவிஸ்ரீனிவாசன் சாய் கிஷோர் – குஜராத் டைட்டன்ஸ்
டி நட்ராஜன் – சன்ரைஸர்ஸ் ஹைதராபாத்
ரவிச்சந்திரன் அச்வின் – ராஜஸ்தான் ராயல்ஸ்
தினேஷ் கார்த்திக் – ஆர்.சி.பி – பெங்களூர்
வருண் சக்கரவர்த்தி – கல்கத்தா க்நைட் ரைடர்ஸ்
வாஷிங்டன் சுந்தர் – சன்ரைஸர்ஸ் ஹைதராபாத்
ஷாருக் கான் – பஞ்சாப் கிங்ஸ்

பிசாத்து இருபது லட்சம் கொடுத்து, ஒருவரைக் கூடவா ஏலத்தில் எடுக்கவில்லை?

புரிகிறது…

இதே போல்தானே கால்பந்து கிளப்புகள் நடக்கின்றன!?
அமெரிக்க ஃபுட்பால், கூடைப்பந்து எல்லாம் கூட இப்படித்தானே…
பாஸ்டன் நகரத்தில் பிறந்த வீரர் –> சிகாகோ அணிக்காக ஆடுவாரே!?

இருந்தாலும்…

துலீப் கோப்பையிலும், ரஞ்சி டிராபியிலும் நம்ம உள்ளூரு பசங்க ஜெயிக்க வேண்டும் என்னும் நினைப்பு வரும்.
இப்பொழுது ராஜஸ்தான் ராயல் ஜெயிக்கணும்னு நெனப்பு வருது.

எது எப்படியோ…

இருபது ஓவர் பந்தயத்தில் கடைசி பந்து வரை இருக்கை நுனியில் இருபத்தைந்து பேர் உட்கார்த்தி வைக்கிறார்கள்.
அதற்கு தனி மேலாண்மை நிர்வாகமும் நடுங்காத அமரிக்கையும் சூது தகிடுதத்தங்களும் வேண்டும்.
அத்தனையும் ஒருங்கிணைக்கிறார்கள். அரங்கேற்றுகிறார்கள்.

லலித் மோடி இல்லாவிட்டால் என்ன? எத்தனையோ எத்தர்கள்!

ஒன்லி எ கேம் – ஆட்டம் முடிவு

ஞாயிற்றுக்கிழமைகளில் பாட்டி வீட்டிற்கு செல்வோம். அவள் விவித பாரதியின் சாயாகீத் ரசிகை. அங்கே கேட்க ஆரம்பித்த “தேரே பினா ஜிந்தகி ஸே கோயி… ஷிக்வா தோ நஹி”, பிறிதொரு அந்தாக்‌ஷரியில் கை கொடுத்தது.

அந்தப் பாடலை சற்றே பார்ப்போம். நாயகனும் நாயகியும் ரகசியமாக சந்திக்கிறார்கள். நாயகியைப் பொறுத்தவரை அவன் மட்டும் அவளுடைய வாழ்வில் குறுக்கிடா விட்டால், அவள் வாழ்வு தெளிந்த நதியாக, கொந்தளிப்புகள் இல்லாமல் அமைதியான ஓடத்தில் மிதந்து சென்றிருக்கும். ஆனால், அவன் இல்லாவிட்டால், வாழ்க்கை என்பது வாழ்வாக இருந்திருக்காது.

நான் நாவலும் சிறுகதையும் படிக்க ஆரம்பித்ததே, அதை ஏதாவதொரு பெண்ணிடம் கொடுத்து அவளின் மனதைத் தொட்டு விடலாம் என்ற எண்ணத்தில்தான். “நில்… கவனி… காதலி” என்று ராஜேஷ் குமார் கொடுத்து பார்த்தேன்; பலிக்கவில்லை. அடுத்த அஸ்திரம்… ‘பாட்டுக்கு பாட்டெடுத்து’ அந்தாக்சரி விளையாட்டு. இந்தப் பாடல் என் உணர்வை, குறிப்பால் உணர்த்த உதவியது.

அந்த மாதிரி இன்னொரு அற்புதமான ரேடியோ நிகழ்ச்சி Only A Game.

அலுவலில் அரசியல் பேச முடியாது. எல்லோரும் தீவிர கொள்கைவாதிகள். என் உடன் வேலை பார்க்கும் டீமில் ஐந்து பேருக்கு ஐந்து கொள்கை; ஒரே அணியில் துப்பாக்கி வைத்திருப்பதற்கு ஆதரவாக ஒருவர்; காவல்துறையின் பணிக்கு அதி தீவிர ஆதரவாளர் இன்னொருவர்; பாரதப் பிரதமர் நரேந்திர மோடியையும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப்பையும் வெறுப்பவர் பலர்; சட்டம் மற்றும் ஒழுங்கு முக்கியம் என்று உறவினர்களை போருக்கும் காக்கி சட்டைக்கும் பலி கொடுத்தவர் சிலர்.

எனவே, எல்லோருக்கும் பொழுதுபோக்கான பேச்சு என்பது – “விளையாட்டு”. நேற்று ரெட் சாக்ஸ் எப்படி பேஸ்பால் ஆடினார்கள்? இந்த வருடம் பாஸ்டன் செல்டிக்ஸ் கூடைப்பந்தில் சாதிப்பார்களா? பனிச்சறுக்கு ஹாக்கியில் ப்ருயின்ஸ் எவ்வாறு கெலிப்பார்கள்? எல்லாவற்றிற்கும் மேலாக நியு இங்கிலாந்து பேட்ரியாட்ஸ், டாம் ப்ரேடி, பெலிசிக் எல்லோரும் போங்காட்டம் ஆடுகிறார்களா அல்லது அழுகுணி ஆட்டத்தில் அமெரிக்க கால்பந்தின் மன்னர்களாக இருக்கிறார்களா?

இப்படி பேச ஒரு நிகழ்ச்சி… ஒலிப்பதிவு… பாட்காஸ்டிங்… தேவை. அதை டபிள்யூ.பி.யூ.ஆர். வானொலியின் “ஒன்லி எ கேம்” நிகழ்ச்சி அருமையாக பூர்த்தி செய்தது.

அலுவலுக்குப் போக ஒரு மணி நேரம். திரும்பி வருவதற்கு இன்னொரு மணி நேரம். அப்போது கேட்பதற்கென்று பிரத்தியேகமாக சில நிகழ்ச்சிகளை தேர்ந்தெடுத்து வைத்திருப்பேன்:

  • வெயிட் வெயிட்… டோண்ட் டெல் மீ
  • ரேடியோ லாப்
  • ஃப்ரீகனாமிக்ஸ்
  • டெட் டாக்ஸ்
  • ஷங்கர் வேதாந்தம் வழங்கும் ஹிட்டன் பிரெயின்

அந்த வரிசையில் இந்த ஒலிபரப்பிற்கு சிறப்பான இடம் இருந்தது. வெறுமனே ஸ்கோர்களை ஒப்பிக்காமல், அந்த ஆட்டக்காரர்களின் கதையையும் சொல்லியது. சட்டென்று பருந்துப் பார்வை பார்த்து, பழைய சரித்திரத்தை விவரித்து, விஷயத்தைப் புரிய வைத்தது. பெரிய பெரிய அணிகளின் ஆட்டங்களைப் பற்றி மட்டும் அலசாமல், பக்கத்து வீட்டுப் பையன் ஆடிய விதத்தை அவ்வப்போது கண்முன்னே காதின் வழியே உபாசித்தது.

எத்தனையெத்தனை கதைகள்! எவ்வளவு அணுக்கமான சம்பவங்கள்!! நெகிழவைக்கும் உண்மை நிகழ்வுகளின் குரல்கள்!!!

ஆண்கள் மட்டுமே ஆடிய விளையாட்டுகள் எல்லோரின் கவனத்தைக் கவர்ந்தபோது, மகளிர் கலந்து கொண்ட போட்டிகள், அவர்களின் சாதனைகள், அந்தப் பெண்களின் போராட்டங்கள் என்று என்.பி.ஆர். ரேடியோவிற்கே உரிய தனித்தன்மையை நிலைநாட்டியது. மியா ஹாம், க்றிஸ்டீன் லில்லி, ப்ரியானா ஸ்கரி எனப் பல பெண் நட்சத்திரங்களை முதன் முதலாக அறிமுகப்படுத்திக் கொண்டது இவர்கள் வழியாகத்தான். 1999ல் உலகக் கோப்பை வீரர்களாக அவர்கள் உலகம் அறியப்படுவதற்குமுன் அலைவரிசையில் அவர்களை உலாவவிட்டு கண்முன்னேக் கொணர்ந்திருந்தார்கள்.

உச்சத்தில் இருக்கும்போது விடைப்பெற்றுவிட வேண்டும். ஒரு நிகழ்ச்சியோ பத்திரிகையோ நடிகரோ – தன் தொழிலில் சாதித்துக் கொண்டிருக்கும்போதே ஓய்வு பெற்று, வெற்றிடத்தை உணர்த்த வேண்டும்.

உணர்த்தி இருக்கிறது – “இது வெறும் விளையாட்டு மட்டுமே”.

Million Dollar Arm

மில்லியன் டாலர் புஜம்

லாரி ஓட்டுபவரின் மகன், பல்லாயிரம் கோடி இரசிகர்களின் கனவு நாயகனாக மிளிர முடியுமா? கான்பூரின் அருகே உள்ள கிராமத்தில் இருப்பவரும்; லக்னௌவில் இருந்து காத தூரம் இருக்கும் குக்கிராமத்தில் இருப்பவரும்; அமெரிக்கா வந்து அங்கே பேஸ்பால் பந்து வீசும் நட்சத்திரங்கள் ஆவார்களா? ஒன்பது குழந்தைகள் உள்ள வீட்டில் ஒற்றை அறையில் வளர்பவர், அமெரிக்கர்களுக்கு சொந்தமான அவர்களுடைய விளையாட்டில், அவர்களுக்கு எதிராக மிளிர்வது சாத்தியமா?

இந்த மாதிரி சம்பவங்களைக் கோர்த்து எவராவது புனைவு அமைத்திருந்தால், இதெல்லாம் கதையிலும் சினிமாவிலும் மட்டுமே நடக்கும் என்றிருப்பேன். ஆனால், நிஜத்தில் நடந்திருக்கிறது. வாரநாசிக்கு அருகில் இருக்கும் ஊரில் பிறந்து வளர்ந்த தினேஷ் படேலும், ’கம்பள நகரம்’ என்றழைக்கப்படும் பாதோஹி நகரத்தில் ஒன்பதில் ஒருவராக பிறந்த ரிங்கு சிங்கும் – அமெரிக்கா வருகிறார்கள். பிட்ஸ்பர்க் நகர அணியில் பந்து போடுகிறார்கள்.

இந்த உண்மைக் கதையைப் பின்னணியாக வைத்து ”மில்லியன் டாலர் புஜம்” (Million Dollar Arm) வெளிவந்திருக்கிறது. இந்தப் படத்திற்கு ஏ ஆர் ரெஹ்மான் இசையமைத்திருக்கிறார்.

இந்தத் திரைப்படத்திற்கு இசையமைக்க ஒத்துக் கொண்டேபோது கொடுத்த பேட்டியில் ரெகுமான் இவ்வாறு சொல்கிறார்: ”ஸ்லம் டாக் மில்லியனரு’க்குப் பிறகு ஆங்கிலப் படங்களுக்கு இசையமைக்க நிறைய வாய்ப்புகள் வந்தன. ‘கப்பிள்ஸ் ரிட்ரீட்’, ’வாரியர்ஸ் ஆஃப் ஹெவன்’, ‘127 அவர்ஸ்’, ’எர்த்’, ‘பீப்பிள் லைக் அஸ்’னு இப்படி நிறைய நிறைய! அதில் நான் விரும்பித் தேர்ந்தெடுத்தது ‘127 அவர்ஸ்’ மட்டும்தான். அது ஆஸ்கர் பரிந்துரை வரை போனது. ஆனால், அடுத்த மூன்று வருடங்களுக்கு இந்தியாவை அடிப்படையாக வைத்து வரும் ஹாலிவுட் படங்களுக்கு இசையமைக்க நான் ஒப்புக்கொள்ளவில்லை. அப்படி, ஒத்துக் கொண்டால், ’ரெஹ்மானை – தெற்காசியா களத்தில் நடக்கும் கதைகளுக்குத்தான் பயன்படுத்தலாம்’ எனத் தேங்கிப் போயிருப்பேன். மேலும், இந்தியச் சூழலில் இசையமைக்க, எனக்கு தமிழும் ஹிந்தியும் இருக்கின்றன. அவற்றிலும் நான் தொடர்ந்து படங்கள் செய்து கொண்டுதானே இருக்கிறேன். நாலு வருடங்களுக்குப் பின்னால் மறுபடியும் ஒரு இங்கிலீஷ் படம் பண்ணலாம்னு நினைச்சேன். அந்த சமயத்தில் ‘மில்லியன் டாலர் ஆர்ம்’ படத்தின் இயக்குநர் கிரெய்க் கில்லஸ்ப்பியும் என்னை அணுகினார். இது இந்தியாவில் நடக்கும் கதை, வால்ட் டிஸ்னி தயாரிப்புனு நிறைய ஊக்கப்படுத்தும் விஷயங்கள் இந்தப் படைப்பில் இருந்தன. இது விளையாட்டு குறித்த திரைப்படம்தான். ஆனால், உள்ளுக்குள்ள ரொம்ப அற்புதமான இன்னொரு கதையும் மனித மனங்களின் ஊசலாட்டங்களும் ஓடுகிறது. ‘லகான்’ மாதிரினு சொல்லலாம்.”

படத்தில் எல்லா மொழிகளிலும் பாடல்கள் வருகிறது. படத்தின் இறுதியில் ‘என் சுவாசக் காற்றே’ படத்தில் இடம்பெற்ற சித்ராவும் உன்னிகிருஷ்ணனும் பாடிய ‘திறக்காதக் காட்டுக்குள்ளே’ பாடல் உணர்ச்சிப்பிழம்பான கணத்தில் ஒலிக்கிறது. படத்தின் நடுவே பாங்ரா பஞ்சாபி, டிஸ்கொத்தே ஹிந்தி, ஆங்கில ராப் என கலவையாக – எல்லா மொழிகளும் ரசனைகளும் இசைப்பிரிவுகளும் வருகின்றன.

இந்தப் படம் ஆஸ்கார் விருதுகளுக்கான நெடும் பட்டியலில் இடம் பெற்றிருந்தாலும், மூன்று/நான்கு பேர் மட்டுமே சொல்லப்படும் இறுதிப் பரிந்துரையில் இடம்பிடிக்கப் போவதில்லை என வல்லுநர்கள் கருதுகிறார்கள். ஸ்டீஃபன் ஹாகிங் வாழ்க்கையை சொல்லிய ‘தியரி ஆஃப் எவரிதிங்’ திரைப்படத்திற்கு இசையமைத்த யோஹான் ஜோஹான்ஸன், அல்லது இண்டெர்ஸ்டெல்லார் படத்தின் ஹான்ஸ் ஜிம்மர் அல்லது ஆலன் டூரிங் வாழ்க்கையை திரையாக்கிய ’தி இமிடேஷன் கேம்’ படத்தின் அலெக்ஸாண்டர் என முன்னிறுத்துகிறார்கள்.

ஆஸ்கார் விருதுகளுக்கு வாக்களிப்பவர்களுக்கு மறதி அதிகம். டிசம்பர் மாதத்தில் திரைப்படம் வெளியானால் மட்டுமே நினைவில் நிற்கும். ”மில்லியன் டாலர் புஜம்” திரைப்படமோ மே மாதமே வெளியாகி, இப்பொழுது திரையரங்குகளை விட்டு வெளியேறி விட்டது. இந்த நிலையில், அந்தப் படத்திற்கு எந்தப் பரிந்துரையும் கிடைப்பது சந்தேகமே. கோச்சடையான், ஐ போன்ற திரைப்படங்களுக்காகவும் ஏ ஆர் ரெஹ்மானின் பெயர் ஆஸ்கார் நீள்பட்டியல் பரிந்துரையில் இடம் பெற்றிருப்பதால், ‘மில்லியன் டாலர் ஆர்ம்’ பரிந்துரையையும் பத்தோடு பதினொன்றாகக் கருதி விட்டுவிடலாம்.

அது ஆஸ்கார் விருதிற்கான சாஸ்திரோப்தமான பட்டியல். இனி ஏ ஆர் ரெஹ்மானின் கோலோச்சல் குறித்த பாமரனின் பார்வை.

துவக்கத்தில் டிஸ்னியின் கோட்டை வரும்போதே பட்டாசு கிளம்பி விடுகிறது. இராணிகளும் மஹாராஜாக்களும் துள்ளலாக வெடி வெடிப்பது போல் ஐரோப்பிய பவனங்களுக்கு இந்திய ‘ஸ…ஸா… ஸரி’ வரும்போதே ”இது நம்ம இசை” என்று தோன்றவைத்து விடுகிறது. சிக்கன் டிக்கா மசாலாவில் இருக்கும் மணம் போல், பாரதத்திற்கேயுரிய வாசம்.

பதினான்காவது நிமிடத்தில் அந்த டிக்கா மசாலாவில் கொஞ்சம் சாம்பாரும் நிறைய தஹியும் கொத்து பரோட்டாவும் ஒருங்கே ஓங்கி ஒலிக்கிறது. சத்தமான இந்தியா. கசகச இந்தியா. சல்பேட்டா வாசனையான இந்தியா. கொண்டாட்ட இந்தியா. பரபர ஓட்டத்தின் நடுவே சாந்தமான இந்தியா. இப்படியெல்லாம் எழுத முடிகிறது… இதையெல்லாம் ஒலியில் கொண்டு வாருங்கள் என்று இயக்குநர் சொன்னாரா அல்லது இந்தியா என்றால் இதுதான் நாதம் என்று ஏ ஆர் ரெஹ்மான் சொன்னாரா? தெரியவில்லை. கேட்டுப் பார்த்தால் இந்தியா ஒலிக்கிறது. ஒளி கண்ணில் படாவிட்டால், மொழி புரியாவிட்ட்டால் கூட, அந்த லயம் காட்டிக் கொடுக்குமாறு அமைக்கப்பட்ட துள்ளலோசை.

அடுத்த ஓட்டம் இருபத்தி இரண்டாம் நிமிடம். ’சைய்யா சையா’ பாடிய சுக்விந்தர் சிங் ஒலிக்கிறார். அதே ஆட்டம்; பாட்டம். நிஜ நாடகம் தோன்றுவதற்கான ஒத்திகை நடக்கும் இடத்தை அறிமுகம் செய்யும் உறுமும் இசை.

அங்கே விட்டதை இருபத்தைந்தாம் நிமிடத்தில் சுக்வீந்த சிங் தொடர்கிறார். அவரை அப்படியே மாற்றி மேற்கத்திய இசைக்குத் தாவி விடுகிறார். இக்கி (Iggy Azalea) இங்கு வருகிறார்.

முப்பத்தி மூன்றில் ரெஹ்மானின் அமைதியான பாலட் ஒலிக்கிறது. பம்பாய் திரைப்படத்தில் ‘கண்ணாளனே’ துவக்கத்தில் வரும் இஸ்லாமிய சங்கீதம் போல்.

இனிமேல் திரைப்படத்தில் உற்சாகம் பிறக்க வேண்டும். ஏழைச் சிறுவர்கள் பந்து வீசும்போது அவர்களை ஒட்டி பாசமும், ஒட்டுதலும், ஜெயிக்க வேண்டுமே என்னும் ஏக்கமும் உண்டாக வேண்டும். டிஸ்னிக் கோட்டை வந்ததே… அதே இசை இப்பொழுது.

நாற்பதாவது நிமிடத்தில் நிஜப் போட்டி. இது ஏ ஆர் ரெஹ்மானின் சொந்த வீடு. முதல் படத்தில் ‘ஒட்டகத்தைக் கட்டிக்கோ’வில் ஆரம்பித்து மணி ரத்னத்திற்கு ’ருக்குமணி ருக்மிணி’ அயிட்டம் பாட்டு போட்டது போல் இலா அர்ஜுனும் அல்கா யாக்னிக்கும் குத்துகிறார்கள். அவர்கள் குத்துப்பாட்டு எப்பொழுது முடிகிறது, எப்பொழுது லகான் திரைப்படத்தில் வரும் “பார் பார் ஹோ…!! ஹஜார் பார் ஹோ!!!” வருகிறது என உணர முடியாத உருமாற்றம். அப்படியே, அந்த வீரர்களுக்காக கரகோஷமிடுகிறோம்.

நாற்பத்தியெட்டாம் நிமிடத்தில் வீடு திரும்புதல். அயல்நாடு செல்வதற்கு முன் வீட்டில் பெற்றோரிடம் சொல்லிக் கொண்டு விடை பெறும் தருணத்திற்கான முன்னுரையாக கொண்டாட்ட பாங்ரா. அது அப்படியே, உருக்கமான பிரிவுபசார பாந்தமாக மாறுகிறது. அங்கிருந்து அமெரிக்காவின் ராப், கெண்ட்ரிக் லமார் குரலில் தோன்றுகிறது.

இதன் பிறகு கிட்டத்தட்ட படம் முழுமையாக ஆட்கொள்கிறது. இசை தனியாக, பாடல் தனியாக, பாடகர் தனியாக துருத்திக் கொண்டு தெரிவதில்லை.

இசை ஒலிக்காமல் மௌனமாக இருக்க வேண்டிய நேரம். தோல்வியுறும் போது சந்திக்கும் நிசப்தம். அதிர்ச்சியும் பிரிவும் சொல்லும் குரல் எல்லாமே இருக்கிறது. ஆனால், இந்தியப் பகுதிகள் போல் “நான் ரெஹ்மான். நான் இங்கே இருக்கிறேன்” என்பது தெரிவதில்லை.

படத்தின் இறுதியில் இருவருக்கும் கடைசி வாய்ப்பு. இதில் வென்றால்தான் அமெரிக்கா கனவு பலிக்கும். தோற்றால் கூனிக் குறுக நேரிடும். இசை மெதுவாகவே ஆரம்பிக்கிறது. கொஞ்சம் ஹம்மிங். கொஞ்சம் ‘அ…ஆ…’. அப்படியே சட்டென்று ரிங்குவின் பந்து வேகமாகப் பாய்வது போல், தினேஷின் இதயம் துடிப்பது போல் துள்ளுகிறது. கையிலிருந்து ஏவப்பட்ட வில்லாக பாய்கிறது.

இந்தியர்கள் வெற்றிக்கான முதல் படியில் கால் வைத்ததை ஒலியிலும் திரையிலும் கலந்துருகிய உச்சகட்ட தருணமான படத்தின் இறுதியில் நிஜக்கதையிலும் வல்லவர்கள் வெற்றி கண்டார்கள் என்பதால் கண்கள் கலங்கியதா… அல்லது ரெஹ்மானின் இசையில் மனம் உருகியதா… தெரியவில்லை. ஆனால், ரெஹ்மான் தெரிந்தார். ஆஸ்கார் தெரியவில்லை. ஆனால், மீண்டும் மீண்டும் கேட்க வைத்து மயங்க வைக்கும் இசை தெரிந்தது. என்ன சுருதி, என்ன ராகம், என்ன தாளம், என்ன ஜானர் என்பதெல்லாம் தெரியவில்லை. ஆனால், இதயத்தைத் தொடும் இசை தெரிந்தது.

ஜெயமோகன் எழுதக்கூடிய கட்டுரை: விளையாட்டும் குழந்தைகளும்: Jeyamohan

அசல் கருத்து: தொலைக்காட்சியும் குழந்தைகளும்http://www.jeyamohan.in/?p=36539

இனி ஜெ. எழுதியிருக்கக் கூடிய அடுத்த பதில் இங்கே…

முந்தைய அறுவடை: நமது இலக்கியநுட்பம்

நானும் என் மனைவியும் 1992 வாக்கில் தொலைக்காட்சியில் குழந்தைகளிடம் விளையாட்டுப் போட்டிகள் உருவாக்கும் எதிர்மறை விளைவுகளைப்பற்றிய விவாதத்தைப் பார்த்தோம். விளையாட்டுச் சிறுமியாக இருந்த என் மகளுக்கு அந்த “அரட்டை அரங்கத்”தில் இருந்ததை நான் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தேன். எங்கள் கொல்லைப்புறத்தில் கிரிக்கெட் தேவையில்லை என்ற முடிவை அவளும் நாங்களும் சேர்ந்து எடுத்தோம். அப்போது எம்.எஸ்.தோனி சின்னக்குழந்தை. அன்றுமுதல் இன்றுவரை வீட்டில் தொலைக்காட்சி இணைப்பு இல்லை.

கிரிக்கெட் மட்டுமல்ல ஒட்டுமொத்த விளையாட்டுகளே குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு மிகவும் பாதகமானது. பல பெற்றோர் தங்களுக்குத் விளையாட்டுப் பித்து இருப்பதை மறைக்க ‘ஓடியாடி விளையாடினால் உடற்பயிற்சி இல்லியா? அட்ரெனலின் சுரப்பது கூட நல்லதுதானே!’ என்றெல்லாம் வாதிடுவதைக் கேட்டிருக்கிறேன். உண்மையில் விளையாட்டு எல்லாவகையிலும் எதிர்விளைவுகளை மட்டுமே உருவாக்கக்கூடியது. மைதானத்தில் விளையாட்டு இருந்தால் குழந்தைகள் அதைப் பார்ப்பார்கள். அது அவர்களுக்குத் தீங்களிக்கக்கூடியது.

காரணங்களை இவ்வாறு தொகுத்துச் சொல்லலாம். விளையாட்டு மிகப்பிரம்மாண்டமான ஒரு பொது கேளிக்கை. கோடிக்கணக்கான பேருக்கு ஒரேசமயம் அது மகிழ்வூட்டியாகவேண்டும். ஆகவே அது மிகவும் முன்னரே ஒத்துக் கொண்ட விதிப்படியே நடக்க முடியும். சட்டதிட்டங்களுக்கு அப்பாற்பட்டு சிந்திப்பதை விளையாட்டுகள் முடக்கிப் போடுகின்றன.

ஆகவே விளையாட்டு அதிகம்பேர் பார்க்கக்கூடிய அந்த சராசரியான மனநிலையை உருவாக்கும். உச்சகட்ட ஊசலாட்டல் மூலம் அவற்றை அனைவரும் பார்க்கவைக்கும்.

கச்சிதமான சிறப்பாக ஆடக்கூடியவரே வெற்றிபெறுகிறார், அதற்குத்தான் அதிக கோப்பைகள் கிடைக்கும். ஆகவே அதற்குத்தான் அதிகமான நிதிமுதலீடு இருக்கும். அதுதான் பிரம்மாண்டமானதாகவும் கவர்ச்ச்சியானதாகவும் இருக்கும்.

அதிகமாக வெற்றி பெறும் அணி, அதாவது மிக அற்புதமாக ஆடுபவர் மட்டுமே ஒலிம்பிக்ஸுக்கு செல்வார். அதைத்தான் பார்க்கவேண்டிய சந்தர்ப்பம் நமக்கு அமையும்.

இதன் விளைவாக விளையாட்டை பார்ப்பவர்கள் அனைவரும் அவர்களைப் போல் விளையாட சிக்கவைக்கப்படுகிறார்கள். அவர்களின் தன்னம்பிக்கை வீழ்ச்சியடைகிறது. உடல் திறன் சராசரியில் கட்டிப்போடப்படுகின்றது.

இது மாந்தர் குலத்திற்கே மிக ஆபத்தானது. ஒவ்வொரு மனிதரும் தன்னுடைய சோம்பேறித்தனத்தைக் கண்டடைந்து அதை வளர்த்துக்கொள்ளவேண்டிய வயதில் சராசரித்தன்மையில் சிக்கிக்கொள்கிறார்கள். சராசரி கிட்டிப்புள்ளும் உறியடிகளும் உப்புமூட்டைகளும் மட்டும் அவர்களுக்குக் கிடைக்கின்றன. அவர்கள் சராசரிகளாக வளர்கிறார்கள்.

விளையாட்டுகள் நமக்குத் தரிசனங்களை அளிப்பதில்லை. ஆட்டகளத்தில் சிலர் கலக்குவதை மிதமிஞ்சி வலியுறுத்துகிறது அது. பந்துகளைக் கொட்டிக்கொண்டே இருக்கிறது. அது நம்மை பியரிலும் கோக்கோ கோலாவிலும் அடித்துச்செல்லும் தன்மை கொண்டது. மைதானத்திற்கு சென்று பாருங்கள். சிலநாட்களில் அவை உங்களை முழுமையாக உள்ளே இழுத்துக்கொள்ளும். நீங்களும் தினசரி பால் பாட்மிண்டனோ கால்பந்தோ ஆடிக்கொண்டே இருப்பீர்கள்.

ஆனால் ஒருவாரம் முழுக்க இந்த ஆட்டங்கள் மூலம் நீங்கள் பயிற்சி பெற்றது ஒரு உள்ளூர் லீக் ஆட்டத்திற்குக் கூட தகுதி இருக்காதென்பதை யோசித்தால் புரிந்துகொள்ளலாம்.

என்.எஃப்.எல், என்.பி.ஏ., ரக்பி, கால்பந்து, ஐ.பி.எல். போன்ற மேற்கத்திய ஆட்டங்கள் இன்னும் நுட்பமான வலை. அவை சர்வதேச அளவில் துடுப்பாட்டக்காரர்களின் பொதுவான பலவீனங்கள் விருப்பங்கள் ஆகியவற்றை big data மூலம் ஆராய்ந்து மேம்படுத்தப்பட்டு அமைக்கப்பட்டவை. ஆகவே அணிகளை மிக பயங்கரமானப் சரிசமமான போட்டியாக கொண்டு சென்றுவிடுகின்றன.

இந்நிகழ்ச்சிகளைப் பாருங்கள். சில அடிப்படைக்கூறுகள் இருக்கும். மிக பயங்கரமான வலிமை கொண்ட சக்திகளை பலவீனமான, குழந்தைகளான சிலர் எதிர்த்து வெல்வது போல. சாகசம் மூலம் புதையல்களை அடைவதுபோல. மறைமுகமாக இவை குழந்தைகளின் போர்க்குணங்களையே தொட்டு வளர்க்கின்றன. அந்தப் போர்க்குணம் குழந்தைக்கு அதன் தங்கிவாழ்தலுக்காக, தாக்குப்பிடித்தலுக்காக இயற்கையால் வழங்கப்பட்ட ஆயுதம். காமம் போலவே அடிப்படையான ஓர் இச்சை அது. அதை இவர்கள் பயன்படுத்திக்கொள்கிறார்கள்.

இதற்கு அப்பால் இன்னும் முக்கியமான காரணம் ஒன்று உண்டு. உடல் விளையாட்டு அடிப்படையில் கல்விக்கு எதிரானது. கல்வி என்பது மொழியுடன் சம்பந்தப்பட்டது என்றே நான் என்றும் நினைத்து வருகிறேன். சமீபத்தைய ஆய்வுகள் இதை உறுதிசெய்கின்றன. மொழியில்தான் சிந்தனை நிகழ்கிறது. ஓவியம் இசை போன்ற கலைகளுக்குக் கூட கொள்கைகள் மொழியாகவே அகத்தில் பதியமுடியும்.

மொழிவழிக்கல்விதான் மூளையின் இயல்பான செயல்பாடு. நாம் அறிந்தவற்றை நாம் நினைப்பது மொழியில்தான். ஒன்றை நாம் நம் மொழியில் சொல்லத்தெரிந்திருந்தால்தான் நாம் அதை அறிந்திருக்கிறோம் என்று பொருள்.

விளையாட்டுகள் மொழித்திறனையே அழிக்கின்றன. மொழியில் நுழைந்து தன் சொந்த அகமொழியைக் கண்டடையவேண்டிய காலகட்டத்தில் குழந்தை இந்தக் விளையாட்டுகளில் நுழைவதனால் அது சிந்திக்கத்தெரியாததாக ஆகிவிடுகிறது.

கடைசியாக, விளையாட்டு போன்ற ஆட்படுத்தும் தன்மை கொண்ட சாதனம் குழந்தைக்கு பிறருடனான உறவுகளை இல்லாமலாக்குகிறது. விளையாட்டில் எதிர் அணி என்கிறோம், போட்டியாளர் என்கிறோம். “யாதும் ஊரே! யாவரும் கேளிர்” என்னும் தொன்மையான பண்பாட்டில் வாழ்ந்த சமூகம், களரியிலும் சடுகுடுவிலும் சண்டை போடுவது ஆபத்தான போக்கு.

என் புரிதலில் செயலை விட, ஆக்கத்தை விட குழந்தைகள் பேசிக்கொண்டிருக்க மிகவும் பிரியப்படக்கூடியவை. ‘கதையளப்பதை’ விரும்பாத குழந்தை இல்லை. குழந்தைகள் கணினியில் விளையாடுவதும் அவர்கள் இனையத்தில் அரட்டையடிப்பதும் மிக மிக முக்கியம். அதனூடாகவே குழந்தை அதைச்சூழ்ந்திருக்கும் சமூக வலைப்பின்னலுடன் உறவு கொள்கிறது. அதைப்புரிந்துகொண்டு கையாளக் கற்கிறது. மைன்கிராஃப்டிலோ போர்ட்டல்-இலோ தன் இடத்தைக் கண்டடைகிறது.

நான் இளமையிலேயே என் குழந்தைகளுடன் மணிக்கணக்காக கணிவிளையாட்டுகளில் இருந்தேன். அவர்கள் அடுத்தடுத்த கட்டங்களுக்குப் போய்க்கொண்டே இருப்பார்கள். குழந்தைகள் அவர்களின் உண்மையான உலகை நம்மிடம் அமைத்துக் காட்டுவார்கள். கூடவே ஒரு கற்பனை உலகையும் நமக்காக உருவாக்கிக் காட்டுவார்கள். கற்பனை நகரம், கற்பனை மனிதர்கள். அது அவர்களின் ஆளுமையின் மிக முக்கியமான அம்சம். அவர்களைப் புரிந்துகொள்வதற்கான வாசல் அது. கற்பனையில் கடைசி பந்து சிக்ஸர் அடிக்காதவர் இருக்கிறோமா? கனவுகளில் இறுதி நிமிடத்தில் கோல் அடிக்காதவர் உண்டா? அதை நேரடி விளையாட்டுகள் உடைக்கின்றன.

உரையாடல்மூலம் நாம் குழந்தைகளை அறிகிறோம். அவை நம்மை அறிகின்றன. இவ்வாறுதான் ஃபேஸ்புக் உருவாகிறது. சமூக வலைப்பின்னல் உருவாக்கிறது. அதை விளையாட்டு அடிமைத்தனம் அழிக்கிறது.

விளையாட்டு குழந்தைகளை கணி உலகிலிருந்து அன்னியப்படுத்தும். என்ன சொன்னாலும் இன்று கணினிகளே வருங்காலத்திற்கான ஒரே வழி. நாளெல்லாம் விளையாடும் ஒருவன் முட்டாளாகத்தான் இருப்பான். அரைமணிநேரம் எதையாவது ட்விட்டரில் வாசித்தால்கூட அவனுடைய அறிவிலும் ரசனையிலும் பெரும் வளர்ச்சி காணப்படும்.

ஏனென்றால் கணினிகள் நம்மை செயல்படச்செய்கின்றன. நாம் மேயும்போது அந்த நிலைத்தகவல் நம் கற்பனையாலும் நம் தர்க்கத்தாலும் நாம்தான் உருவாக்கிக்கொள்கிறோம். அது ஓர் கண்டுபிடிப்பு. எந்த Call of Duty® ஆக இருக்கட்டும். நம்மை மேலும் தகுதிகொண்டவர்களாகவே ஆக்கும்.

ஆனால் விளையாடுகையில், எந்த மகத்தான நிகழ்ச்சியானாலும், நாம் அதற்கு செல்வதில்லை. வியர்வை நம் மீது அருவிபோல கொட்டிக்கொண்டிருக்கிறது. அதன் வழியாக நாம் சில கலோரிகளைக் களைந்து உப்பை மட்டுமே அடைகிறோம். நாம் அதன் வழியாக தகுதிப்படுத்திக்கொண்டு ரஞ்சி டிராபிக்கு செல்வதில்லை.

கூகிள்+ முடிவில்லாதவை. உலக ஞானமே அவற்றில் உள்ளது. அவை அளிக்கும் தெரிவுக்கான சாத்தியங்க்ள் முடிவில்லாதவை. சமூக வலைப்பின்னலில் நுழையும் குழந்தை தான் யாரென தானே கண்டுகொள்ளும். சிந்திக்கவும் உரையாடவும் கற்றுக்கொள்ளும்.

அதேசமயம் விளையாட்டை முழுக்க நிராகரிக்கவும் முடியாது. விளையாட்டிற்குப்பதிலாக ரவி சாஸ்திரி ஆட்டங்களை, சித்துவின் வருணணைகளை அவர்களுக்கு யூடியிபில் கண்டுபிடித்துக்கொடுத்தேன். மிகநல்ல ஒரு ப்ளே லிஸ்ட் (play list) அவர்களிடம் உள்ளது. அது அவர்களுக்கு play. இன்று உலகின் மிகத்தரமான புதிய கணிக்கட்டிடம் எது என என் மகளிடம்தான் நான் கேட்டறிகிறேன். இன்று வந்த எந்த மைண்க்ராஃப்ட் கலைத்தரம் மிக்கது என என் மகளிடம்தான் தெரிந்துகொள்கிறேன்.

என் இரு குழந்தைகளும் மகத்தான கணி பயனர்கள். அதற்கு நான் விளையாட்டை விலக்கியதுதான் காரணம் என உறுதியாக நம்புகிறேன்.

நன்றி: ஜெ.

Conspiracy Theory: பாஸ்டன் ப்ரூயின்ஸ் & தீவிரவாதிகள்

புருயின்ஸ் கெலிப்பார்கள் என்று கணித்தேன். சறுக்கிவிட்டது.

பாஸ்டன் ப்ரூயின்ஸ் அருமையான அணி. பனிச்சறுக்கு ஹாக்கியில் முக்கியமான அணி. இரண்டாண்டுகள் முன்பு கூட உலகக் கோப்பையை வென்ற அணி. இந்த முறையும் இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருக்கும் அணி.

அவர்கள் ஏன் வெல்வார்கள்?

சாதாரணமாக மிக மிக அற்புதமாக ஆடும் வர்க்கத்தார் கூட நேர் போட்டிகளில் வென்றதாக சரித்திரம் இல்லை. உதாரணத்திற்கு மியாமி ஹீட்ஸ் குழுவை எடுத்துக் கொள்ளலாம். ஏழு போட்டிகள் நடக்கும். மியாமியால் நான்கே போட்டிகளில் எதிரணியை வீழ்த்திவிட முடியும். எனினும், யாருக்காவது அடிபடும்; நடுவர் தீர்ப்பு சாதகமாக அமையாது; குழுத்தலைவர் formல் இருக்கமாட்டார்…

இப்படி ஏதாவது காரணம் சொல்லி கடைசி பந்து வரை டி20 போட்டியை இழுத்தடிப்பது போல் நான்கு மேட்ச்களில் முடிக்க வேண்டியதை ஏழாக்கி முடிப்பார்கள். ஆனால், பாஸ்டன் புரூயின்ஸ் நான்கே போட்டிகளில் ரணகளம் செய்து முன்னேறுகிறார்கள்.

இந்த முறை பாஸ்டன் புருயின்ஸ் வெல்வதற்கு மிக முக்கிய காரணம் பாஸ்டன் குண்டுவெடிப்புகள். ஜார்னேவ் சகோதரர்கள் கைங்கர்யத்தால் சோகமும் இருளும் கவ்விய பிரதேசத்திற்கு இந்த வெற்றி புத்துணர்ச்சி கொடுக்கும்.

கூடைப்பந்தாட்டத்தில் விளையாடும் பாஸ்டன் செல்டிக்ஸ் இப்போதைக்கு வாகை சூட முடியாது. பேஸ்பால் ஆடும் பாஸ்டன் ரெட் சாக்ஸும் அவ்வாறே. பேட்ரியாட்ஸ் போட்டி துவங்க நெடுநாள் உள்ளது. இந்த நிலையில் உள்ளூர் அணிக்கு கொற்றம் கிடைத்தால் நகரத்தில் மாற்றம் கிடைக்கும்.

மாஸசூஸட்ஸ் மீண்டும் ஊட்டம் கண்டு தலையெடுத்து மீட்சி அடையும் அடையாளமாக புரூயின்ஸ் வெல்வார்கள்.