மில்லியன் டாலர் புஜம்
லாரி ஓட்டுபவரின் மகன், பல்லாயிரம் கோடி இரசிகர்களின் கனவு நாயகனாக மிளிர முடியுமா? கான்பூரின் அருகே உள்ள கிராமத்தில் இருப்பவரும்; லக்னௌவில் இருந்து காத தூரம் இருக்கும் குக்கிராமத்தில் இருப்பவரும்; அமெரிக்கா வந்து அங்கே பேஸ்பால் பந்து வீசும் நட்சத்திரங்கள் ஆவார்களா? ஒன்பது குழந்தைகள் உள்ள வீட்டில் ஒற்றை அறையில் வளர்பவர், அமெரிக்கர்களுக்கு சொந்தமான அவர்களுடைய விளையாட்டில், அவர்களுக்கு எதிராக மிளிர்வது சாத்தியமா?
இந்த மாதிரி சம்பவங்களைக் கோர்த்து எவராவது புனைவு அமைத்திருந்தால், இதெல்லாம் கதையிலும் சினிமாவிலும் மட்டுமே நடக்கும் என்றிருப்பேன். ஆனால், நிஜத்தில் நடந்திருக்கிறது. வாரநாசிக்கு அருகில் இருக்கும் ஊரில் பிறந்து வளர்ந்த தினேஷ் படேலும், ’கம்பள நகரம்’ என்றழைக்கப்படும் பாதோஹி நகரத்தில் ஒன்பதில் ஒருவராக பிறந்த ரிங்கு சிங்கும் – அமெரிக்கா வருகிறார்கள். பிட்ஸ்பர்க் நகர அணியில் பந்து போடுகிறார்கள்.
இந்த உண்மைக் கதையைப் பின்னணியாக வைத்து ”மில்லியன் டாலர் புஜம்” (Million Dollar Arm) வெளிவந்திருக்கிறது. இந்தப் படத்திற்கு ஏ ஆர் ரெஹ்மான் இசையமைத்திருக்கிறார்.
இந்தத் திரைப்படத்திற்கு இசையமைக்க ஒத்துக் கொண்டேபோது கொடுத்த பேட்டியில் ரெகுமான் இவ்வாறு சொல்கிறார்: ”ஸ்லம் டாக் மில்லியனரு’க்குப் பிறகு ஆங்கிலப் படங்களுக்கு இசையமைக்க நிறைய வாய்ப்புகள் வந்தன. ‘கப்பிள்ஸ் ரிட்ரீட்’, ’வாரியர்ஸ் ஆஃப் ஹெவன்’, ‘127 அவர்ஸ்’, ’எர்த்’, ‘பீப்பிள் லைக் அஸ்’னு இப்படி நிறைய நிறைய! அதில் நான் விரும்பித் தேர்ந்தெடுத்தது ‘127 அவர்ஸ்’ மட்டும்தான். அது ஆஸ்கர் பரிந்துரை வரை போனது. ஆனால், அடுத்த மூன்று வருடங்களுக்கு இந்தியாவை அடிப்படையாக வைத்து வரும் ஹாலிவுட் படங்களுக்கு இசையமைக்க நான் ஒப்புக்கொள்ளவில்லை. அப்படி, ஒத்துக் கொண்டால், ’ரெஹ்மானை – தெற்காசியா களத்தில் நடக்கும் கதைகளுக்குத்தான் பயன்படுத்தலாம்’ எனத் தேங்கிப் போயிருப்பேன். மேலும், இந்தியச் சூழலில் இசையமைக்க, எனக்கு தமிழும் ஹிந்தியும் இருக்கின்றன. அவற்றிலும் நான் தொடர்ந்து படங்கள் செய்து கொண்டுதானே இருக்கிறேன். நாலு வருடங்களுக்குப் பின்னால் மறுபடியும் ஒரு இங்கிலீஷ் படம் பண்ணலாம்னு நினைச்சேன். அந்த சமயத்தில் ‘மில்லியன் டாலர் ஆர்ம்’ படத்தின் இயக்குநர் கிரெய்க் கில்லஸ்ப்பியும் என்னை அணுகினார். இது இந்தியாவில் நடக்கும் கதை, வால்ட் டிஸ்னி தயாரிப்புனு நிறைய ஊக்கப்படுத்தும் விஷயங்கள் இந்தப் படைப்பில் இருந்தன. இது விளையாட்டு குறித்த திரைப்படம்தான். ஆனால், உள்ளுக்குள்ள ரொம்ப அற்புதமான இன்னொரு கதையும் மனித மனங்களின் ஊசலாட்டங்களும் ஓடுகிறது. ‘லகான்’ மாதிரினு சொல்லலாம்.”
படத்தில் எல்லா மொழிகளிலும் பாடல்கள் வருகிறது. படத்தின் இறுதியில் ‘என் சுவாசக் காற்றே’ படத்தில் இடம்பெற்ற சித்ராவும் உன்னிகிருஷ்ணனும் பாடிய ‘திறக்காதக் காட்டுக்குள்ளே’ பாடல் உணர்ச்சிப்பிழம்பான கணத்தில் ஒலிக்கிறது. படத்தின் நடுவே பாங்ரா பஞ்சாபி, டிஸ்கொத்தே ஹிந்தி, ஆங்கில ராப் என கலவையாக – எல்லா மொழிகளும் ரசனைகளும் இசைப்பிரிவுகளும் வருகின்றன.
இந்தப் படம் ஆஸ்கார் விருதுகளுக்கான நெடும் பட்டியலில் இடம் பெற்றிருந்தாலும், மூன்று/நான்கு பேர் மட்டுமே சொல்லப்படும் இறுதிப் பரிந்துரையில் இடம்பிடிக்கப் போவதில்லை என வல்லுநர்கள் கருதுகிறார்கள். ஸ்டீஃபன் ஹாகிங் வாழ்க்கையை சொல்லிய ‘தியரி ஆஃப் எவரிதிங்’ திரைப்படத்திற்கு இசையமைத்த யோஹான் ஜோஹான்ஸன், அல்லது இண்டெர்ஸ்டெல்லார் படத்தின் ஹான்ஸ் ஜிம்மர் அல்லது ஆலன் டூரிங் வாழ்க்கையை திரையாக்கிய ’தி இமிடேஷன் கேம்’ படத்தின் அலெக்ஸாண்டர் என முன்னிறுத்துகிறார்கள்.
ஆஸ்கார் விருதுகளுக்கு வாக்களிப்பவர்களுக்கு மறதி அதிகம். டிசம்பர் மாதத்தில் திரைப்படம் வெளியானால் மட்டுமே நினைவில் நிற்கும். ”மில்லியன் டாலர் புஜம்” திரைப்படமோ மே மாதமே வெளியாகி, இப்பொழுது திரையரங்குகளை விட்டு வெளியேறி விட்டது. இந்த நிலையில், அந்தப் படத்திற்கு எந்தப் பரிந்துரையும் கிடைப்பது சந்தேகமே. கோச்சடையான், ஐ போன்ற திரைப்படங்களுக்காகவும் ஏ ஆர் ரெஹ்மானின் பெயர் ஆஸ்கார் நீள்பட்டியல் பரிந்துரையில் இடம் பெற்றிருப்பதால், ‘மில்லியன் டாலர் ஆர்ம்’ பரிந்துரையையும் பத்தோடு பதினொன்றாகக் கருதி விட்டுவிடலாம்.
அது ஆஸ்கார் விருதிற்கான சாஸ்திரோப்தமான பட்டியல். இனி ஏ ஆர் ரெஹ்மானின் கோலோச்சல் குறித்த பாமரனின் பார்வை.
துவக்கத்தில் டிஸ்னியின் கோட்டை வரும்போதே பட்டாசு கிளம்பி விடுகிறது. இராணிகளும் மஹாராஜாக்களும் துள்ளலாக வெடி வெடிப்பது போல் ஐரோப்பிய பவனங்களுக்கு இந்திய ‘ஸ…ஸா… ஸரி’ வரும்போதே ”இது நம்ம இசை” என்று தோன்றவைத்து விடுகிறது. சிக்கன் டிக்கா மசாலாவில் இருக்கும் மணம் போல், பாரதத்திற்கேயுரிய வாசம்.
பதினான்காவது நிமிடத்தில் அந்த டிக்கா மசாலாவில் கொஞ்சம் சாம்பாரும் நிறைய தஹியும் கொத்து பரோட்டாவும் ஒருங்கே ஓங்கி ஒலிக்கிறது. சத்தமான இந்தியா. கசகச இந்தியா. சல்பேட்டா வாசனையான இந்தியா. கொண்டாட்ட இந்தியா. பரபர ஓட்டத்தின் நடுவே சாந்தமான இந்தியா. இப்படியெல்லாம் எழுத முடிகிறது… இதையெல்லாம் ஒலியில் கொண்டு வாருங்கள் என்று இயக்குநர் சொன்னாரா அல்லது இந்தியா என்றால் இதுதான் நாதம் என்று ஏ ஆர் ரெஹ்மான் சொன்னாரா? தெரியவில்லை. கேட்டுப் பார்த்தால் இந்தியா ஒலிக்கிறது. ஒளி கண்ணில் படாவிட்டால், மொழி புரியாவிட்ட்டால் கூட, அந்த லயம் காட்டிக் கொடுக்குமாறு அமைக்கப்பட்ட துள்ளலோசை.
அடுத்த ஓட்டம் இருபத்தி இரண்டாம் நிமிடம். ’சைய்யா சையா’ பாடிய சுக்விந்தர் சிங் ஒலிக்கிறார். அதே ஆட்டம்; பாட்டம். நிஜ நாடகம் தோன்றுவதற்கான ஒத்திகை நடக்கும் இடத்தை அறிமுகம் செய்யும் உறுமும் இசை.
அங்கே விட்டதை இருபத்தைந்தாம் நிமிடத்தில் சுக்வீந்த சிங் தொடர்கிறார். அவரை அப்படியே மாற்றி மேற்கத்திய இசைக்குத் தாவி விடுகிறார். இக்கி (Iggy Azalea) இங்கு வருகிறார்.
முப்பத்தி மூன்றில் ரெஹ்மானின் அமைதியான பாலட் ஒலிக்கிறது. பம்பாய் திரைப்படத்தில் ‘கண்ணாளனே’ துவக்கத்தில் வரும் இஸ்லாமிய சங்கீதம் போல்.
இனிமேல் திரைப்படத்தில் உற்சாகம் பிறக்க வேண்டும். ஏழைச் சிறுவர்கள் பந்து வீசும்போது அவர்களை ஒட்டி பாசமும், ஒட்டுதலும், ஜெயிக்க வேண்டுமே என்னும் ஏக்கமும் உண்டாக வேண்டும். டிஸ்னிக் கோட்டை வந்ததே… அதே இசை இப்பொழுது.
நாற்பதாவது நிமிடத்தில் நிஜப் போட்டி. இது ஏ ஆர் ரெஹ்மானின் சொந்த வீடு. முதல் படத்தில் ‘ஒட்டகத்தைக் கட்டிக்கோ’வில் ஆரம்பித்து மணி ரத்னத்திற்கு ’ருக்குமணி ருக்மிணி’ அயிட்டம் பாட்டு போட்டது போல் இலா அர்ஜுனும் அல்கா யாக்னிக்கும் குத்துகிறார்கள். அவர்கள் குத்துப்பாட்டு எப்பொழுது முடிகிறது, எப்பொழுது லகான் திரைப்படத்தில் வரும் “பார் பார் ஹோ…!! ஹஜார் பார் ஹோ!!!” வருகிறது என உணர முடியாத உருமாற்றம். அப்படியே, அந்த வீரர்களுக்காக கரகோஷமிடுகிறோம்.
நாற்பத்தியெட்டாம் நிமிடத்தில் வீடு திரும்புதல். அயல்நாடு செல்வதற்கு முன் வீட்டில் பெற்றோரிடம் சொல்லிக் கொண்டு விடை பெறும் தருணத்திற்கான முன்னுரையாக கொண்டாட்ட பாங்ரா. அது அப்படியே, உருக்கமான பிரிவுபசார பாந்தமாக மாறுகிறது. அங்கிருந்து அமெரிக்காவின் ராப், கெண்ட்ரிக் லமார் குரலில் தோன்றுகிறது.
இதன் பிறகு கிட்டத்தட்ட படம் முழுமையாக ஆட்கொள்கிறது. இசை தனியாக, பாடல் தனியாக, பாடகர் தனியாக துருத்திக் கொண்டு தெரிவதில்லை.
இசை ஒலிக்காமல் மௌனமாக இருக்க வேண்டிய நேரம். தோல்வியுறும் போது சந்திக்கும் நிசப்தம். அதிர்ச்சியும் பிரிவும் சொல்லும் குரல் எல்லாமே இருக்கிறது. ஆனால், இந்தியப் பகுதிகள் போல் “நான் ரெஹ்மான். நான் இங்கே இருக்கிறேன்” என்பது தெரிவதில்லை.
படத்தின் இறுதியில் இருவருக்கும் கடைசி வாய்ப்பு. இதில் வென்றால்தான் அமெரிக்கா கனவு பலிக்கும். தோற்றால் கூனிக் குறுக நேரிடும். இசை மெதுவாகவே ஆரம்பிக்கிறது. கொஞ்சம் ஹம்மிங். கொஞ்சம் ‘அ…ஆ…’. அப்படியே சட்டென்று ரிங்குவின் பந்து வேகமாகப் பாய்வது போல், தினேஷின் இதயம் துடிப்பது போல் துள்ளுகிறது. கையிலிருந்து ஏவப்பட்ட வில்லாக பாய்கிறது.
இந்தியர்கள் வெற்றிக்கான முதல் படியில் கால் வைத்ததை ஒலியிலும் திரையிலும் கலந்துருகிய உச்சகட்ட தருணமான படத்தின் இறுதியில் நிஜக்கதையிலும் வல்லவர்கள் வெற்றி கண்டார்கள் என்பதால் கண்கள் கலங்கியதா… அல்லது ரெஹ்மானின் இசையில் மனம் உருகியதா… தெரியவில்லை. ஆனால், ரெஹ்மான் தெரிந்தார். ஆஸ்கார் தெரியவில்லை. ஆனால், மீண்டும் மீண்டும் கேட்க வைத்து மயங்க வைக்கும் இசை தெரிந்தது. என்ன சுருதி, என்ன ராகம், என்ன தாளம், என்ன ஜானர் என்பதெல்லாம் தெரியவில்லை. ஆனால், இதயத்தைத் தொடும் இசை தெரிந்தது.
but for you I would not have known about this film. thanks. Carry on! bala