Tag Archives: Songs

அஞ்சனக்காரன்

விஜய்காந்த்தை முதன் முதலில் பார்த்தது விவித் பாரதியில். இளையராஜா என்று நினைத்த ‘உள்ளம் எல்லாம் தள்ளாடுதே’ பாடலில். இப்பொழுது பார்த்தால் சலீல் சௌத்ரி!

அசல் ரஜினி இருக்கும்போது இன்னொரு புரட்சியாளரும் ஏழைப் பங்காளரும் எனக்கெதற்கு என்று அவரின் ‘நூறாவது நாள்’ கூட தள்ளிப் போட்டு வந்த எனக்கு, தீபாவளி வந்தது. கூடவே, ‘வைதேகி காத்திருந்தாள்’ படமும் வந்தது.

ராத்திரி ஆனால் பாட்டு பாடுவதை நிறுத்திவிட்டு ரேவதியை கல்யாணம் செய்வானா!? அதை விட்டுவிட்டு வெறுமனே ‘ராசாத்தி… ஒன்ன காணாத நெஞ்சு’னு எவராவது புலம்புவானா? கதாபாத்திரம் நம்பமுடியவில்லை. எனினும், தமிழ் சினிமா. திகிலடையவோ அதிர்ச்சியடையவோ ஏதாவது செய்வார்கள். பத்து வருடத்திற்கு மேல் குடித்தனம் நடத்தி குழந்தைகள் பெற்ற மனைவியை எரியூட்டி விட்டு வரும்போதே, ‘எந்த வீட்டில் எவ வயசுக்கு வந்திருக்கா?’ என்பதை நேரடியாகக் கேட்டும் பார்த்தும் வளர்ந்த எனக்கு இயக்குநர் ஆர். சுந்தர்ராஜனும் மோசமான படைப்பாளி பட்டியலில் இணைந்து கொண்டார்.

அதன் பின்பும் ‘ஒலியும் ஒளியும்’ பாடல்கள் மூலமே விஜய்காந்த் ஈர்த்தார்.

ராதா படங்களைத் தேடித் தேடி பார்த்தபோது, ‘அம்மன் கோவில் கிழக்காலே’ அகப்பட்டது.
’முத்துமணி மாலை… என்னத் தொட்டுத் தொட்டு தாலாட்ட..’விற்காக ”சின்ன கவுண்டர்” கண்ணில் விழுந்தது.
அன்றைய (இன்றைக்கும் தான்) தேவதையான பானுப்ரியாவிற்காக ‘சத்ரியன்’ + ‘பரதன்’. இதில், ‘புன்னகையில் மின்சாரம்’ பாடலில் சுவர்களே தெரியாதவாறும் வெறும் வண்ணம் மட்டும் பின்னணியில் வருமாறு உழைத்ததாக சாந்தோம் மாணவர், அந்த நாள் நடன இயக்குநர் பிரபு தேவா சொல்ல, பாட்டின் சிறப்பு சற்றே புலப்பட்டது.
’சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு’ அர்த்தம் புரிந்ததா என்று பொறிப்புரை கொடுத்த விடலை பள்ளித் தோழர்களுக்காக ”பூந்தோட்ட காவல்காரன்”.
’மயங்கினேன்… சொல்லத் தயங்கினேன்!’ குறித்து தமிழ்த்திரை சுப்புடு சுரேஷ் கண்ணன் முதல் மரவண்டு வரை பலரும் மரத்தடி முதல் முகநூல் வரை எழுதி விட்டார்கள்.

விஜய்காந்த் நடித்த முதல் படம் – ‘ஊமை விழிகள்’.
விஜய்காந்த் கொடுத்த முதல் ஏ+பி+சி செண்டர் ஹிட் படம் – ‘அம்மன் கோயில் கிழக்காலே’; அவரின் பிற படங்களில் இதே கதாபாத்திரத்தை ஷோபனா, ரேகா என வாந்தியெடுத்தார்,

பிற்காலத்தில், ‘வல்லரசு’, ‘சிம்மாசனம்’, ‘பேரரசு’, ‘தர்மபுரி’ போன்ற படங்கள் இவரை தெலுங்கு மண்ணில் கொடி கட்டி — தம்பி பாலகிருஷ்ணாவுக்கு டஃப் கொடுக்க வேண்டியவர் தமிழ் மண்ணில் பிறந்த நம்மை இன்னும் கொடுமை செய்கிறாரே என மிரள வைத்தது.

எனினும், இன்றும் என் மனதில் நிற்பது, “தமிழில் எனக்குப் பிடிக்காத வார்த்தை! மன்னிப்பு!!”.

விஜயகாந்த் உருவாக்கிய நம்பிக்கைகள் எனக்கு நிஜம்.
’இளைய தளபதி” ஆக விஜய் போன்றோர் உருவாக துணை நின்றது நிஜம்.
சினிமா கல்லூரியில் படித்து விட்டு, வெளியே வந்த புதியவர்களுக்கு துணை நின்றது நிஜம்.
யேசுவோ, மாரியம்மனோ, ஓரங்க நாடகத்தை ஒளியோவியராக்கிய விசுவோ எவருக்கும் கரிசனம் பார்க்காமல் நடித்து குவித்தது நிஜம்.
நடிகர் சங்கமோ, கேப்டன் தொலைக்காட்சியோ, சொந்த கட்சியோ நடத்தி, ஜெயித்தது நிஜம். (இது டி ஆர். ராஜேந்தர், பாக்யராஜ் போன்ற ஆளுமைகள் வழுக்கிய இடம்).
அவருக்கு என் நெஞ்சில் ஒரு பெக் அடிக்க நினைக்கும் போது, ‘ஒரு மூணு முடிச்சால முட்டாளா போனேன்… கேளு! கேளு!! தம்பீ!!!’ நினைவிற்கு வருவதோ, ’சாமிகளே… சாமிகளே… சொந்தக் கதக் கேளுங்க!!’ என தன் பாட்டுக்கு பாடும்போது என்னுள் ஒளிந்திருக்கும் அந்தக் கருப்புத் தங்கம் வெளிவருவதும் நிஜம்.

அஞ்சலிகள்!

Classical Carnatic Ragas in Tamil Film Music

யூ டியுப் தளத்தின் சிறப்பம்சமே, “உனக்கு இது பிடிக்கலாம்!” என்று தெரியாத எவரோ ஒருவர் – எனக்குத் தெரிந்த தலைப்பில் உரையாடுவதை –> உங்களின் ஓடையில் காண்பிப்பது.

அப்படி தென்பட்டவர் தமிழ்ச்செல்வன் பாரதி.

குரங்கிற்கு எப்படி வாழைப்பழம் விருப்பமோ இளையராஜாவின் பாடல்கள் அப்படி எனக்குப் பிடிக்கும். தமிழ்செல்வன் பாரதி.மாதிரி கர்னாடக சங்கீதம் அறிந்தவர்கள் அதை வேறொரு விதத்தில் ரசிக்கக் கற்றுக் கொடுக்கிறார்கள்.

அதாவது ஓவியங்களை எண்ணெய் ஓவியம், வண்ணக்கோல், செயற்கை வண்ணக் கூழ்மங்கள், நீர்வர்ணம், மை ஓவியம், பூச்சு ஓவியம் என்றெல்லாம் வகைப்படுத்துவது போல், இசையையும் ஒழுங்காகக் கற்றுக் கொண்டிருந்தால் இதை இந்த முறையில் தொகுத்திருக்கிறார்கள் என்று அறியலாம். ஏன் அந்த வடிவத்தைத் தேர்ந்தெடுத்தார்கள்? எப்படி அந்தப் பூச்சு இந்தத் தருணத்திற்கு பொருந்துகிறது? இதுவரை எவரும் செய்யாத புதுமையை எவ்வாறு புகுத்தியிருக்கிறார்? ஏன் வெறுமனே சாஸ்திரீய முறைப்படி பாடுவது அலுப்பையும் ; அதையே ராஜாவின் எண்ணத்தில் உருவாகும் பாடல் — பிரவாகத்தையும் கொடுக்கிறது?

ஃபாரம் ஹப் (The Forum Hub) என்னும் தளத்தில் பேசியது… தமிழ் ஃபிலிம் மியூசிக், டி.எஃப்.எம் பேஜ் (இப்பொழுது newtfmpage) என்றெல்லாம் கதைத்தது… அங்கே நாற்பது பக்கங்கள் இருக்கும். ஒவ்வொரு பக்கத்திலும் நூறு பதில்களும், பதிவுகளும் இருக்கும். இடையிடையே சில வைரங்கள் ஜ்வலிக்கும். தேடுவது கடினம். சட்டென்று புரியாத சதுஸ்ருதி தைவதம், அந்தர காந்தாரம், பிரமாண ஏகஸ்ருதி என்றெல்லாம் மிரட்டும். சல்லடை போட்டு சலித்து, அந்தப் பகிர்வுகளைக் கோர்வையாகத் தொகுத்து, ஒரேயொரு சினிமாப் பாடலையோ, ஒரு ராகத்தையோ, ஒரு விஷயத்தையோ பற்றி முழுமையாகக் கதை போல் சொல்ல எவராவது கிடைப்பாரா என்று ஏங்க வைத்தாலும் சோளப்பொரி கிடைத்தது.

திரள் சந்தைக்கான புகழ் பெற்ற முயற்சியாக சிக்கில் குருச்சரண் அதை பரவலாகப் பதிவாக்கி எல்லோருக்கும் கொண்டு சென்றார். அவரைப் போல் பலரும் ஏற்கனவே இது மாதிரி நிறைய முயற்சிகளும் எழுத்துகளும் பகிர்வுகளும் தந்திருந்தாலும், எல்லோரும் அறிந்த நபர் – எல்லோருக்குமான பதிவாக ஆக்கியதில் சிக்கில் குருச்சரணுக்கு முக்கிய இடம் உண்டு. ஜனரஞ்சகமாக இருக்கும். சுவாரசியமாக இருக்கும். நன்றாக எடிட் செய்து தொகுக்கப்பட்டிருக்கும். ரொம்ப தொழில்நுட்ப சங்கதிகள் சொல்லி அலுப்பு தட்டாமல், அதே சமயம் டெக்னிகலாக வேண்டும் என்பவர்களுக்கு நிறைய இடம் இருக்கும்.

அவர் வழியில் தமிழ்ச்செல்வன் பாரதி முக்கியமானவர். சிக்கிலார் போல் மேளகர்த்தா ராகம் என்று வகைப்பாடுகளைச் சொன்னாலும், மெட்டுக்கு ஏற்ற வார்த்தைகள், அந்தப் பாடலின் கூட்டிசையில் வீணையும் வயலினும் எவ்வாறு முக்கியமாகிறது என்பதில் மேற்கத்திய சங்கீத நுட்பங்கள், என்று உணர்த்துகிறார். நிரோஷா தாங்க எனக்குத் தெரியும் என்பவருக்கு சரிகமபதநி என்பதில் கடைசியில் வரும் நி என்னும் நிஷாதம் எவ்வாறு இசைஞானியின் பாடல்களில் கையாளப்பட்டிருக்கிறது என்கிறார். எல்லாவற்றையும் காலை நடை, பக்கத்தில் உறங்கும் செல்லப்பிராணிகள் என வித்தியாசமான, நேரடியான, பாசங்கற்ற விதத்தில் தயார் செய்து பரிமாறுகிறார்.

இந்த மாதிரி விஷயமெல்லாம் கேட்க குருகுலத்தில் காலந்தோறும் பணிவிடை செய்யவேண்டும். குருவிற்கு எப்போது உத்வேகம் வருகிறது என்று காத்திருக்க வேண்டும். ஒட்டுக் கேட்க வேண்டும். கேட்டதை இன்னொருவரிடம் சொன்னால், அந்த சீடன் நம்மை விட பிராபல்யம் ஆகி விடுவான் என்று விரித்துரைத்து, சந்தேக நிவர்த்தி செய்து, தெளிவாக்கிக் கொள்ளக் கூட முடியாத சூழலில் இருந்து சுதந்திரமாக எல்லோருக்கும் எல்லாவற்றையும் அள்ளித் தரும் அளவில்லா தகவல் கிடைக்கும் காலத்தில் வாழும் நாம் – கொடுத்து வைத்தவர்கள்.

அதற்கு முன்பே இவற்றையெல்லாம் தமிழிசையில் பாமரனுக்கும் கொண்டு சென்ற பாவலர் ராஜா ஆளுமையைப் புரிந்தவர்கள் பாக்கியசாலிகள்.

PS1 Reasons: Blue Sattai Maran

எடுத்ததெல்லாம் எடுத்தான்
அவன் யாருக்காக எடுத்தான்
சன் டிவிக்கா எடுத்தான் ?
இல்லை!
ப்ளூ சட்டைக்காக எடுத்தான்!!

சன் டிவிக்கா எடுத்தான்?
இல்லை…
ப்ளூ சட்டைக்காக எடுத்தான்!!

கிராஃபிக்ஸ்
கிடையாதென்றால் மாறன்
வீடியோ போட மறந்திடுமா

டிக்கெட்
இருநூறென்றால்
போய் வர
மிரண்டுடுமா

உனக்காக
ஒன்று எனக்காக
ஒன்று ஒருபோதும்
மணிரத்னம் எடுத்ததில்லை

எடுத்ததெல்லாம்
எடுத்தான் அவன் யாருக்காக
எடுத்தான் சன் டிவிக்கா
எடுத்தான் இல்லை
ப்ளூ சட்டைக்காக எடுத்தான்

எடுத்தவன்
மேல் பழியுமில்லை
விமர்சித்தவன் மேல்
பாவம் இல்லை

கிடைத்தவர்கள் பிரித்துக்கொண்டார்
பார்த்தவர்கள் பாயை
பிராண்டினார்

பலர் வாட
வாட சிலர் வாழ
வாழ ஒரு போதும்
மணிரத்னம் எடுத்ததில்லை

எடுத்ததெல்லாம்
எடுத்தான் அவன் யாருக்காக
எடுத்தான் சன் டிவிக்கா
எடுத்தான் இல்லை
மாறனுக்காக எடுத்தான்

புரியல என்போர்
இருக்கையிலே புரிபவர்கள்
புரியல என்பார்

தலை நிறைய வலி
இருக்கும் வாய் நிறைய
பபுள் கம் இருக்கும்

புரியாத
போதும் பிட்டு பிட்டென்று
எடுத்து வைக்கின்ற
பேரை வாழ்த்திடுவோம்

PS1 எடுத்ததெல்லாம்

எடுத்தான் அவன் யாருக்காக
எடுத்தான் சன் டிவிக்கா
எடுத்தான் இல்லை
ப்ளூ சட்டைக்காக எடுத்தான்

சன் டிவிக்கா
எடுத்தான் இல்லை
ப்ளூ சட்டைக்காக எடுத்தான்

(பொன்னியின் செல்வன் ஏன் உருவானது – ஏழாவது காரணம்)

அந்தப் பாடல் பெற்ற விழிய விமர்சனங்கள்:

ஒன்லி எ கேம் – ஆட்டம் முடிவு

ஞாயிற்றுக்கிழமைகளில் பாட்டி வீட்டிற்கு செல்வோம். அவள் விவித பாரதியின் சாயாகீத் ரசிகை. அங்கே கேட்க ஆரம்பித்த “தேரே பினா ஜிந்தகி ஸே கோயி… ஷிக்வா தோ நஹி”, பிறிதொரு அந்தாக்‌ஷரியில் கை கொடுத்தது.

அந்தப் பாடலை சற்றே பார்ப்போம். நாயகனும் நாயகியும் ரகசியமாக சந்திக்கிறார்கள். நாயகியைப் பொறுத்தவரை அவன் மட்டும் அவளுடைய வாழ்வில் குறுக்கிடா விட்டால், அவள் வாழ்வு தெளிந்த நதியாக, கொந்தளிப்புகள் இல்லாமல் அமைதியான ஓடத்தில் மிதந்து சென்றிருக்கும். ஆனால், அவன் இல்லாவிட்டால், வாழ்க்கை என்பது வாழ்வாக இருந்திருக்காது.

நான் நாவலும் சிறுகதையும் படிக்க ஆரம்பித்ததே, அதை ஏதாவதொரு பெண்ணிடம் கொடுத்து அவளின் மனதைத் தொட்டு விடலாம் என்ற எண்ணத்தில்தான். “நில்… கவனி… காதலி” என்று ராஜேஷ் குமார் கொடுத்து பார்த்தேன்; பலிக்கவில்லை. அடுத்த அஸ்திரம்… ‘பாட்டுக்கு பாட்டெடுத்து’ அந்தாக்சரி விளையாட்டு. இந்தப் பாடல் என் உணர்வை, குறிப்பால் உணர்த்த உதவியது.

அந்த மாதிரி இன்னொரு அற்புதமான ரேடியோ நிகழ்ச்சி Only A Game.

அலுவலில் அரசியல் பேச முடியாது. எல்லோரும் தீவிர கொள்கைவாதிகள். என் உடன் வேலை பார்க்கும் டீமில் ஐந்து பேருக்கு ஐந்து கொள்கை; ஒரே அணியில் துப்பாக்கி வைத்திருப்பதற்கு ஆதரவாக ஒருவர்; காவல்துறையின் பணிக்கு அதி தீவிர ஆதரவாளர் இன்னொருவர்; பாரதப் பிரதமர் நரேந்திர மோடியையும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப்பையும் வெறுப்பவர் பலர்; சட்டம் மற்றும் ஒழுங்கு முக்கியம் என்று உறவினர்களை போருக்கும் காக்கி சட்டைக்கும் பலி கொடுத்தவர் சிலர்.

எனவே, எல்லோருக்கும் பொழுதுபோக்கான பேச்சு என்பது – “விளையாட்டு”. நேற்று ரெட் சாக்ஸ் எப்படி பேஸ்பால் ஆடினார்கள்? இந்த வருடம் பாஸ்டன் செல்டிக்ஸ் கூடைப்பந்தில் சாதிப்பார்களா? பனிச்சறுக்கு ஹாக்கியில் ப்ருயின்ஸ் எவ்வாறு கெலிப்பார்கள்? எல்லாவற்றிற்கும் மேலாக நியு இங்கிலாந்து பேட்ரியாட்ஸ், டாம் ப்ரேடி, பெலிசிக் எல்லோரும் போங்காட்டம் ஆடுகிறார்களா அல்லது அழுகுணி ஆட்டத்தில் அமெரிக்க கால்பந்தின் மன்னர்களாக இருக்கிறார்களா?

இப்படி பேச ஒரு நிகழ்ச்சி… ஒலிப்பதிவு… பாட்காஸ்டிங்… தேவை. அதை டபிள்யூ.பி.யூ.ஆர். வானொலியின் “ஒன்லி எ கேம்” நிகழ்ச்சி அருமையாக பூர்த்தி செய்தது.

அலுவலுக்குப் போக ஒரு மணி நேரம். திரும்பி வருவதற்கு இன்னொரு மணி நேரம். அப்போது கேட்பதற்கென்று பிரத்தியேகமாக சில நிகழ்ச்சிகளை தேர்ந்தெடுத்து வைத்திருப்பேன்:

  • வெயிட் வெயிட்… டோண்ட் டெல் மீ
  • ரேடியோ லாப்
  • ஃப்ரீகனாமிக்ஸ்
  • டெட் டாக்ஸ்
  • ஷங்கர் வேதாந்தம் வழங்கும் ஹிட்டன் பிரெயின்

அந்த வரிசையில் இந்த ஒலிபரப்பிற்கு சிறப்பான இடம் இருந்தது. வெறுமனே ஸ்கோர்களை ஒப்பிக்காமல், அந்த ஆட்டக்காரர்களின் கதையையும் சொல்லியது. சட்டென்று பருந்துப் பார்வை பார்த்து, பழைய சரித்திரத்தை விவரித்து, விஷயத்தைப் புரிய வைத்தது. பெரிய பெரிய அணிகளின் ஆட்டங்களைப் பற்றி மட்டும் அலசாமல், பக்கத்து வீட்டுப் பையன் ஆடிய விதத்தை அவ்வப்போது கண்முன்னே காதின் வழியே உபாசித்தது.

எத்தனையெத்தனை கதைகள்! எவ்வளவு அணுக்கமான சம்பவங்கள்!! நெகிழவைக்கும் உண்மை நிகழ்வுகளின் குரல்கள்!!!

ஆண்கள் மட்டுமே ஆடிய விளையாட்டுகள் எல்லோரின் கவனத்தைக் கவர்ந்தபோது, மகளிர் கலந்து கொண்ட போட்டிகள், அவர்களின் சாதனைகள், அந்தப் பெண்களின் போராட்டங்கள் என்று என்.பி.ஆர். ரேடியோவிற்கே உரிய தனித்தன்மையை நிலைநாட்டியது. மியா ஹாம், க்றிஸ்டீன் லில்லி, ப்ரியானா ஸ்கரி எனப் பல பெண் நட்சத்திரங்களை முதன் முதலாக அறிமுகப்படுத்திக் கொண்டது இவர்கள் வழியாகத்தான். 1999ல் உலகக் கோப்பை வீரர்களாக அவர்கள் உலகம் அறியப்படுவதற்குமுன் அலைவரிசையில் அவர்களை உலாவவிட்டு கண்முன்னேக் கொணர்ந்திருந்தார்கள்.

உச்சத்தில் இருக்கும்போது விடைப்பெற்றுவிட வேண்டும். ஒரு நிகழ்ச்சியோ பத்திரிகையோ நடிகரோ – தன் தொழிலில் சாதித்துக் கொண்டிருக்கும்போதே ஓய்வு பெற்று, வெற்றிடத்தை உணர்த்த வேண்டும்.

உணர்த்தி இருக்கிறது – “இது வெறும் விளையாட்டு மட்டுமே”.

ராஜா ஆண்டாலும்: Gangai Amaran Rocks!

Never knew that “உறவுகள் தொடர்கதை” in “அவள் அப்படித்தான்” was written by ஜீனியஸ், மேதை என்னும் தோரணை இல்லாத கங்கை அமரன்.

முள்ளும் மலரும் படத்தின் ‘ராமன் ஆண்டாலும்’ பாடலை அசலாக எழுத இருந்தவர் கண்ணதாசன்.

அவரும் “வாழ்க்கையெனும் வட்டத்தில் விட்டதை வெல்லும் காலமும் மறக்கும் வேகமும் புத்தனாகினால் கிடைக்குமோ” என்பது போல் எழுதி வைத்திருக்கிறார். அதைப் படித்த மகேந்திரன், “தண்ணியைப் போட்டுட்டு மிகக் குறைந்த ஏட்டறிவே கொண்ட ‘காளி’ இப்படி தத்துவார்த்தமாகப் பாட மாட்டானே… வாய்க்கு வந்ததை கோபமாக சொல்லவேண்டும்.” என்கிறார்.

கண்ணதாசனைக் கூப்பிட்டு மாற்றச் சொல்ல அவகாசமில்லை. அப்போது எழுதிய எளிய வரிதான்

“ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்
எனக்கொரு கவலையில்லே
நான்தான்டா என் மனசுக்கு ராஜா
வாங்குங்கடா வெள்ளியில் கூஜா
நீ கேட்டா கேட்டதை கொடுப்பேன் கேக்குற வரத்தை கொடுப்பேன்
கேக்குற வரத்தை கேட்டுக்கடா”

Vanji Kottai Vaaliban and Braveheart: Historical Fiction in Movies

ராகா.காம் செய்யும் மிக உத்தமமான காரியம் என்பது நான்-ஸ்டாப் கன்னலில் பாடல்களை தொடர் ஒலிபரப்பாக கோர்ப்பதுதான். ஒரு நாள் சந்திரபாபு, இன்னொரு நாள் இசையமைப்பாளர் வேதா, என்னும் வரிசையில் இன்று கிளாசிக்ஸ் ஓடிக் கொண்டிருந்தது.

அப்பொழுது வஞ்சிக் கோட்டை வாலிபன் படத்தில் கொத்தமங்கலம் சுப்பு எழுதி சீர்காழி கோவிந்தராஜன் பாடிய ‘வெற்றிவேல்… வீரவேல்’ கிடைத்தது.

பல நல்ல புறநானூறு பாடல்களையும் பரணி பாடிய வரலாற்றையும் எழரை நிமிடத்திற்கான நாடகக் காட்சியாக ஒருங்கிணைத்திருக்கிறார்கள். சட்டென்று ‘பிரேவ் ஹார்ட்’ திரைப்படத்தை நினைவிற்கு கொண்டு வந்தது.

ஸ்காட்லாந்து மக்கள் பிரிட்டிஷாருக்கு எதிராக ஏன் சண்டை போட்டார்கள்? போர்களுக்காக வில்லியம் வாலஸ் எவ்வாறு மக்களை சேர்த்தார்? Offence is the best defense என்பதை தற்கால விளையாட்டு பயிற்றுநர்களுக்கு, அக்கால வரலாறு கொண்டு விளக்கிய படம். மெல் கிப்சன் நடித்த ’பிரேவ்ஹார்ட்’டில் சிலந்தியைப் பார்த்து விடாமுயற்சியைக் கற்றுக் கொண்ட ராபர்ட் ப்ரூஸும் இருந்தார்.

இரண்டுமே பிரும்மாண்டமான போர்ப்படங்கள். வில்லன்களாக அரசர்களைக் கொண்டவை. காதல் நிறையவே உண்டு. இரண்டு நாயகிகள் கொண்ட கதை. வீரதீரம் நிறைந்த நாயகன். 1958ல் தமிழில் வெளியான ‘வ.கோ.வா.’ சூப்பர் ஹிட். ப்ரேவ்ஹார்ட்டும் நல்ல வசூல் கொடுத்தது.

மீண்டும் இந்த மாதிரி சரித்திரத்தையும் மசாலாவையும் தேசப்பற்றையும் சரியாக மிக்ஸ் செய்யும் மசாலாக்கள் எப்பொழுது வரும்?

Chitrahar: Hindi Songs

தமிழில் ஒலியும் ஒளியும் மாதிரி ஹிந்தியில் சித்ரஹார். தொண்ணூறுகளில் மனதைக் கவர்ந்து தொடர்ந்து நினைவில் பதிந்திருக்கும் பாடல்கள் பட்டியல்.

1. I Love My IndiaPardes

சிஸ்டத்திற்குள் இருந்தே சிஸ்டத்தை முறியடிப்பது போல், இந்தியா பிடிக்கும் என்று சொல்லி அமெரிக்க தேசி மாமனாரை வீழ்த்தும் மஹிமாவா… குடியரசு தின ஸ்பெஷலா…

2. Man MohiniHum Dil De Chuke Sanam

ஹீரோயினுக்கு மழைப்பாடல் கொடுப்பார்கள்; சின்னச் சின்ன ஆசை கேட்பார்கள். ஆனால், துள்ளல் எண்ட்ரி கொடுப்பது ஐஸ்வர்யா ராய்.

3. Mehndi Lagake RakhnaDilwale Dulhania Le Jayenge

விடிஞ்சா கல்யாணம்; மாப்பிள்ளையின் முன்னிலையில் காதலியுடன் கொஞ்சம் டூயட்; துளி பயம்; நிறைய ஆட்டம். நடிப்புக்கு கஜோல்.

4. Rangeela ReRangeela

ராம் கோபால் வர்மாவின் முதல் இந்தி படிக்கட்டு; ஏ ஆர் ரெஹ்மானின் ஆஸ்கார் பாய்ச்சல்; ஊர்மிளாவின் அலட்டலில்லாத பாங்கு; எல்லாவற்றையும் மிஞ்சும் கனவும் நம்பிக்கையும் கொப்பளிக்கும் அர்த்தமுள்ள வரிகள்.

5. Ek Ladki Ko Dekha To1942 A Love Story

இரண்டு நிமிடம் முன்னால் விழுந்த பனி போல் மெத்து மெத்தான ஒளித்தொகுப்பு.

6. Aati Kya KhandalaGhulam

இறுக்கமான நேரத்தில் இயல்பாக்கி, விவகாரமான கேள்வியை விளையாட்டாக கொக்கி போடும் லாவகம்.

7. Jadoo teri nazar: Dar

தொலைக்காட்சியில் நடிக்க ஆரம்பித்து, துணை நடிகராக உயர்ந்து, வில்லனாகக் கலக்கி இன்று ரா #1, மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன!

8. Phir Bhi Dil Hai Hindustani – Title Song

விளம்பரம் எடுப்பவர், திரைப்பாடலுக்கு காட்சியமைப்பு கொடுத்தால், இப்படித்தான் சௌக்கியமாக அமையும்.

9. Ramta jogiTaal

ஐஷ்வர்யா ராய்க்கு நடிப்பு வராவிட்டாலும், ஆட்டம் அமர்க்களம்.

10. Pehla NashaJo Jeeta Wohi Sikander

பக்கத்து வீடு; சின்ன வயது துவங்கி தோழி; முதல் காதல்; பதின்ம வயதில் கல்லூரியில் சகாக்களுடன் பார்த்த காட்சியின் நினைவு மீட்டல்.

ஒலியும் ஒளியும்

நாற்பது வயதை எட்டிப்பார்ப்பவரின் ஞாபகத்தின் படி எந்தப் பாடல்கள் கொசுவர்த்தியை மீட்டும்? சிதறலாய் ஒரு பத்து

1. ராக்கம்மா கையத் தட்டு: தளபதி

மணி ரத்னம் இரண்டாம் பட்சம்; ரஜினி மூன்றாம் பட்சம்; இளையராஜா #1

http://youtu.be/YL3BO3hg48I

2. டெலிபோன் மணி போல் சிரிப்பவள் இவளா: இந்தியன்

ரஜினிகாந்த் முதலாம் இடத்தில் வந்தால், கமல்ஹாசன் கூடவே வரவேண்டுமே!

http://youtu.be/XqsGamTUYC0

3. மலர்களே மலர்களே: லவ் பேர்ட்ஸ்

மாற்றிய சட்டை அனைத்தும் பிரபு தேவாவிற்கா அல்லது அடுத்த படத்திற்கா என்னும் உண்மை தெரிஞ்சாகணும்.

http://youtu.be/UA3F80Q8eqE

4. ராஜ ராஜ சோழன் நான்: ரெட்டை வால் குருவி

அர்ச்சனாவின் ரவிக் புடைவையின் அன்னியோன்யமோ; ராதிகாவின் ஆரத்தழுவலோ!

5. மன்றம் வந்த தென்றலுக்கு: மௌன ராகம்

நிச்சயிக்கப்பட்ட திருமணங்களின் வண்டவாளங்களை இரண்டு சரணங்களில் சுருக்கும் அழகு.

http://youtu.be/oGAY6E3arrY

6. இந்த வாழ்வே மாயம்: வாழ்வே மாயம்

கமலுக்கென்று நிறைய பாடல்கள் இருக்கின்றன; ‘அந்தி மழை’, ‘உனக்கென்ன மேலே நின்றாய்’, அண்ணாத்தே ஆடுறார்…

http://youtu.be/H2DreLB8Qoo

7. தோல்வி நிலையென நினைத்தால்: ஜெய்சங்கர்

பாடலுக்கேற்ற காட்சியமைப்பு; கடவுளை தரிசித்தது போன்ற உத்வேக எழுப்புதல்.

8. கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்: திருடா திருடா

வைரமுத்து மாயாஜாலம்; ரெஹ்மானின் இளமை; திரைப்படத்தின் பசுமை

9. தெய்வம் தந்த வீடு, வீதி இருக்கு: அவள் ஒரு தொடர்கதை

கண்ணதாசன் அருமை தெரியாத காலம்; பாலச்சந்தர் குன்சாக புரிந்த நேரம்; பெண்ணுரிமை புரிந்ததாக மயங்கிய சமயம்.

http://youtu.be/GmRolavyukg

10. டேக் இட் ஈசி ஊர்வசி: காதலன்

சென்னையைப் பார்த்து இப்படி ஜொள்ளு விட வைக்கமுடியுமா! – சாங்கர்

கொசுறு: கடவுள் வாழும் கோவிலிலே கற்பூர தீபம்: ஒரு தலை ராகம்

நியாயமாக ‘பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா’வோ, ’விழிகள் மேடையாம்; இமைகள் திரைகளாம்’ கிளிஞ்சல்களோ பிடித்திருக்க வேண்டும்; ஆனால், கல்லூரி காதல் என்றால் டி ராஜேந்தர் முதல் படம்.

இசை – ராஜத்துவம்

முந்தைய ட்வீட்ஸ்: விச்வரூபம் – ஆஸ்கருத்துவம்

http://twitter.com/#!/snapjudge/status/105723512320299008
http://twitter.com/#!/snapjudge/status/108609994697613312
http://twitter.com/#!/snapjudge/status/134671573792722945
http://twitter.com/#!/snapjudge/status/116582204699721728
http://twitter.com/#!/snapjudge/status/76704664632033280
http://twitter.com/#!/snapjudge/status/76767474774835200
http://twitter.com/#!/snapjudge/status/76767888136077312
http://twitter.com/#!/snapjudge/status/21315335340687360
http://twitter.com/#!/snapjudge/status/26338528015159296
http://twitter.com/#!/snapjudge/status/76768136317239296

குத்துங்கம்மா குத்து: தமிழ் பேட்டை ராப், துள்ளல் கும்மாளம் & சாவு மேளம்

Avan Ivan

http://www.youtube.com/watch?v=WyUhFr0BLug