Tag Archives: Politics

Therthal 2009: வாக்கு கொடுத்துட்டேன்

தேவ் அழைக்கிறார்.

பாலபாரதி பவர்பாய்ன்ட் இட்டு கொதிக்கிறார். மாற்றம் வேண்டும் இயக்கம் துவங்குகிறார்கள். பதிவரோ சூடான இடுகைக்கு செய்தி இட்லியும் அலசல் வடையும் பரிமாறுகிறார்.

உங்கள் பொன்னான வாக்கை தேர்தலில் சரியான சின்னம் பார்த்து அமுக்க பத்து காரணம்:

  1. மதன் பாப்புக்கு வழங்குவது போல் ‘தீசுந்தர் சி அடிப்பார்.
  2. கண்ணுக்கு மையழகு. கைக்கு வாக்கு போட்ட மசி அழகு.
  3. தேவ் அழைத்தவர் எல்லாம் வெளிநாடு. நீங்க உள்நாடு.
  4. வேளாவேளைக்கு சாப்பிடுகிறோம்; வீட்டை தூசு தட்டுகிறோம்; அது போல் இதுவும் எளிது + முக்கியம் + கடமை.
  5. பாஸ்போர்ட் முதல் பால் வரை பல க்யூவில் நிற்கிறோம். இந்த காத்திருப்பு வரிசை எம்மாத்திரம்?
  6. எழுபது வயதான என் அம்மா இதுவரைக்கும் எந்தத் தேர்தலையும் தவறவிட்டதில்லை. கால் சரியில்லாதபோதும், எப்படியாவது வாக்களித்து வந்திருக்கிறார்.
  7. தி ஹிந்து, வலைப்பதிவு, சிஎன்என், காமெடி சென்ட்ரல் எல்லாம் பாத்தால் எதற்கும் நயா சென்ட் பயனில்லை. வாக்குச்சாவடியில் எந்திரத்தை தொட்டால் மட்டுமே மோட்சம்.
  8. உங்களுக்கு பதில் இன்னொருத்தர் கணவனாக செயலாற்ற விடுவீர்களா? அப்படியிருக்க கள்ளவாக்கு மட்டும் ஏன் விடுகிறீர்கள்?
  9. அனுபவஸ்தன் சொல்கிறேன். வோட்டு போட்டார்ல் ரொம்ப திருப்தியாக இருக்கும். மனநிறைவு கிடைக்கும்.
  10. இதே மாதிரி இன்னும் நூறு இடுகை வந்து உங்களைத் தொல்லைக்குள்ளாக்கணுமா? தயவு செஞ்சு போட்டுடுங்க!

யாருக்கு போட்டேன் என்று ட்விட்டரில் எனக்கு டைரக்ட் மெஸேஜ் விடவும் மறக்காதீங்க 🙂

நான் இந்தியாவில் இல்லையே என்றால், அட்லீஸ்ட் பதிவு மட்டுமாவது போடுங்க தல•…

    Therthal 2009: Politicians Biodata: Cartoons

    கார்ட்டூன்: இந்திய அரசியலும் தமிழக எம்பி பேரங்களும்

    முத்துக்குமாரும் காந்தியும்: கேள்விகள்

    1: தற்கொலை குறித்து உங்கள் கருத்தென்ன?

    2. உயரிய லட்சியங்களுக்காக தன்னை வருத்திக் கொள்வதும், தற்கொலை செய்து கொள்வதும் அதற்கு வீரவணக்கம் செய்வதும் பாராட்டுக்குரிய செயலா?

    3. அடைய வேண்டிய இலக்கிற்காக வழிமுறையில் சில சமரசங்களை செய்து கொள்ளலாமா?

    4. கணவன் இறந்தவுடன் மனைவியையும் தீக்குளிக்க வைப்பது சரிதானா?

    5. வாழ்க்கையின் பாரத்தைத் தாங்க இயலாதவர்கள் தற்கொலை மேற்கொள்கிறார்களா?

    6. மற்றவர் மேல் எல்லா சுமையையும் போட்டுவிட்டு, தான் தீக்குளித்து விடுதலைப் பெற்றுக் கொள்கிறார்களா?

    7. கிறித்துவத்தில் பாவமன்னிப்பு; பௌத்தத்தில் கர்மா; இஸ்லாமின் சொர்க்கம் போல் இல்லாமல் இந்து மதத்தில் மறுபிறவி போன்ற கருத்தாக்கங்கள்தான் தியாகத்தின் சின்னமாக அர்ப்பணிக்க வைக்கிறதா?

    8. உயரிய இடங்களை அடைய முடியாதவர், மற்றவரைக் கண்டு பொறாமைப்படுபவர், அடுத்தவரின் மதிப்பிற்கு ஆசைப்படுபவர்களை எல்லாம், இந்த வீரவணக்க நிகழ்வுகள் உயர்வு நவிற்சிக்கு வித்திட வைத்து, தீக்குளிப்புகளை ஊக்கப்படுத்துகிறதா?

    9. வீரம் என்றால் கத்தி கொண்டு போரிட்டு சண்டையில் எதிரியை வீழ்த்துவதா?

    10. தற்கொலையும் கூடாது; உண்ணாவிரதத்திலும் பயனில்லை; அப்படியானால் அறப்போராட்டங்களைத் துவக்கி, பெருமளவில் மக்களிடம் கொண்டு சென்று, ஆட்சியார்களிடம் மாற்றத்தை எவ்வாறு உருவாக்குவது?

    11. ஒபாமா போல் பெரிய அளவில் துவக்க கால பணசேமிப்பு இல்லாமல், சுய ஆர்வத்தை வித்தாக வைத்து, பலரை ஈர்த்து, மாற்றங்களுக்கு கால்கோள் இடுவது எங்ஙனம்?

    12. திருவிழா கொண்டாட்டம் போல் வீரவணக்கமும் குழுவாகக் கூடி கூத்து போட்டு, கும்பலாக ஒன்றுசேர்ந்து, கூட்டம் பார்த்து பிரமித்து, மகிழ்ச்சியைப் பகிரும் தருணங்கள்தானா?

    போய் வா பிள்ளையாண்டானே – புஷ் வருடங்கள்

    நன்றி: Then and Now – The Atlantic (January/February 2009)

    bush-map

    மலையாளம், மலையாளி – ஓர் எச்சரிக்கை: சக்கரியா

    நன்றி: பத்தி: அரபிக் கடலோரம் – காலச்சுவடு :: தமிழில்: சுகுமாரன் [இதழ் 98 – பிப்ரவரி 2008]

    மலையாள மொழி இன்று அடைந்திருக்கும் நிலைமை விநோதமானது. மலையாளம் என்பது என்ன? மூன்றேகால் கோடி எண்ணிக்கையுள்ள கேரளயர்கள் அன்றாடம் பேசுகிற மொழி. எழுதுகிற மொழி. நிச்சயமாகக் கேரளத்திலுள்ள பெரும்பான்மை மக்களின் பேச்சு மொழியும் எழுத்து மொழியும் மலையாளம் மட்டுமே. உடனடியாக அப்படி இல்லாமல் போய்விடுமென்றும் தோன்றவில்லை.

    :::

    சட்டபூர்வமான ஆட்சிமொழி மலையாளம். ஆனால், அரசாங்கப் பணிகளில் பெரும்பான்மையும் நடப்பது ஆங்கிலத்தில்தான். எழுத்தறிவு இல்லாத குடிமகனுக்கு நியாயம் கிடைக்க வேண்டிய நீதிமன்ற மொழியும் ஆங்கிலந்தான்.

    அதே சமயம்

    • நாளிதழ்கள்,
    • தொலைக்காட்சிகள் பயன்படுத்தும் மொழி மலையாளம் மட்டுமே.
    • சட்டமன்ற விவாதங்களின் மொழி மலையாளம்.
    • மதப் புரோகிதர்களும் சாதியமைப்புகளும் மக்களுடன் பேசுவது மலையாளத்தில்தான். சமஸ்கிருதத்திலோ அரபியிலோ லத்தீனிலோ அல்ல.
    • சினிமாவின் மொழியும் சினிமாப் பாட்டுகளின் மொழியும் மலையாளமே.
    • நாடகங்கள் மலையாளம்.
    • கதையும் கவிதையும் நாவலும் மலையாளம்.
    • அரசியல் சொற்பொழிவுகள் மலையாளம்.

    ஆனால், பாலவாடி முதல் மலையாளியின் முதல் மொழியாகக் கருதப்படுவது ஆங்கிலமே. மலையாளம் வெறும் ‘செக்கண்ட் லாங்வேஜ்’. இந்த விசித்திரமான இரட்டை முகம் எப்படி உருவானது?

    ‘பயன்பாடு’ என்ற ஒற்றை வார்த்தையே இதற்குப் பதில். மலையாள மொழி மூலம் பயனடைபவர்களுக்கும் பயனடையாதவர்களுக்குமான வேறுபாடு இங்கே தெளிவாகிறது. ‘பயன்’ என்பது என்ன பொருளைத் தருகிறது என்பது எல்லாருக்கும் தெரியும். நமது வாழ்க்கையை எந்த வகையிலாவது மேம்படுத்துகிற ஒன்று. வாழ்க்கையைப் பராமரிக்க உதவும் ஒன்று. வாழ்க்கையில் நம்பக்கூடிய ஒன்று. இவைதாம் அந்தப் பயன்கள்.

    சராசரி மலையாளியைப் பொறுத்தவரை அன்றாட வாழ்க்கையில் கருத்துப் பரிமாற்றத்துக்கான கருவி மலையாளம் மட்டுமே. வீட்டில், வழியில், கடையில், அலுவலகத்தில் எங்கும். அல்லது செய்திகள் வாசிக்க, தொலைக்காட்சி பார்க்க, புரோகிதனின் சொற்களைக் கேட்க எல்லாவற்றுக்கும். பத்திரிகை வாசிக்கும்போதும் தொலைக்காட்சி பார்க்கும்போதும் அவன் அரசியல் கட்சிகள், எழுத்தாளர்கள் போன்ற கருத்துத் தொடர்பாளர்களின் சொற்களையும் மறைமுகமாகக் கேட்கிறான். தொலைக்காட்சிகளில் வரும் கலை நிகழ்ச்சிகளும் சினிமாவும் அவனை மலையாளம் வழியாகவே உல்லாசப்படுத்துகின்றன.

    பத்திரிகைகள், தொலைக்காட்சி, இலக்கியம், அரசியல், மதச் சொற்பொழிவுகள், சினிமா இவற்றைவிட்டால் வேறு என்ன? அவன் இவற்றுக்கு ஒரு சந்தை மட்டுமே.

    அவன் மூலம் இவர்களெல்லாம் வாழ்கிறார்கள். அவர்கள் அவனிடம் மலையாளத்தில் அரசியலை விற்கிறார்கள்; மதத்தை விற்கிறார்கள்; இலக்கியத்தை விற்கிறார்கள்; பத்திரிகையை விற்கிறார்கள்; தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை விற்கிறார்கள். அவன் கொடுக்கும் சந்தாக்கள், காணிக்கைகள், நன்கொடைகள், விலைகள் ஆகியவற்றால் அவர்கள் கேரளத்தில் வலிமையானவர்களாகவும் செல்வந்தர்களாகவும் செல்வாக்குள்ளவர்களாகவும் மாறுகிறார்கள். வேறு வார்த்தைகளில் சொல்வதானால் அவர்கள் அதிகார வர்க்கமாகிறார்கள். சராசரி மலையாளி அதிகாரம் செய்யப்படுபவனாகிறான்.

    அரசியல் கட்சிகளும் மதங்களும் ஊடகங்களும் அறிவுஜீவிகளும் அடங்கிய இந்த ஆளும் வர்க்கம் சுதந்திரத்துக்குப் பின் வந்த அரை நூற்றாண்டு கால ஆட்சியில் சராசரி மலையாளியை இந்தியா முழுவதும் அல்லது உலகம் முழுவதும் அப்பத்துக்காக அலையும் ஒரு அகதியாக்கிவிட்டிருக்கிறது. காங்கிரஸ், கம்யூனிஸ்ட், பிற கட்சிகளின் பங்களிப்பு இதுதான். மதத் தலைவர்கள், சாதியமைப்புகள், அறிவுஜீவிகள், பத்திரிகைகள், தொலைக்காட்சி அலைவரிசைகள் எல்லாவற்றின் பங்களிப்பும் இதுதான். அவர்கள் உண்டு கொழுத்தார்கள்.

    :::

    மலையாளிக்குக் கேரளத்தில் தன்னுடைய பிள்ளைகளின் எதிர்காலம் இருண்டது, மலையாளத்தால் தன்னுடைய பிள்ளைகளுக்குப் பயனில்லை என்பது புரிந்துவிட்டது. அவர்களுக்கு ஒரு வேலையோ வருமான மார்க்கமோ கிடைக்க வேண்டுமானால் அவர்கள் கேரளத்தை விட்டு வெளியேற வேண்டுமென்பதும் புரிந்துவிட்டது. அதற்கு மலையாளம் பிரயோஜனமில்லை என்பதும் புரிந்துவிட்டது. மலையாளம் மூலம் பயனடைந்தவர்கள் வரிசையில் தனக்கும் தன்னுடைய பிள்ளை களுக்கும் இடமில்லை என்பதும் புரிந்துவிட்டது. அப்படியாகத்தான் மலையாளம் செகண்ட் லாங்வேஜாகவும் ஆங்கிலம் முதல் மொழியாகவும் மாறியது.

    பெரும்பான்மை மக்களுக்குச் சோறுபோடும் மொழியாக இல்லாமற்போயிருக்கிறது என்பதுதான் இன்று மலையாள மொழியின் அவலம். அது சோறுபோடுவது அரசியல் கட்சிகளுக்கும் பத்திரிகை, தொலைக்காட்சிகளுக்கும் மதத் தலைவர்களுக்கும் சினிமாக்காரர்களுக்கும் அறிவுஜீவிகளுக்கும் மட்டுமே. (இதில் அப்பாவி மலையாள ஆசிரியர்களும் உண்டு). மலையாளம் அவர்களுடைய மொத்தக் குத்தகையாகிவிட்டது. அதனால்தான் நான் பல சந்தர்ப்பங்களிலும் குறிப்பிட்டுக்கொண்டிருக்கிறேன்: ‘மலையாளம் உண்மையைப் பேசத் தெரியாத ஒரு மொழியாக மாறியிருக்கிறது. அதைக் குத்தகையாகக் கொண்டிருப்பவர்கள் எவரும் பொதுவாக உண்மை பேசுபவர்களுமல்ல.’

    தமிழின் நிலைமை பற்றி எனக்குத் தெரியாது. அண்டை வீட்டு நிலைமையைத் தமிழ் ஓர் எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ள வேண்டுமா என்றும் எனக்குத் தெரியாது.

    தமிழ்ப்பதிவுகளில் அமெரிக்க அதிபர் தேர்தல் குறித்த அலசல்கள்

    The women of ‘Mad Men’ can teach us about Sarah Palin – The Boston Globe: “Though set in the 1960s, the series offers insights into today’s gender and workplace struggles”

    சிறகுகள் நீண்டன: அமெரிக்காவின் புதிய கதாநாயகி – மிஷல் ஒபாமா

    நிரூபன்

    வலைப்பூவில் படைப்புக்கள்: “” வெள்ளை மாளிகையில் கறுப்பு நிலா”

    வலைப்பூவில் படைப்புக்கள்: அமெரிக்காவின் அடுத்த அதிபர் ஒபாமா! : அமோக வெற்றி பெற்று சாதனை : புஷ் கட்சிக்கு பெருத்த அடி

    வலைப்பூவில் படைப்புக்கள்: அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் புதுமையும் நுணுக்கமும்

    சத்தியக் கடதாசி » Blog Archive » ஓபாமா x ஓசாமா: தேசம், மதம், மானுடம்: மானுட வரலாற்று நிலையும், தமிழில் சமூக அறிதலும் குறித்த குறிப்புகள் – ராஜன் குறை :: பகுதி 1: அமெரிக்கா, நவம்பர் 2008.

    அரசியல் ஆழிப்பேரலை: மணி மு. மணிவண்ணன்

    • பொருளாதார வீழ்ச்சி.
    • பெட்ரோல் விலை எகிறல்.
    • ஜெனரல் மோட்டார்ஸ் தடுமாற்றம்.
    • அமெரிக்காவின் எதிரிகளின் ஏற்றம்.
    • மத்திய கிழக்கில் அமெரிக்கப் படையினரின் வலுவின்மை.
    • வருங்காலத்தைப் பற்றிய நம்பிக்கையின்மை.
    • அமெரிக்க அதிபரின் மீது ஏமாற்றம்.

    இத்தனையும் இருந்தும் தேர்தல் நாள்வரை ஆளுங்கட்சியின் வேட்பாளர் தாக்குப் பிடித்துக் கொண்டிருந்தார். எதிர்க்கட்சியின் வேட்பாளர் மக்களின் முழுநம்பிக்கையைப் பெறவில்லை.

    இது மெக்கேன் ஒபாமா போட்டியைப் பற்றிய செய்தியல்ல.

    28 ஆண்டுகளுக்கு முன்னர், 1980இல் அதிபர் கார்ட்டர் – ஆளுநர் ரேகன் போட்டியின் கடைசிவாரச் செய்தி.
    “நான்கு ஆண்டுகளுக்கு முன்னால் இருந்ததை விட இப்போது நல்ல நிலையில் இருக்கிறீர்களா? நல்ல நிலையில் இருக்கிறீர்கள் என்றால் ஆளுங்கட்சிக்கு வாக்களியுங்கள். இல்லை என்றால் எனக்கு வாய்ப்பளியுங்கள்.” இது குடியரசுக் கட்சி வேட்பாளர் ரோனால்டு ரேகனின் அறைகூவல்.

    எதிர்க்கட்சி வேட்பாளர் உலக அரசியல் அனுபவமில்லாதவர். அவரைத் தேர்ந்தெடுத்தால், அணுவாயுதங்கள் வெடிக்கும் மூன்றாம் உலகப் போருக்கு ஆயத்தமாகுங்கள். இது ஆளுங்கட்சியான மக்களாட்சிக் கட்சியினரின் மிரட்டல்.

    தேர்தல் நாளான நவம்பர் முதல் செவ்வாய்க்கு மூன்று நாள் முன்னர் வரை மக்கள் வேண்டா வெறுப்புடன் அதிபர் கார்ட்டரைத்தான் ஆதரித்தார்கள். ஈரானில் சிக்கியிருந்த அமெரிக்கப் பிணைக்கைதிகளை மீட்கும் முயற்சியில் கார்ட்டரின் தோல்வி, 23% அடமான வட்டி வீதம், வேலையில்லாத் திண்டாட்டம், பெட்ரோல் விலையேற்றம், பெட்ரோல் சிக்கனப் படுத்தும் சின்ன கார் உற்பத்தியில் அமெரிக்க நிறுவனங்களின் தடுமாற்றம் இவை எல்லாவற்றையும் விட மூன்றாம் உலகப் போரை முடுக்கி விடுவதைப் போல சோவியத் யூனியனை மிரட்டிக் கொண்டிருந்த ரோனால்டு ரேகனைத் தேர்ந்தெடுக்க பயமாகத்தான் இருந்தது. ஆனாலும், அவர் போர் வெறியை விட அமெரிக்காவின் ஏற்றத்தைப் பற்றிய அவரது நம்பிக்கையும், உறுதியும் மக்களை ஈர்த்தது.

    தேர்தலுக்கு முந்திய மூன்று நாட்களில் ஓர் அரசியல் பேரலை எழும்பியது. அந்த அலையின் தாக்கத்தில்தான் அரசாங்கம் என்பது மக்களின் முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டை என்ற கொள்கை அமெரிக்க அரசியலின் தாரக மந்திரமாயிற்று. தனி மனிதர்கள், அவர்களது நிறுவனங்கள், அவர்கள் பொருளாதாரச் சந்தை, இவை அரசாங்கத்தின் சங்கிலிகளிலிருந்து விடுவிக்கப் பட்டால் மாபெரும் பொருளாதார வளர்ச்சியைச் சாதிக்க முடியும் என்ற ஏயின் ரேண்ட் கொள்கைகளில் ஆழமான நம்பிக்கை கொண்டவர்கள் ஆட்சிக்கு வந்தார்கள். அப்படி வந்தவர்களில் முன்னாள் கூட்டுக் கருவூலக் குழுமத் தலைவர் ஆலன் கிரீன்ஸ்பேனும் ஒருவர்.

    1929இல் பொருளாதாரப் பெருவீழ்ச்சிக்குப் பின்னர் அரசாங்கம் கொண்டு வந்த எல்லாக் கட்டுக்கோப்புகளையும் உடைத்தெறியும் முயற்சியில் இவர்கள் ஈடு பட்டனர். அரசு விதிக்கும் வரி மக்களின் பொருளாதார வளர்ச்சிக்குத் துணை போகும் முதலீட்டைப் பறித்து சோம்பேறிகள் சுகமாக வாழ வழிவகுக்கும் போதைப் பொருள் என்பது இவர்கள் வாதம். ஏழ்மைக்குக் காரணம் சோம்பல் என்பது இவர்கள் கூற்று. எதிரி நாட்டுகளைக் கட்டுப் படுத்தவும் அமெரிக்க நிறுவனங்களுக்கு உதவவும் மட்டுமே அரசாங்கம் தேவை என்ற பொருளாதார அடிப்படை வாதம் இவர்கள் அடிநாதம்.

    1932-ல் அதிபர் பிராங்க்ளின் டெலினோ ரூசவெல்ட் உருவாக்கிய முற்போக்குக் கூட்டணியை உடைத்தெறிய இவர்கள் அதிபர் நிக்சன் தந்திரங்களைப் பயன்படுத்திப் பிற்போக்குச் சக்திகளைத் திரட்டி மாபெரும் கூட்டணி ஒன்றை அமைத்தார்கள்.

    • மதவாதப் பிற்போக்கு சக்திகள்,
    • இனவாதப் பிற்போக்கு சக்திகள்,
    • பொருளாதாரப் பிற்போக்கு சக்திகள்

    இவை அனைத்தும் ஒரே கூடாரத்தில் ரேகன் தலைமையில் கூடின. ரூசவெல்ட் தலைமையில் உருவான முற்போக்கு அரசு அமைப்புகள் மக்களின் வரிப்பணத்தை அட்டை போல் உறிஞ்சிக் கொண்டு ஊழலில் ஊறியிருந்தது இவர்களுக்குச் சாதகமாக இருந்தது.

    உழைப்பவர்களுக்கு வரி, சோம்பேறிகளுக்கு அரசு சலுகையா? என்ற இவர்கள் அறைகூவல் வரிகளை நம்பியிருந்த அரசாங்கத்தின் அடித்தளத்தையே ஆட்டம் காண வைத்தது. “வரி விதி, செலவு செய்” என்பதுதான் மக்களாட்சிக் கட்சியின் கொள்கை என்று இவர்கள் கட்டிய பட்டம் இன்று வரை மக்களாட்சிக் கட்சியை மிரள வைத்துக் கொண்டிருக்கிறது. 1992-ல் அதிபரான பில் கிளின்டனும் கூட இந்தப் பேரலையின் தாக்கத்தை எதிர் கொள்ள முடியாமல் இவர்களோடு ஒட்டி உறவாடிக் கொண்டே முற்போக்கு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருந்தது.

    ரேகனின் பேரலையை வானளாவ உயர்த்தும் முயற்சியில் எழுந்தவர்தாம் இன்றைய அதிபர் ஜோர்ஜ் டப்யா புஷ். ரேகனைப் போன்ற பேரலையில் ஆட்சிக்கு வராமல், தட்டுத் தடுமாறி ஆட்சிக்கு வந்தாலும் தன்னை ரேகனின் மறு அவதாரமாகக் கருதிக் கொண்டவர் டப்யா புஷ். ரேகனைப் போலவே அரசு அமைப்புகளைச் சற்றும் நம்பாதவர் இவர். வாஷிங்டன் மக்கள் வரிப்பணத்தில் வாழும் அட்டைகள் நிரம்பிய குட்டை என்பது இவர் கொள்கை.

    ரேகன் கொள்கைகளின் அடித்தளமே ஆடத் தொடங்கியது இவரது ஆட்சியில்தான்.

    “கடன் வாங்கு, செலவு செய்” என்ற இவரது பொறுப்பற்ற கொள்கையின் விளைவுகளப் பார்க்கும்போது “வரி விதி, செலவு செய்” என்பது மிகவும் பொறுப்பான செயல் என்றே தோன்றுகிறது. மக்கள் வங்கிக்கணக்குகளைப் பாதுகாக்கத் தனியார் நிதி நிறுவனங்களின் மீது ரூசவெல்ட் ஆட்சி விதித்திருந்த கட்டுப் பாடுகளை வெகுவாகத் தளர்த்தியதில் முன்னணியில் இருந்தவர்கள் டப்யா புஷ், குடியரசுக் கட்சி வேட்பாளர் ஜான் மெக்கேன், மற்றும் முன்னாள் கூட்டுக் கருவூலக் குழுமத் தலைவர் ஆலன் கிரீன்ஸ்பேன்.

    என்னென்ன காரணங்களால் 1929 பங்குச் சந்தை வீழ்ச்சி பொருளாதாரப் பெருவீழ்ச்சிக்கு வழி வகுத்ததோ அதே காரணங்கள் மீண்டும் மேலெழுவதைப் பற்றிக் கவலைப் படாமல் கிளிப்பிள்ளை போல் அரசுக் கட்டுப்பாடுகள் தளர்ச்சி, செல்வந்தர்கள் வரி குறைப்பு என்ற மந்திரங்களை ஓதிக் கொண்டிருந்தவர்கள் இவர்கள். இதில் உண்மையிலேயே பொருளாதார நிபுணரான ஆலன் கிரீன்ஸ்பான் அண்மையில் தனது கொள்கைகளால் அமெரிக்க, மற்றும் உலகப் பொருளாதார அமைப்புகள் அனைத்துமே நொறுங்கும் நிலைக்குத் தள்ளப் பட்டிருப்பதை உணர்ந்து, தன் கொள்கைகள் இந்த வீழ்ச்சிக்கு வழி வகுக்கும் என்பதை உணராமல் போய் விட்டதைப் பற்றி வருத்தம் தெரிவித்தார்.

    ஆனால், டப்யா புஷ்ஷோ, ஜான் மெக்கேனோ இதைப் பற்றிப் புரிந்து கொண்டிருப்பதாகவோ, வருந்துவதாகவோ தெரியவில்லை. ஒபாமாவைப் பற்றிய மெக்கேனின் குற்றச்சாட்டு என்ன – “ஒபாமாவின் கொள்கை ‘வரி விதி, செலவு செய்’ – ஒபாமாவைத் தேர்ந்தெடுத்தால் உங்கள் வரி கூடும்” என்பதே. புஷ் – மெக்கேனின் ‘கடன் வாங்கு, செலவு செய்’ கொள்கையால் மக்களின் 401(k) ஓய்வுநிதிக் கணக்குகள் பேரிழப்புக்கு ஆளாகிக் கொண்டிருப்பதைப் பற்றி இவர்கள் வாயைத் திறக்க மாட்டார்கள்.

    செப்டம்பர் 11 தாக்குதல் இவர்கள் கண்காணிப்பில்தான் நடந்தது. நியூ ஆர்லியன்ஸ் நகர் இவர்கள் ஆட்சியின் கீழ்தான் மூழ்கியது. ஓசாமா பின் லாடனின் முடியைத் தொடக்கூட இவர்கள் வக்கற்றவர்கள். ஈராக், ஆப்கானிஸ்தான் போர்களிலும் இவர்கள் தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் ஆட்சியின் கீழ்தான் பங்குச் சந்தையின் பெரு வீழ்ச்சியும், பொருளாதாரப் பெருவீழ்ச்சியும் தொடங்கியுள்ளன. இவை அனைத்துக்கும் அடிப்படைக் காரணம் அரசாங்கக் கட்டுப்பாட்டைத் தளர்த்துவதற்குப் பதிலாக அரசாங்கத்தையே தளர்த்தும் மனப்பான்மை.

    இதை மாற்ற வேண்டும் என்பதில் ஐயமில்லை. ஆனால் எத்தைகைய மாற்றம்? மெக்கேனுக்கும், டப்யாவுக்கும் அரசாங்கத்தைப் பற்றிய கொள்கைகளில் வேறுபாடு இல்லை. கடன் வாங்கிச் செலவு செய்யும் கொள்கையிலும் வேறுபாடு இல்லை. புஷ்ஷுக்குப் பதிலாக மெக்கேன் வந்தால் மட்டும் பெரிதாக என்ன மாற்றம் இருக்க முடியும்?

    ஆனால், மக்களாட்சிக் கட்சியின் கொண்டு வரும் மாற்றம் என்ன?

    அதற்கு எடுத்துக்காட்டு ஒன்றைப் பார்ப்போம்.

    1989-ல் டப்யா புஷ்ஷின் தந்தை ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ் ஆட்சியின் கீழ் சான் ஃபிரான்சிஸ்கோ நகரம் நிலநடுக்கத்தால் விளைந்த சேதங்களால் திணறியது. முக்கியமான பல மேம்பாலங்கள் சுக்கு நூறாகின. அவற்றை மீண்டும் கட்டி முடிக்கப் பல ஆண்டுகளாகின. நகரத்தின் வளர்ச்சி மட்டுப் பட்டது. பின்னர் 1992-ல் லாஸ் ஏஞ்சலஸ் நகரம் இனக் கலவரத்தால் பற்றி எரிந்தது. நாட்டின் அதிபர் புஷ்ஷும் சரி, கலிஃபோர்னியா மாநில ஆளுநர் வில்சனும் சரி நகரத்தைக் காப்பாற்ற முன் வரவில்லை. லாஸ் ஏஞ்சலஸ் நாதியற்றுத் தவித்தது.

    1994-ல் லாஸ் ஏஞ்சலஸ் நகருக்குள்ளே நார்த்ரிட்ஜில் மையம் கொண்டிருந்த நிலநடுக்கத்தால் மிகுந்த சேதம் அடைந்தது. நிலநடுக்கத்தின் சேதம் தெரிந்த சில மணி நேரத்துக்குள் அதிபர் பில் கிளின்டன் லாஸ் ஏஞ்சலஸ் நகரத்தின் மீட்சித் திட்டத்துக்கு வழி வகுத்தார். அவரது அமைச்சரவை உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள், மாநில அரசு அதிகாரிகள் இவர்கள் அனைவரும் நிலநடுக்கங்கள் தொடர்ந்து கொண்டிருக்கும்போதும் லாஸ் ஏஞ்சலஸ் நகருக்கு விரைந்து மீட்சிப் பணிகளைத் தொடங்கினார்கள். சில மாதங்களுக்குள் நகரத்தின் உடைந்த மேம்பாலங்கள் மீண்டும் கட்டப் பட்டன. பெருவீதிகள் சீரமைக்கப் பட்டன. நில நடுக்கத்தின் அடையாளமே தெரியாத அளவுக்கு நகரமும் புத்துணர்ச்சி பெற்று வளரத் தொடங்கியது. நல்ல அரசாட்சி என்பதற்கு இலக்கணம் வகுத்தார் பில் கிளின்டன். அவரது ஆட்சியின் கீழ் அமெரிக்கப் பொருளாதாரம் பெரு வளர்ச்சி நிலையை எட்டியது. ஏனென்றால், அரசாங்கத்தின் தேவையை முற்றும் உணர்ந்தவர் அவர்.

    2008 தேர்தலின் முக்கியக் கொள்கைப் போராட்டம் இதுதான். அரசாங்கத்தின் தன்மை என்ன? அதன் தேவை என்ன?

    குடியரசுக் கட்சிக்காரர்கள், அரசாங்கத்தின் அதிகாரத்தைப் பயன்படுத்தித் தங்கள் அரசியல் எதிரிகளைப் பழி தீர்த்துக் கொள்வார்கள். தங்கள் மத நம்பிக்கைகளை மேம்படுத்துவார்கள். ஊழல் செய்யும் பெரு நிறுவனங்களைச் செல்லமாகத் தட்டி அனுப்பி விடுவார்கள். ஆனால், வெளிநாட்டுக் கொள்கைகளிலும், பொருளாதாரக் கொள்கைகளிலும் கெட்டிக்காரர்கள் என்று எடுத்த பெயரைக் கெடுத்துக் கொண்டுவிட்டார்கள்.

    மக்களாட்சிக் கட்சிக்காரர்கள், மக்களின் தனி வாழ்க்கையில் அரசாங்கம் குறுக்கிடுவதை விரும்ப மாட்டார்கள். ஆனால் வசதியுள்ளவர்கள் மீது வரி விதித்து வசதியற்றவர்களுக்கு வாழ்வு கொடுப்பது அரசாங்கத்தின் அடிப்படைக் கடமை என்று நம்புபவர்கள்.

    பொருளாதார வீழ்ச்சி சமயத்தில் இவர்கள் இருவரில் எவர் கொள்கை மக்களுக்கு ஆறுதலாக இருக்கும்?

    1980-ல் கார்ட்டர் காட்டிய பூச்சாண்டிகளையும் மீறி மக்கள் ரேகனை வாக்குப் பேரலை மூலம் தேர்ந்தெடுத்தார்கள். 2008-ல் ரேகன் பேரலை வடியும்போது மெக்கேன் காட்டும் பூச்சாண்டிகளையும் மீறி ஒபாமா பேரலை எழுந்து கொண்டிருப்பது புலப்படுகிறது.

    அமெரிக்க வரலாற்றிலேயே முக்கியமான தேர்தல் இது என்று பலர் கருதுகிறார்கள். ஆனால், அமெரிக்க வரலாற்றிலேயே மிக முக்கியமான தேர்தல் எட்டாண்டுகளுக்கு முன்னர் நடந்தது. புதிய ஆயிரத்தாண்டு தொடங்கும்போது தேர்ந்தெடுக்கப் பட்ட ஜார்ஜ் டப்யா புஷ்ஷின் திறமையின்மை அமெரிக்க வல்லரசின் சறுக்கலுக்கு வித்திட்டு விட்டது. கடந்த எட்டாண்டுகளில் அவர் செய்தவற்றின் பின் விளைவுகளில் இருந்து மீளப் பெரு முயற்சி தேவைப்படும்.

    ஒபாமா அதிபராகத் தேர்தெடுக்கப் பட்டால் குறைந்தது அமெரிக்கச் சறுக்கல் நிதானப் படலாம். புஷ்ஷின் கொடுங்கோலாட்சியின் கடுமையான விளைவுகளால் வாடும் அமெரிக்கா மட்டுமல்ல உலகமே ஒபாமாவின் வெற்றியை வரவேற்கும்.

    மணி மு. மணிவண்ணன், சென்னை, இந்தியா.

    அமெரிக்காவுடன் ஒப்பிட்டால் தமிழக ஜனநாயகம் எவ்வளவோ தேவலாம் – மூஸ் ஹன்ட்டர்

    5. தமிழகச் சூழலோடு அமெரிக்க அதிபர் தேர்தலை ஒப்பிட முடியுமா? வாக்கு வங்கி அரசியல்; இனம், மொழி, பால் பேதங்கள்; ஒரு தலைவரை முக்கியஸ்தராக முன்னிறுத்துவது; விகிதாச்சார பிரதிநித்துவம்; வோட்டுச் சாவடி குழப்படி; வாக்கு எண்ணிக்கை சதவிகிதம்… எதில் ஒற்றுமை? எவ்வாறு வேறுபடுகிறது?

    இந்த கேள்வி விலாவரியாக விவாதிக்கத் தகுந்தது. கோர்வையாக என்னால் பதிலளிக்க முடியுமா என்று தெரியவில்லை.

    முதலில், தமிழகச் சூழலோடு அமெரிக்க அதிபர் தேர்தலை ஒப்பிட முடியுமா என்று தெரியவில்லை. வேண்டுமானால் பொதுவாக இந்திய, அமெரிக்க அரசு, அதிகார முறைகள், தேர்தல்கள், அவற்றையொட்டிய பிரச்சார முறைகள் போன்றவற்றை வேண்டுமானால் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

    முதலில் இந்தியாவில் தேர்தல் என்பது ஒரு திருவிழா போன்றது. பொதுமக்களின் ஆர்வமும், பங்கேற்பும் அதிக அளவில் இருக்கும்.

    இங்கு அப்படி வெளிப்படையாகத் தெரிவதில்லை. வாக்களிப்பு சதவீதமே மிகக்குறைவு.

    இந்தியாவிலும் நடுத்தரவர்க்கத்தினர் அதிகமாக வாக்களிப்பதில்லை என்று கூறப்படுவதுண்டு. இங்கு ஏழைவர்க்கத்தினர் தான் அதிக அளவில் வாக்களிப்பதில்லை என்று சொல்லப்படுகிறது.

    வாக்கு வங்கி அரசியல் இங்கும் இருப்பதாகவே நினைக்கிறேன். நம் ஊரில் மதம், ஜாதி என்றால், இங்கு இனம், மதம் வாக்கு வங்கி அரசியலுக்கு அடிப்படையாக உள்ளன. ஒரே வித்தியாசம் பலகட்சி ஜனநாயகமான இந்தியாவில்/தமிழ் நாட்டில் இந்த குழுக்கள் ஏதாவது ஒரு சிறுகட்சியையாவது முன்னிறுத்தி செயல்படுவதால் இப்போதெல்லாம் பல கட்சிகளைச் சேர்த்து கூட்டணி அமைத்து இத்தகைய வாக்கு வங்கிகளைக் கவர முயற்சிக்கிறார்கள்.

    இந்நாட்டில் இரு கட்சி ஜனநாயகம் செயல்படுவதால் அந்த குழுக்களின் அரசியல் சாரத அமைப்புகளை கவர வேண்டியுள்ளது. அக்குழுக்கள் நடத்தும் கூட்டங்களுக்கு இரு தரப்பு வேட்பாளர்களும் அழைக்கப்படுகிறார்கள். ஆனாலும், நம் ஊரில் மதங்கள், ஜாதிகள் வெளிப்படையாக கட்சிகள் அமைத்து செயல்பட்டாலும், அவை தேர்தல் முடிவுகளை தீர்மானிப்பதாக நான் நினைக்கவில்லை.

    பெரிய கட்சிகள், அவற்றின் தலைவர்கள் மீதிருக்கும் அபிமானம் பெருமளவும், அப்போதைய பொதுப் பிரச்சினைகள் ஓரளவும் தான் தேர்தல் முடிவுகளைத் தீர்மானிக்கின்றன என்பது என் கருத்து. ஜாதி, மதக் குழுக்கள் ஒட்டு மொத்தமாக ஒரு பக்கம் சாய்ந்து முடிவுகளை மாற்றுவதில்லை.

    ஓரிரு ஜாதிகள் வேண்டுமானால் அரசியல் ரீதியில் வெற்றிகரமாக ஒன்று திரண்டிருக்கலாம். அதற்குக் காரணம் அந்த ஜாதிகளில் தோன்றிய நம்பிக்கைக்குரிய தலைவர்கள் மட்டுமே காரணம். இங்கும் வேட்பாளர்கள் ஒவ்வொரு மக்கள் குழுவுக்கும் தகுந்த மாதிரி பேச வேண்டியுள்ளது.

    இனம் என்று எடுத்துக்கொண்டால் யூதர்கள், ஹிஸ்பானிக்குகள், கறுப்பர்கள் போன்ற இனக்குழுக்கள் ஏதாவது ஒரு கட்சியை அல்லது வேட்பாளரை பெரும்பான்மையாக ஆதரிக்கும் நிலை உருவாகிறது.

    பொதுவாக கறுப்பர்கள் ஜனநாயகக் கட்சியை அதிகமாக ஆதரிக்கிறார்கள். கடந்த தேர்தல்களில் ஹிஸ்பானிக்குகள் பெரும்பான்மை ஜார்ஜ் புஷ்ஷை ஆதரித்தனர். இந்த தேர்தலில் இன்னும் உறுதியாக தெரியவில்லை என்றாலும், ஒபாமா பக்கம் சாய்வதாகத் தெரிகிறது. உதாரணமாக கொலராடோவில் ஹிஸ்பானிக்குகளின் ஆதரவு தேர்தலை முடிவு செய்யும் என்று கருதப்படுகிறது.

    அடுத்து பணம். நம் ஊரில் தேர்தலின்போது கருப்புப்பணம் புகுந்து விளையாடும். சொல்லப்போனால் கருப்புப்பணம் வெளியே வர, செல்வம் மறுவிநியோகம் செய்யப்பட தேர்தல் ஒரு முக்கிய காரணியாக செயல்படுகிறது. தேர்தல் பணம் பலத்தரப்பட்ட மக்களை வெவ்வேறு வகையில் சென்றடைகிறது.

    இந்த நாட்டில் தேர்தலில் சொந்த பணத்தை செலவிடுவது மிகமிகக் குறைவு. தனிநபர், தனியார் நிறுவனங்களின் பங்களிப்புகள், அரசு நிதி ஆகியவையே தேர்தல் பிரச்சாரத்திற்கு உதவியாக இருக்கின்றன. ஆனால் இந்த நாட்டிலிருக்கும் தேர்தல் பிரச்சார முறைகள் காரணமாக செலவிடப்படும் பணம் பெரும்பாலும் தொலைகாட்சி, வானொலி போன்ற பெரிய விளம்பர நிறுவனங்களுக்கே போகிறது.

    வாக்களிக்கும் முறைகளில் இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் பெரிய அளவில் வித்தியாசம் இருப்பதாக நினைக்கிறேன். இந்தியாவில் இருப்பது போன்று சீரான வாக்களிக்கும் முறை இங்கு இல்லை.

    2000 ஆம் ஆண்டு தேர்தலின்போது தான் இங்குள்ள வாக்களிக்கும் முறையில் உள்ள குழப்பங்கள் தெரிய ஆரம்பித்தன. தேர்தலை நடத்துவது, அது நாட்டின் அதிபர் தேர்தலாக இருந்தாலும், பொறுப்பு மாநில அரசைச் சார்ந்தது. ஆகையால் மாநிலத்துக்கும் மாநிலம் வாக்களிக்கும் முறை வேறுபடுகிறது.

    இந்தியாவை ஒப்பிடும்போது இங்கு பெரும்பாலான மாநிலங்கள் இதில் பின்தங்கியிருப்பதாகவே நினைக்கிறேன். தேர்தலை நடத்தத் தேவையான அளவு பணம் ஒதுக்குவதில் பல மாநிலங்கள் அக்கறைக் காட்டுவதில்லை என்று தெரிகிறது.

    வாக்களிப்பது, வாக்கு எண்ணிக்கை போன்றவற்றில் மாநில அரசுகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகளின் குறுக்கீடுகள் இருப்பதாகத் தெரிகிறது. 2000 ஆண்டு தேர்தலின்போது ஃப்ளோரிடாவில் மாநிலத் தலைமைச் செயலாளர் கேதரின் ஹாரிஸ் (இவர் குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர்; புஷ்ஷின் தேர்தல் பிரச்சார அதிகாரியாகவும் இருந்தவர்) செய்த தில்லுமுல்லுகள் பிரசித்தமானவை.

    வாக்காளர்களை மிரட்டுதல், வாக்களிக்கவிடாமல் தடுத்தல் போன்ற பல தில்லுமுல்லுகள் வெளிச்சத்துக்கு வந்தன. இந்த தேர்தலிலும் அதுபோன்று பெருமளவு நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது (உ-ம்: http://www.npr.org/templates/story/story.php?storyId=95509946).

    இதில் ஆளும்கட்சியின் தலையீடு எந்த அளவுக்குப் செல்கிறது என்பதை முன்னாள் அரசுத் தலைமை வழக்கறிஞர் அல்பர்டோ கன்சாலஸ் அவர்களால் பணிநீக்கம் செய்யப்பட்ட ஒரு அரசு வழக்கறிஞரின் செவ்வியைக் கேட்டபோது வாயடைத்துப்போனேன்.

    அமெரிக்க ஜனநாயகத்தின் லட்சணம் இவ்வளவு தானா என்று.

    அமெரிக்க அதிபர் தேர்தல் சூழலும் வெற்றி பெறும் வித்தைகளும் – மூஸ் ஹன்டர்

    3. மெகயினின் பிரச்சாரத்தில் எந்த நிலைப்பாடு உங்களுக்கு உவப்பானதாக அமைந்திருக்கிறது?

    மெக்கெய்னுடைய ஒரேநிலைப்பாடு எப்பாடுபட்டாவது அதிபர் ஆவது. அவருக்கு இதுவே கடைசி வாய்ப்பு.

    மெக்கெய்னைப் பற்றி அதிகமாக அறியாத காலத்தில், அதாவது 2000 ஆம் ஆண்டுத் தேர்தலின்போது, அவர் மீது நல்ல அபிப்ராயம் இருந்தது. இப்படிப்பட்ட ஒரு அனுபவமிக்க மிதவாதியைப் புறக்கணித்து கத்துக்குட்டித் தீவிரவாதி புஷ்ஷை தேர்ந்தெடுத்திருக்கிறார்களே என்று அவர் மீது பரிதாபம் கூட இருந்தது.

    மெக்கெய்ன்-ஃபெய்ன்கோல்ட் தேர்தல் நிதி சட்டம், மெக்கெய்ன் – கென்னடி குடியேற்றச் சீர்த்திருத்த மசோதா போன்றவற்றில் அவர் பங்காற்றியபோது அவருடைய ‘மேவரிக்’ பிம்பம் மீது ஒரு கவர்ச்சி இருந்தது.

    தேர்தல் மீது ஒரு கண்வைத்து கடந்த சில வருடங்களாக புஷ்ஷின் ஒவ்வொரு சொல்லையும், செயலையும் ஆதரிக்க ஆரம்பித்ததிலிருந்து தற்போது ஒபாமாவின் மீது சேறு வாரி இறைக்கும் தேர்தல் உத்திவரை மெக்கெயினின் நடவடிக்கையைப் பார்த்தால் அவர் மீது இருந்த மரியாதை முற்றிலுமாக மறைந்துவிட்டது.

    அவருடைய நிலைப்பாடுகள் எதுவும் இப்போது நிலையானதாக தெரியவில்லை. அடிக்கடி மாறிக்கொண்டிருக்கிறது. இதற்கு நல்ல உதாரணம் குடியேற்ற சீர்த்திருத்தம்.

    இரண்டாண்டுகளுக்கு முன்னர் டெமாக்ரடிக் செனட்டர் எட்வர்ட் கென்னடியுடன் இணைந்து குடியேற்றச் சீர்த்திருத்தச் மசோதாவை அறிமுகப்படுத்தியவர் முதற்கட்ட வேட்பாளர் தேர்தலின்போது கன்சர்வேடிவ்களின் வாக்குகளை மனதில் வைத்து அதைப் பற்றி பேசவே மறுத்தார்.

    பிறகு லத்தினோக்களின் வாக்குகளை மனதில் வைத்து குடியேற்றச் சீர்த்திருத்தத்திற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றார். பிறகு மீண்டும் மாற்றிக்கொண்டார். எப்படியாவது இந்த தேர்தலில் வெல்ல வேண்டும் என்ற ஆர்வத்தில் பல விஷயங்களில் முன்னுக்குப் பிறகு முரணாக பேசிக்கொண்டிருக்கிறார்.

    அவருடைய நிலைப்பாடு மாறாமலிருப்பது ராணுவவிஷயங்களில் மட்டுமே. எனக்கு இவ்விஷயங்களில் ஆர்வமில்லை.

    4. இந்த இருவரும் இல்லாமல், இன்னொருவர் ஜனாதிபதியானால் சரியாக இருக்கும் என்று சொல்ல நினைத்தால் எவரை கைகாட்டுவீர்கள்? எதற்காக?

    முதல் கேள்வியில் சொன்னமாதிரி ரால்ப் நேடரைச் சுட்டிக்காட்டலாம். பெரிய கட்சிகளில் இருந்து தான் வரவேண்டுமென்றால் ஜனநாயகக் கட்சியில் இருந்து ஹில்லரியும், குடியரசுக் கட்சியில் இருந்து மைக் ஹக்கபியையும் காட்டுவேன்.

    முதற்கட்ட வேட்பாளர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பாக ஹில்லரியே வெற்றி பெற வேண்டுமென்று விரும்பினேன்.

    என்னுடைய எதிர்பார்ப்பு ஹில்லரி அதிபராகவும், அவருடைய துணை அதிபராக நியூ மெக்சிகோ ஆளுநர் பில் ரிச்சர்ட்சனும் போட்டியிட்டு வெற்றி பெறவேண்டும் என்று இருந்தது. ஹில்லரி வேட்பாளராக தேர்வாகாதது ஏமாற்றமாக கூட இருந்தது.

    காரணம் ஹில்லரி, ஒபாமா இருவரது அனுபவம், வயது வித்தியாசம்.

    பல பிரச்சினைகளில் இருவரது நிலைப்பாடுகளும் ஒரே மாதிரியிருந்தாலும், இந்த வாய்ப்பை விட்டால் ஹில்லரிக்கு அல்லது அவர் போன்ற முற்போக்கு பெண்ணுக்கு இன்னொரு வாய்ப்பு அடுத்த சில தேர்தல்களில் கிடைப்பது அரிது. அவரது தோல்வியின் எதிரொலி இப்போதே தெரிந்துவிட்டது.

    அவருக்கு மாற்றாக ஒரு பிற்போக்குப் பெண்மணி முன்னிருத்தப்படுகிறார். இது என்னைப் பொருத்தமட்டில் ஒரு பெண் அதிபராவதற்கு பின்னடைவைத் தான் ஏற்படுத்தும்.

    ஒபாமா இளம்வயதுக்காரர். இன்னும் சில ஆண்டுகள் அரசியல் அனுபவம் பெற்று ஹில்லரிக்குப் பிறகு 2016 இல் இப்போதிருப்பதை விட இன்னும் தீவிரமாக, அனுபவ முதிர்ச்சியோடு களமிறங்கினால் நிச்சயமாக வெற்றி பெறுவார். இத்தேர்தலில் வெற்றி பெற்றாலும் அது முழுக்க அவரது வெற்றி என்று சொல்ல முடியாது.

    ஜார்ஜ் புஷ்ஷின் எட்டாண்டு ஆட்சியின் மீதுள்ள அதிருப்தியும், தற்போதைய பொருளாதாரப் பிரச்சினைகளும் ஒபாமாவுக்கு பெருமளவு உதவியாக இருக்கப்போகிறது.

    5. தமிழகச் சூழலோடு அமெரிக்க அதிபர் தேர்தலை ஒப்பிட முடியுமா? வாக்கு வங்கி அரசியல்; இனம், மொழி, பால் பேதங்கள்; ஒரு தலைவரை முக்கியஸ்தராக முன்னிறுத்துவது; விகிதாச்சார பிரதிநித்துவம்; வோட்டுச் சாவடி குழப்படி; வாக்கு எண்ணிக்கை சதவிகிதம்… எதில் ஒற்றுமை? எவ்வாறு வேறுபடுகிறது?