நேற்றைக்கு டானால்ட் ட்ரம்ப் ஏன் வென்று விடுவார்.
இன்றைக்கு துணை ஜனாதிபதி வென்றால் என்ன நடக்கும்?
1. சட்டவிரோதமாக குடிபுகுந்தோருக்கு மன்னிப்பு; கள்ள்த்தோணியில் பின்வாசல் வழி நுழைந்தோருக்கு வேலைவாய்ப்பு; குறைந்த பட்ச ஊதியத்தில் உழைக்கும் வந்தேறிகளுக்கு குடியுரிமை + வாக்குரிமை சட்டங்கள். பென்சில்வெனியா, நெவாடா, விஸ்கான்சின், மிச்சிகன், வட கரோலினா, ஜியார்ஜியா, அரிசோனா – எல்லாவற்றிலும் டெமோகிராட் வாக்கு 2026ல் இரட்டிப்பாகும்.
2. பொர்த்தோ ரிக்கோ-வும் வாஷிங்டன் டி.சி. (கொலம்பியா மாவட்டமும்) மாகாணங்களாக அமெரிக்காவுக்குள் நுழையும், தற்போதைய ஐம்பது மாவட்டங்கள் 52 ஆக அதிகரிக்கும். டெமோகிரட்சுக்கு நாலு செனேட்டர்கள் ஜாஸ்தி கிடைப்பார்கள்.
3. இரான் நாட்டின் கைவிலங்கும் கால்தளையும் தளர்வுறும். இஸ்ரேல் நாடு கட்டுக்குள் கொணரப்படும். காசா பாலஸ்தீனமாக தனி நாடாக உருவாகும். உக்ரெயின் போர் இன்னும் அமர்க்களமாகத் தொடரும். கமலாவிற்கு அமைதிக்கான நோபல் தரப்படும்.
4. சீனாவின் ஷி ஜின்பிங் தன் பலத்தை பரிசோதிப்பார். வட கொரியாவை தகாத செயலுக்குத் தூண்டுவார். இந்த சோதனை பலபரீட்சையாக தாய்வான் நாட்டிலும் தெற்காசியாவிலும் ரத்தகளறி ஆகும். இந்தியாவையும் இந்த போரின் பாதிப்புகள் தொடும். அகண்ட வங்காளம் அல்லது சுதந்திர மேகாலயா அமையும்.
5. அணு சக்திக்கு ஜே! காற்றாலைகளுக்குப் பச்சைக் கொடி!! சூரிய ஆற்றல் அனைத்து வீடுகளுக்கும் ஆலைகளுக்கும் சென்றடையும் திட்டம். நிலக்கரிச் சுரங்கம் போன்ற புதைபடிம எரிபொருள்கள் முற்றிலும் மூடப்படும். சுத்தமான தூயசக்தி மட்டுமே அமெரிக்காவில் கிடைக்கும். புவி வெப்பமாதல் குறையும்.
6. LGBTQIA+ – தற்பாலினத்தவர், இருபாலீர்ப்பு, மாற்றுப் பாலினத்தவர், ஊடுபால், பால்புதுமையர், அல்பாலீர்ப்பு குறித்த பாடங்கள் மூன்றாம் வகுப்பிலேயே பள்ளிக்கூடத்தில் சொல்லித்தரப்படும். குழந்தைகளின் குழப்பங்களை பெற்றோர் அறியாமல் பார்த்துக் கொள்ளப்படும். மருவிய பால் என நினைப்போருக்கான அறுவை சிகிச்சை ரகசியமாக, இலவசமாக செய்யப்படும்.
7. லிஃப்ட், ஊபர், போல்ட், ஓலா, டோர்டாஷ் போன்ற அலுவல்சாரா பகுதிநேரத் தொழிலாளர்களுக்கு சங்கம் அமைக்கப்படும். டாக்ஸியை அழைப்பதற்கும் ஊபரைக் கூப்பிடுவதற்கும் எந்தப் பெரிய வித்தியாசமும் இல்லாமல் போகும். ஹோட்டல் அறைக்கும் ஏர்பிஎன்பி வீட்டிற்கும் எந்த வித பாகுபாடுகளும் இன்றி ஒரே மாதிரி அனுபவம் ஆகிவிடும்.
8. மருந்துகளின் விலை இன்னும் எகிறும். வீடற்றோருக்கும் நலிந்த சமூகத்திற்கும் சேமநலம் தாராளமாக்கப்படும். அனைவருக்கும் சிகிச்சை; எந்த நோய்க்கும் வைத்தியம் என்பது பணம்படைத்தோருக்கு மட்டுமல்லாமல், சாதாரணருக்கும் சாத்தியமாகும்.
9. ப்ராஜெக்ட் 2025 நிறைவேறாது. எங்கும், எதிலும் அரசாங்கத் தலையீடு; செவ்வாய் செல்லும் ஏவூர்தி, செயற்கை நுண்ணறிவு முதல் வேண்டப்பட்ட குணாதிசய மரபணுவால் அமைக்கப்பட்ட குழந்தைகள் வரை தொழில்நுட்பம் சுதந்திரமாக உலாவரும் சீனா முன்னேறிய நாடாகி விடும்.
10. இதெல்லாம் செய்ய வேண்டும் என ஆசைப்படுவார்; மசோதாக்களும் கொண்டு வருவார்; கொள்கை பரப்பும் செய்வார். ஆனால், காங்கிரசும், செனேட்டும், உச்சநீதிமன்றமும் எதையும் செய்ய விடாது. அரியணையில் பொம்மையாக வீற்றிருப்பார்.











































