Benny Dayal – A Performer

பென்னி தயால் பாடி நீங்கள் கேட்டிருப்பீர்கள். ரவியைப் போல் மெச்சியிருப்பீர்கள். அவர் பாடி நீங்கள் பார்த்ததுண்டா?

மெகா டிவி புண்ணியத்தில் ‘சங்கர்ஷ் 2010’ நிகழ்ச்சியில் பார்த்தேன். கொண்டாட்டமாக ஆடினார்; உற்சாகமாக ‘ஊலலா’ ரீங்காரித்தார்; இளமைத் துள்ளலுக்கு definition கேட்டால் உத்தரவாதமாக பென்னியை சொல்லலாம்.

Infectious enthusiasm என்பார்கள். ‘வேதம் புதிது’ அமலாவின் ஜாக்கெட்டுக்குள் நுழைந்த மீன் என்பேன். அமலாவின் நளினம்; மீனின் லாவகம் – இரண்டும் குழையும் குரலுடன்,மேடையில் நடனமாடியது.

கர்னாடக சங்கீதம் பதினைந்து வருடம்; தாம்பரம் கிறிஸ்டியன் கல்லூரி வாசம்; அபு தாபி வளர்ப்பு; இவையெல்லாம் போதாதென்று பரதநாட்டியமும் பயின்றுவிட்டார்.

ஹிந்தியிலும் கொஞ்சுகிறார். சின்னச் சின்ன ஆசையில் துவங்கி, ‘ஒமானப் பெண்’ண்ணிற்கு சிரமமில்லாமல் பாய்கிறார். சகாக்களை சுவாரசியமாக அறிமுகம் செய்கிறார்.

ஹரிஹரன், ஷங்கர் மகாதேவன் எல்லாம் ஸோ நைன்ட்டீஸ்… பென்னி இஸ் இன்!

Chicago Ramar Temple: Ram = Problems

ராமர்  கோவில் என்பதற்கு பிரச்சினை என்று அர்த்தம். கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்னும் பழமொழிக்கேற்ப, அமெரிக்காவில் ஒவ்வொரு நகரத்திலும் ஹிந்து மந்திர் இருக்கிறது. அங்கே நடக்கும் சண்டையில், பிரிந்து போய் இரண்டாவது கோவிலும் நிச்சயமாக இருக்கும்.

கத்ரு, வினதை கதை ஆகட்டும்; காந்தாரி x குந்தி ஆகட்டும். புராண காலத்தில் இருந்து போட்டிக்கு பிள்ளை பெறுவது இந்தியர் வழக்கம். வாஷிங்டன் டிசி நகரத்தில் ஒரே தெருவில் இரு ஆலயங்கள். சிகாகோவில் பத்து மைல் வட்டத்துக்குள் இரு ஆலயங்கள்.

அரோரா ஆலயம் திருப்பதி போல் என்றால் பக்கத்து ஊரான லெமாண்ட் ஆலயம் கொஞ்சம் வடக்கிந்திய பாணியில் ஹரே ராம் ஹரே கிருஷ்ணா கலந்த பத்ராசலம் இராமர்.

மூலஸ்தானத்தில் பளிங்கு கற்களும் இருக்கும்; கூடவே கருங்கற் சிலையும் இருக்கும்; பஞ்சலோக உற்சவரும் காணக்கிடைப்பார்.

இந்த நிலையில் திடீரென்று வடக்கு வழக்கத்திற்கு நாக் அவுட் கிடைத்திருக்கிறது.

போட்டி கோவிலிலேயே போட்டி. பலிபீடத்திற்கு யார் பலி என்றெல்லாம் தமிழ்ப் பேப்பர் தலைப்பு கொடுத்திருக்கும். ஆனால் அமெரிக்காவில் ஆங்கில நாளிதழ் மட்டுமே இதை கவனித்திருக்கிறது.

உள்ளூர்காரர்கள்தான் உள்விஷயங்களை சொல்ல வேண்டும்.

துவக்க காலத்தில் கோவிலை அமைத்தவர்களின் கருத்தை கவனத்தில் கொள்ள வேண்டுமா? தென்னிந்திய ஆகமவிதிப்படி மொழுமொழு சிலைகள் மூலஸ்தானத்தை ஆக்கிரமிக்கலாமா? தெலுங்கு வண்ணமான கருப்பு அல்லாத வெள்ளை வெளேர் சிலைகள் நீக்குவது தர்மமா என்றெல்லாம் கோர்ட்டில் வாதாடி இருப்பார்கள் என்று நம்புகிறேன்.

கோவில் பொக்கீடு கணக்கு: HTGC – Lemont – Chicago – Temple -IL – Financials – Annual Report 2009_new

விஜய தசமி வாழ்த்துகள் – ஆயுத பூஜை கொண்டாட்டம்

Some people have the mistaken notion that they create reality with their thinking and speaking.
David K. Reynolds
American psychologist and writer (b.1940)

கலைஞர் டிவி வெள்ளைக்காரன் காலத்தில் இருக்கிறான். விடுமுறை விழாக் கொண்டாட்டம் என்கிறான்.

கலைஞர் மாதிரியேதான் வெள்ளைக்காரியும் யோசிக்கிறாள்.

‘மனுசன் கண்டுபிடிச்சத மனுசனே தொழலாமா?’

கொலுவிற்கு வந்தால், நல்ல மதுவருந்தினோமா, சுவைத்து சாப்பிட்டோமா என்று சம்பிரதாயத்திற்குள் அடங்காமல், கேள்வி கேட்டாள்.

‘சோதனைக் குழாய் குழந்தை கண்டுபிடிப்பிற்கு நோபல் வழங்குவது போல் இந்த ஆயுத பூஜையே கொண்டாட்டம் இல்லியா? எவரோ ஒரே ஒருவருக்கு மட்டும், பல்லேடியம்னு பல்லை உடைக்கும் மொழியில் மில்லியன் கொடுப்பதை விட, கோடிக்கணக்கானோர் பாராட்டுகள் எத்தனை மில்லியன் தகும்?

Thanksgiving கும்பிடு சாப்பாடுடன் விடுமுறை வழக்கம். மனிதர்களின் அறிவியல் சாதனைகளை மகிழ்ந்து கும்பிடுவது சரஸ்வதி பூஜை.

ரம்சான் பசியின் வலியை பணம் படைத்தோருக்கு உணர்த்தும். உபகரணங்களின் உபயோகத்தை உணர்த்தும் விழா விஜயதசமி.

“இவ்வே பீலியணிந்து மாலை சூடிக்
கண்திரள் நோன் காழ்திருத்தி நெய்யணிந்து
கடியுடை வியனகரவ்வே யவ்வே
பகைவர்க் குத்திக் கோடு நுதி சிதைந்து
கொற்றுறைக் குற்றில மாதோ “

அதியமான் அரசை தொண்டைமான் கைப்பற்ற நினைக்கிறான். சண்டையைத் தடுக்க ஔவையார் விரும்புகிறார். தொண்டைமானின் ஆயுதக் கிடங்கை பார்த்து பிரமிப்புடன் சொல்கிறார்: “உன்னிடம் இருப்பதெல்லாம் புதிதாக பளபளப்புடன் மின்னுகிறது. அந்த அதியமானின் கொல்லறையில் எல்லாம் ரிப்பேர். சண்டைக்குப் போய் போய், எதிரிகளைக் கொன்று கொன்று, எல்லாம் முனை மழுங்கி இருக்கிறது.’

வாளும் அம்பும் கத்தியும் போருக்கு சென்று சக உயிர்களைக் குத்திக் கொல்லாமல் இருப்பதற்காக வணங்கினோம். இராக்கிலும் ஆஃப்கானிஸ்தானிலும் புனிதப் போர் தொடுப்பவர்களுக்கு ஆயுத பூஜையை விளங்கிக் கொள்வது சாத்தியமற்றதுதான்.

சரஸ்வதி பூஜைக்காக ப்ளாக்பெரியை ஸ்விட்ச் ஆஃப் செய்து வைத்து சோஷியல் நெட்வொர்க்கை மறந்து, குடும்பத்தை ஆன் செய்வது மனுசத்தனம். காதில் செல்பேசி, கண்ணில் கலைஞர் டிவி, கருத்தில் கணினி என்றாக மாறிப்போவது மெஷின் தனம். நாங்க எல்க்ட்ரானிக்சை கும்பிடுவோம். ஆனால் இயந்திரமயமாக மாட்டோம்.’

சான்ஸ் கிடைத்த சொற்பொழிவை முடித்துக் கொண்டேன்.

‘திருமலா திருப்பதி டிவி போடுடா… சுப்ரபாதம் காண்பிப்பா! பெருமாளக் கண்ணார பார்க்கலாம்’ டிவியை கும்பிடும் பாட்டியைப் பார்த்துவிட்டு கேள்வி ஏதும் கேட்காமல் நகர்ந்தார் நண்பர்.

அங்காடித் தெரு: இலக்கியம், குறியீடு, அரசியல் – Extrapolation

திரைப்படத்தை நாம் என்றுமே, திரைப்படமாக மட்டும் பார்ப்பதில்லை. எழுதவேண்டிய ஆக்கம் என்றால், மூர்மார்க்கெட்டில் இருந்து கோயம்பேடுக்கு ரோடு போடுவோம். உள்நோக்கம், குறியீடு, படைப்பு அரசியல் என்று விரிய வைக்கலாம்.

அப்படி சமகோட்டுப் பார்வையில் ஜெயமோகன் வசனம் எழுதிய ‘அங்காடி தெரு‘ சினிமாவிற்கான சித்திரம் இது.

உண்மையில் இதைத்தான் சொல்ல வந்தாரோ, இவரைத்தான் குறிப்பிடுகிறாரோ, இந்த சண்டையைத்தான் இவ்வாறு முடிச்சுப் போடுகிறாரோ என்று எண்ண வைக்கும் கதாபாத்திர ஒப்பீட்டு பத்து.

  1. சேர்மக் கனியாக வரும் அஞ்சலி: ஜெயமோகன்
  2. (நாயகன்) ஜோதிலிங்கம்: தமிழ் சினிமாவுலகம்
  3. ஜவுளிக் கடை முதலாளி அண்ணாச்சி: சுந்தர ராமசாமி
  4. ஊழியர்களின் கண்காணிப்பாளர் – கருங்காலி: ‘காலச்சுவடு’ கண்ணன்
  5. ஹீரோவின் தோழர் மாரிமுத்து: வசந்தகுமார்
  6. நகராட்சி கழிவறையை உபயோகித்து சம்பாதிக்கும் வழிப்போகன்: சாரு நிவேதிதா
  7. பாலியல் தொழிலாளியை மணந்து கொள்ளும் உயரம் குறைவானவர்: சுஜாதா
  8. பிளாட்பாரத்தில் கைக்குட்டை விற்கும் இசுலாமியப் பெரியவர்: ‘உயிர்மை’ மனுஷ்யபுத்திரன்
  9. மகளை ஆஸ்பத்திரியில் அம்போவென்று விட்டுச்செல்லும் தந்தை: ஜாலியாக லிங்க் போடும் இடத்தில், சீரியஸாக நிஜ வாழ்க்கைக்கு தொடுப்புக் கொடுக்கலாமா!
  10. நடிகை சினேகா: வேற யாருங்க… இதில் கூடவா குறி வைக்க முடியும்?

உதவிய பதிவுகள்:

அங்காடித் தெரு, பார்ப்பனீயம், சாதி, பெண்ணியம் – திருமலை ராஜன்

தொடர்புள்ள செய்தி:

:: By NILANJANA S. ROY (NYT) – In India, thousands of women are participating in movements against the abuse of women in public spaces.
முந்தைய இடுகை :: ஜாதி: தேவையா? வேண்டாமா?

முதலில் அங்காடித் தெரு சினிமாவில் நீங்கள் வைத்திருந்த பிராமணப் பெண்ணின் பாத்திரம் உங்கள் கதைப் படி, கதையின் வலுவிற்குத் தேவையான ஒரு பாத்திரம் என்பதையும் அந்தப் பெண்மணியின் மூலமாகவே நீங்கள் மாத விலக்கைத் தீட்டாகவும் அதே நேரத்தில் புனிதமாகவும் கருதும் இந்து மதத்தின் இரு வேறு எல்லைகளை விளக்குவதற்கும் அதன் மூலம் சேர்மக்கனி பெறும் மன தைரியத்தை விளக்குவதற்கும் அந்தப் பாத்திரத்தை நீங்கள் படைத்திருக்கிறீர்கள் என்பதை நான் அறிவேன். நிச்சயம் உங்களது பாத்திரப் படைப்பிற்கு உள்நோக்கம் கற்பிக்கவும் மாட்டேன். அதன் நோக்கம் பற்றி நன்கு அறிந்தவன். மேலும் அந்த வழக்கத்தைக் கடைப்பிடிக்கும் ஒரு பிராமணப் பெண்ணைக் காட்டினால் மட்டுமே அந்தக் காட்சிக்கு யதார்த்தமும், நிஜத்தன்மையும் கிட்டும் என்பதற்காக நீங்கள் அதை வைத்திருக்கிறீர்கள் என்பதையும் நான் நன்கு அறிவேன்.

நிச்சயமாக நீங்கள் பிராமணர்களை இழிவு செய்யும் நோக்கத்தில் அந்தப் பாத்திரத்தை வைக்கவில்லை என்பதை நன்கு அறிவேன். அதில் எவ்வித சந்தேகமும் கிடையாது. ஒரு காட்சிக்கு அதன் களனும், அந்தப் பாத்திரங்களின் நம்பகத்தன்மையும், களனின் யதார்த்தமும், ஏன் பாத்திரங்கள் கையாளும் மொழியும் கூட முக்கியமானவை என்பதை மலையாளப் படங்களையும், பிற முக்கியமான உலகப் படங்களையும் தொடர்ந்து பார்ப்பவன் என்ற முறையில் இந்தக் காட்சிக்கு நீங்கள் பயன் படுத்தியிருக்கும் பாத்திரத்தின் ஜாதியின் முக்கியத்துவம் குறித்தும் நான் வேறு எவரையும் விட மிக நன்றாகவே அறிவேன்.

நம்பூதிரிகளைக் காட்டாமல் ஒரு பரிணயம் எடுக்கவியலாது. மீனவர்களைக் காட்டாமல் ஒரு செம்மீன் சாத்தியமேயில்லை. கம்னியுஸ்டுகளைக் காட்டாமல் ஒரு அரபிக் கதாவை எடுத்திருக்க முடியாது. நாயர்களைச் சொல்லாமல் ஈழவர்களைச் சொல்லாமல் பெரும்பாலான மலையாளப் படங்களை எடுத்திருக்கவே முடியாது. முஸ்லீம்களைச் சொல்லாமல் ஒரு மிழிகள் சாட்சி எடுத்திருக்க முடியாது. கிறிஸ்துவர்களைக் காண்பிக்காமல் ஒரு அச்சன் உறங்காத வீட்டையோ, ஒரு சின்சையோ தொட்டிருக்கக் கூட முடியாது.

ஆகவே ஒரு படைப்பில் அது சினிமாவாக இருந்தாலும் சரி, நாவலாக இருந்தாலும் சரி அந்தக் கதையில் ஒரு குறிப்பிட்ட இனக்குழுவைச் சொல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டாலோ அதைச் சொல்லியே ஆக வேண்டும். அப்படிச் சொல்லாமல் மழுப்பினால் அது மணிரத்தினத்தின“இருவர்” சினிமா போல ஒரு வெளிறிப் போன ஒரு அபத்தமான படைப்பாகவே போய் முடியும். அந்தப் படைப்பின் நம்பகத்தன்மையே கேள்விக்குரியதாகி அந்தப் படைப்பே கேலிக்குரியதாகி விடும். ஆகவே ஒரு படத்திலோ ஒரு நாவலிலோ ஒரு ஜாதியோ, ஒரு கட்சியோ, ஒரு இனமோ, ஒரு மதமோ சொல்ல வேண்டிய தேவை அந்தக் கதைக்கு இருப்பின் அதைத் தயங்காமல் சொன்னால் மட்டுமே ஒரு நல்ல படைப்பு உருவாகும் என்பதில் எனக்கு எவ்வித சந்தேகமும் ஆட்சேபணையும் கிடையாது.

அதே அடிப்படையில் எனக்கும் அங்காடித் தெரு படத்தில் நீங்கள் படைத்திருக்கும் பாத்திரங்களில் எந்தவித உள்நோக்கமும் கிடையாது என்பதை நான் நிச்சயமாகத் தயங்காமல் சொல்வேன். அப்படி எவ்வித சந்தேகமும் இருந்திருப்பின் மிக நீண்ட இரு பெரும் பதிவுகளை அந்தப் படம் குறித்து

http://solvanam.com/?p=7588
http://solvanam.com/?p=7575

நான் சொல்வனத்தில் எழுதியே இருக்க மாட்டேன்.

இரண்டாவதாக நான் எந்த ஜாதியின் பிரதிநிதியாகவும் என்னை நிறுத்திக் கொண்டு இங்கே எழுதவில்லை. முதலில் அப்படி நிறுத்திக் கொள்ளும் தகுதி எனக்குக் கிடையாது. அப்படியே நான் நிறுத்திக் கொள்ள முயன்றாலும் அதே ஜாதியைச் சேர்ந்தவர்கள் என்னைக் கல்லால் அடித்து இறக்கி விட்டு விடுவார்கள். ஆகவே அந்த சந்தேகமும் உங்களுக்கு வேண்டியதில்லை. நான் இங்கு என் சார்பாக மட்டுமே என் அனுபவத்தின் அடிப்படையில் விளைந்த சில கருத்துக்களை மட்டுமே இங்கு பகிர்ந்து கொள்கிறேனே அன்றி நான் யாரையும் எந்த ஜாதியின் பிரதிநிதியாகவும் பேசவில்லை என்பதை தெளிவாகச் சொல்லிக் கொள்கிறேன்.

வேறு எந்த ஜாதிக்கு வேண்டுமானாலும் ஒரு ஒற்றுமையான பிரதிநிதி இருந்து விட முடியும் ஆனால் பிராமணர்களுக்கு மட்டும் அந்த ஒற்றுமை உணர்வு சாத்தியமே இல்லை என்பது என் தீர்மானமான எண்ணம். அங்கு ஒரே ஒருவர் மட்டும் மிச்சம் இருந்தால் கூட நிச்சயம் இரண்டு விதமான கருத்து அந்த ஒருவரிடமிருந்தே கிளம்பும் அவ்வளவு ஒற்றுமையுள்ள சமூகம் அது. ஆகவே நான் எனக்காக மட்டுமே இங்கு பேசுகிறேன் என்பதையும் தெளிவு படுத்தி விடுகிறேன்.

ஆனால் ஒருவர் ஒரு குழுவிற்காக பேசுவதில் எந்த தப்பும் இல்லை என்பது என் கருத்து. இஸ்லாமியத் தீவீரவாதத்தால் குண்டு வெடிப்புகளால் பாதிக்கப் படும் எந்தவொரு ஹிந்துவும் ஹிந்துக்கள் சார்பாகப் பேசினால் அதை நாம் தவறாக கருத முடியாது என்பதே என் எண்ணம்.

இன்று தமிழ் நாட்டில் ஏழை பள்ளி மாணவர்களில் கிறிஸ்துவர்களுக்கும், முஸ்லீம்களுக்கு மட்டுமே பண உதவி அரசாங்கத்தால் செய்யப் பட்டு வருகிறது. அதை விடக் கீழான ஏழ்மையில் இருக்கும் இந்து மாணவர்களுக்கு அந்தச் சலுகை மறுக்கப் படுகிறது. வருடத்திற்கு ஒரு கிறிஸ்துவ/முஸ்லீம் மாணவனுக்கு அரசாங்கமே கல்லூரிப் படிப்பிற்காக ஒரு லட்சம் ரூபாய்கள் வழங்குகிறது ஆனால் அதே வேளையில் கடும் ஏழ்மைச் சூழலில் வாழும் இந்து மாணவனுக்கு அது கிடையாது என்னும் பொழுது அந்த ஒரு லட்ச ரூபாய்க்காக அந்த ஏழை இந்து மாணவன் மதம் மாற வாய்ப்புகள் உண்டு.

ஆக அரசாங்கமே மதமாறத்தை ஊக்குவிக்கிறது என்ற அநியாயத்தைக் கருதி ஒரு இந்துவாக நான் குரல் கொடுத்தால் நிச்சயமாக அதை ஒரு குழுவின் பிரதிநிதியாக என்னைக் கருதிக் கொள்கிறேன் என்று நீங்கள் குறை சொல்ல மாட்டீர்கள் என்றே எண்ணுகிறேன். அப்படிச் சொன்னால் அது தவறு. ஆக ஒரு சில இடங்களில் பிரதிநித்த்துவக் குரல்கள் ஒலிப்பதில் தவறில்லை என்றே நான் கருதுகிறேன்

இந்த இரண்டு சுய விளக்கங்களுடன் என் கருத்துக்களை வைக்கிறேன்.

முதலில் தமிழ் சினிமக்களில் பிராமண ஜாதி பாத்திரங்கள் இழிவாகக் காண்பிக்கப் படுவது குறித்து சில கருத்துக்கள்.

தமிழ் சினிமா, இலக்கிய, கலைச் சூழலில் இன்று நீங்கள் எந்த ஜாதியையும், எந்த கட்சியையும் குறை கூறும் வகையில் சொல்லி விட முடியாது. ஆனால் அதற்கு ஒரே ஒரு விதிவிலக்கு பிராமணர்கள் மட்டுமே. பிராமணர்களை சினிமாக்களில் இழிவாகவும், கேலிக்குரியவர்களாகவும், ஆபாசமாகவும் காண்பிக்கப் படுவது எந்த வித எதிர்ப்பும் இல்லாமல் பல வருடங்களகாகத் தமிழ் நாட்டில் தொடர்ந்து வருகிறது. இதை ஆரம்பித்து வைத்தவர்களே பிராமண சினிமாக்காரர்கள் தான் என்பதையும் சொல்ல வேண்டும்.

சூர்யா போன்ற இயக்குனர்கள் பிராமணப் பெண்களைக் காட்டும் விதம் போல் வேறு எந்த விதப் பெண்களையும் பெயர் சொல்லிக் காண்பித்து விட முடியாது. சினிமாக்களில் மட்டும் அல்ல பத்திரிகைகள், இணைய தளங்கள், ப்ளாகுகள் ஆகிய இடங்களிலும் கூட இந்த ஆபாசம் தொடர்கிறது. அதற்கு எந்த விதமான நியாயத்தையும் சொல்லி விட முடியாது. ஒரே காரணம் அவர்கள் எண்ணிக்கையில் குறைவானவர்கள். எதிர்த்துப் பேச விருப்பம் இல்லாதவர்கள் அல்லது அதற்கான ஒற்றுமை இல்லாதவர்கள்.

ஏற்கனவே தமிழக அரசியலில் அவர்கள் கொடுமையானவர்களாகவும் ஆதிக்க ஜாதியினர்களாகவும் பெரும் வில்லன்களாகச் சித்தரிக்கப் பட்டவர்கள். ஆகவே அவர்களை எப்படி சித்தரித்தாலும் யாரும் எதிர்த்து கேள்வி கேட்க்க மாட்டார்கள், அப்படியே ஒரு சிலர் வந்தாலும் அவர்களை அடித்து விரட்டி விடலாம் என்ற எண்ணம் மட்டுமே இவ்வித சித்தரிப்புக்களுக்குக் காரணம். இதையே நான் எந்த ஜாதியைச் சேர்ந்தவனாக இருந்தாலும் சொல்லியிருந்திருப்பேன்.

ஒரு ஜாதியினரை ஒரு கதையின் நம்பகத்தன்மை கருதி காண்பிக்கக் கூடாதா என்றால் அதற்குப் எனது பதில் தாராளமாக காண்பிக்கலாம் காண்பிக்க வேண்டும் என்பதே. ஆனால் தமிழ் சினிமாக்களில் சமீப காலமாக அந்த வித யதார்த்த நோக்கம் கருதி பிராமணர்கள் காண்பிக்கப் படுவதில்லை. அவர்களது உடை, தோற்றம், மொழி ஆகியவற்றைக் கேலி செய்யும் நோக்கிலும் பெண்களை விரக் தாபத்தில் அலையும் பெண்களாகச் சித்தரிக்கும் நோக்கிலும் மட்டுமே அந்த ஜாதியினர் காண்பிக்கப் படுகிறார்கள் என்பதைத் தமிழ் படங்களைத் தொடர்ந்து பார்க்கும் எவரும் அறிவர்.

இதனால் உனக்கு என்ன? நீ ஏன் அவர்களது பிரதிநிதியாக வருகிறாய் ? என்று நீங்கள் கேட்க்கலாம்.

நான் யாருடைய பிரதிநிதியாகவும் இங்கு வரவில்லை. நான் என்னுடைய பிரதிநிதியாக மட்டுமே இங்கு பேசுகிறேன்.

ஒரு பிராமணப் பெண்ணை தொடர்ந்து தமிழ் சினிமாக்களில் விரக தாபம் மிக்க பெண்களாக சித்தரிப்பதன் மூலம் அந்த ஜாதிப் பெண்கள் தெருவில் வரும் பொழுது அவர்களைக் காணும் எந்தவொரு விடலைப் பையன்கள் மனதிலும், எந்தவொரு பொறுக்கியின் மனதிலும், எந்தவொரு லும்பன்களின் மனதிலும் அவர்களை கேலிப் பொருளாக எளிதில் வக்கிரமாகக் கைக்கொள்ளும் மனோநிலையே ஏற்படும். இதில் படிதவர்களுக்கும் தெருவில் சுற்றும் ரவுடிகளுக்கும் கூட வித்தியாசம் இல்லை.

அதனால்தான் அமெரிக்காவில் பி எச் டி செய்யும் பொறுக்கிகள் கூட இணையத்தில் பாட மறுக்கும் பாப்ப்பாத்திகள் என்று எளிதாக எழுதி விட்டு முற்போக்குப் பட்டமும் வாங்கிக் கொண்டு போய் விட முடிகிறது.

சினிமாக்களில் மட்டும் அல்லாமல் ஒவ்வொரு தெருமுனை தி க, தி மு க, தனித் தமிழ் கூட்டங்களிலும் இதே விதமான வக்கிரப் பிரச்சாரமே தமிழ் நாட்டில் கடந்த அறுபது வருடங்களாக அவிழ்ந்த்து விடப் பட்டிருக்கிறது. இவ்வாறான ஒரு சூழலில் சினிமாக்களும் சேர்ந்து கொள்ளும் பொழுது பிராமணப் பெண்களும் ஆண்களும் தெருவில் செல்லும் பொழுது ஏற்படுத்தப் படும் அவமானகரமான செயல்பாடுகளுக்கு இந்த விதமான சினிமாக்களே பொறுப்பாகின்றன. இதில் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருப்பின் தமிழ் இணைய ப்ளாகுகளையும் அதில் வெளியிடப் படும் பின்னூட்டங்களையும் ஒரு நாள் உலாவிப் பார்த்தாலே புரிந்து விடும்.

பிராமணப் பெண்கள் மட்டும் அல்ல ஆண்களும் கூட கடுமையான கேலிக்கும் தாக்குதலும் அடிக்கடி உள்ளாகின்றனர். ஆவணி அவிட்டம் என்ற பிராமணர்களின் பூணூல் அணியும் சடங்கு முடிந்து அவர்கள் வீடுகளுக்குத் திரும்புகையில் தாக்கப் படுவதும் ஆபாசமாகக் கிண்டல் செய்யப் படுவதும் இன்றும் தமிழ் நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்குகளில் நடை பெறுகின்ற ஒரு காட்சியே. ஒரு முஸ்லீம் பெண் பர்தா அணிந்து வரும் பொழுது செய்யப் படாத ஒரு கிண்டல், ஒரு முஸ்லீம் குல்லா போட்டு வரும் பொழுது, மீசையை மழித்து விட்டுத் தாடி மட்டும் வைத்துக் கொண்டு செல்லும் பொழுது செய்யப் படாத ஒரு கேலி, ஒரு சர்தார் தாடி வைத்து, டர்பன் வைத்துக் கொண்டு போகும் பொழுது செய்யப் படாத அவமானம், ஒரு பாதிரியார் பாவாடை அணிந்து கொண்டு போகும் பொழுது செய்யப் படாத ஒரு ஏளனம், ஒரு பிராமணப் பெண் மடிசார் கட்டிக் கொண்டு போகும் பொழுதும், ஒரு பிராமணப் புரோகிதர் குடுமி வைத்துக் கொண்டு செல்லும் பொழுதும், ஒரு பிராமணர் பூணூல் அணிந்து கொண்டு போகும் பொழுது மட்டுமே செய்யப் படுவதன் காரணம் என்ன? தமிழ் நாட்டின் இன வெறுப்பு அரசியல் மற்றும் ஆபாச சினிமாக்கள் இரண்டுமே காரணம் என்று நான் சொல்கிறேன்.

இதை நீ ஏன் சொல்கிறாய் என்று கேட்டால் என் மனைவியோ, அம்மாவோ, அப்பாவோ, மகளோ செல்லப் படும் பொழுதும் இதே அவமானத்திற்கும் தாக்குதலுக்கும் உள்ளாகக் கூடிய சாத்தியங்கள் இருப்பதினால் சுயநலம் கருதி நான் இவற்றைக் கடுமையாக எதிர்க்கிறேன். கண்டனங்களைப் பதிவு செய்கிறேன்.

இதனால் பாதிக்கப் படாத இந்த நிலைகளையெல்லாம் அறிய நேராத நீங்களோ வேறு எவருமோ இதையெல்லாம் வெற்றுப் புலம்பல் என்று கருதி மிக எளிதாக இடது கையால் ஒதுக்கி விட்டுப் போய் விடலாம் அல்லது ஒரு குழுவின் பிரதிநிதியாக தன்னைக் கருதிக் கொண்டு அநாவசியமாகப் புலம்புகிறான் என்று மிக எளிதாக ஒதுக்கி விடலாம். உண்மை அதுவல்ல இன்றும் இவை போன்ற அவமானத் தாக்குதல்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன அதற்குப் பெரும் அளவில் நம் அரசியல் கட்சிகளும், ஆதிக்க ஜாதியினரின் பழியைப் பிறரிடம் தள்ளி விடும் போக்கும், சினிமாக்களுமே காரணம் என்று நான் கருதுகிறேன். அந்தக் காரணங்களினால் நான் சொந்த வாழ்வில் நானும் என் குடும்பத்தாரும் பாதிக்கப் படும் பொழுதும் அவ்வாறு பாதிக்கப் படும் சாத்தியம் இருக்கும் பொழுதும் அதற்கான காரணங்களை ஒது தனிப்பட்ட ஒரு அநாதயான குரலாகவேனும் ஒரு சிறிய பலவீனமான எதிர்ப்பையாவது பதிய முயல்கிறேன்.

இப்படி சினிமாக்களில் பிராமணர்களை அவமானப் படுத்தும் போக்குகளை ஒரு ஞாநியோ, ஒரு தி ஹிந்து ராமோ ஒரு கமலஹாசனோ கேள்வி கேட்க்க மாட்டார்கள். ஏனென்றால் அவர்களின் சுய அடையாளங்களை மறைப்பதற்கே அவர்கள் படாத பாடு பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதற்காக தலைகீழாக நின்று தண்ணீர் குடிக்கிறார்கள்.

மேலும் ஒரு கமலஹாசனின் குடும்பப் பெண்களோ, ஒரு பாலச்சந்தரின் குடும்பப் பெண்களோ டவுண் பஸ்ஸில், தாம்பரம் பீச் ட்ரெயினில் செல்பவர்கள் அல்லர், ரேஷன் அரிசிக்காக க்யூவில் நிற்கும் பிராமணர்கள் அல்லர், தனியார் வேலைக்குச் செல்பவர்கள் அல்லர். ஆகவே அவர்களுக்கு இது குறித்து எவ்விதக் கவலையும் கிடையாது, மாறாக ஒரு ஜெயமோகனை தலித்துக்களை அவமானப் படுத்தி விட்டார் என்று சொன்னால் அவர்களுக்கு முற்போக்கு பட்டம் கிட்டும் அவர்களின் ஜாதி அடையாளத்தை மறைக்க உதவும் அதனால் அதை வேகமாகச் செய்வார்கள்.

ஆகவே பாதிக்கப் படுபவர்கள் மட்டுமே இது குறித்து ஏதேனும் சொல்ல முடியும். நான் இந்த விஷயத்தில் மிகக் கடுமையாகப் பாதிக்கப் பட்டவன். சிறு வயதில் நான் அனுபவதித்த ஒரு கொடூரமான தாக்குதலின் பயங்கரத்தில் இருந்து இன்றும் மீள முடியாத கடுமையான கசப்பில் உழல்பவன் என்ற முறையில் இவை போன்ற சினிமாக்களை ஒரு தனி மனிதனாக கண்டித்தால் அது தவறு ஏதும் இருக்க முடியாது என்றே கருதுகிறேன்.

சினிமாவில் பிராமணப் பெண் அலைவதாகக் கவர்ச்சி மதிப்பு கருதி மட்டும் காண்பிக்கப் படும் பொழுது அதைப் பார்க்கும் ரோட்டில் அலையும் ரவுடிக்கு அவன் காணும் பிராமணப் பெண்களின் இடுப்பைக் கிள்ளச் சொல்லும் தைரியத்தை அளிக்கிறது. சினிமாவில் குடுமி வைத்த ஒரு புரோகிதர் இழிவு செய்யப் படும் பொழுது ரோட்டில் அதே போலச் செய்யும் ஒரு புரோகிதர் அசிங்கமாக ஏசப் படுகிறார் சமயங்களில் தாக்குதலுக்கும் உள்ளாகிறார். இவையெல்லாம் நடக்கின்றன, நானே கண்டிருக்கிறேன். உங்கள் சூழலில் நடக்கவில்லை என்பதினால் இப்படி நடப்பதேயில்லை என்று சொல்லி விடாதீர்கள்.

ஏன் தமிழ் நாட்டில் தலித்துக்கள் அவமானப் படுத்தப் படுவதில்லையா, கொடுமைக்குள்ளாவதில்லையா நீ அவமானப் பட்டால் என்ன உன் முன்னோர் செய்த பாவத்திற்கு நீ கொடுக்கும் விலை இது என்பது அடுத்த பதிலாக வரும். நிச்சயமாக ஒடு தலித் படும் வேதனைக்கும் அவமானத்திற்கும் வேறு எந்த அவமானமும் ஈடு இணையாகாது. ஆனால் அவர்களை சினிமாவில் அப்படிச் சித்தரிக்க யாரும் துணிவதில்லை.

கட்சி மேடைகளில் யாரும் பேசுவதில்லை. அவர்கள் படும் அவமானம் அந்தந்தப் பகுதிகளில் வாழும் பிராமணர்கள் அல்லாத பிற ஜாதியினரால் உண்டாக்கப் படுவது மட்டுமேயன்றி சினிமாக்கள் காரணமாக இருப்பதில்லை.

எனக்கு ஜெயமோகனைத் தெரியும், ஒரு சினிமாவிலோ ஒரு படைப்பிலோ தேவை கருதி ஒரு ஜாதியோ ஒரு இனமோ, ஒரு மதமோ ஒரு கட்சியோ சித்தரிக்கப் பட வேண்டுமானால் அதன் அவசியம் குறித்து நன்கு தெரியும். ஆகவே அங்காடித் தெருவில் நீங்கள் எந்த வித உள்நோக்கமும் இன்றி அந்தக் கதையின் நம்பகத்தன்மைக்காகவும், அதன் நிஜத்தன்மைக்காகவும் மட்டுமே அந்தக் காட்சியை வைத்திருக்கிறீர்கள் என்பதும் நன்கு தெரியும்.

ஆனால் உங்களை அறியாத உங்கள் எழுத்துக்களைப் படித்தறியாத, உங்கள் நோக்கங்களை அறிந்திராத, தமிழ் சினிமாவில் வழக்கமாக பிராமணர்கள் சித்தரிக்கப் படுவதைக் கண்டு வெறுப்பும், அவநம்பிக்கையும் கொண்ட அதனால் பாதிக்கப் பட்ட ஒரு சராசரி பிராமணப் பெண்ணோ ஆணோ, அப்படிச் செய்யும் சினிமாக்காரர்களையும் உங்களையும், வசந்த பாலனையும் ஒரே தட்டில் வைத்துப் பார்க்கவே செய்வார்கள். அது புரியாமல் உங்களைப் பற்றி அறியாமல் செய்யும் ஒரு செயலாகவே நான் கருதுவேன்.

அடுத்து அடையாளம் குறித்து. எனக்கு அடையாளங்கள் ஏதும் கிடையாது. எனக்கு அடையாளங்களின் அவசியமும் தேவையும் கிடையாது. எந்த பிராமணர்களிடத்தும் போய் எதற்காகவும் கெஞ்சி நின்றதும் கிடையாது. ஜாதி என்பது உறவுகளைப் பேணவும் உணவு, சடங்குகள் போன்ற ஒரு சில கலாச்சார அடையாளங்களை தொடர்வதற்காகவும், ஒருவருக்கு ஒருவர் தேவைப் பட்டால் கஷ்டப் படுவதற்கு உதவுவதற்காகவும் வேண்டுமானால் ஜாதிகள் தேவைப் படுமே ஒழிய அவற்றை மீறி அதன் தேவைகள் ஏதும் இல்லை என்ற கொள்கைகள் உடையவன்.

மேலும் ஒருவர் எந்த ஜாதியில் பிறந்தாலும் பிறப்பின் அடிப்படையில் அவர்கள் யாருக்கும் உயர்வானவர்களோ தாழ்வானவர்களோ கிடையாது என்ற நம்பிக்கையும் உடையவன். ஆனாலும் நான் பிறந்த குழுவின் அடிப்படையில் என் மீது நான் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் சில அடையளங்கள் திணிக்கப் படுகின்றன. அதற்கு நான் பொறுப்பாக முடியாது, நீ இந்த ஜாதி ஆகவே இப்படித்தான் நடந்து கொள்வாய் என்ற தெளிவான முன் தீர்மானங்கள் கொண்டே இன்று தமிழ் நாட்டில் எவரும் அணுகப் படுகிறார்கள்.

ஆகவே என் மீது திணிக்கப் படும் ஜாதி சார்ந்த அடையாளங்களுக்கு நான் பொறுப்பாக முடியாது. ஆகவே ஒரு ஜாதியின் அடையாளமாக நான் இதைச் சொல்லாமல் தனிப்பட்ட அளவில் பாதிக்கப் பட்ட பாதிக்கப் படும் வாய்ப்புள்ளவன் என்ற அளவில் மட்டுமே நான் இதை அணுகுகிறேன் என்பதை மீண்டும் ஒரு முறை தெளிவு படுத்திக் கொள்கிறேன்.

அங்காடித் தெருவில் அந்த பிராமணர் பாத்திரம் குறித்தும் பக்தியுள்ள இந்துக்கள் வில்லன்களாக காண்பிக்கப் படுவதும் குறித்தும் நீங்கள் உள்நோக்கம் கருதி அவற்றை வைக்காவிட்டாலும் கூட வக்கிரம் புரையோடிப் போன நம் தமிழ் சூழலில் அவை எவ்வாறு புரிந்து கொள்ளப் படும் என்ற என் அச்சத்தை எனது அங்காடித் தெருவின் சமூகப் பார்வை என்ற கட்டுரையில்

http://solvanam.com/?p=7588

ஏற்கனவே குறிப்பிட்டுள்ளேன். குறை உங்களிடம் இல்லை நம் பார்வையாளர்களிடம் உள்ளது என்பதைச் சொல்லியிருக்கிறேன். நீங்கள் ஒரு பிராமணப் பெண்ணை அப்படிச் சித்தரிப்பதினால் எல்லா பிராமணப் -பெண்களுமே அப்படித்தான் என்று சொல்ல வரவில்லை. நீங்கள் ஒட்டு மொத்த ஜாதியையும் சொல்ல வரவில்லை என்பதை ரப்பர் படித்த, பி தொ நி குரல் படித்த, காடு படித்த, அனைத்து கட்டுரைகளையும் படித்த, ஜெயமோகனுடன் நெருங்கிப் பழகி நேரில் அறிந்த நான் நன்கு அறிவேன். அதில் எனக்கு எவ்விதச் சந்தேகமும் கிடையாது.

ஆனால் இதை அறியாத பொதுவாகவே கடந்த அறுபது எழுபது வருடங்களாக தமிழ் நாட்டில் நிலவி வரும் கடுமையான பிராமணக் காழ்ப்புச் சூழலில் வளர்ந்த பிராமணர்கள் என்றாலே கொடூரமான வெறியர்கள் என்று சொல்லி வளர்க்கப் பட்ட தமிழர்களில் பலருக்கும் இந்தக் காட்சி பிராமணர்களை கடுமையாக வெறுக்க மற்றும் ஒரு காரணத்தைக் கற்றுக் கொடுக்கும் அது போன்ற குரோத மனப்பான்மைக்கு தூபம் போடும்.

இது சினிமாவில் அதை வைத்த உங்கள் நோக்கம் வேறு ஆனால் அது பெரும்பான்மை தமிழர்களிடம் ஏற்படுத்தும் விளைவு வேறு. நீங்கள் அறியாமலேயே விளைவது அந்தக் குரோதம். இந்தச் சூழல் கேரளாவில் கிடையாது. அங்கு படம் பார்ப்பவனுக்குத் தெரியும். சினிமாவில் ஒரு நம்பூதிரியோ, ஒரு முஸ்லீமோ, ஒரு கிறிஸ்துவனோ மோசமாக காண்பிக்கப் பட்டால் அது அதே இனத்தைச் சேர்ந்த அனைவரின் ஒட்டு மொத்தக் குணமும் கிடையாது என்பதை ஒரு எளிய மலையாள ரசிகன் கூட புரிந்து கொள்வான்.

ஆனால் தமிழ் நாட்டில் அந்த நிலை இல்லை. ஆகவேதான் தமிழ் சினிமாக்களில் ஜாதிகளை வெளிப்படையாகக் காண்பிப்பதில் சில சிக்கல்கள் இருக்கின்றன. இங்கு நிலவும் சூழலில் ஒரு கட்சியையோ, ஜாதியையோ, தலைவர்களையோ படைப்பின் யதார்த்தம் கருதி கூட அப்படியே காண்பித்து விட முடியாது என்பதுதான் தமிழ் நாட்டு யதார்த்தம். ஆனால் பிராமணர்களை காண்பிக்கலாம் அதற்கு அவர்கள் எதிர்ப்புத் தெரிவிக்க மாட்டார்கள் ஒரு சிலரைத் தவிர பெரும்பாலோனோர் அதை உரிய விதத்தில் புரிந்து கொள்வார்கள். கையை, தலையை வெட்ட வரமாட்டார்கள்.

உண்மைதான்.

அதனால் உங்களைப் போன்ற ஒரு சில படைப்பாளிகள் நேர்மையான காரணங்களினால் ஒரு சின்ன சுதந்திரம் எடுத்துக் கொள்கிறீர்கள் அதில் தப்பும் இல்லை. ஆனால் அந்த சின்ன சுதந்திரம் கூட அப்படிப் பெருந்தன்மையுடன் புரிதலுடன் அமைதி காக்கும் ஒரு தரப்பாருக்கும் கூட எதிர் மறையான விளைவுகளையே ஏற்படுத்துகின்றன என்பதே என் ஆதங்கம்.

இன்றைய தமிழ் சூழலில் ஒரு சிவாஜி, ஒரு எம் ஜியாரை விமர்சிக்க முடியாது. பிராமணர்களைத் தவிர வேறு எந்தவித ஜாதியினரையும் பெருமைப் படுத்துவது அன்றி வேறு எந்த விதமாகவும் விமர்சித்து விட முடியாது. பா ஜ க போன்ற ஒரு சில கட்சிகளைத் தவிர வேறு எந்த கட்சியினரையும் சினிமாவில் விமர்சித்து விட்டு உயிரோடு இருந்து விட முடியாது.

இப்படியாகப் பட்ட ஒரு சூழலில் படைப்புச் சுதந்திரம் கருதி எதிர்ப்புத் தெரிவிக்காத ஒரு சமூகத்தை மட்டும் எப்படியும் காண்பிக்கலாம் என்பது நிச்சயம் படைப்பாளிக்கு எந்த வித எதிர்ப்பையும் ஏற்படுத்தாது ஆனால் அந்த சமூகத்தின் மீது தமிழ் நாட்டுச் சூழலில் ஒரு வித புரிதல் இல்லாத எதிர்மறை எண்ணங்களை ஏற்படுத்த அவை போன்ற யதார்த்தம் கருது உள்நோக்கமின்றி வைக்கப் பட்ட காட்சிகள் காரணமாகி விடுகின்றன என்று கருதுகிறேன்.

இன்றைய சூழலில் தமிழ் நாட்டில் நான் ஒரு சினிமா இயக்குனராக இருந்தால், ஒரு சமுதாயம் அல்லது ஒரு கட்சி மட்டுமே தன் பலவீனம் காரணமாகவோ, எண்ணிக்கை காரணமாகவோ, பெரும் தன்மை காரணமாகவோ, சரியான புரிதலின் காரணமாகவோ அல்லது வேறு எந்த விதமான காரணமாகவோ தன்னைப் பற்றிய நேர்மையான, ஆபாசமான, கேலியான, உள்நோக்குள்ள்ள, இல்லாத அனைத்து விதமான சித்தரிப்புகளையும் பொறுமையுடனும் புன்னகையுடனும் அனுமதிக்கிறது என்றாலும் கூட என் படைப்புகளில் நான் அந்த சமூகத்தை மட்டுமே பயன் படுத்த மாட்டேன். என்று எனக்கு எல்லாவிதமான சமூக அமைப்புகளையும், ஜாதிகளையும்,கட்சிகளையும், தலைவர்களையும் ஒரே விதமாக விமர்சிக்கும், சித்தரிக்கும் உரிமை மறுக்கப் படுகிறதோ அந்தவிதமான ஒரு விஷச் சூழலில் நான் ஒரு சமூகத்தை மட்டும் அது அனுமதிக்கிறது அல்லது அது அனுமதிக்கும் அளவிற்கு பலவீனமாக இருக்கிறது அல்லது பெருந்தன்மையாக இருக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக என் படைப்புகளில் அந்தச் சமூகத்தைப் பயன் படுத்திக் கொள்ள மாட்டேன் என்பதே என் நிலைப்பாடாக இருக்கும்.

எமர்ஜென்சியின் பொழுது யாரும் இந்திராவையோ அவரது கட்சியையோ ஆட்சியையோ விமர்சிக்க முடியாது. கடுமையான சென்சார், கடுங்காவல் எல்லாம் அமுலில் இருந்தது. அப்பொழுது கவிழ்க்கப் பட்ட தி மு க ஆட்சியும் ஒன்றும் யோக்யமான ஆட்சி அல்ல அது மாநில அளவில் எதோச்சிகாரமும் ஊழலும் அராஜகமும் செய்து கொண்டிருந்த கட்சிதான் (இன்றைக்கும் அதே கதைதான்) அப்பொழுது சோ வுக்கு கருணாநிதியையும் அவர் ஊழல்களையும் விமர்சிக்க முழு உரிமையும் அனுமதியும் இருந்தது.

அன்று சோ தனது துக்ளக்கில் தாராளமாகக் கருணாநிதியை விமர்சிக்கலாம் ஆனால் இந்திராவை விமர்சிக்க முடியாது. அப்பொழுது சோ ஒரு தீர்மானம் எடுத்தார் எப்பொழுது என்னால் ஒரு கட்சியை விட்டு விட்டு இன்று கவிழ்க்கப் பட்டு பலவீனமாக இருக்கும் மற்றொரு கட்சியை மட்டுமே விமர்சிக்க முடிகிறதோ அப்பொழுது நான் கருணாநிதியையும் விமர்சிக்கப் போவதில்லை. என்று என்னால் இந்திராவை விமர்சிக்க எனக்கு அனுமதியும் பேச்சுரிமையும் மீண்டும் கிடைக்கிறதோ அன்றுதான் நான் கருணாநிதியையும் விமர்சிப்பேன் என்று கூறினார்.

சோவின் நிலைப்பாடே என் நிலைப்பாடாகவும் இருக்கும்

என் அச்சங்கள் தேவையற்றதாகவும், அதீதமானதாகவும் நீங்கள் கருதலாம். பாதிக்கப் படாத யாரும் அவ்வாறே கருதுவார்கள். நான் சொல்வது என் அனுபவத்தின் அடிப்படையில் நான் கண்ட சம்பவங்களின் அதன் காரணங்களாக நான் கருதுபவற்றின் அடிப்ப்டையில் அமைந்தவை மட்டுமே. இதையே நான் மலையாள சினிமா சூழலுக்குச் சொல்ல மாட்டேன். அங்கு இயக்குனர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் எல்லா ஜாதியினரைப் பற்றியும், மதத்தினரைப் பற்றியும், கட்சியினரைப் பற்றியும் துணிவுடன் விமர்சிக்கும் சுதந்திரம் நேற்று வரை இருந்தது. இன்று கைகள் வெட்டப் பட்ட கிறிஸ்துவ கல்லூரி ஆசிரியருக்குப் பின்னால் கேரளத்திலும் கூட தமிழகத்தில் நிலவும் சூழல் வந்து விட்டிருக்கிறதோ என்ற அச்சம் நிலவுகிறது.

இருந்தாலும் நேற்று வரை இருந்த மலையாள படைப்புலகச் சூழலில் எந்த ஜாதியினரை விமர்சிப்பதிலும் யாரும் தயக்கம் இருந்ததில்லை அதற்கான தேவையும் பெரும்பாலும் இல்லை. ஆனால் தமிழ் நாட்டின் சூழல் வேறு. இங்கு கருணாநிதியையும், எம் ஜி யாரையும் குறிப்பிட்டு ஒரு சாதாரண சினிமா கூட எடுக்க முடியாத சூழல் தான் நிலவுகிறது. மலையாள அரபிக் கதாவில் சர்வ சாதாரணமாக பிரணையில் விஜயனும், அச்சுதானந்தனும் பேசப் படுகிறார்கள். போப்பும், நம்பூதிரிகளும், சங்கராச்சாரியர்களும் மிகச் சுதந்திரமாக விமர்சிக்கப் படும் சூழல் உள்ளது. அங்கு தாராளமாக படைப்புச் சுதந்திரத்தைப் பயன் படுத்தலாம்.

ஆனால் புரையோடிப் போயிருக்கும் தமிழ் நாட்டுச் சூழலில் வேறு விதமாகச் செயல் பட வேண்டிய கட்டாயமே எந்தவொரு படைப்பாளிக்கும் நிலவுகிறது. அந்த சூழல் மாறும் ஒரு காலம் வரும் பொழுது என்று எல்லா ஜாதியினரையும் சமமாக விமர்சிக்கலாம் என்ற காலம் வரும் பொழுது, என்று எல்லா கட்சியினரையும் அரசியல்வாதிகளையும் எவ்வித அச்சமும் இல்லாமல் பகிரங்கமாக நேர்மையாக விமர்சிக்கலாம் என்ற நிலை வரும் பொழுது பிராமணர்களையும் அவர்களில் பலரது சிறுமைகளுக்காகவும், ஆணவங்களுக்காகவும், ஜாதி மேலாண்மைக்காகவும், தீண்டாமைக்காகவும் கட்டாயம் கடுமையாக விமர்சிப்பதில் எந்த வித ஆட்சேபணையும் இருக்க முடியாது.

ஜாதி: தேவையா? வேண்டாமா?

சில பதிவுகள்:

1. jeyamohan.in » Blog Archive » சாதி பேசலாமா?

2. jeyamohan.in » Blog Archive » சாதியுடன் புழங்குதல்…

3. jeyamohan.in » Blog Archive » சாதியை வைத்துக்கொண்டு என்ன செய்வது?

4. திணை இசை சமிக்ஞை: நவீன சமூகமும் இரட்டைநிலையும் – தமிழவன்

சாதி ஏன் வேண்டும்?

  1. தாழ்த்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு தருவதற்கு
  2. மக்கள் தொகை கணக்கெடுப்பில் வாக்கு வங்கி எவ்வளவு பேர் என்று தெரிந்து கொள்வதற்கு
  3. சம்பளம், வேலை போன்ற குறியீடுகளைக் கொண்டு முன்னேறிய வர்க்கங்களை அடையாளம் காட்டுவதற்கு
  4. தொன்றுதொட்டு வரும் இனக் குறியீடுகளையும், குலவழக்கங்களையும் காப்பாற்றி அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வதற்கு
  5. முன்னேறிய நாடான அமெரிக்காவிலேயே வெள்ளை நிறத்தல்லாதவர் மீதம் அண்டை நாட்டில் இருந்து பஞ்சம் பிழைக்க வந்தோரும் ஒடுக்கப்படும் நிலை; இங்கே இப்ப என்ன அவசரம்?
  6. வத்தக்குழம்பு, குழிப்பணியாரம் என்று உணவு ஸ்பெஷாலிடிகளுக்கு சரவண பவன்கள் மட்டும் என்று மாறாதிருப்பதற்கு
  7. ஐஐடி, என்.ஆர்.ஐ., ஆட்டோ ஓட்டுநர் என்று பிரிவுகள் மாறலாம்; சகோதரப் பற்று சாகாது
  8. சாதியை எல்லாம் எப்பொழுதும் ஒழிக்க முடியாது என்று சொல்வதற்கு

ஜாதி ஏன் தேவையில்லை?

  1. சமூகம் என்றால் கலாச்சாரம் என்று அர்த்தப்பட வேண்டும் என்பதால்
  2. இன்றைய நாகரிக உலகு பொருளுடையார், இல்லார் என இரண்டே பிரிவினர் கொண்டதால்
  3. பார்ப்பான், பள்ளன், கள்ளன், செட்டி என்று எல்லாமே வசைச் சொல்லாகிப் போனதால்
  4. மண்டல் போல் அரசியல் கலவரம் ரசிக்காததால்
  5. லாலு, மாயாவதி, முலாயம் என விகித்தாசார லஞ்ச ஒதுக்கீடு மேல் கொண்ட வெறுப்பினால்
  6. அப்படியே விளிம்பு வர்ணம் பார்த்து கட்சி அமைக்கும் பாட்டாளி மக்கள் கட்சி முதல் விடுதலை சிறுத்தைகள் வரை அனைவரும் இந்துத்துவா முதல் தீவிரவாதம் வரை அனைத்து ஒதுக்கப்பட வேண்டியோருக்கும் ஆதரவு நல்குவதால்
  7. க்ளாசிஃபைட் விளம்பரங்களில் கோத்திரம் பார்க்காததால் கொலை செய்யும் மணமுடிக்கும் பழக்கத்திற்கு முற்றுப்புள்ளி வேண்டுவதால்
  8. பிரிவினையை விரும்பாததால்

“A caste-ridden society is not properly secular. When a person’s beliefs become petrified in caste divisions, they affect the social structure of the state and prevent us from realising the idea of equality which we claim to place before all else.” – Jawaharlal Nehru

தகதிமிதா – ஜெயா டிவி

கலைஞரைக் குறித்து எழுதினால், அம்மாவை அடுத்து சொல்ல வேண்டும்.

‘தகதிமிதா’ நடன நிகழ்ச்சி. சமீபத்தில் பார்க்கத் துவங்கியுள்ளேன் இப்போதைக்குப் பிடித்திருக்கிறது.

முதல் சுற்றில் தமிழ்ப்பாட்டுக்கு பரதநாட்டியம் ஆடுகிறார்கள். இரண்டாவது சுற்றில் கையில் எதையாவது வைத்து அபிநயம் காண்பிக்கிறார்கள். இறுதியாக, தெலுங்கு அல்லது பிறமொழிப் பாடலுக்கு ஆட்டம்.

நடுவே சுதா சந்திரன் கொஞ்சம் ஆடுகிறார். நடுவரும் அரங்கேறி தன் வித்தையை காண்பிக்கிறார்.

இருப்பதற்குள் இரண்டாம் சுற்றுதான் அலுப்பு தட்டுகிறது. ஒரே விதமான பாவனை வாராவாரம் மறு ஒளிபரப்பு ஆகிறது.

ஏன் இவரைத் தேர்ந்தெடுத்தோம் என்பதை நடுவர் சொல்வதில்லை. நாமே புரிந்து கொள்ள வேண்டியதுதான். ஆனால், சூப்பர் சிங்கர், நாளைய இயக்குநர் மாதிரி போங்கடிப்பதில்லை. ஓரளவு உருப்படியாக பெர்ஃபார்ம் செய்பவரே வெல்கிறார். தயாரிப்பாளரின் ஒன்று விட்ட அத்தை பையன், புகழ்பெற்றவருக்கு தெரிந்தவர் எல்லாம் முதல் பரிசைத் தட்டி செல்வதில்லை போலத் தெரிகிறது.

தொடர்வது தொகுப்பு:

இந்த நிகழ்ச்சியை கடந்த ஐந்து ஆண்டுகளில் பிரபல நடனமணிகள் மற்றும் நடிகைகளான

  • பானுப்பிரியா,
  • ஷோபனா,
  • சுகன்யா,
  • விமலா,
  • இந்திரஜா,
  • `அண்ணி’ மாளவிகா,
  • மோகினி

ஆகியோர் தொகுத்து வழங்கினார்கள்.

இதுவரை சுமார் 1500-க்கும் மேற்பட்ட நடனமணிகள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று பரிசுகளை பெற்றுள்ளனர்.

சாஸ்திரிய நடனக்கலையை மையமாக‌க் கொ‌ண்டு அமைக்கப்பட்ட இந்த நிகழ்ச்சி 400-வது எபிசோடை எட்டியிருக்கிறது.

“கலையை நம் வாழ்வில் தினம் பிரதிபலிக்கும் நிகழ்வாகப் பார்க்க வேண்டும்”
– பரத கலைஞர் ராதிகா சுரஜித்

திரைப்பட நடன இயக்குனர், ஜெயா டிவியில் ‘தகதிமிதா’ நிகழ்ச்சியின் இயக்குனர், ‘த்ரயி’ என்ற நாட்டியப் பள்ளியின் நிறுவனர்.

வெறும் போட்டி நிகழ்ச்சியா இல்லாம அந்த நிகழ்ச்சியைப் பார்ப்பவர்கள் கற்றுக் கொள்ளவும் செய்ய வைத்தோம். அது எங்களுக்கு நல்ல ஸ்கோர் வாங்கிக் கொடுத்தது. இந்த நிகழ்ச்சியை நான் செய்ய நினைத்த போது நிறைய பேர் டிவியில் பரத கலையைக் கொண்டு வருவது என்பது சரியா வருமா, எத்தனை பேர் பார்க்கப் போகிறார்கள் என்று பேசினார்கள். ஆனால் நான் ரொம்ப உறுதியாக இருந்தேன். இதை வித்தியாசமாகக் கொடுத்தால் கண்டிப்பாகப் பார்ப்பார்கள் என்று நம்பினேன். அதே நேரத்தில் ஜெயா டிவிக்கும் நான் நன்றி சொல்ல கடமைப் பட்டிருக்கேன். ஜெயலலிதா ஒரு பரதக் கலைஞர் என்பதால் இந்த நிகழ்ச்சியை நான் பண்ணனும்னு சொன்ன போது உடனே ஓகே சொன்னார். ஜெயா டிவி இதை பிசினஸாகப் பார்க்காமல் ஒரு கலையை வளர்க்கும் முயற்சியாகப் பார்த்தது மற்றொரு பிளஸ்.

முதன் முதலில் இந்திரா படத்தில் ‘நிலா காய்கிறது’ பாட்டுக்கு சுஹாசினி நடனம் அமைக்கக் கூப்பிட்டாங்க.

தங்கர்பச்சானுக்கு என் நாட்டியத்தின் மீது மதிப்பு உண்டு. அதனால் அழகி படத்தில் ‘பாட்டுச் சொல்லி’ பாட்டு பண்ணச் சொன்னார். ஒரு பொண்ணோட மன உணர்வுகளை அப்படியே பிரேமுக்குள்ள கொண்டு வரணும்னு சொன்னார்.

அந்த மாதிரி அமைந்ததுதான் பாரதி படத்தில வந்த ‘மயில் போல’ பாட்டும்.

இவன்’ படத்தில கம்பியூட்டர் கிராபிக்ஸ்ல பரத நாட்டியம் ஆட வச்சதும் ஒரு வித்தியாசமான முயற்சி.

ஞாநி: சந்திப்பும் பேச்சும்

ஞாநி எனக்கு தற்செயலாகத்தான் அறிமுகமானார். ‘கண்டதை சொல்கிறேன்‘ என்னும் ஜெயகாந்தனின் பாடலில் மயங்கி அதன் இரு அர்த்தங்களுக்காகவும் என் தலைப்பாக வைத்து 2003ஆம் ஆண்டில் வலைப்பதிவுக்கு தலைப்பாக்கினேன். கொஞ்ச நாள் கழித்து பழைய ‘இந்தியா டுடே’க்களை தமிழகம் சென்றபோது புரட்டினால் அதே தலைப்பில் ‘ச்’ கூட்டி ஞாநியும் பத்தி எழுதியிருந்தார்; எழுதி வந்தார்.

அட… அபாரம்! சேம் ப்ளட்!! என்று கிள்ள வைத்தார்.

கொஞ்சம் படித்த பிறகு அவர் நம்மைப் போல் அல்ல, ‘நேர்மையான கொம்பன்’ என்று விளங்கியது. குருதிப்புனல் திரைப்படத்தில் கமல் சொல்வார்; இவர் எழுத்தில், செயலில், எண்ணத்தில் வாழ்ந்து காட்டுபவர். நடுத்தர வர்க்கத்தின் மனசாட்சியை தூங்க விடாமல் குடைச்சல் கொடுப்பவர்.

கொஞ்ச நாள் கழித்துப் பார்த்தால் டாக்டர் மாத்ருபூதம் ஜூனியர் ஆகியிருந்தார். ‘அறிந்தும் அறியாமலும்’ தொடர் பலருக்கு ‘புதிரா; புனிதமா’ பார்ட் டூ. கைமைதுனம், சொப்பன ஸ்கலிதம் முதல் குட்டிப் பாப்பாவுக்கு மலம் அலம்பி விடுவதின் சூட்சுமம் வரை படம் போட்டு வெளிச்சமாக்கி புரிய வைத்தவர். மருத்துவர் மாத்ரு பூதம் போல் காமெடி லபக்குதாஸாகவோ, வில்லன் அப்பாவாகவோ மாறும் வாய்ப்புகளும் மணி ரத்னத்தின் ‘இராவணன்’ மூலம் நிறைவேறும் சாத்தியக்கூறுகளும் இருக்கவே செய்கின்றன.

இனி… அவருடைய குறிப்புகளில் இருந்து…

பத்திரிகை, நாடகம், வீடியோ ஆகிய துறைகளில் முப்பதாண்டுகளுக்கு மேல் செயல்பட்டு வரும் ஞாநியை பல தடைகளை மீறித் தொடர்ந்து இயக்குவது, மனித வாழ்வைத் தொழும் அனைத்தின் மீதும் உள்ள அக்கறையே.

வாழ்க்கை குறித்தும் நாடகம் குறித்தும் நடுத்தர வகுப்பில் நிலவும் போலி நம்பிக்கைகளை இனம் கண்டு களைய முற்படுவதே ஞாநியின் நாடகக் கொள்கையாகும்.

எப்போதும் யாருடனாவது உரையாடிக் கொண்டிருப்பதில் எனக்கு சிறு வயது முதலே விருப்பம் அதிகம். ஓயாமல் பேசிக் கொண்டிருப்பவனாகவே நான் என் உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் அறியப்படிருக்கிறேன். எனக்கு சிலை வைத்தால், ஒரு பெரிய வாயின் உருவமும், அதன் கீழே அறுந்து விழுந்து கிடக்கிற பல காதுகளையும் தான் சிலையாக வடிவமைக்க வேண்டும் என்பது நண்பன் வைத்தியின் பிரபலமான கிண்டல்.


தமிழ் படைப்பாளிகளில் மகாஸ்வேத தேவிகள் இன்று வரை இல்லை. வெகுஜன அளவில் 1965 & 1967 காலகட்டத்தில் நிகழ்ந்த மொழிப்போர் பற்றியே தமிழ்ப் படைப்பாளிகள் இதுவரை எழுதத் தூண்டப்படவில்லை என்கிற நிலையில் எண்பதுகளின் நக்சல்பாரிகள் மீதான ஒடுக்குமுறை போன்ற விளிம்பு நிலைப் போராட்டங்கள் பற்றி எழுதும் வாய்ப்பேது…

வன்முறையை துளியும் விரும்பாத எனக்கு, நக்சல்பாரிகளின் வழிமுறைகளுடனோ, அரசியல் பார்வைகள் பலவற்றுடனோ உடன்பாடு இல்லைதான். எத்தனைதான் சீரழிந்திருந்தாலும், தேர்தல் ஜனநாயகத்தின் மீது சராசரி குடிமக்களுக்கு இருக்கும் நம்பிக்கையில் எனக்கும் பங்குண்டு.


தீம்தரிகிட போன்ற சமூகத்துக்கு தேவையான கறாரான ஒரு இதழ் நின்று போவதற்குக் காரணம் நமது சமூகத்தில் அயோக்கியர்களும் முட்டாள்களும் இருப்பதாகும். அயோக்கியர்கள் எண்ணிக்கையில் குறைவானாலும் அவர்கள் கையில் பண பலமும் அதிகார பலமும் இருக்கிறது. நல்லவர்கள் எண்ணிக்கை மிகப் பெரியதாக இருந்தாலும் அவர்களில் கணிசமானவர்கள் முட்டாள்களாக இருக்கிறார்கள்.

அரசியல் விமர்சனம் என்ற முத்திரை என் விருப்பத்தை மீறி என் மீது பலமாக விழுந்துவிட்ட காரணத்தால், நான் அக்கறை காட்டும் இதர பல விஷயங்கள் பற்றிய என் பார்வைகள் போதிய கவனம் பெறாமல் போயிருக்கின்றன:

  • நாடகம்
  • திரைப்படம்
  • ஆண் – பெண் உறவுகள்
  • பாலியல் கல்வி
  • திருமண முறை
  • இளைஞர்
  • மகளிர் நலன்
  • சூழல் பாதுகாப்பு

‘ஏன் உருப்படாத அரசியல்வாதிகள் பற்றி எழுதி உங்கள் நேரத்தையும் சக்தியையும் இதுவரை வீணாக்கிக் கொண்டிருந்தீர்கள்? இது போன்ற துறைகளில் இன்னும் அதிகம் எழுதியிருக்கலாமே’, என்று செல்லமாகக் கடிந்துகொண்ட வாசகர்கள் பலர்.

வாழ்க்கைத் திறன்கள் என்பதை நான் தனி நபர் முன்னேற்றம் சார்ந்ததாக மட்டும் பார்க்கவில்லை. அரசியல்வாதி, சினிமா படைப்பாளி, மருத்துவர், ஆடிட்டர், ஆசிரியர், எழுத்தாளர், அலுவலக ஊழியர் என்று சமூகத்தை பாதிக்கும் அனைத்துத் துறையிலும் ஆரோக்கியமான மாற்றங்கள் வருவதற்கு, நல்ல மதிப்பீடுகள் தழைப்பதற்கு நமக்குத் தேவைப்படும் பல்வேறு ஆயுதங்களில் வாழ்க்கைத் திறன்கள் முக்கியமானவை என்பது என் கருத்து.

நாடகத்தின் மீது அவருக்கு தீவிர காதலை ஏற்படுத்திய பள்ளி ஆசிரியர்கள் எம்.ஈ. ஸ்ரீரங்கன், ஜி. வேணுகோபால், கே.வீ. ஸ்ரீனிவாசன், முத்துகிருஷ்ணன், கல்லூரி ஆசிரியர் கிருஷ்ணசாமி (எ) கலைமணி ஆகியோருக்கு தன் நாடக வெளியீடுகளை சமர்ப்பிக்கும், அவரின் கனவுகளில் ஒன்று வருடம் முழுவதும் நாடகப் பயிற்சியும் நிகழ்ச்சிகளும் நிகழும் நாடக அரங்கம் ஒன்றைக் கட்டுவதாகும்.

முந்தைய பதிவுகள்:
1. ஞாநி: பயோடேட்டா « Snap Judgment
2. Njaani visit to US: அமெரிக்காவில் ஞாநி « Snap Judgment
3. Gnani in Boston – 10 Pics « 10 Hot
4. Writer, Filmmaker & the Argumentative Tamilan Gnani in New York/NJ « 10 Hot

நாளைய இயக்குநர்: கலைஞர் டிவி

இறுதிப்போட்டி மட்டும் பார்த்தேன். வருங்காலத்தின் முக்கிய இயக்குநராகக் கூடிய ஆறு பேரின் படங்களில் இரண்டுதான் தேறும்.

ஷங்கர், பிரதாப் போத்தனை வழிமொழிந்து மதனும் ‘ஆடு புலி ஆட்டம்‘, ‘நீர்‘ எல்லாம் நன்றாக இருக்கிறது என்றார்கள். Either they have lost their taste buds or their compensation makes them talk like desis behaving at NRI clients.

கே எஸ் கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் தேங்கார் ஸ்ரீனிவாசன் நாயகனாக வரும் எழுபதுகளை நினைவூட்டியது ‘ஆடு புலி ஆட்டம்‘. இந்த மாதிரி கொடுமை இயக்குநர் நாளை வரப்போகிறார் என்பதே பத்து பியர் அருந்த வைக்கும்.

தெருவெங்கும் கோவிந்தா போட்டு உருள்வது போல் கையில் இலங்கை குண்டுவெடிப்பு அனுதாப உண்டியல் குலுக்கியது ‘நீர்‘. அண்ணனுக்கும் தம்பிக்கும் இருக்கும் சகோதர பாசத்தை பாசமல்ர் பீம்சிங் பாதம் தொட்டு ரீமேக் செய்திருந்தார்.

மிட்டாய் வீடு’ தேவலாம். சரியான சிக் ஃப்ளிக். ஜூனியர் பாலச்சந்தர் மாதிரி மனதைத் தொட்டார். விஜய் பட டைரக்டராவது லட்சியமாகக் கொண்டவர் போல… நடுநடுவே சூப்பர் ஸ்டார் படம் வேறு போடுகிறார்.

முதல் வார விமர்சனங்களை சுரேஷ் கண்ணன் ஒரு கை பார்த்துவிட்டார்.

இந்த வாரம் கச்சத்தீவு கண்ணீர் என்றால், சென்ற வாரம் பார்வையற்றோர் வைத்து சென்டிமென்ட்.

எல்லாப் படங்களையும் ஏற்கனவே பார்த்த மாதிரி வேறு இருந்து தொலைக்கிறது. ‘துரு‘ மிக நன்றாக இருந்தது என்றார்கள். பார்க்க வேண்டும்.

நளன் & பாலாஜி தேவலாம். பின்னவர் ‘மொழி’ மாதிரி பிரகாஷ்ராஜ் காவியங்களும் முன்னவர் கிரேசி மோகன் துணையுடனும் உலா வரவும், மற்றவர்கள் எல்லாம் ‘சென்னை சில்க்’சுக்கும் சந்தூர்க்கும் விளம்பரம் இயக்கப் போகவும் அனுப்பிவைத்து எம்மை இரட்சிக்க எல்லாம் வல்ல கலைஞரிடம் விண்ணப்பிக்கிறேன்.

தொடர்புள்ள பதிவுகள்:

1. நந்தவனம்: வருங்கால இயக்குநர்

2. பிச்சைப்பாத்திரம்: நாளைய இயக்குனர்

3. பெட்டி கேஸ் படத்தினைப் பார்க்க : இங்கே. (மூன்றாவது வீடியோவில் மூன்றாவது நிமிடத்திலிருந்து படம் ஆரம்பமாகிறது. நான்காவது வீடியோவிலும் தொடருகிறது.)

4. முகில் / MUGIL » கண்டேன் இயக்குநரை!

5. இந்த நிகழ்ச்சியின் தொகுப்புகளை இந்த தளத்தில் காணலாம்.

Aayirathil Oruvan is Ravanan

எதெதற்கோ முடிச்சுப் போடுகிறோம்! செல்வராகவனின் ‘ஆயிரத்தில் ஒருவன்’ ஐயும் மணி ரத்னத்தின் ‘இராவணன்‘ஐயும் கோர்த்து விட முடியாதா?

படத்தின் துவக்கம் கடத்தல். தொல்பொருள் ஆய்வாளர் பிரதாப் போத்தன் காணாமல் போவதில் ஆ.ஒ. ஆரம்பிக்கிறது. ஐஸ்வர்யா ராய் கடத்தப்படுவது ராவணன் முதற்காட்சி.

இரண்டு படங்களிலும் முக்கியமாக சொல்லப்படுவது ஜென்ம ஜென்மமாகத் தொடரும் வன்மம்; தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையே உள்ள தீராப்பகை. சோழரும் பாண்டியரும் இரண்டாயிரம் வருடங்களாக சண்டை போடுகிறார்கள். காவல்துறையும் ராபின் ஹூட்களும் அனுமார் காலத்தில் இருந்தே பிணக்கில் இருக்கிறார்கள்.

சோழர் மகன் காணாமல் போய், அதன் பின் கடல் கடந்தது ஐதீகம். இராமர் கடலில் பாலம் கட்டி அதை வானர சேனையுடன் கடந்ததும் நம்பிக்கை. இராவணன் சீதையை விட்டுவிடுவான் என்பது மட்டும் நம்பக்கூடியதா என்ன?

பிரதாப் போத்தன் புகைப்படத்தை வைத்து அடையாளம் கேட்டு அடுத்த இடங்களுக்கு செல்வது போல், வீராவின் நிழற்படமும் படம் நெடுக முக்கிய பாத்திரம்.

‘நீ என்ன பொட்டையா?’ என்று ஆணைப் பார்த்து ஆயிரத்தில் ஒருத்தி கேட்பாள். அவனிடம் இல்லாத அதே தைரியத்தை ராகினியிடம் பார்த்து வியப்பது ‘இராவணன்’.

தசரதன் தன் மகனைக் காட்டுக்கு அனுப்பியது போல் அப்பாவும் மகளுக்கும் பிரச்சினையால் வீட்டை விட்டு வந்து காடு/மலை என்று கஷ்டப்படுபவள் லாவண்யா – ஆண்ட்ரியா.

சீதை தன்னுடைய நகைகளை வழித்தடத்தில் விட்டுப் போனது காப்பியம். பிரதாப் தன்னுடைய கறுப்புப் பையை விட்டுப் போவது ஆயிரத்தில் ஒருவன்.

ஆ.ஒ. சோழ சாம்ராஜ்யத்தில் நார்த் இந்தியன் ஸ்டைல் கோவில் கட்டுகிறார்கள்; திருநெல்வேலியில் உள்ள ஆரிய சமாஜத்தில் திருமணம் கட்டுகிறார் இராவணன்.

வாலியை மறைந்திருந்து தாக்குகிறான் இராமன். ஆயிரத்தில் ஒருவன் கிளாடியேட்டர் மைதானத்தில் நேருக்கு நேர் போர் புரிகிறான்.

வாலிக்கு பயந்து குகையில் பரிவாரங்களுடன் வாழ்ந்தவன் சுக்ரீவ ராஜா. சோழ அரசரும் பாண்டியனுக்கு பயந்து அடங்கி, மறைந்து வாழ்கிறார்.

‘மண்டையோடுகள் மண்டிய நாட்டை மன்னன் ஆளுவதோ’ என்பான் சோழன். வீராவும் அங்ஙனமே பலி கொடுத்து வாழ்கிறான்.

இடர்வழி

ஆயிரத்தில் ஒருவனில் ஏழு சிக்கலைக் கடந்து இறுதி லட்சியத்தை அடைகிறார்கள்.

முதலில் கடல். ஜெல்லி ஃபிஷ் தாக்குதல்; அட்டை போல் ஒட்டிக் கொண்டு இராணுவ வீரர்களைப் பறிக்கிறது. இராவணனில் ஓடும் ஜீப்களில் ஏறி இராணுவத் தளவாடங்களைப் பறிக்கிறது.

இரண்டாவது காட்டுவாசிகள். வீராவிற்கு இல்லாத டியாள் கூட்டமா!

அடுத்தது காவல் வீர்களில் எறிகணைத் தாக்குதல். நடுக்காட்டில் போட்ட கூடாரம் சீரழிகிறது. பலர் இறக்கிறார்கள். அங்கேயும் வெடிகுண்டுகளுடன் வலியோரை நோக்கிய வெறிப் பாய்ச்சலும் பேரழிவும் உண்டு.

தொடர்வது சர்ப்பம். பாம்பில் இருந்து தப்பிக்க தண்ணீர் உபாயம். இராவணனில் சதா சர்வகாலமும் தண்ணீரில் குதித்துக் கொண்டேதான் இருக்கிறார்கள். பின்னிப் பிணையும் பாம்பை உருவகமாகப் பார்த்தால், பாசத்தை சொல்லலாம். பசுமையான சூழலில் தான்தோன்றியாக உருவாகும் நாகம் போல் பச்சிளம் காரிகையைப் பார்த்தவுடன் வீராவிற்கு தடாலடியாக உதிக்கும் காதல்.

பின் பசி, தாகம் & புதைகுழி. நடராஜன் வடிவத்தில் சுரிமண். இராமேஸ்வரத்தில் சிவனை வழிபட்டுத்தானே கிளம்புகிறார் இராம்ர். அதே போல் இங்கேயும் இறைவணக்கம்.

கடைசியாக கிராமம். அங்கே மான் கேட்டாள் சீதை. இங்கே ஒட்டகம் கேட்கிறான் கார்த்தி.

மேம்போக்கு வழி

தற்கால பெரும் பொக்கீடு படங்களின் அடியொற்றி, தசாவதாரம் போல் பட்டாம்பூச்சி விளைவை இரண்டுமே குறிப்பால் உணர்த்துகின்றன. ‘ஓ லீசா… எல்லீஸா’வில் பட்டர்ஃப்ளை தலை காட்டுகிறது. அங்கே ஐஸ்வர்யாவினால் ஃப்ளை விரிவடைகிறது.

இராமனையும் இலக்குவனையும் பின் தொடர்ந்தது சீதை. அனிதாவையும் ஆன்ட்ரியாவையும் பின் தொடர்வது பருத்திவீரன்.

குரங்கு கூடவே வருவது போல் கார்த்தி இறுதி வரை துணை இருக்கிறார். தோளில் பையனைத் தூக்கி கடல் கடக்கிறார்.

ஆயிரத்தில் ஒருவனை ஆந்த்ரபாலஜிஸ்ட்டை பைத்தியமாக்கிறார்கள். இராவணனில் இராச்சிய விசுவாசத்தை கேலிக்குள்ளாக்குகிறார்கள்.