வாரயிறுதி விருந்தினர் – 'உருப்படாதது நாராயண்'

‘உருப்பாதது’ நாராயணுடன் வீக்எண்ட் ரிலாக்ஸ் கேள்விகள்

1. ஒபாமா & மெகயின்: இலக்கியவாதி அடையாளம் யாருக்கு பொருத்தமாக இருக்கும்?

மெகயினுக்கு தான் இலக்கியவாதி அடையாளம் பொருத்தமாக இருக்கும். ஏனெனில் அவரொருவர் தான் வாரத்து ஒரு முறை தான் சொன்ன கருத்திலிருந்து வேறொரு கருத்தினை சொல்லி அதையே பொதுமக்களின் கருத்தாக ஊர்ஜிதம் செய்து கொள்கிறார். இசங்கள் விட்டு இசங்கள் சடசடவென தாவும் மெகயின் தான் இலக்கியவா(ந்)தி!

2. ப்ளாக்பெரியை ‘கண்டுபிடித்த’ ஜான் மகயின்; கணினியே பயன்படுத்த தெரியாது என்னும் ஜான் மகயின்: எந்த மெக்கயின் உங்களைக் கவர்கிறார்?

ப்ளாக்பெரி ஜான் மெகயின் தான்.பொண்டாட்டிகளின் தொல்லைகள் இல்லாமல் கில்மா மேட்டர்களின் மெயில் படிப்பதையே வேலை என சொல்லி ஜம்பம் அடித்துக் கொள்ளலாம்.

3. சிண்டி மெகயின் & மிஷேல் ஒபாமா: யார் நல்ல பேச்சாளர்?

பேச்சாளரை விட்டு தள்ளுங்கள். சாரா பேலினின் நீச்சலுடை வீடியோ யூ ட்ப்யூல் இருக்கிறதா ?

4. குடியரசு, ஜனநாயக கட்சிகளை மட்டும் வைத்துக் கொண்டு என்ன பெரிய அரசியல் நடத்துகிறது அமெரிக்கா? சோஷலிச, கம்யூனிச, இந்திராயிச, பெரியாரிய, அண்ணாயிச, திராவிட, சமத்துவ அரசியல் தெரிவு/தெளிவுகள் இல்லாமல் உப்புச் சப்பில்லாத அரசியல்தானா? (கேள்வி உபயம்: ஸ்ரீதர் நாராயணன்)

இல்லை அமெரிக்காவிலும் இசங்கள் உண்டு.

வால் மார்டிச, மெக்டோன்லாடிச, கூகிளச, ஆப்பிளச அரசியல் பின்நவீனத்துவ சண்டைகளும், அதன் தெரிபுகளுன் ஊடே ஜார்ஜ் வாஷிங்கடன் கண்ட கனவு வில் சும்தின் இடது தோள்பட்டையிலும், 50 செ ன் டின் நா உச்சரிப்பிலும், இன்ன பிற ஜனங்களின் கண்டுக்கொள்ளாத இடத்தில் குத்தப்பட்ட டாட்டூவுமாக கன ஜோராக தான் இருக்கிறது.

5. தற்போது நடக்கும் பொருளாதாரப் பிரச்சினையினால் திடீரென்று அமெரிக்க தேர்தல் முறை மாற்றியமைக்கப்படுகிறது. தமிழ்நாட்டு நடிகரை ஜனாதிபதியாக்க முடிவெடுக்கிறார்கள். எவர் பொருத்தமானவர்? ஏன்?

கேள்வி பாஸ் ஆன் டூ இட்லிவடை 🙂

இரு வாலிபர்கள்: புகைப்படக்காரர்களும் ஓவியர்களும்

சாரா பேலின் கலந்து கொண்ட கூட்டத்தில் கிடைத்த புகைப்படம்:

சாரா பேலின் ஆதரவாளர் இருவரின் உற்சாக கரகோஷம்:

Jean-Honore Fragonard: The Swing

This picture became an immediate success, not merely for its technical excellence, but for the scandal behind it. The young nobleman is not only getting an interesting view up the lady’s skirt, but she is being pushed into this position by her priest-lover, shown in the rear.

நன்றி: ஃபிலி.காம்

புகைப்படம்: ஏ.பி | யாஹூ

அமெரிக்காவில் தேர்தல் தில்லுமுல்லு – மெகயினை வெல்லவைக்கும் சூட்சுமம்

அமெரிக்க அதிபர் தேர்தல் 50 மாகாணங்களிலும் நடந்தாலும் சில இடங்கள் அதி முக்கியத்துவம் வாய்ந்ததாக அறியப்படுகிறது.

எடுத்துக்காட்டாக, நியு யார்க் மாநிலத்தில் ஜான் மெகயின் வெல்வதற்கு வாய்ப்பே கிடையாது. அதே போல் அரிசோனாவிலோ டெக்சாஸிலோ பராக் ஒபாமா ஜெயிப்பதற்கு எந்தவித முகாந்திரமும் இல்லை.

ஆனால், இரு கட்சி வேட்பாளர்களும் சற்றேறக்குறைய சமமாக இருக்கும் மாநிலங்களில் பிரச்சாரம் சூடாக நடக்கிறது. அவற்றில் ஆறு மாநிலத்தில் வாக்காளர் அடையாள அட்டை தருவதற்கு முரண்டு பிடித்திருக்கிறார்கள்.

இளம் ரத்தத்தைக் கவர்வதில் ஒபாமா முன்னணியில் நிற்கிறார்.

தற்போது ஆயிரக்கணக்கானவர்களை வாக்களிக்க விடாமல் தடுப்பதன் மூலம், இந்த மாநிலங்கள் ஜான் மெகயினுக்கு கிடைக்கும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.

சோஷியல் செக்யூரிட்டி அட்டையும் சொந்தப் பெயரும் ஒற்றுமையாக இருப்பது பிரம்மப்பிரயத்தனம். உங்கள் பெயரை பாபி ஜிண்டால் என்று மாற்றிக் கொண்டால், சோஷியல் அட்டையில் சில சமயம் தவறுதலாக ஜிண்டால் பாபி என்று மாற்றி உல்டாவாக்கி விடுவார்கள். அல்லது பாபியை முழுதாக்கி ராபர்ட் ஆக்கி அச்சிட்டிருப்பார்கள்.

ஓட்டுநர் உரிமத்துக்கு பதிலாக சோஷியல் செக்யூரிட்டி எண் கேட்பதால் இந்த மாதிரி தவறு நிகழ்ந்தவர்கள் அனைவருக்கும் ஜனநாயக உரிமை மறுக்கப்படும்.

பிரச்சினை எழுந்துள்ள மாநிலங்கள்:

  1. கொலராடோ – Colorado,
  2. இந்தியானா – Indiana,
  3. ஒஹாயோ – Ohio,
  4. மிச்சிகன் – Michigan,
  5. நெவாடா – Nevada
  6. வட கரோலினா – North Carolina

நன்றி: வாக்காளர் பட்டியலில் நடக்கும் மாற்றங்கள்நியு யார்க் டைம்ஸ்

முழுவதும் வாசிக்க: States’ Actions to Block Voters Appear Illegal – NYTimes.com

மெகயின் பக்கமும் குற்றச்சாட்டுகளை வீசியிருக்கிறது.

ஒருவரையே பன்முறை வாக்களிக்க வைக்கும் திட்டங்களில் ஜனநாயகக் கட்சி இறங்கியுள்ளது என்கிறார்கள்: VOTE-FRAUD-A-GO-GO – New York Post: “ACORN has been implicated in voter-fraud schemes in 15 states – including Ohio, from where The Post’s Jeane MacIntosh reports today that a Board of Elections investigation has unearthed evidence of widespread voter fraud.

Two voters told MacIntosh they had been dragooned by ACORN activists into registering several times – one reporting having signed up ’10 to 15′ times.”

Related

India Films to Indie Movies – Meme

முதலில் நாகார்ஜுனன் பதிவு. அதன் தொடர்ச்சியாக பிரகாஷ் மீம் வித்திட்டிருக்கிறார்.

1 – அ. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்?

ஐந்து வயதில் இருந்து ஓரளவு நினைவில் உள்ளது.

1 – ஆ, நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா?

ப்ரியா.

1 – இ. என்ன உணர்ந்தீர்கள்?

  • பெண்கள் சினிமாவில் நுழைந்தால் ஆபத்து பின்தொடரும்.
  • ஸ்ரீதேவி நீச்சலுடை.
  • எவராவது கடத்தி சென்றுவிட்டால் குடும்பப் பாட்டு கற்றுவைத்துக் கொள்ளவேண்டும்.

2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?

தமிழ்: தசாவதாரம் (ஆங்கிலம்; வால் – ஈ)

3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?

கடைசியாக முழுமையாகப் பார்த்த படம் ட்யூப் தமிழ் வலையகத்தில் – அஞ்சாதே.

ஆனால், மிக சமீபத்தில், பாதி பார்த்த நிலையில் விட்ட படங்கள் தாக்கத்தை நிறையவே கொடுத்தது.

  • அறை எண் 305இல் கடவுள் – மகாமக கொடுமையான நாடகத்தனம்
  • அன்பைத் தேடி – எத்தனையோ பழைய படங்களை புத்துருவாக்கம் செய்யும் நிலையில் இந்த premise நன்றாக இருந்தது. ஏதாவது கற்பனையில் சஞ்சரித்து நிஜத்தைக் கோட்டை விடும் நாயகன் சிவாஜி. (குழந்தை நடிகை) இந்திரா (காந்தி) & நாயகன் (ம.கோ.) ராமுவையும் கோர்த்து அரசியல் கிண்டல் செய்யும் சோ.
  • எவனோ ஒருவன் – சுவாரசியமான அறச்சீற்றம்

4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா

எல்லோரும் ‘அவள் அப்படித்தான்‘ என்கிறார்கள். ஆனால், என் வாழ்வை திசை திருப்பக் கூடிய சம்பவத்தை ‘அவள் அப்படித்தான்’ நிகழ்த்தியது.

குழந்தையாக இருந்தபோதே ‘எது கலைப்படமோ அதைச் சொல்லி ஒப்பேத்தலாம்’ என்னும் சுபாவம் innate ஆக அமைந்திருக்க வேண்டும். 1979ஆம் ஆண்டு குழந்தைகளின் ஆண்டாக கொன்டாட்டப்பட்டது. என்.எஃப்.டி.சி ஆதரவில் படம் எடுக்க, சென்னை தூர்தர்ஷனில் audition வைத்தார்கள். நானும் சென்றிருந்தேன்.

குடிகாரனாக, பிச்சைக்காரனாக, ஊமையாக எல்லாம் சிவாஜித்தனமான செயற்கையில், அங்கு வந்திருந்த பிற சிறுவர்களைப் போலவே நானும் ஓவர் – ஆக்டிங்கில் மின்னினேன்.

லன்ச்-ப்ரேக்.

பிற்காலத்தில் ரகுவரனை நாயகனாகக் கொண்ட ‘ஏழாவது மனிதன்‘ உட்பட பல படங்களை இயக்கிய ஹரிஹரனின் குழுவோடு உணவருந்தும்போது எல்லோரிடமும் சும்மா கேள்வி கேட்டுக்கொன்டிருந்தார்கள்.

‘உனக்கு என்ன படம் இப்ப பார்க்கணும்? எது பிடிச்ச படம்?’

அன்னை ஓர் ஆலயம், ஆறிலிருந்து அறுபது வரை மாதிரி அப்போதைய படங்கள் அனைத்தையும் வெள்ளித்திரையில் பார்த்த வெறித்தனமான ரஜினி ரசிகன். அம்மாவின் ஒப்புதல் கிடைக்காதது அந்தப் படத்திற்கு மட்டும்தான். இத்தனைக்கும் முதல் எதிரி கமல் வேறு நடித்திருக்கும் படம். தயங்கவே இல்லை.

பட்டென்று சொன்னேன்: ‘அவள் அபப்டித்தான்’

குழுவினர் திகைத்துப் போனார்கள். அவர்கள் டீம் உழைத்த படம் அது. அங்கிருந்த பலரின் செல்லப்பிள்ளை அது. உடனடியாக எனக்கு சான்ஸ் கொடுத்தார்கள் என்பதை சொல்லவும் வேண்டுமோ?!

5-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா – அரசியல் சம்பவம்?

பெங்களூரில் உடனடியாக வருமா? கன்னடர்கள் கல்லெறிவார்களா?

5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா – தொழில்நுட்ப சம்பவம்?

இரத்தத்தையும் வன்முறையையும் வலிக்க வலிக்க காட்டுவது.

சாதாரண மனிதனின் ‘சத்ரியன்‘ ஆகட்டும்; விபத்தின் பின்விளைவுகளையும் அடிபட்டவர்களாக எண்ணிக்கையில் 167ஓடு 168ஆக கூடிப் போகும் ‘அன்பே சிவம்‘ ஆகட்டும்; ஏழையாக இருந்தால் என்னவெல்லாம் அமுக்கப்படும் என்று கோடிட்ட ‘கண் சிவந்தால் மண் சிவக்கும்‘ ஆகட்டும்.

6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

சிவகுமார் சுயசரிதை, தினத்தந்தி வரலாறு, தி ஹிந்து விமர்சனம், வலைப்பதிவு அசைபோடல், கனவுத் தொழிற்சாலை குறித்து வண்ணத்திரை முதல் வெகுசன ஊடகங்களில் வரும் கருத்து/கட்டுரை.

7. தமிழ்ச்சினிமா இசை?

  • திருப்புகழ் கூட டி.எம்.எஸ் பாடிய சினிமாப் பாட்டு – ஆன்மிகம்
  • எஸ்.பி.பி பாடிய பாடல் என்பதால் சங்கராபரணம் – கர்நாடக/சாஸ்திரீய சங்கீதம்
  • வேப்பமரத்து உச்சி பேய் முதல் கல்லை மட்டும் கண்டால் – சமூகம்
  • மன்றம் வந்த தென்றலுக்கு என்பதும் கல்யாண மாலை கொண்டாடுவதும் – வாழ்க்கை

என்று எல்லாவற்றுக்கும் இசையை நம்பியிருப்பதால், தனித்தீவுக்கு போக விதிக்கப்பட்டாலும் 80 ஜிபி ஐ-பாட் இல்லாமல் செல்லமாட்டேன்.

8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?

ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் நிறைய. சில ஸ்பானிஷ்.

  • When Harry met Sally – ஆங்கிலம்
  • City of God – வேற்றுமொழி (துணையெழுத்து உபயம்)
  • Mississippi Masala (தேசி – NRI)
  • Raju Ban Gaya Gentleman – இந்தி

9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

நேரடியாக நடித்த படம் – வாண்டட் தங்கராஜ்.

பிடித்ததா? படத்தில் நடித்த அனுபவம் மிகவும் பிடித்திருந்தது.

வேண்டும்போது கிடைக்கும் ஐஸ்-க்ரீம். சொகுசான படுக்கையறையும் விநோதமான விளக்குகளும் கொன்ட உல்லாச அறை வாசம். பழனி கோவிலுக்கு சென்றால் கூட மூலஸ்தானத்தில் இருந்து மூலவரின் சிறுதுளியே பெயர்த்துக் கொடுக்கும் ராஜ மரியாதை.

என்ன செய்தீர்கள்? ஆறு வயதுச் சிறுவன் தங்கராஜ் பழனிக் கூட்டத்தில் தொலைந்து போகிறான். கூத்தில் அனுமனாக வேடந்தரிக்கும் ‘வள்ளி’ நட்ராஜ், வில்லர்கள் கூட்டத்தை Home Aloneஆக ஏய்ப்பது, கடிந்து கொள்ளும் பெற்றோரின் அன்பைப் புரிந்து கொள்ளும் குழந்தை வேடம்.

சினிமா மேம்பட உதவுமா? வெகு இயல்பாக இருந்தது. பாடல் கிடையாது. மூன்று நாளின் சம்பவங்களை 90 நிமிடங்களில் பரபரவென்று தென் தமிழகமெங்கும் சுழன்று விரியும் படம். அலங்காரில் வெளியாகி இருந்தால் மேம்பட உதவி இருக்கும்.

10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

  • அருண் வைத்யநாதன் போன்ற தமிழ் சினிமாவின் நாகேஷ் குகூனூர்கள்
  • தொலைக்காட்சி, இணையம், செல்பேசித்திரை என்று விரியும் வழிகள்
  • குறைந்த பொருட்செலவும் பத்து நிமிடத்தில் உலகத்தின் கவனத்தை ஈர்க்கவைக்கும் நேர விரயமாகாத நுட்பங்களின் அணுக்கம்

11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

ஒரு வாரத்தில், ஒரு நாளில் எத்தனை நேரம் கேளிக்கைகாக ஒதுக்குகிறோம்? அதில் எவ்வளவு மணி நேரம் சினிமா ஆக்கிரமிக்கிறது?

காலையில் அலுவல் கிளம்பும் அவசரம்; செய்தித்தாள் வாசிப்பு. அதன் பின் பயணத்தில் பழைய ராஜா இசையுடன் மோனம். அலுவலில் பதிவுகள் கவனச்சிதறல்; இரவு உணவுக்குப் பின் ஒரு மணி நேர தொலைக்காட்சி. இதில் சினிமா எங்கே இருக்கிறது?

நண்பனின் கார் சாவி தூரத்தில் இருந்தே திறக்கும் வசதி கொண்டது. ஒரு நாள் என்னை அழைத்தான்.

“டேய், கார் ரிமோட் கீ வேலை செய்ய மாட்டேங்குதுடா! எப்படிடா இப்ப காரைத் திறப்பேன்?”

“நேராக காருக்கும் அருகில் செல். உன்னிடம் இருக்கும் சாவியை துவாரத்தில் இட்டு திறக்கலாம்.”

பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் என்னும் பேட்டரி தீர்ந்து போகலாம். சினிமா என்னும் மகிழுந்தைத் திறக்க கற்பனை என்னும் சாவி, ‘விழிகள் மேடையாம்; இமைகள் திரை’யாகுமா?’

இவர்கள் தொடரவேண்டும் என்று நினைக்கிறேன்.

வழிகாட்டலுக்கு மட்டுமாக சில விதிகள்:

  1. இசை, சினிமாப்படங்கள் போன்ற புள்ளிக்கு மூன்றுக்கு மேல் பட்டியல் போடுவதை தவிர்க்கலாம்
  2. புள்ளிவிவர ஆட்டத்தைத் தொடர ஐந்து பேருக்கு அழைப்பு விடுக்கவும்
  3. இந்த வழிகாட்டல்களை முற்றுமாக நிராகரிக்கலாம்; ஆனால், டக்குன்னு பதிவிடணும் 🙂

Ethanol: alternative fuel – Oil & energy TheKa

பதில்களை இந்த வாரம் வழங்குபவர் தெக்கிகாட்டான்

முந்தைய பகுதி 1 | இரண்டு

3. எத்தனால்: உணவுப்பண்டங்களின் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக இது சுட்டப்படுகிறது. இது கோளாறான கோட்பாடுதானா? இதன் பின்னும் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஒபாமாவிற்குத்தான் உங்கள் ஆதரவா?

சில மாதங்களுக்கு முன்னால் பூதகரமாக உணவு தட்டுப்பாடு சில நாடுகளில் ஏற்பட்டதை மறப்பதற்கில்லை. ஒபாமாவே இந்த எத்தனால் எரிபொருள் தயாரிப்பை தனது மாநிலத்தில் அதிகமாக சோளம் விளைகிறது என்கிற மற்றொரு காரணத்திற்காகவும்தான் இதனை ஆதரிப்பதாக ஒத்துக்கொண்டுள்ளார்.

மாற்று எரிபொருள் கண்டுபிடிப்பில் அதிக ஆர்வம் குடியரசுக் கட்சிக்காரர்களை விட ஜனநாயக கட்சிக்காரர்களுக்கு அதிகமே உண்டு என்பதில் இந்த அலாஸ்கா எண்ணெய் தோண்டுதலுக்கு எதிர்ப்பு பல வருடங்களாக ஜனநாயக கட்சி தெரிவித்து வருவதிலையே தெரிய வரும். இந் நிலையில், ஆரம்ப கட்டத்தில் பெருமளவில் எத்தனால் ஊக்குவிப்பு இது போன்ற தானியங்களை வைத்து நிகழ்த்துவதாக அமைந்தாலும் போகப் போக மாற்றுத் தாவர இனங்களைக் கொண்டு உற்பத்திக்க முடியும், உணவுக்கு பயன்படும் தானியங்களை பயன்படுத்தி எத்தனால் தயாரிப்பிலிருந்து விலகி.

ப்ரேசில் ஒரு காலத்தில் இது போன்று ஃபாசில் ஃப்யோலை நம்பித்தான் காலத்தை தள்ளிக் கொண்டிருந்தது, ஆனால், இன்றைய நிலையோ முழுக்க முழுக்க எத்தனால் எரிபொருளில் தன்னிறைவு அடைந்துவிட்டதாகவே தோணச் செய்கிறது. தன் நாட்டிற்கு எஞ்சிய விவசாய நிலங்களை உணவு உற்பத்திக்கு பயன்படுத்தியது போக எஞ்சியுள்ளவற்றில் முழுக்கவுமே கரும்பு பயிரிட்டு தன் நாட்டிற்கு தேவையான எரி பொருளை உற்பத்தித்து கொள்கிறது இன்று.

இன்று உடனடியாக வேறு எது போன்ற மாற்று எரிபொருளும் தனது பார்வைக்கு எட்டாத வண்ணம் இருக்கும் பொழுது, இது போன்ற கொஞ்சமே உணவு பயன் பாட்டிற்கு இருக்கும் பண்டங்களை சுழற்சி செய்து இயற்கையுடன் சற்றே ஒத்து இருப்பது உணவு பற்றாக்குறையைத் தாண்டி நலம் பயக்கலாம்.

இருப்பினும் சாப்பாட்டிற்கு பயன் படும் உணவு பொருட்களை தட்டுப்பாட்டு நிலைக்குத் தள்ளிவிட்டுவிட்டு மும்முரமாக எத்தனால் தயாரிப்பை முடிக்கி விடுவதில் எனக்கு அவ்வளவு உவப்பு இல்லை. இருந்தாலும், கடலில் தோண்டுதல், கையே வைக்கக் கூடாத ஆர்டிக், அண்டார்டிக் போன்ற கண்டங்களில் எண்ணெய்க்காக தோண்டுவது என்பதெல்லாம் ஒட்டு மொத்த உலத்தின் இயற்கை சமநிலையை விரைந்து குழைப்பதாகத்தான் அமையும்.

ஆக மொத்தத்தில், முரட்டுத்தனமான கடல் மற்றும் அலாஸ்கா தோண்டுதலைக் முடிக்கி விடுவதைக்காட்டிலும் மாற்று எரிசக்தி கண்டுபிடிப்பில் ஓபாமா அதிக முதலீடு பண்ணுவேன் என்று கூறுவது நல்ல விசயமே.


யாரைப் பார்த்தால் அரசர் போல் இருக்கிறது?

ரேகன் போன்ற சினிமா நடிகர்களின் கவர்ச்சியும் உயரமும் கென்னடியின் ஹீரோ அடையாளமும் க்ளின்டனின் காந்த உருவமும் அவர்களின் வெற்றியில் முக்கிய பங்கு வகிக்கும்.

பெரும்பாலான அமெரிக்கர்கள் ஆஜானுபாகுவானவர்கள். அவர்களுடன் இரயிலில் பயணம் செய்யும்போது என்னைப் போன்ற போஷாக்கான இந்தியர்களே ஸ்னோ வைட்டின் சித்திரக்குள்ளர் போல் காட்சியளிப்போம்.

இப்படிப்பட்டவர்கள் பராக் ஒபாமாவின் ஒடிசலான தோற்றத்தோடு அடையாளம் காணமுடியுமா?

அந்தப் பக்கம் சங்கர்தயாள் சர்மா போல் படிகளில் ஏறி இறங்க சிரம்ப்படும் போர்க்காயங்களோடு வாழும் ஜான் மெகயின். அவரை இளைய தலைமுறை எவ்வாறு பார்க்கும்?

சதா சர்வகாலமும் தொலைக்காட்சியும் யூ-ட்யுபும் இருக்கும் இன்றைய காலகட்டத்தில் நடை, உடை, பாவனை, ஆகிருதியின் பங்கு என்ன?

எப்படி உயரம் தலைமையை அடைய உதவுகிறதோ அதே அளவு பருமனும் உதவுகிறது என்று தோன்றுகிறது. பாருங்களேன் கடந்த காலத்தை.

நன்றி: Op-Chart – Op-Chart – The Measure of a President – Interactive Graphic – NYTimes.com

Jimmy Carter’s height. He is 5 feet 9 ½ inches tall, not 6-foot-1. In addition, the measurements for Thomas E. Dewey and John Davis were reversed: Dewey was 5-foot-8 and 160 pounds, while Davis was 6 feet and 190 pounds.

தலையைக் குனிதலும் முதுகைத் திருப்பிக் கொள்ளுதலும்

குடியரசுக் கட்சி வேட்பாளர் ஜான் மகயினுக்கும் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் பராக் ஒபாமாவுக்கும் இடையே இரண்டாவது தருக்கம். இதுவும் நடந்து முடிந்த முதல் விவாதம் போலவே இருந்தது.

அதிரடி மச்சான் கார்னர்:

மெக்கயின்: “நீங்கள் வீடு வாங்கும்போது வீட்டின் விலை இரண்டு லட்சம். தற்போதைய பொருளாதாரச் சரிவினால் வீட்டின் மதிப்பு ஒரு லட்சமாகக் குறைந்துள்ளது. நீங்கள் ஒரு லட்சம் மட்டும் கடனாகக் கட்ட ஆரம்பித்தால் போதுமானது”

என் கருத்து: இதற்கு எவ்வளவு நிதி ஒதுக்க வேண்டும்? இதனால் வீட்டு மனைகளின் விற்பனை நினைத்துப் பார்க்க முடியாத வீழ்ச்சி அடையாதா? அதன் தொடர்ச்சியாக பங்குச்சந்தையும் வீழுமே?

நான் உங்க வீட்டுப்பிள்ளை கார்னர்:

ஒபாமா: 700 பில்லியன் டாலர் மீட்பு மசோதாவினால் நடுத்தரவர்க்கத்தினருக்கு என்ன நன்மை என்பதை சொன்னார். வங்கிகளிடம் வைப்பு நிதி இல்லாத கதையை எளிமையாக சாதாரண பொதுமக்களும் விளங்கிக் கொள்ளுமாறு கதையாக்கினார்.

எ.க.: நடந்ததை நன்றாகத்தான் விளக்குகிறார். பேராசிரியர் ஆயிற்றே!

தர்ம அடி கார்னர்:

மெக்கயின்: “அமெரிக்காவின் இன்றைய நிதிநிலை தட்டுப்பாட்டுக்கான மூல காரணம் ஃபேனி மே மற்றும் ஃப்ரெடி மாக் திவாலனதில் ஆரம்பித்தது. அவர்களின் அதிகாரிகளிடம் மாறாப்பற்றும் விசுவாசமும் உடையவர் ஒபாமா.”

எ.க.: நீங்களும் ஏதோ தேர்தல் பிரச்சாரத்திற்காக பணம் பெற்றுக் கொண்டீர்களே. கூட்டிக் கழித்து பார்த்தால் இரண்டும் ஒன்றுதான் என்று ஒபாமா பதிலடிக்கு மறுப்பு ஏதேனும் உண்டா?

ஏழையின் சிரிப்பில் கார்னர்:

ஒபாமா: “நிறுவன முதலாளிகளின் சம்பளத்தைக் குறைப்பேன். லட்ச லட்சமாக சம்பாதிப்பவர்களின் வரியை உயர்த்தி பாட்டாளிகளின் வரிச்சுமையைக் குறைப்பேன்”

எ.க.: மெகயின்தான் மூச்சுக்கு மூவாயிரத்து நானூற்றியெட்டு தடவை வருமான வரி… வருமான வரி! என்று உச்சாடனம் ஜெபித்தால், நீங்களாவது அவரை வேறு திசையில் அழைத்துச் செல்லுமாறு விவாதிக்கக் கூடாதா?

கேனத்தனமான கேள்வி கார்னர்

விவாதத்திற்கு வழித்துணையாக இருந்த டாம் ப்ரகாவ் கேட்டார்: ‘ருசியா கெட்ட நாடா? நல்ல நாடா? ஆமாம் என்றால் மண்டை ஆட்டவும். இல்லை என்றால் நோ சொல்லவும். வேறு சொல்லக்கூடாது’

எ.க.: இவர்கள் இருவரும் பச்சிளம் பாலகர்களா? இந்த மாதிரி ஒன்றுக்கிருக்க வேண்டுபவர்கள் எல்லாம் ஒன்றாம் எண்ணைக் காட்டுக என்று கேட்பதற்கு 😦

டீச்சர்! இவன் என் பல்ப்பத்தை எடுத்துக்கிட்டான் கார்னர்:

மெக்கயின்: “சிகாகோ கோளரங்கத்திற்காக நிதி ஒதுக்கீடு செய்து கொண்டார் ஒபாமா.”

எ.க.: எக்ஸான் – மோபிலுக்கு வரிவிலக்கு அளிப்பதை விட சிரச்சேதம் செய்யுமளவு மோசடியா என்ன அது?

ஒன்று, இரண்டு மூன்று என்று வரிசைப்படுத்தும் கார்னர்:

ஒபாமா: “உங்க காருக்கு பெட்ரோல் போட எவ்வளவு பணம் செலவழிகிறது? முதலில் அதை கவனிப்பேன். அடுத்து உங்கள் குழந்தைக்கு உடம்பு சரியில்லை என்றால் மொத்த சொத்தையும் பிடுங்கும் மருத்துவத்தை சீர் செய்வேன். மூன்றாவதாக, தற்போதைக்கு ஓரளவு பரவாயில்லையாக இருக்கும் சேமநலநிதி.”

எ.க.: சாவதார கமல் பத்து வேடம் போட்ட மாதிரி மெகயின் எல்லாவற்றையும் நான் பார்த்துக்குவேன் என்று வசனம் பேச முடியுமா?

ஆடை பாதி கார்னர்:

ஜான் மகயினின் மனைவி நீல நிற ஆடையும் பராக் ஒபாமாவின் மனைவி சிவப்பு நிற ஆடையும் அணிந்திருந்தனர்.

எ.க.: தமிழ்நாட்டு அரசியலில் திமுக மகளிரணி பச்சை சேலையும் ஜெ. பேரவை மஞ்சள் சால்வையும் அணிந்து வர முடியுமா?

டாக்சி! டாக்சி! (அ) முஸ்தபா முஸ்தபா கார்னர்:

மெக்கயின்: பத்தொன்பது தடவை ஜான் மகயின் ‘மை ஃப்ரெண்ட்’ துணைக்கழைத்தார்.

எ.க.: வருடத்திற்கு 250,000 டாலருக்கு மேல் சம்பாதிக்கும் அனைவருக்கும் மகயின் ‘மை ஃபிரண்ட்’

கம்ப்யூட்டர் கார்னர்:

ஒபாமா: “கணினிப் புரட்சி போல் அடுத்த யுகப் புரட்சிக்கு வித்திடுவேன். பசுமைப் புரட்சி மூலம் ஐந்து மில்லியன் பேருக்கு வேலைவாய்ப்பு உண்டாக்குவேன். மாற்று எரிபொருளில் முதலீடு செய்வதால் எண்ணெய் மீது இருக்கும் மோகமும் மத்திய கிழக்கு நாடுகளிடம் மயங்கிக் கிடக்கும் அடிமைத்தனமும் விட்டு தூர ஓடும்.”

எ.க.: சண்டைக்குப் போனால்தான் அமெரிக்கா என்பது மாறி, சுற்றுச்சூழல் பாதுகாவலன் அமெரிக்கா என்று மாத்திடுவீங்க போலிருக்கே 🙂

என் கேள்விக்கு என்ன பதில் கார்னர்:

மகயினிடம் கேட்க மறந்த கேள்வி: ஒபாமாவிடம் அவர் கேட்ட மாதிரி அவருக்கு மட்டும் இதற்கெல்லாம் பணம் எங்கிருந்து குதிக்கும்?

ஒபாமா கேட்க மறந்த கேள்வி: மகயின் சோஷியல் செக்யூரிட்டியை பங்குச்சந்தையில் இட்டு தனியார்மயமாக்கப் போவதாக விளம்பரம் செய்வதைப் போல் நேரிலும் விவாதித்து தெளிவாக்கி இருக்கலாமே?

ஒருவரியில் எ.க. கார்னர்:

‘டாம்! டாம்! ஒரேயொரு நிமிஷம் பேசிக்கறேன் டாம்!’: வகுப்பில் கையைத் தூக்கும் சுட்டி மாணவர் ஒபாமா

‘நீ கேட்ட கேள்விக்கு நான் மட்டுமாவது உரிய பதில் தருகிறேன் டாம்!’: அலுவலில் முந்திரிக்கொட்டையாக குதிக்கும் மெகயின்

ஒபாமாவை மெகயின் எவ்வாறு சித்தரிப்பதாக கருதினார்: பச்சப்புள்ள (Green Behind the Ears)

ஒபாமாவை மெகயின் எவ்வாறு சித்தரித்தார்: அது (That One)

மெகயினை மெகயின் எவ்வாறு சித்தரித்துக் கொள்கிறார்: வழுக்கையை ஒப்பேத்த சவுரி வேண்டும் சராசரி (hair transplants)

குற்றஞ்சாட்டப்பட்டபோது தலையைக் குனிந்தவர் – ஒபாமா

தர்மசங்கடமான தகவல் சுட்டப்பட்டபோது முதுகைத் திருப்பிக் கொண்டார் – மெகயின்

இருவருமே கிளிப்பிள்ளை போல் சென்ற தடவை ஒப்பித்ததை மீண்டும் பரிமாற, மீண்டும் மெகயினே மிடுக்குடன் ராஜநடையில் மனதையும்; கம்பீரமான உரையில் ஜனாதிபதித் தோரணையையும் நிரூபித்திருக்கிறார்.

பெட்டர் லக் லாஸ்ட் டைம் ஒபாமா!

உடல்நல மருத்துவம் – ஒபாமா & மெகயின் திட்ட ஓப்பீடு

உடல்நலம்/சேமநிதி காப்பீடு (Health care/Insurance) – பத்மா அர்விந்த் தொடர்ச்சியாக

நன்றி: Comparing healthcare plans – Boston.com

மேலும் வாசிப்புக்கு:

1. CJR: Twelve Questions About Health Care for Tonight’s Debate: “There’s more to talk about than taxing benefits”

2. Worlds apart on healthcare – The Boston Globe: “Obama’s plan is like the new Massachusetts universal coverage law with one exception”

3. McCain plan may cost Northeast – The Boston Globe: “John McCain’s healthcare plan would bring a dramatic change to the existing system: People would get a flat tax credit worth as much as $5,000 instead of the tax break on the insurance they now get at work, allowing them more flexibility to buy insurance on their own.”

தொழில்நுட்ப பயன்பாடு x ஏழை முன்னேற்றம் x வருங்கால சுற்றுச்சூழல் பாதுகாப்பு

The waste-pickers of Delhi, India, forage through garbage for anything that can be recycled into cash. A new incinerator that turns trash into electricity will change all that. Because it will reduce the amount of methane off-gassed by landfills, it will generate carbon credits under the Kyoto Protocol. But the incinerator will also emit dioxins, mercury, heavy metals, and fly ash–and put thousands of impoverished waste-pickers out of business.

Thekkikattan: Carbon credits, Obama & Republicans

பதில்களை இந்த வாரம் வழங்குபவர் தெக்கிகாட்டான். (முந்தைய பகுதி)

2. ‘இந்தியா போன்ற நாடுகள் தொடர்ந்து சுற்றுச்சூழலை மாசுபடுத்துகின்றன. அவற்றைத் தடுக்க ஆவன செய்யவேண்டும்’ என்றிருக்கிறார் ஒபாமா. கமல்நாத், மறைந்த மாறன் போன்றோர்கள் இப்படி செய்வது இந்தியா போன்ற வளரும் பொருளாதாரங்களுக்கு எத்தகைய சேதத்தை இத்தகைய கிடுக்கிப்பிடிகள் கொடுக்கும் என்பதை விவரித்துள்ளனர். ஒபாமா வலியுறுத்தும் carbon credits என்பது சாத்தியமானாலும் ஆப்பிரிக்காவிற்கு சல்லிசான விலையில் குப்பையை ஏற்றுமதி செய்யும் வித்தைக்கு இட்டுச்செல்லாதா? ஏழை நாடுகளிடம் இருந்து குறைந்த பேரத்தில் கரியமிலக் கழிவுகளை (தற்போதைய நிதிபேரம் போல்) வாங்கிவிட்டு, அமெரிக்கா தன்பாட்டுக்கு நச்சை உண்டாக்கும் திட்டத்திற்கு ஒபாமா ஆதரவுக்கரம் நீட்டுகிறாரா?

குடியரசு கட்சி அன்பர்கள் இந்த உலகச் சூடேற்றம் என்ற ஒன்றே புணைவுக் கதை என்ற ரேஞ்சில்தான் வைத்து உலக வர்த்தகத்தை வளர்த்து வருகிறார்கள்.

இயற்கையா அது பாட்டுக்கு தன் நிகழ்வுகளை நடத்திக் கொண்டிருக்கும் ஏற்கெனவே படமாக்கப்பட்ட ஒரு படச் சுருள் என்பதனைப் போன்றுதான் அவர்களின் இயற்கைசார் அறிவு என்பது எனது கருத்து. அது கண் கூடு எது போன்ற வாகனங்களுக்கு அவர்களின் வரி விலக்கு வழங்கும் மண்டை என்பதனைக் கொண்டு (ஒரு சமயத்தில் ஹம்வீ வாங்குபவர்களுக்கு வரி விலக்கு விதிக்கப்பட்டது…) காணலாம்.

இந்த நிலைமையில் உலகச் சூடேற்றம், க்ரீன் ஹவுஸ் வாயுக்களின் வெளிப்பாட்டைய் கட்டுப்படுத்தல் போன்றவைகளிளெல்லாம் அவர்களின் நிலைப்பாடு எதுவாக இருக்கும் என்பதும் யாவரும் அறிந்து கொள்ளும் வண்ணமாகத்தான் இருக்கும்.

வர்த்தகம் என்பது இருவழிச் சாலை என்று இங்கு மாசுக்களை உருவாக்கும் அத்தனை தொழிற்சாலைகளையும் சைனா, இந்தியா, வியாட்நாம், மொக்சிகோ போன்ற வளரும் நாடுகளுக்கு தள்ளிவிட்டுவிட்டு அங்கு காற்று, நீர் மற்றும் நிலம் போன்றவைகளை கட்டற்ற மாசுக்களின் மூலமாக நிகழ்த்த விட்டு வேடிக்கை பார்க்கும் ஒரு கட்சியாகத்தன் இருக்கிறது இந்தக் குடியரசுக் கட்சி. ஏனெனில் அவ் நாடுகளில் அப்படி ஒரு மாசுக் கட்டுப்பாடு வாரியமே விலை கொடுத்து வாங்கப்படும் நிலையிலிருப்பதனால்தான், அங்கே அவ்வாறு அத்தனை மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகளும் தள்ளி விடப்படுகின்றன.

இதற்கு முத்தாய்ப்பாக கியோட்டோ ஒப்பந்தத்தில் கையெழுத்திடாமல் ஒதுங்கிக் கொண்டதும், மற்றுமொரு குடியரசுக் கட்சிக்காரர்களின் இயற்கைசார் அறிவின் பின்னடவை காட்டும் காட்டுத் தனமன்றி வேறென்னவாக இருக்க முடியும்.

இந்நிலையில், ஓபாமாவின் இந்த கார்பன் க்ரீடிட் திட்டம் சற்றே ஆறுதல் அளிக்கும் வகையிலேயே உள்ளது. இரும்புக்கரம் கொண்டு ஏதோ ஒரு வகையில் தொழிற்சாலைகள் வெளியேற்றும் கரியமிலா வாயுவை ஒரு குறிப்பிட்ட அளவிற்கு கட்டுப்படுத்துவதின் மூலம் உலகச் சூடேற்றத்தின் தாக்கத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரக் கூடிய சாத்தியக் கூறுகள் அதிகம்தானே.

இதன் மூலமாக சில குளறுபடிகள் கார்பன் க்ரீடிட்களை வாங்குவது, கொடுப்பதின் மூலம் நடந்தாலும், அந்த ப்ரக்ஞையுணர்வே மேற்கொண்டு நடவாமல் இருக்க கட்டுபடுத்தப்படலாமென்று தோன்றுகிறது. அவ்வாறு க்ரீடிட் பேரத்தின் மூலம் வாங்கும் கம்பெனிகள் பெரும் அளவில் நஷ்டமடைய நேரும் பட்சத்தில் மேற்கொண்டு கழிவுகளை கட்டுப்படுத்தத்தான் விளையுமே தவிர மேற்கொண்டு பேரத்தின் அடிப்படையில் நஷ்டமடைய முன் வர மாட்டார்கள் என்றே கருதுகிறேன்.

…Under a cap-and-trade plan, companies that produce carbon dioxide and other greenhouse gases receive or buy credits that give them the right to emit a certain amount. Companies that emit less carbon than their credits allow can profit by selling any excess credits on the open market, while those that exceed their emission allowance have to make up the difference or face heavy fines…

3. எத்தனால்: உணவுப்பண்டங்களின் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக இது சுட்டப்படுகிறது. இது கோளாறான கோட்பாடுதானா? இதன் பின்னும் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஒபாமாவிற்குத்தான் உங்கள் ஆதரவா?

நாளை…