Monthly Archives: பிப்ரவரி 2013

Haruki Murakami’s After the Quake: Short Story Collection: Book Intro

ஹரூகி முரகாமி எழுதிய சிறுகதை தொகுப்பை வாசித்தேன். ஜப்பானில் நடந்த நிலநடுக்கத்திற்கு பின் நிகழ்ந்த சம்பவ மாந்தர்களை அறிமுகம் செய்கிறது. கூடவே கொஞ்சமாய் தொட்டுக்க பயங்கரவாத செயலான நச்சுப்புகை கொலைகளையும் வைத்துக் கொள்கிறது.

திருமணமான பிறகு நிலவும் வெறுமை; பதின்ம வயது வெறுமை; எல்லா கதைகளிலும் ‘எதற்காக ஓடுகிறோம்? என்ன வாழ்க்கை இது? என்னத்த செஞ்சு… என்னத்த பண்ணி…’ என்று திடீரென்று விட்டேத்தியானவர்களின் நிலையை விவரிக்கிறது. ஏன் அவர்கள் இப்படி ஆகிப் போனார்கள் என்பதை கொஞ்சம் தொட்டுக் காட்டி, வாசகனுக்கே பாக்கியை விட்டுவிடுகிறார்.

அமைதியான ஆரம்பம்; நேர்க்கோட்டில் கதை பயணித்தாலும், எல்லாவற்றையும் விளம்பாத விவரிப்பு. சூட்சுமமாக முடிக்க வேண்டும் என்பதற்காக வலிந்து திணிக்காத முடிவுகள்.

பூகம்பமும் தீவிரவாதமும் நம்முடைய இயலாமையை உணரவைத்தாலும், உதவுவதும் தெனாவட்டும் நம்மை மீட்டெடுப்பது கதைகளின் அடிநாதம்.

தொகுப்பின் பெயர் ‘ஆஃப்டர் தி க்வேக்’

Steven Spielberg’s Lincoln Movie: Amendments, Wars and Elections

ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் எடுத்த ’லிங்கன்’ திரைப்படத்தை தியேட்டரில் பார்த்தேன். ‘லைஃப் ஆஃப் பை’ படத்திற்கு பிறகு பார்த்த படம். உணர்ச்சிகரமாக எடுத்து இருக்கிறார்.

குழந்தைகளுக்கு ஆங்காங்கே அலுப்பு தட்டலாம். ஆங்கிலம் ஓரளவு புரிகிற எனக்கு கூட சில இடங்களில் கவனக்குறைவினால் வசனம் புரியாமல் தவறவிட்டேன். துணை எழுத்து இல்லாமல் படம் பார்ப்பதை தவிர்க்கலாம்.

ஏற்கனவே கென் பர்ன்ஸ் எடுத்தது, பி.பி.எஸ். தொலைக்காட்சியில் வந்தது என நாலைந்து லிங்கன் பார்த்தாலும் ஸ்பீல்பெர்க் லிங்கன் வித்தியாசமானவர். அரசியல்வாதி. சமரசங்கள் செய்து சாதுரியமாக முன்னேற்றத்திற்கு உழைப்பவர்.

போர் என்றால் லட்சக்கணக்கில் பொதுமக்கள் சாவார்கள்; தலைவர்கள் சௌகரியமாக தப்பிப் பிழைப்பார்கள்; பொருளாதார காரணங்கள் இருக்கும் என்றெல்லாம் திரையில் காட்ட ஸ்பீல்பெர்க் வேண்டும்; ஆனால், ஐம்பது மாநிலங்களுக்கு 50 நட்சத்திரங்கள் என்று 36 மாகாணக் கொடி ஏற்றாத சறுக்கல்களுக்கும் ஸ்பீல்பெர்க் மேல் பழி போடவேண்டும்.

வெள்ளையர் மட்டுமே கறுப்பின் சமத்துவத்திற்கு போராடியதாக நிலை நிறுத்துவது படத்தின் மிகப் பெரிய குறை அல்ல; The Last King of Scotland, Blood Diamond, The Help என அது என்றென்றும் ஹாலிவுட்டின் தேய்வழக்கு.

Alice Munro: Too much happiness: Short Story Collection Intro

ஆலிஸ் மன்ரோ குறித்து பல முறை கேட்டு இருந்தாலும் முதன்முறையாக அவரின் சிறுகதைத் தொகுப்பில் சில கதைகளை வாசித்தேன். வழக்கம் போல் ‘டூ மச் ஹேப்பினெஸ்’ புத்தகத்தில் ஆங்காங்கே கிடைத்த சிலதை மட்டுமே படித்தேன்.

உரையாடல் இருக்கிறது. கரடு முரடான பல்லுடைக்கும் சிறுபத்திரிகை நடை கிடையாது. சமூகப் பிரச்சினைகள கூட த்ரில்லர் போல் எப்படி முடிக்கப் போகிறார் என்று எதிர்பார்க்க வைக்கிறது. விநோத மனிதர்களின் வித்தியாசங்களை நியாயப்படுத்தாமல், அவர்கள் தரப்பின் எண்ணங்களை விதைக்கிறது.

அறம் பாடாமல் அறம் எழுதுவது எப்படி என்றும் நேர்மையாக எழுதினால் அலுப்பு தட்டும் என்பதை உடைப்பது எப்படி என்றும் கிரிமினல்களின் வாழ்க்கையை விவரித்தால் ஒரு பக்கம் மட்டும் சொல்லாமல் மறுபக்கங்களையும் செண்டிமெண்ட் கலக்காமல் உணர்ச்சிகரமாக சொல்வதெப்படி என்றும் அறியலாம்.

Kamal’s விஸ்வரூபம் FAQ

அ) படம் எப்படி?
நல்லாருந்துச்சு. சுவாரசியமாப் போகுது.

ஆ) எது பிடிச்சிருந்தது?
பிராமணப் பொண்ணு சிக்கன் சாப்புடறது; முதல் சண்டைக் காட்சி; ஆப்கானிஸ்தான் லொக்கேஷன்

இ) என்ன இருந்திருக்கலாம்?
ஆண்ட்ரியாவுடன் டூயட்; கோடை கால ஆடை அணிந்த ஹீரோயின்; அப்புறமாய் கொஞ்சம் கதை

ஈ) குழந்தைகளைக் கூட்டிப் போலாமா?
செக்ஸ் வச்சுக்கறதுனா என்னன்னு கேப்பாங்க; கை வேறு கால் வேறா வருவதைப் பாத்து பயப்படலாம்

உ) இயக்குநர் கமலுக்கு எவ்வளவு மார்க்?
விருமாண்டி அளவு உணர்ச்சி இல்லை; ஹே ராம் அளவுக்கு சரக்கும் இல்லை. இருந்தாலும் ஃபோகஸ் இருப்பதால் எழுபது.

ஊ) இஸ்லாமியர்கள் ஃபீலிங் ஆகிறார்களே?
பனியில் நடந்தா பார்த்து நடங்க; அல்லது வழுக்கிரும்னு சொல்லுற மாதிரி, மார்க்கத்தில் பார்த்து நடக்க சொல்லுறாரோனு நெனச்சேன். அந்த மாதிரி அட்வைஸ் கூட இல்ல. டைட்டில் மட்டும் வலமிருந்து இடம் வருவது மாதிரி சின்னச் சின்ன நகாசு மட்டுமே.

எ) கார் சேஸிங் இருக்காமே?
அதற்கு பதிலா இன்னும் கொஞ்சம் கேரக்டர் டெவலப்மெண்ட் செஞ்சிருக்கலாம்.

ஏ) துப்பாக்கி, எந்திரன் – ஒப்பிடுக.
விஜய் படம் புத்திசாலித்தனம். ரஜினி படம் பிரமிப்பு. கமல் படம் இரண்டும் கலந்து வந்திருக்கணும்; ஆனா, டைரக்டர் பேச்ச கேட்கமாட்டாரே

ஐ) என்னோட அமெரிக்க நண்பருக்கு போட்டுக் காட்டலாமா?
இது தூய இந்தியருக்கு மட்டுமே ரசிக்கக் கூடியது. அவர்களுக்கு புதுசா எதுவும் சரக்கு இல்லை. போர்ன் ஐடெண்ட்டியும் ட்ராஃபிக்கும் பாக்குற கும்பலுக்கு விசுவரூபமெல்லாம் சரிப்படாது

ஒ) ஆக்டர் கமலுக்கு எவ்வளவு மார்க்கு?
உறுத்தாம வந்து போகிறார். தேய்வழக்காக வசனகர்த்தா சொல்லுறத கூட சகிக்க வைக்கிறார். முக்கியமா அந்த பயங்கரவாதி கெட்டப்புக்காகவே நூற்றுக்கு நூறு போடலாம்.

ஓ) நெஜத்தில் இப்படி எல்லாம் நடக்குமா?
தீவிரவாதிகளுக்கு புது புது ஐடியா எல்லாம் கொடுத்திருக்காரே

ஔ) “தூங்காத என் கண்ணில் துயில் உரித்த கண்ணன்… விதை இல்லாமல் வேர் இல்லையே’ போல் கவித்துவமாக சிந்தனை சொல்லுப்பா…

புறாவில் என்ன பாகுபாடு என்பது பயலாஜிஸ்டுக்குத்தான் தெரியும்; அது போல் மனிதனின் பிரிவுகள் அறிவியலாருக்கு மட்டுமே புலப்பட வேண்டும். புறா கோவில் மாடத்திலும் தங்கும்; அங்கிருந்து மசூதிக்கும் பறக்கும். நாயகனும் அவ்வாறே.

Vicky Donor: Hindi Movie Intro: Life as a Sperm donor after Marriage

இந்தியாவின் #1 மூலதனமான மக்கள்தொகை பிரச்சினையை இந்திப்படம் ’விக்கி டோனர்’ விவாதிக்கிறது. தில்லி டாக்டர்கள் தமிழக காளிமுத்துகள் போல் ரொம்ப காலமாகவே பிரபலம்.

விவாகரத்து ஆனவர்களை மருமகளாக ஆக்குவதில் பெற்றோர் காட்டும் பக்குவம்; திருமணங்களில் ஈகோவும் இனக்கவர்ச்சியும்; மன அழுத்தம் காரணமாக பாலியல் சிக்கல்; முதிர்கன்னியை மணப்பதால் மகப்பேறு இல்லாமை; கவலை இல்லா வாழ்க்கைக்கும் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கும் இடையே உள்ள paradox; தத்து எடுப்பதில் உள்ள அசூயை; ஆற்றல் மிகுந்த நல்ல விந்து கிடைப்பதில் உள்ள சிக்கல்; மரபணு சார்ந்து கிடைக்கும் பாரம்பரிய திறமையா அல்லது வளர்ப்பதின் மூலமே வெற்றித் திருமகனை உருவாக்க முடியுமா என்னும் விவாதம்…

இவ்வளவு விவகாரமான விஷயங்களை அலசினாலும், ரொம்பவே அலட்டிக்காமல், அதிகம் அழுவாச்சி சிந்தாமல் நகைச்சுவையுடன் எதார்த்தமாக சொல்லிச் சென்றார்கள். படத்தின் வெற்றிக்கு சேலம் சிவராஜ் – அன்னு கபூர் அவசியமான காரணம்.

Affirmative Action and Merit or caste or income based Reservation

அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதி சோனியா சொட்டமயார் தன் வாழ்க்கை வரலாற்றை எழுதி இருக்கிறார். புத்தக வெளியீட்டை ஒட்டி எல்லா ஊடகங்களிலும் பேட்டியும் நூல் அறிமுகமும் கிடைத்தது.

சக உச்சநீதிமன்ற நீதிபதியான கிளாரென்ஸ் தாமஸ் கருப்பர். சோனியா ஸ்பானிஷ் மொழி பேசுபவர். இருவருமே சிறுபான்மையினர். அஃபர்மேடிவ் ஆக்‌ஷன் எனப்படும் இடஒதுக்கீட்டினால் பயன் பெற்றவர்கள்.

ப்ரின்ஸ்டனில் படித்த காலத்தில் விருந்துக்கு அழைத்து இருக்கிறார்கள். அங்கே மேயர் இவருக்கு அறிமுகமாகிறார். முதன்முறையாக பார்த்தவுடன் கேட்ட கேள்வி: “நீ ஸ்பானிஷ் மொழி பேசுவதால்தான் உனக்கு சீட் கொடுத்தார்களா?”

பொறுமையாக பதில் சொல்கிறார். என்னுடைய SAT மதிப்பெண் இத்தனை. நான் சேவை செய்த நிறுவனங்கள் இவை. நான் பள்ளியில் வகித்த பொறுப்புகள் என்ன என்றெல்லாம் விளக்குகிறார். அவரின் பதில், “நானும் ஆயிரம் பேரிடம் இதே கேள்வியை இப்படி கேட்டு அவமானம் செய்ய நினைத்திருக்கிறேன். நீதான் முதன் முதலாக உன்னால்தான் நீ முன்னேறினாய் என்று விளக்கி இருக்கிறாய்”.

வாரிசு ஜெகன் மோகன் ரெட்டி அரசியலில் ஜாதியும் லஞ்சமும்

தெலுங்குப் படம் லீடர் பார்த்தேன். ‘முதல்வன்’ திரைப்படத்தின் இறுதி வசனமான ‘என்னையும் அரசியல்வாதி ஆக்கிட்டாங்களே’ கால்கோளாக வைத்து எழுதியிருக்கிறார்கள்.

ஆந்திரா என்றால் இரண்டு ஹீரோயின். இங்கும் உண்டு. ஒருவர் ‘மயக்கம் என்ன’ ரிச்சா கங்கோபாத்யா. புடைவையில் லட்சணமாக ஹீரோவிடம் ஏமாறுகிறார். கொஞ்சம் ஒல்லியாகக் கூட கேமிரா காட்டுகிறது.

சுகாசினிக்கு பெரிய ரோல். கோட்டா ஸ்ரீனிவாசாவும் அலட்டாமல் வந்திருந்தார்.

தமிழில் இப்படி துளி வெளிப்படையாக பேசினால் கூட சத்யராஜ் மட்டுமே நாயகன் கதாபாத்திரத்தை ஏற்று நடிப்பார்.

சுதந்திர மென்பொருள், ஆய்வுக் கட்டுரை, இலவச விடுதலை

ஆரன் ஷ்வார்ஸ் தற்கொலை வருத்தமும் கோபமும் பயமும் தருகிறது.

எம்.ஐ.டி. ஆய்வுகளை உலகிற்கு தர விரும்புகிறார். பல்கலைக்கழக பேராசிரியர்களின் மேட்டர்களை எல்லோரும் படித்து பயன்பெற விழைகிறார். ராமானுஜர் போல் தான் பெற்றதை உலகெங்கும் பரப்ப நினைக்கிறார். சந்தா கட்டி காசு கொடுத்தால்தான் வாசல் திறக்கும் என்பதை எதிர்த்தார்.

அதற்காக முப்பத்தைந்தாண்டு கடுங்காவல் தண்டனை. சில மில்லியன் டாலர் அபராதம் என்று தில்லி வெறியர்களை தாக்கும் பொதுசனம் போல் எம்.ஐ.டி. பல்கலையும் நடுவண் அரசும் வழக்கு தொடுக்கிறது.

இருபதுகளில் உள்ள ஆராய்ச்சியாளர் ஜெயிலுக்குப் போனால்… தற்கொலை செய்துகொண்டுவிட்டார்

மணக்கால் எஸ் ரங்கராஜன் – இசைக் கலைஞர் டாகுமெண்டரி

அம்ஷன் குமார் எடுத்த மணக்கால் எஸ் ரங்கராஜனின் ஆவணப்படம் பார்த்தேன்.

புகழுடன் பாடும் காலத்தில் எந்தவித ரெகார்டிங்கும் செய்யக்கூடாது என்பவரின் வாழ்க்கையை பதிவதில் உள்ள சிரமங்கள் புரிந்தது. கர்னாடக சங்கீதத்தின் நுட்பங்களை அறியாதவரும் பாடகரின் திறனை அறிந்துகொள்ளும் விதமாக இருந்தது.

இந்துஸ்தானி இசையின் நுட்பங்களை நுழைப்பது ஆகட்டும், ஒரே பாடலை தனது பாணியில் வித்தியாசமாவது இருக்கட்டும்… சாஸ்திரீய சங்கீதத்திற்கு லெக்சர் – டெமான்ஸ்ட்ரேஷன் இல்லாமல் அனுபவிப்பது எனக்கு சாத்தியம் இல்லை.

மணக்காலுக்கு நல்ல அறிமுகம்

வீராணம், வளர்ப்பு மகன் கல்யாணம் & வீரப்பன்

’நடுவில் கொஞ்சம் பக்கத்தைக் காணோம்’ ஏன் ஹிட் ஆனது?

இரு சாராருக்கு அந்தப் படம் பிடிச்சிருக்கும். செக்குமாடு வேலையில் ஓடும் நடுத்தர வயதினர் ஒரு இடைப்பட்ட காலகட்டத்திலேயே ஸ்தம்பிச்சு நின்னுட்டோம். அதை விட்டு வெளியே வரவேயில்ல. ரஜினி படம், (அ)திமுக ஆட்சி, டெண்டுல்கர் கிரிக்கெட்… இப்படியே தேங்கிட்டோம். இவங்களுக்கு ஹீரோவைப் பார்த்தா அப்படியே தங்களை பார்க்கிற மாதிரியே இருக்கு.

இன்னொரு சாரார்னு பார்த்தா அந்த நண்பர்கள் கூட்டம். தங்களை போராளிகளா உருவகிச்சு உலகை மாத்த நெனைக்கிறவங்க. கடுமையா முயற்சி எடுத்தாலும் எந்த பலனும் தராதவங்க. Efficent-ஆ இருப்பாங்க… ஆனா, effective-ஆ எதுவும் நடத்த மாட்டாங்க.

என்னை மாதிரி இவங்க ரெண்டு பேர் நடுவில் மாட்டிகிட்டு முழிக்கிற அந்த லேடி கேரக்டர்களும் இருக்கிறாங்க