Daily Archives: திசெம்பர் 25, 2008

What were the notable & forgettable Tamil Movies in 2008: Thamil Cinema

சென்ற வருட நினைவுகூர்தல்: Tamil Film Songs – Best of 2007 Movie Music | 2007 – பேசப்பட்ட தமிழ் திரைப்படங்கள்

இந்த வருடம் – தமிழ்ப்பதிவர்களின் விக்கி, வாக்கெடுப்பு: தமிழ்நாட்டின் டாப் 10 விஷயங்கள்

என்னுடைய திரைப்பட பட்டியல்:

பேயறைய வைத்த பத்து:

  1. அறை எண் 305இல் கடவுள் – மகாமக கொடுமையான நாடகத்தனம்.
  2. குருவி – ஆளுங்கட்சி தயாரித்தால் ப்ரொடக்ஷன் க்வாலிடி கியாரண்டி; படத்தின் க்வாலிடி பணால்.
  3. பீமா – டாம் க்ரூய்ஸ் மாதிரி ஆகிட்டு வருகிறார் விக்ரம். த்ரிஷாவைத் தேய்ச்சால் மட்டும் போதுமா?
  4. பழனி – குரங்கு கையில் பூமாலை என்றால் பழமொழி; பேரரசு கையில் படம் என்றால் அதே மொழி புதுசாயிடும்.
  5. உளியின் ஓசை – அமெரிக்க அதிபர்களுக்கு ஓய்வெடுத்தபின் அருங்காட்சியகமோ நூலகமோ வைப்பது பொழுதுபோக்கு; அதே போல் தமிழினத் தலைவருக்கு திரைவசனம் எழுதுவது கொடும்போக்கு.
  6. நெஞ்சத்தைக் கிள்ளாதே – நடிக்கத் தெரிந்த நடிகையை கொண்டு நல்ல தலைப்பை நாறடித்த அகத்தியன்.
  7. வல்லமை தாராயோ – தன்னைத்தானே மூத்தப் பதிவராக நினைத்துக் கொண்டு சூடான இடுகைக்கும் சொந்தக்காரராய் பாவித்து படுத்தியெடுக்கும் தமிழ்ப்பதிவராக ரோல் தேவைப்பட்டால் சொல்லுங்க; பார்த்திபன் வருவார்; அவர் வந்தாலே தானியங்கியாக அகம்பாவ நிறைகுடம் ரொம்பும்.
  8. வைத்தீஸ்வரன் – தன்னைத்தானே சவுக்கால் அடித்துக்கொண்டு காசு கேட்கும் கழைக்கூத்தாடிக்கு கிடைக்கும் காசு கூட அதிகமாக இருக்கும். சரத்திற்கு ஏன் இந்த மசாக்கிஸ்ட் மனப்பான்மை? சமத்துவமாக ‘அரசி’யில் நடிக்க வரணும்.
  9. பசும்பொன் தேவர் வரலாறு: இட ஒதுக்கீடு
  10. அய்யாவழி: இட ஒதுக்கீடு

கொசுறு: சக்கரக்கட்டி: காசிருந்தா சேமநல உண்டியலில் நிதியாக்குங்க; அருணாச்சலத்தில் ரஜினி செஞ்ச மாதிரி ‘செந்திலை’ இயக்குநராக வைத்து படமெடுக்கவா செய்யணும்?

விமர்சகரின் விருப்ப பத்து:

  1. காஞ்சிவரம் – அவசியம் பாருங்க.
  2. பூ – புஷ்பமாரி பொழிகிறது; ஆளுயர பூமாலை குவிகிறது. வாசம் இன்னும் மோப்பம் பிடிக்காததால் நோ காமென்ட்ஸ்.
  3. சுப்ரமணியபுரம் – Difference between a quality movie & exploitative film: ‘Revolutionary Road’ uses 50s backdrop to define its characters. இங்கே எண்பதுகளைக் காட்டி மயக்கி சாதா சொக்குகிறது.
  4. தசாவதாரம் – Bolt ஆங்கிலப் படத்தில் அசகாய சூரனாக நாய் தன்னைத் தானே கற்பனை செய்து கொண்டு உலாவும். கமலும் கேயெஸ் ரவிக்குமாரும் அந்த உலகநாயக நாய்க்குட்டியாக (கவனிக்க போல் அல்ல) சஞ்சரித்ததாக வித்தகப் பதிவர்கள் எழுதி மாய்ந்த படம்.
  5. வாரணம் ஆயிரம் – இரண்டு விமர்சனம் எழுதியிருக்கோம்ல 🙂
  6. அரசாங்கம் – ஐந்து வயதுக்குட்பட்டோருக்குத்தானே விஜய்காந்த் படம் எடுப்பார் என்னும் நம்பிக்கையை பொய்யாக்கி, பத்து வயது மிகாதோரும் புளகாங்கிதமடைந்தனராம்!
  7. வெள்ளித்திரை – தெலுங்கில் அசல் பார்த்த ‘ரசிகர்்’ மீண்டும் விஜய்/’ரீமேக்’ ரவியை சகித்துக் கொள்வார். ஆனால், இந்த மலையாளத்தில் பார்த்தவரின் அங்கசேஷ்டையும் கலாரசனையும் இருக்கே! என்னத்த சொல்லுவேன்?
  8. தனம் – அதிகம் பேசப்படாததை எடுத்தாண்டதற்கான பொலிடிகலி கரெக்ட் ஒதுக்கீடு.
  9. இராமன் தேடிய சீதை – அந்த பசுபதி பிட் இன்னொரு முழுப்படமா இருந்திருக்கலாம்.
  10. பொம்மலாட்டம் – ‘கல்லுக்குள் ஈரம்’ இயக்குநர் சிகப்பு ரோஜாக்களாக டிக்..டிக்…டிக்!?

ரசிகரின் ரசனைக்கு பத்து:

  1. அஞ்சாதே – மற்ற படம் எல்லாம் டெட்ராய்ட்டின் மும்மூர்த்தி அமெரிக்க ஆட்டோ நிறுவனங்கள் போல் தத்தி தத்தி நடக்கும் சாலையில் லம்போர்கினியாக ஊர்வலம் காட்டி மிரட்டியது.
  2. பிரிவோம் சந்திப்போம் – அமெரிக்காவில் மனைவியை இட்டாண்டு வந்திருக்கீங்களா? எங்கோ கிள்ளி, நெளியவைக்கும்.
  3. கண்ணும் கண்ணும் – நம்பமுடியாத விஷயங்களை நம்பக்கூடிய முறையில் நடைகோணாத பாணியில் சொன்னது.
  4. யாரடி நீ மோகினி – என்னுடைய மேனசரை நான் டாவடித்த ஞாபகம் வந்து ஒரே ஃபீலிங்ஸ் ஆஃப் லோக்கல்ஸ் ஆயிடுச்சுபா!
  5. சரோஜா சுப்ரமணியபுரத்தை எல்லாம் கொண்டாடும் சிற்றிதழ் இந்த மாதிரி முயற்சிகளை புறந்தள்ளும் கபடவேடம் ஏனோ?
  6. ஜெயங்கொண்டான் – அதிகாரமும் உரிமையும் மருட்சியும் சமவிகிதத்தில் கலந்த சகோதர பாசத்தையும் சூட்டிகையான காதலும் சிவாஜிக்கு தங்கச்சியாக ஓவர்-ஆக்டிங் தந்துவிடும் அபாயமுள்ள பாவ்னாவிடம் அமரிக்கையும் தந்தற்காக ஷொட்டு.
  7. சந்தோஷ் சுப்ரமணியம் – சித்தார்த்தை சின்னப் பையனாகவும், ஜெனீலியாவை இன்னும் கொஞ்சம் க்யூட்டாகவும் கண்டிருந்தாலும், ஆங்கில மொழியாக்கம் படிக்காமல், பார்க்க வைத்தது.
  8. பொய் சொல்லப் போறோம் ஹிந்தியில் பார்த்திருதாலும், கதையை நம்பி கதாநாயக பிம்பங்களை உதறிய படம் என்ற வகையில் நல்ல படம்.
  9. குசேலன் வடிவேலுவை மட்டும் நீக்கிவிட்டால் படம் சூப்பர்.
  10. ஆயுதம் செய்வோம் – ‘எனக்கு நடிக்க வராது; நடனம் தெரியாது; கையையும் காலையும் சுத்துவேன்; நல்ல நகைச்சுவை ட்ராக்கை படம் நெடுக்க வைப்பேன்’ என்று சத்தியப் பிரமாணம் எடுத்து இருக்கும் சுந்தர் சியை மறப்பவர்களுக்கு ஈரேழு பிறப்பிலும் நற்கதி கிடைக்காது.

விமர்சனத்திலும் பார்க்காத ஐந்து:

  1. அபியும் நானும் – இன்னொரு வாரணம் ஆயிரம் இல்லியே?
  2. சில நேரங்களில் – நல்லா இருந்ததாம். வின்சென்ட் அசோகன் எப்படி இருக்கார்?
  3. சாது மிரண்டா – எப்படி இருக்கு?
  4. நேபாளி – மோசமில்லை என்கிறார்கள்; இனிமேல்தான் சன் டிவியில் தர்ம தரிசனம் ஆவணும்
  5. காதலில் விழுந்தேன் – சன் டிவி சந்தைப்படுத்தல் மட்டும்தான் USPஓ?

உங்க படம் இங்கே இடம்பிடித்திருக்கிறதா?