Daily Archives: திசெம்பர் 15, 2008

மின் ரத்து: பனிப்புயல் கடந்த பாஸ்டன்

காலை ஆறு மணி. எழுந்திருக்க வேண்டும். குளித்து, காபி போட்டு, பாஸ்டன் க்ளோப் புரட்டலாம்.

அலறிய கடிகாரத்தை பத்து நிமிடம் சயனித்திருக்க அனுமதி கோரி விட்டு, புரண்டமாதிரி கனவுகளைத் தொடரும் அதிகாலை. பத்து நிமிடம் கழிந்த பிறகும் அலாரம் அடிக்கவில்லை.

தூக்கக் கலக்கத்தில் அணைத்திருப்பேனோ? எழுந்து பார்த்தால் கடிகாரத்தில் பளிச்சிடும் எல்.இ.டிக்கள் கருப்பாக இருந்தது. நேற்றைய Patron பலமாக அருந்திய கலக்கம் என்று கண்ணை நம்பாமல், பாத்ரூம் நடக்கும் பாதம், விளக்கை அனிச்சையாக தட்டுகிறது.

எரியவில்லை.

மீண்டும் அணைத்து, போட்டு, அணைத்து மரோ சரித்ரா பார்க்கிறேன். விளக்கு எரியமாட்டேன் என்கிறது.

ஊழல் செய்து மாட்டிக் கொண்ட இல்லினாய்ஸ் கவர்னர் போல் மாஸசூஸட்சிலும் ஏதாவது மந்திரி மாட்டிக் கொண்டு, ஆற்காட்டார் அமைச்சர் ஆகி விட்டாரா?

பாஸ்டனிலும் கரண்ட் கட்.

நம்பமுடியவில்லை. எனினும், பத்து வருடத்திற்கு ஒரு முறை நடக்கிறது. பத்து நிமிடத்தில் வந்துவிடும் என்று நம்பிக்கையுடன் அரையிருட்டில் குறி பார்த்து மூச்சா போய், பிரஷ்ஷில் பேஸ்டை திணித்து, வென்னீரை ஆதுரமாய் சிக்கனமாய் உபயோகித்து, மனைவியை எழுப்பி, விஷயம் சொல்கிறேன்.

‘மின்சாரம் திரும்ப வந்த பிறகு எழுப்பு!’ என்று நம்பிக்கையுடன் சொல்லிவிட்டு, இழுத்துப் போர்த்திக் கொண்டுவிட்டாள்.

நம்பிக்கையை ஊட்டி ஊட்டி, எங்களை சோம்பேறியாக்கி, அமெரிக்காவையே அலட்சியப்பட வைத்திருக்கிறார்கள். எல்லா நம்பிக்கையும் இன்றைய நாளில் தவிடு பொடி ஆகியுள்ளது.

நான்காவது நாளாக இன்றும் மின்சாரம் இல்லாமல் அவதிப்படுபவர்களின் நிலை புலம்பி மாளாது.

காபி போடும் எந்திரம் மின்சாரத்திலானது. பாலை சுட வைக்கலாம் என்றால் அடுப்பும் மின்சாரம். காபிதான் இல்லை, வெளியே இருக்கும் அஞ்சு டிகிரி ஃபாரென்ஹெய்ட்டில் இருந்து தப்பிக்க வீட்டுக்குள் சூட்டை ஏற்றும் உபகரணம்; கார் வைத்திருக்கும் கேரேஜ்; பால் கெட்டுப் போகாமல் பாதுகாக்கும் ஃப்ரிட்ஜ்; சமையல் செய்துபோடும் அடுப்பு; கிணற்றில் இருந்து தண்ணீர் கொடுக்கும் குழாய்…

எல்லாம் மின்சாரம் என்னும் மிடாஸ்.

மிடாஸ் தொட்டது எல்லாம் தங்கம். மகளைத் தொட்டான். அவளும் உலோகமாகி உயிர் விட்டாள். பேராசைக் குழப்பம்.

அமெரிக்காவில் தொட்டதிற்கு எல்லாம் கரண்ட். குளிர்ப்பிரதேசத்தில் இருந்து தப்பித்து அடைக்காக்கும் வீடு கதகதப்பாக இருக்க கரண்ட். கேஸ் அடுப்பிற்கு பதில் கரண்ட் அடுப்பு. காரை garageக்குள் வைத்து இயக்கும் கதவு கரண்ட். எப்படி வெளியே போவோம்?

துப்புகளையும் ஆலோசனைகளையும் தர இருக்கவே இருக்கிறதே இணையமும் கூகிளும்? அதற்கும் மின்சாரம் தேவைப்படும் கணினி.

தொலைபேசியில் கூகிள் வரவேண்டும் என்று கடவுளைப் பிரார்த்திக்கிறேன். மின்சாரம் இல்லாவிட்டால்தான் நினைவுக்கு வருகிறார்.

செல்பேசி பேட்டரி உயிரை விடுவேன்; என்னை சார்ஜ் செய்’ என மின்சாரத்தை வேண்டி நின்றது.

ஒரு மணி நேரம் சென்றது. அண்டை வீட்டுக்காரர்கள். நண்பர்கள், முன்னாள் உறவினர்கள், என்றோ கூட வசித்த அபார்ட்மென்ட் சகாக்கள்; உற்றவர்களின் நினைப்பும் கவனிப்பும் அற்ற குளத்துப் பறவையாக தோன்றினார்கள். செல்பேசியில் அழைத்தார்கள். வீட்டிற்கும் அழைத்தார்கள்.

‘மனிதம் சாகவில்லை’ என்று கவிதை வந்தது. ட்விட்டரில் தட்டினால் பேட்டரி செத்துவிடும். வாய்தா வாங்கிக் கொண்டேன்.

இரண்டாவது மணி நேரம் சென்றாகி விட்டது. ‘ஜெனரேட்டர் வாங்கலாமா?’

மூன்றாவது மணி நேரம். காரில் இருக்கும் பவர் உற்சாகப்படுத்தியது. ‘கேம்பிங் சென்றதிலையா? அப்படி நினைப்போம்.’ குடும்பத்துடன் இன்ப சுற்றுலா பயணம் ஆரம்பம்.

எங்கு பார்த்தாலும் மக்களின் மரண…மன்னிக்க… மின்ரத்து பயம்.

பெட்ரோல் நிலையத்தில் பெரிய காத்திருப்புப் பட்டியல்.

சுற்றுப்பட்டி பதினெட்டு கிராமங்களிலும் ஒரு ஜெனரேட்டர் விடாமல் எல்லாமும் எல்லாவிடத்திலும் தீர்ந்து போய் இருந்தது.

வெளியே சாலையெங்கிலும் மரங்கள். ஸ்டெப் – அப் ட்ரான்ஸ்ஃபார்மரா இது? அல்லது ஸ்டெப் டவுனா? கெபேசிட்டர்? ரெஸிஸ்ட்டர்?? பாகம் பாகமாக பாதையெங்கும் மின் கம்பிகள்.

மகள் கேள்வி கேட்டாள். ‘இந்த வைர் எல்லாம் ஏன் பூமிக்குள் புதைந்து வைத்திருக்கக் கூடாது?’

கவர்னர் தெவால் பேட்ரிக் அவசர நிலை‘ அறிவித்து இருந்தார். இந்த மாதிரி எமர்ஜென்சி கேள்விக்கு பதில் சொல்ல மாட்டேன் என்று சொல்லிவிட்டார்.

மரங்கள் அனைத்தும் பனியைத் தாங்கி பார்த்திருக்கிறேன்.

கொஞ்சம் பூசினாற்போல் இருக்கும் குண்டான பெண்ணும், த்ரிஷா போல் மாடர்ன் ட்ரெஸில் கொத்தவரங்காய் வத்தலாக இருக்கும் பெண்ணும் சேலை கட்டினால் அழகாய் இருப்பது போல் புத்தம்புதிய வெண்பஞ்சுப் பொதிகள் விழுந்த மரங்கள் அழகியாய் இருக்கும். இலையுதிர்த்த வகைகளும் சரி; இலையுதிராத கிறிஸ்துமஸ் மரங்களும் சரி — பெண்ணுக்கு புடைவை என பாந்தமாக மகிழ்வுடன் அனைவருக்கும் ரம்மியமாய் காட்சி தரும்.

இன்றோ சரவணா ஸ்டோர்ஸ் ஸ்னேஹாவாக ‘ஜொலிக்குதே! ஜொலி, ஜொலிக்குதே!!’ என்று ஒரு இன்ச் நீளத்திற்கு ஐஸ் குத்தீட்டிகள் தாங்கி, ராஜேஷ் குமார் கதை வில்லனாக சிரித்தது. கண்ணெதிரே மின் கம்பிகளை அறுத்தெறிந்தது. பி எஸ் வீரப்பா சிரிப்பாக தரையில் விழும் போது வெள்ளிக்கீற்றுகளை சிந்தியது.

ரத்தம் ஒரே நிறமல்ல. வெள்ளி நிறத்திலும் இருக்கும்.

கத்திகள் உலோகத்தினால் அல்ல. பனியாலும் ஆகி இருக்கும்.

காற்று, நீர், பூமி, வான், நெருப்பு என்று பஞ்ச பூதங்கள் பேரழிவு மட்டும் அல்ல. மரங்களும் பேரழிவு உண்டாக்கும்.

தீவிரவாதிகள் மட்டுமல்ல. இயற்கைக்கும் இரக்கமில்லத வேர் ஒழிப்புகள் சாத்தியம்.

கத்தியின்றி ரத்தமின்றி யுத்தம்.

‘வார் ஆஃப் தி வோர்ல்ட்ஸ்’ மாதிரி மொக்கை மசாலாப்படங்களில் கண்டவற்றை அமெரிக்கர்கள் கண்முன்னே நிறைவேற்றிக் கொண்டிருந்தார்கள்.

மெழுகுவர்த்தி விளக்கு, டார்ச் லைட்கள்… என்னென்ன கிடைத்ததோ அள்ளிக் கொண்டிருந்தார்கள்.

இரண்டு வீடு தள்ளி இடி, மழை, புயலினால் மரம் விழுந்து வீட்டின் கூரை இடிந்தது. காயசண்டிகை போல் வீடு. ஆவென்று வாய்திறந்து பனியெல்லாவற்றையும் விழுங்கும் ஆர்வத்துடன் வாய் பிளந்து காண்பித்தது. தன்னிடத்தில் இருப்பவர்களைக் காட்டிக் கொடுத்து, குளிரை நிரப்பியது.

ரத்தபீஜனாய் பாஸ்டனெங்கும் காயசண்டிகை வீடுகள். வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம் என்று வளர்த்தவர்கள் நெஞ்சில் பாய்ந்து பிளந்து திறமூலமாக்கி இருந்தது.

பத்து வீடு தள்ளி இருந்தவர், நெருப்பு கொளுத்துவதற்காக fireplaceல் மரங்களை எரிக்க, தெரியாத்தனமாக ஆர்வக்கோளாறில் கொஞ்சம் அதிகம் சூடாக்க, வீடே திப்பிடித்து சாம்பலானது. உறைவிடத்தில் இருந்த ஒவ்வொரு சாமானும் பஸ்மம். என்னுடைய புத்தக சேமிப்பு மாதிரி எத்தனை விஷயங்கள் எரிந்திருக்கும்! குழந்தைகளின் மனமுவந்த பொம்மைகள்!! ஒரேயொரு தடவை மட்டுமேக் கட்டப்பட்ட மனைவியின் கூறைப்புடைவை!!!

என்னென்னவோ… காலையில் முழுசாய் பார்த்த அகம்; மாலையில் கன்னங்கரேலென்று பாக்கி சொச்சம்.

அடுத்த நாள் நியுயார்க் டைம்ஸை முந்தின நாள் செய்தி படிப்பதற்காக வாங்கினேன்.

‘பான்சி திட்ட’த்தினால் பல் கோடீஸ்வரர்கள் சில லட்சங்களை இழந்ததை முகப்பு செய்தியாக்கி இருந்தார்கள். இத்தனைக்கும் இது பாஸ்டனில் இருக்கும் உள்ளூர்வாசிகளுக்காக சிறப்பாக வெளியான லோக்கல் ‘நியு யார்க் டைம்ஸ்’ பதிப்பு.

எந்த அமெரிக்கனும் சாகவில்லை. எனவே செய்தியில்லையாம். எட்டாம் பத்தி மூலை கூட கண்டுகொள்ளப்படவில்லை.