வருடா வருடம் அறிஞர் அண்ணா சிலைக்கு மாலையிடுவோம். அது போல் இந்த வருடத்திற்கான ஆய்வு:
- வரி, விளம்பரம்/க்ரெய்க்ஸ் லிஸ்ட்: தமிழ்ப்பதிவுகளுக்கு பராக் ஒபாமா போன்ற மாயாஜாலக்காரர் தேவைப்படுகிறார். பில் க்ளின்டன் போன்ற தமிழ்மணம் ஹில்லரி போல் ஏதாவது புதுப்பித்துக் கொண்டாலும், புஷ் கூட்டாளிகளுடன் கும்மாளம் போடுவது போல் க்ரூப்கள் மிகுந்திருப்பதால், கடல் வழியாக அத்துமீறும் பாகிஸ்தானிய தீவிரவாதி போல் புதுப் பதிவர் தேக்கநிலையை நீக்கத் தேவைப்படுகிறார்.
- வாய்ஸ் கிடையாது/ரஜினி: தமிழ்ப்பதிவர் பரம சாது. சவுண்டு விடுவார். எதிராளி ஏவுகணையோ இளக்காரப் பார்வையோ பார்த்தால் அடங்கி அல்லது ஒதுங்கி விடுவார். இதை விட மோசமாக கடைக்குழு ஒன்று இருக்கிறது. இன்னும் இரண்டு பேர் உங்க பதிவிற்கு வரவைக்குமாறு ஹிட் தருவோம் என்றால் சகல ஸ்க்ரிப்ட்களையும் இணைத்து பச்சோந்தியாய் விளம்பரம் கொடுத்து சமூக ஒருங்கிணைப்பிலோ உள்ளடக்க வீரியத்திலோ ஈடுபாடில்லாத குழு. ஆங்கிலப் பதிவு நிகழ்வு: Abstract: How Twittering Critics Brought Down Motrin Mom Campaign – Digital: “Bloggers Ignite Brush Fire Over Weekend, Forcing J&J to Pull Ads, Issue Apology”
- நேரடி கவரேஜ்/தஸ்லீமா நஸ்ரின்: ‘ஐயா! நீங்க மலேசியாவில்தானே இருக்கீங்க? உங்க லோக்கல் விஷயத்தை எழுதுங்களேன்?’ என்றால் ஓடி ஒளிந்துவிட்டு, பத்தாயிரம் மைல் தள்ளி இருக்கும் ‘க்ரீன்லாந்தில் பசுமைப்புரட்சிக்கு வித்திடுவோம்’ என்று சவடால் விடும் பதிவு நிறைந்த வலையுலகில் நுழைந்துள்ளோம். சீன ஒலிம்பிக்ஸ் பற்றி எழுதினால் அரசு வெட்டிடும் என்பதில் துவங்கி சிங்கப்பூர் எதிர்க்கட்சித் தலைவரின் பரிதாப நிலை வரை − ஐந்தாண்டு அனுபவமுள்ள பதிவுலகில் அருகில் இருந்து அவதானிக்க எவரும் இல்லாத உள்ளூர் அனுபவசாலியின் அவல நிலை.
- செருப்பு புஷ்/அ – அருந்ததி ராய்: ஜார்ஜ் புஷ் மேல் செருப்படிக்கும் விளையாட்டை ஊக்குவிக்கும் சுதந்திரத்தைத் தரும் அமெரிக்காவை சவூதியில் இருந்து விமர்சிக்கும் வார்ப்புரு எழுத்தாளர். சாரா பேலினின் தொப்புள் படம் கிடைக்குமா என்று தேடிக் கொண்டே பெண்ணுரிமை பேசும் கருத்து சுதந்திரவாதியின் ஸ்டீரியோடைப் எழுத்தை மதிக்கும் சக வாசகர் வட்டம் எனத் தொடரும் infinite recursive loop.
- சமூகப் பொறுப்பு/’சத்யம்’ ராஜு: ஐந்து வருடமாக ஒரு whistleblower உருவாகவில்லை. அரசு, பத்திரிகை, நிறுவனம், விளம்பர உலகம் என்று பதிவு பரவவில்லை. டீக்கடை பெஞ்சாகவே ஒதுங்கி பழைய பேப்பரில் உண்டான கருத்தை மறுவாந்தியெடுத்து கொள்கை நம்பிக்கையும் சிருஷ்டி கற்பனையும் படைப்பூக்கமும் இன்றி கிணற்றுவாளியில் சிக்கிய தவளையாக இன்னும் கிணற்றுக்குள்ளே குதிக்கவே சிரமகதியில் வாளிக்குள் துள்ளி விளையாடுகிறது.
- ஆனந்த விகடன் டு குமுதம்/ஞாநி: தமிழ்மணம் போனது; தேன்கூடு வந்தது என்று ‘வாலு போச்சு; கத்தி வந்தது’ குரங்கு கதையாக வலைப்பதிவர் ஆரம்பத்தில் மாறினார். பின்னால் தமிழ்வெளி பக்கம் சென்று பார்த்தார். இப்பொழுது தமிழீஷ் புளகாங்கிதம் அடைகிறார். சொவ்வறை குந்துரத்தனாகிய நான் நேரங்காட்டுவதுதான் முக்கியம் → அதனால் தினக்கூலி கிட்டுவது அதை விட முக்கியம் என்பதாக எழுதுவதுதான் முக்கியம்; எழுதுபொருள் குறித்த கவலை இல்லாத இணையம்.
- தெரிந்த முகம்/சீனா: தமிழ்நாட்டின் பெட்டிக்கடையிலாவது முன்பின் அறியாதவருடன் வெளிப்படையான கருத்துப் பரிமாற்றம் அகஸ்மாத்தாக அரங்கேறும். தமிழ் வலையுலகோ, சீனாவைப் போன்றது. நாலு சுவருக்குள் நடக்கும் பேச்சில்தான் போதிய சோதனைக்குப் பின் உள்ளத்துக் கிடக்கை வெளியேறும். அரட்டையில் சொன்னால் பொதுவில் போட்டு விடுவார்; தொலைபேசியில் பேசினால் பதிந்துவிடுவார் என்று அச்சம், மடம், நாணுபவர் இங்கு நிறைந்திருப்பர். சைனாவைப் போலவே மக்கள் கூட்டம் நிறைய இருந்தாலும், அவர்களால் எக்கச்சக்கா சாமான்/பதிவு தயாரிக்கப்பட்டாலும், அவற்றால் அவர்களுக்கு எந்தப் பயனும் கிடைக்காது. ‘செம்மொழி’, கூகிள் மொழி என்று பம்மாத்து பல சீனாவைப் போலவே ஒளிர்ந்தாலும் உள்ளுக்குள்ளே ஈறும் பேனும், ஈயும் பீயுமாக மகிழ்ந்திருக்கும்.
- அங்கீகாரம்/சு.சுவாமி: “பூங்காவில் இடமுண்டா? தமிழீஷில் எண்ணிக்கை ஏறுமா? தமிழ்மணத்தில் வாக்கு கிடைக்குமா?” என்பது போய் “‘உயிர்மை.காம்’இல் ஒரு எழுத்து வராதா? ‘வார்த்தை‘யில் ஒரு வார்த்தை வெளியாகாதா?” என்பதும் விலகி “ஆனந்த விகடன் வலையகத்தில் பெயர் பெறுவேனா? சன் டிவி பிறந்த நாள் வாழ்த்து உதிர்க்கப்படுவேனா?” என்பதுதான் பதிவரின் அலட்சியமாக, குறியாக இருக்கிறது. எப்பாடு பட்டேனும் அமைச்சர் பதவியை மகனுக்கு வாங்கிக் கொடுக்கும் தந்தையாக வலைஞர் செயல்பட்டு திருப்தியடைகிறார்.
- விசங்கக்குபவர்/பாஸ்டன் பாலாஜி: ‘நீ எத்தனை புத்தகம் எழுதி மாற்றத்தை உருவாக்கினாய்? ‘அச்சமுண்டு அச்சமுண்டு‘ அருண் மாதிரி ஏதாவது படித்து படமாக்கினோம் என்றாவது சொல்லமுடியுமா? கலை தாகம் எவ்வாறு ஆக்கசக்தியானது? தொழில்நுட்பக் கல்வி எவ்வளது தூரம் தமிழானது? தமிழிலக்கியம் எங்ஙனம் உலக மொழிகளில் மொழிபெயர்ப்பானது?’