Daily Archives: திசெம்பர் 8, 2008

ஐந்து மாநில தேர்தல்களும் வலையகங்களும்

நியு யார்க் நகரம் – தாங்ஸ்கிவிங் வாரம்

சென்ற வாரம் நியு யார்க் நகரமும் அதன் சார்ந்த வட்டாரங்களிலும் சுற்றிய கதை:

  • வாடகைக் கார் அமெரிக்க தயாரிப்பு. பெரியதாக இருந்தது. துளியசைத்தால் முன்பின் நகர்ந்து சாய்ந்து உயர்ந்து வளைந்து நெளியும் இருக்கை முதல் உள்ளே ஓட்டுநருக்கு ஒரு வெப்பநிலை, பயணிக்கு இன்னொரு குளிர்நிலை வைக்கும் வரை சின்னச் சின்ன சௌகரியங்கள் நிறைந்திருந்தன. எஞ்ஜின் சரியில்லாவிட்டாலும் கவரிங் தூள்.
  • பாஸ்டனில் இருந்து நியுயார்க் செல்லும்வழியில் ஒரு மணி நேரத்திற்கு சராசரியாக 68 மைல் வேகத்தில் சென்றதாக புள்ளிவிவரம் காட்டியது. திரும்பிவரும்போது கும்பலோடு கோவிந்தா போட்டதினால் 35 மைல்தான் ஒரு மணி நேரத்தில் சராசரியாக செய்ய முடிந்தது. மெதுவாக செல்வதற்கு ட்ராஃபிக் மாமா நிறுத்துவாரா?
  • நியுயார்க் கென்ன்டி விமான நிலையம் செல்லும் போதெல்லாம் முன்னுமொரு காலத்தில் எனக்கு நேர்ந்த சம்பவத்தை கூட இருப்பவர்களோடு நினைவு கூர்வேன். பதினெட்டாவது தடவையாக மனைவியும், மூன்றாவது தடவையாக மகளும் கேட்டுவைத்தார்கள். பாஸ்டனில் அந்த மாதிரி செய்தால் கப்பம் கட்ட சொல்கிறார்கள்.
  • நியூ யார்க் ஃப்ளஷிங் கணேஷா கோவில் புனருத்தாரணம் செய்கிறார்கள். நான் அமெரிக்க வந்தபிறகு கட்டி முடிக்கப்பட்ட அரங்கத்திற்கு முதன் முறையாக மேயர் ப்ளூம்பர்க் வந்திருந்தார். மும்பை குண்டுவெடிப்புக்கு இரங்கல் சொன்னார். வலைப்பதிவர்களும் ஒரு நிமிட அஞ்சலி செலுத்தியிருக்கிறார்கள்.
  • உள்ளாட்சி அமைப்பின் சபாநாயகரும் வந்திருந்தார்.  ‘இப்போது முறைப்படி பூரணகும்ப மரியாதை செய்யமுடியவில்லை. அடுத்த முறை சாஸ்திரோப்தமாக அழைப்பதாக’ கோவில் நிர்வாகி வாக்களித்தார். இந்து மதம் லெஸ்பியன்களை எப்படி பார்க்கிறது?
  • நியுயார்க்கில் சென்ற இடமெல்லாம் மும்பை குண்டுவெடிப்பிற்காக மன்னிப்பு கோரினார்கள். ‘நீங்கள் இந்தியர்தானே!? உங்கள் ஊரில் இப்படி நடந்துருச்சே! ரொம்பவும் சாரிஈஈஈ… தங்கள் உறவினர், தெரிந்தவர் யாருக்கும் சேதமில்லையே?’ என்று பரிவுடன் விசாரித்தார்கள். அமெரிக்காவின் விடிவெள்ளி சி என் என்னுக்கும் விடாக்கண்டர் லஷ்கர் – இ – தொய்பாவுக்கும் உயிர் நீத்த ஆறு அமெரிக்கர்களுக்கும் நன்றி.
  • நடுத்தெருவில் புதிய ப்ராட்வே ஷோவிற்காக துண்டுச்சீட்டு கொடுப்பவர் முதல் ஃபாந்தம் ஆஃப் தி ஓபராவிற்கு கோட் சூட் போட்ட கனவான் வரை முகமன் கூறி, புன்னகை சிந்தி, துக்கம் விசாரித்தார்கள். ‘இந்தியராகப் பிறந்திட மாதவம் செய்ய வேண்டும்’ என்பது போன்ற அரச கவனிப்பு.
  • ஃப்ளஷிங் கணேஷ் கோவில் சாப்பாடு ஏ1. அது கேண்டீன் என்று சொல்வது இழுக்கு. நியூ ஜெர்சி சரவண பவன் அண்ணாச்சி தொழிலும்  சுவையும் சேவையும் கற்கவேண்டிய தலம்.
  • இதற்கு நேர் எதிர்மாறாக நியு ஜெர்சி ப்ரிட்ஜ்வாட்டர் பெருமாள் உணவகம். சட்னியும் சாம்பாரும் ஜொலிக்காவிட்டால் தோசை சோபிக்காது என்பதை இவர்களுக்கு சொல்ல வேண்டும். எனக்கு தெலுங்கு தெரிசிலது ஆதலால், ஃப்ரீயா விட்டுவிட்டேன்.
  • நியு ஜெர்சி கோவிலில் அபிஷேகம் என்று கேலன் கேலனாக பால் கொட்டாமல் கால் கேலன் பால், அரைக் கரண்டி தயிர் என்று சிக்கனமாக செய்கிறார்கள். சாக்கடையும் சீக்கிரம் ரொம்பி சுற்றுச்சூழலை பாதிக்காமல், கடவுள் பக்தியும் குறைக்காமல், நல்ல பேலன்ஸ். கோவிந்தா வாழ்க!
  • நியூயார்க் நகரத்தில் இரவில் யாரும் உறங்குவதில்லை. வீட்டில் சமைப்பதுமில்லை. பின்னிரவு ஒரு மணிக்கு கூட சாப்பாட்டுக் கடைகளில் க்யூ வரிசை நீள்கிறது. சாலை முக்குகளில் கூட்டம் கூட்டமாக அரட்டை. மெக்டொனால்ட்ஸ் 24 மணி நேரமும் ஃபாஸ்ட் ஃபுட் செய்து தர வைத்திருக்கிறார்கள். பூஜ்யம் டிகிரி குளிருக்காக கதகதப்பாக இறுக்கியணைத்தபடி இணைந்த உடல்களாக அறுபத்தி மூவர் விழா பவனியாக சாரி சாரியான மக்கள். இந்த டவுன்டர்ன், ரிசெஷன் என்பதெல்லாம் வால் ஸ்ட்ரீட் செஞ்ச போலி என்றார்கள்.
  • கோளரங்கம், நேஷனல் ஜியாகிரபியின் 3டி படம் போல் நான் தூங்குவதற்கு இன்னொரு இடம் அகப்பட்டது. ஃபாந்தம் அஃப் தி ஒபராவின் இன்னிசையும் கும்மிருட்டும் ஜெகஜ்ஜாலங்களும் தாலாட்டி உறங்கச் சொன்னது. ‘மகள் குறட்டை பெரிதா, என் குறட்டை பெரிதா?’ என்று சாலமன் பாப்பையா மன்றத்தில் அடுத்த தூக்கம் தொடர எண்ணம். ஆராரிரோ என்பது மேற்கத்திய உச்சரிப்பில் மறுவி ஆபரா ஆனதாக தமிழறிஞர் எவரும் நிறுவவில்லையா?
  • பாம்பே ட்ரீம்ஸ் இன்னும் ஓடுதா? ஃபாந்தம் ஆஃப் தி ஓபரா இருபதாண்டுகளாக நிறையரங்குகளாக வெற்றிகரமாக நடத்தப்படுகிறது. மெழுகுவர்த்தி நிறைந்த பேய்வீடு, ஊஞ்சல், படிக்கட்டு, பறந்து உலாவுதல், பட்டாசு வெடிகள் என்று உறக்கத்தைக் கலைக்க அரும்பாடு பட்டாலும் ஒபரா பாடல்கள் மெல்லிசையாகவே அமைந்திருக்க வேண்டும்.
  • எம்பயர் ஸ்டேட் ப்ல்டிங்கின் 83-வது மாடியை உள்ளரங்கமாக மாற்றவேண்டும். கடுங்குளிரில் புகைப்படம் சுட்டு சூடேற்ற முடியுமா?
  • பர்மா பசார் கனால் தெரு, ஏழாண்டுகளாக தரைமட்டமாகி இருக்கும் உலக வர்த்தக மைய வளாகம், இந்த ஆண்டு தரைமட்டமான வால் தெரு, தொலைக்காட்சிசூழ் டைம்ஸ் சதுக்கம், திரைப்பட தீவிரவாதிகளால் தகர்க்கப்படும் மேன்ஹட்டன் மேம்பாலங்கள், காபந்து கெடுபிடி நிறைந்த சுதந்திர தேவி, காந்தி பொம்மையும் வசிக்கும் மெழுகு காட்சியகம், ரிப்ளியின் நம்பினால் நம்புங்கள் போன்ற புனிதத்தலங்களில் காலடியும் புகைப்பட ஃப்ளாஷ் அடியும் எடுக்காமல் படேல் வால்யூ எனப்படும் தலபுராணம் நிறைவுறாது.