ஜார்ஜ் புஷ் பதவி விலகிய பிறகு இந்தியாவின் மவுசு குறைந்து போய் விட்டதாக வாஷிங்டன் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.
நியு யார்க் டைம்ஸ் பத்தி எழுத்தாளர்கள் துவங்கி டெமொக்ரட்ஸ் கருத்தாக்கத்தை தலையங்கம் தீட்டுபவர் பலரும் இந்தியாவின் செல்வாக்கை குறைத்து, மண்டையில் தட்டி மிரட்ட வேண்டிய அவசியத்தை எடுத்து வைக்கிறார்கள்.
- அணு ஆயுதம் வைத்திருக்கும் நாடெல்லாம் நம்ம நாடாக இருக்கவேண்டும். பாகிஸ்தான் என்ன? இந்தியா என்ன? இரண்டும் ஒரே வைரஸ் புகுந்த கணினி மாதிரி அச்சுறுத்தல் தருபவை.
- பாகிஸ்தான் தலைவர்கள் மதவெறி பிடித்தவர்கள் அல்ல! அதனால் தாலிபான் + அல் க்வெய்தா பக்கம் வேண்டுமென்றே சாய்பவர்கள் கிடையாது. பாகிஸ்தானுக்கு இந்திய வெறுப்பு உள்ளது. இருந்துட்டுப் போகட்டுமே.
- காஷ்மீர் பிரச்சினையை இந்தியா தீர்க்க நினைத்தால் சுபமஸ்து போடலாம். ஆனால், என்றாவது அமெரிக்கா சொல்வதை செவிமடுத்து ஒரு வார்த்தையாவது கேட்கிறார்களா? திபெத்துக்கு சுண்ணாம்பு; காஷ்மீருக்கு வெண்ணெய்யா?
- அமெரிக்காவிற்கு பணம் வேண்டுமானால் ஆபத்பாந்தவராக அள்ளிக் கொடுக்கும் சீனாவை திருப்தி செய்யவேண்டும். தற்போதைய நிதி நெருக்கடி நிலையில் அச்சிடும் கடன் பத்திரத்தை வாங்கும் சைனா சொற்படி கேட்கவேண்டும்.
- சுதந்திர நாட்டோடு நட்பு வைத்திருப்பதை விட அதிகாரத்தைப் பிடிக்குள் வைத்திருக்கும் தலைவர்களுடன் உறவாடுவதே ஸ்திரத்தன்மைக்கு வழிகோலுகிறது. குடியாட்சியை விட மன்னராட்சியும் கொடுங்கோல் அரசுகளுமே உத்தமம்.
- இந்தியாவிற்கு அவுட்சோர்சிங் செய்தோம். கால் சென்டர்களை அனுப்பினோம். பதிலுக்கு என்ன கிடைத்தது? சீனாவிற்கும்தான் தொழிற்பேட்டைகளை ஏற்றுமதி ஆக்கினோம். எவ்வளவு முதலீடு கிடைக்கிறது? சீனா சொன்னால் வட கொரியா தலையாட்டுகிறது. பாகிஸ்தான் பயங்கரவாதம் கூட பயப்படுகிறது. இந்தியாவினால் உள்ளூர் மும்பையைக் கூட காப்பாற்ற வக்கில்லை.
- வல்லரசாக வேண்டுமானால், நல்லரசாக நடிக்கவாது தெரியவேண்டும். மனித உரிமை துஷ்பிரயோகத்தில் முன்னிலை வகித்து, பர்மா, இலங்கை, சுடான் என்று நசுக்கல் நாடுகளை அரணாகக் கட்டிக் காக்கும் இந்தியாவை கண்டித்து Non aligned Movement என்னும் கண்ணெரிச்சல் இயக்கத்தை முடக்க வேண்டும்.
- வாக்கு கொடுத்தால் காப்பாற்றத் தெரியணும். 123 அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் இன்று கையெழுத்திடுவது; நாளை இடதுசாரி ஆதரவு கிடைக்கவில்லை என்று பேரம் பேசுவது. நிலையான உறுதி கிடைக்காத இடத்தில் என்ன பேச்சுவார்த்தை வேண்டிக் கிடக்கு?
- Nuclear Non-Proliferation Treaty (NPT) ஆகட்டும்; தோஹா ஆகட்டும்; சுற்றுச்சூழல் வர்த்தகம் ஆகட்டும். ஆளுங்கட்சி மாறினாலும் இம்மி கூட விட்டுக் கொடுக்காத முரண்டுக் குழந்தை நிலைப்பாடு.
- இந்தியாவை எப்பொழுது வேண்டுமானாலும் தூண்டில் போட்டு இழுக்கலாம். எதிரிகளை மிக அருகில் நெருக்கமாக வைப்பதுதான் இன்றைய உடனடி தேவை.
















