ஆனந்த விகடனில் வெளியாகிய மருதனின் அமெரிக்கப் பள்ளிகள் காலி வாசிக்க கிடைத்தது.
முதலில் மருதன் பாணியில் rhetoric மட்டும்.
காட்ஃபாதர் நாயகன் ஆனது போல் சிலர், பல ஆங்கிலப் படத்தில் இருந்து சிற்சில இடங்களைத் தமிழுக்கு ஏற்றபடி மாற்றியமைத்து திரையாக்குவார். எஸ் ஜே சூர்யா போல் சிலர் அப்படியே தமிழுக்கு இடப்பெயர்வு செய்வார். இன்னும் சிலர் ஹாரிஸ் ஜெயராஜ் இசை போல் அதே பாட்டை, அப்படியே வேறு பாட்டாக்குவார்.
மருதன் ஹாரிஸ் ஜெயராஜ் ரகம்.
- எந்த மாணவர் எதற்காக நீக்கப்பட்டார் என்னும் முன்கதை இருக்காது.
- ஆர்னே அல்ல; ஆர்நி என்னும் சின்ன விசயம் கற்றுக் கொள்ளும் உழைப்பு கூட இருக்காது.
- ‘ஒபாமாவின் தீவிர ரசிகர்களேகூட இந்த விஷயத்தில் சங்கடத்துடன் நெளிந்துகொண்டிருக்கிறார்கள்’ என்பார். எவர், எங்கே, எப்போது, என்ன சொன்னார் என்பதெல்லாம் மூடுமந்திரம்.
- ஆனால், அமெரிக்காவில் கறுப்பர்களை விட வெள்ளையர்களின் மக்கள்தொகை அதிகம் போன்ற தகவற்பிழை நிரப்பியிருப்பார்.
இந்த மாதிரிதான் எல்.டி.டி.ஈ., லியனார்டோ டா வின்ச்சி என்று புத்தகம் எழுதி குவிக்கிறாரா என்னும் அச்சமும் எழுகிறது.
இப்பொழுது மருதனின் விகடன் கட்டுரையில் இல்லாதவை இங்கு இடம் பெறும் இடம். ஆதாரம், அலசல், பின்னணி, விஷயம்.
அமெரிக்கக் கல்வித் திட்டத்தை அதனுடன் சரிசமமான OECD, மேற்கத்திய சூழலுடன் ஒப்பிட வேண்டும். அதை மருதன் செய்யவில்லை.
கடந்த எட்டாண்டில் பள்ளி மாணவர் தேர்ச்சி, பெரிய வகுப்புகளில் எண்ணிக்கை, மேற்படிப்பு நிலவரம், குடும்பச் சூழல் என்று மதிப்பிடலாம். மற்ற வளர்ந்த நாடுகளில் இந்த குறியீட்டெண் என்ன, எவ்வாறு வளர்கிறது, ஜார்ஜ் புஷ்ஷின் No Child Left Behind என்ன செய்ய நினைத்தது என்றும் ஆராயலாம்.
அதெல்லாம் மருதன் கட்டுரையில் கிடைக்கவில்லை.
பராக் ஒபாமாவின் திட்டம் என்ன, ஏன் அவர் படிப்பில் ஆர்வம் காட்டுகிறார், எவ்வாறு ஜார்ஜ் புஷ்ஷின் அணுகுமுறையில் இருந்து வேறுபடுகிறார், படிப்பு கொள்கை எங்ஙனம் செயலாக்கம் பெறும் என்றெல்லாம் சுட்டலாம்.
மருதனின் பத்தியில் விஷயம் இல்லை.
அமெரிக்க கல்வியின் இன்றைய நிலை :
வினாத்தாளா, Street smart சாதுர்யமா?
அமெரிக்கா கேள்விஞானத்திற்கு பெருமதிப்பு தருகிறது. விஷயஞானத்திற்கு அல்ல.
அதாவது, இந்தியாவில் (x+y)² என்ன என்பது மிக முக்கியம். இங்கே அது ‘ஏன் முக்கியம்’ என்று தெரிந்து வைத்தால் போதுமானது.
எப்படி விடை வருகிறது, (x+y)² ≡ 2(x+y) என்றெல்லாம் வித்தியாசமாக யோசித்து கேள்வி கேட்க வேண்டும். அதுதான் முக்கியம்.
இந்த மாதிரி வினாக்காரரின் விடைத்தாளை எவ்வாறு திருத்துவது?
குதித்தது ‘தேர்வு முறை‘. அமெரிக்காவில் பலருக்கு ‘தேர்வு எழுது, அதில் 40 வாங்கினால் பி க்ரேடு’ என்பது அலர்ஜி தந்தது. வினா – விடை வேண்டாம்; ‘இவ நல்லா படிக்கிறா!’ என்று சொல்லி அடுத்த வகுப்பிற்கு தூக்கிப் போடலாம் என்னும் சமூகம்.
இதை மாற்ற முயற்சி நடந்து வருகிறது.
ஆசிரியர் ஊக்கத்தொகை
ஒழுங்காக வேலை செய்பவருக்கு ஊக்கத் தொகையா? அல்லது வேலைக்கு எட்டு மணிக்கு ஆஜராகிவிட்டு ஐந்து மணி வரை இருக்கை தேய்ப்பவருக்கும் ஊக்கத் தொகையா?
தொழிற்சங்கவாதியிடம் கேட்டால் ‘வேலைக்கு வராவிட்டால் கூட போனஸ் வேண்டும் என்று போராடு தோழா’ என்பார்.
திறமையாக பாடங்கற்பிப்பவருக்கு சம்பளம் அதிகம் தர வேண்டும். சூட்டிகையான மாணவரையும் தூங்கவைக்குமாறு தாலாட்டும் ஆசிரியருக்கு சம்பளம் குறைக்க வேண்டும்.
கையில் காசு; வாயில் படிப்பு.
கல்வி: யார் பொறுப்பு?
‘உணவகத்த்கின் உரிமை மாறியுள்ளது’ என்னும் பலகையை பார்த்திருப்போம். பழைய சொந்தக்காரர் ஒழுங்காக நடத்தாவிட்டால் புதியதாக இன்னொருவர் பொறுப்பேற்று அதை நல்லபடியாக்குவது சகஜம்.
கல்விக்கூடத்திலும் அதை நடைமுறை ஆக்கலாம்.
மோசமான பள்ளி என்று பெயர் எவ்வாறு கிடைக்கிறது? மாணவரின் குடும்பச்சூழல் காரணமாக பள்ளிக்கு ஒழுங்காக வர இயலவில்லை; தரமாக சொல்லித் தராத வாத்தியார்; உபகரணம் உடைந்த சோதனைச்சாவடி; பராமரிப்பு இல்லாத பள்ளிக்கூடம்.
இப்படி எதுவாக இருந்தாலும், ‘தண்டம்’ என்று பெயரெடுத்ததை மூடிவிட்டு, அதற்கு பதில் இன்னொரு பள்ளி புத்தம்புதிதாக புதிய ரத்தம் கொண்டு துவங்குவது; அதுவரை, அங்கு வாசித்தவர்களை, தாற்காலிகமாக இன்னொரு சிறப்பான பள்ளியில் கோர்த்து, அந்த அலைவரிசையில் பயணிக்க வைப்பது.
புதிய பள்ளி கட்டுமானம்:
இந்தப் புதிய பள்ளிக்கான பணத்திற்கு என்ன செய்வது?
‘இவ்வளவுதான் பணம். இதைக் கொண்டு பள்ளி துவங்க முடியுமா?’ என்றால் அரசிடம் இருந்து இயலாமை. ஆனால், தனியார் நிறுவனமோ — துடிப்புடன், கொடுத்த பணத்தை வைத்து, வேண்டிய தரத்தில், சேர்க்கவேண்டிய எண்ணிக்கையையும் நிரப்பி பள்ளி துவங்க ரெடி!
பெற்றோரும், ‘என் குழந்தைக்கு செலவிடும் பணத்தை என்னிடமே கொடுத்துவிடு! அந்தப் பணத்தை கொண்டு நானே நல்ல பள்ளியைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறேன்.’ என்கிறார்.
இந்த நிலையில் கையாலாகாத அரசாங்கமே பள்ளியை நிர்வகிக்க வேண்டுமா? அல்லது அதே நிதியில் அதே அளவு மாணவர்களை இன்னும் சிறப்பாக தயார் செய்யும் தனியாரிடம் தர வேண்டுமா?
ஒவ்வொரு கு(ட்)டி மக்களுக்கும் செலவழிக்கும் கல்வித்தொகையை அவரிடமே தந்து நன்றாக படித்து முன்னேரிக் கொள்ளுமாறு விட்டுவிட வேண்டுமா? அல்லது தானே வரிந்து கட்டி சீர்திருத்த வேண்டுமா?
எல்லோரும் ஆசிரியர் ஆகலாம்:
ஆசிரியர் பற்றாக்குறை நிலவும் காலத்தில், வாத்தியாராக பட்டம் பெற ஏழு கடல் கடந்து, செவ்வாய்க்கு சென்று கல் எடுத்து வந்தால்தான் ஆச்சு என்பது சரிப்படுமா?
அறிவியல் போதிக்க அறிவியலில் முதுகலை படித்திருந்தால் மட்டும் போதுமே? வீட்டில் இரண்டு குழந்தையை மேய்ப்பது போல் இருபது குழந்தை நிரம்பிய வகுப்பைத் தந்து பார்ப்போம். போகப் போக பழகிக் கொள்வார் என்பது ஒரு வாதம்.
இப்படி சேர்க்கப்பட்டு, தலைமை ஆசிரியர் வரை உயர்ந்து நிற்பவர் ஏராளம். குறிப்பாக புதிய தலைமுறை சப்ஜெக்ட்களான கணினி, நுண்ணுயிரியல் போன்றவற்றில் சக்கைபோடு போடுகிறது.
இவ்வாறு புது இரத்தம் வருவதை, ஆசிரியர் யூனியன் விரும்பவில்லை. பல்லாண்டு கால வழக்குமுறை மாற்றப்படுவதை பயத்துடன் நிராகரித்து, பொது அறிவு வினாத்தாள் முதல் உளவியல் பயிற்சி வரை பல்வேறு தடைக்கல்லை வைத்து புதிய ஆசிரியர் சேர்ப்புக்கு முட்டுக்கட்டை இட்டிருக்கிறது.
இன்னும் இது போல் நிறைய உபதலைப்பில் விலாவாரியாக ஆயலாம். மருதனின் விகடன் அலசலை மட்டும் படித்து கிணற்றுத்தவளையாக இல்லாமல் இருக்க; நுனிப்புல் மேய நமக்கு இது போதும்.
ஆர்நியைக் குறித்து
- ஆர்நியின் குழந்தைகள் அரசுப் பள்ளிக்கூடத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். தனியார் பள்ளிக்கு அனுப்பும் செல்வம் இருந்தாலும், ஒய்யாரமாக சென்றுவரவில்லை.
- 2001ல் டங்கன் பதவியேற்ற பிறகு குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கிடைத்துள்ளதாக ஆய்வு முடிவு வெளியாகியுள்ளது.
- எல்லாத்தரப்பு மாணவரிடத்திலும், ஆங்கிலம் தாய்மொழியாக இல்லாதவரிடத்தும், உடல் ஊனமுற்றோரிடத்திலும் எல்லாப் பாடத்திலும் அளவிடக்கூடிய வளர்ச்சிக் காணக்கிடைக்கிறது.
- நியு யார்க், லாஸ் ஏஞ்சலீசுக்கு அடுத்த படியாக மூன்றாவது மிகப் பெரிய, நான்கு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணாக்கர்களை கொண்ட சிகாகோ கல்விக்கூட பொறுப்பை நிர்வகித்த அனுபவம் கொண்டவர்.
மேலும் தகவல்: Snap Judgement: US Education System; Secretary of State
கடைசியாக மருதன் கட்டுரைக்கு பதில்.
தன்னை எதற்காக பள்ளியில் இருந்து நீக்கினார்கள் என்று அந்த மாணவருக்கு இந்த நிமிடம் வரை தெரியாது.
கதையுடன் கட்டுரையை ஆரம்பிப்பது நல்ல உத்தி. நானும் இப்படித்தான் ஆரம்பித்திருக்க வேண்டும். ஆனால், நான் ஆதாரம் தருவேன். அவர் இணையத்தில் இடும் கட்டுரையிலும் சாய்ஸில் விட்டு விடுவார்.
கெமரான் பள்ளி பாலகர் பள்ளி. ஆனால், பச்சிளம் பாலகரும் ஏகே-47 சுடக் கற்றுக் கொண்டுதான் ஆன்னா, ஆவன்னா கற்றுக் கொள்வதற்கு வருவார். முன் எப்போதும் இல்லாத அளவிற்கு அங்கே மழலைச் செல்வங்களின் வாசிப்பு சக்தி உயர்ந்திருக்கிறது. கணித மேதையாகாத குறை.
இந்தப் பள்ளி சிகாகோவில் உள்ளது.
என்னை நம்பவேண்டாம். 2001ல் இருந்து பள்ளிச்சிறுவர்கள் பரீட்சை முடிவில் வாங்கிய மதிப்பெண்ணை ஒப்பிட்டு பார்த்தாலே தெரியும்.
ஒழுங்கீனமானவர்கள் என்று முத்திரை குத்தப்பட்டு பலர் சிறைச்சாலைகளில் (குழந்தைகளுக்கான சிறைச்சாலைகள்) அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.
வீட்டிற்கே சென்று சொல்லிக் கொடுக்கும் ஆசிரியரில் ஆரம்பித்து விளையும் பயிரை முளையிலேயே வளைத்துப் போடுவதற்கு ஒபாமா தரும் பத்து பில்லியன் வரை தொட்டு செல்லவேண்டியதை, ‘ரெண்டுகண்ணன் வரான்; குழந்தையப் பிடிச்சுண்டு போயிடுவான்’ என்னும் ரீதியில் சிம்ப்ளிஃபை செய்திருக்கிறார் மருதன்.
ஜார்ஜ் புஷ்ஷின் மற்றுமொரு சொதப்பல் என்பதாகத்தான் நினைத்துக்கொண்டது அமெரிக்கா
ஜார்ஜ் புஷ்ஷின் நோ சைல்ட் லெஃப்ட் பிஹன்ட், பதின்ம வகுப்புகளில் மாணவரைத் தக்கவைப்பதிலும், விருப்பப் பாடத்தை தேர்வு செய்வதிலும், கல்லூரிக்கு அழைத்துச் செல்வதிலும் பெருத்த வெற்றி என்பதை அவரின் எதிரியே ஒத்துக் கொள்கிறார்.
இளவயது நண்பர் எனும் ஒரே காரணத்துக்காக ஒரு முக்கியப் பதவியை அவரிடம் கொடுப்பது நியாயமா? பல லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் சம்பந்தப்பட்ட முடிவு அல்லவா இது?
சினிமாவின் அடுக்கு மொழி வசனம் கெட்டது போங்கோ 🙂
பள்ளிக்கூடங்களில் ராணுவக் கட்டுப்பாட்டை கொண்டுவரவேண்டும்.
ஒரு கையில் நூறு பேருக்குத் தேவையான அபின் (விற்பனைக்குத்தான்; ஒரு பிஸினஸ்மேன் உருவாகிறார்); இன்னொரு கையில் சேவல்தோகையாக (காக்-டெயில்) வோட்கா கலந்த தண்ணீர் (இது விற்பனைக்காக அல்ல; சுய பயன்பாட்டிற்கு); பாகம் பாகமாகப் பிரிக்கப்பட்ட கைத் துப்பாக்கியுடன் உலா வரும் உள்ளூர் கஸப்களை எவ்வாறு எதிர்கொள்வது என்றும் மருதன் ஆலோசனை தரவேண்டுகிறேன்.
பச்சை, மஞ்சள், சிகப்பு என்று கிராஃப் போட்டு. குறிப்பிட்ட வகுப்பில் எத்தனை மாணவர்கள் படிக்கிறார்கள், அவர்களது மூன்று மாத பெர்ஃபார்மன்ஸ் என்ன, எடுத்த மதிப்பெண்கள் எவ்வளவு அனைத்தையும் கலரில் குறிக்கவேண்டும். இதை வைத்துக்கொண்டு குறிப்பிட்ட பள்ளியின் தரத்தை அதிகாரிகள் முடிவு செய்வார்கள்
இதில் என்ன தவறோ? ரிப்போர் கார்டில் போலி கையெழுத்து போட்டால்தானே பிரச்சினை!
ரிப்போர் கார்டே ஆகாதா? பள்ளியில் தூங்கினாலும், பள்ளிக்கே வராமல் இருந்தாலும், அடுத்த அடுத்த வகுப்பிற்கு பிரமோசன் உண்டா? மருதன் இன்னும் குழந்தையா; அதான் இவ்வளவு ஆசை!
பொதுப் பள்ளிகள் மீது ஏன் அரசாங்கத்துக்கும், குறிப்பாக கல்வி அமைச்சகத்துக்கும் இத்தனை காழ்ப்புணர்ச்சி? ஏன் இத்தனை வெறுப்பு? காரணம், பொதுப் பள்ளிகளில் அதிகம் படிப்பவர்கள் வெள்ளை இன அமெரிக்கக் குழந்தைகள் கிடையாது. கறுப்பினத்தவர்.
என்னது! அமெரிக்காவில் வெள்ளை இனம் மைனாரிட்டியா! சொல்லவே இல்லியே!!
பொறியியல் – கல்விக்கு அப்பால்: வாசகர் மறுவினை
பொறியியல் – கல்விக்கு அப்பால் கட்டுரை வாசித்தேன். தமிழ் பதிப்புலகில் அதிகம் பேசப்படும் சினிமாவும் அரசியலும் தவிர்த்த கட்டுரை என்ற அளவிலேயே கட்டுரை எடுத்துக் கொண்ட பேசுபொருளும், அதன் தொடர்பான எண்ணங்களும் முக்கியமானவை. மதிப்பெண்களைத் துரத்தும் கல்விமுறை குறித்தும் அசலான ஆய்வுகளை ஊக்குவிக்கும் வழிமுறைகள் குறித்த ஆசிரியரின் கருத்தோடு பெரும்பாலும் ஒத்துப் போகிறேன்.
எனினும், கட்டுரையில் ஆங்காங்கே தடாலடி பொதுமையாக்கங்கள் இருக்கின்றன. தான் அறிந்த சூழலை வைத்து, அதை இந்தியா முழுக்க நீட்டும் சூத்திரங்களும் இருக்கின்றன. இவை இரண்டும் கட்டுரை சொல்லும் கருவிற்கு பங்கம் உண்டாக்குகின்றன. பின்குறிப்பின் மூலம், இந்த வாதத்தை நிராகரித்து முற்றுப்புள்ளியும் வைக்கிறார்.
இப்பொழுது கேள்விகள்:
1. ஆராய்ச்சியைத் தூண்டும் கல்வியை ஊக்குவிக்க மூன்று காரணிகள் இருக்கின்றன: புதிய கண்டுபிடிப்புகளினால் ’செல்வம்’ சேர்க்கும் வாய்ப்பு; தேடலின் முடிவில் கிடைக்கும் சமூக ’அந்தஸ்து’; நாம் வாழும் உலகை மாற்றியமைக்கும் நாகரிகத்தை முன்னெடுத்தோம் என்னும் ஆத்ம ’திருப்தி’. இவற்றை இந்திய அமைப்புகள் தரும் சூழல் நிலவுகிறதா?
2. டிப்லோமா படிப்புகள் – இவை செயல்முறையை முன்னிறுத்தும் கல்வி. அவற்றை பொறியியல் படிப்போடு ஒப்பிட்டுப் பார்க்க இயலுமா?
3. மேற்குலகில் பொறியியல் படிக்காதவர்களும் பொறியியல் சார்ந்த வேலைகளில் ஈடுபடுகிறார்கள். இந்தியச் சூழலில் பொறியியல் பட்டயம் என்பது ”இவர் பொறுப்பானவர்; ஒழுங்காக வேலை செய்வார்; எதைக் கொடுத்தாலும் கற்றுக் கொள்வார்.” என்பதற்கான சான்றாதாரமாக விளங்குகிறதா?
4. கணிமொழியியல் – அமெரிக்காவில் கணித்துறை சார்ந்த வேலைக்கு பொறியியல் படிப்பு தேவையாக இருப்பதில்லை. பத்தாவது படித்தவரை வேலைக்கு அமர்த்துகிறார்கள். கணிவிளையாட்டுகளைக் கொண்டு பரிசோதித்து, அதில் திறம் வாய்ந்தவராக இருந்தால் கணினித்துறையில் நல்ல பதவியில் அமர்த்துகிறார்கள். இந்த நிலை இந்தியாவில் உருவாகுமா? (அதாவது பத்தாம் வகுப்புத் தேர்வு முடிந்து, ஓரளவு பக்குவம் வந்தவுடனேயே, டிசிஎஸ் போன்ற நிறுவனங்கள், மாணவர்களைப் பயிற்சிக்கு அழைத்துச் சென்றுவிடும். மூன்று வருடக் கால வேலை+பயிற்சிக்குப் பின் அசல் வேலையில் அமர்த்திக் கொள்வார்கள்.)
5. ஆராய்ச்சிக் கல்வி – இதற்கான சமூக அந்தஸ்து இந்தியாவில் எப்படி இருக்கிறது? நிறுவனத்தில் டைரக்டர், வைஸ் பிரசிடெண்ட் என்றால் அதிக மதிப்பு கிடைக்கிறதே! அதே சமயம் கண்டுபிடிப்புகளை காசாக்கும் சூழல் இந்தியாவில் எப்படி நிலவுகிறது?
6. மேற்குலகில் mentor எனப்படும் வழிகாட்டியை வாழ்நாள் முழுக்க துணையாக வைத்துக் கொள்கிறார்கள். இந்தியச் சூழலில், இதை மாமா, சித்தப்பா போன்ற குடும்ப உறவுகளும் கிராம சமூகங்களும் நிரப்பின. இன்றைய நகரமயமாக்கப்பட்ட நிலையில் உற்றாரின் ஆலோசனைகளும் கேட்பதில்லை. அண்டை வீட்டாரும் சொந்த விஷயங்களில் கருத்துச் சொல்வதை அந்தரங்கத்தின் குறுக்கீடாகவே எடுத்துக் கொள்கிறோம். இந்த வழித்துணைகளின்ம் உதவி கிடைத்தால் ஒவ்வொருவரின் தனித்தன்மையும் ஆர்வமும் தூண்டப் பெற்று ஆராய்ச்சிப் பாதைகளில் தெளிவு கிடைக்குமோ?
7. இதன் தொடர்ச்சியாக பத்ரி சேஷாத்ரி எழுதிய ”தமிழகத்தின் பல பொறியியல் கல்லூரிகளில் ஐ.டி என்ற பாடப்பிரிவை நீக்கியிருக்கிறார்கள்”, த.நி. ரிஷிகேஷ் ராகவேந்திரன் எழுதிய “தரகர், அலுவலர்,வேலை பெற்றுத் தருபவர் தேவை- ஆசிரியர்கள் தேவையில்லை” வாசிக்கப் பெற்றேன். தங்கள் கட்டுரையைப் போன்றே பெங்களூரூ சாணக்கியன் எழுதிய ‘வேலை’ கடிதம் வாசித்தீர்களா?
8. ஜெயமோகன் தளத்தில் கல்வியைக் குறித்தும் பாடத்திட்டத்தின் தேர்வுமுறைகள் குறித்தும் தொடர்ச்சியாக எழுதி வருகிறார். அவற்றில் அவர் குழந்தைகளுக்குக் கொடுக்கும் சுதந்திரத்தையும் தான் பழகிய ஆசிரியர்களையும் கல்வி குறித்த செய்திகளையும் அலசுகிறார். அதில் குறிப்பாக பெற்றொரின் பங்கு குறித்து நிறைய எழுதியிருக்கிறார். நம்முடைய பெற்றோர் இட்ட கட்டளைக்குப் பணிந்து நடப்பது போல், பொறியியல் கல்விக்கு அப்புறமும் மேலாளரின் கட்டளைக்கு அடிபணிய விழைகிறோமா?
9. வேலைக்குப் புதியதாகச் சேரும் எவரையும் எந்த நிறுவனமும் உடனடியாக பொறுப்புகளை சுமத்துவதில்லை. அதிலும் கல்லூரியில் இருந்து புத்தம்புதிதாக வருபவரை இரண்டு வாரங்களுக்காவது தனிப் பயிற்சிக்கு அனுப்புகிறார்கள். தங்கள் அலுவலில் பயன்படுத்தும் நுட்பங்களையும் வழிமுறைகளையும் விவரமாகக் கற்றுத் தருகிறார்கள். அதன் பிறகு இரண்டு மாதங்களுக்காவது, பரீட்சார்த்தமான வேலைகளில் மட்டுமே ஈடுபடுத்துகிறார்கள். மூன்று மாதம் ஆன் பிற்பாடு, நிஜ வேலைக்குள் நுழையும்போது துணை நிற்க அனுபவசாலி ஒருவரை கூடவே கண்காணிப்பாக வைக்கிறார்கள். இதை முதலீடாகக் கருதுகிறார்கள். இந்தியாவின் ஆய்வுத்துறையில் இவ்வாறு ஒவ்வொரு ஆராய்ச்சியாளருக்கும் தனிப்பட்ட கவனம் வழங்க பொருளும் மனிதவளமும் இருக்கின்றதா?
10. வாழ்க்கை ஆதாரமாக கல்வியும், அந்தக் கல்வியினால் கிடைக்கும் வேலையும் அமைந்திருக்கிறது. மேற்குலகில் இருபதில் இருந்து முப்பது வரை பரீட்சார்த்தமாக வாழ்வதை நடைமுறையாக வைத்திருக்கின்றனர். அதாவது, தனக்குப் பிடித்த விஷயத்தில் இளவயதில் தீவிரமாக இயங்குவது; அதில் வெற்றி பெற்றால் கோடிகளை அள்ளுவது; தோல்வி அடைந்தால் மீண்டும் கல்லூரிக்குச் சென்று வேறொரு பாதையைத் தேர்ந்தெடுப்பது. – ஒரு முறையோ, பல முறையோ கீழே விழுந்தால், அஞ்சாமல், கைதூக்கி ஊக்கமும் மீண்டும் நிதியும் கொடுக்கும் சமூக அமைப்பு இந்தியாவில் வர வேண்டுமா?
பின்னூட்டமொன்றை இடுக
Posted in Tamil Blog
குறிச்சொல்லிடப்பட்டது Analysis, ஆசிரியர், ஆய்வு, ஆராய்ச்சி, கல்வி, சம்பளம், சொல்வனம், ஜெயமோகன், திறமை, படிப்பு, பதில், பொறியியல், மாணவன், வேலை, Colleges, Comments, Compensation, Education, Employment, Engg, Engineering, Feedback, Jobs, Opportunities, Professors, Reply, Research, salary, Students, Study, Teachers, Tech, Technology, Thesis, University