Tag Archives: Parents

ஆயிரம் கொக்குக்குக் கண்ணியை வைத்து

அம்மா ஓர் அர்த்த ராத்திரி எழுத்தாளர். எல்லோரும் உறங்கிய பிறகு எழுதுவது அவருக்கு உகந்த நேரம். கணவன் காபி கேட்க மாட்டார். பிள்ளை பிஸ்கெட் தொணப்ப மாட்டான். கடைக்கான வேலைகள் முடிந்து ஏறக்கட்டப் பட்டிருக்கும். சமையல் செய்வது, பாத்திரம் கழுவுவது, விருந்தினர் வருவது, துணி துவைப்பது, சாமி கும்பிடுவது என்று கடமைகள் இடையூறு செய்யாது.

பக்கத்தில் மிக்சர். பிற்காலத்தில் மேரீ பிஸ்கெட். சிந்தனையை எழுத்தில் வடிக்க கொறிப்பதற்கு ஏதேனும் ஒன்று.

அவர் இராப் பிசாசு. அதற்காக காலையில் தாமதமாக எழுந்திருக்க மாட்டார். எனக்கு முன்பே எழுந்து வாசல் தெளித்து, வீடு பெருக்கி, காய்கறி நறுக்க ஆரம்பித்திருப்பார்.

எனினும், அவருக்கு எழுத வேண்டும். ஒரு திட்டத்தை ஆரம்பித்து விட்டால் அதை திருப்திகரமாக முடிக்கும் வரை ஓட்டம். மூடு இருந்தால் இருபது பக்கம். உடல் ஒத்துழைக்காவிட்டால் அன்றைய தினத்திற்கு நாலைந்து பக்கமாவது விஷயம் நகர வேண்டும்.

அவரின் பிசாசு என்னிடம் ஏற வேண்டும் என்பது என் அவா. மிக்சர் உண்டு. மாரியும் உண்டு. தமிழகத்தைப் போல் மின்வெட்டுகள் இல்லாத இரவும் உண்டு.

ஏக சிந்தனை கிட்ட என்ன வேண்டும்?

ஆயிரம் கொக்குக்குக் கண்ணியை வைத்துநான்
அப்பாலே போயொரு மிப்பா யிருக்கையில்
மாயிரும் காகங்கள் ஆயிரம் பட்டு
மறைத்து விறைத்துக் கிடப்பது போலவே
காயம் ஒடுங்கிக் கிடந்தது கண்டுநான்
கண்ணி சுழற்றி நிலத்திலே வைத்தபின்
சேயிழை தன்பொருட் டாலேபஞ் சாக்கரம்
செபித்த மன்னவன் பாவம்போ னாற்போலப் – போ

குற்றாலக் குறவஞ்சி 68 Kutralak kuravanji 68

ஆயிரம் கொக்குக்குக் கண்ணி வைத்தேன்
அப்பால் சென்று பதுங்கி இருந்தேன்.
அதில் ஆயிரம் காக்கைகள் பட்டுச் செத்து விறைத்துக் கிடப்பது போல் தோன்றியது.
அதைக் கண்ட நான் என் கண்ணிவலையைச் சுற்றி வைத்தேன்.
பெண்ணால் தவ வலிமையை இழந்த விசுவாமித்திர மன்னவன் மீண்டும் “நமசிவாய” பஞ்சாக்கர மந்திரம் ஓதியது போலச் சுருட்டி வைத்தேன்.

அமெரிக்காவில் தமிழ்க் கல்வி – தமிழ்ப் பள்ளி கொண்டாட்டங்கள்

பிரபுதாஸ் பட்வாரி அன்றைய ஆளூநர். 1977-80 வரை தமிழக கவர்னராக இருந்ததாக விக்கிப்பிடியா சொல்கிறது.

அவரின் சிறப்பு என்னவென்றால், எந்த விழாவிற்கு அழைத்தாலும் ஆஜராகி விடுவார். எங்கே அழைத்தாலும் வந்துவிடுவார். எப்பொழுதும், எந்தத் தருணத்திற்கும் சொற்பொழிவைத் தயாராக வைத்திருப்பார். எந்த அரங்கத்திலும் பொருத்தமாகப் பேசுவார்.

கலாமிற்கு முன்னுதாரணம் எனலாம். எளிமையானவர். எனக்கு ரொம்பப் பிடித்த சிரிப்பைக் கொண்டவர். அவரைப் போல் ஆக வேண்டும் என்பது என் பால்ய காலம் லட்சியம்.

திராவிட கலாச்சாரம் அதை பாதுகாத்தது. எனினும், எவர், எதற்குக் கூப்பிட்டாலும் சென்று விடுவதைப் பழக்கமாக்கி இருக்கிறேன்.

அவ்வாறு ரோட் ஐலண்ட் தமிழ்ப் பள்ளியின் ஆண்டு விழா கொண்டாட்டத்தில் பகிர்ந்த பேச்சு

அனைவருக்கும் வணக்கம்.

தமிழ்ப் பள்ளியை நடத்தும் ரமா சுப்ரமணியன், கார்த்திக் பால்சுப்ரமணியன், விஜயகுமார் சபாபதி, சாருலதா ரவிஷங்கர் அவர்களுக்கு வாழ்த்துகள்

ஆக்டன் தமிழ்ப் பள்ளி மணி அவர்களுக்கும் நெட்ஸ் ராஜ் அவர்களுக்கு பணிவு கலந்த வணக்கங்கள்

அமெரிக்காவில் பத்தில் ஒருவர் மட்டுமே பன்மொழி வித்தகர். பாக்கி தொண்ணூறு சதவிகிதம் ஒரு மொழி மட்டுமே அறிந்தவர்கள்.

இரு மொழியைக் கற்றுக் கொள்பவர்களுக்கு இயல்பாகவே மூளையில் சிக்கலான புதிர்களை விடுவிக்கும் அடுக்குகளும் இணைப்புகளும் உருவாகின்றன. ஒரே சமயத்தில் எதிரும் புதிருமான வாதங்களை அவர்களால் மனதிலும் சிந்தையிலும் தக்க வைத்துக் கொள்ள முடிகிறது. லத்தீன் மொழி வழிவந்த ஆங்கிலம், ஸ்பானிஷ், போர்த்துகீசிய, இத்தாலிய பாஷை போன்றவற்றை மட்டும் கற்றவர்கள் மூளை ஒரு மாதிரியாகவும். தமிழ் போன்ற திராவிட மொழிகளைக் கற்று அறிந்தவர்கள் மூளை மேலும் தீவிர இயக்கத்துடனும் ஆற்றலுடனும் செயல்படுவதாக ஆராய்ச்சியின் முடிவுகள் தெள்ளத் தெளிவாக தெரிவிக்கின்றன.

தேவையில்லாதவற்றை நினைவில் இருந்து நீக்குதல்,

கூடுதல் கவனம்,

சிக்கலைத் எவ்வாறு தீர்ப்பது மற்றும்

முடிவெடுத்தலில் தீர்க்கம் – எல்லாவற்றுக்கும் இரட்டைமொழி அவசியம்.

உதாரணமாக – S-O-R-R-Y

இதைப் பார்த்தால் ஆங்கிலம் மட்டுமே அறிந்தவர்க்கு ஒரே அர்த்தம்தான் விளங்கும். “தெரியாமப் பண்ணிட்டேன்… மன்னிச்சுடுங்க!”

தமிழ் அறிந்தவர்க்கு பல அர்த்தங்கள் ஓடும்.

சாரி – புடைவை எடுக்கலாம் என்று மனைவி சுட்டுகிறாரோ?

சாரி – ரங்காச்சாரி, வெங்கடாச்சாரி என்று எவரையாவது அழைக்கிறாரோ?

சா… ரிகமபதநி என்று தொடங்குவதற்கு முஸ்தீபு போட்டு ராகம் – தானம் – பல்லவி போட்டு தாளத்தை இழுக்கிறாரோ?

சாரி சாரியாக தமிழ் கற்க தன் மகவுகளை பெற்றோர் அனுப்ப வேண்டும் என்கிறாரோ?

சரி என்று சொல்லி வைப்போம். அதற்கும் ஆங்கிலத்தில் ஏறக்குறைய அதே எழுத்துகள்தானே!

கூழாங்கல்லை எடுத்து நதியில் வீசுங்கள்.

ஒரு மொழி அறிந்தவர் அதை தொப்பென்று ஒரே இடத்தில் வீசி முடிப்பவர்.

பல மொழி அறிந்தவர் என்றால் அந்தக் கல் பல்வேறு அலைகளை ஏற்படுத்தி தீர்க்கமானத் தொடர் தாக்கத்தை உருவாக்கும்.

பெற்றோர்களுக்கு

பல விதமான குழந்தைகளுடன் உங்களின் மகளும் மகனும் பழகுவதற்கு இந்தத் தமிழ்ப் பள்ளி உதவுகிறது.

திங்கள் முதல் வெள்ளி வரை அமெரிக்க நண்பர்கள்.

வாரயிறுதியில் நம் வரலாறும் பாரம்பரியமும் கைகோர்த்து ஒத்த மனங்கள் இணைவதற்கு இது ஒரு வாய்ப்பு.

அலுவல் நண்பர்களிடம் ஒரு விதமானப் பேச்சுகள் எடுபடும். அண்டை அயலார், பக்கத்து வீட்டுக்காரர்களோடு இன்னொரு விதமானப் பேச்சுகள் எடுபடும். நண்பர்கள் என்பது இங்கு இருப்பவர்கள். அவர்களிடம் மனம் விட்டு எதையும் கொண்டு வரலாம். அதற்கு இந்த முறைமை உதவுகிறது.

ஆய்வுகளும் தரவுகளும் இருக்கட்டும். ஒரு குட்டிக் கதை

வெந்நீர் சூடு போதுமா?

பண்ணையாருக்கு தினசரி வெந்நீர் தேவை. அந்தக் காலத்தில் தானியங்கியாக இயங்கும் தண்ணீர் சூடேற்றி – கீஸர் கிடையாது. காலையில் எழுந்து வெந்நீர் போடவென்று ஒருவரை வேலைக்கு வைத்து இருந்தார்.

சரியான பதத்தில் வெந்நீர் இருக்கிறதா என்று ஒவ்வொரு நாளும் அவனும் கேட்பான். பண்ணையார் எப்பொழுதுமே ஏதாவது குறை சொல்லி வந்தார்.

இன்னிக்கு சூடு போதலே என்பார்

இன்னிக்கு சூடு ஜாஸ்தி என்பார்.

ஒரு நல்ல நாளில் கொதிக்க கொதிக்க வென்னீரை வைத்துக் கொடுத்து, அவர் மேல் கொட்டி விட்டு ஓடியே போய் விட்டான் அந்த வெந்நீர் போடுபவன்.

அந்த வெந்நீர் போடுபவன் மாதிரிதான் ஒரு ஆசிரியரின் வேலை. பண்ணையாராக நம் பசங்களைப் பாருங்கள்.

அவர்கள் ஏதாவது சொல்லிக் கொண்டே தான் இருப்பார்கள். ஒன்னும் புரியலே; கஷ்டமா இருக்கு என்பார்கள்.

இதெல்லாம் எதற்குக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று புலம்புவார்கள்.

ஏற்கனவே தெரிந்த விஷயம் என்று போன வருடம் படித்ததை நினைவூட்டும் போது அங்கலாய்ப்பார்கள்.

ஆசிரியர்களும் (பெற்றோர்களும்தான்) தட்ப வெட்பம் பார்த்து அதற்கேற்ப இதமாக ஒத்தடமாக வென்னீர் வைக்க வேண்டும்.

பக்குவமாக ஆடிக் கறக்கும் மாட்டை ஆடியும் பாடிக் கறக்கும் மாட்டை பாடியும் கறக்க வேண்டும்.

அமெரிக்க வாழ்க்கை என்பது வானவில் போன்றது.

அதில் ஆங்கிலம் ஒரு வண்ணம்.

வானவில்லில் வெறும் ஏழு வண்ணங்கள் மட்டுமல்ல. அதையும் தாண்டி பல்வேறு வண்ணங்கள் ஊடுருவி இருக்கிறது என்பது நம் எல்லோருக்கும் தெரியும்.

வீட்டை வெள்ளையடிக்க ஹோம் டிப்போ போனால் ஐயாயிரம் வண்ணங்களைக் காட்டுவார்களே…

அது மாதிரி வானவில். அது மாதிரிதான் வாழ்க்கையின் வண்ணங்களும்.

அது போல் வானவில் வாழ்க்கையில் எல்லாவற்றையும் அறிவதற்கான பாதை இந்தக் கல்வி.

தமிழ் மழை போல் எங்கும் பொழிகிறது. அதில் சூரியனாக ஆசிரியர்கள் ஒளி வெள்ளம் பாய்ச்சி பாதையைக் காட்டுகிறார்கள். அப்பொழுது வானவில்லையும் அதன் சாத்தியங்களையும் உணர உங்கள் குழந்தைகளைத் தொடர்ச்சியாக தமிழ் பயில வைக்கிறீர்கள்.

தமிழ் ஆசிரியர் என்பவர் நம் வரலாற்றை உணர்த்துபவர்

தமிழ் மொழி நமக்கு அறத்தையும் வாழ்க்கை முறையையும் உலகையும் கற்றுத் தருவதற்கான பாதை

ஐயாயிரம் ஆண்டுகளாகத் தொடர்ச்சியாக புழக்கத்தில் இருக்கும் பழக்கத்தைத் தொடர்ச்சியாக பயில்வோம்! வெல்வோம்!!

சிறார் கதைகளும் ஆன்மிகமும் சற்றே ஜோதிடமும் – ஆர். பொன்னம்மாள்

ஆசானின் தளத்தில் அம்மாவைப் பற்றி பார்த்தபொழுதில் பெரிதும் மகிழ்ச்சியாக இருந்தது.

அதிலும் எங்கோ சிம்மாசனத்தில் காந்தியைப் போல், ராமானுஜரைப் போல், ரஜினியைப் போல் அமர்த்தி வைத்து பின்பற்றுவோனை “நண்பர்” என்று வேறு சொல்லியிருந்தது ஊக்கமும் பெருமிதமும் கொள்ள வைத்தது.

ஜெயமோகன் எப்பொழுதுமே செயல்வேகமும் தண்மையான பரிந்துணர்வும் கொண்டவர். அம்மாவும் ஒரு வகையில் அவ்வாறே.
ஜெ.மோ. எப்பொழுது கடிந்து கொள்வார், எவ்வாறு அறச்சீற்றம் என்னை இடித்துரைக்கும் என்று புயல் கடந்த பிறகே உணர முடியும். அம்மாவும் ஒரு வகையில் அவ்வாறே.
ஜெயம் என்றால் எழுத்துப் பிசாசு, கதைசொல்லி. அம்மாவும் ஒரு வகையில் அவ்வாறே.

ஆர்.பொன்னம்மாள் – Tamil Wiki

விக்கி பக்கத்தைக் குறித்து அம்மாவிடம் காண்பித்தேன்; சொன்னேன்.

“நீயும் விக்கிப்பீடியா பக்கம் செய்யறேன்னு சொன்னே… என்னிக்காவது நேரம் கிடைக்கும்போது, ரிடையர் ஆனபிறகு செஞ்சுடுவே! நம்பிக்கை இருக்கு… ஒண்ணும் அவசரமில்ல!” என்றார்.

வாழும் போது கிடைக்கும் மரியாதை அட்சர லட்சம்!

ஆர்.பொன்னம்மாள் | எழுத்தாளர் ஜெயமோகன் (jeyamohan.in)

Morals from Children Movie: The Odd Life of Timothy Green

‘தி ஆட் லைஃப் ஆஃப் டிமொத்தி க்ரீன்’ பார்த்தேன். சிறுவர்களுக்கான படம். பெண்களை குறிவைத்து எடுக்கப்பட்ட படம்.

படத்தின் ‘அறமாக’ இவற்றை பட்டியலிடலாம்.

* நம் குழந்தை இப்படித்தான் இருக்கணும்னு நினைத்தால், அவர்களின் வளர்ச்சி அதனுடனேயே நின்றுவிடும்.

* தத்து எடுத்துக் கொள்; குறைகளுடன் வாழ ஏற்றுக் கொள்.

* செட்டில் ஆகாதே; தரையில் இருந்து கொண்டே நட்சத்திரங்களை பறிக்க ஒவ்வொரு நொடியும் முயல்!

என்னுடைய பையன் கிரிக்கெட்டில் நல்லா ஆடணும், சுவாரசியமாப் பேசணும், என்றெல்லாம் புகுத்தாமல், அவனுடைய வாழ்க்கையை அவனே வாழட்டும் என்பது மைய சித்தாந்தம். அப்படி எல்லாம் வாழவிடுகிறோம் என்பது அமெரிக்கர்களின் நோக்க உலகாயதம். சினிமாக்களிலாவது இப்படி நம்பிக்கையும் நல்ல விஷயங்களையும் தொடர்ச்சியாக முன்வைப்பது அவர்களின் கற்பனை வேதாந்தம்.

புதிய தலைமுறை: தாய் மண்ணே வணக்கம்

புதிய தலைமுறையின் சுதந்திர தின ஸ்பெஷல் (1)

புதிய தலைமுறை: தாய் மண்ணே வணக்கம்: விடுதலை நாள் வெளியீடு (2)

”இந்தியா காலேஜில் போட்டா, இவ்ளோ ஆகாது இல்ல? சீட்டும் ஈஸியா கெடச்சிடும்!”

குளிர்கால கிறிஸ்துமஸ் பார்ட்டி ஆகட்டும்; கோடைகால பிக்னிக் ஆகட்டும். அமெரிக்காவில் வாழும் எங்களிடையே இதுதான் இன்றைய பேச்சு.

’தாய் மண்ணே வணக்கம்’ என்று வணங்க மட்டும் செய்யாமல், தாங்கள் கற்ற மண்ணிலேயே தங்கள் மகவுகளும் கல்வி கற்க அனுப்புவதுதான் தற்போதைய தேசி ட்ரெண்ட்.

பள்ளிக்காலம் வரை குடும்பச்சூழலில் ஹிட்லர்தனமான கெடுபிடிகளுடன் வளர்ந்த பையன், பதின்ம வயதில் கல்லூரியில் நுழையும் சமயத்தில்தான் கட்டுப்பாடுகளற்ற முழு சுதந்திரத்தையும் அதற்கு ஈடு கொடுக்கும் பணப்ப்புழக்கத்தையும் காண்கிறான். பெண்களுக்கு நேரும் நிர்ப்பந்த குழப்பங்களும் இருபாலார் இணைந்து தங்கும் விடுதிகளில் சேர்த்துவிட வேண்டிய விருப்பத்தேர்வின்மையும் பெற்றோரை அலைக்கழிக்கிறது.

இதற்கான குறுகிய கால தீர்வாக இந்தியாவிற்கு மூட்டை கட்டி அனுப்பி விடுகிறோம்.

‘லேட்டாக வரீங்க… குழந்தைகள கவனிக்கிறதேயில்ல!’ குற்றச்சாட்டுகளிலிருந்து விடுதலை கிடைக்கிறது. நம்மை நன்றாக வளர்த்து முதலீட்டுக்குரிய விருப்ப வஸ்துவாக்கிய தாத்தா, பாட்டியின் கைகளில் பேத்தி, பேரன்கள் ஒழுங்காக வளர்வார்கள் என்னும் நம்பிக்கையும் உண்டு.

மொத்தத்தில் பணங்காச்சி இயந்திரங்களை உருவாக்கும் புனிதத்தலம். காந்தியும் விவேகாந்தரும் பின்பற்றும் நிலையான ஆன்மிக மணம் கவழும் அமுதமனம். பக்கத்து வீட்டு மாமாவும் ஒன்றுவிட்ட ஊர்க்கார சொந்தமும் எப்பொழுதும் கண்காணித்திருக்கும் கோள்மூட்டும் விழிப்புணர்வு கேந்திரம்.

‘உன் வாழ்க்கை உன் கையில்’ என்று முடிவெடுக்கும் உரிமையை இந்திய நடுத்தரவர்க்கம் கொடுக்க ஆரம்பித்துவிட்டது. ஆனால், தாங்கள் புலம்பெயர்ந்தபோது எப்படிப்பட்ட எண்ணங்களை வைத்திருந்தோமோ, அப்படியான விழுமியங்களையே தொடர்ந்து தேங்கிப் போய்விட்டிருக்கிறோம்.

‘தினமும் கோவிலுக்குப் போய் வருவாள். சிவ சேனா மாதிரி நிறைய பேர் இருக்கிறார்கள். குட்டைப் பாவாடை எல்லாம் போட்டுக் கொள்ள மாட்டாள்.’ – இது பெண்ணைப் பெற்றவர்.

‘இங்கே படிப்பதையே பசங்க ரொம்ப கேவலமா நெனக்கிறாங்க. சிரத்தையா பரீட்சை எழுதறவன கீக்னு சொல்லி அந்நியமாக்கி ஒதுக்கிடறாங்க. அவன் கே ஆயிடுவானோன்னு பயமா இருக்கு. அவனுக்கு ஃப்ரெண்ட்ஸே இல்லியே!’

இந்தியாவில் ஆண் குழந்தையைப் பெற்றவர் இப்படியெல்லாம் கவலை கொள்வதில்லை. தற்பால்விரும்பியாக இருப்பது அவரவர் விருப்பமென்று இந்தியப் பெருநகரங்கள் ஒப்புக் கொண்டுவிடலாம். ஆனால், அமெரிக்க வாழ் இந்தியருக்கு ஒவ்வாமை கலந்த அதிர்ச்சி தருவதாகவே ஒரினச்சேர்க்கை அமைந்துள்ளது.

இந்தியர்கள் காலப்போக்கிற்கு ஏற்ப மாற்றிக் கொள்வதில் வல்லுநர்கள். டார்வின் சொன்ன பரிணாம வளர்ச்சியில் முழு நம்பிக்கை கொண்ட அறிவியலாளர்கள். சிவன் தலையில் கங்கை இருப்பதை கும்பிட்டுக் கொண்டே அணை கட்டுவார்கள். அப்படியே மூன்றாம் பிறையை அரோகரா போட்டுக் கொண்டே சந்திரனில் நீர் இருப்பதை உலகெலாம் ஓதுவார்கள்.

இந்த விஞ்ஞானமும் மெய்ஞானமும் கலந்துருகும் கலயம் எனக்கு ரொம்பவேப் பிடித்திருக்கிறது. அந்த மாய யதார்த்தத்தைத் தேடித்தான் மக்கட்செல்வங்களை இந்தியாவைத் திரும்ப அனுப்புகிறோமோ?!

அன்னையைப் போல் ஒரு தெய்வமில்லை

நன்றி: Pajama Diaries

வாலிபம் – வளப்பம் – வணிகம்

அமெரிக்காவின் புதிய தலைமுறைபணக்காரரின் அலுப்பு :: The Phoenix > Lifestyle Features > Living beyond their means?: “The go-go ’80s have receded into the oh-no aughties, but not everyone has gotten the memo.”

ஏற்றிவிடுவதில் அமெரிக்காவின் கெட்டிக்காரத்திற்கு நிகர் கிடையாது. இந்தியாவில் காதலில் மட்டுமே ஊக்க வார்த்தை கொண்டு நிரப்பும் நண்பர் உலகம் என்றால், இங்கே பள்ளியில் துவங்கி பெற்றோர் வரை எல்லோருமே ‘உன்னால் முடியும் தம்பி’ உதயமூர்த்திகள். இப்படி உசுப்பேற்றியே உருப்படாமல் போனதின் குணச்சித்திரமாக Seinfeld தொடரின் ஜார்ஜ் பாத்திரம், நடப்பு ஆண்டில் பட்டதாரியானவரின் முன்னோடியாக காணப்படுகிறார்.

இந்த வருடம் கல்லூரியை முடித்தவர் என்ன செய்கிறார்?

  • ஃப்ளிக்கரில் புகைப்படம் ஏற்றி, ட்விட்டரில் இருக்கும் இடத்தை சொல்லி, நாளொன்றுக்கு எட்டு டாலர் பொக்கீடில் உலகம் சுற்றக் கிளம்புகிறார்.
  • இன்னும் கொஞ்சம் கடன் வாங்கி, மேற்படிப்புக்கு சென்று விடுகிறார்.
  • முதலீட்டு தேவதைகளின் துணை கொண்டு, சொந்தமாக வெப் 3.0 நிறுவனம் துவங்குகிறார்.
  • அப்பாவின் கோடை வாசஸ்தலத்தில் ஆறு மாசம்; அம்மாவின் இரண்டாவது விவாகரத்தில் கிடைத்த ஐரோப்பிய வீட்டில் ஆறு மாசம் தங்க ஆரம்பிக்கிறார்.
  • மருத்துவத்துறையில் நர்ஸ், உள்நாட்டு பாதுகாப்பு, ஆசிரியப் பயிற்சி என்றெல்லாம் சீக்கிரமே அலுக்கும் வேலையைப் புறக்கணித்து, சிரம பரிகாரம் எடுக்கிறார்.

மேற்கத்திய உலகில் வேலை எப்போதுமே அவசியமாக ஒன்றாக இருந்ததில்லை. சமூக அந்தஸ்து செய்யும் தொழிலினால் நிர்ணயிக்கப்படுவதில்லை. பொருளாதார அந்தஸ்து என்பது ரஜினி படம் மாதிரி – சில சமயம் அமோகமாக சோபிக்கும்; சில சமயம் பாபா ஆகி விடும்.

இந்தியாவிலும் இந்தத் தலைமுறையினரின் எண்ணம் இவ்வாறே உள்ளது. “என் அண்ணனைப் போல் எனக்கு குழந்தை, குட்டி கிடையாது. அப்பாவை போல் பிடிக்காத வேலை செய்யப் போவதில்லை. வாலிபம் இருக்கும்போதே வளப்பமாக இல்லாவிட்டாலும், ஆடிப் பாடி கொண்டாடுவோம்” என்னும் நிகழ்காலத்தைக் கொண்டாடுபவர்கள்.

எனக்குக் கிடைக்கும் ஊழியத்தை விட, மாதா மாதம் சம்பளம் தரும் சம்பாத்தியத்தை விட, நான் விரும்பி செய்ய நினைப்பதை — அன்றாடம் பணியாக அமைவதே லட்சியம் என்கிறார்கள்.

நாலு நாள் குண்டி காஞ்சா பவுசும் பராக்கிரமும் தெரியவரும்.

வறுமையின் நிறம் சிகப்பு நிஜ வாழ்க்கையின் பகிடி :: iowahawk: Hot New Trend: Carefree Hipsters Go For Funemployment, Starve-cation: Jobless jitters? Not for these young folks, who are embracing idleness and finding fulfillment in local Del Taco dumpsters.

தொடர்புள்ள முந்தைய பதிவு: வேலையில்லாதவன்தான்! வேலை தெரிஞ்சவன்தான்?

பரிந்துரை: இரண்டு இணையத்து சிறுகதைகள்

சமீபத்தில் இரு நல்ல புனைவு வாசிக்க கிடைத்தது. அவை:

1. சத்யராஜ்குமார் :: மைய விலக்கு « இன்று – Today

2. ரா. கிரிதரன் :: வார்த்தைகளின் விளிம்பில்: தேவதைகள் காணாமல் போயின – சிறுகதை

அவற்றை முடித்து விட்டு இந்தப் பதிவைப் படிப்பது கதைகளுக்கு நீங்கள் செய்யும் ஷேமம்.


மேற்கோள் மூலை

ச.ரா.குமார் கதையில் இருந்து கவர்ந்த இரு இடங்கள்:

அ) இன்பாக்சில் நிஷா அனுப்பிய மின்னஞ்சல். ரொம்பவும் கோபமாகி விட்டால் நிஷா இமெயிலில்தான் பேசுவாள். பத்து கிலோ பைட்களுக்கு திரையில் தெரிந்தது அவள் கோபம்.

ஆ) ‘நீயும், நிஷாவும் ஏன் இப்படி கஷ்டப்படணும்? பார்த்துக்க ஆயிரம் பேர் இருக்காங்க. இங்கே நிறைய சொகுசு இருக்கு. ஆனா லைஃப் இல்லை. நாலு சுவத்துக்குள்ள நாம நாலு பேருமே முகத்தைப் பார்த்துக்கிட்டு… மெட்ராசுக்குப் போயிரலாம்டா.’


ரா.கி.யில் கவர்ந்தவற்றிற்கு சாம்பிள்:

அ) ஜீரணமாகாத உணவை தள்ள முயற்சிப்பதுபோன்ற கடலின் முயற்சி ஒவ்வொறு முறையும் அலையென தோற்கும் காட்சி வியப்பானதே. எதைஎதையோ விழுங்குவதும், பின்னர் எதுவுமே தெரியாதுபோல் கிடப்பதும் இதற்கு வாடிக்கையாகிவிட்டது.

ஆ) ஜப்பான் நாட்டவர்களின் முகவடிவம், எங்கு ஆரம்பித்தாலும் கூர்மையான தாடையிலேயே விழும்.


ஆறு வித்தியாசங்கள்

இரு கதைகளுமே அதிர்ச்சி அல்லது வித்தியாசமான முடிவில் நம்பிக்கை கொண்டவை. இரு கதைகளுக்குமே அது தேவையில்லை என்பது வேறு விஷயம்.

ஒன்று போட்டிக்காக எழுதப்பட்டது. மற்றொன்று அந்தவித நிர்ப்பந்தங்களுக்குட்பட்டு உருவாகாவிட்டாலும், போட்டியில் கலந்துகொள்வதற்கான முஸ்தீபுகளும் முகாந்திரங்களும் நிறைந்தது.

வார்த்தைகளின் விளிம்பில் நிற்பவரிடம் கதை ஜாஸ்தி. இன்று – டுடேவிடம் மூக்கு மேல் வரவைக்கும் விவாதப்புள்ளிகள் ஜாஸ்தி.


விமர்சனம்

சத்யராஜ் கதையில் விமர்சிக்க விஷயம் ஏதுமில்லை. பட்டிமன்றம் மாதிரி இன்னும் கொஞ்சம் எண்ணவோட்டமோ, உரையாடல் மன்றமோ கட்டி, மெரீனா பீச் மணல் அளவு வியாபிக்க கூடிய சமாச்சாரத்தை சுண்டல் மாதிரி பொட்டலம் கட்டி இருக்கிறார்.

குறைந்த பட்சம் அந்த மின்னஞ்சலையாவது அனுபந்தம் ஆக்கி இருக்கலாம் என்னும் ஏக்கம் இருக்கிறது.

oOo

காதலியின் நினைவுகள் என்று இன்னொரு கதை எவராவது எழுதினால் அலுவலை நோக்கி(யே) வடக்கிருக்கலாம் என்று எண்ணுமளவு அலுத்துப் போன டாபிக்கில் பூந்து விளையாடியிருக்கிறார் கிரி. சம்பிரதாயமான ஆரம்பம்.

இத்தினியூண்டு கதையில் உலாவும் அத்தனை பாத்திரங்களுக்கும் மனதில் நிற்கும் அறிமுகங்கள். தண்ணீரில் மிதக்கும் ப்ளாஸ்டிக் ஆக, கவிஞர்களே உவமைகளுக்கு பஞ்சம் பாடும் இந்தக் காலத்தில் சக்கையான தக்கை கொண்ட மிதவையான உறுத்தாத பயன்பாடு அமர்க்களம்.

அப்படியே, ‘நான் அந்தக் காலத்தில் லால் கிலாவில் இப்படித்தான்…’ என்று காதலி காலடி தேட வைப்பதே கதையின் வெற்றி.

இருவருக்கும் என் நன்றி.