எதிர்பார்க்காமல் அது நிகழ்ந்தது. மாலன் சார் பாரிந்துரைத்ததாக சிங்கை மீடியாகார்ப் அணுகினார்கள்.

ஒரு சவுண்ட் பைட் வேண்டும் என்றார்கள். முன்பின்னே கொடுத்ததில்லை. அனுபவம் கிடையாது என்றேன்.
சரி… அழைத்துப் பேசுகிறோம். அதன் பின் வெட்டி எடுத்துக் கொள்கிறோம் என்று சம்மதித்தார்கள்.
கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் பேசினோம்.
– சமூக ஊடகங்களில் எவ்வாறு இளைஞர்கள் வீழ்ந்து, அமிழ்ந்து, கலந்திருக்கிறார்கள் என்றும்
– அமெரிக்கத் தேர்தலில் ட்விட்டரும் ஃபேஸ்புக்கும் இன்ஸ்டாகிராமும் யூடியூபும் ஆக்கிரமித்திருக்கிறது என்றும்
– தேர்தலுக்கு முன் நடந்த ஆர்ப்பாட்ட ஒத்திகைகள் எவ்வாறு அரங்கேறின என்றும்
அது கொஞ்சம் தன்னம்பிக்கையை அதிகரித்து, பாட்காஸ்டிங் துவங்கலாமா, நாமும் பொக்கிஷம் டிவி விக்கி ஆகிவிடலாமா என்று ஆசை கொடுத்தது.
அதன்பின் வழக்கம் போல் காலை எழுந்ததும் கட்டஞ்சாயா, அதன் பின் நாள் முழுதும் அலுவல் சந்திப்பில் கேமிராவைப் பார்த்துப் புன்னகைத்துக் கொண்டே பேசுவது என்று பழைய வழக்கமான வாழ்க்கைத் தொடர்ந்தது.

தேர்தல் நாளில் திடீரென்று வாட்ஸப் அழைப்புகள் பறக்க ஆரம்பித்தன. எல்லாமே சடாரென்று நடந்தது. நியூஸ் 18 நேரலையில் டொனால்டு டிரம்ப் குறித்தும், வாக்களிப்பு குறித்தும், ஜோ பைடன் குறித்தும், கமலா ஹாரிஸ் குறித்தும், அமெரிக்காவின் இந்தியக் கொள்கை குறித்தும் நிறையப் பேசினேன். ஆசைதீருமளவு வாய் வலிக்குமளவு கருத்துகளை அள்ளிக் கொட்டினேன்.

பின் இரவு ஒரு மணி அளவில் உத்தரவு வாங்கிக் கொண்டேன். தீபாவளிக்கு முந்தின இரவு வெடி வெடிப்போம். எல்லாரும் தூங்கிய பிறகு… அனைத்து வெடிச்சத்தமும் அடங்கிய பிறகு… கடைசி வெடியைப் போடுவோம். சொல்லப் போனால் தூங்காமலேயே, முன்றரை மணிக்கு மீண்டும் வெடியைத் துவங்கி விடுவோம்.
அன்றும் அப்படித்தான். news18 முடிந்ததும் சன் தொலைக்காட்சியில் துவங்கினார்கள். சிவராத்திரியே தான்!
அரைத்த மாவையே அரைத்தேன். காட்டமான எண்ணங்களைச் சொல்வது; அதன் பின் எதிர்த் தரப்பிற்கும் சற்றே வக்காலத்து வாங்குவது. வழவழா கொழகொழா ஆக முத்தாய்ப்பு வைத்து முடிப்பது – இப்படியே த் தொடர்ந்தேன்.

அந்த உலகம் அவசரமும் சுவாரசியமும் பரபரப்பும் நிறைந்த உலகம். எவரோ நுழைகிறார்கள். ஸ்கைப் அழைப்பில் நேரடி ஒலிபரப்பைப் பார்க்கும் போதே, “சற்றுமுன்” என்று மாறிவிடுகிறார்கள். அந்தத் தொலைக்காட்சியில் ஆளுங்கட்சிக்கு ப்ரேக்கிங் நியுஸ்; இந்தத் தொலைக்காட்சியில் கொரோனா நோய் பீடிப்பில் இறந்தவர்களின் கணக்கு – நடுவில் நானும் ஃபாக்ஸ் டிவி (ரிபப்ளிகன் சார்பு), எம் எஸ் என்பிசி (டெமொகிராட்ஸ் ஆதரவு), பி.பி.எஸ். (தூர்தர்ஷன் மாதிரி) எல்லாம் மாற்றி மாற்றி பார்க்கிறேன்.
காபி துளிக் கூட அருந்தாமலே மூளை சுறுசுறுப்பாக இருந்தது. சாந்தோம் பள்ளி மாணவர்கள் எனக்கு செய்திச் சுருக்கங்களை நறுக் நறுக்கெனக் கொடுத்துக் கொண்டிருந்தது வெகு உதவியாக இருந்தது.

நியூஸ் பதினெட்டு கன்னலில் எட்வர்ட் சார் கூடவும் ஜூனியர் விகடன் காலத்தில் இருந்து வாசித்தும் எஸ். ராமகிருஷ்ணன் வந்திருந்தபோது நியூ ஜெர்சியில் வைத்து சந்திக்கவும் செய்த பிரகாஷ் எம் ஸ்வாமி கூடவும் நேரலையில் பேசியது அளவொண்ணா மகிழ்ச்சியைத் தந்தது.
அமெரிக்காவில் அடிக்கடி தேர்தலும் வாக்குப் பதிவும் நடந்தால் எனக்கு வாழ்க்கை விறுவிறுப்பாக இருக்கும். மிட்ச் மெக்கானல் உடனோ ஜான் ராபர்ட்ஸ் கூடவோ பேசி நடத்தி விட வேண்டும்.
போதையில் இருந்து மீண்டு கொண்டிருக்கும்,
பாபா













































Mayanti Langer – Indian Cricket Commentators
இந்த உலகக் கோப்பையில் நான் ரசித்த முதல் அம்சம் மயந்தி லங்கர்.
வெறுமனே கவர்ச்சிக்கும், ஊறுகாயாகத் தொட்டுக் கொள்ள பெண் தொகுப்பாளினியும் இருந்த காலகட்டம் காணாமல் போயிருக்கிறது. இவர், “நீயா… நானா?” கோபிநாத் ரகம். தரமான கேள்விகள்; சுனில் கவாஸ்கார் போல் ஒயிலான மிடுக்கு; காதில் வருவதையும் எதிராளி பேசுவதையும் நேரமும் இடமும் அறிந்து முன்னெடுக்கிறார்.
நான் மந்திரா பேடி காலத்தவன். அவர் டி.டி.எல்.ஜே (தில்வாலே துல்ஹானியா லே ஜாயேங்கே) படத்தில் நடித்த ஒரே குற்றத்திற்காக, கிரிக்கெட் போட்டிகளிலும் நடுவே வந்து போனார்.
அதற்கும் முந்தைய ஹிந்தி மட்டுமே அரசாண்ட பிஷன் சிங் பேடி, லாலா அமர்நாத், கிஷோர் பேமானி, சுஷில் ஜோஷி போன்றவர்கள் பேச்சைக் கேட்டால், குளக்கரையில் கரையும் காகங்களின் இனிமை புரியவரும். ஹிந்தி தெரிந்திருந்தால் அந்த மொழியை இப்படியாக உபயோகிக்கக் கூடாது என்பதும் தெரியவரும். டிவியின் ஒலியை மொத்தமாகக் குறைத்துவிட்டு, வெறுமனே காட்சியை மட்டும் பார்க்கலாம். அதாவது, இளையராஜா பாடலை ரேடியோவில் ஒலிக்க விடுங்கள். தொலைக்காட்சியில் ஒரு நாள் போட்டி ஓடும்.
ஆங்கில காமெண்டரி எப்பொழுதுமே தேவலாம். நரோத்தம் பூரி போன்றவர்கள் ஜமாய்ப்பார்கள். எனினும், பென்சன் அண்ட் ஹெட்ஜஸ் உலகக் கோப்பையில் ஆஸ்திரேலிய வர்ணனையாளர்களை எந்த இங்கிலீஷ்காரராலும் தொட இயலவில்லை. ரிச்சி பெனாட், டோனி கிரெக் – இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரங்கள் சரிந்தால் கூட மென்மையாகச் சொல்வார்கள். ஸ்டீவ் வாக் வெளுத்து வாங்கினால் கூட குறைகளைச் சுட்டுவார்கள்.
அதன் பிறகு நிறைய பேர் வந்ததாகக் கேள்விப்பட்டேன். ஹர்ஷா போக்ளே, சித்து – இவர்கள் மைக்கை பிடித்த போது எனக்கு கிரிக்கெட் எட்டாத கனியாகி விட்டிருந்தது.
மீண்டும் ஐ.பி.எல். மூலமாக வந்த போது அறிமுகமான பெண் வர்ணனையாளர் மாயாந்தி. லட்சணமாக இருந்தார். இன்னொரு மந்திராவோ என மிரட்சியுடன் அலட்சியமாகக் கேட்டேன். சுனில் கவாஸ்கரின் ஒய்யாரமும் ரவி சாஸ்திரியின் ஆங்கிலப் புலமையும் கவனிக்க வைத்தது. ஆனால், அவரை பின் தொடர வைத்தது — அந்த ஆஸ்திரேலியாக்காரர்களின் வாக்கு வன்மை.
கொஞ்சம் தேடினால், என்னென்னவோ சாதித்து இருக்கிறார் மாயந்தி. எப்பொழுது இருந்தோ அளவளாவுகிறார் லங்கார். எதெதற்கோ நேரடி ஒலிபரப்பாளர் ஆக இருந்திருக்கிறார் லங்கர். கணவன் கூட புகழ் பெற்றவராம். நம்ம 83 ரோஜர் பின்னியின் மகனை மணமுடித்திருக்கிறார்.
சந்தோஷமாக இருந்தது. கிளப் ஆட்டம் போல் இறக்கிவிடப்பட்ட மசாலா பதார்த்தங்கள் இன்று லியோ சிங்கமாக முழுமுதல் திரையையும் காத்திரமாக ஆக்கிரமித்து விவரணையை விவரமாகத் தருவது – புதிய தலைமுறையின் சாதனை.
பின்னூட்டமொன்றை இடுக
Posted in Tamil Blog
குறிச்சொல்லிடப்பட்டது மயந்தி லங்கர், மாயாண்டி லாங்கர், Commentators, Compere, Comperer, Comperers, Coordinator, cricket, DJ, Doordarshan, Events, icc, Interviewer, Interviews, IPL, Live, Mayanti Langer, Sports, Tournaments, TV, wc23, world cup