Tag Archives: Life

முத்துக்குமாரும் காந்தியும்: கேள்விகள்

1: தற்கொலை குறித்து உங்கள் கருத்தென்ன?

2. உயரிய லட்சியங்களுக்காக தன்னை வருத்திக் கொள்வதும், தற்கொலை செய்து கொள்வதும் அதற்கு வீரவணக்கம் செய்வதும் பாராட்டுக்குரிய செயலா?

3. அடைய வேண்டிய இலக்கிற்காக வழிமுறையில் சில சமரசங்களை செய்து கொள்ளலாமா?

4. கணவன் இறந்தவுடன் மனைவியையும் தீக்குளிக்க வைப்பது சரிதானா?

5. வாழ்க்கையின் பாரத்தைத் தாங்க இயலாதவர்கள் தற்கொலை மேற்கொள்கிறார்களா?

6. மற்றவர் மேல் எல்லா சுமையையும் போட்டுவிட்டு, தான் தீக்குளித்து விடுதலைப் பெற்றுக் கொள்கிறார்களா?

7. கிறித்துவத்தில் பாவமன்னிப்பு; பௌத்தத்தில் கர்மா; இஸ்லாமின் சொர்க்கம் போல் இல்லாமல் இந்து மதத்தில் மறுபிறவி போன்ற கருத்தாக்கங்கள்தான் தியாகத்தின் சின்னமாக அர்ப்பணிக்க வைக்கிறதா?

8. உயரிய இடங்களை அடைய முடியாதவர், மற்றவரைக் கண்டு பொறாமைப்படுபவர், அடுத்தவரின் மதிப்பிற்கு ஆசைப்படுபவர்களை எல்லாம், இந்த வீரவணக்க நிகழ்வுகள் உயர்வு நவிற்சிக்கு வித்திட வைத்து, தீக்குளிப்புகளை ஊக்கப்படுத்துகிறதா?

9. வீரம் என்றால் கத்தி கொண்டு போரிட்டு சண்டையில் எதிரியை வீழ்த்துவதா?

10. தற்கொலையும் கூடாது; உண்ணாவிரதத்திலும் பயனில்லை; அப்படியானால் அறப்போராட்டங்களைத் துவக்கி, பெருமளவில் மக்களிடம் கொண்டு சென்று, ஆட்சியார்களிடம் மாற்றத்தை எவ்வாறு உருவாக்குவது?

11. ஒபாமா போல் பெரிய அளவில் துவக்க கால பணசேமிப்பு இல்லாமல், சுய ஆர்வத்தை வித்தாக வைத்து, பலரை ஈர்த்து, மாற்றங்களுக்கு கால்கோள் இடுவது எங்ஙனம்?

12. திருவிழா கொண்டாட்டம் போல் வீரவணக்கமும் குழுவாகக் கூடி கூத்து போட்டு, கும்பலாக ஒன்றுசேர்ந்து, கூட்டம் பார்த்து பிரமித்து, மகிழ்ச்சியைப் பகிரும் தருணங்கள்தானா?

காதலர் தினக் கதைகள்

Happy Valentines Day!

அன்பர் தினத்திற்காக என்ன வாங்கிக் கொடுக்கலாம் என்று யோசித்துக் கொண்டே விலுக் விலுக்கென்று நடந்தபோதுதான் அது நடந்தது. நடந்தால்தான் பரவாயில்லையே! கால் வழுக்கி கீழே உடல் விழ, வலது கை அதிரடியாகத் தாங்கி தோள் கொடுத்தது.

சமாளித்து பயணத்தைத் தொடர்ந்தேன்.

நண்பரிடமும் இந்த வீர சாகச விழுந்தெழுந்த கதையை சொன்னேன். எங்களுக்கு அறிமுகமான இன்னொரு நண்பருக்கு நிகழ்ந்ததை விவரிக்க ஆரம்பித்தார்.

மனைவி ஊருக்கு புதுசில்லை. என்றாலும் ஆனைக்கும் அடி சறுக்கும் அல்லவா? பனியில் தவறி விழுந்திருக்கிறார். சுற்றும் முற்றும் எவரும் பார்க்கவில்லையே என்று உறுதி செய்துவிட்டு அசால்ட்டாக அப்படியே விட்டும் விட்டார்.

இரண்டு வாரம் கழித்து தலைவலி, மண்டையிடி. மருத்துவரிடம் போனால் எம்.ஆர்.ஐ, ஸ்கேன் செய்து தலையில் கட்டி இருப்பது தெரியவந்துள்ளது. பனியில் விழுந்ததனால்தான் என்று டாக்டர்கள் சந்தேகிக்கிறார்கள்.

பனியில் பார்த்து நடந்து கொள்ளவும்.

~oOo~

முன்னே பின்னே புஷ் அப் செய்து மூன்று வருடமாவது ஆகிப் போயிருக்கும். ‘காக்கி சட்டை’ கமலாக ஒற்றைக் கை புஷ் அப் எடுத்த தோள் பட்டை வலித்துக் கொண்டிருந்தது.

காந்தாரி பரம்பரையில் வந்த மனைவி சும்மா விடுவாரா?

பார்வையற்ற திருதராட்டிரனுக்காக கண்ணைக் கட்டிக் கொண்டாள் காந்தாரி. கை வலியால் பாதிக்கப்பட்ட கணவனுக்காகவோ, என்னவோ!?

கார் கதவை சாத்தும்போது கையை வைத்து சாத்திக் கொண்டு விட்டாள். விரல் நகம் பெயர்ந்து உதிர, உதிரமும் கொட்டுகிறது. எனக்கு கால்கட்டு போட்டார்கள். அவளுக்கு இப்போது விரல்கட்டு.

பட்ட காலே படும்; லே ஆஃப் ஆன குடியே டவுன்சைஸ் ஆகும் என்று பெரியோர்கள் அன்றே பழமொழிந்து இருக்கிறார்கள்.

~oOo~

இந்த சம்பவத்தையும் மதிய உணவில் சம்பாஷித்தோம். இன்னொரு நண்பர் தன் அம்மாவிற்கு செருமனி நிகழ்த்திய கொடூரத்தை நினைவு கூர்ந்தார்.

லுஃப்தான்ஸா சென்னையில் இருந்து ஃப்ரான்க்ஃபர்ட் கொண்டுவிட்டிருக்கிறது. ஏழு எஸ்கலேட்டர், ஆறு செக்யூரிடி செக் முடித்துவிட்டாள் அவரின் அன்னை.

கடைசியாக லிஃப்ட்.

எலிவேட்டரில் பாய்வதற்காக தன் மெல்லிய கையை நடுவில் வீசிப் பார்க்க, லிஃப்ட் கதவு மூடிக் கொண்டு, விரல்களை பதம் பார்த்து விட்டது.

குருதி கொட்ட கொட்ட, முதலுதவி கேட்டிருக்கிறார். ‘விமான நிலைய ஊழியருக்கு அடிபட்டால்தான் ஃபர்ஸ்ட் – எயிட்; உங்களுக்கு நோ எயிட்’ என்று ஜெர்மானிய ஊழியர்கள் நிராகரித்துவிட்டார்கள். வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக ‘Defibrillator இருக்கிறது! வேண்டுமா?’ என்றும் கரிசனையோடு விசாரிக்கிறார்கள்.

கூடவே, இரண்டு பெரிய ஃபாரம்களை நீட்டி, கையெழுத்தும் கோரி இருக்கிறார்கள். கையொப்பம் இட்டால்தான், பாஸ்டனுக்குப் பறக்கும் விமானத்தில் ஏற முடியும். அதாகப்பட்டது, ‘உங்களுக்கு விமானத்தில் அடிபடவில்லை; அதற்கு முன்பே பாதிக்கப்பட்டு விட்டீர்கள்! எங்களுக்கும் உங்கள் உடல் சேதத்துக்கும் எந்தப் பொறுப்பும் கிடையாது!’

கைகுட்டை எடுத்து ஐஸ் கட்டி ஒத்தடம் கொடுத்து வலது கை இழந்த ஏழு மணி நேரப் பயணத்திற்கு பின் பாஸ்டன் வந்தவுடன் நேரே எமர்ஜென்சி சென்றிருக்கிறார்கள்.

‘உடைநெகிழ்ந்தவனுடைய கை, உடனே உதவிக்காப்பது போல் ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு’ என்றுதானே வள்ளுவப் பெருந்தகை சொல்லி விட்டுப் போயிருக்கிறார். சேவை நிறுவனங்களுக்கும், விமான நிலையத்திற்கும், தொலைதூர பயணிகளுக்கும் விரல் நெகிழ்ந்தாலும் பொருந்தும் என்று சொல்லவில்லையே!

எனவே, லிஃப்ட்டுக்குள் நுழையும் அவசரத்தில் கையை நீட்டாதீர்கள். அதுவும் லுப்தான்சாவில் பயணித்து ப்ரான்க்பர்ட்டில் நீட்டவே நீட்ட வேண்டாம்.

~oOo~

மீண்டும் சொந்தக் கதைக்கே வந்து விடுவோம்.

வருத்தந் தரும்மெய்யுங் கையில்
    தழையும்வன் மாவினவும்
கருத்தந் தரிக்கும் நடக்கவின்
    றைய கழல்நினையத்
திருத்தந் தருளும் திகழ்கச்சி
    ஏகம்பர் சீர்க்கயிலைத்
துருத்தந் திருப்பதன் றிப்புனம்
    காக்கும் தொழிலெமக்கே.

எமக்குத் தொழில் ட்விட்டர் அடிப்பது, ப்ளாகில் பின்னூட்டம் இடுவது, விவாதத்தில் வம்பு தேடுவது என்று தேமேன்னு இருந்தவனை பாத்திரம் தேய்ப்பது, சமைப்பது என்று பொறுப்பு கூட்டினார்கள்.

ஆடலுடன் பாடல் போல் படத்துடன் பப்படம் பொரிப்பது எப்படி என்று எழுதியவரை கிண்டல் செய்ததன் கர்மபலனோ? டிஷ்வாஷர் போட்டால் உலகம் வெம்மையாகிறது என்று ஒப்பாரி கட்டுரை எழுதியதற்கான பழிக்குப் பழியோ? Frozen vegetables வாங்குபவரை ஃப்ரெஷ்ஷாக வாங்கி, கட் செய்தால்தான் சத்து என்று மிரட்டியதற்கான கை மேல் பலனோ? மினிமம் – ஒக்க கூட்டு, தோ கறி, மூன்று கோர்ஸ் இருந்தால் மட்டுமே பசியாறுவேன் என்று முனிசிரேஷ்ட வாழ்க்கையின் சாபமோ?

இரண்டு நாள் சமைத்தால் போதும். ஐந்தாண்டு வலைப்பதிந்த அனுபவமும் பத்தாண்டு இலக்கியம் வாசித்ததின் ஆய பயனும் ஒருங்கே சித்திக்கும்.

~oOo~

கல்யாணத்திற்கு முன் என்னுடைய சமையல் சம்பிரதாயமானவை. ஃப்ரென்ச் ஃப்ரைஸ் கொண்டு கறி செய்வோம். ஆனியன் ரிங்ஸ் சாம்பாரும் கிடைக்கும்.

கைக்குக் கிடைத்த பதார்த்தத்தைக் கொண்டு வழக்கமான சிஷ்ருஷைகளை அரங்கேற்றி சமையல் நடக்கும். எல்லாவற்றுக்கும் தாளித்துக் கொட்ட வேண்டும். சாம்பாரோ, ரசமோ, கூட்டோ — எதுவாகினும் கவலை வேண்டாம். எல்லாவற்றிலும் பெருங்காயம் முதல் சிக்கன் மசாலா வரை சகலமும் மிதக்கும்.

எது செய்தாலும் ஒரே ஸ்டான்டர்ட்; அதே டேஸ்ட். யார் நளபாகப் பொறுப்பெடுத்துக் கொண்டாலும் மாறி விடாத சுவை; சிம்பிள் சூத்திரம். எல்லாவற்றையும் போடு; நாலு கலக்கு கலக்கு. நிறைய காரம் போடு. இதுதான் ட்ரேட் சீக்ரெட்.

வந்த புதிதில் மனைவிக்கு இதை செய்து போட்டு மிரளவைத்ததுதான். இன்றளவிலும் ‘அவன் வெண்பொங்கல் எக்ஸ்பர்ட் ஆக்கும்!’ என்று செல்லமாய் வஞ்சப் புகழ்ந்து ஒதுக்கி வைத்திருக்க செய்தது.

‘இப்படித்தான் இருக்க வேணும் சமையலு’ என்று மைக்ரோ மேனேஜ் செய்து, அடுப்பங்கரையிலே மேற்பார்வையிட்டு, ஒவ்வொன்றையும் எப்படி பொறுமையாக பாதி சூட்டில் வைத்து வேக வைக்கவேண்டும் என்று பாலபாடம் எடுத்ததில் மனைவிக்கு சமையலே மறந்திருக்க வேண்டும்.

இப்பொழுதெல்லாம் மைரோவேவ் டின்னர் மாதிரி வருமா? இன்று பீட்சா சாப்பிடலாமா என்று மார்க்கெடிங் செய்து பார்க்கிறேன். சமையலை விட சந்தைப்படுத்தல் சுளுவானது.

~oOo~

சமைத்தேன் என்பதற்கான சாட்சியாக கீழே கொண்டைக்கடலை சாம்பார் கிடைக்கிறது. கூடிய விரைவில் ரெஸிபியுடன் சந்திக்கிறேன்.

kondai-kadalai-sambar-chick-peas-gravy-garbanzo-beans-recipes

குமுதம் குளறுபடி: தலை பத்து டெக்னாலஜி

patch_problemsஅசல்: Kumudam :: மணிவண்ணன்

(சந்தா இன்னும் செலுத்தாதவர்களுக்கான) நகல்: Science & Technology Advancements: Latest & Greatest from 2008 « Top Ten: “21ம் நூற்றாண்டின் உபயோகமுள்ள உருப்படியான கண்டுபிடிப்புகள் ஒன்று முதல் பத்து வரை.”

#2 ஆக எழுதி இருப்பது:

பர்த் கன்ட்ரோல் பேட்ச்

கு.க. சிகிச்சை, ஆணுறை, கருத்தடை மாத்திரைகளை வெறுப்பவர்களுக்கான கண்டுபிடிப்பு. `செக்ஸ்’ஸின்போது பேட்ச் மட்டும் போதும். நோ பேபி. நோ டென்ஷன்.

இப்பொழுது பத்து ஆபத்து:

  1. ஆணுறைக்கு மாற்றாக இதை உபயோகிக்க வேண்டாம்.
  2. ABC News: Do You Know Birth Control Patch’s Risks?: “Do Users of the Birth Control Patch Know Enough About Its Potential Dangers?”

  3. பிரசவத்தின் போது இறக்கும் வாய்ப்பை விட 15 மடங்கு அதிக விபரீத வாய்ப்பு இந்த பட்டியை ஒட்டிக் கொள்வதால் அதிகரிக்கிறது.
  4. இந்த patchஐ உபயோகித்தவர்களில் இன்றைக்கு மட்டும் இதுவரை 17 பேர் மரணம். 62 பேருக்கு முடக்கம்.
  5. மூட்டு வலி, கால் வீக்கம், மூச்சிறைப்பு போன்றவை உங்களுக்கும் வேண்டுமா? இந்த அதிநவீன தொழில் நுட்பத்தை இன்றே நாடுவீர்.
  6. Birth control patch linked to higher fatality rate – Women’s health- msnbc.com: “Report: Device has three times greater risk of stroke, blood clot than pill”

  7. ஆணுறை தவிர இந்த மாதிரி பேட்ச் போடும் முறை பாதுகாப்பானதல்ல. எஸ்.டி.டி போன்ற பால்வினை நோய் தொற்றிக் கொள்ளக் கூடும்.
  8. உடல் பருமன் அதிகரிக்கும்
  9. இரத்தம் உறைந்து, கட்டிக் கொள்ளும். குறிப்பாக நடுத்தர வயதினருக்கு உறைகட்டிக் கொள்ளுதல் அதிகமாகும்.
  10. அமைச்சர் அன்புமணிக்கு பிடிக்காததை செய்ய இயலாது. சிகரெட்டில் ஒரு தம் கூட இழுக்க முடியாது
  11. பக்கத்தில் இருக்கும் படத்தைப் பார்க்கவும்.
  12. பாதுகாப்பான பாலுறவிற்கு பர்த் கன்ட்ரோல் பாட்ச் உபயோகம் ஆனதல்ல. எயிட்ஸ் கூட வந்து சேரலாம்.

ஆரஞ்சிப் பழம்

uncoil-hand-life-orange-eat-enjoy-live-hunger

இது நேற்று கனவில் நடந்தது. நிஜமாகவே.

“அரிவராசனம் விச்வமோஹனம்”

மின்விளக்கு அணைத்த அகல்விளக்கு இருளில் பஜனை. ஜிப்பாவும் ஜீன்ஸ் பேன்ட்டும் போட்டிருக்கிறேன். ”

ஓம் சக்தி! ஆதிபராசத்தி!!”

ஐயப்ப சாமிமார் கூட்டமா? மேல்மருவத்தூர் வழிபாடா? சந்தேகம் தெளிந்தது.

“ஜய ஜய சங்கர; ஹர ஹர சங்கர”.

என்னிடம் மட்டும்தான் மேல்சட்டை. மற்ற எல்லாரும் திறந்த மார்புடன் தோற்றமளிக்கிறார்கள்.

சர்வமத மையத் தலைவர் என்னை நோக்குகிறார்.

“போலோ ஜெய் ஸ்ரீ சத்ய சாய்பாபாஜி கீ ஜே!”

கனவில் கூட நான் இப்படி எக்குத்தப்பாக வரமாட்டேனே? எப்படி மாட்டிக் கொண்டேன்?

“முதல் முறையா மகனே?”

இல்லை என்பது போல் மேலும் கீழும் தலை ஆடுகிறது.

brain-mandarin_orange-fruit-petal-individual-flickr“நீங்கள்தான் அடுத்த பாபா என்று கடவுள் கை காட்டியுள்ளார். உங்களிடம் இரு ஆரஞ்சிப் பழத்தை ஒப்புவிக்கவும் கட்டளை இட்டுள்ளார். நம்மை வெகு விரைவில் அசுரர்கள் தாக்கவுள்ளனர். அப்போது நாம் ஸ்தம்பித்து நிற்க இந்த முதல் ஆரஞ்ச் உதவும். மனிதர் பிரமை பிடித்தது போல் நிற்பதால் குழம்பிப் போகும் எதிரி சோர்வுற்று ஓய்ந்து போவர். அவர்கள் மறைந்த பின் இரண்டாவது ஆரஞ்சு கொண்டு எம்மை உயிர்ப்பிக்கவும்”.

ஸ்ரீஸ்ரீரவிசங்கர் மாதிரி ரம்மியமான குரலில் தேஜஸான சர்ஃப் சால்வை அணிந்தவர் சொல்லிவிட்டு பஜனையில் மூழ்கிவிட்டார்.

நான் அடுத்த பாபா ஆகிவிட்டேனா? கையில் இரண்டு ஆரஞ்சு இருந்தது. பரிசோதித்துப் பார்ப்போமா?

ப்ரொடக்சனுக்கு செல்வதற்கு முன் எந்த சாஃப்ட்வேரையும் டெவலப்மன்ட்டில் சோதனை செய்து விடுவேனே! அதே மாதிரிதானே? ஒரு முறை டெஸ்ட் செய்து ஒழுங்காக வேலை செய்கிறதா என்று பார்த்துவிடுவோம்.

முதல் பழத்தை விட்டெறிய எல்லோரும் வீழ்ந்தார்கள். பயந்து போய் உடனடியாக இரண்டாவதையும் போட்டு அனைவரையும் தெளிவித்தேன்.

அதே ஸ்ரீஸ்ரீ; எதிரொலிக்கும் தியானக்குரலில் கடுமை துளிக்கூட இல்லாமல் வருகிறார்.

hold-me-please-sun-orange-world-baba-flickr“என்ன காரியம் செய்தாய் மகனே? இதில் கூடவா நம்பிக்கை இல்லை? என்னிடம் இரு ஜோடி ஆரஞ்சி மட்டுமே உள்ளது. இதுதான் மனிதகுலத்திடம் உள்ள கடைசி காபந்து பழங்கள். இதையாவது பத்திரமாய் வைத்து எம்மை பாதுகாப்பாய்”

வெகு சிரத்தையுடன் இரு கையில் ஒன்றாய் வைத்திருக்கிறேன். காலை பஜனை பிற்பகலிலும் வெகு ஜோராகத் தொடர்கிறது.

என்னைப் பார்த்து அந்தச் சிறுமியும் சிறுவனும் ஓடி வந்தார்கள்.

“சார்! ரொம்பப் பசிக்குது. மயக்கமா வருது. நைவேத்தியம் செய்யாம எதுவுமே கொடுக்க மாட்டேங்கிறாங்க. அந்தப் பழத்தைத் தந்தா வயித்தைக் கிள்ளும் பசி கொஞ்சமாவது தீரும்.”

ஆளுக்கொன்றாக கொடுத்துவிட்டேன். புசித்து விட்டார்கள்.

விழித்துக்கொண்டேன்.

அமெரிக்காவில் விமானத்தை விட்டு தள்ளப்பட்ட முஸ்லீம் குடும்பம்

செய்தி: 'Safest' seat remarks get Muslim family kicked off plane – CNN.com

  • அவர்கள் குடும்பம் கொஞ்சம் பெரியது. எட்டு உறவினர்களும் நண்பரொருவரும் சேர்ந்து சென்றார்கள்.
  • எல்லோரும் சேர்ந்து உட்கார விரும்பினார்கள். விமானத்தின் வால் பாகத்தில் அமர விரும்பவில்லை.
  • முஸ்லீமாக இருப்பதினால் பயணம் தடைப்பட்டது கூட பிரச்சினையில்லை என்கிறார் இர்ஃபான். ஆனால், தடையாகிய பயணத்தை, வேறு வழியில் பிறிதொரு நேரத்தில் தொடர்வதிலும் ஏர் – ட்ரான் இவர்களைப் படுத்தியெடுத்து வருகிறது.
  • இவர்களை இறக்கியனுப்பிய பிறகு, சக விமானப்பயணிகள் அனைவரும் மறுபடியும் பாதுகாப்பு சோதனைக்கு உள்ளான கொடுமை தனிக்கதை.

State of Tamil Blogs & 2009 Predictions

வருடா வருடம் அறிஞர் அண்ணா சிலைக்கு மாலையிடுவோம். அது போல் இந்த வருடத்திற்கான ஆய்வு:

  1. வரி, விளம்பரம்/க்ரெய்க்ஸ் லிஸ்ட்: தமிழ்ப்பதிவுகளுக்கு பராக் ஒபாமா போன்ற மாயாஜாலக்காரர் தேவைப்படுகிறார். பில் க்ளின்டன் போன்ற தமிழ்மணம் ஹில்லரி போல் ஏதாவது புதுப்பித்துக் கொண்டாலும், புஷ் கூட்டாளிகளுடன் கும்மாளம் போடுவது போல் க்ரூப்கள் மிகுந்திருப்பதால், கடல் வழியாக அத்துமீறும் பாகிஸ்தானிய தீவிரவாதி போல் புதுப் பதிவர் தேக்கநிலையை நீக்கத் தேவைப்படுகிறார்.
  2. வாய்ஸ் கிடையாது/ரஜினி: தமிழ்ப்பதிவர் பரம சாது. சவுண்டு விடுவார். எதிராளி ஏவுகணையோ இளக்காரப் பார்வையோ பார்த்தால் அடங்கி அல்லது ஒதுங்கி விடுவார். இதை விட மோசமாக கடைக்குழு ஒன்று இருக்கிறது. இன்னும் இரண்டு பேர் உங்க பதிவிற்கு வரவைக்குமாறு ஹிட் தருவோம் என்றால் சகல ஸ்க்ரிப்ட்களையும் இணைத்து பச்சோந்தியாய் விளம்பரம் கொடுத்து சமூக ஒருங்கிணைப்பிலோ உள்ளடக்க வீரியத்திலோ ஈடுபாடில்லாத குழு. ஆங்கிலப் பதிவு நிகழ்வு: Abstract: How Twittering Critics Brought Down Motrin Mom Campaign – Digital: “Bloggers Ignite Brush Fire Over Weekend, Forcing J&J to Pull Ads, Issue Apology”
  3. நேரடி கவரேஜ்/தஸ்லீமா நஸ்ரின்: ‘ஐயா! நீங்க மலேசியாவில்தானே இருக்கீங்க? உங்க லோக்கல் விஷயத்தை எழுதுங்களேன்?’ என்றால் ஓடி ஒளிந்துவிட்டு, பத்தாயிரம் மைல் தள்ளி இருக்கும் ‘க்ரீன்லாந்தில் பசுமைப்புரட்சிக்கு வித்திடுவோம்’ என்று சவடால் விடும் பதிவு நிறைந்த வலையுலகில் நுழைந்துள்ளோம். சீன ஒலிம்பிக்ஸ் பற்றி எழுதினால் அரசு வெட்டிடும் என்பதில் துவங்கி சிங்கப்பூர் எதிர்க்கட்சித் தலைவரின் பரிதாப நிலை வரை − ஐந்தாண்டு அனுபவமுள்ள பதிவுலகில் அருகில் இருந்து அவதானிக்க எவரும் இல்லாத உள்ளூர் அனுபவசாலியின் அவல நிலை.
  4. செருப்பு புஷ்/அ – அருந்ததி ராய்: ஜார்ஜ் புஷ் மேல் செருப்படிக்கும் விளையாட்டை ஊக்குவிக்கும் சுதந்திரத்தைத் தரும் அமெரிக்காவை சவூதியில் இருந்து விமர்சிக்கும் வார்ப்புரு எழுத்தாளர். சாரா பேலினின் தொப்புள் படம் கிடைக்குமா என்று தேடிக் கொண்டே பெண்ணுரிமை பேசும் கருத்து சுதந்திரவாதியின் ஸ்டீரியோடைப் எழுத்தை மதிக்கும் சக வாசகர் வட்டம் எனத் தொடரும் infinite recursive loop.
  5. சமூகப் பொறுப்பு/’சத்யம்’ ராஜு: ஐந்து வருடமாக ஒரு whistleblower உருவாகவில்லை. அரசு, பத்திரிகை, நிறுவனம், விளம்பர உலகம் என்று பதிவு பரவவில்லை. டீக்கடை பெஞ்சாகவே ஒதுங்கி பழைய பேப்பரில் உண்டான கருத்தை மறுவாந்தியெடுத்து கொள்கை நம்பிக்கையும் சிருஷ்டி கற்பனையும் படைப்பூக்கமும் இன்றி கிணற்றுவாளியில் சிக்கிய தவளையாக இன்னும் கிணற்றுக்குள்ளே குதிக்கவே சிரமகதியில் வாளிக்குள் துள்ளி விளையாடுகிறது.
  6. ஆனந்த விகடன் டு குமுதம்/ஞாநி: தமிழ்மணம் போனது; தேன்கூடு வந்தது என்று ‘வாலு போச்சு; கத்தி வந்தது’ குரங்கு கதையாக வலைப்பதிவர் ஆரம்பத்தில் மாறினார். பின்னால் தமிழ்வெளி பக்கம் சென்று பார்த்தார். இப்பொழுது தமிழீஷ் புளகாங்கிதம் அடைகிறார். சொவ்வறை குந்துரத்தனாகிய நான் நேரங்காட்டுவதுதான் முக்கியம் → அதனால் தினக்கூலி கிட்டுவது அதை விட முக்கியம் என்பதாக எழுதுவதுதான் முக்கியம்; எழுதுபொருள் குறித்த கவலை இல்லாத இணையம்.
  7. தெரிந்த முகம்/சீனா: தமிழ்நாட்டின் பெட்டிக்கடையிலாவது முன்பின் அறியாதவருடன் வெளிப்படையான கருத்துப் பரிமாற்றம் அகஸ்மாத்தாக அரங்கேறும். தமிழ் வலையுலகோ, சீனாவைப் போன்றது. நாலு சுவருக்குள் நடக்கும் பேச்சில்தான் போதிய சோதனைக்குப் பின் உள்ளத்துக் கிடக்கை வெளியேறும். அரட்டையில் சொன்னால் பொதுவில் போட்டு விடுவார்; தொலைபேசியில் பேசினால் பதிந்துவிடுவார் என்று அச்சம், மடம், நாணுபவர் இங்கு நிறைந்திருப்பர். சைனாவைப் போலவே மக்கள் கூட்டம் நிறைய இருந்தாலும், அவர்களால் எக்கச்சக்கா சாமான்/பதிவு தயாரிக்கப்பட்டாலும், அவற்றால் அவர்களுக்கு எந்தப் பயனும் கிடைக்காது. ‘செம்மொழி’, கூகிள் மொழி என்று பம்மாத்து பல சீனாவைப் போலவே ஒளிர்ந்தாலும் உள்ளுக்குள்ளே ஈறும் பேனும், ஈயும் பீயுமாக மகிழ்ந்திருக்கும்.
  8. அங்கீகாரம்/சு.சுவாமி: “பூங்காவில் இடமுண்டா? தமிழீஷில் எண்ணிக்கை ஏறுமா? தமிழ்மணத்தில் வாக்கு கிடைக்குமா?” என்பது போய் “‘உயிர்மை.காம்’இல் ஒரு எழுத்து வராதா? ‘வார்த்தை‘யில் ஒரு வார்த்தை வெளியாகாதா?” என்பதும் விலகி “ஆனந்த விகடன் வலையகத்தில் பெயர் பெறுவேனா? சன் டிவி பிறந்த நாள் வாழ்த்து உதிர்க்கப்படுவேனா?” என்பதுதான் பதிவரின் அலட்சியமாக, குறியாக இருக்கிறது. எப்பாடு பட்டேனும் அமைச்சர் பதவியை மகனுக்கு வாங்கிக் கொடுக்கும் தந்தையாக வலைஞர் செயல்பட்டு திருப்தியடைகிறார்.
  9. விசங்கக்குபவர்/பாஸ்டன் பாலாஜி: ‘நீ எத்தனை புத்தகம் எழுதி மாற்றத்தை உருவாக்கினாய்? ‘அச்சமுண்டு அச்சமுண்டுஅருண் மாதிரி ஏதாவது படித்து படமாக்கினோம் என்றாவது சொல்லமுடியுமா? கலை தாகம் எவ்வாறு ஆக்கசக்தியானது? தொழில்நுட்பக் கல்வி எவ்வளது தூரம் தமிழானது? தமிழிலக்கியம் எங்ஙனம் உலக மொழிகளில் மொழிபெயர்ப்பானது?’

மின் ரத்து: பனிப்புயல் கடந்த பாஸ்டன்

காலை ஆறு மணி. எழுந்திருக்க வேண்டும். குளித்து, காபி போட்டு, பாஸ்டன் க்ளோப் புரட்டலாம்.

அலறிய கடிகாரத்தை பத்து நிமிடம் சயனித்திருக்க அனுமதி கோரி விட்டு, புரண்டமாதிரி கனவுகளைத் தொடரும் அதிகாலை. பத்து நிமிடம் கழிந்த பிறகும் அலாரம் அடிக்கவில்லை.

தூக்கக் கலக்கத்தில் அணைத்திருப்பேனோ? எழுந்து பார்த்தால் கடிகாரத்தில் பளிச்சிடும் எல்.இ.டிக்கள் கருப்பாக இருந்தது. நேற்றைய Patron பலமாக அருந்திய கலக்கம் என்று கண்ணை நம்பாமல், பாத்ரூம் நடக்கும் பாதம், விளக்கை அனிச்சையாக தட்டுகிறது.

எரியவில்லை.

மீண்டும் அணைத்து, போட்டு, அணைத்து மரோ சரித்ரா பார்க்கிறேன். விளக்கு எரியமாட்டேன் என்கிறது.

ஊழல் செய்து மாட்டிக் கொண்ட இல்லினாய்ஸ் கவர்னர் போல் மாஸசூஸட்சிலும் ஏதாவது மந்திரி மாட்டிக் கொண்டு, ஆற்காட்டார் அமைச்சர் ஆகி விட்டாரா?

பாஸ்டனிலும் கரண்ட் கட்.

நம்பமுடியவில்லை. எனினும், பத்து வருடத்திற்கு ஒரு முறை நடக்கிறது. பத்து நிமிடத்தில் வந்துவிடும் என்று நம்பிக்கையுடன் அரையிருட்டில் குறி பார்த்து மூச்சா போய், பிரஷ்ஷில் பேஸ்டை திணித்து, வென்னீரை ஆதுரமாய் சிக்கனமாய் உபயோகித்து, மனைவியை எழுப்பி, விஷயம் சொல்கிறேன்.

‘மின்சாரம் திரும்ப வந்த பிறகு எழுப்பு!’ என்று நம்பிக்கையுடன் சொல்லிவிட்டு, இழுத்துப் போர்த்திக் கொண்டுவிட்டாள்.

நம்பிக்கையை ஊட்டி ஊட்டி, எங்களை சோம்பேறியாக்கி, அமெரிக்காவையே அலட்சியப்பட வைத்திருக்கிறார்கள். எல்லா நம்பிக்கையும் இன்றைய நாளில் தவிடு பொடி ஆகியுள்ளது.

நான்காவது நாளாக இன்றும் மின்சாரம் இல்லாமல் அவதிப்படுபவர்களின் நிலை புலம்பி மாளாது.

காபி போடும் எந்திரம் மின்சாரத்திலானது. பாலை சுட வைக்கலாம் என்றால் அடுப்பும் மின்சாரம். காபிதான் இல்லை, வெளியே இருக்கும் அஞ்சு டிகிரி ஃபாரென்ஹெய்ட்டில் இருந்து தப்பிக்க வீட்டுக்குள் சூட்டை ஏற்றும் உபகரணம்; கார் வைத்திருக்கும் கேரேஜ்; பால் கெட்டுப் போகாமல் பாதுகாக்கும் ஃப்ரிட்ஜ்; சமையல் செய்துபோடும் அடுப்பு; கிணற்றில் இருந்து தண்ணீர் கொடுக்கும் குழாய்…

எல்லாம் மின்சாரம் என்னும் மிடாஸ்.

மிடாஸ் தொட்டது எல்லாம் தங்கம். மகளைத் தொட்டான். அவளும் உலோகமாகி உயிர் விட்டாள். பேராசைக் குழப்பம்.

அமெரிக்காவில் தொட்டதிற்கு எல்லாம் கரண்ட். குளிர்ப்பிரதேசத்தில் இருந்து தப்பித்து அடைக்காக்கும் வீடு கதகதப்பாக இருக்க கரண்ட். கேஸ் அடுப்பிற்கு பதில் கரண்ட் அடுப்பு. காரை garageக்குள் வைத்து இயக்கும் கதவு கரண்ட். எப்படி வெளியே போவோம்?

துப்புகளையும் ஆலோசனைகளையும் தர இருக்கவே இருக்கிறதே இணையமும் கூகிளும்? அதற்கும் மின்சாரம் தேவைப்படும் கணினி.

தொலைபேசியில் கூகிள் வரவேண்டும் என்று கடவுளைப் பிரார்த்திக்கிறேன். மின்சாரம் இல்லாவிட்டால்தான் நினைவுக்கு வருகிறார்.

செல்பேசி பேட்டரி உயிரை விடுவேன்; என்னை சார்ஜ் செய்’ என மின்சாரத்தை வேண்டி நின்றது.

ஒரு மணி நேரம் சென்றது. அண்டை வீட்டுக்காரர்கள். நண்பர்கள், முன்னாள் உறவினர்கள், என்றோ கூட வசித்த அபார்ட்மென்ட் சகாக்கள்; உற்றவர்களின் நினைப்பும் கவனிப்பும் அற்ற குளத்துப் பறவையாக தோன்றினார்கள். செல்பேசியில் அழைத்தார்கள். வீட்டிற்கும் அழைத்தார்கள்.

‘மனிதம் சாகவில்லை’ என்று கவிதை வந்தது. ட்விட்டரில் தட்டினால் பேட்டரி செத்துவிடும். வாய்தா வாங்கிக் கொண்டேன்.

இரண்டாவது மணி நேரம் சென்றாகி விட்டது. ‘ஜெனரேட்டர் வாங்கலாமா?’

மூன்றாவது மணி நேரம். காரில் இருக்கும் பவர் உற்சாகப்படுத்தியது. ‘கேம்பிங் சென்றதிலையா? அப்படி நினைப்போம்.’ குடும்பத்துடன் இன்ப சுற்றுலா பயணம் ஆரம்பம்.

எங்கு பார்த்தாலும் மக்களின் மரண…மன்னிக்க… மின்ரத்து பயம்.

பெட்ரோல் நிலையத்தில் பெரிய காத்திருப்புப் பட்டியல்.

சுற்றுப்பட்டி பதினெட்டு கிராமங்களிலும் ஒரு ஜெனரேட்டர் விடாமல் எல்லாமும் எல்லாவிடத்திலும் தீர்ந்து போய் இருந்தது.

வெளியே சாலையெங்கிலும் மரங்கள். ஸ்டெப் – அப் ட்ரான்ஸ்ஃபார்மரா இது? அல்லது ஸ்டெப் டவுனா? கெபேசிட்டர்? ரெஸிஸ்ட்டர்?? பாகம் பாகமாக பாதையெங்கும் மின் கம்பிகள்.

மகள் கேள்வி கேட்டாள். ‘இந்த வைர் எல்லாம் ஏன் பூமிக்குள் புதைந்து வைத்திருக்கக் கூடாது?’

கவர்னர் தெவால் பேட்ரிக் அவசர நிலை‘ அறிவித்து இருந்தார். இந்த மாதிரி எமர்ஜென்சி கேள்விக்கு பதில் சொல்ல மாட்டேன் என்று சொல்லிவிட்டார்.

மரங்கள் அனைத்தும் பனியைத் தாங்கி பார்த்திருக்கிறேன்.

கொஞ்சம் பூசினாற்போல் இருக்கும் குண்டான பெண்ணும், த்ரிஷா போல் மாடர்ன் ட்ரெஸில் கொத்தவரங்காய் வத்தலாக இருக்கும் பெண்ணும் சேலை கட்டினால் அழகாய் இருப்பது போல் புத்தம்புதிய வெண்பஞ்சுப் பொதிகள் விழுந்த மரங்கள் அழகியாய் இருக்கும். இலையுதிர்த்த வகைகளும் சரி; இலையுதிராத கிறிஸ்துமஸ் மரங்களும் சரி — பெண்ணுக்கு புடைவை என பாந்தமாக மகிழ்வுடன் அனைவருக்கும் ரம்மியமாய் காட்சி தரும்.

இன்றோ சரவணா ஸ்டோர்ஸ் ஸ்னேஹாவாக ‘ஜொலிக்குதே! ஜொலி, ஜொலிக்குதே!!’ என்று ஒரு இன்ச் நீளத்திற்கு ஐஸ் குத்தீட்டிகள் தாங்கி, ராஜேஷ் குமார் கதை வில்லனாக சிரித்தது. கண்ணெதிரே மின் கம்பிகளை அறுத்தெறிந்தது. பி எஸ் வீரப்பா சிரிப்பாக தரையில் விழும் போது வெள்ளிக்கீற்றுகளை சிந்தியது.

ரத்தம் ஒரே நிறமல்ல. வெள்ளி நிறத்திலும் இருக்கும்.

கத்திகள் உலோகத்தினால் அல்ல. பனியாலும் ஆகி இருக்கும்.

காற்று, நீர், பூமி, வான், நெருப்பு என்று பஞ்ச பூதங்கள் பேரழிவு மட்டும் அல்ல. மரங்களும் பேரழிவு உண்டாக்கும்.

தீவிரவாதிகள் மட்டுமல்ல. இயற்கைக்கும் இரக்கமில்லத வேர் ஒழிப்புகள் சாத்தியம்.

கத்தியின்றி ரத்தமின்றி யுத்தம்.

‘வார் ஆஃப் தி வோர்ல்ட்ஸ்’ மாதிரி மொக்கை மசாலாப்படங்களில் கண்டவற்றை அமெரிக்கர்கள் கண்முன்னே நிறைவேற்றிக் கொண்டிருந்தார்கள்.

மெழுகுவர்த்தி விளக்கு, டார்ச் லைட்கள்… என்னென்ன கிடைத்ததோ அள்ளிக் கொண்டிருந்தார்கள்.

இரண்டு வீடு தள்ளி இடி, மழை, புயலினால் மரம் விழுந்து வீட்டின் கூரை இடிந்தது. காயசண்டிகை போல் வீடு. ஆவென்று வாய்திறந்து பனியெல்லாவற்றையும் விழுங்கும் ஆர்வத்துடன் வாய் பிளந்து காண்பித்தது. தன்னிடத்தில் இருப்பவர்களைக் காட்டிக் கொடுத்து, குளிரை நிரப்பியது.

ரத்தபீஜனாய் பாஸ்டனெங்கும் காயசண்டிகை வீடுகள். வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம் என்று வளர்த்தவர்கள் நெஞ்சில் பாய்ந்து பிளந்து திறமூலமாக்கி இருந்தது.

பத்து வீடு தள்ளி இருந்தவர், நெருப்பு கொளுத்துவதற்காக fireplaceல் மரங்களை எரிக்க, தெரியாத்தனமாக ஆர்வக்கோளாறில் கொஞ்சம் அதிகம் சூடாக்க, வீடே திப்பிடித்து சாம்பலானது. உறைவிடத்தில் இருந்த ஒவ்வொரு சாமானும் பஸ்மம். என்னுடைய புத்தக சேமிப்பு மாதிரி எத்தனை விஷயங்கள் எரிந்திருக்கும்! குழந்தைகளின் மனமுவந்த பொம்மைகள்!! ஒரேயொரு தடவை மட்டுமேக் கட்டப்பட்ட மனைவியின் கூறைப்புடைவை!!!

என்னென்னவோ… காலையில் முழுசாய் பார்த்த அகம்; மாலையில் கன்னங்கரேலென்று பாக்கி சொச்சம்.

அடுத்த நாள் நியுயார்க் டைம்ஸை முந்தின நாள் செய்தி படிப்பதற்காக வாங்கினேன்.

‘பான்சி திட்ட’த்தினால் பல் கோடீஸ்வரர்கள் சில லட்சங்களை இழந்ததை முகப்பு செய்தியாக்கி இருந்தார்கள். இத்தனைக்கும் இது பாஸ்டனில் இருக்கும் உள்ளூர்வாசிகளுக்காக சிறப்பாக வெளியான லோக்கல் ‘நியு யார்க் டைம்ஸ்’ பதிப்பு.

எந்த அமெரிக்கனும் சாகவில்லை. எனவே செய்தியில்லையாம். எட்டாம் பத்தி மூலை கூட கண்டுகொள்ளப்படவில்லை.

பழைய இந்தியா: மாறியிருக்கிறதா?

நன்றி: india source:life – Google Image Search | LIFE photo archive hosted by Google

ஒபாமாவினால் உருவான மாற்றம்: நிகழ்வுகள்

matt-bors-idiot-box-cartoons-comics-black-white-walk

நன்றி: Matt Bors : Illustration : Idiot Box : Comics

'என்னவாக இருந்தாலும் தமிழகத் தேர்தல் மாதிரி வருமா?' – வாஷிங்டனில் நல்ல தம்பி

இவரின் முந்தைய பதிவு: மாநாடுகள் குறித்த ஒரு ஒப்பீட்டு அலசல்
தொடர்புள்ள பதிவு: வாக்களித்த வைபவம்மைத்ரேயன்

நேற்று மாலை அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு வந்து கொண்டிருந்த பொழுது 6 மணிக்கே நன்கு இருட்டி விட்டிருந்தது. லேசான மழையில் இலையுதிர்க்கால பொன்னிற இலைகளின் சருகுகளால் சாலையோரங்கள் பொன்னிறக் காசுக் குவியல் போல மழைநீரில் மின்னிக் கொண்டிருந்தன. சிக்னலில் சிவப்பு விழ அநிச்சையாக கால்கள் காரை நிறுத்தின. மழை பெய்யும் பொழுது சிக்னல்களின் மஞசள், சிவப்பு, பச்சைகளை ஒரு வித அழகுடன் மின்னும். மழைக்காலத்து சிக்னல்கள் என் மனதுக்குப் பிடித்த ஒரு காட்சி.

மழையில் நனைந்த சிக்னலனின் ஈரமான சிவப்பை ரசித்துக் கொண்டிருந்த பொழுதுதான் தீடீரென நாளைக்கு எலக்‌ஷன் நாள் என்பது உறைத்து இடது புறம் இருந்த ஓட்டுச் சாவடியாகிய தீயணைப்பு நிலையத்தை நோக்கினேன். சாதாரண நாட்களில் கூட ஒரு சில தீயணைப்பு வண்டிகள் பள பளவென வெளியில் நிற்க ஆளரவம் தெரியும் அந்த நிலையமோ. மழையிலும் இருட்டிலும் அநேகமாக காணாமலேயேப் போயிருந்தது. இந்த இடத்திலா நாளைக்கு சுமார் ஆயிரம் பேர் ஓட்டுப் போடப் போகிறார்கள் என்று. எந்தவித பரபரப்பும் இன்றி இருட்டில் கிடந்தது அந்த தீயணைப்பு நிலையம்.

மழையில் ஊறிய பச்சை மிளிர, கார் முன்னே செல்ல என் நினைவுகள் மெல்ல பின்னே சென்றன. தேர்தல் என்பது இந்தியாவின் பல்லாயிரக்கணக்கான பண்டிகைகளில் தேர்தலும் ஒரு திருவிழாவக மாறிப் போன கால கடத்தில் பல தேர்தல்களைப் பார்த்திருக்கிறேன்.

நம் மக்களுக்கு பரபரபுத் தீனி போடவும், கொண்டாடவும் வம்பு பேசவும் வாய்ப்பளிக்கும் மற்றொரு திருவிழாவாக மட்டுமே நம் தேர்தல்கள் இயங்கி வருகின்றன. உபரியாக தேர்தல் தினங்கள் கிரிமினல்களை உற்பத்தி செய்யும் தினமாகவே மாறி வருகின்றன. தேர்தல் கமிஷன்களின் கெடுபிடியால் திருவிழாவின் உற்சாகம் இப்பொழுதெல்லாம் கொஞ்சம் மட்டுப் பட்டிருக்கும் என்றே நினைக்கிறேன்.

இருந்தாலும் சிறு வயதில் தீபாவளியைப் போலவே தேர்தல் தினங்களும் உற்சாகமளிக்கும் தினங்களாகவே இருந்தன.

நிச்சயம் இந்த அமெரிக்க ஓட்டுச் சாவடி போல களையிழந்த ஒரு ஓட்டுச் சாவடியை இந்தியாவின் மனித நடமாட்டமில்லாத காட்டுப்புற ஓட்டுச் சாவடிகளில் கூடக் காண இயலாதுதான். வாக்குச் சாவடிகள் என்றுமே பரபரப்பான ஒரு வித ஆர்வத்தைத் தூண்டும் இடங்களாகவே உள்ளன. ட்யூப் லைட்டுக்கள், துப்பாக்கிகளுடன் போலீஸ்காரர்கள். கலவரப் பகுதிகளில் சட்டித் தொப்பி போலீஸ்கள், பூத்தைச் சுற்றி சுற்றி வந்து காவல் காக்கும் கட்சிக் காரர்கள், மறுநாள் தேர்தலை நடத்த முந்திய நாளே வந்திருந்து

பள்ளிக்கூடங்களில் தங்கியிருக்கும் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள், அவர்களுக்கு உபசாரம் செய்ய டீக் கடைகள், வரிசை, வரிசையாக வந்து ஏற்பாடுகளைச் சரிபார்க்கும் தேர்தல் அதிகாரிகளின் ஜபர்தஸ்துகள், போலீஸ்காரர்களின் விரட்டல்கள் என்று பூத்கள் மறுநாள் மர்மத்தைத் தன்னிடம் தேக்கி வைத்திருக்கும் ப்ரபரப்பான இடங்களாக்வே இருக்கும்.

தேர்தல் தினத்தன்று ஓட்டுச் சாவடிக்கு 200 அடிக்கு முன்னாலேயே கீற்றினால் வேயப் பட்ட கட்சி அலுவலகங்கள் பரபரப்பாக இயங்கும். கரை வேட்டித் தொண்டர்கள் கைகள் கூப்பி வரவேற்றுக் கொண்டேயிருப்பார்கள். ஒவ்வொரு வீட்டிற்கும் ஓட்டருக்கும் கட்சி சின்னம் பொறிக்கப் பட்ட சின்ன ஸ்லிப் தயார் செய்வது சரிபார்ப்பது அவற்றை வீடுகளில் கொண்டு கொடுப்பது, என்று தேர்தலுக்கு முந்திய நாளும் தேர்தல் நாளும் பரபரப்பாக இயங்கும் தினங்களாகவே இருக்கும்.

வேட்பாளர்கள் கடைசி கடைசியாக வீடு வீடாகப் போய் ஓட்டுச் சேகரிப்பதும் மும்முரமாய் அந்த இரு தினங்களே நடக்கும். வயதான பாட்டி தாத்தக்களை காரில் அழைத்து வந்து ஓட்டுப் போட வைத்து பத்திரிகைகளுக்கு போஸ் கொடுப்பது தனி காமெடியாக இருக்கும். முக்கியமாக தேர்தல் தினங்களில் விடுமுறை இருக்கும். யார் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது கணவன்மார்களால் மனைவிகளுக்கு நினைவுறுத்தப் பட்ட படியே இருக்கும்.

கிருஷ்ணன் நம்பியின் மருமகள் வாக்கு என்ற சிறுகதையில் மாமியாருக்கு ஓட்டுப் போட்டேன் என்று சொன்ன மருமகள் நினவுக்கு வருகிறது. ஓட்டுப் போடும் தினத்தன்று ஃபார்முலா தமிழ் படங்கள் போலவே வெட்டு குத்து கொலை போன்ற வயலன்ஸ் காட்சிகளுக்கும் நம் தேர்தல்கள் குறை வைப்பதேயில்லை. சமீப காலங்களாக தெலுங்குப் படங்களை நிறுவுத்தும் காட்சிகளை தமிழினத் தலைவரும் அவரதம் புத்திரபாக்கியங்களும் குறையில்லாமல் அரங்கேற்றி வருகின்றனர். தமிழகத்தில் தேர்தல் என்றாலே பரபரப்பு மிகுந்த ஒரு மசாலா படத்திற்கு இணையானதாகவே இருந்து வருகிறது.

அமெரிக்காவில் ஓட்டுப் போடும் இடம் என்பது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். எங்கள் தெருவில் தீயணைப்பு நிலையம். பள்ளிக் கூடம், அரசு கட்டிடங்கள் மட்டுமல்லாது யார் வீட்டு கார் நிறுத்தும் காரேஜ் கூட ஓட்டுச் சாவடியாக உருமாறி விடுகிறது. தேர்தல் நாளன்று காலையில் வந்து ஓட்டுப் பெட்டிகளையும் இன்ன பிற சாதனங்களையும் சாவகசாமாகக் கொண்டு வைத்து விடுகிறார்கள்.

இங்கு ஜனாதிபதி வேட்பாளர்கள் தவிர வேறு யார் யார் நிற்கிறார்கள் என்பதை நாம் தான் கண்டு பிடித்துக் கொள்ள வேண்டும். ஒரு சில போட்டியாளர்கள் ஆட்களை வேலைக்கு அமர்த்தி வீட்டுக்குப் ஃபோன் போட்டு ஓட்டுக் கேட்க்கிறார்கள். மற்றவர்கள் சின்னதாக ஒரு சில இடங்களில் போர்டுகள் வைப்பதுடன் தங்கள் பிரச்சாரத்தை நிறுத்தி விடுகிறார்கள்.

தாரை தப்பட்டை, ரெக்கார்ட் டான்ஸ், ஒயிலாட்டம், மயிலாட்டம் போன்றவை முன்னே வர வேட்டிகளும் துண்டுகளும் தரையைத் துடைக்க வரும் வேட்ப்பாளர்களை இங்கு காண முடிவதில்லை. இங்கு தேர்தல்கள் டி வி யில் தொடங்கி டி வி யிலேயே முடிந்து விடுகின்றன. உற்சாகத் திருவிழாக்கள் காணக் கிடைப்பதில்லை. தலைவர்களின் திருமுகங்கள் டி வி யில் மட்டுமே காணக் கிடைக்கின்றன.

இந்தியாவில் தேர்தல் திருவிழாவின் பொழுதுதான் தலைவர்கள் வெளியே வருவார்கள். ஐந்தாண்டுகள் ஓய்வில்லாமேலேயே ஹைதராபாத் தோட்டத்திலும் கொடநாட்டுப் பங்களாவிலும் ஒயாது ஓய்வில் இருக்கும் ஜெயலலிதா கூட தேர்தல் திருவிழாக்களின் பொழுது மக்களுக்குத் தரிசனம் தரத் தவறுவதேயில்லை. தலைவர்கள் மட்டும் என்ன சிவாஜி, எம் ஜி ஆர் தொடங்கி தவக்களை குமரி முத்து வரை நடிகர்களையும் அருகில் இருந்து பார்க்கக் கிடைக்கும் தருணங்களும் இந்தத் திருவிழாக்கள்தானே?

சிவாஜி என்றால் சிவப்பு, பச்சை, மெரூன், அல்லது ஊதா நிறத்தில் பட்டில் செய்த இறுக்கமான ஜிப்பா அணிந்து வருவார். எம் ஜி ஆரோ பள பளக்கும் வெள்ளை வேட்டி சட்டையில் புசு ப்சு தொப்பியும் ஒரு இஞ்சு ரோஸ் பவுடருமாக தரிசனம் தருவார். இன்னும் பல தலைவர்கள் ஜீப்புகளில் கைகளைக் கூப்பிக் கொண்டு நின்று வரும் பிம்பங்களாகவே மனதில் பதிந்து போய் விட்டனர்.

காமராஜர், அண்ணாத்துரை, ராஜாஜி, ஜூப்பில் இருந்து ஊன்று கோலோடு இறங்கிய பி.ராமமூர்த்தி துணையாக ஏ பாலசுப்ரமணியன் போன்ற தலைவர்கள் அவர்கள் நின்று வரும் ஜீப்புடன் சேர்ந்தே என் மனதில் பதிந்து உறைந்து போயினர். இந்திரா என்றால் தலையில் கட்டிய ஸ்கார்ஃப் பட படக்க கூலிங் கிளாசுடன் கன்வெர்டிபிள் காரில் பறந்து செல்லும் படிவம், ராஜீவ் என்றால் ஜிப்சி ஜூப்பில் தொங்கிக் கொண்டு போகும் உருவம், ஜெயலலிதா என்றால் டாட்டா சுமோவில் கண்ணாடிக்குப் பின்னால் அமர்ந்து கொண்டு கையசைக்கும் தோற்றம் என்று வாகனங்களை விலக்கித் தலைவர்களின் உருவங்களை மனக்கண் முன் கொண்டு வர முடிவதேயில்லை. அது போல வாகனங்களில் விரைந்து செல்லும் தரிசனங்களைக் கூட இங்குள்ள தலைவர்கள் தருவதில்லை.

பல்லாயிரம் வாட்ஸ் ஃபோகஸ் லைட்டுக்களின் வெளிச்சத்தையும் மீறி பளீரென்று தோன்றிய அழகி ஜெயலலிதாவின் முகத்தை முதன் முறை கண்ட நினைவை இன்றும் என்னால் மறக்க முடிவதேயில்லை. தமிழ் நாட்டில் எந்தவொரு நடிகைக்கும் இல்லாதிருந்த தோரணை அது. அந்தத் தேர்தலில் ஜெயலலிதாவுக்காக ஓட்டுப் போட்டேன் என்பதைத் தனியாகச் சொல்லத் தேவையில்லை 🙂

அதே அழகும் கவர்ச்சியும் இன்று சாராப் பெல்லனிடம் இங்கு காண்கிறேன். ஜெயலலிதாவிடம் இருக்கும் அறிவு மட்டுமே இவரிடம் மிஸ்ஸிங். மற்றபடி இவர ஒரு ஜெயலலிதாவின் க்ளோனாகவே தோன்றுகிறார்.

ஒரு முறை தாசில்தார் ஒருவர் ஓட்டுச் சாவடி அமைப்பதற்காக மேற்உத் தொடர்ச்சி மலைக்குச் செல்ல நேர்ந்ததையும் யானை துரத்தியதால் வெகு நேரமாக பதுங்கிக் கிடந்ததையும் சொல்லி என் ஆர்வத்தைத் தூண்டி விட்டார். யானைகள், சிறுத்தைகள் அதிகம் உள்ள தொலை தூர மலைக் கிராமம் அது. இந்தியத் தேர்தலகள் இது போன்ற சாகசங்களையும் உள்ளடக்கியது.

என் பக்கத்து வீட்டுக்காரர் எலெக்‌ஷன் டூட்டிக்காக ஒரு ஊருக்குப் போய் விட்டு ரெண்டு கட்சிக்காரர்களுக்குள் சண்டை வந்து விட ஓட்டுப் பெட்டிகளுடன் தூக்கிப் போட்டு இவரையும் கொளுத்த இருந்திருக்கிறார்கள்,. பத்து மைல் தூரம் ஓடி வந்து உயிர் பிழைத்த கதையை இன்றும் சொல்வார். தேர்தல் வேலைக்குப் போவது அப்படி ஒன்றும் சுவாரசியமான காரியமோ, பாதுகாப்பான காரியமோ கிடையாது. உயிருக்கு உத்தரவாதமில்லாத ஓட்டுச் சாவடிகள் இந்தியாவில் லட்சக்கணக்கில் உள்ளன. உயிர் பலி விழாமல் ஒரு பஞ்சாயத்துத் தேர்தலைக் கூட இந்தியாவில் நடத்தி விட முடியாது.

பழைய நினைவுகளுடன் வீடு வந்து உறங்கி காலையில் சற்றுச் சந்தேகத்துடனேதான் ஓட்டுச் சாவடிக்குச் சென்றேன். ராத்திரி ஒருவரைக் கூட காணுமே இன்றைக்கு நிஜமாகவே இந்த இடத்தில் எலக்‌ஷன் நடக்குமா என்றொரு சம்சய்த்தோடுதான் சென்றேன்.

வீட்டிலிருந்து ஒரு இருநூறு அடி தூரத்திலேயேதான் ஓட்டுச்சாவடி (ஓட்டுப் போட்டால் சாவடிப்பார்கள் என்று எவ்வளவு முன்யோசனையுடன் பெயர் வைத்திருக்கிறார்கள் பாருங்கள்) இருந்தது, காலையில் ஒரு எட்டரை வாக்கில் நடந்தே சென்றோம். வழி மறித்து யாரும் ஓட்டுக் கேட்க்கவில்லை. தோரணங்கள் இல்லை. கொடிகள் இல்லை. ஆரவாரங்கள் இல்லை. ஸ்லிப் கொடுக்க ஆளில்லை.

வயதானவர்களை ஏற்றிச் செல்ல வாகனங்கள் வரவில்லை. கரை வேட்டிகள் இல்லை. பட்டா பட்டி டவுசர்கள் இல்லை, அம்மா இரட்டை இலைக்குப் போடுங்க, ஐயா உதய சூரியனுக்குப் போடுங்கள் என்ற கெஞ்சல்கள் இல்லை. அப்படி ஒரு பேரமைதி,.

தீயணைப்பு நிலையத்தில் இருந்து ஒரு நூறடி தூரத்தில் ஒரு பெண் ப்ரோபிஷன் 8 க்கு நோ என்று ஓட்டுப் போடுங்கள் என்று ஒரு நோட்டீஸ் கொடுத்தார்.

ஃபையர் ஸ்டேஷன் முன்னால் சோம்பலாக ஒரு இருபது பேர்கள் வரிசையில் நின்றார்கள்.

அங்கிருந்த ஒரு வாலண்டியரிடம் ஏனுங்க நிஜமாகவே எலக்‌ஷன் நடக்குதுங்களா என்றேன். ஏன் சந்தேகம் என்றவரிடம் ஒரு போலீசைக் கூடக் காணோமே என்றேன். போலீசா? அவர்கள் எதற்கு என்று சற்றே மிரண்டு போய் என்ன ஏற இறங்கப் பார்த்தார்.

வரிசையில் நகர்ந்து உள்ளே போனோம். முதல் முறையாக ஒரு தீயணைப்பு நிலையத்திற்குள் நுழைந்தேன். உள்ளே எஞ்சினீயரிங் காலேஜ் ஹைட்ராலிக்ஸ் லாப் போல இருந்தது. சுற்றி உயர உயர ஏணிகளை சாத்தியும் நிறுத்தியும் வைத்திருந்தார்கள். மேலே ராட்சச மஞ்சள் வண்ன தண்ணீர் ஹோஸ்கள் ஓடிக் கொண்டிருந்தன. அந்த ஃபயர் ஸ்டேஷனில். இருந்த ரெண்டும் எஞ்சினையும் வெளியே டிரைவ் வேயில் கொண்டு போய் நிறுத்தி உள்ளே ஓட்டுப் போட இடம் தயார் செய்து வைத்திருந்தார்கள்.

எலக்‌ஷனை நடத்தியதும் தொண்டர்களே. அரசாங்க அதிகாரிகள், ஜீப்புகள். ஜபர் தஸ்துகள், கலெக்டர், எஸ் பி விசிட்கள் ஏதும் கிடையாது. நிறைய பேர் குழந்தைகளையும் வேடிக்கை காண்பிக்க அழைத்து வந்திருந்தனர். எனக்கு முன்னால் நின்ற கருப்புப் பெண்மணி தன் பையனையும் பள்ளிக் கூடத்துக்குப் பெர்மிஷன் சொல்லி விட்டு அழைத்து வந்திருந்தார். அவர்கள் இனத்தில் ஒருவர் பிரசிடெண்டாகப் போகும் வரலாற்றுத் தருணத்தைத் தன் பையனும் காண வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்த பரபரப்பு அவரிடம் தெரிந்தது.

எல்லோரிடமும் ஒரு வித தோழமையும் புன்னகையும் தவழ்ந்து கொண்டிருந்தது, மாற்றம் வரப் போகிறது என்று சொல்லாமல் சொல்லிக் கொண்டன அந்தப் புன்னகைகள். அனேகமாக 90 சதம் ஒபாமாவுக்கு ஓட்டுப் போடும் கூட்டம் அது. நாங்கள் ஓட்டுப் போடுவதை வேடிக்கைப் பார்க்க சில வயதான இந்தியர்கள் கூடியிருந்தார்கள். யாரையும் யாரும் விரட்டவிலலை. எந்த விதமான கெடுபிடிகளோ பரபரப்புக்களோ இல்லை.

ஒரு பாட்டி என் பெயரைச் சரிபார்த்து இவ்வளவு நீள பெயரை என் வாழ்நாளில் உச்சரிக்க முடியாது டியர் வெரி சாரி என்று சொல்லி, பட்டியலில் இருந்த என் பெயருக்கு மேலாக ஒரு அடிஸ்ஸ்கலை வைத்து பென்சிலால் பெயரை அடித்து விட்டு என்னிடம் வாக்குச் சீட்டைக் கொடுத்தார்.

கையில் மை வைப்பது எல்லாம், இல்லை. ஒரு ரெஜிஸ்டரில் கையெழுத்து வாங்கிக் கொண்டார்கள் அவ்வளவுதான். அதை ஓட்டுச் சீட்டு என்று சொல்வது அபத்தம்,. ரெண்டு பக்கங்களும் 26 தேர்தல்களும் அடங்கிய பெரிய லிஸ்ட் அது. ஜனாதிபதி தேர்வில் ஆரம்பித்து உள்ளூர் முனிசிபாலிட்டி ஸ்கூல் போர்டு வரைக்கும் மொத்தம் 16 பதவிகளுக்கான வாக்கெடுப்புக்களும், ஒரு 10 பிரசின்னைகளுக்கான வாக்கெடுப்புக்களும் நிரம்பியிருந்தன,.

ஜனாதிபதி வேட்பாளர் தவிர பிற பதவிகளுக்குக் குத்து மதிப்பாக ஒரு பெயருக்கு நேர் கோடு போட்டோம். ஆம் பேனாவால் நாம் விரும்பும் பெயருக்கு நேராக ஒரு கோடு கிழிக்க வேண்டும். நம்ம ஊர் மாதிரி முத்திரை குத்துவது எல்லாம் கிடையாது. பல பிரச்சினைகளுக்கான கேள்விகள் குழப்பமான வாக்கிய அமைப்புகளாக இருந்தன.

படித்துப் பார்த்து ஓட்டு போட்டால் சரியாகத் தப்பாகப் போட்டு விடும் விதத்தில் கேள்விகளை மிகப் புத்திசாலித்தனமாக அமைத்திருந்தனர் முட்டாள்கள்.

உதாரணமாக ப்ரோபிஷன் 8: ஓரினபாலர் திருமணத்தைத் தடை செய்ய வேண்டும். இதற்கு யெஸ் என்று கோடு கிழித்தால் ஆம் தடை செய்ய வேண்டும் நோ என்பதற்கு நேர் கோடு கிழித்தால் ஓரின திருமணத்தைத் தடை செய்யும் முயற்சியைத் தடை செய்ய வேண்டும் என்று விசு பட வசனம் போலக் கேள்விகள் அமைந்திருந்தன.

இப்படி ஒரு குப்பாச்சு குழப்பாச்சாக ஓட்டுச் சீட்டை வடிவமைத்தால் எப்படி ஜனநாயகம் வெளங்கும்? ஓரினத் திருமணத்தை தடை செய்ய வேண்டுமா வேண்டாமா?, ரெண்டு நகரங்களுக்கு இடையில் ரெயில் விடலாமா வேண்டாமா? மிருகங்களைச் மாமிசத்திற்காகக் கொல்வதற்கு முன்னால் அவைகளைச் சுதந்திரமாக இருக்க விட வேண்டுமா வேண்டாமா? விபச்சாரத்தை சட்டப் படி அனுமதிக்கலாமா வேண்டாமா? உள்ளூர் பார்க்குகளை மேற்பார்வை செய்ய வரி விதிக்கலாமா வேண்டாமா என்பது போல ஒரு பத்து வேண்டுமா வேண்டாமா ஓட்டுக்களுக்கும் வாக்கிழித்தோம்.

இவர்கள் எலக்‌ஷன் நடத்தும் விதம் அப்படி ஒன்றும் திருப்திகரமாக இல்லை. அமெரிக்கா இந்த விஷயத்தில் இந்தியாவிடம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். அல்லது டி என் சேஷனிடம் இந்த வேலையை அவுட் சோர்ஸ் செய்து விட வேண்டும். 200 வருடங்களுக்கு மேலாகியும் ஒரு எலக்‌ஷனை ஒழுங்காக நடத்தத் துப்பில்லாத ஒரு தேசமாகவே இருப்பதாகத் தோன்றுகிறது.

நானும் என் மனைவியும் ஓரமாக உட்கார்ந்து கொண்டு ஆலோசனையெல்லாம் செய்து கோடு கிழித்து, கோடு கிழித்து ஓட்டுப் போட்டுக் கிழித்தோம். எல்லா தேர்வுகளுக்கும் சரியாகத் தப்பாகக் கோடு கிழித்த பின்னால் பூர்த்தி செய்த பாலட்டை ஒரு குப்பைத் தொட்டி போன்றிருந்த மெஷினில் உள்ளே கொடுத்தோம். அது உள்ளே வாங்கிக்க் கொண்டு 111 என்று எனது எண்ணைக் காட்டியது.

காலை 6 மணி முதல் 9 வரை மொத்தம் 111 பேர்கள் போட்டிருந்தனர். பலர் ஏற்கனவே ஓட்டுப் போட்டு போஸ்டலில் அனுப்பி விட்டார்கள். நேரில் வந்து போடுபவர்கள் மிகக் குறைவாக இருந்தது. ஓட்டுச் சீட்டை அந்தக் குப்பைத் தொட்டிக்குள் போட்ட்வுடன் ஒருவர் ஐ வோட்டட் என்றொரு ஸ்டிக்கரைக் கொடுத்தார்.

அமெரிக்க வரலாற்றின் ஒரு முக்கியமான தேர்தல் முதல் முறையாக ஒரு ஆப்பிரிக்க அமெரிக்கர் முக்கிய பதவிக்கு வரப் போகும் எலக்‌ஷன். வரலாற்றில் நானும் ஒரு அங்கமாக இருந்தேன் என்று சொல்லிக் கொள்ளலாம்