Tag Archives: Books

ஒத்தக் குடிச அவுட்டரிலும் கொடுக்கலியே எங்களுக்கு

நேற்றோடு நவராத்திரி + தசரா முடிவு.

இன்றோடு நோபல் பரிசு அறிவிப்பு முடிவு.

முதலில் இதைக் கொண்டாட வேண்டும் என்று அருணாச்சலம் ரமணன் முன்மொழிந்தார்.

பானுமதி, காரைக்குடி சுபா, ஜெகதீஷ், நட்பாஸ் எல்லோரும் அதை முன்னெடுத்தனர்.

மருத்துவம், பௌதிகம், வேதியியல், இலக்கியம், சமாதானம், பொருளியல் – ஒவ்வொரு நாளும் சொல்வனத்தில் சுடச்சுட விரிவான, விவரமான கட்டுரை.

இன்று பணக்காரர்கள் ஏன் மேலும் பெருஞ்செல்வந்தர்களாக ஆகிறார்கள் என்பதை எளிமையாகச் சொன்னவர்களுக்கான விருது குறித்த விமர்சனம் வெளியாகி இருக்கிறது.

பரிசு பெற்றவர்களின் கருத்தோடு ஒப்புக் கொள்கிறீர்களா?

ஒரு நாடு உள்கட்டமைப்பைக் திட்டமிட்டு, கல்வியை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தி, ​​வளங்கள் எவ்வாறு ஒதுக்கப்பட வேண்டும் என்பதைத் தீர்மானிக்க சந்தை விலையைப் பயன்படுத்தினால், அது வளர்ச்சியை நோக்கி நகர்கிறது. இது நோபல் பெற்றவர்கள் முன்மொழியப்பட்டதை விட தெள்ளத் தெளிவைக் கொண்டுள்ளது, காலப்போக்கில் என்ன நடந்தது என்பதற்கான உண்மைகளுடன் பொருத்தமாக இருக்கிறது. – பில் கேட்ஸ் பார்வை

ந. பானுமதி பார்வை:

பத்தியா? டைரியா? கிறுக்கலா?

’கற்றதும் பெற்றதும்’; ‘தெரிந்தது மட்டும்’; ‘ராயர் காபி கிளப்’; ‘பா.கே.ப.’; ‘கோணல் பக்கங்கள்’; ‘நேசமுடன்’; ‘துணையெழுத்து’…

என்று துவங்கி நிறைய பத்தி எழுத்தாளர்கள் உண்டு.

இன்றைக்கு கே. என். செந்தில், தமிழினி கோகுல் பிரசாத், முகமூடி ராஜேஷ், வெ. சுரேஷ், போகன், தமிழ்நதி என்று எண்ணற்ற ஃபேஸ்புக் பதிவுகளின் தொடர்ச்சியும் உண்டு.

பிழைத்துக் கிடந்து, கடவுளின் நல்லாசியும் கொண்டு, அத்யந்தமான அனுபங்களும் கிடைத்து, தொடர்ச்சியாக எனக்குக் கிடைத்த விஷயங்களைப் பகிர வேண்டும்.

அதுதான் ”சகுனங்களும் சம்பவங்களும்”.

வெளியிட்ட சொல்வனம் இதழுக்கு நன்றி. படித்துப் பார்த்து உங்கள் எண்ணங்களைப் பகிருங்களேன்!

சொல்வனம் 325-ல் பல முக்கிய ஆக்கங்கள்.

தலைப்புக் கட்டுரையாக அனுபவப் பகிர்வு – லோகமாதேவி: உண்மை என்பதாலும் அயல்நாடு விஷயத்தினாலும் உணர்ச்சிகரமாக, நெருக்கமாக எழுச்சியுற வைக்கிறது.
விஷ்ணுபுரம் விருது நாயகரின் 77ஆம் அத்தியாயம் – மிளகு: இரா. முருகன் என் ஆசிரியர். அவர் ஊக்குவிக்கா விட்டால் எழுதவே வந்திருக்க மாட்டேன்.

இந்த இதழை ஓவியச் சிறப்பிதழ் எனலாம்.
எஸ் எச் ராஸா வந்த அரா கவிதைகள்.
மாதுரி தீட்சித் வந்த ‘வருணன் கவிதைகள்’
ஆர் ஸ்ரீனிவாசன் எழுதிய ஓவியர் ஃப்ரான்சிஸ் பேகன் (Francis Bacon) அனுபவம் + ஆராய்ச்சிக் கட்டுரை
வெங்கட் ரமணன் வழக்கம் போல் உச்சங்களைத் தொடும் ரெனே மக்ரிட் (René Magritte) – அஞ்சனம் + ஆஞ்சநேயம்

இந்தக் கட்டுரை சொல்வனத்தில் வெளிவருமா! சரியான தளத்தில் தான் இருக்கிறோமா? என சற்றே தொடர்புயர்வுநவிற்சி கொள்ள வைத்த பாகிஸ்தானிய சமூகவியலாளரும், முற்போக்கு எழுத்தாளருமான ரஸா நயீம் எழுதிய சிந்து சமவெளியின் சோஷலிச சூஃபியின் தியாகம் – வாசிக்க வேண்டிய பட்டியலில் காத்திருக்கிறது!

ஆனால், வாசித்து ரசித்த கதை = ஸ்ரீருத் எழுதிய அமானுஷ்யம்: திவ்வியதிருஷ்டியும் மந்திரசித்தியும் உபசுருதி ஏற்றிய கனவு.
நான் எழுதுவதை செயற்கை நுண்ணறிவு இன்னும் நன்றாக எழுதுமோ என யோசிக்க வைக்கும் ரவி நடராஜன் புகைப்பட க(வ)லை கட்டுரை – வாசிக்க லகு.

AI Generated

அப்படியெல்லாம் நான் யோசிக்காமல் எழுதிய சகுனங்களும் சம்பவங்களும் – இரண்டாம் பகுதி.

முதலில் பி.ஜி. பகிரப்பா குருபசப்பா ஹலகட்டி (PG Phakirappa Gurubasappa Halakatti) தென்பட்டார். அவரிடம் இருந்து வசன சாஹித்தியம் கிடைத்தது.
அடுத்தது பிரபு தேவா நடனம். அவரிடம் இருந்து இடுப்பொடிக்கும் ஆட்டம். எவர் சிறப்பாக ஆடுகிறார் என்னும் போட்டி.
கடைசியாக, அந்தாதி போன்று அகமாட்சி – ரேவதி என்னும் நடிகையை வைத்து ஒரு ஆட்டம்.

தான் எழுதுவது மற்றவர்களுக்குப் பிடிக்கிறதா? புரிகிறதா? புதியதாக இருக்கிறதா? என்பது ஒட்டக்கூத்தர் காலத்தில் இருந்து தோன்றும் மனக்கிலேசம்.

உங்கள் எண்ணங்களைச் சொல்லுங்கள்.

சொல்வனம் #312

புதிய சொல்வனம் இதழில் பல முக்கிய ஆக்கங்கள் இருக்கின்றன. முகப்புக் கட்டுரையை விட்டுவிடலாம். எழுதியவரும் எழுதப்பட்டவரும் சொல்வனம் ஆசிரியர் குழுவில் தொடர்ந்து காத்திரமாகப் பங்களிப்பவர்கள். பத்து சிறுகதைகள். ஒவ்வொன்றையும் தனித்தனியாக பின்னொரு ரத சப்தமி அன்று அறிமுகம் செய்யலாம். ஐந்தாறு தொடர்கள்; இரண்டு வாசகர் கடிதங்கள் போன்றவற்றையும் ‘பார்த்த ஞாபகம் இல்லையோ’ என எங்கேனும் ஏற்கனவே எழுதியிருப்பேன்.

312ஆம் சொ.வ. இதழில் என்னைக் கவர்ந்தவை:
1. செமிகோலன் எழுதிய கவிப்பித்தனின் சாவடி தொகுப்பிற்கான எண்ணங்கள்
2. வெங்கட்ரமணன் எழுதிய கிணற்றிலிருந்து வெளிவரும் உண்மை

முதல் பதிவு நேர்மையாக சக காலப் படைப்பாளியின் ஆக்கங்களை அணுகுகிறது. ஒவ்வொரு புத்தகக் கண்காட்சியிலும் பத்து, பதினைந்து புதிய எழுத்தாளர்களின் புத்தம்புதிய நாவல்களையும் தொகுப்புகளையும் வாங்கினாலும், எவரைக் குறித்தும் பதிவு செய்வதில்லை. அந்தக் குறையை அரைப்புள்ளி நீக்குகிறார். அதற்காக “வாழ்க!” (“தொடர்க”வும் கூடவே சொல்லி வைக்கிறேன்).

கனடா வெங்கட் எழுதிய கட்டுரையை அலுவலில் திறந்து விடாதீர்கள். அக்கம்பக்கம் பார்த்துப் படியுங்கள். (சரோஜாதேவி புத்தகம் என்று ராம்பிரசாத் எழுதியதைப் பொதுவிடங்களில் பலர் பார்க்க புரட்டுவதில் எந்த ஆபத்தும் இல்லை). க.வெ. (இவர் டொரொண்டோ பக்கம் இருப்பதால் என்னைப் போன்றோரால் டொரொண்டொ வெங்கட் என்றும் அழைக்கப்படுகிறார்) தத்துவத்தில் துவங்கி, ஓவியத்திற்கு பாய்ந்து கர்ண பரம்பரைக் கதைகளைச் சொல்லி சிறுவாணியாகப் பாய்ந்தோடுகிறது.

உண்மையாக ஓவியத்தைப் பார்த்தால் இளமையாக இருக்கிறது. இன்றைய டிக்டாக் காலத்தில் போலி முகத்தைப் பொருத்தி உலா வருவது சகஜம். அந்தக் காலத்தில் செயற்கை நுண்ணறிவு இல்லாமலே சொந்தமாக வேஷம் போட்ட பொய்யை எல்லோரும் தீட்டிக் கொண்டிருக்க, உண்மையை படம் வரைந்தவரின் கதையைப் படியுங்கள்.

சுண்டோகு அல்லது குறையறிவு உணரும் கலை

“இந்தப் புத்தகத்தை படிக்க உங்களுக்கு நேரம் இருக்குமா?”

ஒவ்வொரு புதிய புத்தகத்தை வாங்கும்போதும், நம்மை நோக்கி பிறரால் கேட்கப்படும் கேள்வி. வீட்டில் புத்தக அலமாரி நிரம்பி வழிந்து புத்தக அறையாக வளர்ந்தது. இப்பொழுது புத்தக மாடி என்று புதிய ராட்சஸ உருவம் கொண்டிருக்கிறது. அங்கிருப்பதில் எதெது, எங்கெங்கே இருக்கிறது என்னும் வரைபடம் மனதில் பதிந்திருந்தாலும் செந்நூல்களைப் பெற்று வரும் போதெல்லாம், “இருப்பதைப் படிக்கவே காலம் இல்லை. அது தவிர கிண்டில், அன்றாடச் செய்திகள், பிடிஎஃப் கோப்புகள் என்று எல்லாவிடத்திலும் எதையாவது சேமித்திருக்கிறாய். உனக்கு இது தேவையா?” என்னும் எண்ணம் எழுந்து புது(த்)தகங்களைப் புறக்கணித்து கடையிலேயே விடச் செய்யும்.

அப்பொழுதுதான் சுண்டோகு என்னும் ஜப்பானிய வார்த்தைப் பிரயோகத்தைக் கண்டேன். கட்டு கட்டாக, அடுக்கு அடுக்காக குவிந்திருக்கும் படிக்காத புத்தகங்களை சுண்டோகு என்கிறார்கள்.

“கற்றது கையளவு; கல்லாதது உலகளவு!” என்பாள் சரஸ்வதி. “எதைக் கற்க வேண்டும் என்று தெரியும்; அதை கற்க வேண்டிய விதம் இவ்வாறு!” என்பது சுண்டோகு.

அறியாத விஷயங்கள் என்னென்ன என்று அறிந்திருப்பதோடு மட்டுமல்லாமல், அவற்றை எப்படி கற்று அறிய வேண்டும் என்று உணர இந்த மலை போன்ற குவியல் நினைவூட்டி தரையில் இறங்கி புரட்ட வைக்கும்.

The Japanese call this practice tsundoku, and it may provide lasting benefits – Big Think

Maria Popova, whose post at Brain Pickings summarizes Taleb’s argument beautifully, notes that our tendency is to overestimate the value of what we know, while underestimating the value of what we don’t know. Taleb’s antilibrary flips this tendency on its head.

Eco’s library wasn’t voluminous because he had read so much; it was voluminous because he desired to read so much more.

Eco stated as much. Doing a back-of-the-envelope calculation, he found he could only read about 25,200 books if he read one book a day, every day, between the ages of ten and eighty. 

Jessica Stillman calls this realization intellectual humility.

பொன்னியின் செல்வன் திரைப்படத்தை ஏன் எடுத்தார்கள்?

பத்து நாளுக்கு தினம் ஒரு காரணம் போட திட்டம். உங்கள் உதவியைக் கோருகிறேன்.

முதல் காரணம் எளிது:

கல்கி கதையின் போதாமைகளைச் சொல்லத்தான் இந்தப் படம் வெளிவந்திருக்கிறது. இதுவரை யானைக்காலாக யாரும் படிக்க முடியாத அளவு பக்கங்களாக பாகங்களாக இருந்ததை திரைப்படமாக்கியதால் இப்போது எல்லோரும், “இந்தக் கதை மொக்கையா இருக்கே!” என ஊர் எல்லாம் அறியும்படி தன் ஆனைக்கால் கொண்டு உதைத்து விட்டார் மணி ரத்னம்.

ஜெயமோகனுக்கு எப்போதுமே தனக்கு மட்டுமே அரியாசனம் வேண்டும். அது சுஜாதா, ஜெயகாந்தன், கல்கி போன்றோரால் சரியாசனமாக இருந்தது. கூடவே மும்மூர்த்திகள் என்று எஸ். ராமகிருஷ்ணன், சாரு நிவேதிதா போன்ற சமகாலத்தவரும் போட்டியில் இருந்தார்கள். விஷ்ணுபுரம் எழுதி ஒருவரை சாய்த்தார் என்றால், விஷ்ணுபுரம் விருது கொடுத்து இன்னொருவரை சாய்க்கிறார்.

இப்பொழுது கல்கியின் போதாமைகளை உணர்த்த வேண்டிய கட்டாயத்திற்குள்ளாகிறார் ஆசான். அதற்கான பிரும்மாஸ்திரம் — பொ.செ.1, 2, 3…

ஆதித்த கரிகாலனுக்கு தோல்வியைக் கண்டு பயம் என்பதை கல்கி உணர்த்துவார். படத்தில் விக்ரம் கதாபாத்திரத்தை பார்த்தால் வடிவேலு மாதிரி சிரிப்பு வருகிறது.

யானை ராணியை மாந்திரீகமாக, மாயாவாதமாக, பூடகமாக கல்கி உலவ விடுவார். இங்கே மேக்கப் இல்லாத ஐஷ்வர்யா என்று கெக்கலிப்பு வருகிறது.

ஆழ்வார்க்கடியான் கதாபாத்திரம் தூணிலும் இருப்பான், தூணாகவும் இருப்பானாக மிளிரும். இங்கே நிஜமாக நகைச்சுவைக்காக உலவுகிறது.

கல்கியைக் கொண்டாட வேண்டுமானால் சமரசங்கள் இல்லாமல் திரைக்குக் கொணர முயன்றிருக்க வேண்டும்.

மஹாபாரதம் எழுதிய போது எவ்வாறு தன் திரைவடிவத்தை ஏற்க மறுத்த சன் டிவியை உதாசீனம் செய்தாரோ… அது மாதிரி!

ஆனால், ”கடல்” போல் உருப்படியாக எடுத்தால் எவ பார்ப்பாள்? எனவே, திருடா… திருடா… பகுதி இரண்டை #PS1 ஆக எடுத்து விட்டார்கள்.

சிவாஜி என்றால் ரஜினியின் படம் என நிறுவியது ஷங்கர்.

பொன்னியின் செல்வன் என்றால் ஜொள்ளுச்சோழர் படம் என நிறுவுவது – 1ஸ்ட் ரீஸன்

இந்தியக் கடவுள்களைக் கனவு கண்ட இத்தாலிய பல்துறையறிஞர்

நம்பியின் கட்டுரைகள் பல சமயம் நுழைவதற்கு தடுமாற வைக்கும். அதற்காக முன் பின்னாக வாசிப்பேன். கடைசி பத்தி, நடுவில் ஒரு பத்தி. இடையில் வரும் இன்னொரு அத்தியாயத்தின் முதல் பத்தி. அதன் பின் மீண்டும் இரண்டாம் பக்கத்தில் விட்ட இடத்தில் தொடர்வேன்.

ரொபெர்ட்டோ கலாஸ்ஸோ குறித்த அவரின் கட்டுரை அந்த மாதிரி தாவலை வேண்டாமல், நேரே வாசிக்க வைத்தது.

ஒன்று நம்பி வெகுஜன எழுத்தாளர் ஆகியிருக்க வேண்டும்.
அல்லது எனக்கு நம்பியின் எழுத்துக்கள் பிடிபட்டிருக்க வேண்டும்.

ஆனால், காரணம் இரண்டுமில்லை. இது எடுத்துக் கொண்ட துறை. அதன் பிறகு கொஞ்சம் லகுவாக சொன்ன விதம். வாசகரை எப்படி உள்ளே இழுப்பது என்பதை நம்பி திறம்படக் கற்றுக் கொண்டு விட்டார். அதனால், சற்றே அடர்த்தியையும் விஷய தானத்தையும் கட்டுரை நெடுகத் தூவ விட்டிருக்கிறார்.

இன்னொன்று இந்து மதக் கதைகள்; நன்றாக அறிந்த புராண விஷயங்கள்; இதிகாசங்களிலும் கர்ண பரம்பரையாகவும் சுலோகங்களாகவும் வேதங்களாகவும் சொல்லப்பட்ட தகவல்களை உவமானங்களை தத்துவங்களை அவர் கோர்த்துத் தந்திருக்கும் விதம் அபாரம்.

இப்படி படிக்கட்டு படிக்கட்டாக ஏற்றி நம்மை எங்கெங்கோ அழைத்துப் போகிறார். கிரேக்க தொன்மங்கள், எகிப்திய கடவுள்கள், ரோமானியப் புனைவுகள் – அப்புறம் தற்கால நபகோவ், டி.எஸ். எலியட் என்று நிகழ்கால ஜாம்பவான்களையும் கதம்பமாக்கி மாலையாக்கி இருக்கிறார்.

தமிழுக்கு எப்போதுமே நல்ல எழுத்தாளர்கள் உருவாகிக் கொண்டேயிருப்பார்கள். இப்போது நம்பி.

https://solvanam.com/series/writer-roberto-calasso/

NR Daasan – Writers and Authors

என்.ஆர். தாசன்

உருவகக்கதைகளுக்குரிய மொழி உரைவீச்சு வசனகவிதை எழுதியவர். 1994ல் மறைந்தார்.

கண்ணதாசன் சிறுபத்திரிகைக் குறிப்பு

வல்லிக்கண்ணன்

அப்படி எல்லாம் நடந்தபோதிலும் வாழ்வின் இறுதி வரையில் அவன் தன் எழுத்துக்களுக்கு உரிய மதிப்பையும், தனக்கு உரிய கவனிப்பையும் பெறமுடிவதில்லை என்பதை அந்த நாவல் விவரிக்கிறது. என்னிடம் மிகுந்த அன்பும் மதிப்பும் கொண்டிருந்த நண்பர்களில் என்.ஆர். தாசனும் முக்கியமானவர். அவர் அரசுப் பணியில் ஈடுபட்டிருந்தார். அத்துடன் எழுதுவதிலும் ஆர்வம் கொண்டிருந்தார். ஆற்றல் நிறைந்தவர் சுயசிந்தனையாளர் உழைக்கத் தயங்காதவர். புத்தகங்கள் படிப்பதில் உற்சாகம் உடையவர். கதைகள், நாவல்கள், வசன கவிதைகள், நாடகம் முதலியன எழுதினார்.

கவிஞர் கண்ணதாசன் நடத்திய தரமான இலக்கிய இதழான ‘கண்ணதாசனில் என். ஆர். தாசன் அதிகம் எழுதினார். பிறமொழிக் கவிதைகளைத் தமிழாக்கம் செய்துள்ளார். ரவீந்திரநாத தாகூர், கலீல் கிப்ரான் கவிதைகளின் தாக்கத்தினால், தாசனும் தத்துவச் சிந்தனைகளும் வாழ்க்கை அனுபவங்களும் செறிந்த வசனகவிதைகளைச் சொற்கோலம்’ என்ற பெயரில் அதிகமாகவே எழுதியிருக்கிறார்.

என். ஆர். தாசன் சிறுகதைகள், ஓரிரு நாவல்களை அவருடைய நண்பர் ஒருவர் வெளியிட்டார். ஆரம்ப காலத்தில், பிறகு தாசனின் எழுத்துக்கள் புத்தகங்களாக வர வாய்ப்பில்லாது போயின. எனவே தாசன் தாமே புத்தக வெளியீட்டிலும் முனைந்தார். நாவல்களையும், சிறுகதைகளையும், சொற்கோலங்களையும் தொகுத்து அக்கறையோடு கவனித்து, அழகு அழகான புத்தகங்களாகப் பிரசுரித்தார். அவற்றைத் தாமே எடுத்துச் சென்று புத்தக விற்பனையாளர்களிடம் கொடுத்து வந்தார். பின்னர், பணம் வசூலிப்பதற்காக அலைந்தார்.

இப்படியெல்லாம் தீவிரமாக முயன்று உழைத்ததனால்தான் என். ஆர். தாசன் எழுத்துக்கள் புத்தகங்களாக உருவம் பெறமுடிந்தது. அது அவருக்குத் திருப்தி தந்தது. ஆயினும், அவருடைய படைப்புகளும் எழுத்தாற்றலும் உரிய கவனிப்பைப் பெறாமலே போயின. அவருடைய அருமையான சொற்கோலம்’ எவ்வளவுக்குப் பேசப்பட்டிருக்க வேண்டுமோ, அவ்வளவுக்குப் பேசப்படவில்லை- சிறிது கூடக் கவனிக்கப்படவில்லை என்பது வருத்தம் தரும் விஷயம் ஆகும். சில வருடங்களுக்கு முன்பு அவர் இறந்துபோனார்.

காலவெள்ளத்தில் அமிழ்ந்துவிட்ட எத்தனையோ திறமைசாலிகள் சிந்தனையாளர்கள்- படைப்பாளிகளைப் போல என்.ஆர். தாசனும் மறக்கப்பட்டார். தமிழ்நாட்டில் இது புதிய விஷயம் ஒன்றுமில்லை.

இந்திரா பத்திரிகை மூலம் எனக்கு அறிமுகமான நண்பர் கோத சண்முகசுந்தரம் – பின்னர் ஆதித்தனாரின் தமிழன்’ இதழ் மூலம் மேதாவி’ என்று பெயர் பெற்றவர் வாழ்க்கையில் பலவித அனுபவங்கள் பெற்று…

ஒரு சிறுகதை

சார்,,, உங்க தோட்டத்த வேவு பார்க்குறானே… அவன் பக்கா திருடன்.. அவனை விரட்டி அடிங்க என்றான் அவன்

அப்படியா… என அலட்டிக்கொள்ளாமல் சொல்லி விட்டு வீட்டுக்குள் சென்றவனை அவன் மனைவி பிடித்துக்கொண்டாள்

திருட்டு எச்சரிக்கையை ஏன் அலட்சியம் செய்கிறீர்கள் என்றாள்

அவன் சொன்னான்.. எச்சரித்தானே..அவன் இவனை விட பெரிய திருடன்… ஒருவனை விரட்டினால் என்ன பயன் ?

மனைவி கேட்டாள்… இருவரும் திருடன் என்றாலும் ஒருவனை விரட்டினால் பாதி தீமையாவது குறையுமே ?

அவன் சொன்னான்.. தீமையை அப்படி படிப்படியாக குறைக்க முடியாது.. ஒரேயடியாக அழித்தால்தான் உண்டு.. அதற்கான வழிகளைத்தான் யோசிக்கிறேன்

அவள் கேட்டாள் . சரி.. அவனும் திருடன் என எப்படி சொல்கிறீர்கள்

அவன் சொன்னான்.. அவன் சொன்ன தொனியை கவனித்தாயா… என்ன சத்தம், என்ன கூச்சல்..   ஒருவரை குற்றம் சொல்கையில் அவன் மனசாட்சி நீயும்தான் குற்றவாளி என சப்தமிடும்.. அந்த சப்தத்தை மறைக்கவே சத்தமாக பேசுகிறார்கள்… சத்தியத்துக்கு சத்தம் தேவையில்லை

சில குறிப்புகள்

பாலச்சந்தர் மேல் வழக்கு தொடர்ந்த எழுத்தாளர்- தாசன் படைப்புலகம்

1 இந்த நூற்றாண்டு சிறந்த கதைகள்  நூறு என்ற தலைப்பில் வீ அரசு தொகுத்த கதைகள் ஒரு புத்தகமாக வந்துள்ளது.. அதில் என் தாசன் எழுதிய கதை இடம்பிடித்துள்ளது .கதையின் பெயர் – அவள் அறியாள்

2 அகிலன் தொகுத்துள்ள சிறந்த கதைகளில் இவர் கதை இடம்பெற்றுள்ளது

கதையின் பெயர் –  நீலச்சிலுவை

3 1996ல் வல்லிக்கண்ணன் , ஆ சிவசுப்ரமணியம் தொகுத்து வெளிவந்த சிறுகதைகள் தொகுப்பில் இடம்பெற்றுள்ள இவர் கதை : சுய வதம்

எழுத்தாளர் ரா கிரிதரன் உடன் பேட்டி – சொல்வனம் நேர்காணல்கள்

ஒவ்வொருவரைப் பற்றியும் அறிமுகக் குறிப்பு வேண்டும். ஒவ்வொரு படைப்பாளியுடனும் உசாவ வேண்டும். அனைத்து சமகால இலக்கியகர்த்தாக்களுடனும் விசாரணை மேற்கொள்ள வேண்டும்.

அருங்காட்சியகங்கள் சென்றிருப்பீர்கள். அதில் ஒவ்வொரு ஓவியத்தின் பக்கத்திலும் ஒரு குறிப்பு இருக்கும். எந்த வருடம் வரையப்பட்டது; எவர் வரைந்தார்; எந்த மாதிரிச் சூழலில் வரைந்தார்; அதற்கு முன் அவருடைய முக்கிய படைப்புகள் என்னென்ன? அதற்குப் பின் அவருடைய ஆக்கங்கள் எவ்வாறு உருமாறின? யாரைப் பற்றி அல்லது எதைப் பற்றி இந்த ஓவியத்தைப் படைத்தார்?

இன்னும் கொஞ்சம் ஆராய்ந்தால், அந்தத் தளத்தின் ஈசானிய மூலையில், அந்தத் தளத்தில் இடம் பெற்ற ஓவியர்களைக் குறித்தும் கண்டெடுக்கப்பட்ட காலகட்டங்களைக் குறித்தும் அரும்பொருட்களைக் குறித்தும் விரிவான வெளியீடு இருக்கும். அதில் ஓவியரின் பேட்டிகள், தற்கால ஆய்வாளர்களின் விமர்சனங்கள், முந்தைய ஆய்வுகள் குறித்த மேற்கோள்கள் – இன்ன பிற தாங்கிய நூலோ புத்தகமோக் காணக்கிடைக்கும்.

பேட்டிகளும் நேர்காணல்களும் முக்கியமானவை. முன்னுமொரு காலத்தில் காலச்சுவட்டின் ஒவ்வொரு இதழிலும் பாரிஸ் ரிவ்யூ போல் விரிவான சந்திப்புகள் காணக்கிடைத்தன. இன்றையச் சூழலில் படைப்பாளிகளும் இலக்கிய ஆளுமைகளும் பெருகி விட்ட காலத்தில் இந்த மாதிரி ஆழமான உரையாடல்கள் பன்மடங்கு அதிகரித்திருக்க வேண்டும். இதை இக்காலத்தில் அருண்பிரசாத் சற்றே சமரசங்களுடன் செய்கிறார். ஹிந்து நாளிதழின் தமிழ்ப் பதிப்பில் வெளியாவதால், அச்சுப் பதிப்புகளுக்கே உரித்தான இட நெருக்கடியுடன் அவர் செயல்படுகிறார்.

நேர்காணல்கள் வரலாறு – வாசிப்பு – அறிவியல்

ஆனால், இப்பொழுது இந்த மாதிரி தீவிர வாசிப்பும் அதன் தொடர்ச்சியான விரிவான பேச்சும், அதன் இறுதியில் அவற்றை வரிவடிவத்தில் பதிவாக்குவதும் அருகியேக் காணப்படுகிறது.

இருபதாண்டுகள் முன்பு நண்பர் பா ராகவனும் நேசமுடன் / கல்கி ஆர் வெங்கடேஷும் எனக்கொரு ஆலோசனையை முன்வைத்தார்கள். ஒருவரின் எல்லாப் புத்தகங்களையும் எடுங்கள். தி ஜானகிராமனோ அகிலனோ ஃபிலிப் ராத்தோ – அவரின் ஆக்கங்கள் அனைத்தையும் வாசியுங்கள். எதையும் விடாதீர்கள். கட்டுரைகள், துணுக்குகள், வாழ்க்கை வரலாறுகள், நினைவுக் குறிப்புகள், சண்டைகள், சச்சரவுக் கடிதங்கள், அறிவியல் புனைவுகள், துப்பறியும் கதைகள், சமூகக் கதைகள், அபுனைவுகள், ஓவியங்கள், கிறுக்கல்கள், கவிதைகள், மொழியாக்கங்கள், புனைப்பெயரில் எழுதியவை, அவர் எழுதியிருக்கக் கூடியதாக நம்பப்படும் கர்ண பரம்பரைக் கட்டுக்கதைகள் – எல்லாமும், எதையும் வாசியுங்கள்.

ஒரு வாரமோ / ஒரு மாதமோ கெடு வைத்துக் கொள்ளவும். அதன் பின் அவற்றைப் பற்றி நீங்கள் எடுத்தக் குறிப்புகளைத் தொகுங்கள். அவரிடம் என்ன கேள்வி கேட்க வேண்டுமோ, அவரின் படைப்பு குறித்த சந்தேகங்களைப் பற்றியோ, அவர் எழுத்து குறித்த விமர்சனங்களை முன் வையுங்கள். சும்மா, ஒரேயொரு சிறுகதையையோ, ஓரிரு நாவலையோ வாசித்துவிட்டு – எந்தக் கேள்வியையும் முன்வைக்காதீர்கள்.

நான் வி எஸ் நைபாலை கையில் எடுத்தேன். நான் கேள்விகளைத் தொகுப்பதற்குள் அவர் போய் சேர்ந்துவிட்டார்.

எனவே, இனிமேலும் இவ்வாறு முழுக்கக் காத்திருக்கப் போவதில்லை. ஒருவரின் அனைத்துப் படைப்புகளையும் முழுக்க வாசித்து, ஜீரணமான பின்பே – அவரிடம் கேள்விகளைக் கேட்கப் போவதில்லை. அந்த முடிவின் தொடக்கமாக கிரிதரன் அவர்களை #சொல்வனம் இதழுக்காக பேட்டி கண்டேன்.

அதை #solvanam இதழில் வாசிக்கலாம்.

சங்கதி கேளீர்

சங்கதி கேளீர் ஒரு வாரம் நடந்ததோர்
சேதியைப் பாரீர்

தனலஷ்மியும் முனுசாமியும் சென்ற வார நிகழ்வுகளை அசை போடுகிறார்கள்.

தனலஷ்மி: என்னப் படிச்சே?

முனுசாமி: இன்னும் ஒரு மண்டலத்திற்குள் மலையேறப் போகும் துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் சொன்ன கருத்தை அடிப்படையாகக் கொண்ட நியூ யார்க்கர் கதையொன்றைப் படித்தேன். ஒரு மணமாகிய ஆணும், மனைவியல்லாத பெண்ணும் ஒருத்தருடன் ஒருத்தர் சந்தித்துக் கொள்ளக் கூடாது — என்னும் கொள்கை கொண்டவர் அவர். அந்த மாதிரி மனைவியையும் துணைக்கு வைத்துக் கொள்ளாமல் சந்தித்தால் — வேறு மாதிரி அர்த்தமாகி விடும் என்கிறார் பென்ஸ். அதை தரவுகள் மூலம் பதிவாக்கி, உறுதி செய்யக் கிளம்பும் கதாநாயகியின் அனுபவங்களைப் புனைகிறார் கர்டிஸ் சிட்டன்ஃபீல்ட் (Curtis Sittenfeld)

தனலஷ்மி: அதையொட்டி நல்லதொரு உரையாடலையும் செய்திருக்கிறார்கள்.

முனுசாமி: கதை எழுதுவது எப்படி என்று அதன் மூலம் சில துப்புகள் கிடைக்கின்றன. கதாபாத்திரங்கள் குறித்த முக்கியமான தகவல்களை உரையாடலில் தரக்கூடாதாம். இது எனக்குத் தெரியாது. யோசித்துப் பார்த்தால் கதைசொல்லி இந்த மாதிரி, பேச்சு வழக்கில், குணச்சித்திரங்களையும் அதன் வாழ்க்கை பின்னணிகளையும் தருவதில்லை என்று புரிகிறது.

தனலஷ்மி: இந்தக் கதையில் எனக்குப் பிடித்த விஷயம், நிஜத்தில் கதைசொல்லி – மைக் பென்ஸ் கூறியது போல் அந்நிய ஆணுடன் தனியாகச் சுற்றுவதனால் கற்பொன்றும் பறிபோய் விடாது என்னும் திடமான நம்பிக்கை கொண்டவர். அது ஒரு அன்றாட பரபரப்பு செய்தியும் கூட. அனுராதா ரமணன் சொல்வார்: “என்னிடம் ஆயிரம் பேப்பர் க்ளிப்பிங்ஸ் இருக்கு. அதையெல்லாம் கதையாக்கப் போறேன்!” என்று. அது போல் தினசரியின் தலைப்பைக் கொண்டு கதை எழுதுகிறார். இருண்மை எனப்படும் இப்படியும் நடக்கலாம், அப்படியும் நடக்கலாம் என்பதை சொல்லிப் போகிறார். செய்தித்தாள் விஷயங்களை எப்படி இலக்கியமாக்குவது என்பது சற்றே பிரமிக்க வைக்கிறது. அதை விட பிரமிப்பு, தனக்கு ஒவ்வாத கொள்கையைக் குறித்து அறம் என்று வகுப்போ நீதிப் பாடமோ கொடுக்காமல் சொல்லிச் செல்வது.

முனுசாமி: நியு யார்க்கரில் கதையைப் படிக்கிறேனோ இல்லியோ… அந்தந்த வாரம் கதாசிரியருடன் நடக்கும் சம்பாஷணையை நான் தவறவிடுவது இல்லை. தமிழிலும் இது மாதிரி விரிவான உரையாடலை ஒவ்வொரு இதழும் நிகழ்த்தணும்.

தனலஷ்மி: இந்தக் கதையின் நீளம் கிட்டத்தட்ட பத்தாயிரம் வார்த்தைகள். இணைய இலக்கிய இதழ்களில் கூட ஆயிரம் வார்த்தைகளைத் தாண்டி சிறுகதை எழுத மாட்டார்கள். தமிழில் அந்த மாதிரி நவீன இதழ்களான சொல்வனம், தமிழினி, கனலி எல்லாம் செய்வதில்லையோ?

முனுசாமி: அவர்களின் குரு சன்னிதானமும் அதற்கு பாதை வகுக்க வேண்டும். ஜெயமோகன் நூறு கதை எழுதினார். பாராட்டி வரும் விமர்சனங்களைத்தான் பதிவு செய்தார். இறும்பூது எய்தி, காணாததையெல்லாம் கண்ட ஒலிகளைக் கேட்டார். கதை குறித்த வாசகர் வட்ட கூட்டங்களிலும் குறியீடுகளையும் உள்ளர்த்தங்களையும் உணர்த்தல்களையும் மட்டுமே முன்வைப்பார்கள்.

தனலஷ்மி: உனக்கு அவரை குத்தம் சொல்லலேன்னா தூக்கம் வராதே!

முனுசாமி: அவருடைய சமீபத்திய தாக்குதல் திருவிளையாடல் பார்த்தியா?

தனலஷ்மி: செத்துப் போனா எப்படி எழுதலாம்னு ஒவ்வொரு பத்திரிகையும் ஒரு அஞ்சலிக் குறிப்பு தயாரா வச்சிருக்கும். பில் கேட்ஸ் சடாரென்று மறைந்தால், அவருக்கு அடுத்த நாளே கட்டுரை அச்சாகணுமே… அதுவும் கோவிட் காலத்தில்! அந்த மாதிரி ஆசான் எல்லோருக்கும் இகழ்பதம் வைத்திருப்பார் என நினைக்கிறேன்.

முனுசாமி: க்ரியா ராமகிருஷ்ணன் குறித்து பாராட்ட வேண்டாம். மீரா குறித்து பேச, ஒருத்தரைத் தூக்கி விட இன்னொருவரை இறக்கிப் பேசணுங்கிறது ரொம்ப அசிங்கமான முன்னுதாரணம்.

தனலஷ்மி: ஜெமோ.வை ஏன் போய் படிக்கிறே? ஃபேஸ்புக்கில் கூடத்தான் ஆயிரக்கணக்கானோர் விதவிதமாய் அங்கலாய்க்கின்றனர்.

முனுசாமி: அவரைப் போன்ற கவனிக்கத்தக்கோர்; அதாவது உதாரண மாந்தராய் இருப்போர் இப்படி நேம் ட்ராப்பிங்கும் மட்டந்தட்டலும் செய்வது மற்றவர்களுக்கு முன்னுதாரணமாய் அமையும். சிஷ்யர்களும் அவ்வாறே செய்லபடுவார்களே என்னும் வருத்தம்தான் அப்படி சொல்ல வைக்கிறது.

தனலஷ்மி: இலக்கியத்தை விடு. என்ன பார்த்தே?

முனுசாமி: அமேசான் ப்ரைம் நிறைய குப்பைகளை வச்சிருக்கு. எல்லா மஹேஷ் பாபு படம். டப்பிங் செய்த ஹிந்தி சீரியல். டப்பிங் செய்யாத “வெள்ள ராஜா”.

தனலஷ்மி: நீ சொல்லும்போதே கூகுள் பண்ணினேன்: “வெள்ள ராஜா’ சீரிஸ் முழுவதும் கேங்க்ஸ்டர் வகையா, வெறும் க்ரைம் வகையா என்பதற்கு மத்தியிலேயே பயணிக்கிறது. நார்கோஸ்',ப்ரேக்கிங் பேட்’, ஆரண்ய காண்டம்',சேக்ரட் கேம்ஸ்’, அருவி', இந்த சீரிஸின் கதாசிரியரான லோகேஷ் கனகராஜ் இயக்கியமாநகரம்’ முதலானவற்றின் சாயலை மொத்தமாக `வெள்ள ராஜா’வில் பார்க்க முடிகிறது.”

முனுசாமி: பாதி பார்த்திருக்கேன். நன்றாக பொழுது போனது. நீ என்ன பார்த்தே?

தனலஷ்மி: ”லூடோ” பார்த்தேன். தமிழில் சூர்யா எல்லாம் சூரரைப் போற்று என்று மட்டுமே நடிக்கும்போது இந்த மாதிரி அபிஷேக் பச்சானைப் பார்ப்பது மகிழ்வளித்தது. ஜாலியாகப் போன படம். நீ லுடொ விளையாடி இருக்கியா?

முனுசாமி: இல்லை. ஆனால், ஐ.பி.எல். போட்டிகளில் சூது நிறைய விளையாடுதுனு சொன்ன பொக்கிஷம் விக்கியைக் கேட்டிருக்கேன். அவரோடது “செர்டிஃபைய்ட் ராஸ்கல்ஸ்”க்கு நல்ல மருந்து.

தனலஷ்மி: தீபாவளி மருந்து சாப்பிட்டியா?

முனுசாமி: இந்தியாவில் இருந்து வரவழைச்சு சாப்பிட்டேன். ஆனால், அடுத்த தடவை இன்னும் கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கணும். பேபால் கணக்கில் ஒருத்தருக்கு பணம் போட்டால், வங்கிக் கணக்கில் இருந்தே பரிமாற்றவும். இல்லையென்றால், அதற்கு தவணை அட்டைகாரர்கள் வட்டியும் முதலும் தண்டம் வசூலிப்பார்கள் எனத் தெரிந்து கொண்டேன். நீயாவது ஜாக்கிரதையா இருந்துக்க…

தனலஷ்மி: நான் எல்லாம் வெண்மோ

முனுசாமி: இந்த வெண்மோ நடத்துற ஆளு ஜெமோ வெண்முரசு விசிறியோ?

தனலஷ்மி: மீண்டும் அங்கேயே வந்துட்டியா. சிவானந்தம் நீலகண்டன் எழுதிய கி.அ. சச்சிதானந்தம் கட்டுரையை படிச்சேன். அந்த மாதிரி எழுதுபவர்களைத் திரட்டி, பரிந்துரைப்பதற்கு ஆங்கிலத்தில் பல இடங்கள் இருக்கின்றன. தமிழில் கூட கில்லி, மாற்று எல்லாம் இருந்தது. இன்னொண்ணுத் துவங்கலாமா?

முனுசாமி: ட்விட்டரோ பார்லரோ இதற்கு மேல். ஆண்டி முகர்ஜி கஷ்டப்பட்டு பத்து பக்கம் எழுதுவார். வெறும் இரண்டே வரியில் கதம் பண்ணிருவாங்க நம்மவர்கள்.

தனலஷ்மி: இந்த மாதிரி மத்தவங்க சொல்லுறத வாய் பார்க்காம, நீயே முழுசாப் படி, பின்னால போய் ஆராய்ந்து பார் என்று அலுவலில் மட்டும் வாய் கிழியப் பேசு.

முனுசாமி: நாளைக்கு திங்கள்கிழமை. ஜோலியப் பார்ப்போம்.

‘How to Bake Pi,’ by Eugenia Cheng

Eugenia_Cheng_How_to_Bake_Pi_Cakes_Custard_Category_Theory

சிகாகோ கலைக் கல்லூரியில் கணிதப் பேராசிரியருக்கு என்ன வேலை? ஓவியமும் சிற்பமும் வடிப்பவர்களுக்கும் கணக்கு வாத்தியாருக்கும் என்ன சம்பந்தம்? அதை விளக்கத்தான் யூஜினியா செங் வந்திருக்கிறார்.

திட்டவட்டமான உருவமற்ற கற்பனையான விஷயங்களை அருவமாக உணர்ந்து அப்பூதியாக புரிந்துகொண்டு எண்ணமாக உருவாக்குபவர்கள் “கலைஞர்கள்”. அதே போல் திட்டவட்டமாக வகுக்கமுடியாத விஷயங்களுக்கு ஒரு பகுப்பு கொடுத்து, அதை விளக்குபவர்கள் “கணிதயியலாளர்கள்”. லண்டனில் இருக்கும் புனித பால் தேவாலயத்தில் (செயிண்ட் பால் கதீட்ரல்) எவ்வாறு கணிதம் பங்களிக்கிறது என்பதையும் மாரத்தான் ஓட்டத்தில் கணக்கு எப்படி முக்கியம் என்பதையும், தக்காளியை ஏன் காய்கறியில் சேர்க்கிறோம் என்பதையும் πயை எப்படி உண்டாக்குவது – கணிதத்தின் கணிதம் குறித்து உணவு வழி ஆராய்ச்சி (How to Bake Pi: An Edible Exploration of the Mathematics of Mathematics) நூலில் அறிமுகம் செய்கிறார்.

கணிதத்தைக் குறித்து இருக்கும் நம்பிக்கைகளை முதலில் பார்ப்போம்:

கணக்கு என்பது எண்களும் எண்கள் சார்ந்தவையும்

செல்பேசி என்பது நண்பருடன் பேசுவதற்கானது மட்டுமே என்று நம்புவதைப் போல், இந்த நம்பிக்கை முட்டாள்தனமானது. செல்பேசியில் மற்றவரை அழைக்கலாம்; உரையாடலாம். அதில் விளையாடவும் செய்யலாம். கூடவே, மின்னஞ்சல் அனுப்பலாம்; பாட்டு கேட்கலாம். அதே போல் கணிதம் என்பது எண்களை வைத்து கணக்குப் போடுவதற்கும் பயன்படும்; ஆனால், அது தவிர நூற்றுக்கணக்கான மற்ற விஷயங்களையும் கொண்டிருக்கிறது.

கணக்கு என்பது சரியான விடையைப் பெறுவது

விளையாட்டில் வெற்றியடைய வேண்டும் என்பதற்காக விளையாடுகிறோம் என்பது சொல்வது போல் இது இருக்கிறது. ஆட்டம் ஆடும்போது வெல்லத்தான் எண்ணுகிறோம். ஆனால், வெற்றியை விட, நண்பர்களுடன் ஓடியாடி ஆடுவது முக்கியம். உடற்பயிற்சியை ஊக்கத்துடன் செயலாற்றுவது அதனினும் முக்கியம். அடுத்த முறை, அதே ஆட்டத்தை, இன்னொரு இடத்தில் ஆடும்போது — திறன்பட விளையாட, புதிய நுணுக்கங்களைக் கற்றுக் கொள்வது முக்கியம். எதைச் சரியாக செய்தோம், எங்கே இன்னும் நன்றாக ஆடலாம் என்று புரிந்து கொள்ளும் வழிமுறையை அறிவது இன்னும் முக்கியம்.

கணக்கு என்பது சரி அல்லது தப்பு என்பதைக் குறித்தது

துணியைத் தைப்பதற்குக் கொடுக்கிறோம். தையற்காரரும் அதைத் தைத்துக் கொடுக்கிறார். சில சமயம் சரியாக அமைவதில்லை. ஒழுங்காக இல்லை எனப்படும் ஆடை, சில சமயம் நாகரிகமாகிவிடும். பெல்பாட்டாம் என்னும் தொள தொளா கால்கள் கொண்ட காற்சட்டை, ஒரு காலத்தில் சரியானதாக இருந்தது. இப்பொழுது தவறாக இருக்கிறது. முட்டியில் கிழிந்த கால்சட்டைகள், ஒரு காலத்தில் நகைப்புக்கு உள்ளாகியது. இப்பொழுதோ, புத்தம்புதிய ஜீன்ஸ் வாங்கி, கால் முட்டியைக் கிழித்துக்கொள்வது சரியான விஷயமாகி இருக்கிறது. கணக்கிற்கே வருவோம். 10 + 4 = 2 என்று சொன்னால் தப்பு என்போம். ஆனால், அதே கணக்கை, கடிகாரத்தில் போட்டால், பத்து மணியோடு நான்கு மணி நேரத்தைக் கூட்டினால், மதியம் இரண்டு வருகிறதே!

’கூட்டிக் கழித்துப் பார்… கணக்கு சரியாக வரும்’ என்று அண்ணாமலை திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியிடம் தொழிலதிபர் இராதாரவி இதைத்தான் சொன்னாரா?

நீங்கள் கணிதவியலாளரா? அப்படியானால் புத்திசாலியாகத்தான் இருப்பீர்கள்!

இது எப்படி இருக்கிறது என்றால், கம்ப்யூட்டரில் வேலை செய்வோர் எல்லாம் அறிவாளியாக இருப்பார்கள் என்று எண்ணுவதைப் போலத்தான் இருக்கிறது. கணினியில் புழங்குவது எளிமையானது. அதே போல் கணிதத்தில் உழல்வதும் சுளுவானதுதான். நான் பள்ளியில் படித்தபோது எந்த விளையாட்டிலும் மிளிர்ந்தது கிடையாது. ஏனென்றால், விளையாட்டில் பங்குபெறுவோர் படிப்பில் பரிமளிக்கக் கூடாது என்பது எழுதப்படாத விதியாக இருந்தது. இரண்டாவது விதியாக, விளையாட்டில் பங்குபெற ஆஜானுபாகுவான தோற்றம் கொண்டிருக்கவேண்டும் என்று கருதப்பட்டது. ஆனால், இது எல்லாமே கட்டுக்கதை. இப்பொழுது கூட நான் தினசரி ஐந்து கிலோமீட்டர் ஓடுகிறேன். உடல் பயிற்சியில் உற்சாகமாகப் பங்குபெறுகிறேன். ஆனால், அமெரிக்க கால்பந்து என்றால் காத தூரம் ஓடுகிறேன். அதாவது, திறன் வாய்ந்த உடல் பெறுவது என்பது விளையாட்டில் சாமர்த்தியசாலி என்பதோடு சம்பந்தப்பட்டது அல்ல. புத்திகூர்மை அதிகம் பெற்றவர்தான், கணிதத்தில் சிறந்து விளங்குவார் என்பதும் பொருத்தம் அல்ல.

கணிதத்தில் என்ன ஆராய்ச்சி வேண்டியிருக்கிறது! புதியதாக புத்தம்புதிய எண்ணைக் கண்டுபிடிக்க முடியுமா என்ன?

இந்தப் புத்தகம்தான் இந்தக் கேள்விக்கான விடை என்கிறார் யூஜினியா செங்.

உத்தியும் உத்தி சார்ந்த வழிகளும்

கணிதத்தைக் குறித்து விளக்க, இந்தப் புத்தகம் நெடுக சாப்பாட்டு விஷயங்களையும் கேக் வகையறாக்களையும் கையில் எடுத்திருக்கிறார் யூஜினியா செங். கடைக்கு செல்கிறீர்கள். அங்கே புத்தம்புதிய மிக்ஸியைப் பார்க்கிறீர்கள். வாங்கியும் விட்டீர்கள். இப்பொழுது சட்டினி செய்து பார்க்கும் ஆவல் எழும். காலை எழுந்தவுடன் பழரசம் உண்பதற்கும் ஆசை பிறக்கும். வித விதமான துவையல் அரங்கேறும். சாதாரணமாக சப்பாத்தி செய்துவிட்டு, அதற்கு என்னத் தொடுக்கொள்ளலாம் என்று யோசிப்போம். ஆனால், மிக்ஸி கிடைத்தவுடன், அரைத்து விட்ட குழம்பு செய்துவிட்டு, சூப் போல் அதை உண்ண முடியுமா எனக் கூட யோசிப்போம்.

கணக்கும் இதே கதைதான். ஒரு உத்தியைக் கண்டுபிடிக்கிறோம். பிறகு, அதே உத்தியை வேறு எங்கெல்லாம் நுழைக்கலாம் என ஆராய்கிறோம்.

ஒவியங்களையே எடுத்துக் கொள்ளலாம். புள்ளிகளால் உருவாகும் ஓவியம் என்பார்கள்; சதுரமும் செவ்வகமும் கொண்டு உருவாகும் ஓவியம் என்பார்கள்; உணர்வுப்பதிவுவாதம் (இம்ப்ரெஷனிஸம்) என்பார்கள்; அதாவது, எந்த வழிமுறையை பயன்படுத்துகிறோமோ, அதைக் கொண்டு அந்த ஓவியத்தை சட்டகத்திற்குள் அடைக்கிறார்கள். என்ன வரைந்தார்கள், எதை உணர்த்துகிறார்கள், என்ன விஷயங்களை கோடிட்டுக் காட்டினார்கள் என்பதைக் கொண்டு அந்த ஓவியங்களை வகுக்கவில்லை.

தமிழ்ப்படங்களில் கூட இந்த வகுப்புமுறையை பார்க்கலாம். வடிவேலு வருகிறாரா… அப்படியானால் நகைச்சுவை காட்சி. சமந்தா வருகிறாரா… காதல் காட்சி. நாலைந்து அடியாள் காண்பிக்கப்படுகிறார்களா… அடிதடி சண்டைக் காட்சி. இந்த வட்டத்திற்குள்தான் சினிமா சுழல்கிறது. வில்லன் நடிகர்களுக்குள் காதல் மலர்வதில்லை.

இதற்கு கணக்கில் தருக்கம் (லாஜிக்) என்று பெயரிட்டு இருக்கிறார்கள். பரிசோதனைகளை நம்புவதை விட, கள ஆய்வுகளில் காலம் செலுத்துவதை விட, கண்மூடித்தனமான நம்பிக்கைகளை விட, சுதந்திரமான மக்களாட்சியிலோ, வன்முறையிலோ இறங்குவதை விட அறிவுப்பூர்வமான ஏரணங்களை நிலைநாட்டுவதில் கவனம் கொண்டிருப்பது கணக்கு. இந்த நூலில் மூன்று விஷயங்களை அந்தக் கணக்கில் இருந்து எடுத்துக் கொண்டு விரிவாக ஆராய்கிறார்:

1. நுண்மமாக்கல் (abstraction) – எக்ஸ், ஒய் என்று எல்லாவற்றையும் சுருக்கி எண்ணமாக்கும் அல்ஜீப்ரா போன்ற கணக்கு
2. பொதுவாக்கல் (generalization) – உருண்டைக் குழம்பிற்கான உருண்டையும் மிக்ஸியில் இருந்து வரும்; குழம்பிற்கான விழுதும் மிக்ஸியில் இருந்து வரும். அதே போல், முக்கோணத்தில் இருந்து கூம்புகளும் வரும்; கோவில் கலசங்களும் தேவாலயங்களும் உண்டாகும்.
3. பகுப்பியல் கோட்பாடு (Category theory) – கணிதத்திற்கான கணிதம் என்கிறார். தருக்கத்தை நம்பி கணிதத்தின் பிழைப்பு ஓடுகிறது என்றால், அந்தக் கணக்கில் எந்த அடுக்குகள் முட்டுக்கொடுத்து கணிதத்தை நிலைநிறுத்துகின்றன என்று ஆராய்ந்து பகுத்தறியும் கலையின் படிப்பு.

தியாடோர் பாஸ்கரன் போல் பறவைகளின் மீது உங்களுக்கு காதல் என்று வைத்துக் கொள்வோம். அதன் பழக்கவழக்கங்களை ஆராய்கிறீர்கள். என்ன சாப்பிடுகிறது, எப்பொழுது கண்டம் விட்டு கண்டம் தாவுகிறது, எப்படி கூடு கட்டுகிறது, எவ்வாறு இரை தேடுகிறது, எங்ஙனம் தன்னுடைய இடத்தை கண்டிப்பாக நிர்ணயித்து மற்ற ஜந்துக்களை அணுகாமல் அடைகாக்கிறது என்றெல்லாம் தெரிந்து கொண்டு இருக்கிறீர்கள். ஆனால், காகத்தில் இருந்து மயில் உண்டாக்க முடியாது. சிறிய பறவையில் இருந்து புத்தம்புதிய பெரிய பறவையை உருவாக்க இயலாது. இது ”பொதுவாக்கல்”.

அதே போல் ஒட்டகச்சிவிங்கியில் இருந்து வான்கோழியை படைக்க முடியாது. பறவையல்லாத ஜந்துவில் இருந்து மாயமந்திரம் செய்து பறவையை கொணர இயலவில்லை. இது ”நுண்மமாக்கல்”.

ஒன்று, இரண்டு, மூன்று என்றால் உங்களுக்குப் புரியும். அதே சமயம் ஆங்கிலேயருக்கு, ஒன், டூ, த்ரீ என்றால் மட்டுமே புரியும். இந்திக்காரருக்கோ, ஏக்,தோ, தீன் என்றால் விளங்கும். இதுவும் ஒருவகை ”நுண்மமாக்கல்”. இந்த மாதிரி சுவாரசியமான அன்றாட கணக்குகளையும் புரிதல்களையும் பளிச்சிட வைக்கிறார் யுஜினியா.

இந்தப் புத்தகத்தின் வெற்றி என்பது கணிதவியலாலர்கள் எவ்வாறு சிந்திக்கிறார்கள் என்று உணர்த்துவதில் இருக்கிறது. எந்த சூத்திரத்தை எவ்வாறு ஆராய்கிறார்கள் என்று நுணுக்கமாக விவரித்து கணிதப் புத்தகத்தில் மூழ்கடிக்காமல், கணித வழிமுறைகளை எண்ணுவதற்கு பாதை காட்டி இருக்கிறார் யூஜினியா. இந்த மாதிரி கடினமான விஷயங்களை விளக்கும்போது, சாதாரணமாக நீர்த்துப்போகுமாறு விளக்குவதுதான் நிதர்சனம். நிறைய புத்தகங்கள் விற்று, நியு யார்க்கர் போன்ற வணிக சஞ்சிகைகளில் இடம்பெறுவதற்கான சூத்திரமும் அதுவாகவே இருக்கிறது. ஏதாவதொரு சம்பவத்தை கதை போல் விளக்கி, அந்த புகழ்பெற்ற விஷயத்தை வைத்து, அறிவியலை எளிமையாக்கி பெஸ்ட்செல்லர் பட்டியலில் இடம்பிடிக்கலாம். இந்த மாதிரி போலி மாயாஜாலங்களில் யுஜினியா புகவில்லை. அவரோ கலைக்கல்லூரியில் கணிதம் பயிற்றுவிப்பவர். கேக் எப்படி செய்வது என்று சொல்லிக்கொண்டே கேக் சாப்பிடுவது போல் கணிதத்தின் நுணுக்கங்களுக்கு தூண்டில் போட்டு அழைக்கிறார்.

Eugenia_Cheng_Cakes,_Custard_and_Category_TheoryHow to Bake Pi: An Edible Exploration of the Mathematics of Mathematics
By Eugenia Cheng
Illustrated. 288 pp. Basic Books. $27.50.

மேலும்: