Tag Archives: கல்வி

அமெரிக்காவில் தமிழ்க் கல்வி – தமிழ்ப் பள்ளி கொண்டாட்டங்கள்

பிரபுதாஸ் பட்வாரி அன்றைய ஆளூநர். 1977-80 வரை தமிழக கவர்னராக இருந்ததாக விக்கிப்பிடியா சொல்கிறது.

அவரின் சிறப்பு என்னவென்றால், எந்த விழாவிற்கு அழைத்தாலும் ஆஜராகி விடுவார். எங்கே அழைத்தாலும் வந்துவிடுவார். எப்பொழுதும், எந்தத் தருணத்திற்கும் சொற்பொழிவைத் தயாராக வைத்திருப்பார். எந்த அரங்கத்திலும் பொருத்தமாகப் பேசுவார்.

கலாமிற்கு முன்னுதாரணம் எனலாம். எளிமையானவர். எனக்கு ரொம்பப் பிடித்த சிரிப்பைக் கொண்டவர். அவரைப் போல் ஆக வேண்டும் என்பது என் பால்ய காலம் லட்சியம்.

திராவிட கலாச்சாரம் அதை பாதுகாத்தது. எனினும், எவர், எதற்குக் கூப்பிட்டாலும் சென்று விடுவதைப் பழக்கமாக்கி இருக்கிறேன்.

அவ்வாறு ரோட் ஐலண்ட் தமிழ்ப் பள்ளியின் ஆண்டு விழா கொண்டாட்டத்தில் பகிர்ந்த பேச்சு

அனைவருக்கும் வணக்கம்.

தமிழ்ப் பள்ளியை நடத்தும் ரமா சுப்ரமணியன், கார்த்திக் பால்சுப்ரமணியன், விஜயகுமார் சபாபதி, சாருலதா ரவிஷங்கர் அவர்களுக்கு வாழ்த்துகள்

ஆக்டன் தமிழ்ப் பள்ளி மணி அவர்களுக்கும் நெட்ஸ் ராஜ் அவர்களுக்கு பணிவு கலந்த வணக்கங்கள்

அமெரிக்காவில் பத்தில் ஒருவர் மட்டுமே பன்மொழி வித்தகர். பாக்கி தொண்ணூறு சதவிகிதம் ஒரு மொழி மட்டுமே அறிந்தவர்கள்.

இரு மொழியைக் கற்றுக் கொள்பவர்களுக்கு இயல்பாகவே மூளையில் சிக்கலான புதிர்களை விடுவிக்கும் அடுக்குகளும் இணைப்புகளும் உருவாகின்றன. ஒரே சமயத்தில் எதிரும் புதிருமான வாதங்களை அவர்களால் மனதிலும் சிந்தையிலும் தக்க வைத்துக் கொள்ள முடிகிறது. லத்தீன் மொழி வழிவந்த ஆங்கிலம், ஸ்பானிஷ், போர்த்துகீசிய, இத்தாலிய பாஷை போன்றவற்றை மட்டும் கற்றவர்கள் மூளை ஒரு மாதிரியாகவும். தமிழ் போன்ற திராவிட மொழிகளைக் கற்று அறிந்தவர்கள் மூளை மேலும் தீவிர இயக்கத்துடனும் ஆற்றலுடனும் செயல்படுவதாக ஆராய்ச்சியின் முடிவுகள் தெள்ளத் தெளிவாக தெரிவிக்கின்றன.

தேவையில்லாதவற்றை நினைவில் இருந்து நீக்குதல்,

கூடுதல் கவனம்,

சிக்கலைத் எவ்வாறு தீர்ப்பது மற்றும்

முடிவெடுத்தலில் தீர்க்கம் – எல்லாவற்றுக்கும் இரட்டைமொழி அவசியம்.

உதாரணமாக – S-O-R-R-Y

இதைப் பார்த்தால் ஆங்கிலம் மட்டுமே அறிந்தவர்க்கு ஒரே அர்த்தம்தான் விளங்கும். “தெரியாமப் பண்ணிட்டேன்… மன்னிச்சுடுங்க!”

தமிழ் அறிந்தவர்க்கு பல அர்த்தங்கள் ஓடும்.

சாரி – புடைவை எடுக்கலாம் என்று மனைவி சுட்டுகிறாரோ?

சாரி – ரங்காச்சாரி, வெங்கடாச்சாரி என்று எவரையாவது அழைக்கிறாரோ?

சா… ரிகமபதநி என்று தொடங்குவதற்கு முஸ்தீபு போட்டு ராகம் – தானம் – பல்லவி போட்டு தாளத்தை இழுக்கிறாரோ?

சாரி சாரியாக தமிழ் கற்க தன் மகவுகளை பெற்றோர் அனுப்ப வேண்டும் என்கிறாரோ?

சரி என்று சொல்லி வைப்போம். அதற்கும் ஆங்கிலத்தில் ஏறக்குறைய அதே எழுத்துகள்தானே!

கூழாங்கல்லை எடுத்து நதியில் வீசுங்கள்.

ஒரு மொழி அறிந்தவர் அதை தொப்பென்று ஒரே இடத்தில் வீசி முடிப்பவர்.

பல மொழி அறிந்தவர் என்றால் அந்தக் கல் பல்வேறு அலைகளை ஏற்படுத்தி தீர்க்கமானத் தொடர் தாக்கத்தை உருவாக்கும்.

பெற்றோர்களுக்கு

பல விதமான குழந்தைகளுடன் உங்களின் மகளும் மகனும் பழகுவதற்கு இந்தத் தமிழ்ப் பள்ளி உதவுகிறது.

திங்கள் முதல் வெள்ளி வரை அமெரிக்க நண்பர்கள்.

வாரயிறுதியில் நம் வரலாறும் பாரம்பரியமும் கைகோர்த்து ஒத்த மனங்கள் இணைவதற்கு இது ஒரு வாய்ப்பு.

அலுவல் நண்பர்களிடம் ஒரு விதமானப் பேச்சுகள் எடுபடும். அண்டை அயலார், பக்கத்து வீட்டுக்காரர்களோடு இன்னொரு விதமானப் பேச்சுகள் எடுபடும். நண்பர்கள் என்பது இங்கு இருப்பவர்கள். அவர்களிடம் மனம் விட்டு எதையும் கொண்டு வரலாம். அதற்கு இந்த முறைமை உதவுகிறது.

ஆய்வுகளும் தரவுகளும் இருக்கட்டும். ஒரு குட்டிக் கதை

வெந்நீர் சூடு போதுமா?

பண்ணையாருக்கு தினசரி வெந்நீர் தேவை. அந்தக் காலத்தில் தானியங்கியாக இயங்கும் தண்ணீர் சூடேற்றி – கீஸர் கிடையாது. காலையில் எழுந்து வெந்நீர் போடவென்று ஒருவரை வேலைக்கு வைத்து இருந்தார்.

சரியான பதத்தில் வெந்நீர் இருக்கிறதா என்று ஒவ்வொரு நாளும் அவனும் கேட்பான். பண்ணையார் எப்பொழுதுமே ஏதாவது குறை சொல்லி வந்தார்.

இன்னிக்கு சூடு போதலே என்பார்

இன்னிக்கு சூடு ஜாஸ்தி என்பார்.

ஒரு நல்ல நாளில் கொதிக்க கொதிக்க வென்னீரை வைத்துக் கொடுத்து, அவர் மேல் கொட்டி விட்டு ஓடியே போய் விட்டான் அந்த வெந்நீர் போடுபவன்.

அந்த வெந்நீர் போடுபவன் மாதிரிதான் ஒரு ஆசிரியரின் வேலை. பண்ணையாராக நம் பசங்களைப் பாருங்கள்.

அவர்கள் ஏதாவது சொல்லிக் கொண்டே தான் இருப்பார்கள். ஒன்னும் புரியலே; கஷ்டமா இருக்கு என்பார்கள்.

இதெல்லாம் எதற்குக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று புலம்புவார்கள்.

ஏற்கனவே தெரிந்த விஷயம் என்று போன வருடம் படித்ததை நினைவூட்டும் போது அங்கலாய்ப்பார்கள்.

ஆசிரியர்களும் (பெற்றோர்களும்தான்) தட்ப வெட்பம் பார்த்து அதற்கேற்ப இதமாக ஒத்தடமாக வென்னீர் வைக்க வேண்டும்.

பக்குவமாக ஆடிக் கறக்கும் மாட்டை ஆடியும் பாடிக் கறக்கும் மாட்டை பாடியும் கறக்க வேண்டும்.

அமெரிக்க வாழ்க்கை என்பது வானவில் போன்றது.

அதில் ஆங்கிலம் ஒரு வண்ணம்.

வானவில்லில் வெறும் ஏழு வண்ணங்கள் மட்டுமல்ல. அதையும் தாண்டி பல்வேறு வண்ணங்கள் ஊடுருவி இருக்கிறது என்பது நம் எல்லோருக்கும் தெரியும்.

வீட்டை வெள்ளையடிக்க ஹோம் டிப்போ போனால் ஐயாயிரம் வண்ணங்களைக் காட்டுவார்களே…

அது மாதிரி வானவில். அது மாதிரிதான் வாழ்க்கையின் வண்ணங்களும்.

அது போல் வானவில் வாழ்க்கையில் எல்லாவற்றையும் அறிவதற்கான பாதை இந்தக் கல்வி.

தமிழ் மழை போல் எங்கும் பொழிகிறது. அதில் சூரியனாக ஆசிரியர்கள் ஒளி வெள்ளம் பாய்ச்சி பாதையைக் காட்டுகிறார்கள். அப்பொழுது வானவில்லையும் அதன் சாத்தியங்களையும் உணர உங்கள் குழந்தைகளைத் தொடர்ச்சியாக தமிழ் பயில வைக்கிறீர்கள்.

தமிழ் ஆசிரியர் என்பவர் நம் வரலாற்றை உணர்த்துபவர்

தமிழ் மொழி நமக்கு அறத்தையும் வாழ்க்கை முறையையும் உலகையும் கற்றுத் தருவதற்கான பாதை

ஐயாயிரம் ஆண்டுகளாகத் தொடர்ச்சியாக புழக்கத்தில் இருக்கும் பழக்கத்தைத் தொடர்ச்சியாக பயில்வோம்! வெல்வோம்!!

ஒளிக்கும் இருளுக்கும் ஒன்றே இடம்

சீடர்: தி டிஸ்சிப்பிள்

மேவும் பிரமனே விண்டு உருத்திரன்
மேவுமெய் யீசன் சதாசிவன் மிக்கப்பால்
மேவும் பரம்விந்து. நாதம் விட ஆறா(று)
ஓவும் பொழு(து)அணு ஒன்றுள தாமே.

திருமூலர் இயற்றிய திருமந்திரம்: எட்டாம் தந்திரம் – 15. ஆறந்தம்

பொழிப்புரை :

பஞ்ச கலைகட்கு அதிதேவராகப் பொருந்துபவருள் பிரமனது அதிகாரத்திற்கு உட்பட்டது. நிவிர்த்தி கலை. இது `பிருதிவி` என்னும் தத்துவத்தைத் தன்னுட் கொண்டது. இதற்குமேல் இதனை உள்ளடக்கிப் பரந்திருப்பது பிரதிட்டா கலை. இஃது அப்பு முதல் பிரகிருதி முடிவாக உள்ள இருபத்து மூன்று தத்துவங்களைத் தன்னுட் கொண்டது. இதற்கு மேல் இதனை உள்ளடக்கிப் பரந்திருப்பது வித்தியா கலை. இதற்கு அதிதேவன் மாயோன். இதற்குமேல் இதனை உள்ளடக்கிப் பரந்திருப்பது வித்தியா கலை. இது வித்தியா தத்துவம் ஏழினையும் தன்னுட்கொண்டது. இதற்கு அதிதேவன் உருத்திரன். இதற்கு மேல் இதனை உள்ளடக்கிப் பரந்திருப்பது சாந்தி கலை. இது சிவதத்துவங்களில் கீழ் உள்ள சுத்த வித்தை, ஈசுரம், சாதாக்கியம் என்னும் மூன்று தத்துவங்களைத் தன்னுட் கொண்டது. இதற்கு அதிதேவன் மகேசுரன். இதற்குமேல் இதனை உள்ளடக்கிப் பரந்திருப்பது சாந்தி யதீத கலை. இது சிவதத்துவங்களுள் எஞ்சி நின்ற, `சத்தி, சிவம்` என்னும் இரண்டு தத்துவங்களைத் தன்னுட் கொண்டது. இதற்கு அதிதேவன் சதாசிவன். இங்குக் கூறிவந்த தத்துவங்களில் இறுதியாக எல்லாவற்றிற்கும் மேலே உள்ளனவாகச் சொல்லப்பட்ட `சத்தி, சிவம்` – என்னும் தத்துவங்களே `விந்து, நாதம்’ என்றும் சொல்லப்படும். ஆகவே, இவைகளையும் கடந்தால்தான் முப்பத்தாறு தத்துவங் -களையும் கடந்தததாகும். அவ்வாறு கடந்தபொழுதுதான் கருவி கரணங்களின் வேறாய், `ஆன்மா’ என ஒன்று உளதாதல் விளங்கும்.

Aditya Modak plays an aspiring Hindustani classical musician in The Disciple.
Netflix

உபதேசகலை

சதுரங்க ஆட்டம் விதிகளுக்கு உட்பட்டது. அதே போல் இஸ்லாமிய மதம் புத்தகத்தில் எழுதப்பட்ட சட்டதிட்டங்களுக்கு உட்பட்டது. கடவுளின் பேச்சை மொகமது நூலாக மொழிகிறார். குரான் என்றால் “ஒப்பித்தல்”. இந்தப் படத்தில் குருவின் வித்தையை சீடன் எப்படி புரிந்து கொள்கிறான் என்று காண்பிக்கிறார்கள். குருவின் குருவான மாயி எனப்படும் சரஸ்வதி கடாட்சம் பெற்ற மகாமேதையின் எண்ணங்களை “பாராயணம்” செய்கிறார் சீடர்.

இந்து மதத்திற்குள் செல்ல வேண்டாம். எந்த வேதங்களை எவர் அருளினார்கள், எவரெவர் அதற்கு எந்தெந்த காலகட்டத்தில் பாஷ்யம் எழுதினார்கள், எந்த உபநிஷத்துகளை எப்பொழுது எடுத்துக் கொள்ள வேண்டும், இதிகாசம், கீதை, யோகம் என்று ஆல மரக் கிளைகளாக வேர் விட்டு தாவி தொலைந்து விடுவோம். எளிமையாக யூத மதத்தையும் கிறித்துவத்தையும் எடுத்துக் கொள்ளலாம்.

ஹீப்ரூ பைபிள் நூலில் இருப்பதில் மிகச் சிறிய பாகமே சினாய் மலையில் தூதர் மோஸசுக்கு நல்கப்பட்டது. யூதர்களின் புனித நூல் 24 புத்தகங்களாகத் தொகுக்கப்பட்டுள்ளன. அது மூன்று பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன:

  1. தோரா (கல்வி)
  2. நெவீம் (தூதர்கள்)
  3. கெடுவிம் (எழுத்துகள்)

முதல் எழுத்துக்களைச் சேர்த்தால் யூதர்களின் புனித நூலான ”தனக்” கிடைக்கிறது. பொ.யு.மு. ஆறாம் நூற்றாண்டில், மோசஸ் மறைந்து எழுநூறு வருடங்கள் கழிந்த பிறகே முதல் நூலான ”தோரா” தோற்றம் அடைகிறது. ”கெடுவிம்” நூலில் சேர்க்கப்பட்ட டேனியலின் நூல் 150 பொ.யு.மு.-இல் சேர்க்கப்பட்டது. மதநூல் வருவதற்கு ஆயிரம் ஆண்டுகள் முன்பே யூதர்கள் நியமங்களையும் அனுஷ்டானங்களையும் கடைபிடித்தார்கள்; சரித்திரங்களையும், புராணங்களையும் வாய்மொழியாக சொன்னார்கள்; சட்டங்களையும் கடமைகளையும் நிறைவேற்றினார்கள். கடவுளுக்கும் பக்தர்களுக்கும் இருந்த உறவை வார்த்தை வடிவில் செம்மையாக்க நாளாகி இருக்கிறது.

கிறித்துவ மதத்தில் கிறிஸ்து மரித்ததும் மரித்த பின் எழுந்ததும், கிறிஸ்துமஸின் போது பிறந்ததும் – எதுவும் யேசுவால் பதிவு பெறவில்லை. யேசு எதையும் எழுதிவைத்துவிட்டுப் போகவில்லை. அவரின் உடனடி சீடர்களும் எழுதப் படிக்கத் தெரியாதவர்கள். யேசு மறைந்து பல தசாப்தங்கள் கழித்து பால் என்பவர் கடிதங்கள் எழுதுகிறார். அவை “புதிய ஏற்பாடு” துவங்க வித்திடுகின்றன. பால் எழுதிய “கொயின்” (Koine) கிரேக்க மொழி யேசு கிறிஸ்துவிற்கு புரிந்திருக்க வாய்ப்பில்லை. உள்ளூர் சிக்கல்களை, பஞ்சாயத்துத் தகராறுகளைத் தீர்ப்பதற்காக அவ்வப்பொழுது எழுதிய அஞ்சல்கள் அவை. யேசுவின் வாக்கியத்தை வெகு வெகு அரிதாகவே பால் மேற்கோள் காட்டுகிறார்.யேசுவின் வாழ்க்கையில் இருந்து எந்த சம்பவத்தையும் எவ்வித பைபிள் கதையையும் பால் இந்த மடல்களில் எழுதவில்லை.

பால் மறைந்த பின் இன்னொரு தலைமுறை கடக்கிறது. மத்தேயு, மார்க், லூக் வருகிறார்கள். இவர்கள் காலம் கடந்து இன்னொரு தலைமுறை உருண்டோடுகிறது. நான்காவது நற்செய்தி ஜான் உருவாகிறது. விவிலிய காலம் என்று சொல்லப்பட்ட காலகட்டத்தில் விவிலியமே இருந்திருக்கவில்லை. அதன் பின் உருவாக்கப்பட்டிருக்கிறது.

வேதம் என்பதற்கும் நியதி என்பதற்கும் என்ன வித்தியாசம்? இந்த ராகத்தை இப்படியெல்லாம் ஆலாபனை செய்யலாம், இந்தப் பாடலை இப்படியெல்லாம் கொண்டு செல்லலாம், இந்த கீர்த்தனையை இந்த ராகம் கொண்டுதான் பாட வேண்டும் என்று ஹிந்துஸ்தானி சங்கீதம் கட்டமைக்கிறது. இது குரு – சிஷ்ய பாரம்பரியத்தில் மட்டுமே வளர்கிறது. அதாவது ‘கரானா’ — என்றால் பாணி / பள்ளி / குரு பரம்பரை.

ஹிந்துஸ்தானி இசையில், ‘கரானா’ வுக்கு முக்கிய இடம் உண்டு. அனேகமாக, ஒவ்வொரு கலைஞரும் ஏதாவதொரு ‘கரானா’வை சேர்ந்தவராக இருப்பார். ‘கரானா’ என்றால், ‘குடும்ப பாரம்பரியம்’ என்றும் சொல்லலாம். (அரியக்குடியார் பாணி, ‘செம்மங்குடியார் பாணி’, டைகர் வரதாச்சாரியார் பாணி, என்று கர்நாடக இசைக்கலைஞர்களையும், ‘தஞ்சாவூர் பாணி’, ‘பந்தநல்லூர் பாணி’, ‘வழுவூரார் பாணி’ என்று பரதநாட்டியக் கலைஞர்களையும் குறிப்பிடுவதுபோல!)

ஒவ்வொரு இசைக்கலைஞரும் ‘கரானா’ வை வைத்து அடையாளம் காட்டப் பட்டாலும், தரமான இசை என்று வரும்போது, அந்தக் குறிப்பிட்ட ‘கரானா’ வின் சிறப்பியல்புகள் என்னென்ன, இசைக்கும் முறையில் உள்ள சிறுசிறு வேறுபாடுகள் எவை, கலைஞரின் இசை-ஞானம், கலை-நுணுக்கம், ஆகியவற்றைத்தான் கவனிக்க வேண்டும். ஒவ்வொரு ‘கரானா’ வையும் தோற்றுவித்தவரின் தனிப் பட்ட குரல் வளம், அதன் தன்மை, அதன் தரம், அதன் இனிமை ஆகியவற்றை வைத்துத் தான் இனம் கண்டு கொள்வது வழக்கம்.

பரதரின் நாட்டிய சாஸ்திரம் என்ற இசைக் கட்டுரைகளில் (பொ.யு. இரண்டாம் நூற்றாண்டு) இந்தக் கொள்கைகள் செம்மைப்படுத்தப்பட்டன. அவற்றில் தாளத்துக்குச்‌ சிறப்பிடம்‌ கொடுத்திருக்‌கிறார்கள்‌. பரத சாத்திரத்தில்‌ பரதாசாரியர்‌ தாம்‌ பரதசாத்திரத்தைச்‌ சாண்டில்யர்‌, வாதஸ்யர்‌, கோசலர்‌, தத்திலர்‌ ஆகிய (ஞான) புத்திரர்களுக்குக்‌ கற்பித்தார். இவர்களில் தத்திலமுனி அவர்கள் தத்திலம்‌ என்ற ஒரு தாள நூலை பொ.யு. மூன்றாம் நூற்றாண்டில் தாள சாத்திரமாக்குகிறார். அதன்‌ சில துண்டுப்‌ பகுதிகள்‌ இன்று கிடைக்கின்றனவே தவிர, நூல்‌ முழுமையாகக் கிடைக்கவில்லை.

இப்படி குருகுலம், வாய்ப்பாட்டு, செயல்முறை பயிற்சி, பிறவிஞானம் என்றே இருந்த இந்துஸ்தானி இசையில் நாராயண பத்கண்டேயை முக்கியமாகக் குறிப்பிட வேண்டும். ஆரம்பத்தில் இந்துஸ்தானியில் இராக, இராகினி, பரிவார முறையே காணப்பட்டது. இவ்வாறு இராகங்களைப் பாகுபடுத்தாமல் விஷ்ணு நாராயண பாத்கண்டே பத்து தாட்முறையை அறிமுகம் செய்கிறார். இவர் தான் இராகங்களை வகைப்படுத்தி, பட்டியலிட்டு, அவற்றிற்குக் குறியீடுகளையும் ஏற்படுத்தி, பாடும் வகைகளையும் உருவாக்கியிருக்கிறார். இந்துஸ்தானி இசையையும் குறியீடுகள் (notation) மூலம் எழுத, படிக்க, பாட வழி வகுத்தவர் இந்த மராத்தியர் ஆவார். பத்கண்டே எழுதிய ‘லட்சிய சங்கீதம்’ என்ற நூல் இங்கு குறிப்பிடத்தகுந்தது.

யேசுவின் மறைவிற்கு பிறகு முன்னூறு ஆண்டுகள் கழித்து அவரது வாழ்வும் வாக்கும் உருவான மாதிரி ஸாம வேதத்திலிருந்து தோன்றிய ஹிந்துஸ்தானி இசை முகம்மதியர்கள் கைப்பற்றிய பின்னர் பாரசீக இசை, அரேபிய இசை என்பவற்றின் கலப்பினால் மாற்றம் கண்டு உருவானது. பதினாறாம் நூற்றாண்டில் தான் மார்ட்டின் லூதர் “சோலா ஸ்க்ரிப்ச்சுரா” (Sola scriptura) கோட்பாட்டைக் கொணர்ந்து, கிறித்துவர்களுக்கு ஒரேயொரு மத நூல் – பரிசுத்த வேதாகம நூல் என்று ஒருங்கிணைக்கிறார். ஒரே இடத்தில் எல்லா விஷயமும் கிடைப்பது மனித முளைக்கு எளிமையாக அணுகக்கூடியது. பொதுத்திரளுக்கு செல்லக்கூடிய வகையில் சுலபமாக ஆக்கிய மார்ட்டின் லூதரைப் போல் அமீர்குஸ்ரு வருகிறார்.

துருக்கி நாட்டின் அபூ அல்-ஹஸன்யாமினுத்தின் குஸ்ரூ, அவர் காலத்தில் பிரபலாமாகவிருந்த பல சிக்கலான இந்தியப் பாடல்களை எளிமையாக்கி மாணவர்களும் கற்றுக்கொள்ள வழிவகுத்தார். பல புதிய இராகங்களை உருவாக்கினார். அத்தோடு புதிய உருப்படி வகைகளான குல்பானா, தரானா குவாலி – கயல் போன்றவற்றையும் அறிமுகப்படுத்தினார். வீணையின் அமைப்பில் சில மாறுதல்களுடன் ஸிதாரையும் மிருதங்கத்தின் அமைப்பில் சில மாறுதல்களுடன் தபேலா என்ற வாத்தியத்தையும் புழக்கத்தில் விடுகிறார்.

இஸ்லாமிய அலாவுதீன் கில்ஜி காலகட்டத்தில், அமீர்குஸ்ரு இந்துஸ்தானி இசையை மொகமது குரானை நூலாக்கியது போல் ஹிந்துஸ்தானியை ஒருங்கிணைத்து ஒரு சட்டகத்துக்குள் கொண்டு வருகிறார். அன்றும் பாடப்பட்டு வந்த, இன்றும் பலரால் பின்பற்றப்படும் பாணிக்கு ‘துருபத்‘ அல்லது ‘துருபத் காயகி’ இந்த படத்தின் பின்புலம். இது கிட்டத் தட்ட ‘இராகம் – தானம்’ இரண்டுக்கும் இணையானது என்று சொல்லலாம். பாடகரின் மனோதர்மத்திற்கும், கற்பனை வளத்திற்கும் ஏற்பப் பாடப்படும் ‘ஆலாபனை’ இதில் பிரதான அம்சம். (‘ஆலாபனை’க்கு வடக்கே ‘ஆலாப்’ என்று பெயர்.) இதைத் தொடர்ந்து பாடப்படும் பாட்டுக்கு ‘தமார்’ என்று பெயர். இது ‘பல்லவி’க்கு இணையானது.

‘துருபத்’ பாணியில் பாடலுக்கு நான்கு பகுதிகள் உண்டு. அவை: தாயிஸ் / ஸ்தாயி, அந்த்ரா, சஞ்சாரி, மற்றும் ஆயோக் / ஆபோக்; ‘தமார்’ தாளத்தில் பாடப்படும் பல்லவி’க்கு ‘தமார்’ என்றே பெயர். தமார், ஹோரி ஆகிய இரண்டு உருப்படி வகைகளும் துருபத் பாடுபவர்களால் பாடப்படுகின்றன.

பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த ‘அதாரங், சதாரங்’ என்ற இருவரால் அறிமுகப்படுத்தப்பட்ட பாணி ‘கயால்‘ என்று குறிப்பிடப்படுகிறது. இன்று இந்த கயால் பாணிதான் பெருமளவு பின்பற்றப்படு கிறது. தற்காலத்தில் கெயால்கள் நான்கு வகைகளில் பாடப்பெறுகின்றன. ஆக்ரா-குவாலியர் வகை – முதலில் இருந்து கடைசி வரை தாளத்தினால் கட்டுப்பட்டிருக்கும். இதில் ஆலாபனையும், பாடலும் இரண்டறக் கலந்து பயன்படுகின்றன. கயாலில், ‘படா கயால்,’ ‘சோட்டா கயால்’ என்று இரு பிரிவுகளுண்டு.

‘துருபத்’ பாணிதான் பழமையானதும் கம்பீரமானதும் ஆகும். ‘துருபத்’ பாடகர் ஒரே ஸ்வரத்தில் உலகையே பிடித்துக் கொண்டு வந்து விடுவார். கயால் பாடுபவர் இந்த விளைவை ஏற்படுத்த பல ஸ்வரங்களின் கலவையை நம்ப வேண்டும்.
இந்துஸ்தானி இசையில் ‘ஆலாப்’ (ஆலாபனை)க்குத் தான் முக்கியத்துவம். பாடலுக்கு எந்த முக்கியத்துவமும் கிடையாது. மணிக்கணக்காக ‘ஆலாப்’ பாடும் மரபு இந்துஸ்தானி இசையுலகில் சாதாரணம். அதனால்தான், இந்துஸ்தானி இசையில் பாடலாசிரியர்கள் (சாகித்ய கர்த்தாக்கள்) என்று எவருமே பிரபலமடையவில்லை. பாடகர்கள் தான் பிரபலமடைந்திருக்கிறார்கள்.

“The Disciple” contains extraordinary performances from a music teacher, played by Arun Dravid, that show the complex interplay between him and his student accompanists.

அன்னபூர்ணாதேவி – மாயி

1973-இல் ரிஷிகேஷ் முகர்ஜி-யின் அபிமான் என்னும் ஹிந்திப் படம் வெளியானது. அதில் புகழ்பெற்ற பாடகராக அமிதாப் வருவார். கூச்ச சுபாவமுள்ள பாடகியாக அமிதாபின் மனைவியாக ஜெயா பச்சன் நடித்திருந்தார். அந்தப் படத்தின் அசல்கள் பண்டிட் ரவிஷங்கரும் அவரது முதல் மனைவியுமான அன்னபூர்ணாதேவியும் எனலாம். இருவரும் இணைந்து சில கச்சேரிகளில் மேடையேறி இருக்கிறார்கள். “அவரை விட என் இசைக்கு ரசிகர்கள் தலையாட்டினார்கள். அது ரவிசங்கருக்கு உவப்பாக இல்லை. எனக்கு மக்களுக்காக வாசிப்பதிலும் அவ்வளவு விருப்பமில்லை. எனவே நிறுத்தி விட்டேன். சாதகத்தைத் தொடர்வேன்.” என்று அன்னபூர்ணா தேவி கூறியிருக்கிறார்.

ரவிசங்கரின் மாணவரான மதன்லால் வியாஸ் என்பவரின் கருத்தும் இதோடு ஒத்துப் போகிறது: “கச்சேரிகள் முடிந்தவுடன் ரசிகர்கள் ரவியை விட அன்னபூர்ணாவை மொய்ப்பார்கள். பண்டிட்ஜியால் அதை ஜீரணிக்கவே முடியவில்லை. அவரால் மேடையில் சரிசமமாக பங்களிக்க இயலவில்லை. அன்ன்பூர்ணா ஒரு ஜீனியஸ்.”

அப்பா (உஸ்தாத் அலாவுதீன் கான்), அண்ணாவை (உடன் பிறந்த உஸ்தாத் அலி அக்பர் கான்) உட்கார்த்தி கற்றுக் கொடுப்பார். அப்போது ஒரு வினாடி கூட சிதாரிலிருந்து கையை எடுக்காமல் பயிற்சி செய்ய வேண்டும் என்று கடுமையாக கட்டளையிட்டுவிட்டு கடைத்தெருவிற்கு செல்லுவார். அவர் எனக்கு கற்பிக்க மாட்டார். ஆனால், நாள் முழுவதும் அண்ணா, ரவிஷங்கர் மற்றும் எல்லா மாணவர்களுக்கும் பயிற்சிக்கு வாசிப்பதைக் கேட்டு கேட்டு. அவரை அறியாமலே இசை தேவி அவரின் மனத்தினுள் குடி கொண்டு விட்டாள். ஒரு நாள் பயிற்சி செய்து களைத்துவிட்ட அண்ணா, சற்றே இளைப்பாற நிறுத்தி இருக்கிறார். அப்போது சிறுமி. அண்ணா நிறுத்திவிட்டத்தைக் கண்டு ‘ அண்ணா, ஏன் நிறுத்தி விட்டிர்கள்?’ என்று அப்பாவைப் போலவே சொல்லி அடுத்த பகுதியை ம, த, நி, ஸா, ம, த, மத, தநி, சாரே, தநி, தநி என்று எந்தத் தவறும் இல்லாமல் பாடத்தொடங்கி விட்டார். அண்ணா அப்போது தலையைக் குனிந்து கொண்டே இருந்தார். அவர் வாசிப்பதற்கு தயாராக இல்லை. ‘என்ன ஆயிற்று? வாசியுங்கள்’ . அண்ணாவின் கண்களின் பார்வையைக் கண்டு திரும்பிப்பார்த்தால், அங்கே பின்னால் அப்பா அலாவுதீன் நின்று கொண்டிருக்கிறார். அக்கா பயத்தில் சிலையாகிப் போனாள். அப்பா இப்போது கோபப்படப்போகிறார், என்று பயந்து அப்படியே இருந்தார். இறைவனின் கட்டளையைப் போல அவரின் வாயிலிருந்து சொற்கள் புறப்பட்டன, ‘மகளே! நீ தான் சாட்சாத் சரஸ்வதி தேவி. நான் இத்தனை நாட்களாக இதைப் புரிந்து கொள்ளாமல் இருந்துவிட்டேன்’ என்றார்.

Annapurna Devi, Acclaimed but Reclusive Indian Musician | Tamil Archives

இப்படிப்பட்ட ஒரு மாமேதை என்னும் எதிர்பார்ப்புடன் ரசிகர்களைத் திருப்தியுற வைப்பதும் சிரமமாகிறது. சபா அரசியலை எதிர்கொள்ள வேண்டும். காரியஸ்தர்களுடன் சமரசங்கள் செய்ய வேண்டும். அவர்கள் அழைக்கும் விருந்துகளுக்கு செல்ல வேண்டும். பதில் உபசரிப்பு நல்க வேண்டும். புகைப்படங்களுக்கு அழகு காண்பிக்க வேண்டும். விதவிதமாக ஆடைகளும் சிகையலங்காரங்களும் இன்ன பிற ஆபரணங்களும் அணிய வேண்டும். அவை அலுங்காமல் முகப்பூச்சு கலையாமல் வேர்வை சிந்தாமல் வாயசைக்க வேண்டும். தனியாக இணையத்தளம் துவங்கி விசிறிகளை வரவழைக்க வேண்டும். விழாக்களுக்கு பயணிக்க வேண்டும். விமான தாமதங்கள், பாதையில் ஏற்படும் சுணக்கங்கள் என்று தடைகள் வந்தாலும் சொல்லிய நேரத்திற்கு டாணென்று ஆஜர் ஆகி உரையாற்ற வேண்டும். இன்றைய காலகட்டத்தில் ஒலிநாடா வெளியானவுடன் அதற்கான முன்னெடுப்புகளில் வெகுஜனங்களை ஈடுபடுத்த வேண்டும். நன்றாக செவ்வனே ஹிந்துஸ்தானியைக் கொடுத்தால் மட்டும் போதாது. அது எங்கிருந்து தோன்றியது, எவ்வாறு இவரின் குரலில் மிளிர்கிறது என்று நான்கைந்து பேரைக் கொண்டு பத்து ஊடகங்களில் கொண்டு சேர்க்க வேண்டும். இந்த சந்தையாக்க வேலையில் “மா”விற்கு விருப்பமில்லை.

ஆனால், அதே சமயம் தான் கற்ற வித்தையை தூய பாரம்பரியத்துடன், இசையில் மசாலா கலக்காமல் தன்னுடைய உண்மையான சீடர்களுக்குக் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் அவருக்கு கடும் ஆர்வம் இருந்தது. இதிலும் ரவிஷங்கர் மாறுபட்டார். பீட்டில்ஸ் குழுவின் ஜார்ஜ் ஹாரிசன் என்று கிளை மாறினார். அன்னபூர்ணா “மா” ரொம்பவும் கண்டிப்பான குரு என பெயர் பெற்றவர். எனவே, குருகுலத்தில் கற்க சென்ற ஹரிபிரசாத் சௌராஸியா போன்ற வெகு சிலரே கரையேறி இருக்கின்றனர்.

மிருதங்கம், தபலா போன்ற கருவிகளின் சொற்கட்டுக்களை இராக தாளங்களுடன் பாடுவது திரிபாத் எனப்படும். அன்னபூர்ணா தன் அப்பாவிடம் இருந்து கற்றுக் கொண்ட துருபத் செவ்வியல் பயிற்சி குறித்து ஷாஜியின் கட்டுரையில் இருந்து ஒரு நறுக்கு:

அங்கிருந்த வெவ்வேறு குறுநில மன்னர்களின் அரசரவைகளில் ஆஸ்தான பாடகர்களாக 12 தலைமுறைகளாக பாடிவந்த ஒரு பரம்பரையில்தான் மெஹ்தி ஹசன் பிறந்தார். ஆனால் அவர்கள் பாடிவந்த துருபத் எனும் செவ்வியல் இசை வடிவம் இஸ்லாமியர்களின் இசையல்ல!

நூற்றாண்டுகளுக்கு முன்பு இந்துமதக் கோவில்களில் பாடப்பட்டுவந்த மரபான பக்திப்பாடல்களை சீரமைத்து உருவாக்கின இசைவடிவம்தான் துருபத். அதை பேணிக் காத்தவர்கள் இந்து மதத்தைச் சார்ந்த அரசர்கள். பாரசீகத்திலிருந்து வந்த இசைமுறைகளின் தாக்கத்தாலும் இஸ்லாமிய மன்னர்களின் ஆதரவினாலும் பதின்மூன்றாம் நூற்றாண்டு முதல் வளர்ந்து வந்த கயால் இசைமுறைதான் இஸ்லாம் மதத்தைச் சார்ந்த பாடகர்கள் முன்னெடுத்து வந்தனர். ஆனால் மெஹ்தி ஹசனின் மூதாதையர்கள் கயாலுக்கு மாறவில்லை. அவர்கள் இந்துமத ராஜாக்களின் அரசரவைகளில் துருபத் பாடுபவர்களாகவே இருந்து வந்தனர்.

’உஸ்தாத்’ என்று இஸ்லாம் மதத்தைச் சார்ந்த இசை விற்பன்னர்களை அழைப்பதும், ’பண்டிட்’ என்று இந்து மதத்தைச் சார்ந்த இசை மேதைகளை அழைப்பதும்தான் வழக்கம். ஆனால் மெஹ்தி ஹசனின் பரம்பரை அவர்களது துருபத் இசையினால் ’பண்டிட்’ என்றே அழைக்கப்பட்டனர். ஹிந்துஸ்தானி இசையின் இமையங்களாக கருதப்படும் மியான் தான்ஸேன், அப்துல் கரீம் கான் போன்றவர்களெல்லாம் ஒரு காலத்தில் இந்துமதத்திலிருந்து இஸ்லாமுக்கு மதம் மாறியவர்களே. தீபக் ராகம் பாடி தீபத்தை எரியவைத்தார் என்றும் மேகமல்ஹார் ராகம் பாடி மழை பொழிய வைத்தார் என்றும் நம்பப்படும் தான்ஸேனின் இயர்ப் பெயர் ராம்தனு மிஸ்ரா! ஆக்ரா கரானாவை நிருவியவரான உஸ்தாத் அப்துல் கரீம் கானின் பாட்டன் இஸ்லாமுக்கு மதம் மாறியவர்

ஷாஜி: மெஹ்தி ஹசன் – முடிவின்மையின் இசை (musicshaji)

”மா” – ரோஷனாரா கான் எனும் இயற்பெயர் கொண்டவர். மாயிஹர் என்னும் ஊரில் பிறந்தவர். இப்பொழுது படத்தில் மாயி என்னும் கதாபாத்திரத்தின் தாக்கத்தை உணரலாம். திரைப்படத்தில் “மாயி” என்பவரின் குரல் ஆங்காங்கே ஒலிக்கிறது. நாயகனுக்கு வழிகாட்டுதலாக அமைகிறது.

படத்தின் நாயகன் தனிமையில் தன் பைக் ஓட்டிச் செல்லும் நடுநிசி இரவுகளில் இந்தக் குரல் ஒலிக்கிறது. மாயி கொடுக்கும் ஆலோசனையில் தூய்மையும், நிலை சார் பார்வையும் உள் உண்மையைக் கண்டறிவதும் அடங்கும். இந்தக் காட்சிகள் ஸ்லோ மோஷனில் வருவதால் நம்மிடம் அமைதி குடிகொள்கிறது. இது நாயகனின் கண்ணோட்டத்தை உணர்த்துகிறது. தீர்க்கமான குரலின் பின்னணியில் தம்பூரா நாதம் கோவில் மந்திர உச்சாடனம் போல் தாள சுருதியுடன் ஜெபமாகிறது.

அந்த மேற்கோள்களில் சில:

1. சரஸ்வதியிடம் நம்பிக்கை வை. இசையின் தெய்வத்திடம் உறுதி பூண். அவளின் அனுக்கிரஹம் அப்படியே உனக்கு வரும். வெறும் இசையை மட்டும் பயிலாதே. நீடித்திருக்கும் திறனையும் விடாமுயற்சியையும் கற்றுக் கொள். இந்தப் பயணம் நீண்டது; கடினமானது. ஜொலித்திருக்க வேண்டியவர் கால்வாசியில் சுருண்டதைப் பார்க்கிறேன். ஆயிரம் முறை தோல்வியடைந்தாலும் எழுந்திரு. உன் சிந்தையை நெறிப்படுத்து. எந்த அசந்தர்ப்பத்திலும் நீ தேர்ந்தெடுத்த பாதையை விட்டு வழுவாதே!

2. இசையின் வழியாக சான்னித்தியத்தின் பாதையைக் கண்டடைவோம். இந்திய சாஸ்திரீய சங்கீதத்தை நித்திய தேடுதல் என்கிறோம். இந்த இரைதேர்தலுக்கு முழுச் சரணாகதியும் தியாகமும் கைகோர்க்கும். காசு வேண்டும், குடும்பம் குட்டி வேண்டும் என்றால் சினிமாவிற்குப் போய் டூயட் பாட்டைப் பாடு. இங்கே வராதே. இந்தப் பாதையில் தனித்து பயணி. பசியோடு நடப்பாயாக.

3. அமைதியற்ற மனதால் காயல் பாடலை ஆழமாகவும் சுத்தமாகவும் பிராமாணியமாகவும் பாடவே இயலாது. ஒவ்வொரு அட்சரத்தையும், ஒவ்வொரு தாளத்தின் உள்நுணுக்கத்தையும், உருவேற்றி வணங்கி உள்வாங்க தூய்மையான கள்ளம் கபடமற்ற அகம் கொள். காயல் என்றால் என்ன? அந்த நேரத்தில், அந்த குறிப்பிட்ட தருணத்தில் பாடுபவர்களின் மனநிலை. ராகத்தின் துணைகொண்டு இதை இன்னொருவரிடன் கொண்டு சேர்க்கிறாய். பாடும் போது, ராகத்தின் எந்தப் புதிய அம்சத்தை நீங்கள் வெளிப்படுத்துவீர்கள் என்று உங்களுக்குத் தெரியாது. ராகத்தின் உண்மை தன்னிச்சையாக வெளிப்பட வேண்டுமென நீங்கள் விரும்பினால், நீங்கள் உங்கள் மனதில் பொய்யையும் பேராசையையும் அசிங்கமான எண்ணங்களையும் அகற்ற வேண்டும். இதற்குத் தேவையான உள்ளார்ந்த ஒழுக்கமும் நம்பிக்கையும் எல்லோரிடமும் இருப்பதில்லை.

4. நீங்கள் எனது இசையைக் கற்றுக்கொள்ள விரும்பினால், ரசிகர்கள் போன்ற கருத்துக்களை மறந்து விடுங்கள். நான் பார்வையாளர்களுக்காகவோ புரவலர்களுக்காகவோ பாடவில்லை. நான் எத்தனை சிக்கலான ராகங்களில் தேர்ச்சி பெற்றுள்ளேன் அல்லது எவ்வளவு பயிற்சி பெற்றுள்ளேன் என்பதைக் காட்டுவதில் எனக்கு விருப்பமில்லை. நான் என் குருவுக்காகவும் கடவுளுக்காகவும் மட்டுமே பாடுகிறேன். அன்றொரு நாள் ஒருவர் என்னிடம் கேட்டார், “ஆனால் மாயீ, பார்வையாளர்களைப் பொறுத்து ராகத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டாமா?”. நான் சொன்னேன், “ஒரு அரங்கில் இருநூறு பேர் இருக்கிறார்கள். இருநூறு பேருக்கு இருநூறு நினைப்பு. எத்தனை பேரை மகிழ்விக்க முயற்சிப்பீர்கள்? நீ என்ன சர்க்க்ஸ் குரங்கா?” இங்கே எக்கச்சக்கமான கலைஞர்கள் சாஸ்தீரிய இசை என்னும் பேரில் குரலை வைத்து எல்லாவிதமான கஜ கர்ணங்களும் குட்டிக்கரணங்களும் அடிக்கிறார்கள். நல்லவேளையாக என் ஆசானிடமிருந்து அந்த மாதிரியானப் பயிற்சி எனக்குக் கிடைக்கவில்லை. அவர் எப்போதும் சொல்லுவார், “நீங்கள் கண்களை மூடிக்கொண்டு முதல் குறிப்பை உச்சரித்தவுடன், ராகத்தைத் தவிர வேறு எதுவும் உங்கள் மனதில் நுழைய அனுமதிக்கப்படக்கூடாது. அப்படியானால் அன்று நீங்கள் தோல்வியடைந்தாலும் பரவாயில்லை… ஏனென்றால் குறைந்த பட்சம் நீங்கள் மனப்பூர்வமாக முயற்சித்தீர்கள்.”

பிற படங்கள்

சங்கீதத்தை மையமாக வைத்து வேறு என்ன இந்தியப் படங்கள், தமிழ்த் தொலைக்காட்சித் தொடர்கள் நினைவிற்கு வருகின்றன?

தெலுங்கில் கே விஸ்வநாத் நிறைய எடுத்திருக்கிறார். சாகர சங்கமம், சங்கராபரணம்.

தமிழில் ”சிந்து பைரவி”யை சொன்னால் என்னை சரஸ்வதி தேவி வித்தியாபிரஷ்டம் செய்துவிடுவார்.

சமீபத்தில் தொலைக்காட்சித் தொடராக ”பேண்டிஷ் பண்டிட்ஸ்” (Bandish Bandits) பார்த்தேன். அதில் காதல் தொண்ணூறு சதவிகிதமும் கலந்திசை எட்டு சதவிகிதமும் கரானா வகையறா ஊறுகாயாகவும் வந்து போயின.

ராம்பிரசாத் கி தெஹ்ர்வி (रामप्रसाद की तेरहवीं) மாதிரி நிறைய படங்களில் இசைக் குடும்பம், சங்கீத ஆசிரியர்கள் வந்து போகிறார்கள். தல ரசிகர்களுக்கு “முகவரி” முக்கியமான படமாக இருக்கும்.

அதன் பிறகு சர்வம் தாளமயம், ஸ்வாதி திருநாள் எல்லாம் பட்டியலில் இருக்கிறது. விக்கிப்பிடியா சொல்லும் திரைப்படங்கள் இன்னும் தாராளமாக இருக்கிறது. பாலசரஸ்வதி அவர்கள் குறித்து சத்யஜித்ரே எடுத்த “பாலா” ஆவணப்படமும், எம்.எஸ். சுப்புலஷ்மி நடித்த 1945 மீராவும் ஹேமமாலினி நடித்து பண்டிட் ரவிசங்கர் இசையமைத்த 1979 மீராவும் கேள்விப்பட்டிருப்போம்.

மூபி தளத்தில் ஐந்து குறிப்பிடத்தக்க படங்கள் கிடைக்கின்றன:

  1. உஸ்தாத் அலாவுதீன் கான் – ரித்விக் கடக், 1963
  2. துருபத் – மணி கௌல், 1983
  3. சித்தேஷ்வரி – மணி கௌல், 1989
  4. அமர் பூபாலி – சாந்தாராம் ராஜாராம், 1951
  5. பைஜு பாவ்ரா – விஜய் பட், 1952

சாதகன்

படக்கதை

படத்தின் நாயகனின் மூன்று காலகட்டங்களில் படம் முன்னும் பின்னுமாக பயணிக்கிறது. அவன் பெயர் சரத். இருபதுகளில் இருக்கிறான். இது 2006-ஆம் ஆண்டு. அவனின் தோழர்களுக்கு வேலை கிடைக்கிறது; திருமணங்கள் ஆகிறது. சரத் தன் வாழ்க்கையயே இசைக்கு அர்ப்பணிக்க நினைக்கிறான். குருஜியின் பாடங்களை வேதவாக்காக பயில்கிறான். தினமும் இரவு சாதகம் செய்கிறான். குருவிற்குத் தேவையான எல்லா பணிவிடைகளும் சிசுருஷைகளும் செய்கிறான். குருவோ நாற்பது வயது வரையாவது சீடன் கற்றுக் கொண்டால்தான் கொஞ்சமாவது இசைக்கலை அப்பழுக்கில்லாமல் ஒட்டும் என்று சொல்லிவிடுகிறார். அவனுக்கு இசை கை வந்த கலையானதா? ரசிகர்களின் கரகோஷத்தைப் பெற்றானா? விமர்சகர்களின் பாராட்டைப் பெற்றானா? மேடையில் வெற்றி அடைந்தானா? எது வெற்றி?

உபகதை

அன்னபூர்ணாதேவி அறக்கட்டளையை நிர்வகிக்கும் நித்தியானந்த் ஹல்திபூர் இந்த சம்பவத்தை நினைவு கோருகிறார். “அன்றைக்கு எனக்கு செம களைப்பு. வாசிக்கவே உடல் ஒத்துழைக்காது போல் இருந்தது. ஆனால், தினசரி பாடம் எடுக்கும் வேளையில் ஆஜராகவிட்டால் ‘மா’விற்கு கெட்ட கோபம் வந்துவிடும். கடனேயென்றுதான் சென்றேன். என் பிரார்த்தனை எல்லாம் என் உடல்வலியை ‘மா’வே உணர்ந்து என்னை பயிற்சிக்குள் செலுத்தாமல் விட்டுவிடவேண்டும் என்பதாக இருந்தது. ஐந்து நிமிடம் புல்லாங்குழல் வாசித்தவுடன் என் சோர்வை கண்டுபிடித்துவிட்டார். ஆனால், வேண்டுதல் நிறைவேறவில்லை. என் பக்கத்தில் வந்து ”மஞ்ச் கம்மாஜ்” ராகத்தின் ஆரோகணத்தையும் அவரோகணத்தையும் கற்றுக் கொடுத்தார். அது அவரின் தந்தையால் இயற்றப்பட்ட இராகம். அதை இரண்டரை நணி நேரத்திற்கும் மேலாக வாசித்துப் பயின்றுகொண்டிருந்தேன். அதன் பின், ‘இப்பொழுது எப்படி உணர்கிறாய்?’ என்றார். என்னால் நம்பவியலவில்லை. என்னுள் ஒளி நிறைந்திருந்தது. நான் முற்றிலும் புத்துணர்ச்சியுடனும் ஆற்றலுடனும் உணர்ந்தேன். அப்பொழுது ‘மா’ சொல்வார்கள், ‘இந்த ராகம் ஓய்வைத் தரவல்லது. நோக்கம் தூய்மையாக இருக்கும் போது அந்த ராகத்தின் பலன் உன்னை வந்தடையும்.’”

சாதகம் என்றால் ‘அமைதியை ஆராய்வது’.

  • ‘சா’ – ஏக்கம்
  • ‘த’ – சாரத்தை தக்கவைத்தல்
  • ’க’ – உன்னதத்தில் நாட்டம்

தி டிஸ்சிப்பிள் படத்தின் நாயகன் சரத் இசைக்காக கன்னாபின்னாவென பிரத்தியாசைப் படுகிறான். கிளிப்பிள்ளையாக பாடுகிறான். எதற்காக சங்கீதத்தைப் பாடுகிறோம், யாருக்காக இசை பயில்கிறோம் என்பதில் அவனுக்கு குழப்பங்கள் உண்டு.

இசைக் குடும்பம்

அவன் தந்தை ஒரு புத்தக மேதை. தான் மட்டும் முயன்றிருந்தால் பெரிய வித்துவான் ஆகியிருப்பேன் என அங்கலாய்ப்பைக் கொண்டவர். அனேக கச்சேரிகளை சுப்புடுவாக கடுமையாக விமர்சிப்பவர். ‘சுரபி’ போன்ற நிகழ்ச்சியைத் தொகுத்தளிப்பவர். நல்ல இசையை சின்ன வயதிலேயே சரத்திற்கு கற்றுக் கொடுத்தவர். வயதுக்கு மீறிய அறிவை சரத்திடம் நுழைத்து பால்ய பருவத்திலிருந்தே இசையில் சாதிக்க வேண்டும் என்னும் வெறியை புகுத்தியவர்.

சரத் அவனுடைய அத்தையுடன் வாழ்ந்து வருகிறான். அன்றாடங்காய்ச்சி. பழைய வானொலி ஒலிப்பதிவுகளை புதிய சிடி / டிவிடி-க்களாக மாற்றித் தந்து விற்கும் நிறுவனத்திற்கு கிட்டத்தட்ட இலவசமாக வேலை பார்க்கிறான். யாருமே கேட்காத, எவருக்குமே தெரியாத முகங்களின் அரிதான அற்புதங்களை சபாக்களில் விற்கப் பார்க்கிறான்.

படமொழி

எனக்கு கர்னாடக இசையோ மேற்கத்திய இசையோ முறைப்படி தெரியாது. இந்த மாதிரி ஹிந்துஸ்தானி தெரியாத பார்வையாளரை எவ்வாறு இசையனுபவத்திற்குள் நுழைப்பது?

நான் கச்சேரிகளுக்கு சென்றிருக்கிறேன். கொஞ்சம் சீக்கிரமே சென்றுவிட வேண்டும். இல்லையென்றால், பாரதீய வித்யா பவன் மாதிரி இலவச சபாக்களில் சீட் கிடைக்காது. மின்விசிறி பக்கமாக இருக்கை இருக்காது. ஒரு சிலர் பக்கத்தில் உள்ளவரிடம் சொல்லிவிட்டு வெளியில் தம் போட போய்விடுவார்கள். இன்னும் சிலர் சபா காண்டீன் பக்கம் எட்டிப் பார்த்துவிட்டுச் செல்லப் போய்விடுவார்கள். நிகழ்ச்சிநிரலை விசிறியாக்கி காற்றுவாங்கிக் கொள்வார்கள். இதெல்லாம் இந்தப் படத்தில் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கு முன்பும் அந்தச் சூழலை, ரம்மியத்தை, உணர்வை நம்முள் பாய்ச்சுகிறது. பாடகர் தன் நிகழ்ச்சியைத் துவங்கியவுடன் காமிரா மேடையில் இருக்கும் பக்கவாத்தியக்காரர்கள் மீது அலைபாய்கிறது; வித்வான் மீது சற்று நிலைக்கிறது; பின்னால் கவனத்துடன் தம்பூரா மீட்டும் சிஷ்யர்களிடம் மெதுவாக கவனத்தைத் திருப்புகிறது. பார்வையாளர்கள், விழா விருந்தினர்கள், போட்டி நடுவர்கள் என சகலரின் கண்ணோட்டங்களையும் நிரப்புகிறது.

அதன் பின் சரத் வருகிறார். அவரின் பார்வை தருணத்திற்கேற்ப மாறுகிறது. சில சமயம் ஆதுரம்; சில சமயம் ஆதரவு; சில சமயம் பொறாமை; சில சமயம் அதிவினயம்; சில சமயம் மனத்தாழ்மை; சில சமயம் பாதுகாப்பற்ற பயம். குருஜியின் பாடலை விட அந்த மாணாக்கனின் நவரச பாவங்கள், ‘போதும்டா… இதுக்குப் போய் அலட்டிக்காதே!’ என தட்டிக் கொடுக்க நினைக்கவைக்கிறது.

அனேக காட்சிகள் உள்ளடுக்குகள் நிறைந்தவை. உதாரணத்திற்கு ஒன்றே ஒன்று. நாயகனுக்கு இப்பொழுது நாற்பது வயது ஆகப் போகிறது. தற்காலத் தொலைக்காட்சியை மாலை நேரத்தில் புரட்டிக் கொண்டிருக்கிறான். செய்திகளில் மாட்டிறைச்சி தின்றவரை கழுவிலேற்றியதைச் சொல்லும் செய்தியை வினாடி நேரத்தில் கடந்து செல்கிறான். இன்னொரு கன்னலில் அதிரடி சிங்கரில் பாப் பாடல் ஒன்றைக் கேட்கிறான்.

கேள்வி நேரம்

  • கலை மேன்மையை அடைவதற்காக பலிகொடுக்கும் இழப்புகள், அந்தவிதமான உன்னத லட்சியங்கள் இல்லாமல் சமரசம் செய்து கொண்டு பொதுவெளியில் நட்சத்திரமாக வாழ்வதை விட திருப்திகரமானதா?
  • தூய்மையான இசை எது என்று தீர்மானிப்பதற்கு சரத் யார்?
  • அந்தரங்கத்தில் சந்தோஷமாக இருக்க வைத்த சங்கீதம், சாஸ்திரீய சங்கீதம் இல்லையென்பதற்கு நாம் தர்மசங்கடப்பட்டு, அந்த சிலாகிப்பை மறைத்துவிட வேண்டியதுதானா?
  • முசுடு என்பதற்கும் விமர்சகர் என்பதற்கும் என்ன வித்தியாசம்?
  • ஒழுங்கு மரியாதையாக கர்னாடக சங்கீதத்தின் பாலபாடம், ஹிந்துஸ்தானியின் ராகங்கள் எல்லாம் தெரிந்தால்தான் இந்த கச்சேரிகளின் நுணுக்கங்களைப் புரிந்து ரசிக்க முடியும் என்பது முக்கால்வாசி பேரை துரத்திவிடாதா?
  • ”உங்களுக்கு எது பிடிக்கிறதோ, அதைக் கண்டுபிடி. அது உன்னைத் தின்னட்டும்” என்பார்கள். அப்படித்தானா?
  • விருதுப் படங்கள் என்றால் கையடிக்கும் காட்சிகள் அவசியம் இடம்பெற வேண்டுமா?
  • தேசியத் தலைவர்கள் இறந்தால் போடப்படும் இசை என்று நான் கேட்ட இசைக்குள் இத்தனை அரசியல்கள்! எவ்வளவு சங்கதிகள்? அத்தனைக்கும் மேலாக எம்புட்டு வம்புதும்புகள்!?!

பாடப் புத்தகம்

பரிசுத்த வேதாகமத்தில் கோட்பாடுகளும் விதிமுறைகளும் மட்டும் இல்லை. பைபிள் கதைகளுக்கு புகழ்பெற்றது. ஆதாமும் ஏவாளும் தோன்றுகிறார்கள்; பெரு வெள்ளப்பெருக்கு வருகிறது; நோவா பேழை உருவாக்குகிறார்; ஆபிரஹாமும் ஐஸாக்கும் வம்சாவழியை கேள்விக்குள்ளாக்குகிறது; சாம்சன் மற்றும் டெலிலா தொன்மம் மோகமும் துரோகமும் விசுவாசமும் உணர்த்துகிறது. இசையை ஓடவிட்டு ஒலிக்கப் போட்டு ரசிப்பது ஒரு வகை. அது கதை வகை.

இந்தப் படம் அந்த வகை. இது இந்துஸ்தானி இசையின் அடிநாதம் என்ன, எவ்வாறு சீரழிகிறது என்றெல்லாம் மேடையில் இருந்து கதறவில்லை. இது திறமையற்றவனின், தோல்வியுற்றவனின் கதை. இது காலமாற்றத்தின், சமூக ஊடகத்தின், சூப்பர் சிங்கர் தலைமுறையின் கதை.

பைபிள் யேசுவின் வாழ்க்கையை குறிக்கவில்லை; அது போல் இந்தப் படம் மாயீ என்னும் சரஸ்வதி பிரத்தியட்சமாக தாண்டவமாடும் கலைஞரின் புராணமோ, ஹிந்துஸ்தானி குரு பரம்பரை சரித்திரமோ, ஒரு சீடனின் தன் வரலாறோ அல்ல. சங்கீதம் ஒரு உலகப் பொது மொழி. எந்தவோர் இசையும் அது எந்த விதிக்குட்பட்டது, எவ்வாறு மரபிற்குட்ப்பட்டது, என்றெல்லாம் யோசியாமல பாடமாகப் படிக்காமல் கற்பனைக்கு இடங்கொடுத்து புரிதல்களை விரிவாக்குமாறு பாடுங்கள்.

”ஒவ்வொரு வீட்டிலும் ஒரு குழந்தைக்கு ஹிந்துஸ்தானி பாரம்பரிய இசையை கற்றுக் கொடுத்திருந்தால் இந்த நாடு பிரிந்திருக்காது”

உஸ்தாத் படே குலாம் அலி கான்

ஹிந்துஸ்தானி இசை 101

‘கிரானா-கரானா’

அப்துல் வாஹித் கான், அப்துல் கரீம் கான் ஆகியோர் இந்தக் கரானா வின் முன்னோடிகள். இதன் சிறப்பியல்புகள்: ‘விளம்பித்’ லயத்துக்கு அதிக முக்கியத்துவம்; இனிமையான சஞ்சாரம், அருமையான ஸ்வரபிரஸ்தாரம், நுணுக்கமான ‘கமகங்கள்’. இந்தக் கரானா மூலம் புகழ் பெற்ற கலைஞர்கள்: ஒம்கார்நாத் தாகூர், பீம்சேன் ஜோஷி, சுரேஷ்பாபு மானே, நியாஸ் அஹமத், பிரபா ஆத்ரே, பர்வீன் சுல்தானா, சவாய் கந்தர்வா, பண்ஜேஸ்வரி புவா.

‘பாட்டியாலா-கரானா’

படே குலாம் அலிகான் தான் இந்தக் கரானாவை உருவாக்கியவர். இதன் சிறப்பியல்புகள்: ‘துரித’ லயத்திற்கு முக்கியத்துவம்; இனிமை; மனத்திற்கு அமைதி அளித்தல், வேகமான ஸ்வரபிரஸ்தாரம்; இலக்கண சுத்தம்.

மேற்சொன்ன கரானாக் களைத் தவிர இன்னும் சில கரானாக்களும் புழக்கத்தில் உள்ளன. அவை:

  • குவாலியர் கரானா
  • பனாரஸ் கரானா,
  • ஆக்ரா கரானா,
  • ராம்பூர் சஹஸ்வான் கரானா,
  • இந்தோர் கரானா,
  • மேவாத்தி கரானா,
  • ஜெய்ப்பூர் கரானா,
  • டெல்லி கரானா,
  • பெண்டி பஜார்-கரானா.

இந்துஸ்தானி இசை மரபில் புழங்கும் சில சொற்களுக்கு விளக்கம்

ஆமாத் – ஆலாபனையின் உச்சகட்டத்தில் நளின மாக வந்து சேரும் லய வின்யாசம்.
அடி – லயத்தின் குறுக்காக வாசித்தல்.
ஆகார் – (ஆ’காரம்) ‘ஆ’ வென்று வாயை முழுதுமாகத் திறந்து பாடுதல்.
அலங்கார் – ஸ்வரங்களை அழகாகப் பின்னிப் பிணைத்து இனிமையாக அலங்கரிப்பது.
ஆலாப் – ஆலாபனை.
அந்தோலன் – ஸ்வரத்தை மெதுவாக அசைத்துப் பாடுதல்.
‘தய்யாரி’ = வல்லவர்
‘டப்பா’ = பஞ்சாபைச் சேர்ந்த ஒட்டகம் ஓட்டுபவர்களின் நாட்டுப் பாடல் பாணி.
‘தரானா’ = அவசியமற்ற ‘தா’ மற்றும் ‘நா’ போன்ற ஸ்வர சொற்களைச் சேர்த்துப் பாடும் ஒரு பாணி.
‘டோக்’ = அலங்காரமாக வந்து விழும் ‘கார்வை’.
‘தீஹை’ = ஒரு ‘சங்கதி’ யை மூன்று முறை பிடித்த பின் உச்சகட்டத்தை (சாம்) அடைதல்.
‘தீர்வத்’ = மூன்று வெவ்வேறு தால்களைப் பயன்படுத்தி அமைக்கப் படும் மெட்டு.
‘தீயா’ = ஒரே சங்கதியை மூன்று முறை தொடர்ந்து பிடித்தல்.
‘உபாஜ்’ = கல்பனாஸ்வரம்.
‘வக்ர’ = வக்கிரம்.
‘வியாபிச்சாரி பாவ’ = (உப) துணை உணர்ச்சி பாவம்
‘ஜோர்’ = தபலாவின் துணையின்றி, (தாலில்லாமல்) சிதாரில் லயத்துடன் ஸ்வரங்களை வாசித்தல்.
”காலி’ = அழுத்தத்தை தவிர்த்தல்.
‘கராஜ்’ = அடித்தொண்டையில் ராக-ஆலாப் செய்தல்.
‘கட்கா’ = இது ஓர் ‘அலங்காரம்’ – ஒரு ஸ்வரத்திலிருந்து அடுத்து வரும் ஸ்வரத்திற்கு துடிப்புடன் தாவுதல்.
‘லராஜ்’ = கீழ்ஸ்தாயியில் ‘ஆலாப்’ செய்தல்.
‘போல்-தான்’ பாடலின் சொற்களை விரைவான துரித கதி சங்கதிகளால் பின்னுதல்.
‘தமார்’ = 14 சொற்கட்டுகளுடன் அமைக்கப்பட்ட தாலும் அந்தத் தாலில் அமைந்த பாடலும்.
‘கமக்’ = ‘கமகம்’ = மிகைப் படுத்தப் படும் குரல் ஏற்ற இறக்கங்கள்.
‘காத்’ = இசைக்கருவிகளில் வாசிப்பதற்கென்றே இயற்றப்படும் ‘சங்கதி’
‘காயகி’ = ‘பாணி’ ‘துருபத்-காயகி’ மற்றும் ‘கயால்-காயகி’ (‘சோட்டா கயால்’ மற்றும் ‘படா=கயால்’)
‘கரானா’ = ஒரு குறிப்பிட்ட இசைப் (குரு) பாரம்பரியம்.
‘கஜல்’ = உருது மொழியில் இயற்றப் பட்டுள்ள மெல்லிசைப் பாடல்கள்
‘ஜதி’ = ஒரு தால-வடிவை ஏற்படுத்தப் பயன்படும் ‘மாத்ரா’ க்களின் கூட்டு.
‘ஜலா’ = ‘சிதார்’ கருவியை இசைக்கும்போது ஒரு குறிப்பிட்ட தந்தியை தொடர்ந்து தாலுக்கேற்றவாறு மீட்டுதல்

மேலும்

நனவூஞ்சல்

கல்லூரியை முடித்து 25 ஆண்டுகள் ஆகிவிட்டது.

அதற்காக எல்லோரையும் ஒன்று சேர்க்கும் வைபவம் நடக்கிறது. ஏற்கனவே 96 பார்த்து, அந்தக் கடுப்பில் இருந்தவனை இந்த விழா சுணங்க வைத்தது. 96 மாதிரி, கபீர் சிங் (நீங்கள் தெலுங்கர் என்றால் அர்ஜுன் ரெட்டி) மாதிரி எல்லாம் இனக் கவர்ச்சி என்றவன், இன்றும் பாலுணர்வு என்பவன் நான். நாளைக்கு என்ன நடக்கும் என்பது ரஜினிக்கேத் தெரியாது… எனக்கு என்ன நினைப்பு இருக்கும் என்பதை குணாவே உணர்வார்.

ரீயுனியன் சபலம் இருந்தாலும் விடவில்லை. இணைய எழுத்தாளன்; கௌரவமான உத்தியோகம்; யாருக்குத் தெரியும் சொல்வனம்.காம் பத்திரிகைக்கு எழுதுவதற்குக் கூட பிலானியில் ஆள் கிடைக்கலாம்! போக வேண்டும் என்னும் எண்ணம் எழுந்தது.

அப்பொழுது வாட்ஸப் குழுவில் இணைத்தார்கள். அந்தக் கால புகைப்படங்களைப் போட்டார்கள். எல்லோரும் சேர்ந்து எடுத்துக் கொண்டது; கொண்டாட்டங்களில் திளைத்த தருணங்களில் க்ளிக்கியது… அதையெல்லாம் பார்த்தால் அப்படியே நினைவோடையும் நனவூஞ்சலும் கொஞ்ச வேண்டுமே!?

இல்லை.

சற்றே வயிற்றைப் பிசைந்தது. எதை மதித்திருக்கிறோம்?

பணம்… செல்வாக்கு… ஸ்டைல்… பெண்களை அலட்சியப்படுத்தி மயக்கும் வித்தை… தற்பாலுணர்வு போன்ற சிறுபான்மையை கூனிக் குறுக வைக்கும் நடத்தை. தலித்தை பார்ப்பானும் பார்ப்பனனை மற்ற சாதியினரும் சாதிக் கண்ணோட்டம் மட்டுமே கொண்டு கணிக்கும் குறுகிய பார்வை.

எதைக் குறித்து பேசிக் கொண்டோம்? எப்படி மற்றவர்களை மதிப்பிட்டோம்? #மீடு இயக்கமோ, அறச்சீற்றமோ — எவ்வளவு அக்கறையையும் புரிதலையும் விவாதிக்கும் தன்மையும் இன்றாவது கொண்டிருக்கிறோம்?

பசுமையான நினைவுகள் என்று மனதில் ஏதோ மூளையின் மூலையில் எங்கோ தங்கி இருக்கிறது. அது அப்படியே பாசி பிடித்து இருக்கட்டும். இன்று போய் கருத்து சொன்னால், “உன் டெசிக்னெஷன் என்ன? என் பெஸ்ட் செல்லர் என்ன? உன் வால்யூவேஷன் என்ன?” என்று மட்டுமே சீர் தூக்கும் சமூகம் போதனையை விரும்பாது. உன்னால் என்ன காரியம் ஆகும், என்ன ஆதாயம் கிடைக்கும், எவ்வாறு வருமானம் பெருகும், எங்ஙனம் நெட்வொர்க் விரிவடையும் என்றே உன்னை கணிப்பிடும்.

உனக்கு அன்று அது முக்கியமானது என்பதை உணர்த்தினார்கள். இன்று எது உனக்கு முக்கியம் என்பதைப் புரிந்த பிறகும் நண்பர்களின் அருகாமைக்கும் தோழிகளின் தோற்றக் கவர்ச்சி எட்டிப் போன செல்ஃபீக்கும் என்ன வாத பரிபாலனம் கிட்டப்போகிறது?

போகாமல் இருப்பது – விட்டுப் போனதை எண்ணி நெஞ்சம் நிறைந்தது.

பியானோ ஆசிரியரின் கண்மணி

சிறுகதையை இங்கு வாசிக்கலாம் – The Piano Teacher’s Pupil | The New Yorker

அவசரமில்லை… படித்து விட்டு வாருங்கள். ஜான் அப்டைக் போல் இந்தக் கதையை எழுதியவரையும் நீங்கள் அறிந்திருப்பீர்கள்தானே?

சாதாரணமான நியு யார்க்கரின் கதைகள் போல் நீளமான சிறுகதையும் அல்ல. இரண்டாயிரம் வார்த்தைகளுக்குள் அடங்கி இருக்கிறது. மூன்றே பக்கங்கள்தான். சட்டென்று வாசிக்க முடியும். படித்து விட்டீர்களா?

ஆசிரியர் என்பவர் யார்? ஒரே இடத்திலேயே தேங்கி நிற்பவர் ஆசிரியர். கற்றுத்தரப் பட்டவர்கள் முன்னேறி வித்தை காண்பித்து புகழும் பணமும் பெறக்கூடியவர்கள். ஆனால், கற்றுத் தந்தவருக்கு அந்த வித்தையை அப்படி ஆக்கத் தெரிவதில்லை. வித்தகர் ஆக முடியாதவர் வாத்தியார் ஆகிறார். வர்த்தகமாக்க தெரியாதவர் வாத்தியாராக மட்டுமே வதங்குகிறார். எப்படி செய்ய வேண்டும் என்பது பியானோ ஆசிரியருக்குத் தெரியும். ஆனால், எதை எல்லாம் உருவாக்க முடியும் என்பது ஆசிரியர்களுக்கு புலப்படுவதில்லை.

இந்தக் கதை பியானோ ஆசிரியரைப் பற்றியது. மிஸ் நைட்டிங்கேல் (செல்வி வானம்பாடி) ஐம்பது வயதொத்த பெண்மணி. தன்னுடைய முப்பதுகள் வரை தந்தையோடு வசித்தார். தந்தைக்குத் தெரியாமல் மணமான ஒருவரின் காதல் பரத்தையாக பதினாறு ஆண்டுகள் இருந்திருக்கிறார். அந்தக் காதலர் இப்பொழுது அவளை நாடுவதில்லை. திங்கள் முதல் வெள்ளி வரை பல்வேறு தரப்பட்ட மாணவர்களுக்கு பியானோ வாசிக்கக் கற்றுத் தருகிறார்.

அவளிடம் ஒரு புத்தம்புது மாணவன் படிப்பு சொல்லிக் கொள்ள சேர்கிறான். வெள்ளி சாயங்காலம் அந்த மாணவன் வருகிறான். அவனிடம் கடவுள் கொடுத்த திறமை மட்டுமல்ல; அதற்கு மேற்பட்ட மேதாவித்தனம் கைவரிசையாக பியானோ இசையில் வெளியாகிறது. அவளுக்கெனவே பிரத்தியேகமாக வாசிக்கிறான். அவனுடைய கற்பனாசக்தியைத் தாண்டி கற்றுக் கொடுக்க என்று அவளுக்கு எதுவுமில்லை.

அவன் புறப்பட்ட பிறகு வீட்டில் இருந்து ஒவ்வொரு நாளும் ஒரு பொருள் காணாமல் போகிறது. மிகச் சிறிய கலைப்பொருள். அவளுடைய தந்தையார் ஞாபகார்த்தமாக சேமித்த சின்னச் சின்ன ஷோகேஸ் சின்னங்கள் மறைந்துவிடுகின்றன. அவளுடைய கழுத்தைச்சுற்றித் தொங்கவிடும் துகிலை, அவன் ஒரு சமயம் திருடி விடுகிறான். இன்னொரு சமயம் காலணியில் போட்டுக் கொள்ளும் அற்பமான அணிகலனை கவர்ந்து விடுகிறான். நகை போட்டு வைக்கும் பெட்டியை அவளுக்குத் தெரியாமல் எடுத்துச் சென்றுவிடுகிறான்.

கதை சொன்ன விதம் சுவாரசியமாக இருந்தது. டக்கென்று முடிந்ததும், முடிவு தெளிவாக புரியாததும் சற்றே எமாற்றம் தந்தது. வாழ்நாள் பறந்து சென்றுவிடுகிறது. நேரம் காணாமல் போகிறது என்பது புரிகிறது. இளமை கழிந்த பிறகே நமக்கு அதை இன்னும் பயனுள்ள முறையில் செலவிட்டிருக்கலாம் எனத் தோன்றுகிறது.

வில்லியம் டிரெவரைக் குறித்து இணையத்தில் தேடினால், ‘பதாகை’ தளத்தில் உருப்படியாக அறிமுகம் செய்திருக்கிறார்கள். அந்தக் குறிப்பில் இருந்து:

ட்ரெவரிடம் சிறுகதையின் வரையறை என்ன என்று கேட்கப்படுகிறது. அதற்கு பதிலளிக்கும் ட்ரெவர், அது ஒரு கண்ணுறு கலை என்று சொல்கிறார் (‘art of the glimpse‘). அதைத் தொடர்ந்து, சிறுகதையின் உண்மை வெடித்துத் தெறிக்க வேண்டும் என்று அவர் சொல்வதை, அதன் மிகச் சிறிய வடிவத்தில் மிகப் பெரிய ஆற்றல் பொதிந்திருக்க வேண்டுமென்பதாய் புரிந்து கொள்கிறேன். அது எதைச் சொல்லாமல் விடுகிறதோ, அதுவே சிறுகதையின் பலம் என்கிறார் அவர். அர்த்தப்படுத்துதல் மட்டுமே அதன் நோக்கம் – வில்லியம் ட்ரெவரின் சொற்களில், ‘It is concerned with the total exclusion of meaninglessness‘. வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் வகையில் நாவல் வடிவம் பெரும்பாலும் பொருளற்றதாகவும் அலைவுகள் கொண்டதாகவும் இருக்கலாம், ஆனால் சிறுகதை வடிவம் கலையின் சாரம் என்று அவர் வரையறை செய்கிறார் (‘It is essential art‘). நாவல்கள் ரத்தமும் சதையும் கொண்ட மனிதர்களைக் காட்டினால் சிறுகதை மனித வாழ்வின் ஆதார எலும்புகளை தொட்டுக் காட்டுகிறது.

இரக்கமே இல்லாமல் சிறுகதையை வெட்டித் தள்ளுபவர் டிரெவெர். அவருடைய கார்டியன் பேட்டியில் இவ்வாறு சொல்கிறார்:

திரைப்படத்தை உருவாக்குவது போல் நான் சிறுகதையை செதுக்குகிறேன். நாம் எதை சொல்லாமல் விடுகிறோமோ அதுதான் ஒரு கதையின் முக்கியமான அங்கம். ஒரே சிறுகதையை பல மாதம் வைத்து மறுபடியும் மறுபடியும் அந்தச் சிறுகதையை எழுதுவேன். ஒரு சிறுகதை என்பது ஒருவரின் வாழ்க்கையை போகிற போக்கில் காண்பிப்பது; அல்லது அந்த ஒருவரின் ஏதோவொரு உறவை புகைப்படமாகக் கண்ணுறுவது.

எழுதுவது என்பது எனக்கு அறியவியலாத இரகசியம். அது மறைபொருள் என்று நான் நம்பாவிட்டால், எழுதுவதே உபயோகமற்றதாகிவிடும்.

எனவே நாம்தான் கதையின் ஒவ்வொரு ரகசியத்தையும் அர்த்தம் கொள்ள வேண்டும். கதையில் பதினாறு ஆண்டு கழிந்ததை குறிப்பிடுவதை, நான் ஆயுர்வேதத்தில் ஷோடஷ சமஸ்காரம் என பதினாறு வகையாக வாழ்க்கையை பிரிப்பதோடு ஒப்பிடுவேன். மானுட வாழ்வில் பதினாறு சமஸ்காரங்கள் உள்ளன.

ஷோடச கர்மாக்களை ஐந்து வகையாக பிரிக்கலாம்:

அ) கார்பிகா சமஸ்காரம் (குழந்தை பிறப்பு சம்பந்தமானவை)
1) கர்ப்பாதனம்
2) பும்சவனம்
3) சீமந்தம்

மேலே உள்ளவை தம்பதியரால் அனுஷ்டிக்கப்படுபவை.

ஆ) சைஷவ சமஸ்காரம் (குழந்தை சம்பந்தமானவை)
4) ஜாதகர்மம்
5) நாமகர்ணம்
6) நிஷ்கிரமணம்
7) அன்னப்பிராசினம்
8) சூடாகர்மம்
9) கர்ணவேதம்

மேலே உள்ளவை பெற்றோரால் கடைபிடிக்கவேண்டியவை.

இ) சைக்ஷ்னிகா சமஸ்காரம் (கல்வி சம்பந்தமானவை)
10) உபநயனம்
11) வேதாரம்பம்
12) சமாவர்த்தனம்

மேலே உள்ளவை உபாத்தியாயரால் செய்யவேண்டியவை.

ஈ) ஆஷ்ரமிகா சமஸ்காரம் (மணம் புரிந்தவர்கள் சம்பந்தமானவை)
13) விவாகம்
14) வானப்பிரஸ்தம்
15) சன்யாசம்

மேலே உள்ளவை சுயமாக செய்யவேண்டியவை.

உ) பிரயான் சமஸ்காரம் (மரணம் சம்பந்தமானவை)
16) அந்தியேஷ்டி

மேலே உள்ளவை உங்களின் இறப்பிற்கு பின் உங்கள் குழந்தைகளால் செய்யப்பட வேண்டியவை ஆகும்.

பதினாறு வகையாக இப்படி வாழ்க்கையை பிரித்து நம் நடவடிக்கைகளை வகுக்கலாம். இந்தப் பதினாறை இவ்வளவு வலியுறுத்த என்ன அவசியம்?

கதையில் மீண்டும் மீண்டும் இந்தப் பதினாறு வருகிறது. முதல் தடவை பியானோ ஆசிரியையின் கள்ளக் காதல் பருவம் குறித்த விவரிப்பில் எடுத்த எடுப்பிலேயே பதினாறு சொல்லப்படுகிறது.. இரண்டாவது தடவையும் அதே பதினாறு என்னும் எண் இன்னொரு பக்கத்தில் வலியுறுத்தப்படுகிறது – அவளின் தந்தையின் கடைசிக் காலத்தை நேசத்துடன் கவனித்துக் கொண்டு கழித்த பதினாறு ஆண்டுகள் என்கிறார் டிரெவர். தன்னுடைய ஒவ்வொரு பேட்டியிலும் தான் ஒரு கிறித்துவ ப்ராடெஸ்டண்ட் என்பதை ஊக்கமாக சொல்லிக் கொள்கிறார்.

கிருத்துவ மதத்தின் திருத்தூதர் பால் என்பவரும் விவிலியத்தில், தன்னுடைய முதல் நூலில், 16 வகையான நேசம் இருப்பதாக விரிவுரை எழுதுகிறார்.

Corinthians 13:4 – 8:

  1. அன்பு பொறுமையும்
  2. கருணையும் உள்ளது.
  3. அன்பு பொறாமைப்படாது,
  4. பெருமையடிக்காது,
  5. தலைக்கனம் அடையாது,
  6. கேவலமாக நடந்துகொள்ளாது,
  7. சுயநலமாக நடந்துகொள்ளாது,
  8. எரிச்சல் அடையாது,
  9. தீங்கை கணக்கு வைக்காது,
  10. அநீதியைக் குறித்து சந்தோஷப்படாமல்
  11. உண்மையைக் குறித்து சந்தோஷப்படும்.
  12. எல்லாவற்றையும் தாங்கிக்கொள்ளும்,
  13. எல்லாவற்றையும் நம்பும்,
  14. எல்லாவற்றையும் நம்பிக்கையோடு எதிர்பார்க்கும்,
  15. எல்லாவற்றையும் சகித்துக்கொள்ளும்.
  16. அன்பு ஒருபோதும் ஒழியாது.

இந்தக் கதையை எழுதிய வில்லியம் ட்ரெவர் (William Trevor) கடந்த நவம்பரில் தன்னுடைய 88ஆம் வயதில் மறைந்துவிட்டார். அவரின் இறப்பிற்கு பிறகு வெளியாகும் கதை இது. கடைசிக் காலத்தில் எழுதிய இந்தக் கதை முற்றுப்பெற்றதா? இதுதான் இந்த இந்தச் சிறுகதையின் இறுதி வடிவமா? இவ்வளவு சிறிய ஆக்கமாக இருப்பதற்கு அவரின் அந்திமக் காலமும் ஒரு காரணமா? கல்கியின் மறைவிற்குப் பின் அவருடைய புதல்வர் நிறைவாக்கிய ‘பொன்னியின் செல்வன்’ போல் வில்லியம் எடுத்திருந்த குறிப்புகளைக் கொண்டு இந்தக் கதை வடிவாக்கம் பெற்றதா?

வில்லியம் டிரவர் “The Piano Tuner’s Wives” என்னும் கதையை 1995ல் எழுதியிருக்கிறார். அந்தக் கதையை இங்கே வாசிக்கலாம்.

டிரெவரின் பெரும்பாலான சிறுகதைகள் போலவே இந்தக் கதையும் முன்னும் பின்னும் பயணிப்பவை. துவக்கத்தில் முடிவிற்கு வெகு அருகே இருக்கும். கொஞ்ச நேரம் படித்தவுடன் கதாபாத்திரங்களின் இளமைக் காலத்திற்கு சென்றிருப்போம். வாசிப்பவரின் ஆர்வத்தைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்னும் அக்கறையை டிரவெர் எடுத்துக் கொள்வதில்லை. அதாவது வலிந்து அந்த விறுவிறுப்பைக் கொணர மாட்டார். நீங்கள் எப்பொழுதோ தூண்டிலில் சிக்கி இருப்பீர்கள்.

”கதையில் உணரவேண்டியதை விரித்துரைத்து சொல்லக் கூடாது; சம்பவங்களினால் காட்ட வேண்டும்; அன்றாட செயல்களினால் விஷயங்கள் புலப்பட வேண்டும்.” என்பதை சிறுகதையின் பாலபாடமாக அறிவுறுத்துவார்கள். ’அது எப்படி?’ எனக் கேட்பவர்களுக்கு வில்லியம் ட்ரெவரின் இந்த “பியானோவிற்கு சுருதிசேர்ப்பவரின் மனைவிகள்” கதையையும் சுட்டலாம்.

அவரின் இன்னொரு கதைய அவரே வாசிப்பதை இங்கு பார்க்கலாம்:

மீண்டும் இந்தக் கதைக்கே வந்து விடலாம்.

ஆசிரியை எண்ணற்ற பொருள்களை சேமித்து இருக்கிறாள். ஒரு இடத்தின் ஞாபகமாக சில பொருள்கள் இருக்கின்றன. இருவரின் நினைவை சொல்லும் பொருட்டு சில பொருள்கள் அலங்காரமாக இருக்கின்றன. ஒரு வயதை, அந்தக் காலத்தை எண்ணிப் பார்க்கும்வகையில் சில பொருள்கள் அவளின் வீட்டை நிரப்புகின்றன. நம் பொருள்கள் காணாமல் போன பிறகே அவற்றின் அவசியத்தையோ, அல்லது அவசியமற்ற தன்மையையோ உணர்கிறோம். பொருள் இருக்கும் அந்த அறை எப்படிப்பட்டது?

அதற்கு அவளின் மூன்று பருவங்கள் நினைவுகூறப்படுகிறது. முதலில் பால்ய காலம். சாக்லேட் என்றால் உயிர். ஒவ்வொரு நாளும் அவளுடைய அப்பா புதிய இனிப்புகளை அவருடைய வினோத சாக்லேட்களைக் கொண்டு வருவார். அதே அறையில்தான் அவளுடைய ரகசியக் காதலன் அவளை இறுக்கி தேய்த்து, அவளை ஒரு அழகி என கிசுகிசுத்தான். அந்த பியானோ அறையில்தான் இப்பொழுது வாத்தியஜாலம் நிகழ்கிறது. வசீகரிக்கும் இசை வருடுகிறது; அந்த மாணவன் அவளுக்கு மட்டுமே நிகழ்த்திக் காட்டும் கச்சேரி அரங்கேறுகிறது. ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்.

அவள் வாழ்வில் வந்த அந்த மூவரும் திருடர்களே. அவளின் அப்பா அவளுக்கு மணமுடிக்கவில்லை. தன் கடைசிக் காலத்தில் தன்னைப் பாத்துக் கொள்ள அவருக்கு ஒரு தாதி தேவைப்பட்டு இருக்கிறது. அதற்காக மகளை வீட்டோடு வைத்துக் கொண்டார்.

அதே போல் அவளின் இளமை அந்தக் காதலருக்குத் தேவைப்பட்டு இருக்கிறது. அவளின் அழகைத் திருடி இருக்கிறார்.

ஒன்றை இழந்தால்தான் இன்னொன்று கிட்டுகிறது. அவளுக்கு காதல் வார்த்தைகள் தேவைப்பட்டது. அதற்காக திருட்டுக் காதலை வைத்துக் கொண்டாள். அந்தக் கூடாவொழுக்கத்திற்கு விலையாக தன் இளமையை இழக்கிறாள். ஆசிரியையின் காதலனின் முதல் மனைவியின் நிலை என்ன? அந்த மனைவியின் அன்பை அவள் கவர்ந்ததற்கு மாற்றுப் பண்டமாக தன் மணவாழ்க்கையை அர்ப்பணிக்கிறாள். அந்த இரு பெண்மணிகளில் யார் பெருந்தன்மையானவர் என்று முடிவெடுப்பதை நம்மிடமே விட்டிருக்கிறார்.

இறுதியாக ஆசிரியரின் மாணவன் விலை மதிப்பில்லாத சங்கீத சதிராட்டம் கொடுக்கிறான். அதற்கு பதிலாக தன் வாத்தியாரின் இசைவைக் கோருகிறான். அவனுடைய அந்த இசைக் கச்சேரியில் சுயநலம் இல்லை. தன் ஆசிரியருக்கான அந்த அரங்கேற்றத்தில் அங்கீகாரத்தை மட்டுமே விலையாகக் கேட்கிறான். நம் குழந்தைகள் நம்மிடம் அதைத்தானே எதிர்பார்க்கின்றன… நம்முடைய கௌரவம் என்பது நம் வழித்தோன்றலின் மதிப்பில் அமைந்திருக்கிறதா? கதையை மீள்வாசித்தால் விடை கிட்டும்.

இந்தக் கதையை வாசித்தபோது ஜானி கேஷ் (Johnny Cash) நினைவிற்கு வருகிறார். அமெரிக்காவில் புகழ் பெற்ற பாடகராக ஜானி காஷ் விளங்கினார். அவரின் குழந்தைப் பருவத்தில் குரல் மேம்படுவதற்கு பாட்டு வாத்தியாரிடம் அனுப்பினார்கள். மூன்றே வகுப்புகளுக்குப் பின் அவருடைய ஆசிரியர் “உன்னுடைய பாடும் வித்தையை எந்தப் பொழுதிலும் எவர் சொன்னாலும் மாற்றிக் கொள்ளாதே! இயற்கையாக அமைந்த குரலை விட்டு விடாதே!” என்று சொல்லி உச்சிமுகர்ந்து ஜானியின் பாடல் வகுப்பை பூர்த்தியாக்கிவிட்டார். (ஆதாரம்: biography.com)

வில்லியம் ட்ரெவரின் கதை நாயகர்கள் ஜானி காஷ் போல் புகழ்பெற்றவர்களை அடிப்படையாகக் கொண்டவர்கள் கிடையாது. அவருடன் ஆன ‘கார்டியன்’ நேர்காணலில் இவ்வாறு சொல்கிறார்:

”என்னுடைய கதைகளில் கொள்ளை கொள்ளையாக உணர்வுகள் வரும். எல்லாவித உணர்ச்சிகளும் சத்தியாமனவை. ஒவ்வொரு விநோதமாக ஆராய்ந்து விதந்து கூறுகிறேன். மற்ற நிஜங்களுக்கு கதையில் ரொம்ப இடம் தர மாட்டேன். உண்மை சம்பவங்களை விட விசித்திரங்களை குடைந்து எழுத்தில் கொணர்கிறேன். அதனால்தான் பெண்களைக் குறித்து எழுதுகிறேன். நான் பெண் இல்லை. அவர்கள் எண்ணங்கள் எப்படிப்பட்டவை என்பது தெரியாது. இது என்னை உற்சாகம் கொள்ளவைக்கிறது. அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று சிந்திக்கிறேன். என்னால் அவர்களாக முடியாது. அதனால் ஆர்வத்துடன் அந்த அனுபவத்திற்குள் நுழைந்து ஆராய்கிறேன்.

தினசரி காரியங்களை செய்யும்போது மனம் தாவிச் சென்று என்றோ நடந்ததை அசை போடுகிறது. ஏதோவொரு வார்த்தையைக் கேட்கும்போது அந்த வார்த்தை வரும் பாடலை வாய் தானாகப் பாடத் துவங்கி, அதன் வழியே நினைவு நம் வாழ்வின் பழைய சம்பவத்தில் சென்று நிலைக்கிறது. பழசை திணித்து மூலையில் ஒதுக்கி வைக்கலாம். ஆனால், நீக்க முடிவதில்லை. அந்த மாணவனின் நினைவுச் சின்ன வேட்டைகளை பியானோ ஆசிரியை கண்டுகொள்வதில்லை. ஏன் அவள் அதை அவனிடம் கேட்கவில்லை? அவளே அந்தப் பொருள்களின் நினைவுகளை மறக்க நினைக்கிறாளா? தன்னால் கலையில் சாதிக்க இயலாததை தன் மாணவன் சாதிக்கிறான் என்னும் சந்தோஷமா? தன் கள்ளக் காதல் செய்கைகளுக்கான பிராயச்சித்தமா? தன்னுடைய குற்றவுணர்வை தவிர்க்கமுடியாதது போல், அந்த மாணவனிடமும் இந்த சில்லறைத் திருட்டு அவமானத்தை பிற்காலத்தில் தேக்கும் என்னும் தூரதிருஷ்டியா? அவனில் புதிய ஒளியைப் பார்ப்பதால் நம்பிக்கைக் கீற்றின் வெளிப்பாடா? இவ்வளவையும் யோசிக்க வைப்பதில் வில்லியம் ட்ரெவர் நிலைக்கிறார்.

கல்வியின் தரமும் இளைஞர்களின் ஆற்றலும்

இந்தியாவில், 2017 ம் ஆண்டிற்கான சிறந்த செயல்திறம் வாய்ந்த பல்கலைக்கழகங்கள் + கல்லூரிகளின்  பட்டியலை (2017 ranking of institutions based on performance) மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

அதையொட்டி சில எண்ணங்கள்:

  1. பொறியியல் கல்லூரிகள்:

    முதலில் இருக்கும் கல்லூரிகள் எல்லாம் ஏன் தொழில்நுட்பம் அல்லது பொறியியல் அல்லது அறிவியல் கல்லூரிகளாகவே இருக்கின்றன? கலை மற்றும் பொருளாதாரம் மற்றும் நிதி மற்றும் கல்லூரிகளுக்கு இந்தியாவில் மரியாதை கிடையாதா?

  2. ஆராய்ச்சி மையங்கள்: இந்தக் கல்லூரிகளில் இருந்து எவ்வளவு ஆராய்ச்சிக் கட்டுரைகள் மதிக்கத்தக்க இடங்களில் வெளியாகின்றன? ஒவ்வொரு ஆண்டிலும் உலக அளவில் உரிமைக்காப்புகள் எத்தனை வாங்கப்படுகின்றன? இங்கிருந்து படித்து கரையேறுபவர்கள் எத்தனை நிறுவனங்களைத் தோற்றுவிக்கிறார்கள்? இந்த தலை பத்து பல்கலைக்கழகங்களில் பட்டதாரி பட்டம் பெறுபவர்களில் எத்தனை பேர் கவனிக்கத்தக்க கண்டுபிடிப்புகளைக் கொடுத்திருக்கிறார்கள்?
  3. மேலாண்மை:

    தலை இருபது கல்லூரிகளில் நான்கே நான்கு மட்டுமே மற்றவர்களுக்கு கிட்டியிருக்கிறது. இதில் ஓரளவு உண்மை இருந்தாலும், அரசுத்துறையின் பட்டியல் என்பதால் அரசாங்கம் நடத்தும் கல்லூரிகளுக்கு முன்னுரிமை தரப்பட்டதா?
  4. களத்தில் பயிற்சி: இந்தியாவில் நிஜ வாழ்க்கைக்கும் கல்லூரிகளில் கற்றுத்தரும் விஷயங்களுக்கும் பெரிய இடைவெளி உண்டு. இன்னும் மதிப்பெண்களில் நம்பிக்கை கொண்ட நாடு இந்தியா. இன்றளவும் தொடர்ச்சியான பரீட்சைகள் வைக்காமல், பத்தாம் வகுப்பு இறுதித் தேர்வு, செமஸ்டர் முடிவில் ஒரேயொரு தேர்வு என்று செயல்படும் நாடு. இதில் அசலான நிறுவனங்களில் சுயமான செயல்பாடு என்பதைக் கணக்கிலேயே எடுத்துக் கொண்டிருக்கமாட்டார்கள். ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது என்று பழமொழி மட்டும் பேசுவார்கள்.
  5. தமிழகக் கல்லூரிகள்: அண்ணா பல்கலை, 13ம் இடம் பெற்றது. நஷ்டத்தில் இயங்கும் அண்ணாமலை பல்கலை, 92ம் இடம் பெற்றது. நுாற்றாண்டு பழமையான, சென்னைப் பல்கலை, 64ம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. பாரதியார் பல்கலைக்கு, 45ம் இடம் கிடைத்துள்ளது. மதுரை காமராஜர் பல்கலை, சேலம் பெரியார் பல்கலை போன்றவை, 100க்கும், 150க்கும் இடையிலான, இரண்டாம் கட்ட பட்டியலில் மட்டுமே, இடம் பெற்றுள்ளன.

    பல்கலைகளுக்கான தரவரிசை பட்டியலில், பாரதியார் பல்கலை, 28; பாரதிதாசன் பல்கலை, 88ம் இடங்களை பிடித்துள்ளன. திருவள்ளுவர், மனோன்மணியம் சுந்தரனார், சட்ட பல்கலை, இசை பல்கலை, ஆசிரியர் கல்வியியல் பல்கலை போன்றவை, தரவரிசைக்கு விண்ணப்பித்தோர் பட்டியலில் இடம் பெறவில்லை.

    கல்லுாரிகளுக்கான தனி தரவரிசை பட்டியலில், முதல், 100 இடங்களிலும், 100 முதல், 150 வரையிலான, இரண்டாம் கட்ட பட்டியலிலும், தமிழக அரசின் கலை, அறிவியல் கல்லுாரிகள் எதுவும் இடம் பெறவில்லை

  6. சுய சிந்தனை வளர்க்கும் கல்விக்கூடங்கள்: எப்படிப்பட்ட ஆளுமைகளை இந்நிறுவனங்கள் தயார் செய்கின்றன? அவர்களுக்கு வரலாறு, இந்தியத்துவம், சூழலியல் போன்ற பல்துறைகளில் நாட்டம் வரவைக்குமாறு கல்வி பயிற்றுவிக்கப்படுகிறதா? குடியியல் கொள்கை இந்திய அரசாண்மை என்று சமூகம் சார்ந்தவற்றில் விருப்பம் தரவைக்கிறார்களா?
  7. வேலைவாய்ப்பு: இதை மட்டுமே அஸ்திவாரமாகக் கொண்டு பல்கலை தரவரிசையை தயார் செய்திருக்கிறார்களோ என நினைக்க வைக்கும் பட்டியல் இது.
  8. நிரலிக்கான விதிமுறையை எவ்வாறு திட்டமிட்டார்கள்:
    1. கல்விமுறை மற்றும் அடிப்படை வளவசதிகள் – 30%
    2. ஆராய்ச்சி மற்றும் சீரிய நடைமுறை – 30%
    3. பட்டம் பெற்ற பிறகு கிடைக்கும் பயன்கள் – 20%
    4. எல்லோரையும் சேர்த்துக் கொள்ளும் ஏற்றுக்கொள்ளும் தன்மை மற்றும் சமூகப் பிணைப்பு – 10%
    5. கல்லூரியைக் குறித்த பொது மனநிலை – 10%
  9. செய்தி: The Hindu | தி இந்து | கல்வி நிறுவனங்களின் தேசிய தரவரிசை பட்டியல் வெளியீடு
  10. தொடர்புள்ள பதிவுகள்: 37/100 மட்டும்தானாடா? வோத்தாடாய், எவ்ளோ வொளச்சிர்க்கோம் – மிச்சம் கீர 63ஐயும் எங்க்ளுக்கே கொடுங்கடா! | ஒத்திசைவு
  11. பிட்ஸ், பிலானி: எல்லாவற்றையும் சொல்லிவிட்டு நான் படித்த பிர்லா இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜி & சயின்சஸ் பற்றி சொல்லாவிட்டால் ‘மிஸ்டர் ரோபாட்’ தொலைக்காட்சி சீரியலில் பாதியில் “இதுவரை சொன்னதெல்லாம் கற்பனை!” என்று ஏமாற்றுவது போல் ஆகிவிடும். அசலில் கலக்கும் மாணவர்களை உருவாக்குவதற்கும் பேப்பரில் புலிகளை உரும விடுவதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது.

பொறியியல் – கல்விக்கு அப்பால்: வாசகர் மறுவினை

Jobs_lost_Employment_Gained_Sectors_Industries_Work_Compensation_Industry_Salary_WSJ_Graphics

பொறியியல் – கல்விக்கு அப்பால் கட்டுரை வாசித்தேன். தமிழ் பதிப்புலகில் அதிகம் பேசப்படும் சினிமாவும் அரசியலும் தவிர்த்த கட்டுரை என்ற அளவிலேயே கட்டுரை எடுத்துக் கொண்ட பேசுபொருளும், அதன் தொடர்பான எண்ணங்களும் முக்கியமானவை. மதிப்பெண்களைத் துரத்தும் கல்விமுறை குறித்தும் அசலான ஆய்வுகளை ஊக்குவிக்கும் வழிமுறைகள் குறித்த ஆசிரியரின் கருத்தோடு பெரும்பாலும் ஒத்துப் போகிறேன்.

எனினும், கட்டுரையில் ஆங்காங்கே தடாலடி பொதுமையாக்கங்கள் இருக்கின்றன. தான் அறிந்த சூழலை வைத்து, அதை இந்தியா முழுக்க நீட்டும் சூத்திரங்களும் இருக்கின்றன. இவை இரண்டும் கட்டுரை சொல்லும் கருவிற்கு பங்கம் உண்டாக்குகின்றன. பின்குறிப்பின் மூலம், இந்த வாதத்தை நிராகரித்து முற்றுப்புள்ளியும் வைக்கிறார்.

இப்பொழுது கேள்விகள்:

1. ஆராய்ச்சியைத் தூண்டும் கல்வியை ஊக்குவிக்க மூன்று காரணிகள் இருக்கின்றன: புதிய கண்டுபிடிப்புகளினால் ’செல்வம்’ சேர்க்கும் வாய்ப்பு; தேடலின் முடிவில் கிடைக்கும் சமூக ’அந்தஸ்து’; நாம் வாழும் உலகை மாற்றியமைக்கும் நாகரிகத்தை முன்னெடுத்தோம் என்னும் ஆத்ம ’திருப்தி’. இவற்றை இந்திய அமைப்புகள் தரும் சூழல் நிலவுகிறதா?

2. டிப்லோமா படிப்புகள் – இவை செயல்முறையை முன்னிறுத்தும் கல்வி. அவற்றை பொறியியல் படிப்போடு ஒப்பிட்டுப் பார்க்க இயலுமா?

3. மேற்குலகில் பொறியியல் படிக்காதவர்களும் பொறியியல் சார்ந்த வேலைகளில் ஈடுபடுகிறார்கள். இந்தியச் சூழலில் பொறியியல் பட்டயம் என்பது ”இவர் பொறுப்பானவர்; ஒழுங்காக வேலை செய்வார்; எதைக் கொடுத்தாலும் கற்றுக் கொள்வார்.” என்பதற்கான சான்றாதாரமாக விளங்குகிறதா?

4. கணிமொழியியல் – அமெரிக்காவில் கணித்துறை சார்ந்த வேலைக்கு பொறியியல் படிப்பு தேவையாக இருப்பதில்லை. பத்தாவது படித்தவரை வேலைக்கு அமர்த்துகிறார்கள். கணிவிளையாட்டுகளைக் கொண்டு பரிசோதித்து, அதில் திறம் வாய்ந்தவராக இருந்தால் கணினித்துறையில் நல்ல பதவியில் அமர்த்துகிறார்கள். இந்த நிலை இந்தியாவில் உருவாகுமா? (அதாவது பத்தாம் வகுப்புத் தேர்வு முடிந்து, ஓரளவு பக்குவம் வந்தவுடனேயே, டிசிஎஸ் போன்ற நிறுவனங்கள், மாணவர்களைப் பயிற்சிக்கு அழைத்துச் சென்றுவிடும். மூன்று வருடக் கால வேலை+பயிற்சிக்குப் பின் அசல் வேலையில் அமர்த்திக் கொள்வார்கள்.)

5. ஆராய்ச்சிக் கல்வி – இதற்கான சமூக அந்தஸ்து இந்தியாவில் எப்படி இருக்கிறது? நிறுவனத்தில் டைரக்டர், வைஸ் பிரசிடெண்ட் என்றால் அதிக மதிப்பு கிடைக்கிறதே! அதே சமயம் கண்டுபிடிப்புகளை காசாக்கும் சூழல் இந்தியாவில் எப்படி நிலவுகிறது?

6. மேற்குலகில் mentor எனப்படும் வழிகாட்டியை வாழ்நாள் முழுக்க துணையாக வைத்துக் கொள்கிறார்கள். இந்தியச் சூழலில், இதை மாமா, சித்தப்பா போன்ற குடும்ப உறவுகளும் கிராம சமூகங்களும் நிரப்பின. இன்றைய நகரமயமாக்கப்பட்ட நிலையில் உற்றாரின் ஆலோசனைகளும் கேட்பதில்லை. அண்டை வீட்டாரும் சொந்த விஷயங்களில் கருத்துச் சொல்வதை அந்தரங்கத்தின் குறுக்கீடாகவே எடுத்துக் கொள்கிறோம். இந்த வழித்துணைகளின்ம் உதவி கிடைத்தால் ஒவ்வொருவரின் தனித்தன்மையும் ஆர்வமும் தூண்டப் பெற்று ஆராய்ச்சிப் பாதைகளில் தெளிவு கிடைக்குமோ?

7. இதன் தொடர்ச்சியாக பத்ரி சேஷாத்ரி எழுதிய ”தமிழகத்தின் பல பொறியியல் கல்லூரிகளில் ஐ.டி என்ற பாடப்பிரிவை நீக்கியிருக்கிறார்கள்”, த.நி. ரிஷிகேஷ் ராகவேந்திரன் எழுதிய “தரகர், அலுவலர்,வேலை பெற்றுத் தருபவர் தேவை- ஆசிரியர்கள் தேவையில்லை” வாசிக்கப் பெற்றேன். தங்கள் கட்டுரையைப் போன்றே பெங்களூரூ சாணக்கியன் எழுதிய ‘வேலை’ கடிதம் வாசித்தீர்களா?

8. ஜெயமோகன் தளத்தில் கல்வியைக் குறித்தும் பாடத்திட்டத்தின் தேர்வுமுறைகள் குறித்தும் தொடர்ச்சியாக எழுதி வருகிறார். அவற்றில் அவர் குழந்தைகளுக்குக் கொடுக்கும் சுதந்திரத்தையும் தான் பழகிய ஆசிரியர்களையும் கல்வி குறித்த செய்திகளையும் அலசுகிறார். அதில் குறிப்பாக பெற்றொரின் பங்கு குறித்து நிறைய எழுதியிருக்கிறார். நம்முடைய பெற்றோர் இட்ட கட்டளைக்குப் பணிந்து நடப்பது போல், பொறியியல் கல்விக்கு அப்புறமும் மேலாளரின் கட்டளைக்கு அடிபணிய விழைகிறோமா?

9. வேலைக்குப் புதியதாகச் சேரும் எவரையும் எந்த நிறுவனமும் உடனடியாக பொறுப்புகளை சுமத்துவதில்லை. அதிலும் கல்லூரியில் இருந்து புத்தம்புதிதாக வருபவரை இரண்டு வாரங்களுக்காவது தனிப் பயிற்சிக்கு அனுப்புகிறார்கள். தங்கள் அலுவலில் பயன்படுத்தும் நுட்பங்களையும் வழிமுறைகளையும் விவரமாகக் கற்றுத் தருகிறார்கள். அதன் பிறகு இரண்டு மாதங்களுக்காவது, பரீட்சார்த்தமான வேலைகளில் மட்டுமே ஈடுபடுத்துகிறார்கள். மூன்று மாதம் ஆன் பிற்பாடு, நிஜ வேலைக்குள் நுழையும்போது துணை நிற்க அனுபவசாலி ஒருவரை கூடவே கண்காணிப்பாக வைக்கிறார்கள். இதை முதலீடாகக் கருதுகிறார்கள். இந்தியாவின் ஆய்வுத்துறையில் இவ்வாறு ஒவ்வொரு ஆராய்ச்சியாளருக்கும் தனிப்பட்ட கவனம் வழங்க பொருளும் மனிதவளமும் இருக்கின்றதா?

10. வாழ்க்கை ஆதாரமாக கல்வியும், அந்தக் கல்வியினால் கிடைக்கும் வேலையும் அமைந்திருக்கிறது. மேற்குலகில் இருபதில் இருந்து முப்பது வரை பரீட்சார்த்தமாக வாழ்வதை நடைமுறையாக வைத்திருக்கின்றனர். அதாவது, தனக்குப் பிடித்த விஷயத்தில் இளவயதில் தீவிரமாக இயங்குவது; அதில் வெற்றி பெற்றால் கோடிகளை அள்ளுவது; தோல்வி அடைந்தால் மீண்டும் கல்லூரிக்குச் சென்று வேறொரு பாதையைத் தேர்ந்தெடுப்பது. – ஒரு முறையோ, பல முறையோ கீழே விழுந்தால், அஞ்சாமல், கைதூக்கி ஊக்கமும் மீண்டும் நிதியும் கொடுக்கும் சமூக அமைப்பு இந்தியாவில் வர வேண்டுமா?

destroying.jobs_.chart_Decoupling_Productivity_Unemployment_Manufacturing_Economhy_Income_GDP_USA_America_Automation

STEM: Ratio of female workers in Software: India vs US

உடன் பணியாற்றுபவர்களில் ஒன்றிரண்டு மகளிர் மட்டுமே இருப்பது, மேற்கத்திய உலகின் கணினியில் குப்பை கொட்டுபவர்களின் குறைபாடுகளில் முக்கியமான ஒன்று.

சென்னை சாஃப்ட்வேர் நிறுவனங்களில் ஐம்பது சதவிகிதமாவது பெண் பொறியாளர்கள் இருப்பார்கள். இந்திய கல்லூரிகளில் பெண்களுக்கும் ஆண்களுக்குமான விகிதாசாரம் கிட்டத்தட்ட சம அளவில் இருக்கிறது. அந்த சமன்பாடு அலுவல் வேலைகளிலும் வெளிப்படுகிறது.

அமெரிக்க கல்லூரிகளிலும் சம விகிதங்களில் இரு பாலினரும் படிக்கிறார்கள். ஆனால், பெண்கள் பெரும்பாலும் கணிதம் / கம்ப்யூட்டர் / தொழில் நுட்பம் போன்ற அறிவியல் துறைகளைத் தேர்ந்தெடுப்பதில்லை. இதற்கு பள்ளிப் பருவத்தில் படிப்பை விட அழகில் கவனம் செலுத்துவதற்கான நிர்ப்பந்த சூழலை குற்றஞ்சாட்டலாம்.

அலுவலில் வெரைட்டியான மனிதர்கள் இருப்பது நிறுவனத்திற்கு முக்கியம். வெள்ளை, கறுப்பு, தாத்தா, இளநரை, கல்லூரி மணம் மாறாத பாலகன், ரூபவதி எல்லோரும் இருந்தால் குழுவில் கலந்து கட்டி வேலை நடக்கும். ஆனால், சௌந்தரிகளுக்கு மனிதவளமும் மார்க்கெடிங்கும் சிறந்த தொழிற்துறையாக அடையாளப்படுத்தி இருக்கும் அமெரிக்காவில் மெலிஸா மேயர்கள் சீ.ஈ.ஓ.க்களாகி விடுகிறார்கள்.

Harvard Education vs Pondycherry Congress: Politicians Cheat

பல ஜனாதிபதிகளையும் செனேட்டர்களையும் ஹார்வார்ட் பல்கலைக்கழகம் உருவாக்குகிறது. டெல்லி ஜே.என்.யூ.வில் படித்தால் இந்தி(ரா)யா கம்யூனிஸ்ட் காங்கிரசில் தஞ்சமடையலாம் என்பார்கள்; ஹார்வார்டில் படித்தால் அமெரிக்க காங்கிரஸில் நுழையலாம்.

அவ்வளவு புகழ்பெற்ற ஹார்வார்டு ‘காங்கிரஸ் 101’க்கு இறுதி பரீட்சை எழுதிய எழுபது மாணவர்களை இடைநீக்கம் செய்திருக்கிறது. அரசாங்கம் குறித்தும் சட்டசபை குறித்தும் அறிமுகம் செய்யும் வகுப்பில் காப்பியடித்த குற்றத்திற்காக அவர்களை சஸ்பெண்ட் செய்துள்ளது.

பாண்டிச்சேரி போல் புத்தகம் பார்க்காமல் எழுதும் தேர்வு அல்ல. வீட்டிற்கே கேள்வித்தாளைக் கொடுத்தனுப்பி விட்டார்கள். இணையத்தைப் பார்த்து எழுதலாம். புத்தகத்தைத் திறந்து வைத்து விடை அளிக்கலாம். நண்பர்களிடம் கலந்தாலோசித்து, சொந்த நடையில் பதில் போடலாம். ஆனால், ஒரே விடைத்தாளை அனைத்து மாணவர்களும் காப்பி பேஸ்ட் செய்ததால் மாட்டிக் கொண்டார்கள்.

புதுச்சேரி அமைச்சர் கல்யாணசுந்தரம் போல் நமது ஊர் காங்கிரஸ்காரர்கள் நிலைமை இன்னும் மோசம். பொதுத் தேர்வு மோசடிக்கு எவ்வளவு முஸ்தீபுகள் தேவையாக இருக்கிறது? பிட் வேண்டும்; ஆள் மாற்றாட்டத்திற்கு சூட்டிகையானவர் வேண்டும்; பள்ளி ஆசிரியர் முதல் பியூன் வரை கவனிக்க வேண்டும்.

என்னவாக இருந்தாலும் அமெரிக்க ஐவி லீக் பல்கலை படிப்பு போல் ஆகாது!

புதிய தலைமுறை: தாய் மண்ணே வணக்கம்

புதிய தலைமுறையின் சுதந்திர தின ஸ்பெஷல் (1)

புதிய தலைமுறை: தாய் மண்ணே வணக்கம்: விடுதலை நாள் வெளியீடு (2)

”இந்தியா காலேஜில் போட்டா, இவ்ளோ ஆகாது இல்ல? சீட்டும் ஈஸியா கெடச்சிடும்!”

குளிர்கால கிறிஸ்துமஸ் பார்ட்டி ஆகட்டும்; கோடைகால பிக்னிக் ஆகட்டும். அமெரிக்காவில் வாழும் எங்களிடையே இதுதான் இன்றைய பேச்சு.

’தாய் மண்ணே வணக்கம்’ என்று வணங்க மட்டும் செய்யாமல், தாங்கள் கற்ற மண்ணிலேயே தங்கள் மகவுகளும் கல்வி கற்க அனுப்புவதுதான் தற்போதைய தேசி ட்ரெண்ட்.

பள்ளிக்காலம் வரை குடும்பச்சூழலில் ஹிட்லர்தனமான கெடுபிடிகளுடன் வளர்ந்த பையன், பதின்ம வயதில் கல்லூரியில் நுழையும் சமயத்தில்தான் கட்டுப்பாடுகளற்ற முழு சுதந்திரத்தையும் அதற்கு ஈடு கொடுக்கும் பணப்ப்புழக்கத்தையும் காண்கிறான். பெண்களுக்கு நேரும் நிர்ப்பந்த குழப்பங்களும் இருபாலார் இணைந்து தங்கும் விடுதிகளில் சேர்த்துவிட வேண்டிய விருப்பத்தேர்வின்மையும் பெற்றோரை அலைக்கழிக்கிறது.

இதற்கான குறுகிய கால தீர்வாக இந்தியாவிற்கு மூட்டை கட்டி அனுப்பி விடுகிறோம்.

‘லேட்டாக வரீங்க… குழந்தைகள கவனிக்கிறதேயில்ல!’ குற்றச்சாட்டுகளிலிருந்து விடுதலை கிடைக்கிறது. நம்மை நன்றாக வளர்த்து முதலீட்டுக்குரிய விருப்ப வஸ்துவாக்கிய தாத்தா, பாட்டியின் கைகளில் பேத்தி, பேரன்கள் ஒழுங்காக வளர்வார்கள் என்னும் நம்பிக்கையும் உண்டு.

மொத்தத்தில் பணங்காச்சி இயந்திரங்களை உருவாக்கும் புனிதத்தலம். காந்தியும் விவேகாந்தரும் பின்பற்றும் நிலையான ஆன்மிக மணம் கவழும் அமுதமனம். பக்கத்து வீட்டு மாமாவும் ஒன்றுவிட்ட ஊர்க்கார சொந்தமும் எப்பொழுதும் கண்காணித்திருக்கும் கோள்மூட்டும் விழிப்புணர்வு கேந்திரம்.

‘உன் வாழ்க்கை உன் கையில்’ என்று முடிவெடுக்கும் உரிமையை இந்திய நடுத்தரவர்க்கம் கொடுக்க ஆரம்பித்துவிட்டது. ஆனால், தாங்கள் புலம்பெயர்ந்தபோது எப்படிப்பட்ட எண்ணங்களை வைத்திருந்தோமோ, அப்படியான விழுமியங்களையே தொடர்ந்து தேங்கிப் போய்விட்டிருக்கிறோம்.

‘தினமும் கோவிலுக்குப் போய் வருவாள். சிவ சேனா மாதிரி நிறைய பேர் இருக்கிறார்கள். குட்டைப் பாவாடை எல்லாம் போட்டுக் கொள்ள மாட்டாள்.’ – இது பெண்ணைப் பெற்றவர்.

‘இங்கே படிப்பதையே பசங்க ரொம்ப கேவலமா நெனக்கிறாங்க. சிரத்தையா பரீட்சை எழுதறவன கீக்னு சொல்லி அந்நியமாக்கி ஒதுக்கிடறாங்க. அவன் கே ஆயிடுவானோன்னு பயமா இருக்கு. அவனுக்கு ஃப்ரெண்ட்ஸே இல்லியே!’

இந்தியாவில் ஆண் குழந்தையைப் பெற்றவர் இப்படியெல்லாம் கவலை கொள்வதில்லை. தற்பால்விரும்பியாக இருப்பது அவரவர் விருப்பமென்று இந்தியப் பெருநகரங்கள் ஒப்புக் கொண்டுவிடலாம். ஆனால், அமெரிக்க வாழ் இந்தியருக்கு ஒவ்வாமை கலந்த அதிர்ச்சி தருவதாகவே ஒரினச்சேர்க்கை அமைந்துள்ளது.

இந்தியர்கள் காலப்போக்கிற்கு ஏற்ப மாற்றிக் கொள்வதில் வல்லுநர்கள். டார்வின் சொன்ன பரிணாம வளர்ச்சியில் முழு நம்பிக்கை கொண்ட அறிவியலாளர்கள். சிவன் தலையில் கங்கை இருப்பதை கும்பிட்டுக் கொண்டே அணை கட்டுவார்கள். அப்படியே மூன்றாம் பிறையை அரோகரா போட்டுக் கொண்டே சந்திரனில் நீர் இருப்பதை உலகெலாம் ஓதுவார்கள்.

இந்த விஞ்ஞானமும் மெய்ஞானமும் கலந்துருகும் கலயம் எனக்கு ரொம்பவேப் பிடித்திருக்கிறது. அந்த மாய யதார்த்தத்தைத் தேடித்தான் மக்கட்செல்வங்களை இந்தியாவைத் திரும்ப அனுப்புகிறோமோ?!

கற்பை விற்கும் கன்னி

lovevirginity-auction_nevada-sex-brothel-dylan-college-girls
செய்தி இங்கே: Girls Virginity | Auction Bid | Natalie Dylan | Geisha | Onenight Stand | Defloration

கேள்வி இங்கே: 5 questions for woman selling her virginity online | Technically Incorrect – CNET News: “Natalie, 22 years old, is selling her virginity to the highest bidder at Bunnyranch.com. The leading man’s offer currently stands at a breathtaking $3.8 million.

The Bunny Ranch, for those who haven’t been initiated, is an extremely famous brothel in Nevada”

  • வயது 22
  • கல்லூரிச் செல்விற்காக கன்னித்தன்மையை காணிக்கையாக தயார் என்று அறிவித்துள்ளார்.
  • பத்தாயிரம் ஆடவர் களத்தில் குதித்து ஏலம் கேட்டு வருகின்றனர்
  • மூணே முக்கால் மில்லியன் டாலருக்கு பன்னிரான்ச்.காம் (அக்கம்பக்கம் பார்த்து க்ளிக்கவும்; வயதுவந்தோருக்கான வலையகம்)இல் சூடாக பேரம் நடந்து வருகிறது
  • மணமுறிவு பெற விரும்புவோருக்கான ஆலோசனை வழங்குவதில் மேற்படிப்பு செய்யப் போகிறார்