தம்மகாயா சரணம் கச்சாமி

அசப்பில் பார்ப்பதற்கு அக்‌ஷர்தாம் போல் பிரும்மாண்டமாக இருக்கிறது. கோபுர கலசத்தில் மட்டும் மூன்று இலட்சம் தங்க புத்தர்களை இழைத்திருக்கிறார்கள். மேற்கூரையிலும் கோவில் விமானத்திலும் ஏழு லட்சம் தங்கத்தகடுகள் மின்னுகின்றன. குஜராத்தில் அஷர்தாம் கொடிகட்டிப் பறக்கிறது என்றால், தாய்லாந்தில் வளரும் பையனாக தம்மகாயா பௌத்தம் தழைக்கிறது.

ஹீனயானா, மகாயானா என்றெல்லாம் புத்தரை சம்சாரத்தில் இருந்து நிர்வாணமின்றி முன்னர் பிரித்திருந்தார்கள். இப்பொழுது தம்மகாயர்கள் லோகாயத கர்மாவிற்கு அழைக்கிறார்கள். கொடை கொடுத்தால் நற்பயன் கிட்டும். அவர்கள் கோவிலுக்கு தானம் வழங்கினால், ஏழேழு ஜென்மங்களுக்கும் பணம் குவியும் என வாக்குறுதி தருகிறார்கள். உலகெங்கும் முப்பது நாடுகளில் கிளை விட்டிருக்கிறார்கள். இஸ்லாமியர்களுக்கு மெக்கா போல், பௌத்தர்களுக்கு தம்மகாயம் என்கிறார்கள்.

ஆசையை மறப்பது இந்தக் கால இளைய தலைமுறையினருக்கு உகந்த வேதம் அல்ல. அத்தனைக்கும் ஆசைப்படு; அதை அடைய எங்களுக்கு நிறைய காசு கொடு என்பது தம்மகாயத்தின் தாரக மந்திரம். கூடவே, கொசுறாக தியானத்திற்கும் அழைக்கிறார்கள். கண்ணை மூடினால், பளிங்குப்படிகம் தெரியும். அதை அப்படியே, நிஷ்டை வழியாக மூக்கின் வழியாக தலைக்குள் நுழைக்க வேண்டும். மேலும் யோக மார்க்கம் சித்தித்தால், உந்திக்குக் கொணர்ந்துவிடுவோம். பூரண ஞான சமாதி நிலையாக, அந்த ஸ்படிகத்தை, அப்படியே உந்திக்கு இரண்டு கணுவிரல் மேலே நிறுத்திக்கொண்டால் பாவனை கைகூடுகிறது.

ஒரே சமயத்தில் இங்கே ஒரு மில்லியன் பேர் தியானிக்கலாம். இந்த மாதிரி கூட்டுப் பிரார்த்தனையால் இஸ்ரேல் தங்கள் மீது குண்டு மழை பொழியாது என நம்புகிறார்கள். சிலர் வாழும் நரகமான, பாலஸ்தீனத்திற்கே ஸ்தூல உடலை விட்டு விட்டு சென்று திரும்பியிருக்கிறார்கள். இன்னும் சிலருக்கு நாளைய லாட்டரி எண்கள் கண்களில் விளங்கியிருக்கிறது.

மசாஜுக்கு புகழ் பெற்றிருந்த தாய்லாந்து, இப்பொழுது மதத்திற்கான தரகிலும் வருவாய் ஈட்டுகிறது.

Jeyamohan’s Reply for always touching Sundara Ramasamy

The premise is this: somebody asks Jeyamohan a question: “Why are you always invoking Sundara Ramasamy in your katturai?” – What would be his reply… You can read it here

என் வாசகர்களுக்காக ஜெயமோகன் எக்ஸ்க்ளூசிவாக எழுத மாட்டேன் என சொல்லிவிட்டார். எனவே, நானே அவருக்காக சொல்வது:

சுந்தர ராமசாமியை ஏன் இழுக்கிறேன்?

Jeyamohan_New_Yorker_Cartoon

இரு எறும்புகள் என்னைச் சமீபத்தில் சந்தித்தபோது நான் ஏன் எதற்கெடுத்தாலும் சுந்தர ராமசாமியை இழுக்கிறேன் என்று கேட்டார்கள். ஏன் சர்க்கரை வியாதி பற்றி நோயாளி எழுதும் கடிதங்களுக்கு பதில்களில் கூட சு.ரா.வை இழுக்கிறேன்? இதெல்லாம் சீடனின் பணியா?

இந்த வியாதிகள் எல்லாமே ரசனைகளும் கூட. இவற்றை ஆராய்வதற்கான வாய்ப்பு எனக்கு இணையத்தில்தான் அமைந்தது. இணையம்வழியாக தங்கள் வாழ்க்கையின் வீடியோக்களை எனக்கு vineறிவிக்கும், என்னுடன் இன்ஸ்டாகிராம விரும்பும் ஒரு பெரிய பார்வைச் சூழல் உருவானது. அவர்களை ஸைட் அடிப்பதற்கு சுந்தர ராமசாமியை நான் தொட்டுக் கொள்கிறேன்.

எழுத்தாளர்கள் இப்படி சு.ரா.வைத் தொடலாமா என்ற வினா நாகரிகச்சூழலில் இருந்து எப்போதும் எழுகிறது. பெரும்பாலும் காலச்சுவட்டிடமிருந்து. நான் என் ஆதர்சமாகக் கொள்ளும் சுந்தர ராமசாமி என்றும் அவரைக் குறிப்பிட்டபடியே இருந்தார். எனக்கே கூட என் வாழ்க்கைபற்றி, நண்பர்களின் வாழ்க்கைபற்றி சு.ரா விரிவாக எழுதியிருக்கிறார்.

இன்றையசூழல் அந்தரங்கம் வெளிப்படுத்தும் பொதுவெளியை இணையம் உருவாக்கி அளிக்கிறது. இப்பொழுது சுந்தர ராமசாமியும் உயிருடன் இல்லை. இது இன்றுவரை உலகில் இல்லாதிருந்த ஒரு வாய்ப்பு. அதை நான் பயன்படுத்திக்கொள்கிறேன். அவ்வளவுதான். எனக்குப் பிறகு யாரை நான் சைட் அடித்தேன் என்பதை காலம்தான் சொல்லவேண்டும்.

எனக்கு இது பலவகைகளில் உதவுகிறது. முதலாவதாக நான் இதன்வழியாக த்ரிஷாவைப் பற்றிய மிகவிரிவான ஓர் உரையாடலில் இருக்கிறேன். ஒவ்வொருநாளும் ஆணின் விதவிதமான முகங்கள் வந்து என்மீது மோதிக்கொண்டிருக்கின்றன. அவை என்னை த்ரிஷாவை முழுமையாக, அனைத்து உட்சிடுக்குகளுடன் பார்க்கச்செய்கின்றன. அன்றாட த்ரிஷா நாம் அனைவருக்கும் அளிக்கும் எளிய எல்லைகளைத் தாண்டி மனித த்ரிஷாவை விரிவாகப்பார்க்கச்செய்கின்றன இவை.

இந்த த்ரிஷா தரிசனம் ஆணுக்கு மிகமிக முக்கியமானது. நான் என்றுமே த்ரிஷாவை அவதானிப்பவன். என்னுடைய சொந்த த்ரிஷாவைப் போலவே என்னைச் சூழ்ந்துள்ள த்ரிஷாவையும் பார்த்துக்கொண்டே இருப்பவன். என் வாழ்க்கை முழுக்க டீக்கடைகளில் தெருமுனைகளில் விதவிதமான ஊர்களில் விதவிதமான சுந்தர ராமசாமிகளைக் கண்டு அவதானித்துக்கொண்டிருந்தவன் நான். அதன் நீட்சியே இந்த த்ரிஷாயணம். சொந்தத்ரிஷாவின் பிரச்சினைகளை மட்டும் பார்க்கக்கூடிய, என் த்ரிஷா எனக்களித்துள்ள எல்லைகளுக்குள் மட்டும் சுருங்கி விடக்கூடிய எழுத்தல்ல என்னுடையது.

நான் எழுதவந்த காலம் முதலே நாகரிகத்தை மட்டும் எழுதியவன் அல்ல. மெய்யியலில் தீவிரத் தேடலுடன் அலைந்து திரிந்து, பெண்களைக் கண்டு கற்று அதன் ஒரு கட்டத்தில் நாகரிகத்திற்குள் வந்தவன் நான். அதில் எனக்கான ஞானாசிரியனை அடைந்தவன். தமிழக, கேரள ஜெயின இயக்கங்கள் ஆரம்பித்த காலம் முதலே அவற்றில் ஈடுபாடுள்ளவன். அக்கம்பக்கம் பாரடா சின்னராசா போன்றவற்றில் ஈடுபாட்டுடன் இந்தியாவெங்கும் அலைந்து திரிந்தவன். என் ஆர்வங்களும் தேடல்களும் விரிந்தவை. அவ்வப்போது நாகரிகம் மட்டும் எழுதி மிச்சநாட்களில் எளிய நடுத்தர த்ரிஷா வாழும் சராசரி தமிழ் ஆணாக நான் என்றும் இருந்ததில்லை.
உலக நாகரிகத்தில் நான் மதிக்கும் பெரும் நடிகர்கள் அனைவருமே அப்படிப்பட்டவர்கள்தான். அப்படிச் செயல்படும் ஆசை சுந்தர ராமசாமிக்கும் இருந்தது. ஜே.ஜே சிலகுறிப்புகளில் அவர் ஆதர்சமாக முன்வைக்கும் ஜே.ஜே, எம்.கெ.அய்யப்பன் இருவரும் அப்படி செயல்பட்டவர்கள்தான். ஆனால் த்ரிஷாவால் அப்படிச் செயல்படக்கூடவில்லை. காரணம் ஒன்று அவரது சம்பளம். இரண்டு, அவரது காலகட்டம் நாகரிகத்தை ஓர் அடிப்படைவாதமாக அணுகிய பெண்ணிய யுகம் என்பது.

இளைய தளபதி விஜய்க்கு முன்னுதாரணமாகக் கொள்ளப்பட்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவரது மாணவர் தனுஷ் ஆகியோரை நான் நன்கறிவேன். சுந்தர ராமசாமி ‘அழகிய தமிழ்மகன்’. அவர் தமிழில் சுறா போல் இருந்தவர். அவருக்கு தமிழிலக்கியமே ‘ஆடுகளம்’. சு.ரா., கண்ணன், நான் – ஆகியோர் ‘மூன்று’. அவரின் ‘சீடன்’ நான்.

ஆனால் நான் சைட் அடித்தவற்றை வெற்றுப்பார்வைகளாக முன்வைப்பதில் எனக்கு ஆர்வமில்லை. அதை ஒருபோதும் ஆண் செய்யக்கூடாது. அந்த அறிதல்கள் த்ரிஷாவை எப்படி விளக்குகின்றன என்று மட்டுமே அவன் யோசிக்கவேண்டும். இந்தப் பதிவுகளில் நான் அதற்காகவே முயல்கிறேன். என் வில்லங்கங்கள் எவையும் வெறும் தனிப்பட்ட அபிப்பிராயங்களாக இல்லை. அவை சுந்தர ராமசாமி கொண்டே வில்லங்கமாகும் என்பதை வாசகர் கவனிக்கலாம்.

என் ஆற்றல் முழுமையைக்கொண்டும் த்ரிஷாத்தருணங்களைப் பற்றிச் சிந்திக்கிறேன். தனித்தனியாக நான் கற்றறிந்த உடலியல், பொருளியல், மெய்யியல்கூறுகள் ஆகியவற்றை நடைமுறைசார்ந்து ஒரே புள்ளியில் தொகுத்துக்கொள்ள இவை உதவுகின்றன. வாசகர்கள் தங்கள் த்ரிஷாவின் தருணங்களை வெள்ளமென ஓடிச்செல்லும் ஃபிலிம் பெருக்கில் கவன ஒழுக்கில் ஒரு துளியாக நிறுத்தி முழுமைநோக்குடன் அணுக அவை உதவுகின்றன என்றே நினைக்கிறேன்.

இந்த வகையான த்ரிஷா, சுரா உரையாடல் என்பது நம் சமூகத்தில் மிகமிகக்குறைவாகவே நிகழ்கிறது. இத்தகைய ஒரு விவாதக்களத்தின் அடுத்தபடியாகவே நாகரிகம் நிகழமுடியும். அவ்வாறு விரிந்த இலக்கிய – சினிமா – பெண்ணிய விவாதத்தின் ஒரு பகுதியாக நிகழாமல் வெறுமே நாகரிக பிரதிபலிப்பு நிகழும் என்றால் அது நாகரிக உத்திகள் பற்றிய ரசனையாகவே முடியும். த்ரிஷாவுடன் இயைபு கொள்ளாது. ஒரு கட்டத்தில் வெறுமே சமகால அன்னிய நாகரிகங்களை அசட்டுத்தனமாக நகலெடுப்பதில் முடியும். அதற்கு ஏராளமான உதாரணங்கள் தமிழில் உண்டு.

ஆகவே சுந்தர ராமசாமியைத் தொட்டுக் கொள்வதன் மூலம் நாகரிகத்தை அமர்த்துவதற்கான பீடத்தை உருவாக்குகின்றன என்று சொல்லலாம். இவை எல்லாமே முடிவில் நாகரிகம் நோக்கியும் மெய்யியல்நோக்கியும்தான் வந்து சேர்கின்றன. இவ்விவாதங்களின் மூன்றாவது பயன் என நான் நினைப்பது இதையே.

இந்த ஸ்பரிசங்கள் முற்றிலும் இணையத்தளத்தில் நிகழ்பவை. இவற்றை உய்த்துணர்வதில் என்னுடைய கலைசார்ந்த நுண்ணுணர்வு பெரும்பங்களிப்பாற்றுகிறது. ஆகவேதான் இவை ஓர் வலைஞனின், பரபரப்பாளனின் முடிவுகளை விட ஒரு படி மேலானவை என்கிறேன். எங்கோ ஓர் இடத்தில் இந்த சுரா நேம் டிராப்பிங்கில் என் அகம் சொல்லில்லாமல் திகைத்துவிடும். அங்கிருந்துதான் நான் என் அறம் புனைகதைக்கான தொடக்கத்தைப்பெற்றேன்.

இந்த சுய எல்லை அறிதல் இத்தகைய தொடுதல்களில் ஈடுபடுபவர்களுக்கு அவசியம். தமிழ் ஆண்களில் மிகப்பெரும்பாலானவர்களுக்கு நாகரிகத்துக்கு அப்பால் அடிப்படை நாசூக்கு கூடத் தெரியாது. நாகரிகமே ஒரு எளிய கைப்பழக்கம் என்பதற்கு அப்பால் தெரியாது. அவர்கள் என்னுடைய சு.ரா. தொடுதல்களைக் கண்டு திகைப்படைவதை என்னால் புரிந்துகொள்ளமுடிகிறது. த்ரிஷாவை அவர்களுக்குப் பரிந்துரைக்க மாட்டேன். அவர்களிடம் ஒருபோதும் சுந்தர ராமசாமி தொடுதல்களுக்கு வரவேண்டாம் என்றே சொல்வேன். எறும்பு ஊறுகிறது என சர்க்கரையை நோக்கி எலி ஊர்ந்தால் கடித்துவிடும்.

தொடர்புள்ள பதிவுகள்:
1. ஆண்களின் கண்கள்…
2. ஏன் விவாதிக்கிறேன்

Rape and Sexual Assault on Women: Actions and Questions

1. பாலியல் வல்லுறவு சம்பவங்கள் அதிகரித்து இருக்கின்றன என்று எப்படி சொல்ல முடிகிறது? அதற்கான தரவுகளோ, முறையான ஆய்வுகளோ இல்லாமல், பொத்தாம் பொதுவாக “ஜாஸ்தியாகி விட்டது” என எப்படி சொல்ல முடியும்?

2. அமெரிக்க கல்லூரிகளில் பாலியல் குற்றங்கள் பதிவு செய்யப்பட்டாமல் போகிறது. குற்றம் செய்தவர்களுக்கு ஆதரவாக நிர்வாகம் செயல்படுவதைத் தடுக்க ஆவன செய்ய வேண்டும் என ஒபாமாவே அறிக்கை விடும் அளவு நிலைமை மோசமாக இருக்கிறது. மேற்குலகில் கற்பு பறிபோய் விட்டது என செய்தியாக்குவதைவிட குற்றவாளி தண்டிக்கப் பட வேண்டும் என்பதே போராட்டத்தின் காரணமாக இருக்கிறது. இந்தியாவிற்கு எது முக்கியமாக இருக்கிறது? ஒவ்வொருவரும் நிம்மதியாக நடமாட வேண்டும் என்பதா (அல்லது) அநீதி இழைத்தவர்களை காலத்தே குற்றவாளிக் கூண்டில் நிறுத்த வேண்டும் என்பதா?

3. பெண்கள் என்றால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வேலை பார்க்கும் உத்தியோகங்கள் நிறைந்த காலத்தில் இருந்து 24 மணி நேரமும் உழைக்கும் காலகட்டத்திற்கு மாறியிருக்கிறோம். ஆண் மட்டும் தனியே திரும்பும்போது ஜேப்படி என்பது பெரிய பிரச்சினை. இன்று பெண்களும் பின்னிரவில் தனியே பயணிக்கும்போது வேறு பிரச்சினைகளும் எழுகின்றன. இதுவும் உலகளாவிய சிக்கலாகவே இருக்கிறது. இவற்றை எப்படி சமாளிக்கலாம்?

4. பெண்களின் பொய் புகார்கள்: ஈ எம் ஃபார்ஸ்டரின் “பாஸேஜ் டு இந்தியா”வில் இருந்து: “Pity, wrath, and heroism filled them, but the power of putting two and two together was annihilated.” பிரிந்த காதலனைப் பழிவாங்கவோ… உறவினரை உள்ளே தள்ளவோ வல்லுறவுக் குற்றச்சாட்டுகள் உதவலாம். அந்த வகையில் எவ்வளவு நிரபராதிகள் மாட்டிக் கொண்டிருப்பார்கள்?

5. போர்னோ தளங்கள்: நம் ஒவ்வொருவர் வீட்டிலும் கத்தி வைத்திருக்கிறோம். தமிழ் சினிமா முழுக்கவே கொலைகளும் வெட்டு குத்துகளும் நிறைந்திருக்கின்றன. பாலியல் படங்கள் சுலபமாகக் கிடைப்பதால் பாலியல் குற்றங்கள் அதிகமாகின்றன என்பதை ஒத்துக் கொண்டால் வீட்டுக்கு வீடு அல்லது தெருவிற்கு தெரு இரத்தம் பெருக்கெடுத்து ஓடவேண்டுமோ?

6. மது அதிகம் கிடைப்பதால் மதுவருந்துபவர்கள் பெருகவில்லை. மதுவருந்தும் பணவசதியைப் பலரும் அடைந்திருப்பதால் மதுபானக் கடைகள் பெருகியிருக்கின்றன. அதே போல், கோழி அதிகம் கிடைப்பதால் கோழி சாப்பிடுபவர்கள் பெருகவில்லை. கோழி வாங்கும் சக்தியும் அடிக்கடி வாங்கும் பணவசதியையும் பலரும் பெற்றிருப்பதால், கோழிக்கடைகளும் கோழிப்பண்ணைகளும் பெருகியிருக்கின்றன. கோழி அதிகம் சாப்பிடுவதால்தான் பாலியல் வன்முறைகள் பெருகுகிறது என நிறுவலாமா?

7. பள்ளிக்காலங்களில் என்னுடைய நண்பன் நிறைய கதை சொல்வான். “நான் அவளுடன் இந்த மாதிரி இருந்தேன்” என கற்பனையும் காமமும் கலந்து புதிது புதிதாக விவரிப்பான். ஆர்வமில்லாமல் கேட்பவர்களும் கூட அவனுடைய எந்த காலட்சேபத்தையும் தவறவிடாமல் கேட்பார்கள். இந்த மாதிரி பொய்யும் புரட்டும் சொல்பவர்கள், இந்தக் காலத்திலும் ஊடகங்களிலும் கல்லூரிகளிலும் இருப்பார்கள். இவர்களைப் போன்றோரை நம்மில் எவ்வளவு பேர் தட்டிக் கேட்டு தடுத்திருக்கிறோம்? இந்த மாதிரி இட்டுக் கட்டி கிசுகிசுப்போரைத் தடுக்க சட்டத்தை விட தனி மனித செயல்பாடு அவசியமா?

8. ஐ.நா. புள்ளிவிவரத்தின் படி மூன்றில் ஒரு பெண்ணாவது பாலியல் வன்முறைக்குள்ளாகி இருக்கிறார். கிட்டத்தட்ட ஒரு பில்லியன் பெண்கள் உலகெங்கும்….. ஆணாக எனக்கு எந்தக் கட்டுப்பாடுகளும் இருந்ததில்லை. எப்பொழுது வீட்டிற்கு வரவேண்டும், எப்படி அடை அணிய வேண்டும், எங்கே செல்லக் கூடாது, எவ்வாறு நடக்கக்கூடாது என்று எந்த அறிவுரைகளும் வந்ததில்லை. ஆணாக இருப்பதால் மட்டுமே எனக்கு எந்த பய உணர்வும் வந்ததில்லை. ஆனால், பெண்ணால் இருப்பதால் மட்டுமே உருவாகும் அச்ச உணர்வு கலாச்சாரத்தை எப்படித் தவிர்க்கப் போகிறோம்? அவர்களை எப்பொழுது பொதுவெளியில் சுதந்திரமாகப் பேசவிட்டுக் கேட்கப் போகிறோம்?

9. பாலியல் வல்லுறவு கலாச்சாரமாக தனி மனிதன் என்ன செய்ய வேண்டும்? தனி உரையாடலில் அல்லது ஃபேஸ்புக்கில் கீழ்த்தரமான நகைச்சுவை வெளிப்பட்டால் எத்தனை பேர் அந்த நண்பரை கண்டிக்கிறோம்? எத்தனை தடவை கண்டும் காணாமலும் போய்விடுகிறோம்? சினிமாவில், தொலைக்காட்சியில் செய்யப்படும் வார்ப்புரு தோற்றங்களை எவ்வளவு பேர் கண்டிக்கிறோம்? எவ்வாறு அதையெல்லாம் மாற்றப் போகிறோம்?

Kochadaiyaan – கோச்சடையான் விமர்சனம்

தமிழராக இருப்பதற்காக இரண்டு பேரை மரியாதையுடன் பாராட்டத் தோன்றும். ஒருவர் சாங் முதற்கொண்டு எல்லாவற்றிலும் பரிபூரணமாய் இயக்கும் சாங்கர் எனப்படும் இயக்குநர் ஷங்கர். இவரோடு ரஜினிகாந்த் இரண்டு படம் செய்திருக்கிறார். இரண்டாவது விமர்சனத்தில் கறார்தன்மையும் அந்த மாதிரி விமர்சனம் தன்னிடம் வராமல் இருக்க செதுக்கும் ஸ்வச்ச எழுத்துக்காரர் ஜெயமோகன். இவருடன் மணிரத்னம் படம் செய்திருக்கிறார்.

அதன் பிறகு “கோச்சடையான்” போன்ற ஆக்கங்களும் தமிழ்ச்சூழலில் இயங்குகின்றன.

கதை மட்டும் வெகு சிரத்தையாக முழுமையாக உருவாக்கி இருக்கிறார்கள். அந்தக் கதைக்கு எந்த மாதிரி காட்சிகள் வைத்தால் அசைப்படம் (அனிமேஷன்) சிறப்பாக இருக்கும் என்பதையும் அறிந்தே இருக்கிறார்கள். ஆனால், அந்த நுட்பம் ஓரளவாவது பார்க்க சகிக்கக் கூடியதாக அமைந்திருக்கிறதா என்பதில் அசிரத்தையா? அலட்சியப் போக்கா? அறியாமையா? என விவாதிக்க வைக்கிறார்கள்.

“வேட்டையாடு விளையாடு” படம் பார்த்தவுடன் அமெரிக்கத் தொலைக்காட்சியில் வாராவாரம் ஒளிபரப்பாகும் சி.எஸ்.ஐ. போன்ற எந்த போலீஸ் சீரியலும் நம்பகத்தன்மையிலும் கதாம்சத்திலும் பரபரப்பிலும் “வே… வி.”ட்டை விட பன்மடங்கு சிறப்பாக இருக்குமே என தமிழ்ப்படங்களின் நிலையை எண்ணி வருத்தப்பட வைத்தது. அதே போல் சாதாரண டிவி அனிமேஷன் கூட உயிர்ப்போடும் உள்வாங்க வைக்கும் விவரங்களோடும் சூழலின் தீர்க்கமான துல்லியமான விவரணைகளுடனும் அமைந்திருக்கும். அந்த அளவு தர உந்துதல் கூட இல்லாத அசிரத்தை ஒவ்வொரு ஃப்ரேமிலும் கோச்சடையானில் மின்னுகிறது.

வெறும் ரஜினிகாந்த் பெயரை வைத்து கல்லா கட்டலாம் என மகள் நினைக்கிறார். அதற்கேற்ப அரங்குகளும் அகிலமெங்கும் நிறைகிறது. எவருக்கும் மோசமானப் படைப்பை பார்க்கிறோம் என தர்மசங்கடம் எழவில்லை. படம் உருவாக்கியவருக்கும் அல்ப பவிஷுடன் பழுதான பொருளை சந்தையில் தள்ளுகிறோம் என்னும் மனக்கிலேசமும் எழவில்லை. இப்படியான அரசியல், கலை, விளையாட்டு, சூழலில் இயங்க இந்தியாப் பழக்கப்படுத்திக் கொண்டிருக்கிறது.

எல்லா கதாபாத்திரங்களுக்கும் ஒன்றரைக்கண். அவர்களின் பின்புலத்தில் படு கேவலமான கிராபிக்ஸ். நடுவில் சலனப் பதிவு சல்லியடிப்பு. தீபிகா படுகோனேயை ஒரு கோணத்தில் பார்த்தால் ஐஷ்வர்யா ராயைப் போல் இருக்கிறார். சண்டைக் காட்சியிலும் சிரிக்கும் முகபாவனை. காதலனை சிறையில் போட்டாலும் அதே சிரிக்கும் முகபாவம். அசப்பில் ரானா (ரஜினி கதாபாத்திர)த்தின் தங்கையைப் போலவே இருக்கிறார். இருவருக்கும் ஆடை மட்டுமே வித்தியாசம்.

“அரவான்” ஆதியைப் பார்த்தால் ராம்ராஜ் வேட்டிகள் விளம்பரத்தில் வரும் நட்சத்திரங்கள் போல் முகமற்று சொரணையற்று பாவமற்று பூசி மெழுகின களிமண் சிற்பம் போல் இருக்கிறது. டிஸ்னி படங்களில் வரும் வர்ணஜாலம் வேண்டாம். டோரா போல் கொஞ்சமாவது மினுக்கியிருக்கலாம்.

இவ்வளவு சிரமப்பட்டு சலனப் பதிவு அசைவூட்டப் படம் எடுப்பதற்கு பதிலாக அசல் ரஜினியை வைத்து எடுத்திருந்தாலே படம் பாந்தமாயிருந்திருக்கும்.

தமிழ்நாடு 2014 தேர்தலும் சினிமா நடிகர்களும்

சினிமாவிற்குப் போனால் ஹீரோ துதி பாட வேண்டும். அரசியலுக்குப் போனால் மேடைதோறும் பிரச்சாரம் செய்ய வேண்டும். படைப்பாளியாக இருப்பவர் இவற்றையெல்லாம் பின்பற்றாத விடிவெள்ளி. சிந்தனையாளராக இருப்பவர் கட்சி சார்பற்று, கொள்கை வெறியற்று, கட்டுப்பாடுகளற்று மாற்றுக் கருத்துகளை முன்வைக்கக் கூடியவர். அற்ப பணத்திற்காகவும் பின்னால் கிடைக்கப் போகும் பதவிக்காகவும் வாய் மூடி, கை பொத்தி, அடங்கிப் போகாதவர்.

விடுதலை சிறுத்தைக்கு ரவிக்குமார் இருக்கிறார். திமுக-விற்கு மனுஷ்யபுத்திரன். ஆம் ஆத்மி-க்கு ஞாநி. முக அழகிரிக்கு ரஜினி இருக்கிறார்.

ஸ்பானிஷ் மொழி கற்கலாம் வாங்க

’சம்சாரம் அது மின்சாரம்’ படத்தில் படிக்காத பையனைக் குறித்த வசனம் இப்படி வரும்:

“பாரதி +2 எழுதினான். பாரதி +2 எழுதுறான். பாரதி +2 எழுதுவான்.”

ஆங்கிலத்தில் ”He wrote +2; He is writing it; He will write it.” ”அவனுக்குப் படிப்பு வராது” என்பதை ஆங்கிலத்தில் “He doesn’t study well” என்னும் போது குழப்பம் வருகிறது. நேற்றுதான் படிப்பு வராமல் போயிற்றா அல்லது ஆதி காலத்தில் இருந்தே மண்டையில் ஏறாதா?

சோனியா காந்தி ஓய்வெடுக்கிறார். நரேந்திர மோடி நல்ல நிர்வாகி. இந்த இரண்டையும் ஆங்கிலத்தில் எப்படி மொழிபெயர்க்கலாம்?
“Sonia Gandhi is resting. Narendra Modi is a good administrator”

ஆங்கிலத்தில் எல்லாவற்றுக்கும் ”is”தான். எப்பொழுதோ செய்த சிறு சறுக்கலாக இருந்தாலும் அதை நிகழ்காலத்தில் விளித்தால் ”is” போடுகிறார்கள்.
மனுஷ்யபுத்திரன் காசுக்காரர். –> Manushyaputhiran is money minded.
அர்விந்த் கெஜ்ரிவால் பயந்தாங்கொள்ளி. –> Arvind Kejriwal is afraid.
பிரியங்கா காந்தி ஊழல்வாதி –> Priyanka Vadra is corrupt.

ஸ்பானிஷ் மொழியில் Ser and Estar என இரண்டு வினைச்சொற்கள். உள்ளார்ந்து இருப்பதற்கு Serம், தற்போதைக்கு இருப்பதற்கு Estarம் பயன்படுத்துகிறார்கள். ”கருணாநிதி காரியமாக இருக்கிறார்” என்றால் இன்று, இப்போதைக்கு கருணாநிதி காரியத்தில் இருக்கிறார் என பொருள்படும். “கருணாநிதி காரியவாதி” என்றால், தன் குடும்ப நலனுக்காக செயல்படுகிறார் என அர்த்தமாகிறது.

பிறவிக் குணமாக இருந்தால் “மன்மோகன் மௌன குரு” எனலாம் – இது ஸ்பானிஷ் Ser.
தற்காலிக லட்சணமாக இருந்தால் “மன்மோகன் மௌனம் சாதிக்கிறார்”. – இது ஸ்பானிஷ் Estar.

உங்களுக்குப் பிடித்த Ser அல்லது Estar பயன்பாடு என்ன?

லண்டன் விக்டோரியா நிலையம்

கடல் மீன் எப்படி எங்கெங்கோ சென்று அலைந்து விட்டு தன் பவளப்பாறைக்குத் திரும்புகிறதோ… குளிர்காலத்திற்காக பறவை எப்படி பலகாத தூரம் பறந்து வேடந்தாங்கலுக்குச் வந்துவிட்டு, தாய் ஏரிக்குத் திரும்ப குடிபெயர்கிறதோ… தெரியாது. எனக்கு கூகுள் வழிகாட்டியும் வேஸ் (waze) கைகாட்டியும் இயக்காவிட்டால், அடுத்த தெருவில் இருந்து கூட சொந்த வீட்டிற்கு வந்து சேரும் திசை தெரியாது.

இப்படிப்பட்டவனுக்கு மொழிப் பிரச்சினையும் சேர்ந்து கொண்டால்?

எல்லாக் காக்கைகளும் கா…கா… என்றுதான் கூவினாலும், அண்டங்காக்கையும் ஆனைச்சாத்தனும் கரையும் வித்தியாத்தை பறவையியல் வல்லுநர் சொல்லுவார். அதே போல் லண்டன்காரர்கள் ஆங்கிலத்திற்கும் என்னுடைய ஆங்கிலத்திற்கும் வித்தியாசம் கண்டுபிடிக்க வல்லுனர் வேண்டாமென்றாலும், “கா…கா…” என்று இரைந்தால், காக்கா வந்து சாதத்தைக் கொத்தித் தின்பது போல், நம் ஆங்கிலமும் எல்லாக் காக்கைகளுக்கும் புரியும் என்னும் மதர்ப்போடு இங்கிலாந்தில் இறங்கினேன்.

நான் செல்ல வேண்டிய இடத்தின் பெயர் “விக்டோரியா கோச் ஸ்டேஷன்”. ரயில்வே நிலையத்தில் இறங்கியவுடன் அகப்பட்ட முதலாமவரிடம் “விக்டோரியா ஸ்டேஷன் எப்படிங்க போகணும்?” என்றேன்.

அவரோ “அங்கேதான் நீங்கள் நின்று கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்கு எங்கே போகணும்? முகவரி என்ன?” என ஆதுரமாக விசாரித்தார். இந்த மாதிரி மொழிப் பிரச்சினை வருமென்றுதான், பேப்பரும் கையுமாக அச்செடுத்து வந்திருந்தேன். அதைக் காண்பித்தேன். தமிழ்நாட்டில் திரும்பிய பக்கமெல்லாம், அண்ணா தெரு, அண்ணா நகர், அண்ணா பஸ் ஸ்டாண்டு, அண்ணா விமான நிலையம் இருப்பது போல், இங்கிலாந்திலும் பெயர் பிரச்சினை. ஒரே ஒருவர்தான். அறிஞர் அண்ணா கட்சிக் கொடிகளில் கை காண்பித்திருக்கிறார். இங்கே அன்னை விக்டோரியா அந்த மாதிரி வழி காண்பிப்பதற்கு பதில், நாஞ்சில் மனோகரன் மாதிரி கையில் மந்திரக்கோலோடு காட்சியளித்தார்.

டெல்லியில் ”பஸ்ஸடா” என்று செல்லமாக அழைப்பது போல், மரூஊ இருந்திருக்கலாம். அல்லது எலிசபெத்தாவது தனி வழி சென்றிருக்கலாம். ஒரு வழியாக அந்தக் கால குதிரை வண்டி நிலையமான இந்தக் கால பேருந்து நிலையத்தை வருவதற்குள் ஆங்கிலத்தை விட ஹிந்தி மட்டும் பேசினால் மகாராணியின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா என அறிந்தேன்.

இந்தியத் தேர்தல்: தேவையான மாற்றங்கள்

இந்தியத் தேர்தல் முறை காலத்திற்கேற்ப மாறலாம். தேசிய ஆலோசனை கவுன்சில் தலைவராக இருப்பது தவறு; பிரதம மந்திரி வேட்பாளரை அறிவிப்பது இழுக்கு என்று சாடுவது எல்லாம் தனி காமெடி. அதை விட்டுவிடலாம்.

வாக்களிப்பு முடிய 48 மணி நேரம் இருக்கிறபோது பிரச்சாரத்தை முடிப்பது விநோதமான அந்தக் கால வழக்கம். தொலைக்காட்சி, இணையம், தொலைபேசி போன்ற தொடர்பு சாதனங்கள் இல்லாத தரைவழி அஞ்சல் மட்டுமே உள்ள காலத்திற்கு ஏற்ற வழக்கத்தை விட்டொழிக்க வேண்டும். ஃபேஸ்புக்கில் பிரச்சாரம், குறுஞ்செய்தியில் தகவல், கட்சி டிவியில் விளம்பரம் என்றான பிறகு கடைசி நிமிட பொதுக்கூட்டத்திற்கு மட்டும் தடை போடுவதை விட்டு விடலாம்.

தேர்தல் நாளன்று விடுமுறை அளிப்பது அடுத்த ஹைதர் அலி கால பழக்கம். எந்த ஊரில் இருக்கிறோமோ, அந்த ஊரில் வாக்களிக்க வசதி செய்ய வேண்டும். பெங்களூரில் படிக்கிறோமா… அங்கேயே வாக்களியுங்கள். பம்பாயில் பணிபுரிகிறீர்களா… அங்கேயே வோட்டுப் போடுங்கள். சொந்த ஊருக்கு பஸ் பிடித்து, அந்தத் தொகுதியில் யார் நிற்கிறார் என்று சாதி பார்த்து, கட்சி பார்த்து வாக்களிப்பதை விட, வசிக்கும் இடத்திற்குப் பொருத்தமான வாக்காளரைத் தேர்ந்தெடுப்பது காலத்திற்கேற்ற நடைமுறை.

வாக்களிப்பது என்பது சலுகை அல்ல. கடமை. வாக்குப் போடுவதை உரிமையாக நினைப்பவர்கள் வேலை நாளன்றும் வாக்களிப்பார்கள். வாக்களிப்பதை சிறப்பு தள்ளுபடியாக நினைப்பவர்களுக்குத்தான் லீவு கொடுக்க வேண்டும். மாலையில் எட்டு மணி வரை வாக்குப் போடும் நேரத்தை நீட்டிக்கலாம். மதிய உணவிற்கு செல்வது போல், ஊழிய நாளின் நடுவே வாக்குச்சாவடிக்கு சென்று வரலாம். தேர்தல் நாளுக்காக அரசு விடுமுறை விடுவது சோம்பேறித்தனத்தின் உச்ச எடுத்துக்காட்டு.

கடைசியாக வாக்குப் போடும் போது பிறர் பார்க்க, தன் வாக்கை செலுத்துவது. இதுவும் ஒன்றும் கொலைக் குற்றமல்ல. குழந்தைகளை வாக்குச்சாவடிக்கு அழைத்துச் சென்று, எவ்வாறு வாக்களிப்பது, எந்த பொத்தானை அழுத்துவது என செயல்முறை விளக்கம் செய்ய உதவலாம். என்னைப் போன்ற சந்தேகப் பிராணிகளுக்கு இறுதி கட்ட சோதனையாக, இந்த இன்னொருவரின் துணை உதவலாம். ரகசிய காப்பு விதிமுறை மீறல் எல்லாம் பத்தாம்பசலித்தனத்தின் வெளிப்பாடு.

இவ்வளவும் மாறினால் கூட என்ன… ஒரு மண்டலம் கூட பொறுப்பு வகிக்க திறனில்லாதவர்கள் கூட பிரதம மனிதிரியாகப் போட்டியிடும் சுதந்திர நாடாக இருப்பது மகிழ்ச்சியான கொண்டாட்டம்

பாஸ்டன்: பெயர்க் காரணம்

நான் இருக்கும் ஊரின் பெயர் பாஸ்டன். இங்கிலாந்தில் இருந்து இந்தப் பெயர் வந்திருக்கிறது.

அமெரிக்காவில் பரங்கியர்கள் எங்கெல்லாம் குடியேறினார்களோ, அந்த இடத்திற்கெல்லாம், தங்களின் சொந்த ஊரின் பெயரையே நாமகரணமிட்டார்கள். இங்கிலாந்தில் உள்ள லண்டன், யார்க், க்ளூஸ்டர், வூர்ஸ்டர் போல், இந்தப் பகுதியிலும் நியு லண்டன், நியு யார்க் என குக்கிராமங்களை அழைத்துக் கொண்டார்கள். இவற்றில் சில ஊர்கள் மூலகர்த்தாவை விட அதிகப் பெயரும் புகழும் பெற்றது. லண்டனில் இருந்து இரண்டரை மணி நேரம் வடக்கில் இருக்கும் அசலை விட அதிகம் பேர் புழங்கும் இடமாக பாஸ்டன் ஆகி இருக்கிறது.

அந்த அசல் பாஸ்டன் பெயர் எப்படி வந்தது?

செயிண்ட் போடாஃல்ப் நகரம் என்பதுதான் மருவி பாஸ்டன் ஆகி இருக்கிறது. பால்டாஃப் டவுன் (அ) பால்டாஃப் ஸ்டோன் என்பது நாக்கை சுளுக்கெடுக்க, பால் ஸ்டோன் என சுருண்டு, அதுவே… நாளடைவில் பாஸ்தன் என பெயர் பெற்றது.

“ஒரு கல்; ஒரு கண்ணாடி” என்னும் பிரயோகம் கூட இந்த நகரத்தில் இருந்து வந்திருக்கிறது. ஏழாம் நூற்றாண்டில் துறவி பால்டாஃப் வைத்தது ஒரு கல். அதைச் சுற்றி வசித்தவர்களால் பாஸ்டன் நகரம் உருவானது. நடுநடுவே போர்ச்சுகீசியர்கள் குடிபுகுந்தார்கள். அப்படி வந்தேறியவர்களை 21ஆம் நூற்றாண்டில் கால்பந்தில் இங்கிலாந்து தோற்றவுடன் பால்டாஃப் stone (கல்) கொண்டு மண்ணின் மைந்தர்கள் விரட்டினார்கள்.

அமெரிக்காவின் பாஸ்டனில் இருந்த ஆதிகுடி என்ன பெயர் கொண்டு அழைத்தது என்பதை ஆராய்ச்சியாளர்கள் இன்னும் கண்டுபிடிக்கவில்லை.

புனித பிம்பங்களை புனைவாக்குவது எப்படி?

Before I built a wall I’d ask to know
What I was walling in or walling out,
And to whom I was like to give offence.
Something there is that doesn’t love a wall,
That wants it down.
– “Mending Wall” – Robert Frost

பக்கத்துவீட்டுக்காரரையும் பாசமுடன் பார்க்க அழைக்கும் கவிதைகளை எழுதியவரின் சொந்த வாழ்க்கை எப்படி இருக்கும்? “ஹார்ப்பர்” பத்திரிகையில் ஜாய்ஸ் கரோல் ஓட்ஸ் கதை எழுதியிருக்கிறார். கொஞ்சம் காட்டமாக; நிறைய உள்மாந்திரமாக; ஆங்காங்கே வம்பு தூவி.

முழுக்க முழுக்க புனைவு என்றால் விட்டுவிடலாம். புகழ்பெற்ற எழுத்தாளனைப் பற்றிய கற்பனை என்று சொல்லிவிடலாம். கற்பனை என்பதால் நிஜ சமாச்சாரங்கள் ஒன்றும் உள்ளே கிடையாது என்றும் விட்டுவிடலாம். ஆனால், ஜாய்ஸ் கரோல் ஓட்ஸ் எழுதிய சிறுகதைக்கு Fall of Frost (by) Brian Hall புத்தகம் அடிப்படையாக இருந்தது என அடிக்குறிப்பிடிருக்கிறார். அப்படி என்னதான் குற்றம் செய்துவிட்டார் ராபர்ட் ஃப்ராஸ்ட்?

1. சக எழுத்தாளர்களை மரியாதைக் குறைவாக விமர்சிப்பது: மற்ற கவிஞர்களை எல்லாம் மட்டம்தட்டி தன் புகழைப் பரப்பி இருக்கிறார். தன்னை ஆராதிக்காத எவராக இருந்தாலும், அவர்களுடைய முக்கியமான ஆக்கங்களை தன்னுடைய இலக்கிய தாதாயிஸம் மூலமாக அமுக்கி இருக்கிறார்.

2. குடும்பத்தை சிதைத்தது; ஆறு வயது மகளை துப்பாக்கி முனையில், “அப்பாவா? அம்மாவா? இப்பவே ஒண்ணு தேர்ந்தெடு!” என்று நள்ளிரவு எழுப்பி மிரட்டுகிறார். ‘மானே…தேனே’ என்று கவிதைப் பழகத் துவங்கிய மகனை முளையிலேயே அறுக்கிறார். பதினாறு வயது சிறுமி எவரை பார்த்தாலும், அவர்கள் பின்னே தன் கவிதையைப் பாடி துரத்தியிருக்கிறார்.

3. ஓரிரு படைப்புகளை முன்னிறுத்துயே காலந்தள்ளியது: ரஜினியின் எல்லாப் படத்திலும் பன்ச் வசனம் வருவது போல், தன்னுடைய சிறந்த கவிதையை மட்டும் எல்லா சபைகளிலும் சொல்கிறார்.

இவை எல்லாவற்றையும் விட தன்னுடைய ஆதர்சம், தன்னுடைய கண் முன்னே சரிவதை இந்தக் கதை புனைவாக்குகிறது. இலக்கியவாதியின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சனம் செய்யலாமா என்னும் கேள்வியை வீசுகிறது. சரித்திரக்கதையை எப்படி புனைகதை ஆக்குவது என காட்டுகிறது. அறிஞர் அண்ணா, கலைஞர் மு கருணாநிதி போன்ற புனித போப் பிம்பங்களின் ஒன் ஹிட் வொண்டர் ஆக்கங்களை எப்படி கலைப்பது என காட்டுகிறது.

இங்கே இணையத்தில் முழுக்கதையும் கிடைக்கிறது