மணி ரத்தினத்தின் இருவர் பார்த்திருக்கிறோம். அது போல் இரட்டையராக இருந்து சாதனை புரிந்தவர்களை ‘பவர் ஆஃப் டூ’ புத்தகத்தில் ஜோஷுவா ஷென்க் கவனிக்கிறார்.
ஒருவரால் என்ன சாதிக்க முடியும்? மார்டின் லூதர் கிங், ஸ்டீவ் ஜாப்ஸ், பில் கேட்ஸ், ஃபிராயிட் என்கிறோம். ஆப்பிள் துவக்கத்தில் ஸ்டீவ் ஜாப்ஸுக்கு கை கொடுக்க வோஸ்னியாக் இருந்தார். ரொம்ப நாள் கழித்து திரும்பி வந்தபோது ஜோனதன் ஐவ் இருந்தார். பில் கேஸுக்கு ஸ்டீவ் பால்மர். விஸ்வநாதனுக்கு ராமமூர்த்தி. இளையராஜாவிற்கு வைரமுத்து.
ஒருவரிடம் இல்லாத விஷயங்களை ரொப்ப இன்னொருத்தர் தேவை. முதலாமவருக்கு கற்பனா சக்தி அதிகம் இருக்கலாம். மற்றவருக்கு செய்துமுடிக்கும் காரிய சூட்சுமம் இருக்கும். போட்டி போட்டுக் கொண்டு வேலை செய்ய வைக்கும். பகலும் இரவுமாக இருக்கலாம். மயிலும் வான்கோழியுமாக இருக்கலாம். ஆனால், பெரும்பாலானோருக்கு ஈரசைகள் கை கொடுக்கின்றன.
ட்விட்டர் துவங்கியது இருவர்; சவுத் பார்க் கார்ட்டூன் ஆரம்பித்தது இருவர்; சி.எஸ். லூயிசும் ஜே. ஆர். ஆர். டோல்கியனும் அந்தக்கால இலக்கிய சகாக்கள்; வாரன் பஃபேயின் வெற்றிக்கு சார்லி மங்கர் முக்கிய காரணம்; வில்லியம் வோர்ஸ்வொர்த்துக்கு அவரின் தங்கை டோரத்தி; ஃபேஸ்புக் மார்க் ஜக்கர்பர்கிற்கு சி.ஓ.ஓ. ஷெரில் சாண்ட்பெர்க்; டேனியல் கானிமானுக்குக் கூட ஏமோஸ் ட்வெர்ஸ்கி இருக்கிறார்; சச்சின் டெண்டுல்கரும் பிரையன் லாராவும் என இரண்டு இரண்டாக முடிச்சுப் போடலாம்.
தமிழ் உலகத்தில் கண்டுபிடிப்புகள் குறைச்சல். அதனால் அதை விட்டு விடுகிறேன். சினிமாவில் இரட்டையர் எக்கச்சக்கம். இலக்கியத்தில் எப்பொழுது பார்த்தாலும் இருவர் பேப்பர்கத்தி சண்டை போடுகிறார்கள்.
ஒரு ஆணின் வெற்றிக்குப் பின்னால் பெண் இருப்பாள். ஒரு பெண்ணின் வெற்றிக்குப் பின்னால் வயது இருக்கும். ஆகவே, எங்கேயும் இருவர்.