Monthly Archives: ஓகஸ்ட் 2023

போர் தொழில் – திரைப்பட விமர்சனம்

அது ஒரு கிராமம். என் அம்மா அந்த வீட்டின் சாவியை வைத்துக் கொண்டு விளையாடிக் கொண்டிருந்தார். அந்தக் காலத்தில் யூடியுப் கிடையாது. கிடைத்த புத்தகத்தை எல்லாம் வாசித்து முடித்த பின், சுவாரசியமாக தன் பொழுதைப் போக்க சாவிக்கொத்து அகப்பட்டது.

சட்டென்று திரும்பிப் பார்த்தால், சுற்றிலும் குரங்குக் கூட்டம். அவளின் கையில் இருந்த மினுமினுப்பான தகதகப்பைப் பார்த்து இளித்துக் கொண்டிருந்த கூட்டம். அவருக்கு பயமாகி விட்டது. இவ்வளவு பேர் சுற்றி, புடைசூழ ரசிக்கிறார்களே!? இன்னும் விளையாட வேண்டுமா? இதைக் கொடுத்துவிட்டால் பூட்டை எப்படி திறப்போம்… வீட்டிற்குள் எவ்வாறு நுழைவது? இப்படி அகப்பட்டுக் கொண்டோமே… என்று பக்பக்.

இந்தக் கதையை என்னிடம் சொன்னவுடன் ‘போர்த் தொழில்’ படம் நினைவிற்கு வந்தது. குரங்குக் கூட்டம் போல் அந்தப் படத்தைக் கொண்டாடுகிறார்கள். அது தங்கம் அல்ல. ஏதோ, ஒரு சாவி வளையம். இந்தக் குரங்குகளுக்கு நடுவில், “இந்தப் படம் வெறும் இரும்பு.” என்று விளக்கினால் மேலே விழுந்து பிறாண்டி விடுமோ என்னும் படபடப்பு.

எனவே…

‘போர் தொழில்’ அருமையான காலகட்டத்தை இந்தக் கால தலைமுறைக்குச் சொல்லும் படம். ஆங்கிலத்தில், ‘ட்ரூ டிடெக்டிவ்’ (அசல் துப்பறிவாளர் – True Detective) மாதிரி லட்சக்கணக்கில் நல்ல தொடர்களும் படங்களும் இருக்கும்போது, அதை அபாரமான பலகுரல் கலைஞர்களின் தமிழாக்கத்தில் கேட்பதற்கு இது ஒரு மாற்று.

நாலே நாலு பேர் வைத்துக் கொண்டு சிக்கனமான படப்பிடிப்பை எவ்வாறு நடத்துவது? திரைக்கதை ஓட்டைகளை காலகட்டத்தை வைத்து ஒப்பேற்றுவது எப்படி? – சிறப்பாக சொன்னதற்கு வாழ்த்துகள்

குருதிப்புனல் படத்திற்கு பிறகு, ‘பயம்னா என்னன்னு தெரியுமா?’ வசனத்திற்கு அடுத்த பதிப்பு கொடுப்பது:
’பயந்தவன் எல்லாம் கோழை கிடையாது; பயந்து ஓடுறவன் தான் கோழை!’

குணா படத்தில், ’ரோஸி நல்லவதான்… ஆனா தப்பு; அம்மா தப்பு!’, வசனத்தை ஒத்த
‘உங்க வேலைய நீங்க சரியா பார்த்தீங்கன்னா; எங்க வேல கம்மியாகும்.’
அல்லது
‘நம்ம பண்ற வேலை நமக்கு மரியாதைய தேடித்தரும்!’

இதே போல், எல்லா வேலையுமே சிரத்தையாகவும் சிறப்பாகவும் முழுமையான ஈடுபாட்டுடனும் செய்வது சாலச் சிறந்தது. வள்ளுவர் பாதையில்:
‘கொலைகரானுக்கு கொலை ஒரு அடிக்‌ஷன்’

அப்படியானால் – போர்த்தொழில் ஒரு மைல்கல் அல்லவா!?!

நிறைய ஃபேஸ்புக் நண்பர்கள். சமூக ஊடக செல்வாக்காளர் வழி சந்தைப்படுத்தம்; ‘ஜெயிலர்’ போல் அரைத்த மாவை புளிக்காத மாவாகச் சொல்லும் திரள்கூட்டம். வெறும் சாவியை வைடூரியமாக்கும் குரங்குக் கூட்டம்.

சின்ன கல்லு!
பெத்த லாபம்!!

Classical Carnatic Ragas in Tamil Film Music

யூ டியுப் தளத்தின் சிறப்பம்சமே, “உனக்கு இது பிடிக்கலாம்!” என்று தெரியாத எவரோ ஒருவர் – எனக்குத் தெரிந்த தலைப்பில் உரையாடுவதை –> உங்களின் ஓடையில் காண்பிப்பது.

அப்படி தென்பட்டவர் தமிழ்ச்செல்வன் பாரதி.

குரங்கிற்கு எப்படி வாழைப்பழம் விருப்பமோ இளையராஜாவின் பாடல்கள் அப்படி எனக்குப் பிடிக்கும். தமிழ்செல்வன் பாரதி.மாதிரி கர்னாடக சங்கீதம் அறிந்தவர்கள் அதை வேறொரு விதத்தில் ரசிக்கக் கற்றுக் கொடுக்கிறார்கள்.

அதாவது ஓவியங்களை எண்ணெய் ஓவியம், வண்ணக்கோல், செயற்கை வண்ணக் கூழ்மங்கள், நீர்வர்ணம், மை ஓவியம், பூச்சு ஓவியம் என்றெல்லாம் வகைப்படுத்துவது போல், இசையையும் ஒழுங்காகக் கற்றுக் கொண்டிருந்தால் இதை இந்த முறையில் தொகுத்திருக்கிறார்கள் என்று அறியலாம். ஏன் அந்த வடிவத்தைத் தேர்ந்தெடுத்தார்கள்? எப்படி அந்தப் பூச்சு இந்தத் தருணத்திற்கு பொருந்துகிறது? இதுவரை எவரும் செய்யாத புதுமையை எவ்வாறு புகுத்தியிருக்கிறார்? ஏன் வெறுமனே சாஸ்திரீய முறைப்படி பாடுவது அலுப்பையும் ; அதையே ராஜாவின் எண்ணத்தில் உருவாகும் பாடல் — பிரவாகத்தையும் கொடுக்கிறது?

ஃபாரம் ஹப் (The Forum Hub) என்னும் தளத்தில் பேசியது… தமிழ் ஃபிலிம் மியூசிக், டி.எஃப்.எம் பேஜ் (இப்பொழுது newtfmpage) என்றெல்லாம் கதைத்தது… அங்கே நாற்பது பக்கங்கள் இருக்கும். ஒவ்வொரு பக்கத்திலும் நூறு பதில்களும், பதிவுகளும் இருக்கும். இடையிடையே சில வைரங்கள் ஜ்வலிக்கும். தேடுவது கடினம். சட்டென்று புரியாத சதுஸ்ருதி தைவதம், அந்தர காந்தாரம், பிரமாண ஏகஸ்ருதி என்றெல்லாம் மிரட்டும். சல்லடை போட்டு சலித்து, அந்தப் பகிர்வுகளைக் கோர்வையாகத் தொகுத்து, ஒரேயொரு சினிமாப் பாடலையோ, ஒரு ராகத்தையோ, ஒரு விஷயத்தையோ பற்றி முழுமையாகக் கதை போல் சொல்ல எவராவது கிடைப்பாரா என்று ஏங்க வைத்தாலும் சோளப்பொரி கிடைத்தது.

திரள் சந்தைக்கான புகழ் பெற்ற முயற்சியாக சிக்கில் குருச்சரண் அதை பரவலாகப் பதிவாக்கி எல்லோருக்கும் கொண்டு சென்றார். அவரைப் போல் பலரும் ஏற்கனவே இது மாதிரி நிறைய முயற்சிகளும் எழுத்துகளும் பகிர்வுகளும் தந்திருந்தாலும், எல்லோரும் அறிந்த நபர் – எல்லோருக்குமான பதிவாக ஆக்கியதில் சிக்கில் குருச்சரணுக்கு முக்கிய இடம் உண்டு. ஜனரஞ்சகமாக இருக்கும். சுவாரசியமாக இருக்கும். நன்றாக எடிட் செய்து தொகுக்கப்பட்டிருக்கும். ரொம்ப தொழில்நுட்ப சங்கதிகள் சொல்லி அலுப்பு தட்டாமல், அதே சமயம் டெக்னிகலாக வேண்டும் என்பவர்களுக்கு நிறைய இடம் இருக்கும்.

அவர் வழியில் தமிழ்ச்செல்வன் பாரதி முக்கியமானவர். சிக்கிலார் போல் மேளகர்த்தா ராகம் என்று வகைப்பாடுகளைச் சொன்னாலும், மெட்டுக்கு ஏற்ற வார்த்தைகள், அந்தப் பாடலின் கூட்டிசையில் வீணையும் வயலினும் எவ்வாறு முக்கியமாகிறது என்பதில் மேற்கத்திய சங்கீத நுட்பங்கள், என்று உணர்த்துகிறார். நிரோஷா தாங்க எனக்குத் தெரியும் என்பவருக்கு சரிகமபதநி என்பதில் கடைசியில் வரும் நி என்னும் நிஷாதம் எவ்வாறு இசைஞானியின் பாடல்களில் கையாளப்பட்டிருக்கிறது என்கிறார். எல்லாவற்றையும் காலை நடை, பக்கத்தில் உறங்கும் செல்லப்பிராணிகள் என வித்தியாசமான, நேரடியான, பாசங்கற்ற விதத்தில் தயார் செய்து பரிமாறுகிறார்.

இந்த மாதிரி விஷயமெல்லாம் கேட்க குருகுலத்தில் காலந்தோறும் பணிவிடை செய்யவேண்டும். குருவிற்கு எப்போது உத்வேகம் வருகிறது என்று காத்திருக்க வேண்டும். ஒட்டுக் கேட்க வேண்டும். கேட்டதை இன்னொருவரிடம் சொன்னால், அந்த சீடன் நம்மை விட பிராபல்யம் ஆகி விடுவான் என்று விரித்துரைத்து, சந்தேக நிவர்த்தி செய்து, தெளிவாக்கிக் கொள்ளக் கூட முடியாத சூழலில் இருந்து சுதந்திரமாக எல்லோருக்கும் எல்லாவற்றையும் அள்ளித் தரும் அளவில்லா தகவல் கிடைக்கும் காலத்தில் வாழும் நாம் – கொடுத்து வைத்தவர்கள்.

அதற்கு முன்பே இவற்றையெல்லாம் தமிழிசையில் பாமரனுக்கும் கொண்டு சென்ற பாவலர் ராஜா ஆளுமையைப் புரிந்தவர்கள் பாக்கியசாலிகள்.

IPL, LPL, LTTE, IPKF – T20 and Team Names

பத்து வயதிருக்கும். வீட்டில் எதையும் படிக்கும் சுதந்திரம். அந்த அட்டை கிழிக்கப்பட்ட நூல் வாசிக்கக் கிடைத்தது. ரஜினியின் படமான ‘தர்ம் யுத்தம்’ போல் அந்த 1983 கொலைகாரர்கள், கறுப்பு ஜூலை அராஜகவாதிகள் எல்லோரையும் தீர்த்துக் கட்ட எவராவது பிறக்க மாட்டார்களாக என மனம் துடிதுடிக்க வைத்த புத்தகம். கற்பனையில் பல்வேறு சண்டைகளை எண்ணிப் பார்த்து சமாதானம் அடைவேன்.

இன்றைய காலகட்டத்தில் இலங்கை பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் நடத்துகிறது. அதற்கான அணிகளின் பெயர்களில் இயக்கங்களின் பெயரைப் போட்டால் எப்படி இருக்கும்!?

இலங்கையில் இருக்கும் தமிழருக்கான சுதந்திரப் போராட்ட வரலாற்றில் பல நிலைகளில் பல்வேறு காலகட்டங்களில் இயக்கங்கள் செயல்பட்டன. ஈழ இயக்கங்களில் புகழ்பெற்றவற்றின் பெயர்கள் (அகரவரிசைப்படி):

1. ஈழ தேசிய விடுதலை முன்னணி (ஈ.என்.டி.எல்.எஃப். – Eelam National Democratic Liberation Front (ENDLF))
2. ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி) (Eelam People Democratic Party (EPDP))
3. ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனி (ஈ.பிஆர்.எல்.எஃப். – Eelam People’s Revolutionary Liberation Front (EPRLF))
4. ஈழ புரட்சிகர மாணவர் இயக்கம் (ஈரோஸ் – Eelam Revolutionary Organization of Students (EROS) – ஈ.ஆர்.ஓ.எஸ்.)
5. தமிழீழ விடுதலைப் புலிகள் (எல்.டி.டி.ஈ – Liberation Tigers of Tamil Eelam (LTTE) – எல்.ரி.ரி.ஈ.)
6. தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (ப்ளாட் (அ) புளொட் – People’s Liberation Organization of Tamil Eelam (PLOTE) – பி.எல்.ஒ.டி.ஈ.)
7. தமிழீழ விடுதலை இயக்கம் (டெலொ (அ) ரெலா – Tamil Eelam Liberation Organization (TELO) – டெலோ)
8. தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகள் (டி.எம்.வி.பி. – Tamileela Makkal Viduthalai Pulikal (TMVP))
9. தமிழர் விடுதலைக் கூட்டணி (அரசியல் கட்சி) (டுல்ஃப் (அ) ரி.யு.எல்.எப் – Tamil United Liberation Front (TULF) – டி.யு. எல்.எஃப்)

இலங்கை ப்ரீமியர் லீக் எல்.பி.எல் டி20 அணிகளின் பெயர்கள்:

1. Colombo Strikers – கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் என்பதற்கு பதில்: கொழும்பு கொமாண்டோக்க‌ள்
2. Dambulla Aura – டம்புல்லா ஆரா என்பதற்கு பதில்: தம்புள்ளை துள்ளர்கள்
3. Galle Titans – கேலே டைட்டன்ஸ் என்பதற்கு பதில்: கல்லே கெரில்லாக்கள்
4. Jaffna Kings – ஜாஃப்னா கிங்ஸ் என்பதற்கு பதில்: யாழ்ப்பாண புலிகள்
5. B-Love Kandy – கண்டி பி-லவ் என்பதற்கு பதில்: கண்டி கழுகுகள்

இன்னும் ஆர்வமாக இலங்கை டிவெண்டி 20 பார்ப்போமோ?

இடஞ்செல்லுகையும் வலம்படுதலும்

நம்ம சாமிகளில் எவரெவர் எந்தக் கையை பெரிதும் பயன்படுத்துகிறார்?

ராஜா ரவி வர்மா போன்ற பெரும்பாலான ஓவியர்கள் வலக்கை பழக்கம் கொண்டவர்களாக இருக்கலாம். ஹிந்து மதத்திலும் சோற்றாங்கை, பீச்சாங்கை என்று வகைப்படுத்தியதால் அனைத்து தெய்வங்களின் ஆயுதங்களும் கருவிகளும் வலப்பக்கத்துக் கைக்கே தரப்படுகிறது. ஒரட்டாங்கையில் கபாலமும் கமண்டலமும் கிடைக்கிறது.

முதலில் எளிதாகக் கண்டுபிடிக்கக் கூடிய இராமர். வலக்கையை ஆதிக்கமாக கொண்டவர். அதனால்தான் இடது தோளின் மேல் அம்பை வைத்திருக்கிறார். அம்பறாத்துணியை வலது தோளின் மீது வலது கைக்கு வாகாக வைத்திருக்கிறார்.

அவரின் எல்லாமுமான அனுமார் – வலதுகையில் கதை. இடது கையில் சஞ்சீவி மலையைத் தூக்கி இருக்கிறார். குரங்கிற்கு இடது, வலது என்றெல்லாம் பாகுபாடு உண்டா! இரண்டும் சரிசமமாக பலம் வாய்ந்தவை. எது இவருடைய ஆதிக்க கையாக இருக்கும்?

ராமரைப் போலவே அய்யப்பன். அதே போல் வில்லையும் அமபுகளையும் வைத்திருக்கிறார்.

ராமர் என்றால் கிருஷ்ணரைச் சொல்ல வேண்டும். சக்கரம் இவரையும் வலதுகையர் ஆக்குகிறது. புல்லாங்குழலை அடுப்பூத மட்டுமே நேரடியாக ஃபிடில் போல் ஊதியதால், வேணுநாதனின் பிடி பிடிபடவில்லை.

அடுத்ததாக சரஸ்வதி. கையில் இருக்கும் வீணையோ, கிடாரோ, தம்பூராவோ – வலதுகைக்காரி ஆக்குகிறது.

முருகரும் கோவணாண்டியாக இருந்தாலும் வலது கையிலேயே வேலைத் தாங்கி இருக்கிறார்.

எல்லாவற்றுக்கும் துவக்கத்தில் இவரைச் சொல்லி இருக்க வேண்டும். ஏழாவதாக விநாயகர். வியாசர் சொல்லச் சொல்ல வலது கையால் பாரதத்தை தந்தத்தை உடைத்து எழுதியவர். மோதகம் சாப்பிடுவதற்கு தனியாகத் தும்பிக்கையை கொண்டவர்.

இரண்டு கையும் உபயோகிப்பவர் என்றால் லஷ்மியைச் சொல்லலாம். இரு கையிலும் தாமரை வைத்திருக்கிறார். தங்கப் பொக்கிஷ குடத்தை இடது கையில் வைத்திருக்கிறார். வலக்கை பழக்கம் உள்ளவர்கள் இடக்கையிலேயே பளுவைத் தூக்குவார்கள் என்பதால் இவ்வாறு இருக்கும்.

இவர்களைப் போலவே சிவனும் திரிசூலத்தை வலது கையிலும் தாங்குகிறார். இடக்கையிலும் சில சமயம் கொண்டிருக்கிறார். கால் மாறி ஆடியவர் ஆயிற்றே!

பத்தாவதாக பத்ரகாளி, துர்காதேவி – இவரும் ambidextrous.

எந்தக் கையாக இருந்தால் கை இருந்தால் சரி என்றால் சைவம் எனலாம்.
வலது கை யே சிறந்தது என்றால் அனேகமாக வைணவம் எனலாமா?

இராசாளி – ஜெயிலர்

அமெரிக்காவின் தேசியப் பறவை கழுகு. அந்தக் கழுகைப் போலவே நாலைந்து போலிப் பறவைகள் உண்டு,

கழுகைப் போலவே உலா வரும். Prairie Falcon (Falco mexicanus), Red-Tailed Hawk (Buteo jamaicensis), Turkey Vultures (Cathartes aura), Black Kite (Milvus migrans) என நால்வரை உடனடியாக நினைவு கூறலாம். பருந்து, ராசாளி, கூளி, சுவணம் எனத் தமிழில் சொல்கிறார்கள்.

தூரத்தில் இருந்து பார்த்தால் எல்லாம் பெரிதாக இருக்கிறது. இறக்கையைப் பெரிதாக விரித்து பிரும்மாண்டமாகப் பறக்கிறது. கூகை குழறும் என்பார்கள்; கழுகு வீருடுகிறது என்பார்கள்; இரண்டும் முன்னே பின்னே கேட்காதவருக்கு அனைத்தும் கத்தல் சப்தம்.

உயரப் பறக்கும் கழுகிற்கும் இராஜாளிக்கும் என்ன வித்தியாசம் என்று இப்பொழுது ஏன் ஆராய வேண்டும்?

ஏன் என்றால், தலைவர் ஏதோ கழுகு, காகம் உவமேயம் சொல்லியிருக்கிறார் அல்லவா!?

கங்க பத்திரம் ஓர் கோடி கை விசைத்து அரக்கன் எய்தான்;
கங்க பத்திரம் ஓர் கோடி கணை தொடுத்து இளவல் காத்தான்;
திங்களின் பாதி கோடி, இலக்குவன் தெரிந்து விட்டான்
திங்களின் பாதி கோடி தொடுத்து, அவை அரக்கன் தீர்த்தான்.
6.18.109 (௧௦௯)

–கம்பராமாயணம், நாகபாசப் படலம்–இந்திரஜித், இலக்குவன் போர்.

பொருள்:– இநத்திரஜித், கழுகின்‌ சிறகுகளையுடைய அம்புகள்‌ ஒரு கோடியைக்‌ கைகளால்‌ தொடுத்து விரைந்து எய்தான்‌ ; இளவலாகிய இலக்ஷ்மணனும்‌ கழுகின்‌ சிறகுகளையுடைய ஒரு கோடி அம்புகளைத்‌ தொடுத்து அவ்வம்புகளைத்‌ தடுத்தான்‌ ; அரைச்சந்திரன்‌ போன்ற முகப்பினையுடைய கோடி அம்புகளை இலக்குவன்‌ ஆராய்ந்து இந்திரசித்தின்மேல்‌ விட்டான்‌ ; இந்திரசித்தும்‌ அரைச்சந்திர அம்புகளை கோடி தொடுத்து அவ்வம்புகளை அறுத்தான்‌.

குறிப்பு: – கங்கம்‌ – கழுகு. பத்திரம்‌ – சிறகு. கழுகின்‌ சிறகுகள்‌ பொருந்திய அம்புகள்‌ கங்கபத்திரம்‌ எனப்பட்டன. பாதிமதி போன்‌.ற முகப்பினை உடைய அம்புகள்‌ என்பார்‌, ’திங்களில்‌ பாதி’ என்றார்‌. இதுகாறும்‌ இந்திரசித்து விடுத்த அம்புகளை மட்டுமே அறுத்துக்‌ கொண்டிருந்த இலக்குவன்‌ இப்போது திங்களிற்‌ பாதியை ஒத்த அம்புகளை இந்திரசித்தின்மேல்‌ விடுத்தான்‌ என்றவாறு. தீர்த்தல்‌ – அழித்தல்‌.

விக்ரம் படத்தில் கமல் விதவிதமானத் துப்பாக்கிகளை வைத்து சுட்டுத் தள்ளுவார். அவருக்கு சளைக்காமல் ஜெயிலரில் ரஜினியும் ‘மனிதன்’ போல் ரகரகமாக குண்டு போடுகிறார்.

நடுவில் எதற்கு கம்பராமாயணம் என்று கேட்கிறீர்களா?

1993ல் ’கலைஞன்’ படத்தில் இந்திரஜித் என்னும் கதாபாத்திரத்தில் கலைஞானி நடிக்கிறார். அந்தக் கலைஞன் விக்ரமில் விட்ட அம்புகளை சமாளிக்க இளவல் ஜெயிலரில் எய்கிறார். இதைத்தான் அன்றே கம்பர் பாடியிருக்கிறார். அந்த கங்கபத்ரம் = பின் நுனியில் கழுகின் சிறகுகள் பொருத்தப்பட்ட அம்புகளை (பத்ரம் என்றால் சிறகு) இசை வெளியீட்டு விழாவில் குறிப்பால் உணர்த்துகிறார் இரஜினி.

அதெல்லாம் இருக்கட்டும்? படத்தை ரசித்தேனா? மீண்டும் மீண்டும் பார்க்க வைக்கிறதா? தமிழ் சினிமாவின் மைல் கல்லா? ரஜினியின் நடிப்பிற்கு சிகரமா? அடுத்த ஆர்.ஆர்.ஆர். மாதிரி ஆஸ்காருக்கு அனுப்பலாமா?

அகாடெமி விருதுகளில் புதியத் தலைப்பாக ‘செயற்கையாக தானியங்கியாக உருவாக்கிய உயிர் போன்ற இயக்கம் காட்டும் படங்களுக்கான விருது’ ஒன்றை வழங்கினால், அது நிச்சயம் ஜெயிலருக்குக் கிடைக்கும்!

ஆயக்கல் – Solvanam #300 Issue

சியாமந்தக மணியை உங்களுக்குத் தெரிந்திருக்கும், ஜய்ரொலைட் (Gyrolite, NaCa16(Si23Al)O60(OH)8·14H2O) தெரியுமா?

அருங்காட்சியகத்தில் பார்த்தேன். மஹாராஷ்டிராவின் தானே பகுதியில் பாறைகளுக்குள் தங்கமாக, மலையினுள் மறைந்து சுடர் விட்டுக் கொண்டிருக்கிறது.

இது போல் எத்தனை எத்தனை ஆளுமைகள்? இசை ஞானிகள்? எழுத்தாளர்கள்? பேராசிரியர்கள்? பேச்சாளர்கள்?

இவர்களின் சங்கீதத்திலும் புனைவிலும் படைப்பிலும் ஆய்விலும் சிந்தனையிலும் உரையாடலிலும் – அவற்றை மகோன்னதமான செயல்பாட்டில் செழுமையாக்கிய வித்தையையும் அறிந்து தெளிந்து கொள்ள அம்பையின் “துவாரம் மங்கத்தாயாரு” போன்ற சொல்வனம் கட்டுரை உதவுகிறது.

சொல்வனத்தின் இந்த முன்னூறாவது இதழிலும் நிறைய பேர் இவ்வாறான தெரிந்த, தெரியாத பெயர்களையும் சிறுகதையாசிரியர்களையும் நெடுங்கதைகளையும் அறிமுகம் செய்திருக்கிறார்கள்.

கமலராகம், பதுமராகம் போன்ற அருங்கல்லான ஜய்ரொலைட் கல்லின் பெயர் – ‘குரொஸ்’ என்னும் கிரேக்க வார்த்தையிலிருந்து பெறப்பட்டது. ‘குரொஸ்’ என்றால் முழுமை; வட்டத்தின் பரப்பு – பலம்.

சொல்வனத்தின் பலமே இந்த மாதிரி இரத்தினங்களை அறிமுகம் செய்து, அவர்களின் வாழ்க்கைப் பாதையை உணர்த்தி, ஊன்றுகோல் வழிகாட்டிகளை பரிச்சயப்படுத்தி, தேர்ந்தெடுத்த துறையில் சாதனையை விவரித்து – அவர்களைப் போல் அரிய காரியங்களுக்கு உங்களையும் கிரியா ஊக்கியாக இலட்சியங்களை அடையாளங்காட்டுவது

நான் இப்போதுதான் மே மாதம் வெளியான கட்டுரையே வாசிக்கிறேன். நீங்களாவது 300வது இதழின் ஆக்கங்களை உடனடியாக வாசித்து விடுங்கள்.

இதழ்-300 – சொல்வனம் | இதழ் 300|13 ஆகஸ்ட் 2023 (solvanam.com)

புதிய இதழில் கவனப்படுத்திய எந்தப் படைப்பாளியை நீங்கள் வாசித்திருக்கிறீர்கள்?
எவர்களைத் தவறவிட்டுவிட்டார்கள்?
எந்த கட்டுரைகள் விமர்சனங்களாக இல்லாமல் வெறும் அறிமுகமாக நின்று விட்டது?
அருமைகளையும் பாஷாணங்களையும் சொல்லவும்