ஏன்? உடனடியாகத் தோன்றிய எண்ணங்கள்:
- உருப்படியாகப் பேசுகிறார். வெற்று சவடால், புறக் கவர்ச்சி, பிரச்சார பூச்சு இல்லாமல், ஜாலமாக வாய்ப்பந்தலிடாமல் புள்ளிவிவரங்களுடன் ‘என்ன செய்யப் போகிறேன்?’ என்பதை பிட்டு வைக்கிறார் என்பதற்காக…
- அனுபவம். சபையறிந்து சமயோசிதமாக விவாதம் நடத்துதல், செனேட்டராக, முன்னாள் ஆளுநர் & ஜனாதிபதி க்ளின்டனின் மனைவியாக, பெண்களின் உள்ளக்கிடக்கைகளை அனுபவித்தவராக இருக்கிறார் என்பதற்காக…
- ஒபாமா என்பது மயிற்பீலிகளால் எழுப்பப்படும் மாளிகை. அன்றைய மோனிகா லூயின்ஸ்கி முதல் இன்றைய அயோவா சறுக்கல் போன்ற பல சம்பவங்களில் நெஞ்சுரத்துடன் எதிர்க்கட்சி தாக்குதல்களையும் அவதூறுகளையும் திறனாகத் தாங்கி, மக்களை தன் பக்கம் வசமாக்கக் கூடியவர் ஹில்லரி க்ளின்டன் என்பதற்காக…
- ஆளுமை. அழ வேண்டிய நேரத்தில் சிறிதாக நீர்த்துளி இறைத்து, புருஷனை கொம்பு சீவ வேண்டிய நேரத்தில் ஏவி, சொந்தப் பணத்தை கொடுக்க வேண்டிய நேரத்தில் தாரை வார்த்து, தலைமைப் பண்புகள் அனைத்தும் இயல்பாக வாய்க்கப்பெற்றவர் என்பதற்காக…
- வயது. ஒபாமாவிற்கு இன்னொரு வாய்ப்பு கிடைக்கக்கூடும். மீண்டும் ப்ரைமரி பந்தயத்தில் தம் கட்டலாம். இன்னொரு பெண் வேட்பாளர் கிடைக்கும் அறிகுறி எதுவும் இல்லாத இந்த சூழலில் 61 வயது நிறைந்த ஹில்லரிக்கு தூஸ்ரா வராமல் போகலாம் என்பதற்காக…
- அரசியல்வாதி. பொதுஜனத்துடன் இணைந்து பழகி நெஞ்சில் நிறுத்தி நெருங்க வைப்பது இயல்பாக எழும் சமூக ஆர்வத்தின் பங்கு என்றால், வெல்லவேண்டிய நேரத்தில் வெற்றிக்கான உபாயங்களை ட்ரம்ப் சீட்டாய் இறக்கி தேர்ந்த அரசியல் செய்யத் தெரிந்தவர் என்பதற்காக…
- ஆண்கள்தான் அலைபாயக் கூடியவர்கள்; பெண்கள் வாக்கு சிந்தாமல், சிதறாமல் வந்து சேரும். ஒபாமாவை துணை ஜனாதிபதிக்கு சேர்த்துக் கொள்ளாவிட்டால் கூட எப்படியும் ஆப்பிரிக்க-அமெரிக்கர்கள், குடியரசு கட்சி பக்கம் சுண்டுவிரல் கூட சாய்க்க மாட்டார்கள் என்பதற்காக…
- பண்பட்டவர். செனேட்டர் தேர்தலில் நின்றபோது, ‘இறுக்கமாக இருக்கிறார்’ என்னும் குற்றச்சாட்டு எழுந்தவுடன் அச்சங்களை உதறி வாக்காளர்களோடு இயைபாக பழகியவர்; க்ளின்டன் ஆட்சியில் நிறைவேற்ற முடியாத, ஆனால் காலப்போக்கில் அதைவிட மேம்பட்ட உடல்நலக் காப்பீட்டுத் திட்டங்களை முன்வைப்பவர்; இல்லத்தரசியலில் இருந்து இரும்புக் கோட்டை டி.சி. வரை கண்டுணர்ந்து சாதாரணர்களின் அன்றாட வாழ்க்கையை அனுபவித்தவர் என்பதற்காக…
- முன்னணி வேட்பாளர். பில் ரிச்சர்ட்சன் போன்ற அடக்கம் இருந்தால் மட்டும் போதாது; சகா ஜோசெப் பிடன் போன்ற அயல் அனுபவம் இருந்தால் மட்டும் பத்தாது. க்ளின்டன் என்னும் The Distinguished Gentleman போன்ற புகழ்பெற்ற பெயர் பெற்று வாஷிங்டனில் மாற்றத்தைக் கொணரக் கூடியவர் என்பதற்காக…
ஹில்லரி க்ளின்டன் வேண்டும்.
தொடர்புடைய இடுகை: ஒபாமா வெல்லட்டும் – வெங்கட்












