ஊடக வன்முறைகளும், அபத்த நாடகங்களும்


சன் டிவியில் இப்போது தான் பார்த்தேன். “ஞாபகம் வருதே” படப்பாடலின் பிண்ணணியில் அ.தி.மு.க ஆட்சியில் நிகழ்த்தப்பட்டதாக சொல்லப்படும் அவலங்களை (கொல்றாங்க! கொல்றாங்க என்ற அற்புதமான வீடியோ ;)) கோர்வையாக்கி 15 நிமிடங்களுக்கு ஒரு முறை ஒளிபரப்புகிறார்கள். வெள்ளம் வந்த போது, அதிமுக அரசும், ஜெயலலிதாவும் ஒவ்வொரு வீட்டிற்கும் போயிருக்க வேண்டும் என்கிற தொனியினை விட மோசமாக சித்தரிக்கப்பட்டிருக்கும் தொகுப்பு இது. இது போன்ற ஊடக அசிங்கத்தினையும், அத்து மீறலையும் எந்த மாநிலத்திலும் காண இயலாது.

ஜெயா டிவியில் சோ.ராமசாமி, கருணாநிதியும், தி.மு.க கூட்டணியும், குடும்ப அரசியலையும் பற்றி பேசிக் கொண்டு இருக்கிறார். 1 இலட்சம் குடும்பங்கள் நடுத்தெருவில் கொண்டு வந்து நிற்கவைக்கப்பட்டதை மூச்சு விடவில்லை. தீவிரவாதத்தினை அடக்கல் என்கிற பாராட்டில், வை.கோவின் விடுதலைப்புலிகளின் ஆதரவினை ஒரெயடியாக கொல்கிறார். சோ பேசுவது அபத்த நகைச்சுவை வகையறா.

இது போக பத்ரி சொன்னது போல மிக மோசமாக எடிட் செய்யப்பட்ட விஜயகாந்தின் பிரச்சாரம், மூன்றாம்தர போர்னோ விடியோவினை விட மோசமாக இருக்கிறது. இதில் விவசாயிகளின் ஒரே சின்னம் என்று பேச்சு வேறு. இவர்கள் காவிரி பிரச்சனைக்காக போராடியதாக சொல்லி, நெய்வேலி சென்று அங்கே நடிகைகளையும், நடிகர்களையும் காட்டி விட்டு, போராடுவதாக சொல்லிவிட்டு, எஸ்கேப் ஆன கதையினை இன்னமும் தமிழக மக்கள் நினைவில் வைத்திருக்கிறார்கள் என்பதை “கேப்டன்” மனதில் நிறுத்துவது நல்லது.

இது தாண்டி, இன்றைய வணக்கம் தமிழகத்தில் இயக்குநர் சீமான் ஏன் கருணாநிதி தலைமையில் ஆட்சி அமைய வேண்டும் என்றும், சரத், வை.கோ பற்றியும் அளந்து கொண்டிருந்தார். சீமான் அவர்களே, 100 தமிழறிஞர்கள் வள்ளுவர் கோட்டத்தில் தமிழ்மொழிக்காக உண்ணாவிரதம் இருந்த போது, இதே கலைஞர் ஆட்சி தான் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. சீமான் ஒதுக்கி வைக்கும் வை.கோவும், திருமாவும் தான் கருணாநிதி வாய் மூடி பல பிரச்சனைகளில் இருந்த போது பேசியவர்கள். இன்றைக்கு தலித் ஒட்டு வங்கி அதிமுக பக்கம் சாய்ந்திருத்திகிறது என்றவுடன், பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் ஒரே தலைவர் கருணாநிதி என்று முன்னிறுத்துகிறீர்கள், எச்சில் இலை சோறு வேண்டாம் என்று திருமா சொன்ன போது எங்கே போனது இந்த ரோஷம்.

ஆக ஒரு முழுமையான அபத்த நகைச்சுவை பெருநாடகம் தமிழகமெங்கும் நடந்தேறிக் கொண்டிருக்கிறது. அறிக்கைகள், ஊர்வலங்கள், கோஷங்கள், பேச்சுகள் பார்க்கும் போது ஊடி ஆலனின் பல படங்கள் நினைவுக்கு வருகின்றன. All the world is stage and everybody is an actor. ஷேக்ஸ்பியர் வாழ்க!

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.