Tag Archives: New Yorker

முப்பது வயதுக்குள் மிகுந்த ஏமாற்றம் அளித்த 25 சென்னை மக்கள்

சாட்ஜிபிட் உதவியுடன்: “New Yorker satire” பாணியை வைத்து, மிகவும் ஏமாற்றமளித்த சென்னை இளம் தலைமுறை 25 பேர்” என்ற தமிழ் பதிப்பு — அதே சிரிப்பும், நுணுக்கமான சாடலும், சென்னையின் வாசனையுடன் 👇

1. பாலா கிருஷ்ணன், 28

“டெக் கல்சர் நல்லா இருக்கு”னு சொல்லி பெங்களூரு போறேன்‌ன்னு சொன்னார். இன்னும் வேளச்சேரி ட்ராஃபிக்குல்தான் “ரிமோட் லைஃப் ரொம்ப சாந்தமா இருக்கு”னு ட்வீட்டிட்டு இருக்கார்.

2. திவ்யா நாராயணன், 25

லாக்டவுன்ல வீட்டிலேயே கேக் விற்க ஆரம்பிச்சாங்க. இப்போ இன்ஸ்டாகிராமுக்காக மட்டும் பேக் பண்ணுறாங்க.

3. அஷ்வின் ராஜ், 24

“ஸ்டார்ட்அப் ஐடியா”ல வேலை செய்றேன்‌ன்னு சொல்றார். அந்த “ஐடியா” ஒரே கூகிள் ஷீட் தான்.

4. கீர்த்தனா சுப்ரமணி, 26

“நமஸ்தே”னு டாட்டூ போட்டாங்க. அது Comic Sans ஃபாண்ட்ல இருக்குது.

5. பிரவீன் ஐயர், 27

“ஃபிட்னஸ் இன்ஃப்ளூயன்சர்”ன்னு சொல்றார். Anytime Fitness (தி.நகர்) ஜிம்முல மிரர் செல்ஃபி தான் போஸ்ட் பண்ணுறார்.

6. ஸ்ருதி ரமேஷ், 23

பயோல “இன்டிபெண்டன்ட் ஆர்டிஸ்ட்”னு எழுதுறாங்க. ஆறு மாதத்துக்கு ஒரே முறை மெரினா ஓப்பன் மைக் கலந்துகொல்றாங்க.

7. ஆகாஷ் ஸ்ரீனிவாசன், 29

மூணு நாள் வீகன் ஆனார். இப்ப எல்லா பார்ட்டியிலயும் ந்யூட்ரிஷன் அட்வைஸ் தர்றார்.

8. மீனா கிரிஷ், 25

“UX designer”ன்னு சொல்லிக்கிட்டு இருக்காங்க. Pongalக்கு அப்புறம் Figma ஓப்பன் பண்ணவே இல்ல.

9. ஹரிஷ் குமார், 28

சென்னை கோவில்கள் பற்றிய “ஹெரிடேஜ் வ்லாக்” ஆரம்பிச்சார். இரண்டாவது எபிசோடுக்கு முன்னாடியே நிறுத்திட்டார் — “எடிட்டிங் ரொம்ப ஸ்பிரிட்சுவல் ஆச்சு”னு சொன்னார்.

10. சாந்த்யா அருள், 24

பாண்டிச்சேரில 10 நாள் சைலன்ட் ரிட்ரீட் சென்றார். அதைப் பற்றி அடுத்த ஆறு மாதம் சத்தமா பேசினார்.

11. அஜய் வரதன், 27

IIT கலாசார நிகழ்ச்சிகளில் கிட்டார் வாசிப்பார். “ஆல்பம் வருது”ன்னு மூன்று வருடமா சொல்லிக்கிட்டே இருக்கார்.

12. தீபிகா ராமன், 25

HR-ல வேலை. “My passion is people”ன்னு சொல்றாங்க. எல்லா ஈமெயிலிலும் “dear”னு தொடங்கும்.

13. சுரேஷ் மேனன், 26

ஐடி வேலையை விட்டுட்டு ஸ்டாண்ட் அப் காமெடியன் ஆனார். பெரும்பாலும் உறவினரின் கல்யாணங்களில் தான் “பெர்ஃபார்ம்ஸ்.”

14. ப்ரீதி சந்திரன், 28

“சஸ்டெயினபிள் ஃபேஷன் லேபல்” ஆரம்பிச்சாங்க. டிசைன்ஸ்: “upcycled vibes.”

15. நவீன் ராஜ், 29

2011லிருந்து ஒரு CSK மேட்ச் கூட தவறவிட்டதில்ல. “தோனியிடமிருந்து லைஃப் கைடன்ஸ் தேவை”னு இன்னும் சொல்லிக்கிட்டே இருக்கார்.

16. ஹரிணி மோகன், 24

Chai and Chillன்னு பாட்காஸ்ட் ஆரம்பிச்சாங்க. கடைசியாக வெளியான எபிசோடு – 2022.

17. கார்த்திக் சுப்பு, 27

LinkedIn-ல “எப்படி தோல்வியை ஏற்க கற்றுக்கொண்டேன்”ன்னு போஸ்ட் போட்டார். 12 லைக்ஸ் — அதிலும் 10 பேரு கல்லூரி ஃப்ரெண்ட்ஸ்.

18. நந்தினி ஐயர், 25

மனோதத்துவம் படிச்சாங்க. இப்போ இன்ஸ்டாகிராம்ல “inner child healing with semiya payasam”னு ரீல்ஸ் பண்ணுறாங்க.

19. அரவிந்த் ஆர், 29

“டிஜிட்டல் மார்க்கெட்டிங் ஏஜென்சி” ஆரம்பிச்சார். ஒரே கிளையன்ட் — அவங்க சொந்த ஸ்டார்ட்அப்.

20. பிரியா டி, 26

அடையார கஃபேகளில் புகைப்படம் எடுத்து “Work mode ☕✨”னு கேப்ஷன் போடுறாங்க.

21. மனோஜ் பாலாஜி, 23

“ஃப்ரீலான்ஸ் ஃபிலிம் மேக்கர்”ன்னு சொல்றார். அவங்க ஃபிலிம் நீளம் — 57 விநாடி.

22. வித்யா கிருஷ்ணன், 27

“அமைதி வேணும்”னு சொல்லி OMR-க்கு குடிபோயிருந்தாங்க. இப்போ டெலிவரி ஸ்லோன்னு தினமும் புகார்.

23. சஞ்சய் தோமஸ், 25

தாடி வளர்த்துக்கிட்டு “டீப்” ஒன் லைனர்ஸ் எழுத ஆரம்பிச்சார். பயோவில் “Lost but learning.”

24. ஐஸ்வர்யா ஆர், 28

2019-ல நாவல் எழுத ஆரம்பிச்சாங்க. இன்னும் Chapter 1: Prologue (Draft 7).

25. கோகுல் கிரிஷ், 26

“AI தான் ஃப்யூச்சர்”ன்னு சொல்றார். “AI”னு என்னன்னு கேட்டா “அதான் ChatGPT மாதிரி”னு சொல்லி விலகிடுறார்.

—-

நான் தெரிந்தது!

நீங்கள் தெரிகிறீர்களா?

போக்குவாக்கு

சென்ற சில இதழ்களாக சொல்வனம் வழக்கமான பிரசுர நாட்களில் பிரசுரமாகவில்லை. இந்த இதழும் (307) தாமதமாக இன்று பிரசுரமாகியது.

அடுத்த இதழ் (308) டிசம்பர் 17 ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை அன்று பிரசுரமாகும்.

இதழ் எண் 309 டிசம்பர் 31, 2023, மாதத்தின் ஐந்தாம் ஞாயிறன்று பிரசுரமாகும். 2024 இலிருந்து வழக்கமான இரண்டாம் ஞாயிறு மற்றும் நான்காம் ஞாயிறுகளில் இதழ்கள் பிரசுரமாகும்.

நவம்பர் 27ஆம் தேதியிட்ட ‘தி நியு யார்க்கர்’ – தனிப்பட்ட வரலாறு (Personal History) என்னும் தலைப்பில் பல ஆக்கங்களை வெளியிட்டுள்ளது.

சொல்வனம் தளத்திலும் அவ்வாறு ஒவ்வொரு இதழுக்கும் ஒரு குவிமையம் இருக்கவேண்டும்.

உங்களுக்கு மட்டுமே உரித்தான பிரத்தியேகமான அடிப்பாடுகளை எழுதி அனுப்புங்களேன்.

அப்படியே அடுத்தடுத்த இதழ்களுக்கான தலைப்புகளையும் பரிந்துரையுங்களேன்.

solvanam.editor@gmail.com

அஞ்சனி

நல்ல சிறுகதை என்பது நல்ல நாவலைப் போல. முழு வாழ்க்கையையும் உணர்த்தும்.

நியு யார்க்கரில் லாரா (Lara Vapnyar) எழுதிய Siberian Wood அந்த ரகம்.

கதை எதைப் பற்றியது?

அ) திருமணம்; விவாகரத்து; மறுமணம் என்னும் சுழற்சியில் எவ்வாறு சிக்குகிறார்கள்?

I was too focussed on the struggles of motherhood at that age to see the magnitude of suffering that childlessness could cause. I’d spend hours discussing with other young mothers how tied down we felt. It was so much easier to list the hardships of having a child than to pinpoint the things that made it worthwhile. What was it that made it worthwhile, anyway? It was not about being fulfilled, no, though it was about being full—full of care, full of worry, full of affection, full of a love so great and pressing that it was almost indistinguishable from pain, full of something heavy and real that made you feel grounded, rather than weightless. You felt more there. That was precisely what Daria desperately wanted—to feel rooted, securely tied down.

ஆ) அமெரிக்காவில் குடிபுகுவதற்காக காதல் பாவ்லா கல்யாணம் செய்யும் வந்தேறி நிலைமை என்ன?

He was in awe of New York City—the streets, the buildings, the traffic, the people, the energy, the art! The Met was just stunning, especially the wooden sculptures made by the Asmat people. They were breathtakingly complex—it was as if tree roots were growing out of a person’s body, connecting her to her ancestors, who had roots growing out of their bodies, too, connecting them to the deeper past, and it went on and on. It was a brilliant way to show continuity of life, to hint at immortality.

இ) எல்லோருக்கும் பிடித்தமாக இருக்கும் டாரியா (Daria), குழந்தையைப் போன்ற பேரெல்லை இலட்சியக் கனவாக, எவ்வாறு எல்லாவற்றிலும் முழுமையை எதிர்பார்த்து நிராசையை எதிர்கொள்கிறாள்?

Mark thought that there was something silly and artificial about Daria’s fantasies. As if she had no idea what a family was or how it operated but took her clues from children’s picture books.

ஈ) நெகிழ்ந்து வளையும் நாணலையும் நெடிந்து தனித்து நிற்கும் பனை மரத்தையும் கடற்கரையில் பார்ப்போம். வாழ்வில் இணைத்தால்?

She was vegetarian and knew her way around vegetables, often using ingredients that Mark hadn’t even heard of, like kohlrabi or Japanese turnips or chicory.

உ) நிச்சயமின்மையை எண்ணிப் பார்த்து விளையும் பயங்களைக் கண்டு அஞ்சி நடுங்கி எலிவளையத்துக்குள் சிக்குறுகிறோமா? அடுத்த வேளை எங்கு இருப்போம், மற்றவர்கள் என்ன நினைப்பார்கள், இன்னொருவருடன் ஓப்பிடாமல் — இலக்கை அடைய உயரப் பறக்கும் பட்டாம்பூச்சியாக பறந்து திரியலாமா?

There was a photo of Daria in the middle of a sea of volcanic ash, kneeling over a puny tree. She had her head cocked to one side, and her self-conscious smile suggested that she knew some people might find her endeavor ridiculous, like that of a child “planting” a stick in the sand. And yet she was doing it anyway. There was something inspiring in her insistence on continuing to try when most people would have given up, in her ability to preserve hope, no matter how absurd it was.

வாரயிறுதி விருந்தில் கதை ஆரம்பிக்கிறது. அந்த சந்திப்பில் நமக்கு கதாமாந்தர்கள் அறிமுகம் ஆகிறார்கள்.

துள்ளலான துவக்கம். தொடர்ந்து வாசிக்க வைக்கும் ஆர்வம். நடுநடுவே அருங்காட்சியக விமர்சனம்; கலையரங்க நையாண்டி; பலான விஷயம்; சுவையான தகவல் சரடு. எல்லாவற்றையும் விட சம்பவங்களினால் கோர்க்கும் லாவகம். இருபதாண்டு கால விஷயங்களை பத்து பக்கங்களில் பசுமையாகத் தரும் சாமர்த்தியம்.

தமிழ்ச் சிறுகதைகளோடு ஒப்பிடாமல் இருக்க முடியவில்லை.

நீதி போதனை இல்லை. “இது மட்டுமே சரி!” என்னும் தீர்ப்புகள் இல்லை. வட்டார வழக்கு ஜாலங்கள் இல்லை. கேள்விகளை எழுப்பி, பக்கத்து வீட்டு மனிதர்களை உணர்த்தி, உக்ரெயின் – ரஷியா போரையும் நினைவிற்குக் கொணர்ந்து, நீண்ட நாள் நினைவில் தங்கும் குணச்சித்திரங்களை சிந்தையில் தேக்கும் ஆக்கம்.

கச்சிதம்.

கொஞ்சம் இடைவெளி: கொரோனா கதைகள்

முதலில் கதையைப் படித்து விடுங்கள்:

https://www.newyorker.com/magazine/2020/03/23/out-there

“Out There,” by Kate Folk | The New Yorker: Fiction by Kate Folk: “The early blots had been easy to identify. They were too handsome, for one thing.”

ப்ளாட் என்பது என்ன? பாட் போல் அதுவும் கணினியில் மட்டும் இயங்குவது.

நம் துணைவர் எப்படி இருக்க வேண்டும்? என்னுடைய விஷயத்தில் அக்கறை எடுப்பார். தும்மினால், இருமினால் என்னாச்சு என்பார். எவனாவது இணையத்தில் தாக்கினால் குரல் கொடுப்பார். நான் செய்யும் அச்சுபிச்சுகளைப் பொறுப்பார். ப்ரூ காபி விளம்பரம் போல் எதிர்பாராததை செய்வார். வெறுமனே காமத்திற்கு மட்டும் என்னை உபயோகிக்க மாட்டார்.

மாடு பிடிப்பது போல் ஆணைத் தேடும் சமூகம். சந்தை போல் குவிந்திருக்கிறார்கள். அதில் பாதி பேர் போலி. கொஞ்ச காலம் துணையாக நடிப்பார்கள். பார்ப்பதற்கு கவர்ச்சியாக இருப்பவர்கள் சட்டென்று இன்னொரு பெண்ணின் பின் சென்று விடுகிறார்கள். கரிசனத்துடன் விசாரிப்பவர்கள் பின்னொரு நோக்கத்தோடு வேறொரு பாதையில் போய் விடுகிறார்கள்.

இந்த நிலைமையில் எப்படி பொருத்தம் பார்ப்பது? யோனி, ரஜ்ஜு எல்லாம் போதுமா? பழக வேண்டும். ஆணின் உண்மையான குணாதிசயம் தெரிய வேண்டும். அந்தரங்கம் வெளிப்பட வேண்டும். ஆத்மார்த்தமான அன்பு உணரப்பட வேண்டும்.

இதைத் தற்காலத்திற்கேற்ப இந்தக் கதை சொல்கிறது.

கதாநாயகிக்கு நிறைய பிரச்சினைகள். முன்னாள் குடிப்பழக்கம்; தனிமை; அனாதரவாக விட்ட தந்தை; புதிய நகர வாசம்.

இருந்தாலும் நாயகி உயர்வாக உணர்கிறாள். சத்தான பழரசம்; பாவப்பட்ட ஜென்மம்; வஞ்சிக்கப்பட்டவள்.

This piece has some things in common with the recent one in The New Yorker, “Kid Positive” by Adam Levin (interrogation of our backstories, notions of real vs. fake and where the lines blur), as well as Elvia Wilk’s 2019 novel Oval, Ishiguro’s neo-classic Never Let Me Go, Jonathan Lethem’s novel from a few years back A Gambler’s Anatomy, and the stories of Aimee Bender (நன்றி: Kate Folk: “Out There” – The Mookse and the Gripes)

இயந்திரத்தனமாக நடப்பதை விரும்பாதவரின் கதை இது. நாயகியும் எந்திரத்தனமாகும் கதை இது. வேண்டுவதை செய்யும் கணவனை எதிர்பார்க்கிறோம். எப்போதும் ஒரே மாதிரி செயல்படும் புருஷனை எதிர்பார்க்கிறோம். இது சலிப்பூட்டும். எது வேண்டுகிறோமோ, அதுவே கிடைத்துவிட்டால், இடைவெளியை கோருகிறோம்.

மேலும்…

Kate Folk on Discerning Reality on the Internet | The New Yorker: The author discusses “Out There,” her story from this week’s issue of the magazine.

தெளிவு + துல்லியம் + கொஞ்சம் உல்லாசம் = நியு யார்க்கர்

நூலின் பெயர்: Cast of Characters: Wolcott Gibbs, E. B. White, James Thurber, and the Golden Age of the New Yorker
எழுதியவர்: Thomas Vinciguerra

வெளியான தேதி: நவம்பர் 9, 2015
ISBN: 978-0393240030
பக்கங்கள்: 464
பதிப்பாளர்: நார்டன்

Cast-of-Characters

பத்திரிகையில் என்ன எழுதினார்கள் என்பதை விட, பத்திரிகையை யார் நடத்துகிறார்கள் என்பதில் எப்போதுமே எனக்கு ஆர்வம் அதிகம். ஆனந்த விகடனில் நடந்த பிணக்குகள் காரணமாக கல்கி தனியாக வாராந்தரி துவங்கியது எல்லாம் ரொம்பவே பிற்பாடுதான் தெரிய வந்தது. அதற்கு முன்பாகவே சாவி பத்திரிகையும் இதயம் பேசுகிறது மணியனும் விகடனில் இருந்துதான் கிளை பரப்பினார்கள் என்பதில் இந்த என்னுடைய வம்பார்வம் துவங்கியிருக்க வேண்டும். நிஜத்தில் முதன் முதலில் ஆர்வத்தைத் தூண்டியது ‘அரசு பதில்கள்’ எனப்படும் குமுதத்தின் மும்மூர்த்திகள் – எஸ்.எ.பி. அண்ணாமலை, ரா.கி. ரங்கராஜன், துமிலன், புனிதன், ஜ.ரா.சுந்தரேசன் – சமயத்திற்கேற்றபடி மாறிக்கொண்டிருந்தார்கள்.

அவர்களைக் குறித்து உயிர்மைக் கட்டுரையில் பிரபஞ்சன் எழுதியது:

Prabanchan_brabhanjan-1அண்ணாமலை அரசர், வள்ளல் அழகப்பர் ஆகியோரின் குடும்பப் பின்னணியிலிருந்து வந்த ஒரு செட்டியார் குடும்பத்து இளைஞர், ஒரு ஐயங்கார் நண்பரைத் துணைக்கு வைத்துக்கொண்டு தொடங்கிய பத்திரிகையாக, நிலம் தோயாமல் அந்தரத்தில் நின்றது குமுதம்.

பள்ளி, கல்லூரிக் காலங்களில் வாசிப்பில் ஈடுபாடு கொண்ட அண்ணாமலை என்கிற இளைஞர், படிக்கும் பழக்கம் தந்த உற்சாகத்தில் கதைகள் எழுதத் தொடங்கி இருக்கிறார். அவர் கதையை அக்காலத்திய புகழ்பெற்ற எழுத்தாளரும் பத்திரிகையாளருமான நாரண துரைக்கண்ணன் (ஜீவா), தன் பத்திரிகையில் பிரசுரம் செய்திருக்கிறார். எம்.எ.பி.எல். படித்த, பணக்காரக் குடும்ப இளைஞர், இன்னொரு முதலாளியிடம் சென்று பணியாற்றிச் சம்பளம் பெற விருப்பம் இன்றி, வள்ளல் அழகப்ப செட்டியார் துணையோடு தானே பத்திரிகை தொடங்கிச் சொந்த வியாபாரியாகவும், முதலாளியும் ஆனார், எஸ்.ஏ.பி. அண்ணாமலை என்கிற இளைஞர். கல்லூரி நண்பராக இருந்த கூரிய மூளையும் உழைப்பும் மிகுந்த பார்த்தசாரதியைப் பிரசுரிப்பாளராகக் கொண்டு குமுதத்தைத் தொடங்கினார் எஸ்.ஏ.பி.

Kumudam_Arasu_Parthasarathy_Jawahar_Palaniappan_Sundaresan_Pundihan_PRABANJAN

இன்னொரு கட்டுரை – பகவத் கீதை பாடமும் பலான படங்களும்

SAP_Annamalai_Kumudham_Kumudam_Kumuthamஆசிரியர் அறைக்கு அடுத்த அறை துணை ஆசிரியர்களுடையது. வலது பக்கத்தில் நுழைவாயிலையொட்டி முதல் இருக்கை சண்முக சுந்தரத்துடையது. அடுத்த இருக்கை ஜ.ரா. சுந்தரேசனுடையது. இந்த இருக்கைகளுக்குப் பின் பலகைத் தடுப்புக்கு உள்ளே ரா.கி.ரங்கராஜன். சுந்தரேசனுக்குப் பக்கத்தில் என் இருக்கை.

சரியாகப் பத்து ஐந்துக்கு ஆசிரியர் வருகை புரிந்தார். கதவைத் திறந்துகொண்டு எட்டிப் பார்த்தார். நாங்கள் உள்ளே வரலாம் என்பதன் சமிக்ஞை அது. அறையின் உள்ளே நுழைவதையும் ஒரு ஒழுங்கோடு செய்ய நேர்ந்தது. முதலில் சீனியரான ரா.கி.ரங்கராஜன். அதன்பிறகு சின்ன சீனியரான சுந்தரேசன். அதன்பிறகு சின்னச் சின்ன சீனியரான சண்முக சுந்தரம். அதன்பிறகே படு சின்னப் புதுமுகமான நான். ஆசிரியர் இருக்கைக்குமுன் எங்கள் நாற்காலிகள். அதிலும் ஒரு ஒழுங்கு கடைப்பிடிக்கப்பட வேண்டும். முதல் நாற்காலி சீனியருடையது. அடுத்து அடுத்து உள் நுழைந்த வரிசைப்படி அமரவேண்டும். என் நாற்காலியில் நான் மட்டும் அமரலாம். ஒழுங்கு. ஒழுங்கு. ஒழுங்கு உயிரினும் மேலானது.

குமுதம் குறித்து இவ்வளவு பெரிய ஆலாபனை எதற்கு?

அமெரிக்கா வந்தபிற்கு அதே போல் உளம்கவர் கள்வனாக ‘நியு யார்க்கர்’ இதழ் அமைந்து இருந்திருந்தது. சின்ன வயதில் வெள்ளிக்கிழமைக்காகக் காத்திருந்தது போல், இங்கேயும் நியு யார்க்கர் இதழுக்காக காத்திருத்தலும், நூலகத்தில் கிடைத்தவுடன் எடுத்து வாசிப்பதும் சுகம் தந்தது. இசையைப் பற்றி வார்த்தையால் விளக்க முடியாது என்பார்கள். அது போல் நியு யார்க்கர் வாசிப்பனுபவர்த்தைச் சொல்லி புரியவைப்பதும் சற்றே சிரமமே.

தொடர்புள்ள பதிவு: Love The Music Of Coen Brothers Films? You Can Thank Carter Burwell : NPR — Unlike the Coens, Burwell says, Haynes loves to dig into the subtext and meaning of the music. “Not everyone, including musicians, is good at discussing music in verbal terms — but Todd is.” Burwell says. “He’s actually very good at listening to a piece of music and saying in words what that music is doing to the scene, or to the characters, or to the film.” For Carol, Burwell and Haynes agreed that even though the music was critical in communicating those unexpressed feelings and desires, less was more.

நியு யார்க்கர் நல்ல பத்திரிகைதான்… அது தெரிந்த விஷயம்தானே. அதற்கும் இந்தப் பதிவிற்கும், மேலே சொல்லப்பட்டிருக்கும் புத்தகத்திற்கும் என்ன தொடர்பு?

1925ல் நியு யார்க்கர் பிறக்கிறது. அன்று தொடங்கிய பாரம்பரியம் இன்றும் மிகச் சிறப்பாக செயல்படுகிறது. கொஞ்சம் கேலி, நிறைய விமர்சனம், ஆதாரம் சார்ந்த செய்திக் கட்டுரைகள், ஒவ்வொரு இதழுக்கும் முத்து முத்தாக ஒரேயொரு கதை, சற்றே சிலேடையாக இருந்தாலும் பஸ் டிக்கெட் பின்னாடி எழுதப்படும் காதல் பாக்கள் போல் இல்லாமல் நெஞ்சைத் துளைக்கும் கவிதைகள், நியு யார்க் நகர சங்கதிகள், அரசல் புரசலாகப் பேசப்படும் மாநகர வம்பு விஷயங்கள் என்று சுவாரசியமாகவும், ஆழமாகவும், கவன ஈர்ப்பைத் தக்க வைத்துக் கொண்டிருக்கின்றது. நியூ யார்க்கரில் இடம்பெற வேண்டும் என்பதற்காக தங்கள் படைப்புகளை அனுப்பிவிட்டு பல்கலைக்கழக பேராசிரியர்களும் புலிட்சர் பரிசு வென்றவர்களும் காத்திருக்கின்றனர்.

இப்பொழுது எச்.பி.ஓ.வில் வெளியாகும் ’வினைல்’ தொடரின் முதல் எபிசோடை ஹாலிவுட் இயக்குநர் மார்ட்டின் ஸ்கார்சிஸீ இயக்குகிறார். முதலில் துவங்கியவர்கள் எப்படி செய்கிறார்களோ, அதை அப்படியே பின் தொடரும் கலையை டிவி முதல் நியு யார்க்கர் வரை பின்பற்றுகிறார்கள். கால்கோள் இட்டவர்கள் செலுத்திய பாதையில் அடியெடுத்துச் செல்கிறார்கள். சொல்வனத்தில் ’மேற்கில் சின்னத்திரை’ கட்டுரையில் சத்தியமூர்த்தி இவ்வாறு சொல்கிறார்:

இந்தத் திரைக்கதையை இயக்குவதற்கான இயக்குனர்கள் தேர்வும் வித்தியாசமானது. முதல் எபிசோட் மட்டும், திரையுலகத்தின் பிரபலமான இயக்குனரை வைத்து இயக்குவார்கள். பிறகு அவர் பயன்படுத்திய அதே வழிமுறையை வைத்துகொண்டு, அதாவது காட்சி அமைப்பு, ஒளிப்பதிவுக் கோணங்கள், நடிக்கும் முறை ஆகியவற்றை பின்பற்றி வெவ்வேறு இயக்குனர்களை வைத்து இயக்குவார்கள். இந்த தொடர்களைப் பார்க்கும் போது எனக்கு ஏற்படும் பெரிய ஆச்சரியம் என்னவென்றால் இவற்றில் முதல் ஸீசனின் முதல் பகுதியில் இருந்து கடைசி ஸீசன், கடைசிக் காட்சி வரை ஒரே முறை, பாணி (Pattern) பயன்படுத்தப் படும். ஒரு சிறு மாற்றம் கூட இருக்காது.

அது போல் அன்று ஆரம்பித்து வைத்தவர்களின் வழிமுறையை நியு யார்க்கர் இன்றளவும் பயன்படுத்தி வருகிறது. துவக்கியவர்களின் பங்கு எவ்வாறு முக்கியம் என்பதை உணரவைக்கிறது. இந்தப் புத்தகம் நியு யார்க்கர் பத்திரிகையைத் துவக்கியவர்களின் வரலாறு. யார் ஆரம்பித்தார்கள், என்ன வழிமுறையைப் பின்பற்றினார்கள், எவ்வாறு எடிட்டிங் செய்தார்கள், எங்ஙனம் தரத்தை நிலைநாட்டினார்கள், எப்படியெல்லாம் பதில் போட்டு கட்டுரையாளர்களையும் படைப்பாளிகளையும் தட்டிக்கொடுத்து வேலை வாங்கினார்கள், எங்கே ஓய்வெடுத்தார்கள், எப்படி பணியில் மூழ்கினார்கள், எப்பொழுது வேறு புத்தகங்களை எழுதினார்கள், வேலையை விட்டு எப்போது விலகினார்கள் என்று சரித்திரத்தை சுவாரசியமாகச் சொல்கிறது.

நாலைந்து பேரைப் பற்றி, அதுவும் ஒரேயொரு வார இதழில் பணியாற்றிய ஆசிரியர் குழுவைப் பற்றி, எழுதிய புத்தகத்தை நான் ஏன் விரும்பி வாசித்தேன்?

சொல்வனம் ஆசிரியருக்கு என்னுடைய கட்டுரைகளைக் கொடுக்கும்போது அவர்களிடமிருந்து கறாரான பதில் வரும். பதாகை எடிட்டருக்கு என்னுடைய படைப்புகளைக் கொடுத்தால் கட் அண்ட் ரைட்டான ஆக்கபூர்வமான ஆலோசனைகளைத் தாங்கிய மறுமொழி மடல் வந்து சேரும். இது போன்ற பதிப்பாசிரியர் + பத்திரிகையாசிரியர் தொடர்புகள்தான் எனக்கு இந்தப் புத்தகத்தின் மீதான சுவாரசியத்தைக் கூட்டியது.

புத்தகத்திற்குள் செல்வதற்கு முன் நியு யார்க்கரின் 90 வருட பாரம்பரியத்தைப் பற்றி மட்டும் அறிந்து கொள்ள விரும்பினால், அவர்களின் இந்த சமீபத்தியப் பதிவுகள் உங்களுக்கு உதவும்:

  1. Ninety Years of The New Yorker – The New Yorker
  2. Out Loud: Ninety Years of The New Yorker – The New Yorker

இந்தப் புத்தகத்தில் இடம் பெற்றோர் யார்?

1. வால்காட் கிப்ஸ் (Wolcott Gibbs)

தியேட்டர் விமர்சகர்; நியு யார்க்கில் பிராட்வேயில் நடக்கும் இசை நாடகங்களை அறிமுகம் செய்து ஆராய்பவர். கடுமையான உழைப்பாளி. புனைகதை எழுத்தாளர். இரக்கமின்றி வெட்டித் தள்ளி, — வரும் விஷயங்களை நேர்த்தி ஆக்குபவர். குசும்பு பிடித்தவர். ஹெமிங்வே எழுதும் ஆர்ப்பாட்டங்களை ஜெயமோகன் தொப்பி, திலகம் என்று நக்கலடித்தது போல் இயல்பாக சுட்டுகிறார்.

’இந்தியா டுடே’ போல் இரண்டுங்கெட்டானாக அமெரிக்காவில் டைம் (Time) பத்திரிகை பல்லாண்டுகாலமாக வெளியாகிறது. செக்ஸ் கருத்துக் கணிப்பு, ரஜினி-50 சிறப்பிதழ் என்று வெகு தீவிரமாக இயங்கும் வாராந்தரி. அந்த இதழை நக்கலடித்து 1936ல் ‘நியு யார்க்கர்’ இதழொன்றைக் கொணர்கிறார். அதன் மூலம் காலாகலத்திற்கும் சாஸ்வதமான சிம்மாசனத்தில் ஏறுகிறார்.

New_Yorker_Time_Wolcott_Gibbs_Luce_Profile_Nov_28_1936_Backward_Run_Sentences

இவருடைய எடிட்டிங் கருத்துகள் பயமுறுத்துபவை. “இவ்வளவு தப்பும் தவறுமா எழுதித் தருவதற்கு பதில் உங்க வீட்டு குப்பைத் தொட்டியை சுத்தம் செய்யலாமே” என்னும் ரீதியில் கறாராக செயல்பட்டிருக்கிறார். அச்சுப்பிழைகள், தகவல்பிழைகள், ப்ரூஃப் பார்த்தல் என்று கர்மசிரத்தையாக செயல்பட்டவர். பள்ளியில் படிக்கும் மகன் எழுதும் தபால்களைக் கூட வெகு சீரியஸாக சரி பார்த்து, பிழை திருத்தி, எவ்வாறு தூய ஆங்கிலத்தில் இலக்கணச்சுத்தமாய் எழுதுவது என்று பதில் போட்டவர். (நிஜமாகவே… அதீதமாகச் சொல்லவில்லை)

ஒரு கட்டுரை ரொம்பவே வேலை வாங்குகிறது என்றால், பக்கத்தில் உள்ள ஹோட்டலில் ரூம் போடுகிறார் கிப்ஸ். அந்தக் கட்டுரையின் ஒவ்வொரு பக்கத்தையும் தரையில் பரப்புகிறார். ஒவ்வொரு பத்தியையும் கத்திரிக்கோலால் வெட்டுகிறார். இப்போது நூற்றுக்கணக்கான பத்திகளை கலைத்துப் போட்டு ஒவ்வொன்றாக ஒருங்கிணைக்கிறார். நடு நடுவே விடுபட்ட பத்திகளைக் குறித்து புதிய பக்கங்களில் தட்டச்சுகிறார். அதை ஆங்காங்கேக் கோர்க்கிறார். இப்போது அசல் ஆசிரியர் எழுதிய பத்திகளின் போதாமையும் தொடர்பின்மையும் தேவையான விளக்கங்களும் புலப்படுகிறது.

ஒரு உதாரணத்திற்கு டுல்ஸா பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியாகும் நிம்ராட் சஞ்சிகையை எவ்வாறு கோர்க்கிறார்கள் என்பதை நேற்று இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து இருந்தார்கள்:
Nimrod_Journal_Magazine_Print_Media_Publisher_Books_Magz_Layout_Papers

ஒரு வார்த்தை எங்காவது தவறான பொருளில் வந்தால் குடிமுழுகிப் போனதாகவேக் கருதுகிறார். “கொஞ்சம் தாமதமாக தவணையை செலுத்தினார் என்பது நேர்மையின்மையைக் குறிக்காதே?” என ஒரு கட்டுரையாளருக்கு வினா எழுப்புகிறார். “அதற்கு வறுமை என்று பெயர் என்றே நினைக்கிறேன்” எனக் குறிப்பிடுகிறார்.

2. ஹாரொல்டு ராஸ் (Harold Ross)

நியு யார்க்கரைத் துவக்கியவர்; மற்றவர்களிடமிருந்து வேலையைக் கறப்பதில் கெட்டி. கொண்ட பதிப்புக் கொள்கையில் இம்மியும் விட்டுக் கொடுக்காதவர். இவருடைய புகழ்பெற்ற மேற்கோள்: “நீ மேதையாக இல்லாமல் இருப்பதால்தான், நான் உன்னை வேலையை விட்டுத் தூக்குகிறேன்!”

What was at stake in the spat between Henry Luce and Harold Ross?

What was at stake in the spat between Henry Luce and Harold Ross?

எஸ்.ஏ.பி. (குமுதம் இதழின் முதலாளி அண்ணாமலை) போல் ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு விதமாக ராஸ் தெரிந்திருக்கிறார்.

’அறிமுகமான சில நிமிஷங்களிலேயே உங்களை இயல்பிற்குக் கொணர்ந்து நெருங்குபவர்’: ஹார்ப்போ மார்க்ஸ்
– ‘முகஞ்சுளிக்கவைக்கும் முட்டாள்தனம் கலந்து கொடுரமான வில்லத்தனமான செய்கைகளையும் நிகழ்த்துபவர்’: எட்மண்ட் வில்ஸன்
– ‘அன்பானவர்’: ஹாரியத் வால்டன்
– ’மற்றவர்களிடம் முழுமையாக அன்பு செலுத்த கஷ்டப்பட்டவர்’: ஏ. ஜே. லைபிளிங்
– ’விவேகம் ததும்பும் புத்திசாலி மனிதர்’: ஜானெட் ஃப்ளானெர்
– ‘அவரை மாதிரி சமரசம் செய்து கொள்ளாத காட்டுவாசி மண்ணாந்தை அராஜகவாதியை நான் பார்த்ததே கிடையாது’: டேவிட் கொர்ட்

அலுவலில் நடைபாதையில் எவராவது பேச்சுக் கொடுத்தால் அலறியடித்துக் கொண்டு கண்டும் காணாத மாதிரி அவர்களை புழு போல் ஒதுக்கிவிட்டு ஓடுகிறார். நிறைய கெட்ட வார்த்தை பேசுகிறார். ”வெளிப்படையாக நேர்பட எழுது” என்பதில் உறுதியாக இருந்தவர். வழவழா கொழகொழா என்றில்லாமல் கூறியதையேத் திரும்பக் கூறாமல் எழுது என்று சித்தாந்தம் வைத்தவர். செய்தியாசிரியராக வாழ்வைத் துவக்குகிறார். ’ஒரு இடத்தில் இரண்டு வாரத்திற்கு மேல் இருந்தால் அது நரகம்’ என்று நினைத்தவர்.

ஆனால், ராஸ் தனக்கென்று சில பதிப்பாசிரிய தர்மம் வைத்திருந்தார். அவரைப் பார்த்துதான் மற்ற நால்வரும் கண்கொத்திப் பாம்பாகப் பிழைகளைக் கண்டுபிடித்து, எழுதியவருக்கு விளக்கம் கேட்டு, அதற்கு பதில் விளக்கம் கேட்டு, பிரதியை செம்மையாக்கினார்கள். ‘இதற்கு என்ன ஆதாரம்?’, ‘இவர் எப்போது பிறந்தார்?’, ‘ஏன் இந்தப் பிரயோகம்?’, ‘இது தேய்வழக்கு’, ‘இது சரியான சொலவடை அல்ல’, ‘இதை கொஞ்சம் வாசகர் படிக்கும்படி மாற்றலாமா?’, ‘இது அருவருக்கத்தக்க முறையில் சொல்லப்படுகிறதே’ என வினா மேல் வினா போட்டு, மறுபடி திருத்தி எழுத வைக்கும் முறையை நடைமுறையாக்கினவர்.

பிரதியை அனுப்பியவர்களுக்கு மின்னஞ்சல் இல்லாத அந்தக் காலத்தில் இவர் எழுதிய அஞ்சல்கள் பிரசித்தி பெற்றவை: “தேறாது”, “இது வேண்டாம்”, “இது எங்களுக்கானது இல்லை”, “ரொம்ப லேசாக இருக்கிறது”, “இந்த முறை பிரகாசிக்கவில்லை”, “இப்படி எழுதினால் போதாது”.

இந்த ஐவரைத் தாண்டி தேர்ந்தெடுக்கப்படும் நிலைக்கு ஏதாவதொரு கட்டுரை அடுத்த கட்டத்திற்குச் சென்றால், — புகழ்பெற்ற, நிலையான, சாஸ்வதமான எழுத்தாளருக்கு இருபது முதல் முப்பது பதில் கேள்விகளும் சந்தேக விளக்கங்களும் அனுப்பப்படும். 20/30 மட்டுமே அனுப்பிவைக்கப்பட்டால், அந்தக் கட்டுரை மிகச் சிறப்பாக வந்திருக்கிறது என்று அர்த்தம்.

ஒரு சமயம் ஹாரிமன் என்பவர் பன்னிரெண்டு பக்க கட்டுரையை நியு யார்க்கருக்கு சமர்ப்பிக்கிறார். அவருக்கு ஆறு பக்கத்திற்கு விளக்கம் கேட்டு பதில் அனுப்பப்பட்டிருக்கிறது; நொந்துபோய்விட்டார். ஜாஃப்ரி டி ஹெல்மன் என்பவர் மெட்ரோபாலிடன் அரும்பொருளகம் குறித்து அபுனைவு அனுப்பியிருக்கிறார். அவருக்கு 147 கேள்விகள் விளக்கமாக கேட்டு அனுப்பப்பட்டதாம். ”அதெல்லாம் ரெகார்டே இல்லீங்க”, என்கிறார் ஹெல்மன்.

இது வெறும் முதல் கட்டம். அதன் அடுத்த கட்டமாக தகவல் சோதனை; அதன் பின் விஷயங்கள் குறித்து சம்பந்தப்பட்டவர்களுடன் சரிபார்த்தல். அதன் பின் சம்பவங்களின் உண்மைத்தனம் குறித்த ஆராய்ச்சி. அதன் பின் ப்ரூஃப் பிழை பார்த்தல்; அச்சுக்கோர்த்தல் இன்ன பிற விஷயங்கள் நடக்கும்.

இவ்வளவிற்குப் பிறகும் சில பிழைகள் நுழைந்து விடும். இப்படித்தான் ஒருமுறை குத்துச்சண்டை வீரரான Joe Louis (ஜோ லூயிஸ்) என்னும் பெயர் Joe Lewis (ஜோ லூவிஸ்) என்று தான் எழுத்துக் கோர்க்கும் நியூ யார்க்கரில் அச்சாகிவிட்டதைப் பார்த்து, பலருடன் பயணிக்கும் பேருந்தில், அதிர்ச்சியில் பேப்பரைக் கீழே தவறவிட்டு, கதறிக் கதறி அழுதவர்களை வேலைக்கு வைத்திருந்தவர்.

Helen_Hayes_What_Every_Woman_Knows_1934

ஹெலன் ஹெய்ஸ் என்னும் நடிகையைக் குறித்து ஹாரிமன் இவ்வாறு எழுதுகிறார்: “சாஸ்திரோப்தமாகப் பார்த்தால் அழகில்லைதான்”. ராஸ் பொங்கியெழுந்துவிடுகிறார். “அவள் எப்பேர்ப்பட்ட அழகு! நளினமும் ஒயிலும் சிருங்காரமும் கலந்த அவளின் அழகை ஒழுங்காகச் சொல்லத் தெரியாதவன் எல்லாம் நிருபன் என்று சொல்லிக்கொள்ளவே லாயக்கில்லாதவர்கள்”, என பதில் போடுகிறார். ஏழு நாட்கள், மூன்று கலந்துரையாடல்கள் கழித்து ஒரு ஒப்பந்தத்திற்கு வந்து சேர்கிறார்கள். அச்சில் இவ்வாறு செல்கிறது: “அவள் திரும்பிப் பார்க்கவைக்கும் அழகு அல்ல”.

3. ஜேம்ஸ் தர்பர் (James Thurber)

கடைசிக் காலத்தில் கண் தெரியாமல் போனாலும் மூளை மழுங்காமல் கார்ட்டூன் வரைந்தவர். பதிப்பாளர் ராஸ் சொல்வது போல் ‘ஒரே குரல்; ஒரே நடை; ஒரே விதமான கட்டுரைப் பாங்கு!’ என்னும் ஒழுங்கு தாங்கவியலாமல் அலுத்துப் போகிறார். நியு யார்க்கரில் எழுதுவது, எடிட்டுவது எல்லாம் போரடித்துப் போய்விட, பிராட்வே நாடகம் போடச் சென்றிருக்கிறார். எங்கே இருக்கிறார் எனும் அடிச்சுவடே தெரியாமல் போகுமாறு பெர்முடாவில் போய் இரண்டு மாதம் காணாமல் போக்கிக் கொண்டிருக்கிறார்.

james thurber_Secret_Life_Of_Walter_Mitty_new_Yorker_Mind

‘இவர்கள் என்ன ஆனார்கள்?’ என்று தர்பர் எழுதிய பகுதி பெரும் புகழ்பெற்றது. சின்னவயதிலேயே சாதித்தவர்கள், வயதான பிறகு என்னவாக இருக்கிறார்கள் என்பதையும், பத்தாண்டுகள் முன்பு புகழின் உச்சியில் இருந்தவர்கள், இப்பொழுது என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் என்று துப்புதுலக்கி ஆராய்ந்து அவர்களின் வாழ்க்கையை விவரிப்பதும் வாசகர்களைக் கவர்ந்தது. அதனால், சில பல சட்டப் பிரச்சினைகளும் அவதூறு வழக்குகளும் தனி மனிதர்களின் அந்தரங்கத்தில் அத்துமீறி எட்டிப்பார்ப்பதாகக் குற்றச்சாட்டும் வந்துசேர்ந்தது.

அந்தக் காலத்தில் நியு யார்க்கரின் சில பகுதிகளை எவர் எழுதினார் என்று தெரியாமல், பெயர் போடாமல் வெளியானது இவருக்கு உவக்கவில்லை. தன்னுடைய முத்திரை பதிக்கும் துணுக்குகளிலும் நகரம் குறித்த நடப்புக் கட்டுரைகளிலும் தன் பெயர் வரவேண்டும் என தர்பர் எதிர்பார்த்தார். ஆனால், முதலாளி ராஸ் அதற்கு ஒப்பவில்லை.

ராஸ் என்பவருக்கு பயணத்தின் முடிவில் எங்கே செல்ல வேண்டும் என்னும் இறுதி குறித்த தூரப்பார்வை இருந்தது. தர்பர் என்பவருக்கு அதற்கான செயல்முறை திட்டமும், வழியில் அமைக்கவேண்டிய கூடாரங்களும், ஒவ்வொன்றையும் எவர் செய்வார் என்பது குறித்த பணிப் பகிர்தல்களும் முக்கியமாக இருந்தது. யாருடன் எப்பொழுது தொலைபேசுவது, எவரைத் தொடர்பு கொண்டால் எது கிட்டும், யார் எதைத் திருத்துவார்கள், எப்பொழுதுக்குள் வேலையை முடிக்க வேண்டும் என்று வெட்டு ஒன்று துண்டு இரண்டாகச் சொல்லிச் சென்றார்.

4. ஈ.பி. வொயிட் (E.B. White)

இவரை இவரின் குழந்தைகளுக்கான புத்தகங்களால் அறிந்திருப்பீர்கள். நால்வரில் அமைதியானவர்; ஆனால், பதிப்பாசிரியர் ஹாரொல்டின் செல்லப்பிள்ளை. மனைவியையும் (கேத்தரின்) நியு யார்க்கரில் கண்டுபிடித்து, ஆசிரியர் குழுவை ஆற்றுப்படுத்தியவர். இன்றளவும் நியு யார்க்கரில் அலங்கார வார்த்தைகளோ, ஆடம்பரமான சொல்ஜாலங்களோ பெரிய சிலம்பாட்ட உருவகத்தோரணங்களோக் கிடைக்காது. இதற்கு தோற்றுவாயாக ஈபி ஒயிட் இருக்கிறார். நேரடித்தன்மை; அதன் பிரதிபலிப்பு – அம்புட்டுதானே விஷயம் என்பதை விவரிக்கும் நடையைத் தந்திருக்கிறார்.

E_B_White_Books_Stuart_Little_Charlottes_Web_Trumpet_Swan_New_Yorker_Kids_Children

5. காத்தரின் வொயிட் (Katharine White)

ஒன்றரை பக்க நாளேடாக வந்து கொண்டிருந்த துண்டுப் பத்திரிகையை ”நியூ யார்க்கர்டா!” எனச் சொல்ல வைத்தவர். நியு யார்க்கருக்கு வாழ்க்கையை அர்ப்பணித்த ஈபி. ஓயிட்டை மணந்தவர்.

American_Humor_Classics_New_Yorker_Katharine_White_EB_Books

ஹிரோஷிமா

Hiroshima_New_Yorker_1946_Issue

இந்த நூலின் 12ஆம் அத்தியாயம் நியு யார்க்கரின் சில அதிரடி இதழ்களையும் கருத்துக்களையும் குறித்துப் பேசுகிறது.

நியூ யார்க்கர் இதழோ கிண்டல் கொண்ட கருத்துப் படங்களும் கேலிச்சித்திரங்களும் கொண்டது. ஊரில் நடக்கும் டிராமா, சினிமா, இசைக் கச்சேரி, ஓவியக் கண்காட்சி, அருங்காட்சியகத்தின் நிகழ்வுகள், நல்ல உணவு, புதிய கலைகள் என்று வாழ்க்கையைக் கொண்டாடித் தீர்ப்பதைக் கொள்கையாகக் கொண்டது. அது போன்ற இதழில் இரண்டாம் உலகப் போரின் தீவிரத்தை எப்படிக் கொணர்வது?

ஒரு நாட்டின் அரசன் கொலையுண்டால் அதைக் குறித்து செய்திக் கட்டுரை வெளியிடலாம். அமெரிக்காவின் பொம்மலாட்ட ராஜாங்கமான இராக் அரசரின் ஆட்சி கவிழ்ந்தால் அதை ஆராயலாம். லெபனானுக்கு அமெரிக்க இராணுவத்தை அனுப்புவதையும் கியூபாவில் காஸ்ட்ரோ அரியணையை நெருங்குவதையும் அலசலாம். ஹங்கேரியின் தலைவரான இம்ரே நகி வெட்டவெளியில் வெட்டப்படுவதை விவரிக்கலாம். ஸ்புட்னிக் விண்வெளிக்கோளும் எக்ஸ்ப்ளோரர் விண்கலங்களும் ஏவப்படுவதை அறிவியல் தகவல் கட்டுரைகளாக்கலாம். தலைக்கு மேலே சுற்றும் செயற்கைகோள்கள் எல்லாம் அணுஆயுதங்களாகச் சுழலும் அபாயத்தை சங்கு கொண்டு முழங்கலாம்.

அதே ரீதியில் எண்பது மில்லியன் அமெரிக்கர்கள் இறந்த கொடுமையை எப்படி உரைப்பது? ஒரு நாட்டின் மீது குண்டு போட்டு மேலும் பல கோடி மக்களைக் கொன்று குவித்ததை எவ்வாறு எடுத்துரைப்பது. ஆகஸ்ட் 31, 1946ஆம் ஹிரோஷிமா இதழாக வெளியானது: 1946-08-31 – The New Yorker

இதழ் முழுக்க ஒரேயொரு கட்டுரைதான். 31,347 வார்த்தைகள் கொண்டு நேரடியாக ஜப்பான் சென்று வந்தவரின் அனுனவப் பகிர்வு. அது மட்டுமே ஒரு இதழ் முழுக்க ஓடுகிறது.

சமீபத்தில் நியு யார்க் வந்திருந்தபோது 911 நினைவுச்சின்னம் சென்று வந்தேன். அங்கே எல்லா சம்பவங்களையும் காலவாரியாக நிகழ்வுவாரியாக தெளிவாக புகைப்படங்களுடன் போட்டிருந்தார்கள். அதில் ஒரு இடத்தில் ரொனால்டு ரேகனும் அப்பா புஷ்ஷும் தாலிபான் தலைவர்களுடன் சமபந்தி பேச்சுவார்த்தை நடத்துவதைச் சொல்லும். அதை ஒட்டி அப்போதே ஈ.பி. ஒயிட் எழுதுகிறார்:

Build the museum, O builders! Have it ready for me when I come.
Then, when the radioactivity has been dissipated and the rays no longer threaten my white corpuscles,
Letter the proper sign and let me in. And don’t forget
To give the date. I like dates.
July 16, 1945.
Give the hour, the minute, the very second of the blast.
Exactly five-thirty A.M. “Beginning of the atomic age.”
Alamogordo, Alamogordo — my last pilgrimage. Earliest bomb crater in the atomic world. Most famous deathsite [sic].
Note, ladies and gentlemen, how the effect radiates in all directions,
With color and shading gradually growing darker like the petals of a flower.
Those who are hungry will find an appetizing, moderately priced
Meal in the Nuclear Snack Bar, just outside the gate, and
Clean rest rooms.
Take home a souvenir of atomiste [sic] for the children.

oOo

முதலாளி ராஸ் காலமான பிறகு நியு யார்க்கருக்கு என்னவாகும் என்று எல்லோரும் பயந்த போது, நியூ யார்க்கரின் அடுத்த எடிட்டர் சொல்கிறார்: ”சிக்மண்ட் பிராயிட் இறந்த பிறகும் மனோவியல் ஆராய்ச்சித் தொடர்கிறது அல்லவா…”. இன்றும் நியு யார்க்கர் அன்றைய தரமும் விழுமியங்களும் வழுவாமல் வெளியாகிறது.

அப்படி என்ன சித்தாந்தம்?

அவருடன் பழகியவரைக் கேட்டால், “ராஸுக்கு இரண்டு தெய்வங்கள் இருந்தார்கள்: பெரிய எழுத்து மற்றும் சிற்றெழுத்து (uppercase and lower case)”.

கொஞ்சம் வெளியில் இருந்து நோக்கினால், ‘பொய்மையை அம்பலப்படுத்துவோம். போலித்தனத்தை வெளிக்கொணர்வோம்!’

வில்லியம் சரோயன் உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர். ‘தி புயூடிஃபுல் பீப்பிள்’ வெளியிடுகிறார். நியு யார்க்கர் விமர்சனத்தில் ‘சுத்த நான்சென்ஸ்’ என்று போட்டுடைக்கிறார்கள்.

சாமர்செட் மாம் குறித்து: “நம்முடைய தரம் எவ்வளவு தாழ்ந்து போயிருக்கிறது என்பதற்கு இவர் ஒரு குறிப்பிடத்தக்க வெளிப்படையான அடையாளம்.”

இப்படி எல்லாம் நேர்மையாக எழுதினாலும் எல்லாவற்றையும் விளையாட்டாக, அனைத்திலும் குழந்தைத்தன்மையோடு அணுகுவது நியு யார்க்கரின் சித்தாந்தம் எனலாம். மெரிட் நெல்சன் என்னும் பள்ளி மாணவன் நியு யார்க்கருக்கு கடிதம் எழுதிக் கேட்கிறான்: “உங்களின் நோக்கமும் குறிக்கோளும் என்னவென்று சொல்ல முடியுமா?”. அவனுக்கு பதில் தபால் வந்தது: “எங்களுக்கு எந்த இலட்சியமும் கிடையாது.”

நூலை எழுதிய தாமஸ் வின்சிகுவேரா (Thomas Vinciguerra) நாற்பத்தியேழு பக்கங்களுக்கு அனுபந்தமாக அடிக்குறிப்புகளையும் தொடர்பான கட்டுரைகளையும் சுட்டுகிறார். மேலும் பத்து பக்கங்களுக்கு இந்த ஆராய்ச்சித் தொடர்பான புத்தகங்களையும் இந்த நால்வர் (ஐவர்?) எழுதிய ஆக்கங்களையும் குறிப்பிடுகிறார். தொண்ணூறு வருட நியு யார்க்கர்களைப் படிப்பது மட்டுமில்லாமல் கிப்ஸ் குடும்பம், அவரின் பல மனைவிகள், மகன்கள், மகள்கள் என்று ஊர் ஊராக வாழ்ந்த இடங்களையும் மனிதர்களையும் தேடித் தேடி பேட்டியெடுத்து நூலை எழுதியிருக்கிறார். இதே மாதிரி மணியனுக்கும் ‘ஜெமினி’ வாசனின் மகனான விகடன் எஸ். பாலசுப்ரமணியத்திற்கும் இடையே உள்ள பிணக்குகளையும் சாவிக்கும் அசோகமித்திரனுக்கும் இடையே உள்ள நட்பையும் காலச்சுவடு கண்ணனுக்கும் உயிர்மை எஸ். அப்துல் ஹமீது (மனுஷ்யபுத்திரனுக்கும்) நடுவே உள்ள பரஸ்பர புரிதல்களையும் தொகுக்க வேண்டும்.

தழற்சொல் – சிறுகதை பரிந்துரை

Thomas_Pierce_This_is_an_alert_New_Yorker

இந்தக் கதையை நியு யார்க்கர் இதழில் வாசிக்கலாம்: This Is an Alert – The New Yorker

இந்தக் கதையைப் படித்தால் அறிபுனை கதையைப் படிப்பது போல் இருக்கிறது. வருங்காலத்தில் எங்கெங்கும் பீடித்திருக்கும் போர் மற்றும் போர்ச்சூழலினால் தோன்றும் அச்சத்தையும் பிரதிபலிக்கிறது. அறிவியலின் வளர்ச்சியான ஆளில்லாமல் பறக்கும் தூரயியங்கி விமானங்களின் ஆபத்துகள் நிறைந்த அவநம்பிக்கையான சமூகத்தைச் சுட்டுகிறது. அறிவியல் குறைவாகவும், புனைவு அதிகமாகவும் காணப்படுவதால் அறிபுனை என்னும் வகையில் இந்தக் கதையை வைக்கிறேன்.

பதினான்கு வயது மகளுடனும் மனைவியுடனும் மாமியார் வீட்டிற்கு விருந்துண்ணச் செல்பவனின் நிகழ்வுகளை தாமஸ் பியர்ஸ் எழுதி இருக்கிறார். கதையின் தலைப்பில் சொல்வது போல், ‘இது ஒரு எச்சரிக்கை’ என்னும் அறிவிப்பு, அவர்களை அன்றாடம் துரத்துகிறது. எப்போது அந்த அபாய அசரீரி ஒலிக்கும், எதற்காக அதற்கு அடிபணிகிறோம், எவ்வளவு நேரம் அந்த எச்சரிப்பு நீடிக்கும் என்று தெரியாது.

பதின்ம வயதில் மகளுக்கு நிகழும் மாற்றங்களும் குழப்பங்களும் இயல்பாக வந்து போகின்றன. மார்பகப் புற்றுநோஇல் இருந்து மீண்ட மாமியாரின் செய்கைகள், வயதானோரின் பாதுகாப்புணர்வை சொல்கின்றன. கணவன் உடன்பிறந்தான் பார்க்கும் காமப் பார்வைகள் வருங்காலக் கதைக்கு உயிரூட்டுகின்றன. சொட்டைத் தலையை நினைத்து வருந்தும் நடுத்தர வயதினன் கதையோடு ஒன்ற வைக்கின்றன.

ரொம்பவே போரடித்து விடக் கூடிய களம். அதை எப்படி கதாசிரியர் சுவாரசியமாக்குகிறார்? கொஞ்சம் போல் பாலுணர்வு உலவ விடுகிறார். துப்பாக்கி வைத்திருக்கும் உரிமை குறித்த விவாதத்தை எழுப்புகிறார். இதுதான் இறுதி முடிவு என்று சொல்லாமல் விட்டு வைக்கிறார். ஆறு கதாபாத்திரங்கள் இருந்தாலும் நாய்க்குக் கூட போதிய அளவு விவரிப்புகளும் குறியீடுகளும் கொடுக்கிறார்.

ஐஸிஸ் வளராமல் இருக்க எங்கோ இருக்கும் சிரியாவில் குண்டு போடுகிறார்கள். ஹௌத்திகள் வளராமல் இருக்க யேமனில் பறந்து பறந்து தாக்குகிறது சவுதி அரேபியா. தலைக்கு மேலே எங்கோ நடக்கும் சண்டைகள். அமெரிக்காவில் நிலத்தில் வாழ்வோருக்கும் இந்தப் போர்களுக்கும் சம்பந்தமே இல்லை. அந்தச் செய்திகளை, தொலைக்காட்சியிலும், தினசரிகளிலும், இணையத்திலும் மட்டுமே பார்க்கிறோம். அவர்கள் கெட்டவர்கள் என்பதால் தாக்குகிறோம். இந்தக் கதையில் வான்வெளியில் நடப்பதாகச் சொல்லப்படும் டிரோன் போர்கள் அதை நினைவுக்குக் கொணர்ந்தது. ”இந்த நாட்டிற்குச் செல்லாதே” என்னும் கபர்தார் அறிக்கைகள், அவ்வப்போது வரும் அசரீரிகள் உணர்த்தின.

தாமஸ் உடன் ஆன நேர்காணலை இங்குப் படிக்கலாம்: » INTERVIEW: Thomas Pierce, author of Hall of Small Mammals

சிறுகதைத் தொகுப்பு புத்தகத்திற்கான விமர்சனம்: ‘Hall of Small Mammals,’ Short Stories by Thomas Pierce – NYTimes.com

Collectors – Daniel Alarcón – New Yorker

நியு யார்க்கரில் டேனியல் அலர்க்கான் (Daniel Alarcón) எழுதிய Collectors வாசித்தேன்.

தற்கால தலைமுறையில் டேனியல் முக்கியமான எழுத்தாளர். கிரந்தா போன்ற ஆங்கில சிறுபத்திரிகைகளால் கண்டெடுக்கப்பட்டு, ஹார்ப்பர்ஸ் போன்ற நடுவாந்தர சஞ்சிகைகளுக்கு முன்னேறி, இப்பொழுது வெகுஜன இதழ்களுக்கு வந்தடைந்திருக்கிறார். தெற்கு அமெரிக்க நாடான பெரு-வில் பிறந்திருந்தாலும், பெரும்பாலும் அமெரிக்காவில் வளர்ந்தவர். லத்தீன் அமெரிக்க படைப்பாளியின் இரத்தமும் சதையும் கொண்டு அமெரிக்கர்களுக்கு உவந்த மாதிரி கதை புனைகிறார்.

கொட்டடிக்காரர்கள் (Collectors) கதை இருவரைப் பற்றியது. இருவரும் சிறைக்கு எப்படி வந்தார்கள் என்பதைப் பற்றியது. சிறைக்கைதிகளானவர்களின் வாழ்க்கையை பற்றியது. சிறைக்கு வரக் காரணமானவர்களைப் பற்றியது. கூண்டுக்குளே போவதற்கு முன் இருந்த குடும்ப சூழலைப் பற்றியது.

ரொஜீலியோ (Rogelio) பிறப்பிலே ஏழை. மாற்றுத் திறனாளி. அதனால், பள்ளியில் ஏச்சுக்குள்ளாகுபவன். அண்ணன் வழியில் சில்லறைக் கடத்தலில் ஈடுபடுகிறான். லஞ்சம் தராமல் மாட்டிக் கொள்கிறான். வெளி உலகில் ஜீவனம் நடத்தத் தெரியாதவன், ஜெயிலில் பிழைக்கக் கற்றுக் கொள்கிறான்.

காவற்கூடத்தில் அவனுடைய நண்பனாக ஹென்றி அறிமுகமாகிறான். புரட்சிக்காரன். இடதுசாரி. ’அசட்டு ஜனாதிபதி’ நாடகம் போடுகிறான். தீவிரவாதி என குற்றஞ்சாட்டப்பட்டு உள்ளே வைக்கப்படுகிறான். அவனை வெளியே எடுப்பதில் அக்காகாரி உட்பட ஊடகங்களும் பங்கு வகிக்கின்றன.

சிறைவாசிகளை மனிதர்களாக உலவவிடுகிறார் டேனியல். அச்சமுறும் செய்கை புரிந்தவர்களின் குணாதிசயங்களையும் நடவடிக்கைகளையும் விவரிக்கிறார். கதாநாயகர்களுக்கிடையே நட்பினால் விளைந்த காமத்தையும் சொல்கிறார். இலட்சியவாதியின் சமரசங்களையும் சாமானியனின் இலட்சியங்களையும் போகிற போக்கில் உணர்த்துவது பிடித்திருந்தது. கிராமத்துக்காரனின் எல்லைகளில்லா பயணமும் கொள்கைவாதியின் குறுகல்களும் பிரச்சாரமாக நெடி அடிக்காதது பிடித்திருந்தது. இருபதிற்கு மேற்பட்ட பக்கங்களை இலயிக்க வைத்தது பிடித்திருந்தது.

Fiction: Zadie Smith: “MOONLIT LANDSCAPE WITH BRIDGE”

ஜேடி ஸ்மித்தின் முழுக் கதையும் நியு யார்க்கரில் வாசிக்கக் கிடைக்கிறது.

Van_der_Neer_-_Moonlit_Landscape_with_Bridgeஇது தேர்தல் காலம். தர்மபுரி இளவரசன் இறந்தால், தொல் திருமாவளவன் தலைவராகிறார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொண்டர் தீக்குளித்தால், இரவிக்குமாருக்கு தொகுதி கிடைக்கிறது. அந்த மாதிரி மந்திரி ஒருவரின் வாழ்க்கையை இந்தப் புனைவு சித்தரிக்கிறது.

சிறுகதையை நீங்கள் எப்படித் துவங்குகிறீர்கள்? முடிவுக்கு மிக அருகேவா? அல்லது கதையின் சாரத்தைக் குறியீடாக முன்வைத்தா? பிணத்தை அலங்கரித்து நடுக்கூடத்தில் வைப்பது போன்ற தோரணையுடன் கதை துவங்குகிறது. ஆப்பிரிக்காவிலோ அல்லது ஃபிலிப்பைன்ஸிலோ அல்லது அது போன்ற சுரண்டல் தேசத்தின் தலைவர், தன்னுடைய சொந்த நாட்டை விட்டு சொர்க்கபுரிக்கு ஓடுவதுதான் கதை.

கதையின் நடுவில் தலைப்பு வந்து சேர்கிறது. வான் டெர் நீர் (Aert van der Neer) வரைந்த ஓவியத்தை எடுத்துப் போகிறார் அமைச்சர். அவருக்கு அது சொந்த ஊரை நினைவூட்டுகிறது. அயல்நாட்டு ஓவியனை வைத்துதான் தன்னுடைய பிறந்த கிராமத்தை அறியுமளவு அவர் அன்னியப்பட்டுப் போயிருக்கிறார். நெதர்லாந்து எப்படி இவ்வளவு பெரிய சக்தியாக மாறியது? கடல் கொள்ளையர்களாக இருந்த ஆதி டட்ச்காரர்கள், ஊர் விட்டு ஊர் வந்தவுடன் முதலீட்டாளராக மாறுகிறார்கள். அதே போல் லஞ்ச அமைச்சரும் தன்னுடைய திருட்டுப் பணத்தைக் கொண்டு பிரெஞ்சு நாட்டில் செல்வந்தராகிறார்.

ஏழ்மையை விவரிக்கும்போது பச்சாதாபத்தை சிலர் உருவாக்குவார்கள். அதன் மூலம் பணத்தை நன்கொடையாக வழங்கும் எண்ணம் உருவாகும். சிலர் பசியையும் பட்டினியையும் காரண காரியத்தோடு விளக்குவார்கள். அதன் மூலம் அறிவும் தர்க்கமும் பெருகுவதாக நினைப்பு உருவாகும். இந்தக் கதையில் வறியவர்களின் நிலை, இயற்கையைப் போல் சூறாவளியாக, இயற்கையாக தரப்படுகிறது. இயற்கை நிகழ்வு நடந்தபிறகுதான் தெரிந்து கொள்ள முடிகிறது. கொஞ்சம் அசௌகரியமாக இருக்கிறது. கொஞ்சம் போல் ஆத்திரமும் கோபமும் எழுகிறது. பைத்தியக்காரத்தனமாகவும் தோன்றுகிறது.

கதையின் உவமைகளும் செழுமையானவை.

தன்னுடைய கொட்டில் கதவை மெல்ல முட்டும் பசு போல் அமைச்சருடைய கையை வேலைக்காரி பற்றினாள்.

அமைச்சர் கட்டப் போவதாக சொல்லி பாதியில் நிற்கும் அணைக்கட்டைப் பார்த்தால் கிரேக்க காலத்து நாடக மேடையின் காலி இருக்கை போல் தென்பட்டது.

கதையின் முடிவு எல்லாவற்றையும் விட அதிர்ச்சியானவை. நல்லவன் வாழ்வான்; அல்லது செய்தவன் அழிவான என்னும் நீதிக்கதை படித்து வந்தவனுக்கு, இந்த முடிவு ஏற்பில்லைதான். ஆனால், நிஜத்தில் அதுதானே நடக்கிறது?

David Sipress Cartoons: Life Everywhere

Source: The Phoenix > Reality Check

தேர்தல் கார்ட்டூன்: தி நியு யார்க்கர்

தொடர்புள்ள இடுகை: Therthal 2009: Top 10 Quotes « 10 Hot