தமிழ் ஹிந்து: தி இந்து – ஏன்? ஒரு சிறிய விளக்கம் + நியாயம்

தினமணி, தினமலர், தினகரன், தினத்தந்தி, தின இதழ், தினமுரசு, தினக்குரல் என எல்லா தினசரிகளும் ”தி’”யில் துவங்குவதை எதிர்க்காத தமிழ்ப் பற்றாளர்கள், ‘தி இந்து’ வை “தி” போட்டதற்காக திட்டுவது திடுக்கிடவைக்கிறது.

தமிழில் பெண்பால் சொற்கள் “தி”யில் முடியும். ஒருத்தி… குறத்தி… கார்த்தி… “தி”யை கண்டிப்பதால் பெண்ணியக் குரலையே முடக்க நினைக்கிறார்கள் ஆணாதிக்கவா”தி”கள்.

எழுத்தாளர்களுக்கு “தி” மிகவும் பிடித்த முதல் எழுத்து. தி. ஜானகிராமன், தி. க. சி, திரு. வி. க… எல்லோருக்கும் முதல் எழுத்து “தி”. அந்த நீண்ட நெடிய மரபில் “தி இந்து” உதயமாகிறது.

உதய சூரியனுக்கு “தி”.மு.க. அந்த திராவிட் அணி ஆடிய காலத்திலேயே கிரிக்கெட் வருணணைக்கு புகழ் பெற்றது “தி” இந்து.

இடுகுறிப்பெயர்களுக்கு முதலில் வருவது “தி”.
திசை… (மாலனுக்கு முன்னோடி!)
திணை… (திண்ணை.காம்)
திரு… (செல்வம்)
திரி… (எதையும் மாற்றிச் சொல்வது – திரிப்பது)

திமிரால் இணைவோம்!

சிரியா – ஒபாமா நலமா?

சிரியா பிரச்சினையின் 101 என்ன என்பதை பா ராகவன் தி ஹிந்துவில் எழுதுகிறார். சிரியா ஏன் திடீரென்று செய்திகளில் அடிபடுகிறது?

ஒபாமாவிற்கு இந்த மூன்று மாத காலம் சிரமதசை நடக்கிறது. இதற்கு மாற்றாக குரு பார்வை, சுக்கிர பலம் எல்லாம் கிடைத்தால் நன்றாக இருக்கும். குரு போன்ற முக்கிய கிரகம் பார்ப்பதுதான் சிரியா மீது போர்மேகங்கள் சூழ்வதற்கான அஸ்திவாரம்.

இந்த மாத இறுதியில் ஒபாமாவின் சேமநல காப்பீடு திட்டம் முழுவீச்சுடன் இயங்கப் போகிறது. அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வரும் சகல அமெரிக்கருக்கும் உடல்நல பாதுகாப்பு திட்டத்தை முடக்க எதிர்க்கட்சி திட்டம் போட்டிருந்தது. இந்த மாதிரி தொடர்ந்து முட்டுக்கட்டைப் போட்டு தலைவலி கொடுக்கும் ரிபப்ளிகன் கட்சியை எப்படி சமாளிப்பது? முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும் என்பது போல் குடியரசு கட்சிக்கு பிடித்தமான நாட்டுப்பற்றை முதலில் கையில் எடுத்தார் ஒபாமா.

ஸ்னோடென் கிடைத்தார். அவரும் உலக மகா ரகசியம் போல் அமெரிக்கா வேவு பார்க்கிறது என்பதை சொல்கிறார். தேசநலன், தீவிரவாதிகளை கண்காணித்தல், அமெரிக்காவை பாதுகாத்தல் போன்ற விஷயங்கள் செய்தியில் அடிபடுகின்றன. Tea party செயல்பாடுகளை வருமானவரித்துறை மூலம் ஒடுக்கியதில் இருந்து ஒபாமா மீள்கிறார். தேயிலைக் கட்சிகாரர்களின் கெடுபிடிகளை மறக்கடித்து கொடி காத்த குமரனாக பராக் ஒபாமா மிளிர்கிறார்.

கொஞ்ச நாள் போனதும் எட்வர்ட் ஸ்னோடென் பழைய செய்தியாகிப் போகிறார். மீண்டும் ஒபாமா கேர் தடுக்கப்பட வேண்டும் என்று போர் முரசு கொட்டுகிறார்கள் ரிபப்ளிகன் கட்சியினர். எப்படித் தப்பிப்பது? இப்பொழுது Wag the Dog சமயம். அமெரிக்காவே சண்டக்கோழி. இதில் மிகப் பெரிய சண்டியர்களாக குடியரசுக் கட்சிக்காரர்கள் இருக்கிறார்கள். அவர்களின் அஸ்திரம்தான் ”போர்”. ஒபாமாவே அதை கையில் எடுத்தால்…?

ஒபாமா கேர் பின்னுக்குத் தள்ளப் படுகிறது. சேமநலத் திட்டத்தை தடுத்து நிறுத்துவதைப் பற்றி பேசுவதற்கு பதில் போர் மூண்டால் எவ்வளவு ஏவுகணை விற்கும்… எத்தனை எஃப்16 தயாரிக்கலாம்… என்று முட்டைக்கணக்கு போடத் துவங்கி இருக்கிறார்கள். பெட்ரோடாலரும் வலுக் கொண்டது. ரூபாயும் போன்ற இன்ன பிற நாணய மதிப்புகளும் வீழ்ச்சி முகம் கொண்டன. இது பொக்கீடு (பட்ஜெட்) சமயத்தில் ஒபாமாவின் கரத்தை வலுப்படுத்தும். அப்படி இல்லாமல், அப்பொழுதும் பால் ரையான் & மார்க்கோ ரூபீயோ கோஷ்டியினர் தர்ணா நடத்தினால், சிரியா மீது நிச்சயம் குண்டு விழும்.

அதெல்லாம் சரி… சிரியாவில் எண்ணெய் இருக்கிறது என்கிறதே கட்டுரை… எவ்வளவு இருக்கிறது? சுவத்துக் கீரை வழிச்சுப் போடுடி, சொரண கெட்ட வெள்ளாடச்சி என்போமே அது போல் உலகத்தின் மொத்த பங்கில் 0.4% (0.004)! அது சும்மா அடுப்பு பொங்கக் கூடக் காணாது.

’தி இந்து’ நாளிதழ் தமிழில் – சிந்தனைக் களம் கட்டுரைகள்

தி இந்துவின் தமிழ்ப் பதிப்பு வெளியாக ஆரம்பித்திருக்கிறது. ”சிந்தனைக் களம்” பகுதியில் ’சிறப்புக் கட்டுரைகள்’ வெளியிடுகிறார்கள். தினமணி போன்ற பெத்த பெயரை வைத்துக் கொண்டு (தினகரனின்) தமிழ் முரசு போன்ற உள்ளடக்கம் கொண்டிருக்கிறது.

சிரியாவைக் குறித்து பாரா எழுதிய மேலோட்டமான கட்டுரை கிடைக்கிறது. ஜெயமோகன் பத்தி எழுத்தாளர் ஆனால் நடக்கப் போகும் அபாயமும் தெரிகிறது.

என்னைப் போன்ற சாதாரண விமர்சகர் கூட நாவலின் ஓரிரு பக்கங்களை மட்டும் ஆங்காங்கே படித்துவிட்டு தேர்ந்த அறிமுகத்தைக் கொடுத்துவிட முடியும். அந்த மாதிரி அவ்வப்போது சந்தித்த மனிதர்கள், ஆங்காங்கே பார்த்த தொலைக்காட்சி, இணையத்தில் மூழ்கடிக்கும் நிலைத்தகவல்கள் மட்டுமே கொண்டு மேக்ரோ பார்வை கொடுப்பதன் ஆபத்தை மீண்டும் மீண்டும் ஜெயமோகன் உணர்த்திக் கொண்டேயிருக்கிறார். ஊடகத்தை கவனிப்பதற்கென்றே பிரத்தியேகமாக இயங்கும் medianama.com , fourth-estate-critique, thehoot.org போன்ற பல்வேறு தளங்களின் உதவியைக் கோரி கொஞ்சமாவது ஆராய்ந்து எழுதியிருக்கலாம்.

அந்தக் காலத்தில் நேருவும் கென்னடியும் மட்டுமே செய்தியாளர்களுக்கு முக்கியமானவர்கள். இந்தக் காலத்தில் பக்கத்து மாநகராட்சி கவுன்சிலரும், பையன் ஆடும் கிரிக்கெட் அணியும், முக்குத்தெருவில் உதயமான பவானி அம்மனும் செய்தியை ஆக்கிரமிக்கிறார்கள். எங்கோ 2ஜி கொள்ளை அடிப்பதை நினைத்து அங்கலாய்ப்பதை விட உள்ளூர் ஊழல்களைத் தடுப்பதிலும், பக்கத்து வீடு காதல்களை அங்கீகரிப்பதிலும் செயலூக்கத்தோடு இயங்கவும் ஊடகங்கள் உதவுகின்றன.

செய்தித்தாள் என்பது மேற்கை பொறுத்தவரை இறந்த காலம். வாஷிங்டன் போஸ்ட் கிட்டத்தட்ட திவால் ஆகி அமேசான்.காம் எடுத்துக்கொண்டுவிட்டது. சிகாகோ ட்ரிப்யூன், நியு யார்க் டைம்ஸ் என்று இணையத்துக்கு முந்தைய முன்னுமொரு நூற்றாண்டில் கோலோச்சிய பதிப்புகள் எல்லாம் கணக்கு வைப்பு புத்தகங்களில் சிவப்பு மையை கக்கி கடைசி இரத்தங்களை சுரண்டிக் கொண்டிருக்கிறது. அப்படியிருக்க இந்தியாவில் மட்டும், எப்படி புதுப் புது பத்திரிகைகள், தினசரிகள், நாவல்கள், வார இதழ்கள் முளைக்கின்றன?

காலை எழுந்தவுடன் ஐ-பேட் கொண்டு கக்கூஸ் போகுபவர்கள் குறைந்த அளவில் இருப்பதால்… வலை மேய்வதற்கான கட்டணம் இரவு நேரங்களில் மட்டும் சல்லிசாக இருப்பதால்… எல்லோருடைய செல்பேசியிலும் தமிழ் எளிதாகத் தெரியாததால்… கட்சிக்கொரு பேப்பர் நடத்துவதால்…

”நாவலாசிரியயர்கள் சொற்றொடர்களாக சிந்திப்பதில்லை; அத்தியாயங்களாக யோசிப்பவர்கள்” என்பார் வர்ஜீனியா வுல்ஃப். நல்ல புனைவாளர்களை முன்னூறு வார்த்தைகளுக்குள் வாரா வாரம் கிறுக்க வைக்கும் சுரேஷ் கண்ணன்கள் ஆக்கி விடாதீர்கள் என்று எண்ண வைத்திருக்கிறது தமிழில் வரும் ’தி இந்து’.

படம்

Tamil Typing – Infographic on Input Methods and Editors

Tamil_Typing

ஜெயமோகன் எழுதக்கூடிய கட்டுரை: விளையாட்டும் குழந்தைகளும்: Jeyamohan

அசல் கருத்து: தொலைக்காட்சியும் குழந்தைகளும்http://www.jeyamohan.in/?p=36539

இனி ஜெ. எழுதியிருக்கக் கூடிய அடுத்த பதில் இங்கே…

முந்தைய அறுவடை: நமது இலக்கியநுட்பம்

நானும் என் மனைவியும் 1992 வாக்கில் தொலைக்காட்சியில் குழந்தைகளிடம் விளையாட்டுப் போட்டிகள் உருவாக்கும் எதிர்மறை விளைவுகளைப்பற்றிய விவாதத்தைப் பார்த்தோம். விளையாட்டுச் சிறுமியாக இருந்த என் மகளுக்கு அந்த “அரட்டை அரங்கத்”தில் இருந்ததை நான் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தேன். எங்கள் கொல்லைப்புறத்தில் கிரிக்கெட் தேவையில்லை என்ற முடிவை அவளும் நாங்களும் சேர்ந்து எடுத்தோம். அப்போது எம்.எஸ்.தோனி சின்னக்குழந்தை. அன்றுமுதல் இன்றுவரை வீட்டில் தொலைக்காட்சி இணைப்பு இல்லை.

கிரிக்கெட் மட்டுமல்ல ஒட்டுமொத்த விளையாட்டுகளே குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு மிகவும் பாதகமானது. பல பெற்றோர் தங்களுக்குத் விளையாட்டுப் பித்து இருப்பதை மறைக்க ‘ஓடியாடி விளையாடினால் உடற்பயிற்சி இல்லியா? அட்ரெனலின் சுரப்பது கூட நல்லதுதானே!’ என்றெல்லாம் வாதிடுவதைக் கேட்டிருக்கிறேன். உண்மையில் விளையாட்டு எல்லாவகையிலும் எதிர்விளைவுகளை மட்டுமே உருவாக்கக்கூடியது. மைதானத்தில் விளையாட்டு இருந்தால் குழந்தைகள் அதைப் பார்ப்பார்கள். அது அவர்களுக்குத் தீங்களிக்கக்கூடியது.

காரணங்களை இவ்வாறு தொகுத்துச் சொல்லலாம். விளையாட்டு மிகப்பிரம்மாண்டமான ஒரு பொது கேளிக்கை. கோடிக்கணக்கான பேருக்கு ஒரேசமயம் அது மகிழ்வூட்டியாகவேண்டும். ஆகவே அது மிகவும் முன்னரே ஒத்துக் கொண்ட விதிப்படியே நடக்க முடியும். சட்டதிட்டங்களுக்கு அப்பாற்பட்டு சிந்திப்பதை விளையாட்டுகள் முடக்கிப் போடுகின்றன.

ஆகவே விளையாட்டு அதிகம்பேர் பார்க்கக்கூடிய அந்த சராசரியான மனநிலையை உருவாக்கும். உச்சகட்ட ஊசலாட்டல் மூலம் அவற்றை அனைவரும் பார்க்கவைக்கும்.

கச்சிதமான சிறப்பாக ஆடக்கூடியவரே வெற்றிபெறுகிறார், அதற்குத்தான் அதிக கோப்பைகள் கிடைக்கும். ஆகவே அதற்குத்தான் அதிகமான நிதிமுதலீடு இருக்கும். அதுதான் பிரம்மாண்டமானதாகவும் கவர்ச்ச்சியானதாகவும் இருக்கும்.

அதிகமாக வெற்றி பெறும் அணி, அதாவது மிக அற்புதமாக ஆடுபவர் மட்டுமே ஒலிம்பிக்ஸுக்கு செல்வார். அதைத்தான் பார்க்கவேண்டிய சந்தர்ப்பம் நமக்கு அமையும்.

இதன் விளைவாக விளையாட்டை பார்ப்பவர்கள் அனைவரும் அவர்களைப் போல் விளையாட சிக்கவைக்கப்படுகிறார்கள். அவர்களின் தன்னம்பிக்கை வீழ்ச்சியடைகிறது. உடல் திறன் சராசரியில் கட்டிப்போடப்படுகின்றது.

இது மாந்தர் குலத்திற்கே மிக ஆபத்தானது. ஒவ்வொரு மனிதரும் தன்னுடைய சோம்பேறித்தனத்தைக் கண்டடைந்து அதை வளர்த்துக்கொள்ளவேண்டிய வயதில் சராசரித்தன்மையில் சிக்கிக்கொள்கிறார்கள். சராசரி கிட்டிப்புள்ளும் உறியடிகளும் உப்புமூட்டைகளும் மட்டும் அவர்களுக்குக் கிடைக்கின்றன. அவர்கள் சராசரிகளாக வளர்கிறார்கள்.

விளையாட்டுகள் நமக்குத் தரிசனங்களை அளிப்பதில்லை. ஆட்டகளத்தில் சிலர் கலக்குவதை மிதமிஞ்சி வலியுறுத்துகிறது அது. பந்துகளைக் கொட்டிக்கொண்டே இருக்கிறது. அது நம்மை பியரிலும் கோக்கோ கோலாவிலும் அடித்துச்செல்லும் தன்மை கொண்டது. மைதானத்திற்கு சென்று பாருங்கள். சிலநாட்களில் அவை உங்களை முழுமையாக உள்ளே இழுத்துக்கொள்ளும். நீங்களும் தினசரி பால் பாட்மிண்டனோ கால்பந்தோ ஆடிக்கொண்டே இருப்பீர்கள்.

ஆனால் ஒருவாரம் முழுக்க இந்த ஆட்டங்கள் மூலம் நீங்கள் பயிற்சி பெற்றது ஒரு உள்ளூர் லீக் ஆட்டத்திற்குக் கூட தகுதி இருக்காதென்பதை யோசித்தால் புரிந்துகொள்ளலாம்.

என்.எஃப்.எல், என்.பி.ஏ., ரக்பி, கால்பந்து, ஐ.பி.எல். போன்ற மேற்கத்திய ஆட்டங்கள் இன்னும் நுட்பமான வலை. அவை சர்வதேச அளவில் துடுப்பாட்டக்காரர்களின் பொதுவான பலவீனங்கள் விருப்பங்கள் ஆகியவற்றை big data மூலம் ஆராய்ந்து மேம்படுத்தப்பட்டு அமைக்கப்பட்டவை. ஆகவே அணிகளை மிக பயங்கரமானப் சரிசமமான போட்டியாக கொண்டு சென்றுவிடுகின்றன.

இந்நிகழ்ச்சிகளைப் பாருங்கள். சில அடிப்படைக்கூறுகள் இருக்கும். மிக பயங்கரமான வலிமை கொண்ட சக்திகளை பலவீனமான, குழந்தைகளான சிலர் எதிர்த்து வெல்வது போல. சாகசம் மூலம் புதையல்களை அடைவதுபோல. மறைமுகமாக இவை குழந்தைகளின் போர்க்குணங்களையே தொட்டு வளர்க்கின்றன. அந்தப் போர்க்குணம் குழந்தைக்கு அதன் தங்கிவாழ்தலுக்காக, தாக்குப்பிடித்தலுக்காக இயற்கையால் வழங்கப்பட்ட ஆயுதம். காமம் போலவே அடிப்படையான ஓர் இச்சை அது. அதை இவர்கள் பயன்படுத்திக்கொள்கிறார்கள்.

இதற்கு அப்பால் இன்னும் முக்கியமான காரணம் ஒன்று உண்டு. உடல் விளையாட்டு அடிப்படையில் கல்விக்கு எதிரானது. கல்வி என்பது மொழியுடன் சம்பந்தப்பட்டது என்றே நான் என்றும் நினைத்து வருகிறேன். சமீபத்தைய ஆய்வுகள் இதை உறுதிசெய்கின்றன. மொழியில்தான் சிந்தனை நிகழ்கிறது. ஓவியம் இசை போன்ற கலைகளுக்குக் கூட கொள்கைகள் மொழியாகவே அகத்தில் பதியமுடியும்.

மொழிவழிக்கல்விதான் மூளையின் இயல்பான செயல்பாடு. நாம் அறிந்தவற்றை நாம் நினைப்பது மொழியில்தான். ஒன்றை நாம் நம் மொழியில் சொல்லத்தெரிந்திருந்தால்தான் நாம் அதை அறிந்திருக்கிறோம் என்று பொருள்.

விளையாட்டுகள் மொழித்திறனையே அழிக்கின்றன. மொழியில் நுழைந்து தன் சொந்த அகமொழியைக் கண்டடையவேண்டிய காலகட்டத்தில் குழந்தை இந்தக் விளையாட்டுகளில் நுழைவதனால் அது சிந்திக்கத்தெரியாததாக ஆகிவிடுகிறது.

கடைசியாக, விளையாட்டு போன்ற ஆட்படுத்தும் தன்மை கொண்ட சாதனம் குழந்தைக்கு பிறருடனான உறவுகளை இல்லாமலாக்குகிறது. விளையாட்டில் எதிர் அணி என்கிறோம், போட்டியாளர் என்கிறோம். “யாதும் ஊரே! யாவரும் கேளிர்” என்னும் தொன்மையான பண்பாட்டில் வாழ்ந்த சமூகம், களரியிலும் சடுகுடுவிலும் சண்டை போடுவது ஆபத்தான போக்கு.

என் புரிதலில் செயலை விட, ஆக்கத்தை விட குழந்தைகள் பேசிக்கொண்டிருக்க மிகவும் பிரியப்படக்கூடியவை. ‘கதையளப்பதை’ விரும்பாத குழந்தை இல்லை. குழந்தைகள் கணினியில் விளையாடுவதும் அவர்கள் இனையத்தில் அரட்டையடிப்பதும் மிக மிக முக்கியம். அதனூடாகவே குழந்தை அதைச்சூழ்ந்திருக்கும் சமூக வலைப்பின்னலுடன் உறவு கொள்கிறது. அதைப்புரிந்துகொண்டு கையாளக் கற்கிறது. மைன்கிராஃப்டிலோ போர்ட்டல்-இலோ தன் இடத்தைக் கண்டடைகிறது.

நான் இளமையிலேயே என் குழந்தைகளுடன் மணிக்கணக்காக கணிவிளையாட்டுகளில் இருந்தேன். அவர்கள் அடுத்தடுத்த கட்டங்களுக்குப் போய்க்கொண்டே இருப்பார்கள். குழந்தைகள் அவர்களின் உண்மையான உலகை நம்மிடம் அமைத்துக் காட்டுவார்கள். கூடவே ஒரு கற்பனை உலகையும் நமக்காக உருவாக்கிக் காட்டுவார்கள். கற்பனை நகரம், கற்பனை மனிதர்கள். அது அவர்களின் ஆளுமையின் மிக முக்கியமான அம்சம். அவர்களைப் புரிந்துகொள்வதற்கான வாசல் அது. கற்பனையில் கடைசி பந்து சிக்ஸர் அடிக்காதவர் இருக்கிறோமா? கனவுகளில் இறுதி நிமிடத்தில் கோல் அடிக்காதவர் உண்டா? அதை நேரடி விளையாட்டுகள் உடைக்கின்றன.

உரையாடல்மூலம் நாம் குழந்தைகளை அறிகிறோம். அவை நம்மை அறிகின்றன. இவ்வாறுதான் ஃபேஸ்புக் உருவாகிறது. சமூக வலைப்பின்னல் உருவாக்கிறது. அதை விளையாட்டு அடிமைத்தனம் அழிக்கிறது.

விளையாட்டு குழந்தைகளை கணி உலகிலிருந்து அன்னியப்படுத்தும். என்ன சொன்னாலும் இன்று கணினிகளே வருங்காலத்திற்கான ஒரே வழி. நாளெல்லாம் விளையாடும் ஒருவன் முட்டாளாகத்தான் இருப்பான். அரைமணிநேரம் எதையாவது ட்விட்டரில் வாசித்தால்கூட அவனுடைய அறிவிலும் ரசனையிலும் பெரும் வளர்ச்சி காணப்படும்.

ஏனென்றால் கணினிகள் நம்மை செயல்படச்செய்கின்றன. நாம் மேயும்போது அந்த நிலைத்தகவல் நம் கற்பனையாலும் நம் தர்க்கத்தாலும் நாம்தான் உருவாக்கிக்கொள்கிறோம். அது ஓர் கண்டுபிடிப்பு. எந்த Call of Duty® ஆக இருக்கட்டும். நம்மை மேலும் தகுதிகொண்டவர்களாகவே ஆக்கும்.

ஆனால் விளையாடுகையில், எந்த மகத்தான நிகழ்ச்சியானாலும், நாம் அதற்கு செல்வதில்லை. வியர்வை நம் மீது அருவிபோல கொட்டிக்கொண்டிருக்கிறது. அதன் வழியாக நாம் சில கலோரிகளைக் களைந்து உப்பை மட்டுமே அடைகிறோம். நாம் அதன் வழியாக தகுதிப்படுத்திக்கொண்டு ரஞ்சி டிராபிக்கு செல்வதில்லை.

கூகிள்+ முடிவில்லாதவை. உலக ஞானமே அவற்றில் உள்ளது. அவை அளிக்கும் தெரிவுக்கான சாத்தியங்க்ள் முடிவில்லாதவை. சமூக வலைப்பின்னலில் நுழையும் குழந்தை தான் யாரென தானே கண்டுகொள்ளும். சிந்திக்கவும் உரையாடவும் கற்றுக்கொள்ளும்.

அதேசமயம் விளையாட்டை முழுக்க நிராகரிக்கவும் முடியாது. விளையாட்டிற்குப்பதிலாக ரவி சாஸ்திரி ஆட்டங்களை, சித்துவின் வருணணைகளை அவர்களுக்கு யூடியிபில் கண்டுபிடித்துக்கொடுத்தேன். மிகநல்ல ஒரு ப்ளே லிஸ்ட் (play list) அவர்களிடம் உள்ளது. அது அவர்களுக்கு play. இன்று உலகின் மிகத்தரமான புதிய கணிக்கட்டிடம் எது என என் மகளிடம்தான் நான் கேட்டறிகிறேன். இன்று வந்த எந்த மைண்க்ராஃப்ட் கலைத்தரம் மிக்கது என என் மகளிடம்தான் தெரிந்துகொள்கிறேன்.

என் இரு குழந்தைகளும் மகத்தான கணி பயனர்கள். அதற்கு நான் விளையாட்டை விலக்கியதுதான் காரணம் என உறுதியாக நம்புகிறேன்.

நன்றி: ஜெ.

John Abraham’s Madras Cafe – Movie Review

அசல் தலைப்பு: மெட்ராஸ் கஃபே
வைத்திருக்க வேண்டிய தலைப்பு: ராஜீவ் காந்தியைக் கொன்றதை ஏன் இந்தியாவால் தடுக்க முடியவில்லை என்பதற்கான சப்பைக்கட்டு

சான் ஓஸே பக்கம் போனீர்கள் என்றால் மெட்ராஸ் கஃபே நிச்சயம் எட்டிப் பாருங்கள் என்பார்கள் பே ஏரியாவசிகள். இந்தியா – இலங்கை – ஈழ முக்கோண பிரச்சினை அறிவதற்கு மெட்ராஸ் கஃபே உதவும்.

ராஜீவ் காந்தி இறந்ததற்காக நாடே வருத்தப்படுகிறது. ஆனால், எண்ணற்ற தனி மனிதர்களின் சொந்த இழப்புகளை பிரச்சார தொனியின்றி போகிற போக்கில் இந்தப் படம் இயல்பாக முன்வைப்பது பிடித்திருந்தது. அன்னிய நாட்டின் அமைதிக்காக செல்லும் தூதுவர் ஈ.பி.ஆர்.எல்.எஃப்.புக்கும் புலிகளுக்கும் நடுவில் மாட்டிக் கொண்டு சாவது; துப்பறிபவர்களின் குடும்பம் சீரழிவது போன்றவை போகிற போக்கில் வந்து போகின்றன.

படம் என்றால் வில்லன் இருக்கவேண்டும். இதுவோ கிட்டத்தட்ட ஆவணப்படம். விறுவிறுப்பாக சம்பவங்களைக் கோர்த்து, நடுநடுவே லட்சணமான மனைவியை ஊறுகாய் போல் தொட்டுக் கொண்ட சாகசப்படம். சுட்டுவிரல் நீட்டி தப்பு செய்தவர்கள் இவர்கள்தான் என்று குற்றஞ்சாட்டாமல், என்ன நடந்தது, எப்படி நடந்தது, எப்பொழுது நடந்தது என்பதை மட்டும் விவரிக்கிறார்கள்.

இலங்கையா… அவர்கள் 1983 படுகொலைகளை நிறைவேற்றினார்கள்.
விடுதலைப் புலிகளா… அவர்கள் நிறைய முதுகில் குத்தல்களும் கண்மூடித்தனமான கொள்கைகளும் கொண்டிருந்தார்கள்.
இந்திய ராணுவமா… மேலிடத்து உத்தரவை சிரமேற்கொண்டு பணிந்தார்கள்.
உளவுத்துறையா… எவர் யாருக்கு விசுவாசமாக இருந்தார்கள் என்பது அவர்களே அறியாமல் இயங்கினார்கள்.
இந்தியாவா… எந்த இந்தியர் என்பதைப் பொறுத்து விதவிதமாக மனிதருக்கே உரிய மாபாதகங்களுடன் நடந்துகொண்டார்கள்.
ராஜீவ் காந்தியா… யேசுவிற்குப் பிறகு உலகத்தில் உதித்த மகான். புத்தர் வழியில் அகிம்சையை போதித்து சென்னைக்கு வந்தவர். மகாத்மாவிற்குப் பிறந்த இந்தியாவில் உதயமான உத்தமர்!

படத்தின் குறைகள்? சென்னைத் தமிழுக்கும் ஈழத்தமிழுக்கும் வித்தியாசம் காட்டவில்லை என்று பொங்கலாம். மட்டக்களப்பு பிரதேசங்களையும் யாழ்ப்பாணத்தையும் குழப்புகிறார்கள் எனலாம். ஜான் ஆபிரகாம் படகில் போகும்போது சவரம் செய்த வழவழ முகத்துடன் பயணிக்கிறார் என விசனிக்கலாம். எனினும், அந்த நிருபர் ஜெயா கதாபத்திரத்தை அனிதா பிரதாப் போல் கோர்த்து வைக்காத துரோகத்தை மன்னிக்கவே முடியாது. அந்த ஒரு சங்கதிக்காகவே மேதகு தலைவரின் கட்டை வேகாது!

படத்தில் எல்லா மொழியும் பேசுகிறார்கள். நடுவே தமிழக திராவிட கட்சித் தலைவரை விளித்து, ‘தலைவா… பணம் வந்துடுச்சு! காரியத்த முடிச்சுடலாம்!’ போன்ற பேச்சுகள் பின்னணியில் ஓடுகின்றன. பொருளியல் வரலாற்று அறிவும், திரைமொழியின் நுணுக்கமான பார்வையும், பல்வேறு அரசியல்களை கிரகிக்கும் சக்தியும் கிடைக்கப் பெற்றவர்கள் மட்டுமே இந்தப் புலனாய்வுப் புனைவை புரிந்து கொண்டு பார்க்க இயலும்.

நல்ல வேளை… படம் எல்.டி.டி.ஈ. பிரபாகரன் இறந்த பிறகு வந்திருக்கிறது. இல்லையென்றால், கொஞ்ச நாளில் ஜான் ஆபிரஹாம் போட்டுத் தள்ளப்பட்டிருப்பார்.

A Visit with Mahatma Gandhi: 1924: Atlantic Archives

0_Atlantic_Weekly_Archives_Bharat_Freedom_Intro

1_Mahatma_Gandhi_Hindu_Muslim_Untouchability_Pariah_Dalits

2_MK_Gandhi_India_Visits_Freedom_Non_Violence

3_Mahatma_Mohandas_Karamchand_Gandi_India_Travelogue_Experiences

4_Mahatma_Gandhi_1920_Atlantic_India_Independence

Hindu vs Greek Mythology: Adi Sankara and Orpheus

சுவாரசியமான கதைகளையும் முக்கியமான புத்தகங்களையும் மகளின் புண்ணியத்தால் படிக்க முடிகிறது. அவளின் லத்தீன் மொழி வகுப்பில் கிரேக்க நாட்டு தொன்மங்களை சொல்கிறார்கள். ஹிந்து மதத்தையும் பாரதப் புராணக் கதைகளையும் பல சமயம் ஒப்பிட முடிகிறது.

இளையராஜாவிற்கு தாத்தா போல் இசைத் திறன் கொண்டவன் ஆர்ஃபியஸ். அவன் காதல் மனைவி இறந்துவிட ’அவ என்ன என்னத் தேடி வந்த அஞ்சல’ என்று டோப்பு அடித்து சோகத்தில் மூழ்குகிறான். ’போனால் போகட்டும் போடா’ பாடாமல் அவளை மீட்டுவர உறுதிகொண்டு மாண்டவர்கள் வாழும் பாதாள உலகிற்குச் செல்கிறான். தன் மனைவியைத் தன்னோடு அனுப்பி வைக்க வேண்டுகிறான். பூமிக்குச் சென்று சேரும்வரை எக்காரணம் கொண்டும் திரும்பிப் பார்க்கக் கூடாது என்ற நிபந்தனை விதித்து அவர்களும் அனுப்பி வைக்கிறார்கள். மனைவி பின் தொடரச் செல்லும் ஆர்ஃபியஸ், பூமியில் காலடி வைக்க ஓரடி இருக்கும்போது திரும்பிப் பார்த்துவிட, நூறு பாடல்களை அம்பிகாபதி தொடர்ந்து இயற்றி அரங்கேற்றினாலும் மரண தண்டனை கிடைத்தது போல் அவன் மனைவி பாதாள உலகிற்குள் மீண்டும் சிக்கிக் கொள்கிறாள்.

எம்.ஜி.ஆர். முதல் இளையராஜா வரை கொல்லூர் மூகாம்பிகை ரொம்ப பிரசித்தம். இப்பொழுது அந்த ஸ்தல புராணம்:

ஆதி சங்கரரின் கனவில் கலைவாணி தோன்றியபோது அவர் தேவியை தன்னை கேரளாவுக்கு பின் தொடருமாறும், தேவி எங்கு உறையவேண்டும் என்று அவர் விரும்புகின்றாரோ அங்கு தேவி எழுந்தருள வேண்டும் என்று வேண்டிக்கொண்டதாகவும், இதற்கு சம்மதித்த தேவி ஒரு நிபந்தனையும் விதித்ததாக சொல்லப்படுகிறது. அதாவது, தான் தொடர்ந்து வருவதை அவர் திரும்பிப்பார்க்கக்கூடாது என்று சாரதாதேவி ஆதி சங்கரரை கேட்டுக்கொண்டார். அம்பாள் வருகிறார் என்பதை கொலுசு ஓசையை வைத்து உணர்ந்தார் சங்கரர். இப்படி கேரளாவை நோக்கி நடந்த ஆதிசங்கரர் மூகாம்பிகா வந்தபோது அவருக்கு பின்னால் கேட்டுக்கொண்டிருந்த தேவியின் கொலுசு ஓசை நின்றுவிட்டது. சங்கரர் திரும்பி பார்த்துள்ளார். உடனே தேவி தன் நிபந்தனையை கூறி தன்னால் அந்த இடத்துக்கு மேல் வர முடியாது என்று கூறுகிறார்.

முதலாவது கிறித்துவிற்கு முந்தைய கதை. சங்கரரும் சரஸ்வதியும் ஒன்பதாம் நூற்றாண்டில் நடை பயின்றிருக்கிறார்கள். எங்கே நல்ல code கிடைத்தாலும் அதை என்னுடைய பிராஜெக்டிற்கு பயன்படுத்துவது போல் சும்மா திரும்பிப் பார்த்த லாஜிக் இல்லாத விர்ஜில் சொன்ன கதை போல் இல்லாமல் சங்கராச்சாரியாரும் மெத்த ஆய்ந்து பொருத்தமாக எடுத்தாண்டிருக்கிறார்.

via Gokul Prasad

இந்துக் கடவுள்களுக்கு கிரேக்கக் கடவுள்களின் அல்லது மன்னர்களின் சாயல் இருப்பதைப் பற்றி நண்பர் கிருஷ்ண துவைபயனாவுடன் பேசிக்கொண்டிருந்தேன். இதையெல்லாம் அறுதியிட்டு நிறுவ முடியாது எனினும் கிரேக்கக் கடவுள்களின் மறுவார்ப்பே இந்தியக் கடவுள்கள் என்பது ஒரு சுவாரஸ்யமான தியரி தான்.

Zeus-இன் மகனான Dionysus-க்கும் சிந்துசமவெளி நாகரீகத்தின் கடவுளான பசுபதிக்கும் (ருத்ரன்) இடையே ஏராளமான ஒற்றுமைகள் இருக்கின்றன. பசுபதி என்றால் மிருகங்களின் தலைவன் எனப் பொருள். தியோனிஸஸின் புனித விலங்குகளாக சிறுத்தையும் புலியும் பாம்பும் எருதும் இருக்கிறது. பசுபதி தான் பிற்காலத்தில் சிவபெருமானாக அறியப்பட்டார். அவர் கழுத்தில் பாம்பிருக்கிறது. புலித்தோல் ஆடை அணிந்திருக்கிறார். இருவருக்குமான ஒற்றுமைகள் பிடிபடுகிறதா? தியோனிஸஸ் இமய மலைக்கு விஜயம் செய்திருப்பதற்குண்டான ஊகங்களையும் சில ஆய்வாளர்கள் முன்வைத்திருக்கிறார்கள்.

இந்த தியோனிஸஸின் கிரேக்கப் புராணக் கதையையும் கிரேக்க மன்னன் அலெக்ஸாந்தரின் வரலாறையும் கொஞ்சம் பட்டி டிங்கரிங் பார்த்து சிவபெருமானுக்கும் முருகனுக்கும் பங்கு பிரித்திருக்கிறார்கள். அலெக்ஸாந்தரை ‘ஸ்கந்தர்’ என்றே பண்டைய குறிப்புகளில் வழங்குகிறார்கள். நம்முடைய ‘தமிழ்க்கடவுளான’ முருகனின் வீரப்பிரதாபங்களை முன்னிறுத்தும் புராணக் கதையின் தலைப்பு ‘ஸ்கந்த புராணம்’. அலெக்ஸாந்தர் போரிட்ட இந்திய மன்னனின் (போரஸ்) கொடியில் சேவல் இருந்திருக்கிறது. முருகனின் கொடியில் இருப்பதும் சேவல் தான். அலெக்ஸாந்தரை சந்திரகுப்த மௌரியர் கடவுளாக வணங்கியதற்கான சான்றாதாரங்கள் உண்டு.

பாலகனான தியோனிஸஸை கவனித்துக்கொள்ள பன்னிரெண்டு பெண்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். முருகனுக்கு ஆறு கார்த்திகைப் பெண்கள். அலெக்ஸாந்தரை அல்லது ஸ்கந்தரை கடவுளின் மகன் என்றும் இளவரசன் என்றும் வர்ணித்திருக்கிறார்கள். குமரன் என்றாலும் இளவரசன் தான். இன்னும் என்னென்னவோ கட்டுடைப்புகள், சந்தேகங்கள், ஊகங்கள். மேலும் ஆர்வமுள்ளவர்களுக்கு சில இணைப்புகளை பின்னூட்டத்தில் கொடுத்திருக்கிறேன்.

ஆக, அலெக்ஸாந்தரைத் தான் நாம் முருகனாக வணங்கிக் கொண்டிருக்கிறோமா? இந்த விஷயம் நாம் தமிழர் தம்பிகளுக்குத் தெரியுமா?

Proverbs: Umbrella

’வெளியே விரியும்; வீட்டிற்குள்ளே சுருங்கும்’

மகளின் தமிழ்ப் புத்தகத்தில் கொடுத்திருந்த விடுகதைக்கு விடை தேடிக் கொண்டிருந்தோம். அவளும் அறிவியல்பூர்வமாக யோசித்து ‘தோல்’ என்றாள். குளிர்காலத்தில் தோல் தசைகள் சுருங்கும். கோடை சூரியன் காய்ச்ச ஆரம்பித்த பின் சிவப்பாகி நீளும்.

எனக்கு சரியான விடை அது இல்லை. அடுத்ததாக என் மனைவி விடை தெரியும் என்றாள். ‘மில்கி வே’, புவி. நமது சூரிய மண்டலத்தைப் பொருத்தவரை, இந்தப் பேரண்டம் பெரிதாகிக் கொண்டே இருக்கிறது. ரொம்ப நோவா பார்க்கிறாளோ என்று சந்தேகம் வந்துவிட்டது.

இப்படியே நிறைய பதில் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
– பலூன். வெளியில் போனால் பறக்கிறது.
– முட்டை. வயிற்றுக்குள் குட்டி; வெளியில் வந்தால் குஞ்சு; கொஞ்ச நாளிலேயே முழு வளர்ச்சி
– புத்தகம். கிணற்றுத் தவளையாக இல்லத்திற்குள்ளே முடங்கினால் சிந்தனை சுருங்கும்; உலகைப் பார்க்க கிளம்பினால் மனம் விரிவடையும்.

எதுவும் திருப்தியில்லை. நான் கவிஞன் இல்லை. விஞ்ஞானி. விடை ஒன்றுதான் இருக்க முடியும்.

கடைசியாக துப்பு கொடுக்க ஆரம்பித்தேன். “மழை.”

மகள் உடனடியாக விடை சொன்னாள். “அம்ப்ரெல்லா.”

“தமிழில் சொல்லு…”

“மழையில் இருந்து தப்பிக்க ஷீல்ட் மாதிரி உபயோகிக்கிறோம். எனவே, அதன் பெயர், ‘மழைக் கேடயம்’.

எதிர்காலத்தில் என்ன நடக்கும்? – ப்ரூஸ் ஸ்டெர்லிங் பேட்டி

சொல்வனத்தில் இந்தப் பேட்டியின் மேம்பட்ட வடிவம் வெளியாகி இருக்கிறது. மொழிபெயர்ப்பின் முதல் டிராஃப்ட் இங்கே:

கோரி டாக்டொரொவ்: தொழில்நுட்பத்தினால் உலகம் மெருகேறியுள்ளதாக உணர்கிறீர்களா?

புரூஸ் ஸ்டெர்லிங்: நம்மைப் போல் மனிதர் அல்லாத எந்த ஜீவனிடமும் இந்தக் கேள்வியை கேட்டால், அதன் கோணத்தில் பார்த்தால், சர்வ நிச்சயமாய் ’முன்னேறவில்லை’ என்பதுதான் பதில். நிறமிழந்த முயல்களும் மரபணு ஒட்டு போட்ட புகையிலைச் செடிகளும் ‘ஆமாம்’ வாக்கு போடலாம். தொழில்நுட்பம் என்னும் வார்த்தையை புழங்க ஆரம்பித்த கிரேக்கர்கள் காலம் துவங்கி வாழ்ந்து வரும் பவளப் பாறைகளிடமோ கற்பகத்தரு மரங்களையோ கேளுங்கள். நிறைய சோகக் கதைகளை கேட்பீர்கள்.

மாத்யூ பாட்டில்ஸ்: நாளைக்கு என்ன நடக்கும் என்று எண்ணுவதே மனிதனின் நித்திய கலக்கம். வருங்காலம் இப்படி சொக்குப்பிடி போட்டு வைத்திருப்பதில் பிரத்தியேகமாக எதாவது உண்டா?

புரூஸ் ஸ்டெர்லிங்: நம்மைப் போன்ற புதிய தலைமுறையிnar, சரித்திர காலத்தில் இருந்து வரும் ஜோசியர் கையில் எதிர்கால ஆருடங்களை ஒப்படைக்க மாட்டோம். சமீபகாலமாக, வருங்கால ஆருடம் என்று பார்த்தால் நிறைய விஷயம் இருக்கிறது. முதலாவதாக, “வளர்ச்சி” என்றால் என்ன என்றே இப்பொழுது தெரியவில்லை. நம் பழமைவாதிகள் எல்லோரும் புரட்சியாளராகி விட்டார்கள். முற்போக்காளர்கள் எல்லோரும் பழமைவாதிகளாகி விட்டார்கள்.

நம்முடைய எல்லா வகையான சமூகப் போக்கு குறித்தும் அனைவரின் பழக்கவழக்கங்கள் குறித்தும் சேதி சேகரிக்க விரும்புகிறோம். முன்னெப்போதும் இருந்ததை விட அதி பிரும்மாண்டமாக, ஒவ்வொருத்தருடைய அந்தரங்க வாழ்க்கையையும் சமூகச்சங்கிலித் தொடர்புகளையும் கோர்த்து விஷயங்களை பெரிய அளவில் சேமிக்கிறோம். புதுக்கருக்கு இன்னும் போகாமல் இருப்பதால் இப்பொழுது இதில் நிறைய ஆர்வம்; இதெல்லாம் பயனுள்ளதாக மாற்றும்வரை இதில் நமக்கு ஆச்சரியம் இருக்கும்.

ஜியுஸெப்பி கிரானியெரி: உங்களுடைய ‘காதல் விநோதாமானது’ புத்தகத்தில் காவின்ஸ் சொல்வார்: ‘நான் கணினி கிறுக்கன் போல் ஆடை அணிவதில் கவனம் செலுத்தாதவனாக இருக்கலாம்; ஆனால், என்னால் மக்களின் போக்குகளை கணிக்க முடியும்.’ உங்களால் அடுத்த ஐந்தாண்டுகளில் கவனிக்கப்பட வேண்டிய ஐந்து போக்குகளை பொறுக்க முடியுமா?

புரூஸ்: உங்களுடைய கற்பனையை எப்படியாவது குதிரையாக்கினால்தான் என்னுடைய வருங்கால போக்குகளை பொறுக்கமுடியும்.

எதிர்கால கணிப்புகளிலேயே மிக மிக முக்கியானதென்றால், அது வானிலை மாற்றம். மனிதருக்கு அதைப் பார்ப்பதற்கே வெறுப்பாக இருக்கிறது. குற்றவுணர்ச்சியால் குமைகிறார்கள்; அல்லது தோள் குலுக்கி கண்டுங்காணாமல் ஒதுக்குகிறார்கள். ஆனால், நாளைய தேதியில் பெரிய வித்தியாசத்தை, வேறு எந்த சமகால நிகழ்வை விட வெகு ஆழமான பாதிப்பை உருவாக்குவதென்றால், அது இதுதான்.

தனிப்பட்ட முறையில் பார்த்தால், எனக்கு பல விஷயங்களில் நாட்டம் உண்டு. அமெரிக்காவில் தோன்றாத ஆனால் உலகத்தின் பிற நாடுகளின் புகழ் பெற்ற இசை பிடிக்கும். அருகிப் போன ஊடக சாதனங்களை நோட்டமிடுவேன். எண்வய மிடையத்தில் தோன்றும் புதுப் புது கணிமொழிகள் கற்பேன். ஊட்டம் சேர்த்த எதார்த்தம் கொண்டு இயங்கும் கணிப்பொறிகளை விரும்புகிறேன். இணையத்தின் பொருளாக ஒவ்வொரு பொருளிலும் நீக்கமற இணையம் நிறைந்திருக்கும் சாத்தியத்தினை ஆராய்கிறேன்.

உலகத்தில் இதெல்லாம் முக்கியமான போக்குகள் அல்ல. ஆனால், எனக்கு முக்கியமாகப் படுபவை. புரிந்து கொண்டு, ஆழமாகப் படித்து அறிந்து கொள்ள விரும்புபவை. இவை எல்லாமே என்னுடைய வலைப்பதிவில் முக்கியமானதாகவும் அடிக்கடி எழுதப்படுவதாகவும் இருக்கிறது.

இந்த உலகம் முழுக்க பல்வேறு போக்குகாளால் ஆனவை. ஆயிரக்கணக்கில் புத்தம்புது பாதைகள் இருக்கின்றன. ஆனால், ஒன்றே ஒன்றை எடுத்து அதனுள் சென்றால்தான், அந்த நுட்பத்தின் சூட்சுமத்தை நம்மால் பயன்படுத்திக்க முடியும்.

உதாரணத்திற்கு புகை பிடித்தால் உடல்நலம் கெடலாம் என்பதை எடுத்துக்கலாம். அனைவரும் அதை சொல்கிறார்கள். இவ்வளவு ஏன்… அந்த சிகரெட் பாக்கெட்டிலேயே புற்றுநோய் படம் எல்லாம் போட்டிருக்கு. எனவே, விளைவுகளில் எந்த ரகசியமும் இல்லை. ஆனால், முழிப்பு வருகிற வரைக்கும் விடப்போவதில்லை. நமக்குனு வந்துச்சுனாத்தான் வெளங்கும். இது ஒரு பாதிப்பு. அது நம்மைத் தாக்கி உணரவைக்கிற வரைக்கும் தெரியப் போவதில்லை. இப்படித்தான் ஒவ்வொரு ‘போக்கு’ம். நமக்கு அந்தப் போக்கின் விளைவுகள் சொந்தமாவதற்கு நாம் அது கூட உறவாடணும்.

கோரி டாக்டொரொவ்: கணினியில் உருவாக்கும் ஓவியத்திற்கும் பேப்பரில் வரைவதற்கும் நடுவே உள்ளே பிரிவினை என்றாவது இல்லாமல் ஆகுமா? அல்லது ஏற்கனவே மின்னணுவியல் கலைக்கும் துணியில் தீட்டும் கலைக்குமான வித்தியாசங்கள் நீங்கிவிட்டதா?

புரூஸ்: இந்த பாகுபாடு எல்லாம் பாம்பு இரப்பை மாதிரி. மோனே, வான் கோ மாதிரி புகழ்பெற்ற ஓவியர்களின் வேலையை வாங்குவதற்கு ஏலப் போட்டி எதை வைத்து நடக்கிறது? அந்த ஓவியத்தின் கணினி பிரதியை வைத்துதானே.

மின்னணுவியல் கலைகளில் ஒரு வகையை மட்டும் சர்வ நிச்சயமாய் “மின்னணுவியல்” என்று பொதுமைப்படுத்தலாம் — அந்த கலை வடிவத்தில் கம்பிகள் காணக் கிடைக்கும்; மின்சக்தி பாயும்; நிஜமாகவே ஷாக் அடிக்கலாம். அந்த மாதிரி கலைப் படைப்பு நீடித்த தாக்கத்தை உண்டாக்காது.

ஆனால், எப்பொழுது இது துவங்குகிறது? எங்கே முடிகிறது? இந்த அனுபவத்தை சொல்லால் அளந்து விடுவது மிகவும் சிரமமான காரியம். விழியங்கள் எப்பொழுது கலை உன்னதத்தைத் தொடுகிறது? படம் பார்த்த பின்பு அந்த படத்தின் பாதிப்பு எப்பொழுது தீர்ந்து போகிறது?

ஐ-போனில் கிடைத்த அனுபவத்தையும் கம்பிப் பின்னல்களின் நடுவே குவிந்து கிடக்கும் கம்ப்யூட்டர் கலைத் தோற்றங்களையும் கணிமொழியில் நிரலியாளர் நிகழ்த்திய அற்புத சாத்தியங்களையும் எப்படி அந்த விஷயங்களின் நுட்பங்களை தோற்றமும் மறைவும் என்று அறுதியிட்டு பகிர முடியும்?

முன்பு நாடகம் இருந்தது. அது மட்டுமே கலை. இப்பொழுது சினிமாவும் அதற்கு நிகரான கலை. நாளைக்கு மின்னணுவியலில் உருவானவை மட்டுமே கலாவடிவமாகுமா என்பதை மேடையில் கூத்து கட்டின காலத்தில் திரைப்படம் கலையாக ஆகுமா என்று வினவுவதற்கு ஒப்பிடலாம்.

எனக்கு அப்படி மின்கல கலைக் காலத்தை கற்பனை செய்ய இயலுகிறது. ஆனால், நிஜத்தில் நிகழுமா என்றால் மாட்டேன் என்று மனசு சொல்கிறது. ரத்தமும் சதையுமான வடிவத்தை விட்டு விலகும் சமுதாயம் எனக்கு அன்னியமாகப் படுகிறது.

பால் டி ஃபிலிப்போ: எண்பதுகளிலே நீங்கள் அறிவியல் புனைவுகளை எழுத ஆரம்பித்ததற்கு பதிலாக, இன்றைக்கு நீங்கள் அறிபுனை எழுத்தாளராக எழுதத் துவங்கினால், என்ன உத்தியை உபயோகிப்பீர்கள்? புதிய அறிபுனை எழுத்தாளர்களுக்கு தங்கள் பெயரை பரவலாக்க, புகழ்பெற எந்த வியூகம் சரியானது? சுருக்கமாக சொன்னால், 2013ன் நிதர்சனங்கள் என்ன?

புரூஸ்: இது கொஞ்சம் கஷ்டமான கேள்வி. ஒரு விஷயத்தை மட்டும் சிருஷ்டிகர்த்தாவாக பிடித்துக் கொண்டு காலந்தள்ளுவதென்பது இப்பொழுது இயலாதது. இன்றைக்கு அறிபுனை படைப்பாளியாக கலக்க வேண்டுமானால் உங்களுக்கு வலைப்பதிய தெரிய வேண்டும்; கருத்தரங்குகளில் பேச வேண்டும்; காமிக்ஸ் உலகிலும் வளைய வர வேண்டும்; கொஞ்சம் தொலைக்காட்சி; கொஞ்சம் சினிமா…

அறிபுனை எழுத்தாளராக இருந்து கொண்டு புத்தகங்கள் போட்டு, பத்திரிகைகளில் மட்டும் எழுதிக் கொண்டிருந்ததெல்லாம் இறந்த காலமாகிப் போயாச்சு.

எழுத்தாளராவதற்கான முதல் அடி என்பது உங்களுக்கு என்ன வாசிக்க பிடித்திருக்கிறதோ, அதைப் பற்றி எழுதுவது. அதற்கு அடுத்ததாக, நீங்கள் எழுதுவதை எவர் கவனமூன்றி வாசிக்கிறார்கள் என்று அறிந்து கொள்ளுங்கள். அவர்கள் ஏன் நீங்கள் எழுதுவதை விரும்புகிறார்கள் என்று புரிந்து கொள்ளுங்கள்.

உங்களுடைய அதிமுக்கியமான, மிகப் பெரிய அலைகளை உருவாக்கக்கூடிய படைப்புகளுக்கு, எந்த வெளியீட்டாள்ரும் பணம் தரவோ, எவரும் புத்தகமாக வெளியிடவோ வராவிட்டால் ஆச்சரியமே பட வேண்டாம்.

டெட் ஸ்ட்ரிஃபாஸ்: உங்களுடைய எழுத்து நடையையோ, கதைகளின் கருவையோ, தற்கால கணினி உலகிற்காக மாற்றிக் கொண்டீர்களா? வைய விரிவு வலை காலத்தின் புத்தகத் தயாரிப்பும் விநியோகமும் வாசகரோடு தொடர்பு கொள்ளும் முறையும் மாறினதால் எழுத்தாளருக்கு என்ன பின்விளைவுகள் ஏற்பட்டுள்ளன?

புரூஸ்: இந்தப் பிரச்சினையால், எண்பதுகளில் இருந்தே என்னுடைய எழுத்துலகம் மிகவும் சிரமதசையில் இருக்கிறது. இணையத்திற்காக நிறைய எழுதுகிறேன்; அதற்கும் என்னுடைய புத்தகங்களுக்கும் சம்பந்தமேயில்லை. இந்த கஷ்டத்தின் பின்விளைவுகளை சொல்வது சிரமம். ஆனால், அனுமானித்து வைக்கிறேன்.

என்னுடைய நடை கெட்டுப் போயிருக்கிறது. என்னால் எப்படி எல்லாம் பலவிதமாக வெளிப்படுத்திக் கொள்ள முடியும் என்று நான் முழுக்க முழுக்க முனைப்பு எடுத்து பயிலவே இயலவில்லை. ஆனால், அதுவே என்னை விழிப்பாகவும் நெகிழ்வாகவும் வைத்திருந்திருக்கிறது. இதற்கு, தற்கால இசைக் கலைஞரிடம் உள்ள டிஜிட்டல் இசையின் பாதிப்பை ஒப்பிடலாம். நிறைய புதுமையான சத்தங்களை உண்டாக்குகிறார்கள். அவற்றை அவசரமாக உருவாக்குகிறார்கள். ஆனால், அதனால் மட்டும் இசையில் லயிக்க முடிவதில்லை.

என்னுடைய எழுத்தின் மூலம் உலகத்தின் மூலை முடுக்கில் உள்ள அனைவரிடமும் பேச முடிகிறது என்று உணர்ந்தபோது மிகவும் கடமை கொண்ட படைப்பை கொடுக்க முடிந்தது. ஆனால், உலகளாவிய பார்வையினால், தேசிய பதிப்பாளரின் சட்டதிட்டங்களுக்கு அப்பால் என் எழுத்து என்னைக் கொண்டு போய்விட்டது. உலக மக்களுக்காக சர்வதேச சந்தையில் புத்தகம் போடும் பதிப்பாளர்கள் கிடைக்காத காரணத்தால் நூல் எழுதி வெளியிடும் ஆர்வம் குறைந்து போனது.

நடுவண் குடிமக்களுக்காக மட்டுமே அச்சடிக்கும் புத்தக வெளியீட்டாளர்கள் என்னை மறைத்து ஒதுக்குகிறார்கள். ஆங்கிலத்தில் எழுதும் எந்த மேற்கத்திய படைப்பாளிக்கு இந்த மாதிரி புறந்தள்ளல் சகஜமானது. உலகமயமாக்கலின் பொதுப் பிரச்சினை இது.

டெட் ஸ்ட்ரிஃபாஸ், ஜான் சண்ட்மான்: பெருங்கதைகளின் அந்திமக் காலம் நெருங்கி விட்டதாகவும், இனி வரும் காலம் சின்னச் சின்ன கதைகளிலும் குட்டிக் கதைகளை கோர்த்ததாகவும் விளங்கும் என்று சிலர் சொல்கிறார்களே. அதைப் பற்றிய தங்கள் கருத்து என்ன?

புரூஸ்: கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். 2062ல் எவராவது ‘2012ஆம் ஆண்டின் மிகச் சிறந்த ட்வீட்கள்’ என்னும் நூலை வாங்கிப் படிப்பாரா? ‘தலை சிறந்த லைக் பட்டியல்’ என்று கற்பனை செய்ய முடியுமா? நான் வலையில் பதிபவன். கலைத்துப் போட்டு தொகுக்கும் விவரணை எனக்கு பிடிக்கும்தான். வலைப்பதிவு என்பது குறைந்த காலத்தில் கெட்டுப் போகும் பதார்த்தம் போன்றது. நீங்கள் வடிவேலுவின் அவ்வ்வ்வ் காமெடியை ரசிக்கலாம்; பகிரலாம்.

டெட் ஸ்ட்ரிஃபாஸ்: நல்ல அறிபுனை எழுத்தாளர்களைப் போல் நீங்களும் புதிய சொல்லாட்சிகளை ஆங்கிலத்தில் உலவ விட்டிருக்கிறீர்கள். தெரிந்த வார்த்தைகளை வித்தியாசமாகக் கலைத்துப் போட்டு புதிய மொழியை உருவாக்குவது எழுத்தை உயிர்ப்போடு வைத்திருந்தாலும், தேவைதானா?

புரூஸ்: சமூக மாற்றம் மொழியில் உள்ள போதாமையை உணர்த்துகிறது. அதனால், நான் மொழியை அடுத்த கட்டத்திற்கு தள்ளுவதாக தோன்றுகிறது. உதாரணமாக, ’பொருட்களின் இணையம்’ என்னும் உபயோகத்தை எடுத்துக்கலாம். ’பொருள்’ என்றால் எதைக் குறிக்கிறது? எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். உங்களின் கார், ஃப்ரிட்ஜ், செல்பேசி… இப்படி… எந்தப் பொருளாக வேண்டுமானாலும் இணையத்தின் முழு சாத்தியத்தை உள்ளடக்கி இருக்கலாம்.

அடுத்ததாக ‘ஸ்பைம்’ – விண்வெளிகளில் கால வர்த்த பரிமானங்களை அளப்பதற்கான எளிய சொல். மறு சுழற்சி, முப்பரிமாண உருவாக்கம், பொய்த் தோற்றங்களுக்கான மெய்நிகர் என்றெல்லாம் விலாவாரியாக விளக்குவதற்கு பதிலாக ஸ்பைம் என்று சொல்லிப் போய்விடலாம். வேணுங்கிறவங்களுக்கு இருக்கு.

ஒரு பிரச்சினை இருக்கு; அதைக் குறித்து பேசணும்; பொது வெளியில் பரவலாக விவாதிக்கணும்; அதைக் குறித்து முன் கதை சுருக்கம் எல்லாம் சொல்லாமல் சுலபமாக எல்லோரையும் சென்றடைய வார்த்தை உபயோகங்களை உருவாக்குவதில் என்ன கொறஞ்சு போச்சு? ஆங்கிலத்தில் கொச்சை மொழியில் ஆயிரக்கணக்கான புது கிளைமொழிகள் உருவாகிக் கொண்டே இருக்கிறது.

‘பக்கிஜங்க்’ என்று நான் புது வார்த்தை உருவாக்குவதால் ஆங்கிலம் அழிந்துவிடப் போவதில்லை. மறு சுழற்சிக்கு உள்ளாக்க முடியாத கரிம நுண்குழாய்கள் குப்பை போடுகின்றன என்பதற்கு வட்டார வழக்கு உருவாக்குகிறேன்.

‘குப்பைவெளி’ (junkspace) என்றும் உருவருபெருவுரு (blobject) என்றும் கவித்துவமாக நான் பேசுவதாக சிலர் நினைக்கிறார்கள். அது நான் இல்லை. இந்த சொல்லாட்சிகளை கண்டுபிடித்து புழக்கத்தில் விட்டது மட்டுமே நான். அதனால் என்ன போச்சு? நான் அறிபுனை எழுத்தாளன். புது வார்த்தைகளை பயன்படுத்துவதற்காக நான் கைதாகப் போவதில்லை.

மாத்யூ பேட்டில்ஸ்: நாம் எதிர்பாரா வகையில் எது நம் காலங்கடந்து நிற்கும்?

புரூஸ்: பெரும்பாலும், பழங்கால சமாச்சாரங்கள்தான் நம் காலங்கடந்து தாக்குப் பிடிக்கிறது. பிரமிடுகளை எடுத்துக் கொள்ளலாம். மனிதனின் மற்ற எல்லா விஷயங்களை விட நீண்டகாலமாக இருக்கிறது. நாம் சேமிக்கும் இணையக் கோப்புகளை விட பேப்பர் நிலைத்து நீடிக்கும் என்று சொன்னால் அதிர்ச்சியாகத்தான் இருக்கும். ஆனால், வன்தட்டுகள் எளிதில் அழியக் கூடியவை; பிட்டு பிட்டாக பிட்டுகள் உதிர்ந்து போகும்.

மற்ற நாகரிகத்தைப் போல் நாமும் இருந்தால், நம்முடைய குப்பை கூளங்களில்தான் சிறப்பான துப்புகளை விட்டுச் செல்வோம். குப்பை நம்மிடம் நிறையவே இருக்கிறது. பிரமிடு கோபுரம் மாதிரி நிலம் நிரப்பி, குப்பை மலை கொண்டிருக்கிறோம்.

ரிச்சர்ட் நாஷ்: நீங்க முன்பொரு முறை பேசும்பொழுது ’என்னிடம் வருங்காலத்தைப் பற்றி அறுதியிட்டு சொல்ல வேண்டுமென்று கேட்டுக் கொண்டால், நமக்கு வயதாவது மட்டுமே’ என்று குறிப்பிட்டீர்கள். அனைவரின் ஆயுளும் அதிகரித்து வரும் இந்தச் சூழலில் என்ன மாற்றங்கள் நிகழும் என்று சொல்வீர்கள்?

புரூஸ்: இன்றைய முதியோர் பாதுகாப்பங்களில் நம்முடைய வருங்காலத்தை உணரலாம். ஐரோப்பாவில் மூத்த நகரமாக ஜெனீவாவை சொல்கிறார்கள். அதிக அளவில் வயதானோர் வாழ்வதால் அந்த அடைமொழி கிடைத்திருக்கிறது.

ஒவ்வொரு நிறுத்தத்திலும் நின்று நிதானித்து, தடுமாறி ஏறி இறங்கும் முதியோர் நிறைந்த பயணங்களினால் பேருந்துகள் தாமதமாக ஓடுகின்றன. தாத்தா, பாட்டி நிறைந்த காபி கடைகளில் அவசரம் இல்லை; சத்தம் இல்லை.

குழந்தைகளோ அவர்கள்பாட்டுக்கு தங்கள் வயதொத்தவர்களுடன் தனியாக சேர்ந்து அவர்கள் இடங்களில் சுற்றுகிறார்கள். ஜெனீவா கிழவிகளானால் நிறைந்த இடமாக இருக்கிறது. மருத்துவ முன்னேற்றத்தினால் ஆயுள் எதிர்பார்ப்பு அதிகரிக்க, அதிகரிக்க, ஆண் – பெண் பால் சமநிலை சரிகிறது.

இது ஒன்றும் ஆச்சரியமான மாற்றம் அல்ல. ஆனால், மாஸ்கோவுடன் ஒப்பிட்டு பார்ப்போம். அங்கே ஆயுள் எதிர்பார்ப்பு ஜெனீவா போல் நீண்ட நாள் அல்ல. இரைச்சலும் கவர்ச்சியும் கூச்சலும் நிறைந்திருக்கும் மாஸ்கோவில் வாழ்வதும் கடினமே.

ரிச்சர்ட் நாஷ்: ஆயுள் எதிர்பார்ப்பு எல்லோருக்கும் கூடி வரும் காலகட்டத்தில் கலாச்சார மாற்றங்களாக என்ன நடக்கும்? ஒரு பக்கமோ அபரிமிதமான வளம்; இன்னொரு பக்கத்திலோ கடுமையான கருவுறுதிறன் பஞ்சம். வயதாகிப் போன முதியோரும் இந்த செழுமை ஏற்றத்தாழ்வும் எவ்வாறு ஒன்றை ஒன்று தொடுகிறது?

புரூஸ்: கருவளம் கம்மியாவதெல்லாம் கொஞ்ச காலம்தான் நடக்கும். அதற்கப்புறம் எந்த குழுவோட கருத்தரிக்கும் திறன் கம்மியாச்சோ, அவங்கள இன்னொரு குழு ரொப்பிரும். இன்னொரு வார்த்தையில் சொல்லணும்னா, பணக்காரங்களுக்கு குழந்தை பிறக்கவில்லையென்றால், புது பணக்கார வர்க்கம் முளைச்சுரும்.

ஆயுசு ஜாஸ்தியாகிக் கொண்டே போனால், முதியவர்களின் மக்கள்தொகை அதிகரிக்கும்; அதனால், இளசுகளின் குறைவான மக்கள்பேறு விகிதத்திற்கும், கிழவர்களின் எண்ணிக்கைக்கும் சமனாகிப் போச்சு என்று சிலர் வாதிடுகிறார்கள். அந்த மாதிரி கணக்கு என்னிக்குமே வேலை செய்ததில்லை.

இப்பொழுது நிறைய பேர் நிறைய ஆயுட்காலம் வரை வாழ்கிறார்கள். அது கொஞ்சம் எளிது. ஆனால், எல்லாவிதமான மனிதர்களும் நிறைய ஆயுள் வாழவில்லை. அதை சாத்தியமாக்க ரொம்பக் குறைவான முயற்சியே செய்திருக்கிறோம். நான் முடியாதுனு சொல்லவரல. இந்த மாதிரி நோய்வாய்ப்பட்டவர், மூன்றாம் உலகத்தவர்னு எல்லோருடைய வயதும் நீடித்து இருக்கக்கூடியதைப் பற்றி நிறைய அறிபுனை கதை கூட நான் எழுதியிருக்கிறேன். ஆனால், நிஜத்தில் பார்த்தால், ஒண்ணும் நடக்கல.

சோதனை எலியின் ஆயுளைக் கூட ஐந்து அல்லது பத்து மடங்கு அதிகரிக்க முடியல. இரண்டு வருஷம் வாழுகிற எலி, இன்னொரு வருஷம் கூடுதலாக வாழுது. அதை பத்து வருஷமா மாற்ற இன்னும் இயலவில்லை. அப்படி செய்ய முடிஞ்சா என்னோட கருத்து உடனடியாக மாறும்; கூடவே நிறைய கவலையும் வரும்; அரசியலில், சட்டத்தில், பொருளாதாரத்தில், அறத்தில், சமூகத்தில் என்று எல்லா துறைகளிலும் திரும்பிச் செல்ல முடியாத மாற்றங்களுக்கு உட்படுவோம்.

மரியான் டி பியர்ஸ்: நெடுங்காலம் வாழ்வதைப் பற்றி பேசும் இந்த சமயத்தில் மனித குலத்தை காப்பாற்றும் குணாதிசயமாக எதை சொல்வீர்கள்? வருங்காலத்தில் உங்களுக்கு எந்த விஷயம் பெருத்த நம்பிக்கையைத் தருகிறது?

புரூஸ்: என்ன நடக்குதுனே தெரியாமல் பொதுஜனங்கள் இருப்பதுதான் எனக்கு பெருத்த நிம்மதியைத் தருகிறது. கணிக்கவே முடியாத தகவல்களுக்குள் தடுக்கி விழுவதுதான் காலங்காலமாக நடந்து வருகிறது. புதுசு புதுசா தப்பு செய்யும்போதுதான் நாம குண்டுசட்டிய விட்டு வெளியே வருகிறோம். அகிலத்தில் பல ஆச்சரியங்கள் நமக்காக காத்திருக்கின்றன.

நம்மைக் காப்பாற்றி வருவது தூரதிருஷ்டி பார்வை அல்ல… சூது வாதில்லாத தன்மைதான்.

நீல்ஸ் கில்மேன்: உலக இலக்கியங்களில் இருந்து வருங்காலமறியும் தரிசனமும் ஞானதிருஷ்டியும் கொண்ட பார்வை தந்ததில் முக்கியமானது எவை என்று பட்டியலிடுங்களேன்?

புரூஸ்: நிச்சயமாய் வன்னேவார் புஷ் எழுதிய ‘நாம் யோசிக்கும்படி’ (As We May Think) சொல்வேன். ஆனால், அது தற்கால அறிவியல் குறித்த கட்டுரை. அதனால், ‘இலக்கியம்’ என்று ஒத்துக் கொள்ள மாட்டார்கள். எனினும், அசாத்தியமானது.

‘வீரமிக்க புது உலக’த்தில் (Brave New World) ஆல்டஸ் ஹக்ஸ்லி நிறைய கணிப்புகளை சரியாக சொல்லி இருந்தார். அவை நம்மை பயமுறுத்தா விட்டாலும், ஹக்ஸ்லியை அச்சுறுத்தியது.

ஜூல்ஸ் வெர்னின் முதல் நாவலான ’இருபதாம் நூற்றாண்டின் பாரிஸு’ம் அநாயசமாக ஆருடம் கணித்திருந்தது. ஆனால், வெர்னால் அதை அச்சுப் புத்தகமாக்க முடியவில்லை. அதனால் அநாயசமாகவில்லை.

பின்வருவதை முன்பே சொன்னதில் ஆல்பர்ட் ரொபிதாவின் கேலி சித்திரங்களும் சாதனை படைத்தவை.

ஜியூலியானா க்வாஜரோனி: ஊட்டம் சேர்த்த எதார்த்தம் கொண்டு இயங்கும் பொறிகள், நம் வருங்கால தொழில்நுட்பத்திற்கும் இணையத்திற்கும் புனைவுகளுக்கும் எவ்வளவு முக்கியம்?

புரூஸ்: நான் ’மிகைப்படுத்திய எதார்த்த’த்தின் மிகப் பெரிய விசிறி. இந்தத் துறை பலவிதங்களில் பிளவுபடப் போகிறது. விதவிதமான மென்பொருள்களும், கருவிகளும், பிரத்தியேகமான வழிகளும் இந்தத் துறையில் வரும். சிலது பெரிய அளவில் புகழடையும்; சில காணாமல் போகும்.

கணினித்துறை ’ஊட்டம் சேர்த்த எதார்த்தம்’ மூலமாக மீமெய்யியல் லட்சியங்களைத் தொடுகிறது. எது நிஜம்? நிதர்சனத்திற்கு நான் என்ன செய்ய முடியும்? கணினித் துறையினால் யதார்த்தத்திற்கு எந்த ஆபத்துமில்லை.

“விழியத் துண்டுகளை எவ்வாறு கைபேசியில் ஒட்டி வெட்டலாம்?” போன்ற எளிமையான கேள்விகளின் பதிலிலேயே சுவாரசியமான எதார்த்தங்கள் ஒட்டியிருக்கும்.