Cultural identity, family relationships & the complexities of Intergenerational Communication

கதைசொல்லி சீனத்து பாட்டி. அவளுக்கு பிழையற்ற ஆங்கிலம் வாராது. எனவே, அவளின் கொச்சை மொழியிலேயே சம்பவங்களைச் சொல்கிறாள். அவளின் அமெரிக்க மகளின் பார்வையில், அந்தப் பாட்டி மோசமான குழந்தை காப்பகர். பாட்டிக்கு மாப்பிள்ளை புருஷ லட்சணமாக வேலைக்குப் போகவில்லையே என்னும் அங்கலாய்ப்பு. பொண்ணாக பொட்டி பாம்பாக பேத்தியை வளர்க்க எண்ணும் இறுமாப்பு.

முழுக்கதையும் சொல்லப் போவதில்லை. #சொல்வனம் இதழில் வாசியுங்கள்.

அன்னிய தேசத்திற்கு ஆயா வேலை பார்க்க போகும் எந்த இந்திய தாத்தா, பாட்டிக்கும் நடக்கக் கூடிய விஷயம் இது.

இதைப் போல் பல கதைகள் ஏற்கனவே வந்திருக்கின்றன:

  1. “Everyday Use” by Alice Walker: ஆப்பிரிக்க அமெரிக்க சூழல்
  2. “The Third and Final Continent” by Jhumpa Lahiri: இந்தியச் சூழல்
  3. “The Joy Luck Club” by Amy Tan: சீன குடியேறிகளும், இரண்டாம் தலைமுறை அமெரிக்க மகள்களும்

எனினும் Gish Jen எழுதிய Who’s Irish? அதன் தமிழ் மொழிபெயர்ப்பால் மிளிர்கிறது. திறமையான மொழியாக்கம். எளிமையான, அணுகலான, சிக்கலற்ற நடை.

#Solvanam தளத்தில் படிக்கலாம்

Culture is the values, beliefs, thinking patterns and behavior that are learned and shared and that is characteristic of a group of people.Identities are constructed by an integral connection of language, social structures, gender orientation and cultural patterns.

பழம்பெரும் இசையும் செவ்விசையும்: சுருக்கமான பாலபாடம்

இசையின் சக்தி வேறுபட்டது. சில இசைக்கு, ஓரளவிற்கு எதிர்வினையாற்றாத பலர் உள்ளனர். இசை மக்களை வெவ்வேறு வழிகளில் பாதிக்கும். சிலருக்கு இது முக்கியமாக ஒரு உள்ளுணர்வு; உற்சாகமான ஒலி; அவர்கள் நடனமாடுகிறார்கள்; அல்லது அவர்களின் உடல்களை நகர்த்துவார்கள். மற்றவர்கள் அதன் செய்தியைக் கேட்பார்கள்; அல்லது அதன் வடிவம் மற்றும் கட்டுமானத்திற்கு ஒரு அறிவுசார் அணுகுமுறையை எடுத்துக் கொள்வார்கள். அதன் முறையான வடிவங்களையும் அசல் தன்மையையும் நோக்குவார்கள்.

#சொல்வனம் தளத்தில் விவேக் எழுதிய கட்டுரை அந்த மாதிரி ஒரு முன்னுரை.

ஏதோ ஒருவித இசையால் நகர்த்தப்படாத எவரும் இருக்க முடியாது. உணர்ச்சிகளின் முழு வரம்பையும் இசை உள்ளடக்கியது: இது நம்மை மகிழ்ச்சியாகவோ சோகமாகவோ, ஏக்கம் அல்லது ஆற்றல் மிக்கதாகவோ உணர வைக்கக்கூடும். மேலும் சில இசை மற்ற அனைத்தையும் மறந்துபோகும் வரை மனதை முந்திக்கொள்ளும் திறன் கொண்டது. இது ஆழ் மனதில் செயல்படுகிறது; நம் மனநிலையை உருவாக்கும்; சூழலை மேம்படுத்தி ஆழமான நினைவுகளைத் திறக்கும்.

இசையின் வரலாறு மனிதகுல வரலாற்றின் ஒரு பகுதியாகும். சடங்கின் இனவியல் ஆய்வுகள் — இசை உருவாக்கம் என்பது அடிப்படையானதும் உலகளாவிய உள்ளுணர்வு என்றும் காட்ட ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. பழமையான சமூகங்களிடையே அதுவும் ஒரு கலை வடிவமா? பல நூற்றாண்டுகளுக்கு முன்பு அந்த இசை எப்படி இருந்தது என்பது பற்றி நமக்கு பரந்த அறிவு இல்லை.

இன்றைய மேற்கத்திய இசை எப்படி எல்லாவற்றையும் அணுகுகிறது. ஒரு சிறிய திறவுகோல் #solvanam

Ponniyin Selvan Movie: What made Mani Ratnam to take it?

பொன்னியின் செல்வன் ஏன் வந்தது என்பது குறித்து ஏழு காரணம் சொல்லியாகி விட்டது.

மற்ற மூன்றையும் நினைத்துப் பார்த்து அந்த #PS1 அத்தியாயத்தை முடித்துவிடலாம்.

எட்டு:
“மரைக்காயர் : அரபிக்கடலின் சிங்கம்” படத்தைப் பார்த்தார்கள்.

  • அறுபதைத் தாண்டிய சுனீல் ஷெட்டி, பிரபு, அர்ஜுன், மோகன்லால் எல்லோரும் இளமையாகத் திரியும்போது நாற்பதுகளைக் கொண்டு படத்தை எடுக்கலாம் என முடிவு செய்தார்கள்.
  • மரைக்காயரில் அரபிக்குத்து; நபிகளின் சொற்பொழிவு; புனிதப் போர் என இஸ்லாம் குறித்த எளிய அறிமுகம். பொ.செ.வில் ‘அரியும் சிவனும் ஒண்ணு; அறியாதவன் வாயில் மண்ணு!’ என்னும் எளிமையாக்கங்கள்
  • அங்கே மாங்காதச்சன் , பணிக்கர், குரூப், அபூபக்கர் ஹாஜி, நாயர், கொச்சி ராஜா, சம்பூத்ரி (சமூத்ரி?) என நிறைய சிற்றர்சர்கள்; இங்கேயும் அவர்களின் உள்ளடி சதித் திட்டங்கள் உண்டு
  • குஞ்ஞாலி என்றாலும் மம்மாலி என்றாலும் மொகமது அலி என்றாலும் மரக்கார் பெயர்தான். (பொன்னியின் செல்வர், அருள்மொழிவர்மன், ராஜராஜ சோழன் என்பது போல்)
  • படம் பார்த்தால் சோர்வு வருகிறது (இரண்டு படத்திலும்தான்)

ஒன்பது:

இருபதாண்டுகள் முன்பு ஹாரி பாட்டர் புத்தகங்கள் தொடர்படமாக வெளியாகின. அதே போல் பல்லாண்டு முன்பு வெளியாகிய லார்ட் ஆஃப் தி ரிங்ஸ் நாவல்களும் மூன்று படங்களாக கொண்டாட்டமாக கோலாகலமாக வெளியானது.

அதைப் பார்த்து மணி ரத்னமும் எடுக்க நினைத்திருக்கிறார். எண்ணம் சிறப்பு; செயலாக்கம் அன்னியம்.

அதில் இருக்கும் பிரும்மாண்டத்தைத் தமிழில் ஓரளவிற்கு கொண்டு வருகிறார். எனினும், கதாபாத்திரங்களுக்கு உயிர் இல்லை. எதிர்பார்ப்பு இல்லை.

டைடானிக் மூழ்கினால் என்ன போச்சு என்று தோன்றுமாறு கப்பலைப் பற்றிக் கவலைப்படாமல் ரோஸ் பற்றியும் ஜாக் பற்றியும் சற்றே சிந்திக்க வைப்பது இயக்குனர் வேலை.


பத்து:

‘பார்த்தாலே பரவசம்’ மட்டுமே பாலச்சந்தர் அல்ல. ஆனால், அந்தத் தலைமுறைக்கு இயக்குநர் சிகரம் என்றால் அறுவை ரம்பம் என்றறியப்படுமாறு அந்தப் படம் ஓடியது.

கௌதம் வாசுதேவ மேனன் போன்று காற்று வெளியிடை, கார்த்திக் சுப்பாராஜ் போன்று செக்கச்சிவந்த வானம் என்று ஏனோதானோவென்று மற்ற இயக்குநர்கள் போன்று படம் வெளியிடாமல், தனித்துவமாக, தன் முத்திரையுடன் பார்வையாளர்களிடமிருந்து விடைபெற ஒரு சீரீஸ் தேவை – அதற்காக பொன்னியின் செல்வன் உருவாகிறது.

இயக்குநர் இமயம் பாரதிராஜாவிற்கு எக்கச்சக்க சீடர்கள்; ஆசான் ஜெயமோகனின் விஷ்ணுபுரம் வாசகர் வட்டம் போல். பாக்கியராஜ் நடிகராகவும் உலா வந்து போய் விட்டார்.

படம் என்றால் உச்சகட்டம் முக்கியம். கட்டுரை என்றால் இறுதி சொற்றொடர் முக்கியம். திரைமேதை என்றால் கடைசிப்படம் கொண்டே நினைவில் வைத்திருப்பார்கள்.

அதற்காகவே பொன்னியின் செல்வன்.

PS1 Reasons: Blue Sattai Maran

எடுத்ததெல்லாம் எடுத்தான்
அவன் யாருக்காக எடுத்தான்
சன் டிவிக்கா எடுத்தான் ?
இல்லை!
ப்ளூ சட்டைக்காக எடுத்தான்!!

சன் டிவிக்கா எடுத்தான்?
இல்லை…
ப்ளூ சட்டைக்காக எடுத்தான்!!

கிராஃபிக்ஸ்
கிடையாதென்றால் மாறன்
வீடியோ போட மறந்திடுமா

டிக்கெட்
இருநூறென்றால்
போய் வர
மிரண்டுடுமா

உனக்காக
ஒன்று எனக்காக
ஒன்று ஒருபோதும்
மணிரத்னம் எடுத்ததில்லை

எடுத்ததெல்லாம்
எடுத்தான் அவன் யாருக்காக
எடுத்தான் சன் டிவிக்கா
எடுத்தான் இல்லை
ப்ளூ சட்டைக்காக எடுத்தான்

எடுத்தவன்
மேல் பழியுமில்லை
விமர்சித்தவன் மேல்
பாவம் இல்லை

கிடைத்தவர்கள் பிரித்துக்கொண்டார்
பார்த்தவர்கள் பாயை
பிராண்டினார்

பலர் வாட
வாட சிலர் வாழ
வாழ ஒரு போதும்
மணிரத்னம் எடுத்ததில்லை

எடுத்ததெல்லாம்
எடுத்தான் அவன் யாருக்காக
எடுத்தான் சன் டிவிக்கா
எடுத்தான் இல்லை
மாறனுக்காக எடுத்தான்

புரியல என்போர்
இருக்கையிலே புரிபவர்கள்
புரியல என்பார்

தலை நிறைய வலி
இருக்கும் வாய் நிறைய
பபுள் கம் இருக்கும்

புரியாத
போதும் பிட்டு பிட்டென்று
எடுத்து வைக்கின்ற
பேரை வாழ்த்திடுவோம்

PS1 எடுத்ததெல்லாம்

எடுத்தான் அவன் யாருக்காக
எடுத்தான் சன் டிவிக்கா
எடுத்தான் இல்லை
ப்ளூ சட்டைக்காக எடுத்தான்

சன் டிவிக்கா
எடுத்தான் இல்லை
ப்ளூ சட்டைக்காக எடுத்தான்

(பொன்னியின் செல்வன் ஏன் உருவானது – ஏழாவது காரணம்)

அந்தப் பாடல் பெற்ற விழிய விமர்சனங்கள்:

PS1 ஏன் எடுத்தார்கள்? No Shave November

நோ ஷேவ் நவம்பர் மாதத்தை நினைவூட்டவே பொன்னியின் செல்வன் திரைப்படம் உருவாகி இருக்கிறது. – இது என்னுடைய ஆறாவது காரணம்.

படத்தில் வரும் நல்லவர்கள் – அதாவது சோழர்கள் எல்லோரும் தாடியும் மீசையும் வைத்திருக்கிறார்கள். கக்கத்தை மட்டும் சுத்தமாக மழித்திருக்கிறார்கள்
படத்தில் வரும் வீரபாண்டியன் மட்டும் – மொழுமொழு கன்னத்தோடு கழுத்தை இழக்கிறார்.

சின்ன வயது ஆதித்த கரிகாலனுக்கு கூட அரும்பு தாடி கொடுத்திருக்கிறார்களோ என சந்தேகம் இப்பொழுது வருகிறது.

படம் மயிருக்குக் கூட பிரயோசனம் இல்ல – என்று எவராலும் சொல்ல முடியாது. படம் முழுக்க கொண்டைகளும் குடுமிகளும் கோடாலி முடிச்சுகளும் அவிழ்ந்த நீண்ட சௌரி முடி கூந்தல்களும் உதிரவிட்டு, சடாதரனை நினைவு கூர்ந்து கொண்டே இருக்கிறார்கள்.

மூலக் காரணத்தை ஆராய்வோம்: ஏன் இந்த நவம்பர் மாதத்தில் மட்டும் கேசத்தின் மீது பாசம்?

  1. புற்றுநோய் ஆரய்ச்சிக்கான நிதி திரட்டுவது
  2. ஆண்மைச்சுரப்பிப் புற்றுநோய் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துவது – ஆடவர் இறப்பதற்கான முக்கிய காரணத்தைத் துவக்கத்திலேயே பரிசோதனை மூலம் கண்டுபிடிப்பது
  3. விரைப் புற்றுக்கட்டி பற்றிய அக்கறையை ஆண்களிடம் பரவலாக்குவது
  4. இது குளிர்காலத்தின் துவக்கம் – வீட்டிலேயே சோம்பித் திரியாமல் உடற்பயிற்சி செய்வது

இந்த மாதிரி அனைத்து சோழகுல இளவரசர்களையும் சிற்றரசர்களையும் தாத்தாக்களையும் முகமுடி கொண்டு ரொப்பி, மயிர்கழியா நவம்பர் மாதத்தில், அமேசான் ப்ரைம் கொண்டு வெளியிடுவது – 6த் ரீஸன்.

அரசகட்டளையாக பார்த்து வைக்க வேண்டிய பத்து படங்கள் என்ன?

தமிழில் ஒவ்வொரு காலகட்டத்திலும் கட்டாயம் பார்க்க வேண்டிய திரைப்படங்கள் உண்டு.

எழுதப்படாத விதியாக அறிவிக்கப்படாத அரசாணையாக, “அரங்கிற்கு சென்று விட்டீர்களா?” என விசாரிப்பதற்கான முகாந்திரம் கொண்ட பட்டியல் இது.

இந்தப் பட்டியலில் நுழையத்தான் #PS1 எடுத்திருக்கிறார் மணி ரத்தினம். – இது ஐந்தாவது காரணம்.

எனக்கு இவ்வாறு புகட்டப்பட்ட இந்தப் பட்டியலைப் பார்ப்பதற்கு முன் உங்களுக்கு இந்த மாதிரி விதிக்கப்பட்ட இராசநீதி என்ன படங்கள்?

(பட்டியல் எந்த வரிசையிலும் இல்லை)

  1. ஔவையார் / சந்திரலேகா
  2. சம்சாரம் அது மின்சாரம்
  3. கல்யாணப் பரிசு
  4. சிவகவி
  5. சிந்து பைரவி
  6. மனோகரா
  7. உருவங்கள் மாறலாம் / சரணம் ஐயப்பா
  8. திருவிளையாடல் / ஆதிபராசக்தி
  9. திரிசூலம் / ஊட்டி வரை உறவு
  10. பொன்னியின் செல்வன் 1

அவ்வையார் – சாமி படம் என்பதால் ஒரு சாராரும் இலக்கியப் பெருமை என்பதால் தமிழ்ப் பற்றாளர்களும் உதாரண பெண்டிர் என்பதற்காக மற்றொரு குழுவும் அதை குழந்தைகளுக்கு காண்பித்தார்கள். அந்த மாதிரி கட்டாயக் கருத்துத் திணிப்பு என்பதால் சேர்த்துக் கொண்டேன்

திருவிளையாடல் – குறை என்றில்லை. இந்தப் படம் குடும்பத்தோடு பார்க்க வேண்டிய படம். இந்தப் படம் உம்மாச்சி படம். இந்தப் படம் எளிமையாக (புராணங்களை) தத்துவங்களைச் சொல்கிறது. இது போன்ற வலுக்கட்டாயங்கள் கலந்த உத்தமத்தோங்களை விதந்தோந்து பீடத்தில் அமர்த்தி விட்டதால் விமர்சிக்கவும் மேற்

உங்களுக்கு வலிந்து திணிக்கப்பட்ட சினிமாக்களை, ஆறாவடு ஆக மனதில் தோன்றிய படங்களைப் பகிருங்கள்.

அளத்தலும் ஆவணங்களும்

தஞ்சாவூருக்கு 1919ல் கல்கி போயிருக்கிறார். அதைப் பற்றி அன்றைய ஆனந்த விகடனில் அவருடைய பிரத்தியேக நடையில் கட்டுரை எழுதுகிறார்.

அந்த மாதிரி அன்றைய காலகட்டத்தை உணர்த்தத்தான் மணி ரத்னம் & கோ பொன்னியின் செல்வன் படத்தை எடுத்து இருக்கிறார்கள்.

  • கோயில் நிர்வாகம் எப்படி இருந்தது?
  • கல்கி ரா கிருஷ்ணமூர்த்திக்கு இந்த பிரும்மாண்டமான கற்பனை கலந்த சரித்திர நாவல் எவ்வாறு உருவானது?
  • ராஜ ராஜ சோழன் படம் எடுக்க இதுதான் காரணமா?
  • நூறாண்டுகளுக்கு முன் ஆலயமும் அதன் பராமரிப்பும் எங்ஙனம் இருந்தது?

இந்தக் கேள்விகளுக்கு விடையத் தேட #PS1 எடுத்திருக்கிறார்கள் – நான்காம் காரணம்.

அந்தக் கட்டுரைக்கான இணைப்பு :

கல்கி – மணி ரத்னம் dichotomy: இரண்டு பொன்னியின் செல்வன்கள்

மணி ரத்தினம் ஏன் பொன்னியின் செல்வன் சரித்திர புதினத்தைப் படமாக்கினார்? மூன்றாவது காரணம்: பாசிசம் அதன் வேர்களை அறிவொளியில் காண்கிறது.

யோஹான் வொல்ஃப்காங் வொன் கோயத் (Johann Wolfgang von Goethe) அமர்ந்த மரத்தடி ஜெர்மனியில் புகழ்பெற்றது. ஜெர்மானிய இலக்கியத்தில் இந்த கோயத் புலவருக்கு பெரிய இடம் கொடுத்திருக்கிறார்கள்.

யூதர்களைக் கொன்று குவிக்க பல வதை முகாம்களை நாஜிக்கள் கட்டினார்கள். அந்தக் கட்டிடங்களுக்கு அங்குள்ள பகுதிகளில் உள்ள எல்லா மரங்களையும் வெட்டி சாய்த்தார்கள். ஒரேயொரு மரத்தை மட்டும் விட்டு வைத்தார்கள். அந்த மரத்தின் நிழலில் அமர்ந்துதான் கோயத் தன்னுடைய கவிதைகளையும் காவியங்களையும் இயற்றினார். கோயத் என்ன எழுதினார் என்பதை நாஜிக்கள் மறந்து விட்டார்கள். கோயத் எழுத்தின் அர்த்தத்தை உணராமல் வெறும் நினைவுச்சின்னத்தை – கொலைகூடத்திற்கு நடுவாந்தரமாக குலப்பெருமையாக வைத்துக் கொண்டார்கள்.

இது போல் பொன்னியின் செல்வன் நாவல் என்ன சொல்கிறது என்பதைத் திரையில் கொணராமல், “சோழர்கள் நம் பெருமிதம்!” என்று நினைக்க வைக்க மணிரத்னம் கல்கியின் வரலாற்றுப் புனைவை சினிமாவாக மாற்றுகிறார். – இது மூன்றாவது காரணம்.

புஷென்வல்ட் (Buchenwald) கிராமத்தின் எல்லா மரங்களையும் வெட்டிச் சாய்த்திருந்தால் கோயத் அமர்ந்த மரமும் பத்தோடு பதினொன்றாகப் போயிருக்கும். சுஜாதாவின் “கரையெல்லாம் செண்பகப்பூ” மாதிரி… எந்த இயக்குநருக்கும் இலக்கிய கதையை வெள்ளித்திரைக்குக் கொணரத் தெரியாது என்று போயிருக்கும். ஆனால், லட்சக்கணக்கில் மக்களை அடைத்து வைக்க பயன்பட்ட முகாமின் முக்கிய இடத்தில் — கோயத் என்னும் பெரும்புள்ளியைக் கொண்டாட அந்தப் புலவரின் கருவாலி மரத்தை கூட்டாக இணைக்கிறார்கள். நாஜிக்களைப் பொறுத்தமட்டில், மரம் அழிக்க முடியாத அளவுக்கு மதிப்புமிக்கதாக இருந்தது.

இரண்டாம் உலகப் போரில் நடந்த குண்டு வெடிப்பில் அந்த மரம் இறக்கிறது. பட்டுப் போகிறது. தங்களின் பாரம்பரியத்தில் தாங்களே மண் வாரிப் போட்டுக் கொண்டதை இது உணர்த்துகிறது.

இந்த மரத்தைக் குறித்து கர்ண பரம்பரைக் கதை ஒன்றைச் சொல்லுகிறார்கள். இது இலையுதிர்க்கும் மரம். ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதத்தில் தன் இலைகள் அனைத்தையும் உதிர்த்து மொட்டை மரம் ஆகி விடும். அதன் பிறகு ஏப்ரல் மாதத்தில் துளிர்விட்டு பூப்பூக்கும். இந்த மரத்தை பார்க்கும் யூதக் கைதிகள், “இந்த மரத்தில் எந்த இளவேனிற்காலத்திலாவது மீண்டும் மொட்டுக்கள் மலராமல் இருக்கிறதோ, அப்பொழுதுதான் நமக்கு விடுதலை!” என விளையாட்டாகச் சொல்லிக் கொள்வார்கள். அதாவது, எப்போதும் நமக்கு சுதந்திரம் கிடைக்காது. வருடா வருடம் அது மீண்டும் மீண்டும் இலை உதிர்க்கும்; மீண்டும் மீண்டும் இலை மலரும்.

கை கூடா கனவு ஒரு நாள் நிறைவேறியது. விமானத்தில் போட்ட குண்டுத் தாக்குதலில் அந்த மரம் தீப்பிடித்து எரிந்தது. அதனால், அந்த வசந்த காலத்தில் மரத்தில் இலைகள் மீண்டும் மலரவேயில்லை. அது போல், பொன்னியின் செல்வன் கதையும் சிறைக்குள் பூட்டுண்டு இருந்தது. இன்று வெளியே வந்து சோழ வரலாறு பலரைச் சென்றடைந்துள்ளது.

“பொன்னியின் செல்வன்” கதை வாசித்து #PS1 பார்த்தவர்களை அந்த வதை முகாமில் சித்திரவதைக்குள்ளானவர்களாகப் பார்க்கலாம்.
பொ.செ.1 படம் எடுத்தவர்களை – நினைவுகூறப் பட வேண்டிய சரித்திரக் கதையைப் படமாக்குகிறோம் என்று சொல்லி புலவரின் பெருமையாக கருவாலி மரத்தை நடுக்கூடத்தில் கும்பிட்டவர்களாகப் பார்க்கலாம்.

அந்த மரம் போரின் இறுதியில் வெட்டப்பட்டது.
இந்தக் கதை படத்தின் இறுதியில் சமாதி ஆகிறது.

இந்த மாதிரி நம் பாரம்பரியத்தை தமிழரின் பெருமையை இனத்தின் கலாச்சாரத்தை பல்லிளிக்க வைப்பது – – 3ர்ட் ரீசன்.

சுந்தர சோழராக எவரைப் போட்டிருக்கக் கூடாது?

இரண்டாவது காரணம் சொல்லும் நேரமிது…

இவர்கள் இந்த கதாபாத்திரங்களில் நடித்திருந்தால் பொன்னியின் செல்வன் இன்னும் பயங்கரமாக இருந்திருக்கும்.

பின்னணிக் குரல் – பாக்யராஜ்

பெரிய பழுவேட்டரையர் – சிவகுமார்

சின்ன பழுவேட்டரையர் – விஜயகுமார்

ஆதித்த கரிகாலன் – சத்யராஜ்

நந்தினி – கீர்த்தி சுரேஷ்

மந்தாகினி – மேனகா

அருள்மொழி வர்மன் / பொன்னியின் செல்வன் – மோகன்

வந்தியத்தேவன் – விஜயகாந்த்

குந்தவை – சாய் பல்லவி

ஆழ்வார்க்கடியான் – எஸ். வி. சேகர்

மதுராந்தகன் – பிரசாந்த்

பூங்குழலி – மேகா ஆகாஷ்

வானதி – ஷ்ரத்தா ஸ்ரீநாத்

பூதி விக்கிரமகேசரி – மனோபாலா

திருக்கோவிலூர் மலையமான் – டி ராஜேந்தர்

செம்பியன் மாதேவி – சிம்ரன் (அ) அமலா

மந்திரவாதி ரவிதாசன் (ஆபத்துதவி) – ராகவா லாரன்ஸ்

பார்த்திபேந்திரன் – அர்ஜுன்

சேந்தன் அமுதன் – விஷால்

வீரபாண்டியன் – எஸ் ஜே சூர்யா

அநிருத்த பிரும்மராயர் – பிரசன்னா

கந்தமாறன் – அப்பாஸ்

கடம்பூர் சம்புவரையர் – சேரன்

வாசுகி (நந்தினியின் பணிப்பெண்) – காயத்ரி

கொசுறு (படத்தில் வராத குணச்சித்திரங்கள்):

மணிமேகலை – நஸ்ரியா நசிம்

குடந்தை ஜோதிடர் – ஒய். ஜி. மஹேந்திரன்

புத்த பிஷுக்கள் – சின்னி ஜெயந்த், ஜனகராஜ், மயில்சாமி

#PS1

அவ்வாறு செய்யாத மெட்ராஸ் டாக்கீஸுக்கு நன்றி!

பொன்னியின் செல்வன் திரைப்படத்தை ஏன் எடுத்தார்கள்? இவர்களையெல்லாம் போட்டு டிவி சீரியல் எடுத்துவிடக் கூடாது என்பதற்காக – 2ண்ட் ரீசன்.

பொன்னியின் செல்வன் திரைப்படத்தை ஏன் எடுத்தார்கள்?

பத்து நாளுக்கு தினம் ஒரு காரணம் போட திட்டம். உங்கள் உதவியைக் கோருகிறேன்.

முதல் காரணம் எளிது:

கல்கி கதையின் போதாமைகளைச் சொல்லத்தான் இந்தப் படம் வெளிவந்திருக்கிறது. இதுவரை யானைக்காலாக யாரும் படிக்க முடியாத அளவு பக்கங்களாக பாகங்களாக இருந்ததை திரைப்படமாக்கியதால் இப்போது எல்லோரும், “இந்தக் கதை மொக்கையா இருக்கே!” என ஊர் எல்லாம் அறியும்படி தன் ஆனைக்கால் கொண்டு உதைத்து விட்டார் மணி ரத்னம்.

ஜெயமோகனுக்கு எப்போதுமே தனக்கு மட்டுமே அரியாசனம் வேண்டும். அது சுஜாதா, ஜெயகாந்தன், கல்கி போன்றோரால் சரியாசனமாக இருந்தது. கூடவே மும்மூர்த்திகள் என்று எஸ். ராமகிருஷ்ணன், சாரு நிவேதிதா போன்ற சமகாலத்தவரும் போட்டியில் இருந்தார்கள். விஷ்ணுபுரம் எழுதி ஒருவரை சாய்த்தார் என்றால், விஷ்ணுபுரம் விருது கொடுத்து இன்னொருவரை சாய்க்கிறார்.

இப்பொழுது கல்கியின் போதாமைகளை உணர்த்த வேண்டிய கட்டாயத்திற்குள்ளாகிறார் ஆசான். அதற்கான பிரும்மாஸ்திரம் — பொ.செ.1, 2, 3…

ஆதித்த கரிகாலனுக்கு தோல்வியைக் கண்டு பயம் என்பதை கல்கி உணர்த்துவார். படத்தில் விக்ரம் கதாபாத்திரத்தை பார்த்தால் வடிவேலு மாதிரி சிரிப்பு வருகிறது.

யானை ராணியை மாந்திரீகமாக, மாயாவாதமாக, பூடகமாக கல்கி உலவ விடுவார். இங்கே மேக்கப் இல்லாத ஐஷ்வர்யா என்று கெக்கலிப்பு வருகிறது.

ஆழ்வார்க்கடியான் கதாபாத்திரம் தூணிலும் இருப்பான், தூணாகவும் இருப்பானாக மிளிரும். இங்கே நிஜமாக நகைச்சுவைக்காக உலவுகிறது.

கல்கியைக் கொண்டாட வேண்டுமானால் சமரசங்கள் இல்லாமல் திரைக்குக் கொணர முயன்றிருக்க வேண்டும்.

மஹாபாரதம் எழுதிய போது எவ்வாறு தன் திரைவடிவத்தை ஏற்க மறுத்த சன் டிவியை உதாசீனம் செய்தாரோ… அது மாதிரி!

ஆனால், ”கடல்” போல் உருப்படியாக எடுத்தால் எவ பார்ப்பாள்? எனவே, திருடா… திருடா… பகுதி இரண்டை #PS1 ஆக எடுத்து விட்டார்கள்.

சிவாஜி என்றால் ரஜினியின் படம் என நிறுவியது ஷங்கர்.

பொன்னியின் செல்வன் என்றால் ஜொள்ளுச்சோழர் படம் என நிறுவுவது – 1ஸ்ட் ரீஸன்