ஒபாமா ஆட்சிக்கு வந்தால் கறுப்பர்களை முன்னேற்றுவாரா? இந்தக் கேள்வியே அபத்தமானதாகத் தோன்றுகிறது எனக்கு. இதற்கும் நம்ம சாதிக்காரன் ஆட்சிக்கு வந்தால் நம்ம சாதி முன்னேறவேண்டும் என்று எதிர்ப்பார்ப்பதற்கும் என்ன வித்தியாசம்? இதற்கு ஒரு கேவலமான பெயர் உண்டு – Nepotism.
எந்த ஒரு சமுதாயத்தையும் ஒரு தனித்தலைவரால் ஒரே நாளில் மேலேயோ கீழேயோ நகர்த்திவிட முடியாது. அப்படி எதிர்பார்ப்பது வெகுளித்தனம்.
நான் மிகவும் வெளிப்படையாக ஒபாமாவை ஆதரித்து எழுதி இந்த விவாதங்களைத் துவக்கினேன். இதற்கு முக்கிய காரணம் அவர் ஆட்சிக்கு வந்தால் கறுப்பர்களுக்கு விடிவு கிடைத்துவிடும் என்றில்லை. ஒபாமா ஆட்சிக்கு வந்தால் அமெரிக்காவின் பெரும்போக்கில் (உள்விவகாரங்கள், சர்வதேச இணக்கம்) மாற்றம் ஏற்படும் என்று நம்புகிறேன் (நான் மட்டுமல்ல இன்னும் பலரும்).
கறுப்பர் அல்லர், கறுப்பர்களுக்கு ஆதரவானவரல்லர் என்று பிரச்சாரிப்பது எதிர்போட்டியாளர்கள் (ஜனநாயகக் கட்சியையும் உள்ளடக்கி) ஒபாமா முன்வைக்கும் பல ஆரோக்கியமான விவாதங்களைத் திசை திருப்புவதற்காக மேற்கொள்ளும் பிரச்சாரம். துரதிருஷ்டவசமாக அது எளிதில் விற்பனையாகிறது.
இந்தக் கேள்வி மிகவும் முக்கியமானது “களத்தில் இருக்கும் மற்ற தலைவர்களைக் காட்டிலும் ஒபாமாவால் கறுப்பர்களுக்கு அதிகத் தீங்கு விளையுமா? அல்லது வேறுவகையில் கேட்டால் “களத்தில் இருக்கும் தலைவர்களில் ஒபாமாவைக் காட்டிலும் கறுப்பர்களுக்கு நன்மை தரக்கூடியவர் யார்? அப்படியென்றால் அவை என்னவாக இருக்கும்?”











அமெரிக்காவில் “நிறம்” ஒரு பிரச்சனையில்லை என்கிறீர்களா ? அப்படி என்றால் இங்குள்ள தொலைக்காட்சிகள் நொடிக்கு ஒரு முறை Race, Race என அலறுவது ஏன் ? 80% கறுப்பர்கள் ஒபாமாவை ஆதரிப்பதாகவும் 25% வெள்ளை ஆண்கள் மட்டுமே ஒபாமாவை ஆதரிப்பதாகவும் சி.என்.என் கூறுகிறதே ? ஏன் இந்த பெரிய வேறுபாடு ?
அமெரிக்காவின் முதல் ஆப்ரிக்கன் அமெரிக்கன் ஜனாதிபதி என பில் கிளிண்டன் அழைக்கபட வேண்டிய காரணம் என்ன ? அப்படி பில் கிளிண்டன் கறுப்பர்கள் மத்தியில் கொண்டிருந்த செல்வாக்கு தற்பொழுது சரிந்து 80% கறுப்பர்கள் ஒபாமா பின் திரண்டு இருக்கிறார்களே ஏன் ?
கடந்த ஆண்டு ஒபாமா கறுப்பர்கள் மத்தியில் “இந்தளவுக்கு” செல்வாக்கு கொண்டிருக்க வில்லை. ஆனால் இந்த ஆண்டு மிகப் பெரிய செல்வாக்குடன் இருக்கிறார். அது ஏன் ?
இது ஒரு புறம் இருக்க, நான் கூட இந்த தேர்தலில் ஒபாமாவை தான் ஆதரிக்கிறேன்.
அதே நேரத்தில் அவர் குறித்த மாற்று கருத்துகளையும் பதிவு செய்ய வேண்டும் என நான் நினைக்கிறேன்.
இவை என் கருத்துக்கள் அல்ல. இங்கே உள்ள “அமெரிக்க கறுப்பர்களின்” கருத்துக்கள் என்பதையும் கவனியுங்கள்.
http://www.blackstarnews.com/?c=135&a=3970
சசி – நம்முடைய ‘அட்டைக்கத்தி சண்டை’ சுவாரசியமாகத்தான் இருக்கிறது.
அமெரிக்காவின் நிறம் கட்டாயமாக ஒரு பிரச்சனைதான். அதுமட்டுமல்லாமல் ஹிஸ்பானிக்ஸ், பெண்கள், படைவீரர்கள் என்று பல பிரச்சனைகள் உண்டு. இந்த எல்லா பிரச்சனைகளின் ஒட்டுமொத்த தீர்வாகத்தான் (அல்லது பிரச்சனையாகவேதான்) எந்த ஒரு வேட்பாளரையும் பார்க்க வேண்டும். கறுப்பர்களின் பிரச்சனைக்கு ஒபமா ஒருவரிடம்தான் தீர்வு இருக்கிறது (அல்லது தீர்வு இருக்கமுடியும்) என்று கொண்டு ஒபாமா – கறுப்பு விவாதம் நடத்துவதே தவறு என்கிறேன்.
பொதுவில் கறுப்பினத்தவர்களுக்கு யார் ஆட்சிக்கு வந்தால் நல்லது என்று பார்க்கலாம். எல்லா விஷயங்களிலும் எல்லாருடைய நிலைப்பாடுகளும் எப்படியிருக்கின்றன என்று பார்க்கையில் கறுப்பர் விஷயத்தில் மட்டும் ஒபாமாவை முன்னிருத்தி விவாதிப்பது தவறு என்றுதான் சொல்கிறேன்.
மற்றபடி உங்கள் பிற கேள்விகள்;
1. பில் கிளிண்டனைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு ஏன் ஒபாமாவை இப்பொழுது முன் வைக்கிறார்கள்? – காரணம் சிறப்பாகப் பேசப்பட்ட பில்-லைக் காட்டிலும் இன்னும் சிறப்பாக ஒபாமா கறுப்பர்களுக்குச் சாதகமானவராகத் தோன்றுகிறார்.
2 சென்ற ஆண்டைவிட இந்த ஆண்டு ஏன் கறுப்பர்கள் மத்தியில் ஒபாமாவின் செல்வாக்கு கூடியிருக்கிறது? – பகுதி விடை முந்தைய பதில் இருக்கிறது. ஓராண்டு தொடர்ச்சியாக ஒபாமாவைக் கவனித்து, எதிர்பிரச்சாரங்களுக்கு எப்படி முகங்கொடுக்கிறார் என்ற அவதானத்தின் அடிப்படையில் இது உருவாகி வருகிறது.
அல்லது, ஆராம்பத்தில் மற்ற வேட்பாளர்களிடம் கறுப்பினத்தவர் கொண்டிருந்த நம்பிக்கைகளை அவர்கள் போக்குகளால் அவர்களாகவே சிதைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
(இந்த இரண்டு கூற்றுகளாலும் ஒபாமா கறுப்பர்களுக்குச் சாதகமானவரல்லர் என்ற உங்கள் முந்தைய முன்வைப்புக்கு எதிரான பொதுஜன ஆதாரத்தை நீங்களே தருகிறீர்கள்). மற்றபடி நீங்கள் சுட்டும் இணையதளம் “அமெரிக்க கறுப்பர்களின்” (ஒட்டுமொத்த) கருத்து கிடையாது. அவர்களில் ஒரு பகுதியினரின் கருத்து என்று வேண்டுமானால் கொள்ளலாம். (அல்லது அவர்கள் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்று நோண்டிப் பார்க்க முயற்சிக்கலாம்).
கறுப்பர்களின் தீர்வாக ஒபாமா இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது வெகுளித்தனமானது (naive). விவாதம் அனைத்து போட்டியாளர்களையும் உள்ளிடக்கித்தான் நடத்தப்படல் வேண்டும்.
பொதுவில் கறுப்பினத்தவர்களுக்கு யார் ஆட்சிக்கு வந்தால் நல்லது என்று பார்க்கலாம்
***********
நிச்சயமாக. அப்படி பார்த்தால் பில் கிளிண்டனின் கடந்த கால ஆட்சியை கருத்தில் கொண்டு ஹில்லரி கிளிண்டன் தான் கறுப்பர்களுக்கு நன்மை கொடுக்கும் ஒரு ஆட்சியை வழங்க கூடும். அவரும் அதைத் தான் கூறுகிறார். Proven, tested…
ஆனால் ஒபாமா எதுவும் கூறுவதில்லை. கறுப்பர்களின் பிரச்சனைகளை பேசுவது கூட இல்லை. பின் எப்படி அவர் அமெரிக்க கறுப்பர்களின் பிரச்சனையை தீர்க்க முடியும் என நம்புகிறீர்கள் ? இங்குள்ள கறுப்பர்கள் நம்புகிறார்கள் ?
இந்த கேள்வி எழுப்பபடவேண்டும் அல்லவா ?
அதுவும் 80% கறுப்பர்கள் ஒபாமாவை ஆதரிக்கும் பொழுது, உன்னுடைய பிரச்சனைகளையே பேசாத ஒருவரை வெறும் தோலின் நிறத்தை மட்டும் கொண்டு ஆதரிக்காதே என கூற வேண்டும் அல்லவா ?
அதைத் தான் நான் சுட்டிக்காட்டினேன். நான் இங்கு முன்வைத்த இரண்டு கட்டுரைகளும் சுட்டி காட்டின. அதுவும் இந்தக் கட்டுரையில் http://www.freerepublic.com/focus/f-news/1730861/posts வெள்ளையர்கள் கூட கறுப்பர்களின் ஒடுக்குமுறை எதிர்த்து உள்ள பொழுது வெறும் தோலின் நிறத்தை மட்டும் கொண்டு ஆதரிக்க கூடாது என்றே கூறுகிறது.
**********
கறுப்பர்களின் தீர்வாக ஒபாமா இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது வெகுளித்தனமானது (naive)
**********
நிச்சயமாக. அதேப் போல ஒபாமா வந்தால் அமெரிக்காவின் அதிகார மையம் பெரும் மாற்றம் கண்டு விடும் என்று நினைப்பதும்
வெகுளித்தனமானது (naive). அமெரிக்காவின் அதிகார மையம் எந்த மாற்றத்தையும் அடையாது. பாக்கிஸ்தான் மீது தாக்குதல் நடத்துவேன் என்ற ஒபாமாவின் கருத்தினை ஞாபகப்படுத்துகிறேன். ஈராக் விடயத்தில் வேண்டுமானால் மாற்றம் இருக்கும். ஹில்லரி கிளிண்டன் வந்தாலும் அதே மாற்றம் இருக்கும்.காரணம் பெரும்பாலான அமெரிக்க மக்கள் அதைத் தான் விரும்புகிறார்கள். குறிப்பாக ஜனநாயக கட்சியை சேர்ந்தவர்கள்.
*****************
மற்றபடி உங்கள் பிற கேள்விகள்;
.
.
.
அல்லது, ஆராம்பத்தில் மற்ற வேட்பாளர்களிடம் கறுப்பினத்தவர் கொண்டிருந்த நம்பிக்கைகளை அவர்கள் போக்குகளால் அவர்களாகவே சிதைத்துக் கொண்டிருக்கிறார்கள்
*****************
பில் கிளிண்டன், ஒபாமாவிற்கான கறுப்பர் ஆதரவு குறித்து இன்னும் விரிவாக எழுத வேண்டும். பிறகு எழுதுகிறேன்.