Subdued campaigning


இந்த முறை தேர்தல் வாக்கு சேகரிக்கும் பணி ஆரவாரம் குறைவாகவும் அமைதியாகவும் நடந்துள்ளது. தேர்தல் தொடர்பான வன்முறை என்று பார்த்தால் அஇஅதிமுக ஃபார்வர்ட் பிளாக் வேட்பாளர்களை பயமுறுத்தியதாக வந்த தகவல்கள்தாம். ஒரு ஃபார்வர்ட் பிளாக் வேட்பாளர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். திண்டிவனம் ராமமூர்த்தியின் கட்சி வேட்பாளர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். எதனால் கொலை செய்யப்பட்டார் என்று இன்னமும் தெரியவில்லை. ஆண்டிப்பட்டியில் லீலாவதி (எம்ஜிஆர் அண்ணன் மகள்) தன்னை வேட்பும்மனு தாக்கல் செய்யவிடாமல் கடத்திச் சென்றனர் என்று சொல்லியுள்ளார். சில இடங்களில் கல்லடிகள் நிகழ்ந்துள்ளன.

அவ்வளவு மோசமில்லை.

சுவற்றில் சின்னங்கள் வரைவதைத் தடை செய்தது நல்ல விஷயம். சென்னையில் சில “பொதுச்சுவர்களில்” நிறைய போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. மற்றபடி வாக்கு சேகரிக்க கட்சிகள் பொதுக்கூட்டங்களையும் தொலைக்காட்சிகளையுமே நம்பியுள்ளனர். இது ஒருவகையில் நல்லதுதான் என்றாலும் இதன் விளைவாக திமுகவுக்கு மிகப்பெரிய முன்னிலை கிடைத்துள்ளது. சன் குழுமத்தின் நான்கு தமிழ் சானல்களும் மாற்றி மாற்றி விளம்பரங்களை ஒளிபரப்புவதுடன் பொதுக்கூட்டங்களை நேரடியாகவும் ரெகார்ட் செய்தும் ஒளிபரப்புகின்றனர். அத்துடன் நேர்காணல் என்ற பெயரில் நடக்கும் வாக்கு சேகரிப்பும் உண்டு. ஜெயா டிவி தன் பங்குக்கு அஇஅதிமுகவுக்கு ஆதரவாகக் களமிறங்கினாலும் இது சமமான ஒரு போட்டி அல்ல என்றே அனைவரும் சொல்வர்.

இப்படி கட்சிவாரியாக சானல்கள் இருப்பதான் இருட்டடிப்பு செய்யப்படுவது பிற கட்சிகள் அனைத்துமே. சன் டிவியில் பாமக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேர்காணல்களுக்கு மட்டும் கொஞ்சம் நேரம் ஒதுக்கியுள்ளனர். அதேபோல ஜெயா டிவியில் வைகோவும் திருமாவளவனும் வந்தனர். விஜயகாந்த் என்று ஒருவர் ஒரு கட்சி ஆரம்பித்துள்ளார் என்பது ராஜ் டிவியைப் பார்க்காவிட்டால் நமக்குத் தெரியவே தெரியாது. விஜய் டிவி இந்த விஷயத்தில் ஒதுங்கியே உள்ளது. ஆங்கில செய்தி சானல்கள் அவ்வப்போது மட்டுமே தமிழ்நாட்டைப் பற்றிப் பேசுகின்றன. ஏனெனில் இப்பொழுது ஐந்து மாநிலங்களில் சேர்ந்தாற்போல தேர்தல்கள் நடக்கின்றன.

தமிழ் செய்தித்தாள்களும் தமது சார்புநிலை காரணங்களால் நடுநிலையாக அனைத்துக் கட்சிகளின் செயல்பாட்டையும் விளக்குவதில்லை. ஆனாலும் ஒவ்வொரு செய்தித்தாளிலும் பிற கட்சிகளைப்பற்றி சிறிதாவது தெரிந்துகொள்ள முடிகிறது. தினகரனிலும் தமிழ் முரசு பத்திரிகையிலும் அஇஅதிமுக, விஜயகாந்த் பற்றிய செய்திகள் வருகின்றன. தினமலர், தினமணி ஆகியவை இந்தத் தேர்தலில் திமுகவுக்கு எதிரான நிலைப்பாட்டை வெளிப்படையாகவோ மறைமுகமாகவோ காண்பித்துள்ளன. திமுக அல்லாத பிற கட்சிகளின் விளம்பரங்கள் தினகரன் அல்லாத பிற பத்திரிகைகளில் வெளியாகின்றன.

ஆங்கில செய்தித்தாள்களில் கட்சிச் சார்பு அந்த அளவுக்கு வெளிப்படையாக இல்லை.

சிதம்பரம் சொன்னதுபோல இம்முறை தேர்தலின் கதாநாயகன் திமுகவின் தேர்தல் அறிக்கைதான். தொடக்கத்திலிருந்தே இந்தத் தேர்தல் அறிக்கையை ஒட்டியே – எதிர்த்தோ, ஆதரித்தோ – விவாதங்கள் அமைந்துள்ளன. அத்துடன் பிற விவாதங்கள் – ஜெயலலிதா ஆட்சி கெட்டதா, நல்லதா; காங்கிரஸ், திமுக கூட்டணியின் மத்திய ஆட்சியால் தமிழகத்துக்கு நன்மையா, தீமையா; ஜெயலலிதா மத்திய அரசுமீது வைக்கும் குற்றச்சாட்டுகள், அவர்கள் சொல்லும் பதில் குற்றச்சாட்டுகள்; தயாநிதி மாறன் மீதான குற்றச்சாட்டுகள், வைகோ கட்சி மாறியது ஆகியவை.

தெருவில் பாட்டு பாடிக்கொண்டுபோகும் ஆட்டோக்கள்கூட (“உங்கள் பொன்னான வாக்குகளை ___________ முத்திரையில் குத்தி கலைஞரின்/புரட்சித்தலைவியின் ஆதரவுபெற்ற அண்ணன் _____________ அவர்களை வெற்றிபெறச் செய்யுமாறு பணிவன்புடன் வேண்டிக்கொள்கிறோம்”) குறைவாகவே தென்படுகின்றன.

வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பதும் தெருவில், திறந்த ஜீப்பில் பல்விரிய, கைகுவிய சுற்றிவருவதும் இன்னமும் தொடர்கிறது. பெருந்தலை ஒன்று பேசிக்கொண்டே போக பக்கத்தில் பொம்மைபோல கூப்பிய கரங்களுடன் நிற்கும் வேட்பாளர் இன்னமும் இருக்கிறார். அதேபோல மேடையிலும் கட்சித் தலைவர்கள் பேசித்தள்ளும்போது கை/கால் வலித்தாலும் விடாது நிற்கும் வேட்பாளர்கள் இருக்கிறார்கள்.

சினிமா நட்சத்திரங்கள் விஜய ராஜேந்தர், பாக்யராஜ் இருவருமே சூப்பர் ஹிட். ராஜேந்தர் உளறித் தள்ளினாலும் பல நேரங்களில் மெச்சும்படியான அடுக்குமொழிகளில் விளையாடுகிறார். குட்டிக்கதை வல்லுனர் பாக்யராஜும் திமுகவுக்கு நல்ல வலு சேர்த்துள்ளார். ஆனால் சரத்குமாரால் அஇஅதிமுகவுக்குப் பலன் குறைவுதான் என்று நான் நினைக்கிறேன். கடைசிவரையில் ராதிகாவை வெளியில் காணமுடியவில்லை.

இணையம் வழியான campaigning அதிகமாக இல்லை. திமுக, அஇஅதிமுக இரண்டுக்குமான அதிகாரபூர்வமான தளங்களில் தேர்தல் அறிக்கைகளோ, தொகுதி உடன்பாடோ, வேட்பாளர் பெயர்களோ உடனடியாக வரவில்லை. சில நாள்கள் கழித்தே கிடைத்தன. இந்தத் தளங்களின் சுட்டிகள் கூகிள் வழியாகச் சென்று தேடினால்தான் கிடைக்குமே தவிர கழக விளம்பரங்களிலோ தொலைக்காட்சிப் பேட்டிகளின்போதோ காணக்கிடைக்காது.

திடீரென ஒருநாள் தெருவில் பல இடங்களில் http://www.electadmk.com என்ற சுட்டி கண்ணில் பட்டது. முதலில் அதைப் படித்தபோது இது அ இஅதிமுக ஆதரவுத் தளமா அல்லது திமுக தளமா என்று தெரியவில்லை. கூர்ந்துபார்த்தால்தான் admk என்று தெரியவந்தது. (electadmk could as well be elect-a-dmk)

லோக் பரித்ராணின் இணையதளத்தின் புகழ் இப்பொழுது உலகெங்குமே பரவியிருக்கும். இந்தத் தளத்தில் என்ன எழுதியிருக்கிறார்கள் என்று யாருக்காவது புரிந்தால் அதை விளக்கி எனக்குக் கடிதம் எழுதவும்!

பாவம் மதிமுக. அவர்களது தளத்தில் பழைய கதைகள்தாம் உள்ளன. மன்மோகன் சிங்கும் கருணாநிதியும் பாசத்தோடு வைகோவைப் பார்க்கும் படம் இங்கே உள்ளது. அந்தப் பாசம் மாறும்போது படங்களும் தளத்தில் மாறவேண்டும் என்பதை யாராவது அவர்களுக்கு விளக்கிச் சொல்லவேண்டும். கேப்டனின் கட்சிக்கும் இணையத்தளம் உண்டு. ஆனால் விஷயம் அதிகம் இல்லை இங்கே.

பாமக இணையத்தளம் எதுவும் தேவையில்லை என்று முடிவு செய்துள்ளார்களோ, என்னவோ.

வேட்பாளர்கள் யாரும் சொந்தமாக இணையத்தை நாடவில்லை – நெப்போலியனைத் தவிர. இரு தினங்களுக்கு முன்னதாக நெப்போலியன் I am for Mylapore என்ற தளத்தைத் தொடங்கியுள்ளார்.

இந்த முறை எப்படியானாலும் அடுத்த தமிழக சட்டசபைத் தேர்தலில் இணையம் பெரும் பங்கு வகிக்கப்போகிறது.

3 responses to “Subdued campaigning

  1. Unknown's avatar கார்திக்வேலு

    Very good summary and prediction.
    Will be interesting to see the outcome of these elections , especially from the prespective of the famed anti-incumbency factor of TN voters.

    thanks

  2. Good!! Nice blog!!

    Worth!!

    Thanks

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.