Tag Archives: America

பணம் படைத்தவன்

விவரிப்பு:

  • அமெரிக்காவின் முக்கிய தொலைக்காட்சி எல்லாவற்றிலும் பராக் ஒபாமாவின் அரை மணி நேர விளம்பரம் ஒளிபரப்பாகியது.
  • பெரும்பாலான அமெரிக்கர்கள் டிவியின் முன் உட்காரும் இரவு எட்டு மணிக்கு ஒளிபரப்புவதற்காக சற்றேறக்குறைய ஐந்து மில்லியன் டாலரை ஒபாமா கரைத்துள்ளார்.

வியப்பு:

  • சன், ஜெயா, மக்கள், கலைஞர் எல்லாவற்றிலும் ஒரு கட்சி ஒரே சமயத்தில் பிரச்சாரம் செய்யும் சூழல் இல்லாத தமிழ்நாடு.
  • எதிராளிக்கு சம இடம் தராமல், தனியாளாக பிரச்சார போதனை செய்யும் அமெரிக்க நிலை.
  • பொது நிதியை மட்டும் பயன்படுத்தி மெகயினோடு சமமாக மோதுவேன் என்னும் வாக்குறுதி காற்றில் பறந்த மாதிரி இதுவும் பார்வையாளர் காதில் பூச்சூட்டலோ?

விளம்பரம்:

விமர்சனம்:

  • ஒபாமாவின் பிரச்சாரம் போலவே விளம்பரமும் அமைந்திருந்தது. நிறைய வசனம்; கொஞ்சமாய் கொள்கை விளக்கம்.
  • தன்னுடைய அம்மாவின் கடைசி காலம், மருத்துவ செலவுகளோடு மன்றாடுவதை சொல்லி அனுதாபம் தேடியது.
  • குழந்தைகள், தாத்தா, பாட்டி, குடும்பம் என்று ஒபாமாவின் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கும் விமர்சனங்களுக்கு பதில் தந்தது.
  • நிகழ்ச்சி முழுக்க சோகமயமாக, அமெரிக்காவின் எதிர்காலம் குறித்த பயமுறுத்தல்களைக் கொடுத்தது. ‘நான் ரொம்ப செலவழிக்கிறேனோ? வேலை போயிடுமோ??’ என்னும் அச்சமூட்டுவதாக அமைந்தது.
  • இறுதியாக நேரடி ஒளிபரப்பாக ஃப்ளோரிடா பேச்சைக் காட்டினார்கள். டிவியில் பார்க்கும் போதே உத்வேகம் எழும்பியது.

விளைவுகள்:

  • ஒவ்வொரு முறை டிவியில் தோன்றிய பிறகும் ஒபாமாவின் செல்வாக்கு உயர்ந்துள்ளது. இந்த முறையும் வாக்காளர்களிடையே மதிப்பு உயரலாம்.
  • ஜனநாயகக் கட்சி மாநாட்டில் வெள்ளை மாளிகை போல் மேடை அமைத்தார். இதில் ஜனாதிபதி அறை போன்ற தோற்றம், மக்களிடையே ‘இவர்தான் தலைவர்’ என்னும் பிம்பத்தை வளர்க்கலாம்.
  • அரை மணி முழுக்க ‘வரி விலக்கு’ என்பதே தாரக மந்திரமாக உச்சாடனம் செய்யப்பட்டது. சில சமயம் மெகயின்/குடியரசுக் கட்சி விளம்பரமோ என்று எண்ண வைக்குமளவு.
  • பென்சில்வேனியா உழைப்பாளிகள் முதல் ஃப்ளோரிடாவின் முதிர்ந்தோரைக் குறி வைத்த நிகழ்ச்சி. இந்த விளம்பரம் அவர்களை ஒபாமா பக்கம் சாயவைக்காது.
  • ஹில்லரியின் ப்ளூ காலர் வெள்ளைக்காரர்களையும் பேலின் வந்ததால் குடியரசுக் கட்சி வாக்காகி போன பெண்களையும் இந்த மாதிரி கவர்ச்சிகள் ஈர்க்குமா? அடுத்த வாரம் தெரிந்துவிடும்.

விளம்பரத்தின் உரை வடிவம்: Complete Text (and video) of Barack Obama campaign infomercial | Top of the Ticket | Los Angeles Times

அலசல்: All Obama, all the time – 2008 Presidential Campaign Blog – Political Intelligence – Boston.com

ஒபாமாவை கொல்ல சதி: 2 பேர் கைது (செய்தித் தொகுப்பு)

சிஃபி: ஒபாமாவைக் கொல்லச் சதி

டென்னசி மாகாண போலீசார் சந்தேகத்திற்கிடமான இரண்டு வாலிபர்களைப் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் இருவரும் துப்பாக்கிகள் விற்கும் கடையில் கொள்ளையடித்து ஆப்ரிகன், அமெரிக்கன் பள்ளியில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்தது தெரிய வந்தது.

மேலும் 88 வெள்ளையர்களையும், 14 கருப்பர்களையும் மொத்தம் 102 பேரை கொல்வதற்காக அவர்கள் திட்டம் தீட்டியிருந்தனர்.

டேனியல் கோவர்ட் (வயது 20) மற்றும் பால் ஷெல்ஸ்மான் (வயது 18) ஆகிய இரண்டு பேரும் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்த துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.


தமிழ் செய்தி: ஒபாமாவைக் கொல்ல சதி திட்டம்: 2மாணவர்கள் கைது!

ஒபாமா தேர்தல் பிரசாரம் செய்யும் போது காரை வேகமாக ஓட்டிச் சென்று அவரைக் கொலை செய்ய திட்டம் தீட்டியியிருந்ததாக கைது செய்யப்பட்ட 2 மாணவர்களும் வாக்குமூலம் அளித்துள்ளனர்.


மாலைமலர்: அமெரிக்க அதிபர் தேர்தல்: ஒபாமாவை கொல்ல சதி; 2 பேர் கைது

ஏற்கனவே தனது தாத்தாவிடம் இருந்து டேனியல் ஒரு துப்பாக்கியை திருடி வைத்திருந்தான். ஒபாமா பொதுக்கூட்டத்தில் பேசும் போது அவரை நோக்கி வேகமாக காரை ஓட்டிச் செல்லவும் காரின் ஜன்னல் வழியாக துப்பாக்கியால் சரமாரி சுடவும் திட்டமிட்டு இருந்ததாகவும் டேனியல் தெரிவித்துள்ளான்.


தட்ஸ்தமிழ்: ஓபாமாவை கொல்ல சதி: 2 வெள்ளையர்கள் கைது

வெப்துனியா: ஒபாமாவை கொல்ல சதி: 2 பேர் கைது!

சொ. சங்கரபாண்டி – இந்த வார சிறப்பு விருந்தினர்

1. ஒபாமாவா? மெகெயினா? இரண்டும் பேரும் சரியில்லை என்று தப்பிக்கக்கூடாது. இருப்பதற்குள் எவர் ஒகே? ஏன்?

சந்தேகமேயில்லாமல் ஓபாமாதான். பல காரணங்கள் உண்டு, எனக்கு மிக முக்கியமாகப் பட்ட இரண்டு மட்டும் இங்கே (பெருவாரியான அமெரிக்க மக்கள் வாக்களிப்பதற்கு இவை அடிப்படையாக இருக்காது என்றும் கருதுகிறேன்) :

(அ) அமெரிக்காவின் தலைவராக யார் தேர்ந்தெடுக்கப் படவேண்டும் அல்லது யார் தேர்ந்தெடுக்கப் படக் கூடாது என்பதில் அமெரிக்க நலன் மட்டுமல்லாமல், ஒட்டு மொத்த உலக நலனும் அடங்கியிருக்கிறது.

சோவியத் யூனியன் இருந்தவரை இரு வல்லரசுகளிடையேயிருந்த போட்டியில் இரண்டு நாடுகளும் ஓரளவுக்காவது தங்கள் ஏகாதிபத்தியச் சண்டித்தனத்தை எச்சரிக்கையுடன் கையாண்டன. அதனால்தான் ரீகன் தலைமையிலான அமெரிக்க முதலாளித்துவ ஆதிக்கவெறியர்கள் சோவியத் யூனியனை எப்படியாவது உடைத்தெறிவதில் முழுமுனைப்பாக இருந்து வெற்றியும் கண்டனர். சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பிறகு, அமெரிக்காவின் தன்னிச்சையான போக்கை மட்டுப்படுத்துவதில் எந்த பெரிய நாடும் அமெரிக்காவுடன் மோதிக் கொண்டதில்லை.

பொதுவுடைமைப் போலியான சீனா போன்ற நாடுகள் தங்களுடைய குறுகிய தேச நலனுக்காக எல்லாவிதச் சமரசங்களைச் செய்து கொள்வது மட்டுமல்லாமல், தம்மளவில் புதிய மக்கள் விரோதச் சண்டிநாடுகளாகத்தான் இருந்து வருகின்றன. எனவே அமெரிக்காவின் தலைவராக வருபவர் உலக ஒற்றுமைக்கும், அமைதிக்கும் முனையாவிட்டாலும் (எ.கா: ஜிம்மி கார்ட்டர் முயற்சி செய்தார்) பரவாயில்லை, சுயநலத்தின் உந்துதலால் உலக அமைதியைச் சிதைப்பவராக இல்லாமல் இருப்பதே பெரிது (எ.கா: புஷ்-சேனி கும்பல் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது).

அமெரிக்காவில் உள்நாட்டில் எத்தனையோ பொருளாதார மற்றும் சமூகப் பிரச்னைகளுள்ளன. அவற்றின் மேல் முதலில் அக்கறை செலுத்துபவராகவும் இருந்தால், உலகத்தைச் சீர்குலைப்பதில் குறைவான கவனம் செலுத்தக் கூடும் (எ.கா: பில் கிளிண்டன்).

மேலும் அமெரிக்க அரசிடம் ஏகோபித்த செல்வாக்கு செலுத்தி வரும் இஸ்ரேலிய ஆதாயக் கூட்டத்தின் முழுமையான கைப்பாவையாகச் செயல்படக்கூடியவராக (எ.கா. மெக்கெய்ன் – பேலின்) இல்லாமல் இருக்க வேண்டும்.

உலகெங்கும் இசுலாமிய அடிப்படைப் பயங்கரவாதம் உருவாக முக்கியமானதொரு காரணம் அமெரிக்க அரசை ஆட்டிப்படைக்கும் இஸ்ரேலிய ஆதரவுக் கும்பல்தான். விளைவு பயங்கரவாதத்தை ஒடுக்குகிறேன் என்ற போர்வையில் பல நாடுகளில் தற்பொழுது அரசு பயங்கரவாதம் தலைவிரித்தாடுகிறது.

மெக்கெய்னுக்கும், பேலினுக்கும் இஸ்ரேல் மட்டும்தான் செல்ல நாடுகள் என்பது அவர்களுடைய வாதங்களிலிருந்து தெளிவாகத் தெரிகிறது. எனவே அவர்கள் வந்தால் நிலைமை மோசமாகவே வாய்ப்பிருக்கிறது. மெக்கெய்ன்- பேலின் தேர்ந்தெடுக்கப் பட்டால் போரும், இராணுவமும் பூதாகரமான வளர்ந்து எல்லா நாடுகளிலும் மக்களை வறுமை, வேலையிழப்பு, பட்டினி என இட்டுச் செல்லும் வாய்ப்பு அதிகம்.

(ஆ) கடந்த தலைவர் தேர்தலுக்குப் பின் உருவான ஓபாமா என்ற புதிய நட்சத்திரத்தை(அல்லது பிம்பத்தை)ப் பற்றி நண்பர்கள் பேசியபொழுதெல்லாம் நான் ஓபாமாவைப் பற்றிய நல்லதொரு அபிப்ராயத்தைக் கொண்டிருக்கவில்லை. ஒபாமவை தமிழரங்கம் சொல்லியதுபோல் ”பாரக் ஒபாமா: அமெரிக்காவின் மாயாவதி“யாகத்தான் அல்லது சன்னாசி-சுந்தரமூர்த்தி-செல்வராஜ் போன்ற நண்பர்களின் கருத்துப்படி சரக்கில்லா வெறும் பிம்பமாகத்தான் எண்ணிக் கொண்டிருந்தேன். இன்னமும் அவர்கள் எழுப்பிய ஐயங்கள் பொய்யாகத்தோன்றவில்லை. சன்னாசியின் இந்த இடுகையுடன் எனக்கு உடன்பாடில்லை என்றும் சொல்லி வைக்கிறேன். ஆனால், ஓபாமாவின் இனங்களுக்கிடையேயான சிக்கல்களைப் பற்றிய பேச்சில் தெரிந்த யதார்த்தமும், நேர்மையும் அவரைப் பற்றிய நம்பிக்கையைக் கூட்டியிருக்கிறது.

தலைமையும், வழிகாட்டலுமில்லாமல் வெள்ளை மேட்டுக்குடியினரிடம் பல துறைகளில் போட்டியிட இயலாத கருப்பினத்து மக்களிடையே தன்னம்பிக்கையுடன் சில மாற்றங்களைக் கொண்டுவர ஓபாமாவின் தேர்வு மிகப் பயனுள்ளதாக இருக்கும் என நினைக்கிறேன்.

மிக எளிமைப் படுத்திச் சொல்வதாயிருந்தால், இராஜாஜியையும், சிதம்பரத்தையும் விட கல்வியறிவிலும், மேதாவித்தனத்திலும் பின்தங்கியிருந்தாலும், கருணாநிதியும், மாயாவதியும் ஆட்சிக்கு வந்தபின்னால் பிற்படுத்தப் பட்ட மற்றும் தாழ்த்தப் பட்ட மக்களுக்கு ஏற்பட்ட தன்னம்பிக்கை மிக முக்கியமானது என்று நான் கருதுகிறேன்.

மூதறிஞர் என்று சொல்லப் பட்ட இராஜாஜி சாதித்ததை விட கல்வியறிவும், அனுபவமுமில்லாத எம்.ஜி.ஆர் சாதித்தது எவ்வளவோ மேல்.

மற்றபடி மருத்துவ நலம், கல்விக்கட்டணங்கள், வேலை வாய்ப்பு என எத்தனையோ உள்நாட்டு விசயங்களில் பெரிய மாற்றங்களையெல்லாம் கொண்டுவரக்கூடிய சூழ்னிலையில் அமெரிக்கப் பொருளாதாரம் இன்றைக்கில்லை. எனவே யார் வந்தாலும் பெரிதாக எந்த மாற்றமும் ஏற்படபோவதில்லை.

2. ஒபாமாவின் எந்தக் கொள்கை உங்களை அதிகம் கவர்ந்திழுத்து ஒத்திசைவாக தலையாட்ட வைக்கிறது?

சுப்ரமணிய சுவாமியும் அமெரிக்க தேர்தலும்: வாரயிறுதி விஐபி

பத்ரி:

1. தமிழக அரசியல் களத்திற்கும் அமெரிக்க அரசியல் களத்திற்கும் என்ன ஒற்றுமை?

இரண்டு தேர்தல்களிலும் மக்கள் அனைத்து ‘வயதுக்கு வந்தவர்களும்’ வாக்களிக்கிறார்கள் என்பதைத் தவிர ஒரு பொருத்தமும் இல்லை. அமெரிக்கத் தேர்தலில் இரண்டே இரண்டு ‘அங்கீகரிக்கப்பட்ட’ கட்சிகள்தான். சுயேச்சை வெற்றிபெறுவது கடினம். தேர்தல் கூட்டணி என்பது காணப்படாத ஒன்று.

2. அங்கு நடக்கும் தேர்தலுக்கும், இங்கு நிகழும் தேர்தலுக்கு ஆறு வித்தியாசங்கள் சொல்ல முடியுமா?

1. தமிழகத்தில் கொள்கை குறைவு – அல்லது இல்லவே இல்லை. வெறும் வாக்குறுதிகளும் ஹை-வோல்டேஜ் பிரசாரங்களும் மட்டுமே. அமெரிக்காவில் கொள்கைகளைப் பற்றி அலசுதல் அதிகம். மக்களுக்கு சற்றே அதிகமாக மதிப்பு கொடுக்கப்படுகிறது.

2. தமிழகத் தேர்தலில் வேட்பாளர்கள் பெரும்பாலும் டம்மிகள். தலைவர்களைப் பொருத்தும், கூட்டணி பலத்தைப் பொருத்துமே வெற்றியும், தோல்வியும். அமெரிக்காவில் உள்ளதே இரண்டு கட்சிகள்தான். கூட்டணி கிடையாது. ஒவ்வொரு தொகுதியிலும் யார் நிற்கிறார்கள் என்பதைப் பொருத்தும் அந்த இடத்தில் எந்தக் கட்சிக்கு செல்வாக்கு அதிகம் என்பதைப் பொருத்தும்தான் ஜெயம்.

3. தமிழகத்தில் நன்கு அறியப்பட்ட பொறுக்கிகள், ரவுடிகள், என்கவுண்டரில் போட்டுத் தள்ளப்பட்ட ரவுடிகளின் மனைவிகள் என்று மணி மணியான வேட்பாளர்கள் களத்தில் நிற்பது சகஜம். அமெரிக்காவில் அந்த அளவுக்கு மோசம் என்று சொல்லமுடியாது.

4. தமிழக தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் மக்கள் ஜே ஜே என்று கூடுவார்கள். நிறைய நேரம் காத்திருந்து, அம்மாவோ, அய்யாவோ கையசைத்து நாலு வார்த்தை பேசுவதைக் கேட்பார்கள். அமெரிக்காவில் கன்வென்ஷன் தவிர வேறு எங்கும் கூட்டம் சேரும் என்று சொல்ல வாய்ப்பே இல்லை.

5. அமெரிக்காவில் தேர்தல் செலவுக்கு எப்படிப் பணம் வசூலாகிறது என்று ஓரளவுக்கு டிராக் செய்யமுடியும். தமிழகத்தில் சான்ஸே இல்லை. ஆனால், பெட்டி பெட்டியாக பணம் மட்டும் செலவாகிறது.

6. ஆனால் ஒன்று… மத்திய தேர்தல் ஆணையம் நடத்தும் தமிழகத் தேர்தல்களில் தில்லுமுல்லுகள் நடக்க வாய்ப்பு இல்லை. அமெரிக்கத் தேர்தல்களில் மிகவும் நுண்ணிய வகையில் தேர்தல் தில்லுமுல்லுகள் எப்பொதும் நடக்கின்றன என்று நான் கருதுகிறேன்.

3. இலவச கலர் டிவி போல் ஒபாமாவும் ‘வறியவர்களுக்கு வரி விலக்கு’, ‘வீட்டின் விலைமதிப்பு குறைந்ததற்கேற்ப வங்கிக்கடன் தள்ளுபடி’ என்று பற்பல சலுகைகளை வாக்கு வங்கிக்காக அள்ளி வீசி வருகிறார். ‘NAFTAவை மீண்டும் பேரம் பேசுவேன்’ போன்று கட்சிக்குள் நடக்கும் ப்ரைமரியில் ஜெயிக்க ஒரு பேச்சு. பொதுத் தேர்தலில் ஒரு மாகாண வேட்பாளர்களைக் கவர இன்னொரு பேச்சு; அதே நாளில் இன்னொரு மாகாணம் சென்றால் முரணாண மற்றொரு பேச்சு. இன்னும் ஒபாமாவை நம்புகிறீர்களா?

ஒருமித்த கொள்கைகளை முன்வைப்பதில் சில பிரச்னைகள் உள்ளன. ஒருவருக்கு ஏற்புடையது இன்னொருவருக்கு இல்லை. ஆனால் தேர்தலில் ஜெயிக்க அனைவரது – அல்லது பெரும்பான்மையினரது – வாக்குகள் தேவை. எனவே சில இடங்களில் மழுப்பவேண்டியுள்ளது. ஒபாமா இதனைச் செய்கிறார். மற்றவர்கள் அதிகமாகச் செய்கிறார்கள். இதெல்லாம் நியூட்ரல் வாக்காளர்களை எப்படியாவது கவர்வதற்கான வழி.

இது எனக்குப் பிடிக்கவில்லை என்றாலும், ஒபாமா, மெக்கெய்னை விட 100 மடங்கு சிறந்தவர் என்பது என் கருத்து.

4. பச்சை பார்ட்டி, ரால்ஃப் நாடர், பாப் பார் என்று இன்னும் சிலர் கூட அமெரிக்க அதிபராக முயற்சிக்கிறாங்களே… அவங்களப் பத்தி உங்க எண்ணங்களை சொல்லுங்களேன். இவர்களை ஏன் நீங்க ஆதரிக்கவில்லை?

இவர்கள் எல்லாம் ஒருவகையில் சுப்ரமணியம் சுவாமி போன்றவர்கள். அமெரிக்கத் தேர்தல் முறையில் இவர்கள் யாருமே ஜெயிப்பதற்கு வாய்ப்பே இல்லை. அந்த முறையை மாற்றுவதற்கான வழிமுறையில் இறங்காமல் கையில் இருக்கும் காசைக் கொட்டி வீணாக்கி, கோமாளியாகத் தோல்வியடைபவர்களை வேறு என்ன சொல்லலாம்? இவர்களை நான் அதற்கு ஆதரிக்கவேண்டும்?

5. திடீரென்று தற்போது நடக்கும் பொருளாதாரப் பிரச்சினையினால் அமெரிக்க தேர்தல் முறை மாற்றியமைக்கப்படுகிறது. தமிழ்நாட்டு நடிகரை ஜனாதிபதியாக்க முடிவெடுக்கிறார்கள். எவர் பொருத்தமானவர்? ஏன்?

வடிவேலு.

ஜார்ஜ் புஷ்ஷைவிட மோசமாக இவரால் நடந்துகொள்ள முடியாது. ஒருவேளை அமெரிக்கா படுவேகமாக சுபிட்சமான நாடாக ஆகவும் வாய்ப்புகள் உள்ளன.

எல்லாவற்றுக்கும் மேலாக, அவரது நிறம், பல கருப்பர்களுக்கு மன ஆறுதலை அளிக்கும். வெள்ளை மாளிகையில் கருப்பு அதிபர்.

பத்ரி

சத்யாவுடன் சந்திப்பு: இறுதிப்பகுதி

7. தற்போது நடக்கும் பொருளாதாரப் பிரச்சினையினாலும் திடீரென்று கிடைத்த அறிவியல் முன்னேற்றத்தாலும் அமெரிக்க தேர்தல் முறை மாற்றியமைக்கப்படுகிறது. மறைந்த புகழ்பெற்ற தலைவரை ஜனாதிபதியாக்க முடிவெடுக்கிறார்கள். எவர் பொருத்தமானவர்? ஏன்?

வேண்டுமானால் அரசியல்வாதி மாதிரி கேட்ட கேள்விக்கு பதில் தெரியலைன்னா தெரிஞ்ச, தான் சொல்லணும்னு நினைச்ச பதிலை சொல்லீறவேண்டியதுதான். ;-))

அமெரிக்க வரலாறு அதிகமா தெரியாது அதுனால மொக்கையா ஏதாவது சொல்வதற்கு பதில் இந்த கேள்வியை சாய்ஸ்ல விட்டுடறேன்.

8. PiT போட்டியில் அடுத்த தலைப்பாக ஒரு வேட்பாளரை வைக்கலாம் என்று முடிவெடுக்கிறார்கள். பைடன், பேலின், மகயின், ஒபாமா – எவருக்கு ஃபோட்டோஜெனிக் முகம்?

முதல் சுற்றிலேயே ஒபாமாவும் மக்கெயினும் காலி.

படத்துக்கு ஏற்ற முகம் மட்டும் என்றால் ஒபாவும் சுமார் ரகம். இருந்தாலும் இருவருமே அரசியலில் அதிகமாக ஊறிப்போயோ என்னவோ ஒரு வித இறுக்கமான முகத்தை வைத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

பைடன் தன் மனம்போன போக்கில் பேசக்கூடுவதால் அவர் முகத்தில் நவரசங்களையும் காண முடிகிறது. அவர் நல்ல தேர்வாக இருப்பார்.

பேலின் பெண்ணுக்கே உரிய அழுகுடனும் நளினங்களுடனும்,அடிக்கடி கண்ண்டிக்கிறார். சந்தேகமே இல்லாமல் பேலினே நல்ல படங்களுக்கான மாடலாக இருப்பார்.

சத்யா

அமெரிக்காவில் தேர்தல் தில்லுமுல்லு – மெகயினை வெல்லவைக்கும் சூட்சுமம்

அமெரிக்க அதிபர் தேர்தல் 50 மாகாணங்களிலும் நடந்தாலும் சில இடங்கள் அதி முக்கியத்துவம் வாய்ந்ததாக அறியப்படுகிறது.

எடுத்துக்காட்டாக, நியு யார்க் மாநிலத்தில் ஜான் மெகயின் வெல்வதற்கு வாய்ப்பே கிடையாது. அதே போல் அரிசோனாவிலோ டெக்சாஸிலோ பராக் ஒபாமா ஜெயிப்பதற்கு எந்தவித முகாந்திரமும் இல்லை.

ஆனால், இரு கட்சி வேட்பாளர்களும் சற்றேறக்குறைய சமமாக இருக்கும் மாநிலங்களில் பிரச்சாரம் சூடாக நடக்கிறது. அவற்றில் ஆறு மாநிலத்தில் வாக்காளர் அடையாள அட்டை தருவதற்கு முரண்டு பிடித்திருக்கிறார்கள்.

இளம் ரத்தத்தைக் கவர்வதில் ஒபாமா முன்னணியில் நிற்கிறார்.

தற்போது ஆயிரக்கணக்கானவர்களை வாக்களிக்க விடாமல் தடுப்பதன் மூலம், இந்த மாநிலங்கள் ஜான் மெகயினுக்கு கிடைக்கும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.

சோஷியல் செக்யூரிட்டி அட்டையும் சொந்தப் பெயரும் ஒற்றுமையாக இருப்பது பிரம்மப்பிரயத்தனம். உங்கள் பெயரை பாபி ஜிண்டால் என்று மாற்றிக் கொண்டால், சோஷியல் அட்டையில் சில சமயம் தவறுதலாக ஜிண்டால் பாபி என்று மாற்றி உல்டாவாக்கி விடுவார்கள். அல்லது பாபியை முழுதாக்கி ராபர்ட் ஆக்கி அச்சிட்டிருப்பார்கள்.

ஓட்டுநர் உரிமத்துக்கு பதிலாக சோஷியல் செக்யூரிட்டி எண் கேட்பதால் இந்த மாதிரி தவறு நிகழ்ந்தவர்கள் அனைவருக்கும் ஜனநாயக உரிமை மறுக்கப்படும்.

பிரச்சினை எழுந்துள்ள மாநிலங்கள்:

  1. கொலராடோ – Colorado,
  2. இந்தியானா – Indiana,
  3. ஒஹாயோ – Ohio,
  4. மிச்சிகன் – Michigan,
  5. நெவாடா – Nevada
  6. வட கரோலினா – North Carolina

நன்றி: வாக்காளர் பட்டியலில் நடக்கும் மாற்றங்கள்நியு யார்க் டைம்ஸ்

முழுவதும் வாசிக்க: States’ Actions to Block Voters Appear Illegal – NYTimes.com

மெகயின் பக்கமும் குற்றச்சாட்டுகளை வீசியிருக்கிறது.

ஒருவரையே பன்முறை வாக்களிக்க வைக்கும் திட்டங்களில் ஜனநாயகக் கட்சி இறங்கியுள்ளது என்கிறார்கள்: VOTE-FRAUD-A-GO-GO – New York Post: “ACORN has been implicated in voter-fraud schemes in 15 states – including Ohio, from where The Post’s Jeane MacIntosh reports today that a Board of Elections investigation has unearthed evidence of widespread voter fraud.

Two voters told MacIntosh they had been dragooned by ACORN activists into registering several times – one reporting having signed up ’10 to 15′ times.”

Related

FAQ: முதல் விவாதம்: அமெரிக்க அதிபர் தேர்தல் – ஒபாமா x மெகயின்

1. யார் ஜெயித்தார்கள்?

குடியரசுக் கட்சியின் ஜான் மகயின்; ஆனால், பராக் ஒபாமாவும் நன்றாகவே சமாளித்தார்.

2. யார் ஜெயித்திருக்க வேண்டும்?

கால் நூற்றாண்டு காலமாக தலைநகரில் சீட்டைத் தேய்க்கும் பழுத்த அரசியல்வாதி ஜான் மகயின் இந்த விவாதத்தில் கலக்கிப் போடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

3. யார் சரியாக செய்யாவிட்டால் மிகப்பெரிய ஆப்பாகி இருக்கும்?

கட்டிக்காக்கப்படும் துணை ஜனாதிபதி வேட்பாளர் சாரா பேலின்; ‘நாட்டுக்கு முதலிடம்’ என்று சொல்லிவிட்டு பிரச்சாரத்திற்கு முதலிடம் கொடுத்த தடாலடி ஸ்டண்ட் — பணால் ஆன மெகயின் எங்காவது பிசகி இருந்தால் ‘பட்ட காலே படும்’ பழமொழியாகி இருக்கும்.

4. யாருக்காவது வாய்தவறி பிசகியதா?

ஒபாமா. ஜான் என்றழைப்பதற்கு பதில் டாம் என்று விளித்தார்.

5. ஏன் பிசகியது?

ஒபாமாவிற்கு எருமைமாட்டுத் தோல் கிடையாது.‘உனக்கு அறிவு போதாது; வயசு பத்தாது; அயல்நாட்டு அனுபவம் கிடையாது!’ என்று வெறுமனே வெறுப்பேற்றிக் கொண்டேயிருந்தால்…

ஜான் மகயினுக்கும் சுருக்கென்று கோபம் வருவதுதான் என்றாலும் அது ஓராண்டுக்கு முந்தைய ஜான் மகயின். தற்போதைய மெகயின் புத்தரின் மறு அவதாரமாக சாந்த சொரூபமாக காட்சியளிக்கிறார். அதாவது தன்னைக் குறித்து ‘நீங்க இரான் மீது போர்; வட கொரியாவுடன் சண்டை’ போன்ற நேர்மையான குற்றச்சாட்டு வைக்கும்போது கவனிக்காமல் புறந்தள்ளுவதில் புத்தமதத்தைத் தழுவிய அசோகராக இருந்தார்.

6. அமெரிக்கப் பொருளாதாரம் மீளாத்துயரில் ஆழ்ந்திருக்கும் இந்த நேரத்தில் விவாதத்திற்கு ஏது நேரம்?

பராக் ஒபாமா இதற்கான பதிலைக் கொடுத்தார்: “நம் நாட்டின் வருங்காலத்தை தீர்மானிக்க இப்போது பேசாமல் வேறு எப்போது பேசுவோம்!”

7. குடியரசுக் கட்சியின் ஜான் மெகெயின் நடுநிலையானவர் என்பதை நிலைநிறுத்தினாரா?

சில பல தடவை வெளிப்படையாக தம்பட்டம் அடித்தார். விவாதத்தின் துவக்கத்திலேயே ஜனநாயகக் கட்சியின் டெட் கென்னடிக்கு உடம்பு சரியில்லை என்னும் துயரமான நிலையில்தான் இந்த நிகழ்ச்சியைத் துவக்குகிறோம்’ என்று ‘எல்லாருக்கும் நண்ப’ராக நிலைநாட்டினார்.

8. புல்லட்பாயிண்ட் போட்டு பேசியது யாரு?

பராக் ஒபாமா. நிதிநிலையை முன்னேற்ற நாலு வழி இருக்கு என்றார்; அதே மாதிரி ஆப்கானிஸ்தானில் அடுத்த கட்டத்திற்கு நான்கு புள்ளித்திட்டம் கோடிட்டார்

  • மேலும் படை விஸ்தரிப்பு
  • ஆப்கானிஸ்தான் அதிபரை கொஞ்சம் நமக்காகவும் உழைக்க சொல்வது
  • போதை மருந்து விளைச்சலைக் கட்டுப்படுத்தி நீக்குவது
  • பாகிஸ்தான் உறவு

9. வாய்ப்பந்தல் போடாமல் அதே சமயம் நடக்கக் கூடியதை நம்பற மாதிரி வாதாடியவர் யார்?

பராக் ஒபாமா: 9/11 மாதிரி மீண்டும் ஒரு தாக்குதல் நடக்காமல் இருக்க இரு வழிகளை முன்வைத்தார்

  • அணு ஆயுதப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தல்
  • அமெரிக்கா இராக்கை மட்டும் எண்ணெய்க்காக முற்றுகையிட்டிருக்கும் ஆறாண்டுகளில் அறுபது நாடுகளில் விரிந்திருக்கும் அல்-க்வெய்தா மீது கண் வைத்தல்

10. கேள்வியை தனக்கேற்ற மாதிரி திருகுவதில் ஒபாமா வல்லவராயிற்றே! இன்றும் செய்தாரா?

சில இடங்களில் முடிந்தது. ‘700 பில்லியன் அள்ளி விடறாங்களே… ஒத்துக்கறியா/இல்லியா?’ என்பதற்கு அப்படியே திசை மாற்றி அனுப்பினார்.

11. கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் நழுவுவதில் எவருக்கு முதலிடம்?

ஒபாமா 932 மில்லியன் ‘சிறப்பு செலவு’ (earmarks) செய்ததற்கான ஒப்புதல் வழங்கியதில் நழுவினார் என்றால், மெகயினோ பெருஞ்செல்வந்தர்களுக்கு 300 பில்லியன் (கவனிக்க மில்லியன் அல்ல… ஆயிரம் மில்லியன் = பில்லியன்) வரிச்சலுகை தரும் திட்டத்தில் ஆரம்பித்து இராக்கில் அணுகுண்டு இருக்காம் என்று பறைசாற்றியது வரை வழுக்கி முதலிடத்தைத் தட்டிச் செல்கிறார்.

12. எனக்கு வருசத்திற்கு அமெரிக்க வெள்ளி 700,000 (மாசத்திற்கு ஐம்பத்தியெட்டாயிரத்து டாலர் சில்லறைதான்) கிடைக்கிறது. எவர் அதிக வருமான வரி விலக்கு தருவார்?

நீங்க ஆதரிக்க வேண்டியது ஜான் மகயின்.

13. பார்வையாளருக்கு புரிகிற மாதிரி, சாமானியனின் வாக்கைப் பெறுகிற மாதிரி உதாரணம் சொல்லி, குட்டிக் கதை விவரித்து அசத்தியது யாரு?

ஜான் மெகெயின்: “ஒரு வருஷம் முன்னாடி நான் நியூ ஹாம்ஷைர் போனேனா… அங்கே ஒரு அம்மா இருந்தாங்க. அவங்களோட பையனுக்கு என்னாச்சு தெரியுமா? அவநுக்கு 22 வயசு. அவன் இராக் போனானா… அப்ப நம்ம எதிரிங்க அவனைக் கொன்னுட்டாங்க. அவனுக்கு நீதி கேட்டு அவனோட அம்மா என்னோட கூட்டத்துக்கு வந்தாங்க. அப்ப என்னப் பார்த்து கேட்டாங்க. எனக்கு நா தழுதழுதடுச்சு. இன்னும் அந்த சின்னப்பயல் நெனப்பா கையில முடிச்சுப் பொட்டு வச்சிருக்கேன் தெரியுமா!”

ஒபாமாவும் இதைக் கேட்டு பயந்து போய் தன்னுடைய கையில் இருக்கும் கயிறைத் தூக்கி காட்டாத குறைதான்.

14. அதிரடியாக உத்தரவு போடும் வீரதீரமானவர் என்று நிரூபித்தவர் யார்?

மீண்டும் மகயின்: “இதே மாதிரி அமெரிக்கா சீரழிஞ்சு போய், பொருளாதாரம் நாசமாகப் போனால். எந்த செலவுக்கும் நயாபைசா தரமாட்டேனாக்கும்” என்று 700 பில்லியன் நிதியுதவி எங்கே போய் நிற்கும் என்பதற்கு பதில் போட்டார்.

15. ஹில்லரி க்ளின்டனை யாருக்காவது நினைவிருந்ததா?

சாரா பேலினைத் துணைக்கழைத்து மகளிரணியை உசுப்பி விட்டிருக்கும் மகயின், ‘நான் ஹில்லரியுடன் ஒத்துழைத்து அந்த சட்டத்தை இயற்றினேனாக்கும்’ என்று ஒபாமாவை உசுப்பேற்றினார்.

16. ஏதாவது ப்ராண்டிங் செய்யப்பட்டதா?

தாம்தூம்னு கண்டபடி கண்ணு மண்ணு தெரியாமல் செலவு செய்பவர் என்னும் பிம்பம் ஒபாமாவுக்கு மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்பட்டது.

17. விவாதத்திற்குள்ளாகவே முன்னுக்குப் பின் முரணாக ஏதாவது வாய் விட்டார்களா?

ஜான் மெகயின்: இராணுவச் செலவுகள்தான் அமெரிக்க பொக்கீட்டீன் மிகப்பெரிய செலவு என்பதால் அதைக் குறைப்பேன் என்று சொன்ன கையோடு, இராணுவ வீரர்களின் நலத்திட்டங்களை அதிகரிப்பேன் என்றும் இராக் போரை இன்னும் ஓராயிரம் காலம் தொடர்வேன் என்றும் சொல்லி குழப்பினார்.

18. பன்ச் டயலாக் ப்ளீஸ்!

‘நீ போட்டது தப்புக்கணக்கு’ என்று பராக் பட்டியலிட்டார்.

  • 2003இல் இராக்கை நொடியில் தூசாக்கிடலாம் என்றாய். நீ போட்டது தப்புக்கணக்கு!
  • இராக்கில் அணுகுண்டு இருக்கு என்றாய். நீ போட்டது தப்புக்கணக்கு!
  • சதாமின் இரும்புப்பிடியில் இருந்து சுதந்திரதேவியாகக் காட்சியளிப்போம் என்றாய். நீ போட்டது தப்புக்கணக்கு!
  • ஷியாக்களுக்கும் சன்னிக்களுக்கும் எந்தக் காலத்திலும் சண்டை கிடையாது என்றாய். நீ போட்டது தப்புக்கணக்கு!

19. மாமியார் இடித்தால் மண்குடம்; மருமகள் உடைத்தால் பொன்குடம். உதாரணம் கொடுங்க:

மகயின்: நான் இரான் மீது போர்முழக்கம் கொட்டினால் அதற்கு பெயர் தீயசக்திகளைக் கட்டுப்படுத்தல்… இஸ்ரேலுக்கு நேசக்கரம் நீட்டல். அதுவே ஒபாமாவிடம் இருந்து தேவைப்பட்டால் பாகிஸ்தானைத் தாக்குவோம் என்று மிரட்ட வேண்டும் என்று அச்சுறுத்த விரும்பினாலும் முணுக்கென்று கோபம் பொத்துக் கொண்டு வருபவர்.

20. மறுமொழி மூடிய வலைப்பதிவர்களை அறிவோம்; மறுமொழிக்கு மறுமொழியாதவர்களையும் அறிவோம்; மறுமொழியை மட்டுறுத்தி மறைப்பவர்களையும் அறிவோம்; பதிவே இட்டாலும் கண்டுகொள்ளாமல் இருப்பவர்களையும் அறிவோம். அந்த மாதிரி அமெரிக்க அதிபர் தேர்தலில் எவராவது?

ஜான் மகயின் இருக்கிறாரே…

21. கஜேந்திராவைத் தொட்டால் ஷாக் அடிக்கும் என்று சொல்வது நம்ம ஊரு பேஷன். அமெரிக்காவில்?

ஜான் மெகெயின்: ‘நான் ருசிய அதிபர் ப்யூடின் கண்ணைப் பார்த்திருக்கேன். அப்ப அதில் மூணு எழுத்து எனக்குத் தெரிஞ்சுது. அது என்ன தெரியுமா? கே ஜி. பி’

22. நாயடி, பேயடி உண்டா?

அதிசயமாக இல்லை. ஓரளவு கண்ணியமாக, வித்தியாசங்களை வாய்ஜாலங்களாக ஆக்காமல் இருவரும் சொற்சிலம்பம் ஆடினார்கள்.

23. என்னோட பார்வையில் நெஞ்சைக் கவர்ந்தவர் யார்?

நிச்சயமாய் பராக் ஒபாமா.

இன்றைய விவாதம் பழந்தின்று கொட்டை போட்டு அது கூட முளைத்த அனுபவம் நிறைந்தவருக்கும் x குறைந்த தகவல்களை வைத்து நிறைவான நேர்த்தியான முடிவுகளை எடுக்கும் சாமர்த்தியசாலிக்கும் இடையேயானது.

அனுபவசாலி இராக் போனால் கணநேரத்தில் பொடிப்பொடியாக்கலாம் என்பது முதல் பல்வேறு முடிவுகளில் மகயின் சறுக்கியுள்ளார். திறந்த மனதுடன் ‘எதிராளியுடன் ஒத்துப் போகிறேன்’ என்று வெளிப்படையாக வெகுளியாக ஒத்துக் கொள்ளும் பராக் ஒபாமா எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் நம்பிக்கை அளிக்கிறார்.

(பிற்சேர்க்கை)
24. நீ சொல்வது இருக்கட்டும். மற்ற தமிழ்ப்பதிவுகளில் என்ன சொல்கிறார்கள்?

பனிமலர்: “அமெரிக்க அதிபர் பதவிக்கு போட்டியிடும் மெக்கைன்னு மற்றும் ஒபாமாவின் முதல் விவாத மேடை”

சன்னாசி: கரிசல் » Lockjaw

மெகயின்: பிரச்சாரத்திற்கு இடைக்கால ஓய்வு

பொருளாதாரத்தை பெரிதும் பொருட்படுத்துவதால் தன்னுடைய அதிபர் தேர்தல் பிரச்சாரத்திற்கு இடைக்கால ஓய்வு அளிக்க விரும்புவதாக ஜான் மெக்கெயின் தெரிவித்திருக்கிறார்.

இதனால் இந்த வெள்ளி (செப். 26) அன்று நடக்கவிருந்த ஒபாமாவுடன் ஆன வாக்குவாதத்தையும் ஒத்தி வைக்க பராக்கின் ஒத்துழைப்பைக் கோரியுள்ளார்.

தொடர்புள்ள செய்திகள்:

1. BBC NEWS | Americas | US candidates wary over bail-out

2. McCain Seeks to Delay Debate – NYTimes.com

3. McCain suspends campaign for ‘historic’ crisis – CNN.com

'தேர்தல் நடக்கும் சுவடே இங்கே வெளியே தெரியாது'

இந்த வாரம் வெங்கட்டுடன் உரையாடல்.

1. கனடாவிலும் புதிய தலைவர் வரப்போகிறார் போலிருக்கிறதே… பக்கத்து பக்கத்து நாடுகளின் உறவு எப்படி மாறும்? அமெரிக்க கோலகலத்தோடு ஒப்பிடுங்களேன்.

கனடாவில் புதிய தலைவர் வரப்போகிறாரா இல்லையா என்று தெரியவில்லை. இப்பொழுதிருக்கும் நிலவரத்தில் வலதுசாரி கன்ஸர்வேட்டிவ் பிரதமர் ஸ்டீவன் ஹார்ப்பரே திரும்ப வரக்கூடும். அமெரிக்கா கனடா விவகாரத்தைப் பார்க்குமுன் கனடாவின் அரசியல் அமைப்பைக் கொஞ்சம் தெரிந்துகொள்ளலாம்.

  • வலதுசாரி – கன்ஸர்வேட்டிவ் – தற்பொழுதைய பிரதமர் ஸ்டீவன் ஹார்ப்பர் (Stephen Harper) – ஜார்ஜ் புஷ்ஷின் நண்பர், (கொச்சையாக அமெரிக்க அடிவருடி என்று இங்கே சொல்லப்படுபவர்). அல்பெர்ட்டா எண்ணைய் முதலாளிகளின் நண்பர்

  • இடதுசாரி – லிபரல் – கிட்டத்தட்ட பதினைந்து வருட ஆட்சிக்குப் பின் இரண்டு வருடங்களாக முக்கிய எதிர்க்கட்சி – தலைவர் ஸ்டெஃபான் டியான் (Stéphane Dion) – பசுமை விரும்பி.
  • அதி இடதுசாரி – நியு டெமாக்ரடிக் – நிரந்த மூன்றாமிடம் – தொழிற்சங்க ஆதரவு; தலைவர் ஜாக் லெய்ட்டன் (Jack Layton)
  • க்யெபெக் பிரிவினைவாதி கட்சி – ப்ளாக் க்யெபெக்வா (Bloc Québécois) – தலைவர் கில் ட்யூஸெப் (Gilles Duceppe) – தற்பொழுது பல் பிடுங்கப்பட்ட பாம்பு; சித்தாந்தத்தில் லிபர்ல்களையொத்த இடதுசாரிகள்.

(இன்னும் கொஞ்சம் விபரம் என்னுடைய பழைய தேர்தல் பதிவிலிருக்கிறது)

  1. கனேடியத் தேர்தல் பிரச்சாரம் – முதல் வாரப் போக்கு
  2. கனேடிய அரசு நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் தோல்வி
  3. இந்திய பிராண்ட் அரசியல் கனடாவில் பரபரப்பாக விற்பனை

இதைத் தவிர புதிதாகப் பலம்பெற்று வரும் பசுமைக் கட்சி. ஆனால் இவர்களுக்கு ஒரூ இடம் கிடைத்தாலே பெரிய வெற்றியாகக் கருதப்படும். கடந்த இரண்டு ஆண்டுகளாக சிறுபான்மையாக அரசு நடத்திவரும் ஹார்ப்பர் தன் அரசாங்கம் செயலிழந்த நிலையிலிருப்பதாகச் சொல்லி அரசைக் கலைத்திருக்கிறார். இதற்கு முக்கிய காரணம் புதிய லிபரல் தலைவர் ஸ்டெஃபான் டியான் கொள்கைப் பிடிப்பு இருக்குமளவுக்கு ஜனரஞ்சக அரசியல் நடத்தத் தெரியாதவர். பேச்சுத் திறனற்றவர். (வரவிருக்கும் பிரதமர் விவாதங்களில் ஸ்டீவன் ஹார்ப்பரும் ஜாக் லெய்ட்டனும் இவரைக் கடித்துக் குதறப்போவது உறுதி).

அதி-இடதான புதிய ஜனநாயகத்தின் இருப்பு லிபரல்களை விட நாங்கள் லிபரல்களானவர்கள் என்று காட்டுவதில் இருப்பதால் அவர்களுக்கு கன்ஸர்வேட்டிவ்களைவிட டியான்-தான் முக்கிய எதிரி. என் கணிப்பில் மீண்டும் சிறுபான்மை ஆட்சியாக, ஆனால் முன்னைவிட சற்று அதிக இடங்களைப் பெற்று கன்ஸர்வேட்டிவ்கள் திரும்ப வரக்கூடும். ஆனால் இவர்களுக்கு கனடாவின் பொருளாதார இதயமான ஒண்டாரியோ மாநிலத்தில் சொல்லிக் கொள்ளத்தக்க எந்த வெற்றியும் கிடைக்காது.

படிப்பறிவு குறைந்த, எண்ணெய்வளம் மிக்க அல்பெர்ட்டா மற்றும் மேற்கு மாநிலங்களில்தான் ஆதரவு கிட்டும். க்யெபெக்கில் பிரிவினை கட்சி பலமிழந்து காணப்படுவதால் அங்கு வலதுசாரியினர் ஒன்றிரண்டு புது இடங்களைப் பெருவார்கள். மொத்தத்தில் இந்தத் தேர்தல் முற்றிலும் தேவையற்றது. லிபரல்களை இன்னொரு தோல்விக்குள்ளாக்கி (தான் முழு வெற்றி பெறாவிட்டாலும்) உட்கட்சிப் பூசலை வளர்த்து பலவீனப்படுத்துவது ஒன்றே இதன் நோக்கம். இந்தப் பம்மாத்தை மக்களிடம் பரிய வைக்கச் செய்யும் பேச்சுத்திறன் ஸ்டெஃபான் டியானுக்குச் சற்றும் கிடையாது.

இனி அமெரிக்க ஒப்பீடு:

அமெரிக்காவைப் பார்க்க இங்கே தேர்தல் அவ்வளவு கோலாகலம் கிடையாது. அதிகபட்சம் யாராவது ஒருவர் வீட்டில் மூன்று தட்டிகள் புல்பரப்பில் குத்தியிருப்பார்கள் (அவர் போட்டியாளர் அல்லது அவரின் மச்சானாக இருக்கக்கூடும்). மொத்தம் ஐந்து வாரங்களில் எல்லாம் முடிந்துவிடும்.

ஒருவரை ஒருவர் அதிகம் திட்டிக்கொள்ளமாட்டார்கள். (நீ முட்டாள் என்றுகூடச் சொல்லமாட்டார்கள், “ஏனுங்க நீங்க முட்டாளமாதிரி பேசுறீங்க” என்றுதான் சொல்வார்கள்). இங்கே பிட்புல், ஹாக்கி அம்மாக்கள், ராணுவத்தில் குண்டடிபட்டவர்கள், கீழே வேலைசெய்யும் பெண்ணிடம் தவறாக நடந்து கொள்பவர்கள், என்றெல்லாம் தலைவர்கள் பீற்றிக் கொள்ளமாட்டார்கள். குடும்பங்கள் பெரும்பாலும் அரசியலில் இழுக்கப்படாது. தொலைக்காட்சி விவாதத்தில் பணவீக்கம், படைக்குறைப்பு, பசுமையாக்கம் என்றுதான் பேசுவார்கள். (அதனால் எந்த சுவாரசியமும் இருக்காது, மறுநாள் பேப்பரில் படித்தால் போதும்).

ஒரு விஷயத்தைச் சொல்லியாக வேண்டும்; சராசரி கனேடியரின் விழுமியக்களெல்லாம் இடதுசாரிதான். கனேடிய வலதுசாரி கன்ஸர்வேட்டிவ்கள் அமெரிக்க டெமாக்ரடிக்களைவிட அதிகமாகவே லிபரல்கள். 40 மில்லியன் ஸ்பானிஷ் பேசும் ஹிஸ்பானிய அமெரிக்கர்களுக்கு அமெரிக்காவில் எந்தத் தனியுரிமையும் கிடையாது. ஆனால் க்யெபெக்கில் மாத்திரமே இருக்கும் ப்ரெஞ்சுக் குடிமகன் இரண்டுநாள் கார் பயணம் செய்து சென்றாக வேண்டிய அல்பெர்ட்டாவிலும்கூட ப்ரெஞ்சு உரிமைகளைப் பெறுவார். இதை எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் மாற்றமுடியாது.

அதே போலே

  • அடிப்படைக் கல்வி,
  • இலவசக மருத்துவ உதவி,
  • ஓய்வுக்காலப் பாதுகாப்பு,
  • சிறுபான்மை (இந்தியர், சீனர்) குடிவரவு,
  • தற்பாலர் உரிமைகள்,
  • கருக்கலைப்பில் பெண்களுக்கான உரிமை,

போன்றவற்றை கனேடியர்கள் பொதுவாக ஏற்றுக்கொள்கிறார்கள். அதில் பெருமிதமடைகிறார்கள். இதில் தீவிர வலதுசாரிகளும் அடக்கம், நான் சம்பாதிக்கிறேன், நான்தான் பலனடைய வேண்டும் என்ற வலதுசாரி இங்கே எடுபடாது.

ஹார்ப்பர் வந்தால், கூடவே மெக்கெய்னும் வந்தால் அமெரிக்க அராஜகங்களுக்கு அடுத்த நொடியிலேயே துணைநிற்பார். ஸேரா பேலின் ஜார்ஜியாவைக் காப்பாற்ற என்று சொல்லி ரஷ்யா மீது படையெடுத்தால் ஹார்ப்பர் அவர்களுக்கு பூட்ஸ் பாலீஷ் போடுக்கொடுப்பார். அமெரிக்கா எண்ணைக்காகத் துளையிட்டால் ஹார்ப்பர் அதைவிட ஆழமாக அல்பெர்ட்டாவில் துளையிட்டு அந்த எண்ணையை டெக்ஸாஸ்க்கு அனுப்புவார். அமெரிக்காவை உதாரணம்காட்டி இங்கும் மாசுக்கட்டுப்பாடு தேவையில்லை என்று சொல்வார்.

பொதுவில் இழந்துபோன ஆஸ்திரேலிய, ஸ்பெயின் நட்புகளை அமெரிக்கா கனடாவின் தோழமையால் சரிகட்டிக் கொள்ளலாம். அல்பெர்ட்டாவில் மெக்கெய்-பேலினுக்குக் கோவில்கட்டி அங்கும் கருக்கலைப்புக்குத் தடைவிதிக்க முயல்வார்கள். பொதுவில் லிபரல்களான பிற கனேடியர்களால் இது தீவிரமாக எதிர்க்கப்படும். ஆனால் உருப்படியாக அமெரிக்க-கனேடிய பரஸ்பர ஒப்பந்தம் எதுவும் வரும் என்ற நம்பிக்கை எனக்கில்லை. ஏனென்றால் அந்த நிலையில் பயனடையப்போவது ஒண்டாரியோ மாநிலமாகத்தான் இருக்கும், சக்திவாய்ந்த ஒண்டாரியோ ஹார்ப்பருக்கு எப்பொழுதுமே தலைவலிதான். எனவே கனடாவுக்கு அமெரிக்காவிலிருந்து எந்த நன்மையும் வராமல் பார்த்துக்கொள்வார்.

ஹார்ப்பர் வந்து ஒபாமா வந்தால் அடுத்த நொடியிலேயே ஹார்ப்பர் அவரிடமும் நட்பு பாராட்டுவார். ஆனால் ஒபாமா தேர்ந்தெடுக்கப்படாமல் இருக்க ஹார்ப்பர் ரிபப்ளிக்கன் கட்சிக்கு உதவ முயன்றதை ஒபாமா எளிதில் மன்னிப்பார் என்று தோன்றவில்லை. (ஜனநாயக் கட்சி ஆரம்ப கட்டத் தேர்தல் சமயத்தில், கனேடிய அரசு அதிகாரி ஒருவரிடம் தான் ஆட்சிக்கு வந்தால் கனேடிய நலன்கள் எந்த வகையிலும் மாற்றமடையாது என்று சொன்னார், உடனே கன்ஸர்வேட்டிவ் ஆட்கள் அதை அமெரிக்க ஊடகத்தில் பரப்ப ஒபாமா அமெரிக்க நலனுக்கு எதிரானவர் என்று ஹில்லரி முழங்கினார். கனேடிய பொதுநலனைவிட அமெரிக்க ரிபப்ளிக்கன்களின் நலன் முக்கியமா என்று எதிர்க்கட்சிகள் இங்கே வெடிக்க, அரசு அதிகாரி ஒருவரை பதவிநீக்கி ஹார்ப்பர் தன்னைக் காத்துக்கொண்டார்). ஒபாமா வருவது ஹார்ப்பருக்கு உவந்ததாக இருக்காது.

ஏதாவது அசம்பாவிதம் நடந்து லிபரல்கள் ஆட்சிக்கு வந்து மறுபுறத்த்தில் மெக்கெய்ன் ஆட்சிக்கு வந்தால் புஷ்ஷின் முதல் நான்காண்டுகளைப் போல கனடாவின் இருப்பை அமெரிக்க அரசு முற்றிலும் மறக்கும். வீராங்கனை பேலினுக்கு பஸ்மண்டை (nerd) டியோனை சீண்டி அழவிடுவது பொழுதுபோக்காக அமையும். அவரது அழுகையை மீண்டும் மீண்டும் ஒலிபரப்பி ரிபப்ளிக்கன் ஊடகங்கள் மாத்திரமல்லாமல் முழு அமெரிகாவுமே பொழுதுபோக்கு பெறும். குடியரசுக்கட்சியனர் எப்பாடுபட்டாவது கனடிய லிபரல் ஆட்சியை ஒழித்து கண்ஸர்வேட்டிவ்களைக் கொண்டுவர நன்றிக்கடனாக உதவுவார்கள்.

அந்த அசம்பாவிதம் இங்கே நடக்கும்பொழுது ஒபாமா ஆட்சிக்கு வந்தால் அமெரிக்க நலன்களுக்கு எதிராகக் கனடாவுக்கு உதவுவதாக ஒபாமாவை ரிபப்ளிக்கன்கள் சீண்டிக்கொண்டிருப்பார்கள். ஆனால் சில நீண்டகால ஒப்பந்தங்கள் உருவாகும். அதிகக் கூச்சல்கள் இல்லாமல் சில திட்டங்கள் நடக்கக்கூடும்.

ஆனால் எது எப்படியோ கிளிண்டன் போகும்பொழுது அமெரிக்காவும், க்ரெய்ட்ச்யென் போகும்பொழுது கனடாவும் பொருளாதாரத்தில் ஏறுமுகமாக இருந்தன. புஷ்ஷுக்குப் பிறகான அமெரிக்காவும் தற்பொழதைய வலதுசாரி அரசியலில் கனடாவும் பொருளாதாரச் சரிவில் இருக்கின்றன. இந்த நிலையில் அமெரிக்காவின் வேலைவாய்ப்புகளைக் கனடா பறித்துக்கொள்கிறது என்று அமெரிக்கார்கள் கூச்சலிடுவதையும் (இது அமெரிக்காவே முன்னின்று நடத்தும் உலகமயமாக்கலின் பின்விளைவுதான் என்பதை அமெரிக்கர்கள் உணர்வதாகத் தெரியவில்லை), கனடாவின் நீர், உலோகங்கள், பெட்ரோலியம், மரம் போன்ற இயற்கை வளங்களை அமெரிக்கா சூறையாடுகிறது என்று முனகும் கனேடியர்களும் பொருளாதாரச் சரிவு நிலையில் பரஸ்பர வெறுப்பைத்தான் உமிழப்போகிறார்கள் என்று தோன்றுகிறது. எல்லாம் நன்றாக இருக்கும் நிலையில் நட்பும் நன்றாகவே இருக்கும், கஷ்டகாலத்தில் நட்புகள் விரிசலடைவது இயற்கைததான்.

நான் இங்கே பொதுவான பார்வையைத்தான் வைத்திருக்கிறேன்.

பொருளாதாரம், பாதுகாப்பு, எல்லைப் பாதுகாவல், இயற்கை வளப் பகிர்வு, என்று பல விஷயங்களை விரிவாக அலச இங்கே இடமில்லை.

2. அமெரிக்காவுடன் ஒப்பிட்டால் கனடா அரசியலில் தெற்காசியர்கள் பெருமளவில் ஈடுபடுவதாக உணர்கிறேன். உண்மையா? இதனால் தமிழர்களின் நலன் முன்னெடுத்துச் செல்லப்படுகிறதா? அமெரிக்காவில் இந்திய வம்சாவழியினரின் தேர்தல் பங்களிப்பு குறித்த உங்கள் எண்ணங்கள் ப்ளீஸ்…

பதில் நாளை…

வலைப்பதிவுகளில் 'அமெரிக்க அதிபர் தேர்தல்'

தமிழ்ப்பதிவுகளில் சமீபத்திய குடியரசு, ஜனநாயக் கட்சி மாநாடுகள்; ஒபாமா, மெகெயின், பைடன், பேலின் குறித்த பார்வைகள்; ஆகியவற்றின் தொகுப்பு. விடுபட்டதை சொல்லவும்.

1. டெமாக்ரடிக் நேஷனல் கண்வென்ஷுன், டென்வர்- ஒரு நேரடி ரிப்போர்ட் :: ராஜா சொக்கலிங்கம்

நான் அறிவாலயம் சென்றிருக்கிறேன். அறிவாலயத்தை சுற்றி என்ன என்ன பார்த்தேனோ அது எல்லாவற்றையும் இங்கும் பார்க்கமுடிந்தது. உதாரணமாக, அறிவாலயத்தில் கலைஞரின் படம், அவர் எழுதிய புத்தகம், அவரை பற்றிய புத்தகம், வாழ்க கோஷங்கள், தி.மு.க கொடி, கட்சி சார்ந்த பொருள்கள் விற்கும் குட்டி குட்டி கடைகள் என நான் அங்கே பார்த்ததை அனைத்தும் இங்கேயும் பார்க்க முடிந்தது. கலைஞருக்கு பதில் இங்கே ஒபாமா அவ்வளவுதான் வித்தியாசம்.

2. ஒபாமா பராக் பராக் :: ‘உள்ளும் புறமும்’ மருதன்

ஜார்ஜ் புஷ்ஷின் கொள்கைகள்தான் பராக் ஒபாமாவின் கொள்கைகளும். பில் கிளிண்டனின் கொள்கைகள்தான் பராக் ஒபாமாவின் கொள்கைகளும். யார் அதிபர் என்பது அவ்வளவு முக்கியமில்லை. குடியரசுக் கட்சியா அல்லது ஜனநாயகக் கட்சியா என்பதல்ல கேள்வி. வெள்ளையரா கறுப்பரா என்பதல்ல முக்கியம். அமெரிக்காவின் தன்மை மாறாது.

3. மலிந்து வரும் அமெரிக்க அரசியல்: Cheap Political Stunts :: தெக்கிகாட்டான்

சாரா பலீன் இந்தக் காட்சியில் இணையும் வரை நன்றாகவே சென்று கொண்டிருந்த அரசியல் சார் பிரச்சாரங்கள் இன்று வேறு திசை நோக்கி பயணிக்க ஆரம்பித்திருக்கிறது… பேசப் படக் கூடிய விசயங்களை ஓரத்தில் ஒதுக்கி வைத்துவிட்டு, கூட்டத்தினை கைதட்டி “க்கோ ட்டீம் க்கோ” சொல்லி…

4. அமெரிக்க அரசியல் – தெகாவிற்கான பதில்! :: யு.எஸ்.தமிழன்

Unemployment rate had been within the required amount throughout Bush’s regime. ஒரு நாடு சுபிட்சமாக, inflation இல்லாமல் இருக்க 4-6% unemployment rate இருக்க வேண்டும் என்று பொருளாதார வல்லுனர்கள் கூறுகிறார்கள்…highly not recommended to bring the unemployment rate below this levels as it will trigger inflation! http://www.bls.gov/cps/cpsaat1.pdf இதில் கிளிண்டன் காலத்தையும் புஷ்சின் காலகட்டத்தையும் compare செய்து நீங்களே பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

5. பாரக் ஒபாமா: அமெரிக்காவின் மாயாவதி! :: புதிய ஜனநாயகம்

முதலாளித்துவ நாடாளுமன்றத்திற்கு நடத்தப்படும் தேர்தல்கள் மூலம், அடிப்படையான எந்த மாற்றத்தையும் கொண்டுவந்துவிட முடியாது என்பதற்கு பல நாடுகளின் அனுபவங்கள் சான்றாக உள்ளன. அமெரிக்க ஜனநாயகம் பற்றிய வீண்பெருமையில் மூழ்கிக் கிடக்கும் அமெரிக்க மக்களுக்கு இந்த அனுபவங்கள் கண்ணில் படாது, அமெரிக்க மக்கள் பட்டுத்தான் புரிந்து கொள்ள வேண்டும்; அதற்கு வேண்டுமானால், பாரக் ஒபாமாவின் தேர்வு பயன்படக்கூடும்.

6. வெள்ளை நிறவெறி கறுப்பு உண்மைகள் : இளநம்பிபுதிய கலாச்சாரம்

கடந்த இருபதாண்டுகளில் அமெரிக்க சமூகத்தின் பல்வேறு துறைகளில் நடந்த நிறவெறிக் கொடுமைகளை இங்கே தொகுத்துத் தருகிறோம், இக்கட்டுரை எழுத உதவிய நூல் ரோலொஜ் பதிப்பகத்தின் ஒயிட்ரேசிசம், ஆசிரியர்கள் ஜோ ஆர்.பேகின், ஷொர்னன் வெரா மற்றும் பினார்பாதர்.

சமகால அமெரிக்காவில் நிறவெறிப் பாகுபாடு எந்த அளவுக்கு வெள்ளையர்களிடம் ஊறியிருக்கிறது என்பதை விரிவான ஆய்வின் மூலம் நிறுவுகிறது இந்நூல். உலக மனித உரிமை பற்றிக் கூப்பாடு போடும் அமெரிக்காவின் உண்மை முகத்தையும் அமெரிக்கா ஜனநாயகத்தின் உண்மை முகத்தையும் இதன் மூலம் புரிந்து கொள்ளமுடியும்.

7. அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா…. :: அவியல் செல்வி

ஒரே வேலைக்கு, பெண்களுக்கும் , ஆண்களுக்கும் சமமான ஊதியம் வழங்குவதையே ஏற்றுக்கொள்ளாத மெக்கெயின், துணை ஜனாதிபதி வேட்பாளராக தேர்ந்தெடுப்பதற்கு முன் ஒரே ஒருமுறை மட்டுமே சந்தித்திருக்கும் பெண்ணை திடீர்னு துணை ஜனாதிபதி பதவிக்கு ஏன் நிறுத்தினார்?

ஒபாமாவை நிர்வாக அனுபவம் பத்தாதுன்னு மூச்சுக்கு மூச்சு திட்டிக்கிட்டே, இரண்டே இரண்டு வருஷங்கள் அலாஸ்கா என்ற பனி பிரதேசத்திற்கு ஆளுநராக இருக்கும், தனக்கு பரிச்சயமில்லாத ஒருவரை ஏன் துணை ஜனாதிபதி பதவிக்கு வேட்பாளராகினார்

8. சாரா பாலினின் திருமணமாகாத 17 வயது மகள் கர்ப்பம் :: வினாயக்

– அமேரிக்க பள்ளிகளில் வெளிப்படையான பாலியல் கல்வி கூடாது,
– பாலியல் கல்விக்கு அரசுப் பணமேன் ? வரிப் பணமேன் ?
– abstinence – அதாவது மறுத்தலே சிறந்த கருத்தடை
– கருக்கலைப்பு கூடாது
என்றெல்லாம் பழமையான கருத்துக்களை பறை சாற்றிவரும் சாரா பாலினின் வீட்டிலேயே, அவருடைய சொந்தப் பெண்ணே, 17ழே வயதில், அதுவும் திருமணத்துக்கு முன் கருவுற்று இருப்பது எதிர் தரப்பில் பெரும் நகைப்பையும், அமேரிக்க conservative பழமைவாதிகளிடத்து பெரும் திகைப்பையும் உண்டாக்கியுள்ளது

9. அவுட் சோர்சிங்: இந்தியாவைக் கலங்க வைத்துள்ள ஒபாமா!நாடும் நடப்பும்

அவுட்சோர்சிங் செய்யாத அமெரிக்க நிறுவனங்களுக்கு மட்டுமே இனி வரிச்சலுகை அளிக்கப்படும் நிலையை உருவாக்கப் போகிறேன் என்றார் அவர்.

10. ஒபாமா இது நியாயமா! சாய்கணேஷ் (பங்கு சந்தையில் பணம் பண்ணலாம் வாங்க)

இனவெறிக்கு எதிராக போராடியவர் என்றெல்லாம் சொல்லபடும் அவர் பேசியதும் (மண்ணின் மைந்தர்களுக்கே முதலிடம் என்ற வகையில்) இனவெறி தாக்குதலே/தூண்டுதலே.

அமெரிக்காவின் ஒவ்வொரு அசைவும் மற்ற நாடுகளின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது உலகறிந்த விசயம்…. அப்படி இருக்கையில், அவர் நடை முறைக்கு சாத்தியமா (அமெரிக்க காங்கிரஸின் அங்கிகாரம் / செனட் அங்கிகாரம் கிடைக்குமா) என்பதை யோசிக்காமல் சொல்லிய வார்த்தைகள், ஓட்டு பொறுக்கும் அரசியல் வாதிகளின் பேச்சை போல் தான் இருந்தது

11. இந்தியா – அமெரிக்கா ஒன்றிணைந்து தீவிரவாதத்தை முறியடிக்க வேண்டும் – சுதந்திர தின வாழ்த்து செய்தியில் ஒபாமா :: வியப்பு.கொம் செய்தி

21ஆம் நூற்றாண்டில் தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் அதிகரித்துள்ளது. இதனை இந்தியா அமெரிக்க நாடுகள் இணைந்து முறியடிக்க வேண்டும். இந்திய சுதந்திரத்தில் மகாத்மா காந்தியின் பங்கு மகத்தானது. அவரது நெறிமுறைகளை இக்காலத்து இளைஞர்கள் பின்பற்ற வேண்டும்.

12. வாங்கலையோ ஒபாமா, மெக்கெனின் காண்டம்… !!! :: சேவியர்

ஒபாமா காண்டம் சொல்கிறது : Use With Good Judgment
மெக்கெயின் காண்டம் சொல்கிறது : Old but not expired

13. ஒபாமாவின் நலன் கருதிய உப ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு :: அதிரன் மெட்ரோ நியூஸ் 29.08.08

பயங்கரவாதத்தை பொறுத்தரை ஈராக் முக்கிய இடம் வகிக்கவில்லை. ஒரு போதும் வகிக்கவும் போவதில்லை என்பது ஒபாமாவின் முடிவாக இருந்தாலும் ஈராக்கில் நிலையான இராணுவ தளங்களை ஏற்படுத்துவது தொடர்பான தவறான வழிகாட்டலுக்கு அமெரிக்கப் படையினரையும் வளங்களையும் வீணடிக்கமாட்டார் என்றே தெரிகிறது.