Tag Archives: Accidents

அனேக அகமுடையார்: யானம் சிறுகதை விமர்சனம்

ஜெயமோகன் அவ்வப்போது சிறுகதைகளை வெளியிடுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. அவரின் வயதில் அல்லது அவரைப் போன்ற ஆளுமையை அடைந்த பிறகு அவரின் சமகாலத்தவரோ, அவருக்கு முந்தைய இலக்கிய ஜாம்பவான்களோ அத்திப் பூத்தது போலத்தான் சிறுகதைகள் எழுதினார்கள். அவர்கள் நாவல் எழுதுவதில் மட்டுமே கவனம் செலுத்தினார்கள். அல்லது பேசாமல் இருப்பதே கௌரவத்தைக் காப்பாற்றும் என்று அமைதி காத்தார்கள்.

நான் நினைத்தது – ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி, வண்ணதாசன், வண்ணநிலவன், எஸ். ராமகிருஷ்ணன் போன்றோர். சுஜாதா மட்டும் விதிவிலக்கோ!?

இந்த எண்ணம் தவறுதலாக இருக்கலாம். இருபதுகளில் துவங்கி அறுபது வயது தாண்டியும் எந்த எழுத்தாளராவது தொடர்ச்சியாக சிறுகதைகளை தொண்ணூறுகளில், 2000களில் வெளியிட்டார்களா?
தீபாவளி சிறப்பிதழ்கள் தவிர்த்து அதற்கான பத்திரிகைகள் இருந்ததா என்பதைக் குறித்த என் எண்ணத்தையும் திருத்தவும்.

நிற்க.

யானம் (சிறுகதை) | எழுத்தாளர் ஜெயமோகன் (jeyamohan.in)

இந்தப் பதிவு இலக்கியகர்த்தாக்களின் பிற்கால படைப்பூக்கம் பற்றியது அல்ல. அமெரிக்காவில் வசிக்காத ஒருவர் அமெரிக்காவைப் பற்றி புனைவு எழுதலாமா என்பதைப் பற்றியும் அல்ல. எனினும், அதையும் நோக்குவோம்.

ஒரே ஒரு மேற்கோள்: “என்ஜாய் பண்றாங்களோ இல்லியோ, இது ஸ்கூலிலே பிரெஸ்டிஜ் இஷ்யூவா இருக்கு”

பொத்தாம்பொதுவாக ஜல்லியடிப்பது வாத்தியாரின் வித்தை. ஜெயமோகனின் சிறுகதைகளில் ஒற்றை வரி தீர்ப்பு கொடுத்து மொத்த சமுதாயத்தை சுருக்குவதும் அவ்வப்போது செய்வதுதான். இதிலும் சாமர்த்தியமாக கதாபாத்திரத்தின் வசனமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. இதே போல் கதை நெடுக மனைவியும் கணவனும் கனமான உரையாடல்களில் ஈடுபடுகிறார்கள்.

கார் என்பது எல்லைகளில்லா சுதந்திரம். நான்கு சுவருக்குள் அடைபட்டுக் கிடக்கும் வீட்டில் இருந்தும், உடன் இருக்கும் நபர்களிடமிருந்தும் கட்டற்ற விடுதலை. பிடித்த பாடல். நினைத்த வேகம். இலக்கற்ற பாதை. அமெரிக்காவில் ஆண்டி முதல் அரசர் வரை எவரும் எளிதில் வாங்கி, உடனடியாக ஊர்ச்சுற்ற, இல்லமாக குடியிருக்க என்று நினைத்த மாதிரிக்கு பயன்படுத்தும் மூலமுதலாதாரப்பொருள்.

யானம் சிறுகதையில் நான்கைந்து நல்ல பொறிகள், துவக்க கண்ணிகள் இருக்கின்றன:
1. அந்தத் தற்கொலை எண்ணம்
2. பச்சை விளக்கிற்காக காத்திருக்கும்போது(ம்) பக்கத்து வண்டிகளை எட்டிப் பார்ப்பது
3. விடுமுறை விட்டால் காரை எடுத்துக் கொண்டு எங்காவது கிளம்புவது

அதை விட அந்த இடங்களை உளவியல் ரீதியாக தீர்க்கமாகவோ சம்பவங்களின் கோர்வையில் ஆழமாகவோ உள்ளே செல்லாமல் ஹெலிகாப்டரில் பறக்கும் அவசரத்துடன் தாண்டி விடுகிறார். அதை விட ஆபத்தான பிரதேசம் – இந்திய சாலைகளையும் போக்குவரத்தையும் அமெரிக்க மக்களோடும் இயந்திரங்களோடும் ஒப்பிடும் பிரதேசங்கள். அவை இன்னும் தேய்வழக்காக அலுமினிய பிரகாசத்துடன் மின்னிடுகின்றன.

காரில் இருக்கும் விடலைகளும் பாந்தன்களும் இன்றைய காலத்தில் செல்பேசியில் மூழ்குவார்களேத் தவிர இந்த மாதிரி தத்துவபூர்வமான விவாதங்களுக்குள் செல்லமாட்டார்கள். கதைதானே? ஜெயமோகன் கற்பனைதானே? அரட்டை அடிக்கக் கூடாதா என்ன!?

எனினும், கதையின் அடிநாதம் முக்கியமான ஒன்றைச் சுட்டுகிறது.

இந்தக் காலத் தம்பதியினருக்கு விவாகரத்தில் விருப்பமில்லை. இல்லறமும் போரடிக்கிறது. ஒருவனுக்கு ஒருத்தி என்னும் பத்தாம்பசலி கொள்கைகளிலும் கிஞ்சித்தும் நம்பிக்கை இல்லை.

அவர்கள் திறந்த வாழ்க்கையை விரும்புகிறார்கள். அன்றாடம் ஒரேயொருவடன் தாம்பத்தியம் வைத்துக் கொள்வதினால் வரும் அலுப்புகளை உணர்ந்தவர்கள்.

”நியு யார்க்கர்” கட்டுரையில் இருந்து நறுக்:

So many rules! “American Poly” reveals Americans to be very American. Good Puritans, we made marriage into work and non-monogamy into even more work—something that requires scheduling software, self-help manuals, even networking events. Presumably, participants could at least skip the icebreakers.

https://www.newyorker.com/magazine/2024/01/01/american-poly-christopher-gleason-book-review-more-a-memoir-of-open-marriage-molly-roden-winter

”அன்புள்ள அல்லி” கேள்வியில் இருந்து இன்னொரு மேற்கோள்:

My nesting partner of a decade and I opened our relationship about four years ago, and for the first three years, we were ethically non-monogamous, but not poly. We’re pretty parallel, but we’re recently trying garden party style for big events… the polycule… metamour…

https://slate.com/human-interest/2024/01/birthday-plan-relationships-sex-advice.html

மணிரத்னம் ஓகே கண்மணி எடுத்தது போல், அனேக அகமுடையார் கொள்கைகளை ஜனரஞ்சகமாக்க இன்றைய கல்கித்தனமான கதை. மணி ரத்தினம் சினிமா போல் இதுவும் ஒட்டிக்கோ/கட்டிக்கோ வேட்டியாக பல்லிளிக்கிறது.

உங்கள் வாசிப்பில் என்ன உணர்ந்தீர்கள்?

தடுப்பும் தண்டவாளப் பயணமும்

ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்:
அ) இந்தியாவில் உயிர்களுக்கு மதிப்பு கிடையாது.
ஆ) பதவியோ, பணமோ இருந்தால் மட்டுமே இந்தியாவில் மதிப்பு.
இ) நூற்றைம்பது கோடி பேரில் 15,000 பேர் இறப்பதெல்லாம் ஒரு சங்கதியே கிடையாது.
ஈ) மறுபிறவி, ஜனனமும் மரணமும் சுழற்சி என்றிருப்பதை இந்தியர்கள் அறிவதால் பிற உயிர்கள் இறப்பதை அலட்சியம் செய்கிறார்கள்.

1984-இல் ‘தி ஹிந்து’ நாளிதழின் கடைசி பக்கங்களைத் தவிர முகப்புப் பக்கத்தையும் படிக்கத் துவங்கிய காலம். நவம்பர் 84 முழுக்க இந்திரா காந்தியும் அவரைத் தொடர்ந்து வாரிசு ராஜீவ் அரசராக ஆன கதையும் அலங்கரித்தது. டிசம்பரில் போபால் விபத்து குறித்து அந்தத் தலைப்புச் செய்தியை பார்த்தபோது, கையாலாகாத்தனமும் கோபமும் ஆத்திரமும் அழுகையும் எல்லாமுமாக குழப்பமாக, இந்த அரசு மீதும், அதன் அதிகாரிகள் மீதும், நாடு மீதும், நாட்டின் விதிகள் மீதும், அசூயை கலந்த வெறுப்பு எழுந்தது.

எனக்குத் தெரிந்த யூனியன் கார்பைட் நிறுவனம் ‘எவரெடி’ (Eveready) பாட்டரி தயாரித்தது. என்னவர்களின் கண்களையும் எண்ணற்றவர்களின் உயிர்களையும் பறிக்கக் காரணமுமாய் இருந்தது. ‘கண் சிவந்தால் மண் சிவக்கும்’ என்று படங்கள் வந்த காலம். வெள்ளித்திரையில் கண்கவர் நாயகிகள் எளிதில் காதலில் விழுவது போல், திரைப்படங்களில் மட்டுமே புரட்சி வெடிக்கும் என விளங்கத் துவங்கியது. நிஜத்தில் வில்லன்கள் சௌகரியமாக படகுக் கார்களில் பவனி செல்வார்கள். ஐந்தரை இலட்சம் பேரை முடமாக்கினாலும் எந்தவித பின் விளைவுகளும் சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படாமல் சொகுசாக அடுத்த கைங்கர்யத்தில் இறங்கி விடுவார்கள்.

எத்தனை சாலை விபத்துகள்?
ஒவ்வொரு மாதமும் எவ்வளவு இரயில் தடம்புரண்டு, எதிருக்கெதிர் ட்ரெயின் மோதிக் கொண்ட இறப்புகள்?
சூரத்தில் கொடுந்தொற்று, சென்னையில் புயல், கடலில் சூறாவளியில் மீனவர்கள், நிலநடுக்கம், பூகம்பம், மழை வெள்ளம்…
அதெல்லாவற்றையும் விட திறமைக்கு வேலைகொடுக்காத சூழல். கொடும் பசி நிலவிய சமூகம்.

இந்திய தினசரிகளுக்கு எதிர்மறையாய் செய்திகளைத் தருவதில் இருந்த அசுரத்தனமா?
அல்லது நம் நாட்டில் நிஜமாகவே அலட்சியமும் அசட்டைத்தனமும் அசமஞ்சமும் சேர்ந்த நிர்வாகத் திறமையின்மையா?
ஒவ்வொரு அதிகாரியும் லஞ்சம் வாங்கக் கூசாதவர்களாக, அராஜகம் செய்தால் எந்தவித எதிர்விளைவும் கிடைக்காத சாக்கடைத்தனமா?

நெட்ஃப்ளிக்ஸில் ’ரெயில்வே மென்’ (The Railway Men) பார்த்தவுடன் தோன்றியது —> இன்று இதெல்லாம் மாறியிருக்கிறதா?
அல்லது செயல்துடிப்புடன் புத்திசாலித்தனமாக செயல்பட்டவர்கள், ‘கடமையைச் செய! பலனை எதிர்பாராதே!!’ ரகமா?

குறைந்த பட்சம் நல்லவர்களும் நேர்மையாக இயங்கியவர்களும் தன்னலம் பாராது இயங்கியவர்களும் இருந்திருக்கிறார்கள். என் ‘துரியோதனப்’ பார்வைக்கு அவர்கள் தென்படவில்லை.
பாலும் தேனும் இன்னும் இந்தியாவில் ஓடவில்லை. அவற்றை ஒடவைப்பதற்காக உண்மையாக உழைப்பவர்களை நாமும் கண்டுகொள்ளவில்லை.

நன்றி: https://aqli.epic.uchicago.edu/country-spotlight/india/

நெருப்பிலாமல் புகையுமா?

செய்தி: Blaze destroys Khalsa Mahal; 1 fireman dead

The fire broke out in the offices of Commissioner and Director of Industries and Commerce and Director of Social Welfare. (தொழில் வணிக வரி அலுவலகம்)

Believing that the fire was fully doused, a team led by Divisional Fire Officer, Central Chennai, Priya Ravichandran, entered the building around 1:30 am and suddenly the roof caved in. K.Anbazhagan (55), leading fireman at Teynampet station, died on the spot.

சென்னை எழிலகத்தில் தீ: வணிகவரி- சமூகநலத்துறை ஆவணங்கள் சாம்பல்; சதியா ?

இந்த அலுவலகத்தில் இருந்த முக்கிய ஆவணங்கள் அனைத்தும் எரிந்து சாம்பலாயின. பொங்கல் திருநாளை முன்னிட்டு அரசு அலுவலகத்திற்கு தொடர் விடுமுறை என்பதால் சென்னையில் உள்ள அனைத்து தலைமை அலுவலகங்களும் வெறிச்சோடி காணப்பட்டன.


ஏன்? சில துப்பறியும் எண்ணங்கள்

1. அமைச்சர் எத்தனை அமைச்சரடி: சமூக நலத்துறை அமைச்சராக பதவி வகித்த செல்வி ராமஜெயத்தை அமைச்சர் பதவியிலிருந்து முதல்வர் ஜெயலலிதா நீக்கம் செய்தார். புதிய சமூச நலத்துறை அமைச்சராக வளர்மதியையும் நியமித்துள்ளார். சென்ற வருடம் – திமுக: சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன்.

2. ஆட்சியர் ஊழல்: Directorates of Social Welfare, and Industries and Commerceஇல் இருந்து எத்தனை ஆணையர்கள் (தற்போதைய இயக்குநர் ஜோதி நிர்மலா) சம்பந்தப் பட்டிருக்கிறார்கள் என்பதைக் கண்டுபிடிப்பவருக்கு ‘பரத் – சுசிலா விருது’ வழங்கப் போவதாக அறிவிப்பு.

3. தயார் நிலை: பொங்கல் நேரத்தில் தீயணைப்பு வீரர்கள் சொந்த ஊருக்கு செல்கிறார்களா அல்லது சென்னையிலேயே இருக்கிறார்களா என்று சோதனை செய்தார்கள்

4. ஸ்மோக் அலாரம் வணிகம் / தீயோலம் வர்த்தகம்: புகை எழுந்தாலே சத்தம் எழுப்பும் கருவிகளை விற்பவர்களின் சதிச்செயல் இது.

5. புதிய கட்டிடம் எழுப்ப திட்டம்: இருக்கும் எழிலகத்தை இடிக்கச் சொன்னால், புராதனம், கலாச்சாரம், பாரம்பரியம், வரலாற்றுச் சின்னம் என்றெல்லாம் புயல் கிளப்புவார்கள். மதராஸ் மியூசிங்ஸ், தியடோர் பாஸ்கரன், இல கணேசன் எல்லோரும் எழுதத் தொடங்குவார்கள். இப்படி இடித்தால் மல்டிப்ளெக்ஸ் மாடி அமைக்கலாம்.

6. அப்பாவி அன்பழகன் கொலை: நாலு குழந்தைகளுக்கு அப்பாவான நடுத்தர வர்க்கத்தை நடுத் தெருவிற்கு கொண்டு வந்தால் எப்படி சர்வைவ் ஆவார்கள் என்று வேடிக்கை பார்க்கும் ரியாலிடி டிவியின் சூழ்ச்சி. 😦

பரிந்துரை: இரண்டு இணையத்து சிறுகதைகள்

சமீபத்தில் இரு நல்ல புனைவு வாசிக்க கிடைத்தது. அவை:

1. சத்யராஜ்குமார் :: மைய விலக்கு « இன்று – Today

2. ரா. கிரிதரன் :: வார்த்தைகளின் விளிம்பில்: தேவதைகள் காணாமல் போயின – சிறுகதை

அவற்றை முடித்து விட்டு இந்தப் பதிவைப் படிப்பது கதைகளுக்கு நீங்கள் செய்யும் ஷேமம்.


மேற்கோள் மூலை

ச.ரா.குமார் கதையில் இருந்து கவர்ந்த இரு இடங்கள்:

அ) இன்பாக்சில் நிஷா அனுப்பிய மின்னஞ்சல். ரொம்பவும் கோபமாகி விட்டால் நிஷா இமெயிலில்தான் பேசுவாள். பத்து கிலோ பைட்களுக்கு திரையில் தெரிந்தது அவள் கோபம்.

ஆ) ‘நீயும், நிஷாவும் ஏன் இப்படி கஷ்டப்படணும்? பார்த்துக்க ஆயிரம் பேர் இருக்காங்க. இங்கே நிறைய சொகுசு இருக்கு. ஆனா லைஃப் இல்லை. நாலு சுவத்துக்குள்ள நாம நாலு பேருமே முகத்தைப் பார்த்துக்கிட்டு… மெட்ராசுக்குப் போயிரலாம்டா.’


ரா.கி.யில் கவர்ந்தவற்றிற்கு சாம்பிள்:

அ) ஜீரணமாகாத உணவை தள்ள முயற்சிப்பதுபோன்ற கடலின் முயற்சி ஒவ்வொறு முறையும் அலையென தோற்கும் காட்சி வியப்பானதே. எதைஎதையோ விழுங்குவதும், பின்னர் எதுவுமே தெரியாதுபோல் கிடப்பதும் இதற்கு வாடிக்கையாகிவிட்டது.

ஆ) ஜப்பான் நாட்டவர்களின் முகவடிவம், எங்கு ஆரம்பித்தாலும் கூர்மையான தாடையிலேயே விழும்.


ஆறு வித்தியாசங்கள்

இரு கதைகளுமே அதிர்ச்சி அல்லது வித்தியாசமான முடிவில் நம்பிக்கை கொண்டவை. இரு கதைகளுக்குமே அது தேவையில்லை என்பது வேறு விஷயம்.

ஒன்று போட்டிக்காக எழுதப்பட்டது. மற்றொன்று அந்தவித நிர்ப்பந்தங்களுக்குட்பட்டு உருவாகாவிட்டாலும், போட்டியில் கலந்துகொள்வதற்கான முஸ்தீபுகளும் முகாந்திரங்களும் நிறைந்தது.

வார்த்தைகளின் விளிம்பில் நிற்பவரிடம் கதை ஜாஸ்தி. இன்று – டுடேவிடம் மூக்கு மேல் வரவைக்கும் விவாதப்புள்ளிகள் ஜாஸ்தி.


விமர்சனம்

சத்யராஜ் கதையில் விமர்சிக்க விஷயம் ஏதுமில்லை. பட்டிமன்றம் மாதிரி இன்னும் கொஞ்சம் எண்ணவோட்டமோ, உரையாடல் மன்றமோ கட்டி, மெரீனா பீச் மணல் அளவு வியாபிக்க கூடிய சமாச்சாரத்தை சுண்டல் மாதிரி பொட்டலம் கட்டி இருக்கிறார்.

குறைந்த பட்சம் அந்த மின்னஞ்சலையாவது அனுபந்தம் ஆக்கி இருக்கலாம் என்னும் ஏக்கம் இருக்கிறது.

oOo

காதலியின் நினைவுகள் என்று இன்னொரு கதை எவராவது எழுதினால் அலுவலை நோக்கி(யே) வடக்கிருக்கலாம் என்று எண்ணுமளவு அலுத்துப் போன டாபிக்கில் பூந்து விளையாடியிருக்கிறார் கிரி. சம்பிரதாயமான ஆரம்பம்.

இத்தினியூண்டு கதையில் உலாவும் அத்தனை பாத்திரங்களுக்கும் மனதில் நிற்கும் அறிமுகங்கள். தண்ணீரில் மிதக்கும் ப்ளாஸ்டிக் ஆக, கவிஞர்களே உவமைகளுக்கு பஞ்சம் பாடும் இந்தக் காலத்தில் சக்கையான தக்கை கொண்ட மிதவையான உறுத்தாத பயன்பாடு அமர்க்களம்.

அப்படியே, ‘நான் அந்தக் காலத்தில் லால் கிலாவில் இப்படித்தான்…’ என்று காதலி காலடி தேட வைப்பதே கதையின் வெற்றி.

இருவருக்கும் என் நன்றி.