Category Archives: Tamil Blog

Million Dollar Arm

மில்லியன் டாலர் புஜம்

லாரி ஓட்டுபவரின் மகன், பல்லாயிரம் கோடி இரசிகர்களின் கனவு நாயகனாக மிளிர முடியுமா? கான்பூரின் அருகே உள்ள கிராமத்தில் இருப்பவரும்; லக்னௌவில் இருந்து காத தூரம் இருக்கும் குக்கிராமத்தில் இருப்பவரும்; அமெரிக்கா வந்து அங்கே பேஸ்பால் பந்து வீசும் நட்சத்திரங்கள் ஆவார்களா? ஒன்பது குழந்தைகள் உள்ள வீட்டில் ஒற்றை அறையில் வளர்பவர், அமெரிக்கர்களுக்கு சொந்தமான அவர்களுடைய விளையாட்டில், அவர்களுக்கு எதிராக மிளிர்வது சாத்தியமா?

இந்த மாதிரி சம்பவங்களைக் கோர்த்து எவராவது புனைவு அமைத்திருந்தால், இதெல்லாம் கதையிலும் சினிமாவிலும் மட்டுமே நடக்கும் என்றிருப்பேன். ஆனால், நிஜத்தில் நடந்திருக்கிறது. வாரநாசிக்கு அருகில் இருக்கும் ஊரில் பிறந்து வளர்ந்த தினேஷ் படேலும், ’கம்பள நகரம்’ என்றழைக்கப்படும் பாதோஹி நகரத்தில் ஒன்பதில் ஒருவராக பிறந்த ரிங்கு சிங்கும் – அமெரிக்கா வருகிறார்கள். பிட்ஸ்பர்க் நகர அணியில் பந்து போடுகிறார்கள்.

இந்த உண்மைக் கதையைப் பின்னணியாக வைத்து ”மில்லியன் டாலர் புஜம்” (Million Dollar Arm) வெளிவந்திருக்கிறது. இந்தப் படத்திற்கு ஏ ஆர் ரெஹ்மான் இசையமைத்திருக்கிறார்.

இந்தத் திரைப்படத்திற்கு இசையமைக்க ஒத்துக் கொண்டேபோது கொடுத்த பேட்டியில் ரெகுமான் இவ்வாறு சொல்கிறார்: ”ஸ்லம் டாக் மில்லியனரு’க்குப் பிறகு ஆங்கிலப் படங்களுக்கு இசையமைக்க நிறைய வாய்ப்புகள் வந்தன. ‘கப்பிள்ஸ் ரிட்ரீட்’, ’வாரியர்ஸ் ஆஃப் ஹெவன்’, ‘127 அவர்ஸ்’, ’எர்த்’, ‘பீப்பிள் லைக் அஸ்’னு இப்படி நிறைய நிறைய! அதில் நான் விரும்பித் தேர்ந்தெடுத்தது ‘127 அவர்ஸ்’ மட்டும்தான். அது ஆஸ்கர் பரிந்துரை வரை போனது. ஆனால், அடுத்த மூன்று வருடங்களுக்கு இந்தியாவை அடிப்படையாக வைத்து வரும் ஹாலிவுட் படங்களுக்கு இசையமைக்க நான் ஒப்புக்கொள்ளவில்லை. அப்படி, ஒத்துக் கொண்டால், ’ரெஹ்மானை – தெற்காசியா களத்தில் நடக்கும் கதைகளுக்குத்தான் பயன்படுத்தலாம்’ எனத் தேங்கிப் போயிருப்பேன். மேலும், இந்தியச் சூழலில் இசையமைக்க, எனக்கு தமிழும் ஹிந்தியும் இருக்கின்றன. அவற்றிலும் நான் தொடர்ந்து படங்கள் செய்து கொண்டுதானே இருக்கிறேன். நாலு வருடங்களுக்குப் பின்னால் மறுபடியும் ஒரு இங்கிலீஷ் படம் பண்ணலாம்னு நினைச்சேன். அந்த சமயத்தில் ‘மில்லியன் டாலர் ஆர்ம்’ படத்தின் இயக்குநர் கிரெய்க் கில்லஸ்ப்பியும் என்னை அணுகினார். இது இந்தியாவில் நடக்கும் கதை, வால்ட் டிஸ்னி தயாரிப்புனு நிறைய ஊக்கப்படுத்தும் விஷயங்கள் இந்தப் படைப்பில் இருந்தன. இது விளையாட்டு குறித்த திரைப்படம்தான். ஆனால், உள்ளுக்குள்ள ரொம்ப அற்புதமான இன்னொரு கதையும் மனித மனங்களின் ஊசலாட்டங்களும் ஓடுகிறது. ‘லகான்’ மாதிரினு சொல்லலாம்.”

படத்தில் எல்லா மொழிகளிலும் பாடல்கள் வருகிறது. படத்தின் இறுதியில் ‘என் சுவாசக் காற்றே’ படத்தில் இடம்பெற்ற சித்ராவும் உன்னிகிருஷ்ணனும் பாடிய ‘திறக்காதக் காட்டுக்குள்ளே’ பாடல் உணர்ச்சிப்பிழம்பான கணத்தில் ஒலிக்கிறது. படத்தின் நடுவே பாங்ரா பஞ்சாபி, டிஸ்கொத்தே ஹிந்தி, ஆங்கில ராப் என கலவையாக – எல்லா மொழிகளும் ரசனைகளும் இசைப்பிரிவுகளும் வருகின்றன.

இந்தப் படம் ஆஸ்கார் விருதுகளுக்கான நெடும் பட்டியலில் இடம் பெற்றிருந்தாலும், மூன்று/நான்கு பேர் மட்டுமே சொல்லப்படும் இறுதிப் பரிந்துரையில் இடம்பிடிக்கப் போவதில்லை என வல்லுநர்கள் கருதுகிறார்கள். ஸ்டீஃபன் ஹாகிங் வாழ்க்கையை சொல்லிய ‘தியரி ஆஃப் எவரிதிங்’ திரைப்படத்திற்கு இசையமைத்த யோஹான் ஜோஹான்ஸன், அல்லது இண்டெர்ஸ்டெல்லார் படத்தின் ஹான்ஸ் ஜிம்மர் அல்லது ஆலன் டூரிங் வாழ்க்கையை திரையாக்கிய ’தி இமிடேஷன் கேம்’ படத்தின் அலெக்ஸாண்டர் என முன்னிறுத்துகிறார்கள்.

ஆஸ்கார் விருதுகளுக்கு வாக்களிப்பவர்களுக்கு மறதி அதிகம். டிசம்பர் மாதத்தில் திரைப்படம் வெளியானால் மட்டுமே நினைவில் நிற்கும். ”மில்லியன் டாலர் புஜம்” திரைப்படமோ மே மாதமே வெளியாகி, இப்பொழுது திரையரங்குகளை விட்டு வெளியேறி விட்டது. இந்த நிலையில், அந்தப் படத்திற்கு எந்தப் பரிந்துரையும் கிடைப்பது சந்தேகமே. கோச்சடையான், ஐ போன்ற திரைப்படங்களுக்காகவும் ஏ ஆர் ரெஹ்மானின் பெயர் ஆஸ்கார் நீள்பட்டியல் பரிந்துரையில் இடம் பெற்றிருப்பதால், ‘மில்லியன் டாலர் ஆர்ம்’ பரிந்துரையையும் பத்தோடு பதினொன்றாகக் கருதி விட்டுவிடலாம்.

அது ஆஸ்கார் விருதிற்கான சாஸ்திரோப்தமான பட்டியல். இனி ஏ ஆர் ரெஹ்மானின் கோலோச்சல் குறித்த பாமரனின் பார்வை.

துவக்கத்தில் டிஸ்னியின் கோட்டை வரும்போதே பட்டாசு கிளம்பி விடுகிறது. இராணிகளும் மஹாராஜாக்களும் துள்ளலாக வெடி வெடிப்பது போல் ஐரோப்பிய பவனங்களுக்கு இந்திய ‘ஸ…ஸா… ஸரி’ வரும்போதே ”இது நம்ம இசை” என்று தோன்றவைத்து விடுகிறது. சிக்கன் டிக்கா மசாலாவில் இருக்கும் மணம் போல், பாரதத்திற்கேயுரிய வாசம்.

பதினான்காவது நிமிடத்தில் அந்த டிக்கா மசாலாவில் கொஞ்சம் சாம்பாரும் நிறைய தஹியும் கொத்து பரோட்டாவும் ஒருங்கே ஓங்கி ஒலிக்கிறது. சத்தமான இந்தியா. கசகச இந்தியா. சல்பேட்டா வாசனையான இந்தியா. கொண்டாட்ட இந்தியா. பரபர ஓட்டத்தின் நடுவே சாந்தமான இந்தியா. இப்படியெல்லாம் எழுத முடிகிறது… இதையெல்லாம் ஒலியில் கொண்டு வாருங்கள் என்று இயக்குநர் சொன்னாரா அல்லது இந்தியா என்றால் இதுதான் நாதம் என்று ஏ ஆர் ரெஹ்மான் சொன்னாரா? தெரியவில்லை. கேட்டுப் பார்த்தால் இந்தியா ஒலிக்கிறது. ஒளி கண்ணில் படாவிட்டால், மொழி புரியாவிட்ட்டால் கூட, அந்த லயம் காட்டிக் கொடுக்குமாறு அமைக்கப்பட்ட துள்ளலோசை.

அடுத்த ஓட்டம் இருபத்தி இரண்டாம் நிமிடம். ’சைய்யா சையா’ பாடிய சுக்விந்தர் சிங் ஒலிக்கிறார். அதே ஆட்டம்; பாட்டம். நிஜ நாடகம் தோன்றுவதற்கான ஒத்திகை நடக்கும் இடத்தை அறிமுகம் செய்யும் உறுமும் இசை.

அங்கே விட்டதை இருபத்தைந்தாம் நிமிடத்தில் சுக்வீந்த சிங் தொடர்கிறார். அவரை அப்படியே மாற்றி மேற்கத்திய இசைக்குத் தாவி விடுகிறார். இக்கி (Iggy Azalea) இங்கு வருகிறார்.

முப்பத்தி மூன்றில் ரெஹ்மானின் அமைதியான பாலட் ஒலிக்கிறது. பம்பாய் திரைப்படத்தில் ‘கண்ணாளனே’ துவக்கத்தில் வரும் இஸ்லாமிய சங்கீதம் போல்.

இனிமேல் திரைப்படத்தில் உற்சாகம் பிறக்க வேண்டும். ஏழைச் சிறுவர்கள் பந்து வீசும்போது அவர்களை ஒட்டி பாசமும், ஒட்டுதலும், ஜெயிக்க வேண்டுமே என்னும் ஏக்கமும் உண்டாக வேண்டும். டிஸ்னிக் கோட்டை வந்ததே… அதே இசை இப்பொழுது.

நாற்பதாவது நிமிடத்தில் நிஜப் போட்டி. இது ஏ ஆர் ரெஹ்மானின் சொந்த வீடு. முதல் படத்தில் ‘ஒட்டகத்தைக் கட்டிக்கோ’வில் ஆரம்பித்து மணி ரத்னத்திற்கு ’ருக்குமணி ருக்மிணி’ அயிட்டம் பாட்டு போட்டது போல் இலா அர்ஜுனும் அல்கா யாக்னிக்கும் குத்துகிறார்கள். அவர்கள் குத்துப்பாட்டு எப்பொழுது முடிகிறது, எப்பொழுது லகான் திரைப்படத்தில் வரும் “பார் பார் ஹோ…!! ஹஜார் பார் ஹோ!!!” வருகிறது என உணர முடியாத உருமாற்றம். அப்படியே, அந்த வீரர்களுக்காக கரகோஷமிடுகிறோம்.

நாற்பத்தியெட்டாம் நிமிடத்தில் வீடு திரும்புதல். அயல்நாடு செல்வதற்கு முன் வீட்டில் பெற்றோரிடம் சொல்லிக் கொண்டு விடை பெறும் தருணத்திற்கான முன்னுரையாக கொண்டாட்ட பாங்ரா. அது அப்படியே, உருக்கமான பிரிவுபசார பாந்தமாக மாறுகிறது. அங்கிருந்து அமெரிக்காவின் ராப், கெண்ட்ரிக் லமார் குரலில் தோன்றுகிறது.

இதன் பிறகு கிட்டத்தட்ட படம் முழுமையாக ஆட்கொள்கிறது. இசை தனியாக, பாடல் தனியாக, பாடகர் தனியாக துருத்திக் கொண்டு தெரிவதில்லை.

இசை ஒலிக்காமல் மௌனமாக இருக்க வேண்டிய நேரம். தோல்வியுறும் போது சந்திக்கும் நிசப்தம். அதிர்ச்சியும் பிரிவும் சொல்லும் குரல் எல்லாமே இருக்கிறது. ஆனால், இந்தியப் பகுதிகள் போல் “நான் ரெஹ்மான். நான் இங்கே இருக்கிறேன்” என்பது தெரிவதில்லை.

படத்தின் இறுதியில் இருவருக்கும் கடைசி வாய்ப்பு. இதில் வென்றால்தான் அமெரிக்கா கனவு பலிக்கும். தோற்றால் கூனிக் குறுக நேரிடும். இசை மெதுவாகவே ஆரம்பிக்கிறது. கொஞ்சம் ஹம்மிங். கொஞ்சம் ‘அ…ஆ…’. அப்படியே சட்டென்று ரிங்குவின் பந்து வேகமாகப் பாய்வது போல், தினேஷின் இதயம் துடிப்பது போல் துள்ளுகிறது. கையிலிருந்து ஏவப்பட்ட வில்லாக பாய்கிறது.

இந்தியர்கள் வெற்றிக்கான முதல் படியில் கால் வைத்ததை ஒலியிலும் திரையிலும் கலந்துருகிய உச்சகட்ட தருணமான படத்தின் இறுதியில் நிஜக்கதையிலும் வல்லவர்கள் வெற்றி கண்டார்கள் என்பதால் கண்கள் கலங்கியதா… அல்லது ரெஹ்மானின் இசையில் மனம் உருகியதா… தெரியவில்லை. ஆனால், ரெஹ்மான் தெரிந்தார். ஆஸ்கார் தெரியவில்லை. ஆனால், மீண்டும் மீண்டும் கேட்க வைத்து மயங்க வைக்கும் இசை தெரிந்தது. என்ன சுருதி, என்ன ராகம், என்ன தாளம், என்ன ஜானர் என்பதெல்லாம் தெரியவில்லை. ஆனால், இதயத்தைத் தொடும் இசை தெரிந்தது.

Oscars 2015

Oscars
அக்டோபர் மாதம். முதல் தேதி. 2009ஆம் வருடம். சீனாவின் தலைநகரில் தேசிய தினம் கொண்டாடுகிறார்கள். என்னுடைய கல்லூரித் தோழன் பீஜிங் நகரத்து அடுக்கு மாடி விடுதியில் செப்டம்பர் மாதக் கடைசியில் இருந்தான். அப்பொழுதே ஒத்திகைகளை ஆரம்பித்து விட்டார்கள். விடுதியின் உப்பரிகையில் இருந்து ’வீடியோ அரட்டை செய்யலாமா’ எனக் கேட்டேன். அவன் பதிலோ, அதிர்ச்சி கலந்த பயத்துடன் ‘வேண்டாம்டா… சுட்டாலும் சுட்டுடுவாங்க!’ என்பதாக இருந்தது.

பீஜிங் நகரத்தில் இருந்த புறாக்கள் எல்லாவற்றையும், ஒன்று கூட விடாமல் கூண்டில் அடைத்து வைத்து இருந்தார்கள். பட்டம் பறப்பதற்கு அதிகாரபூர்வமாகத் தடை விதித்து இருந்தார்கள். தேசிய தினத்தன்று இந்தப் பக்கம் இரண்டு ஃபர்லாங்; அந்தப் பக்கம் இரண்டு ஃபர்லாங்கும் மூடி இருந்தது.

இந்த விழாவும் பவனியும் இன்றோ நேற்றோ உண்டானதல்ல. சிங் (Qing) வம்சாவழியினர் ஆண்ட 1644 முதல் 1912 வரை போர்களில் பெற்ற வெற்றி விழா ஊர்வலமாக இருந்தது. அதன் பிறகு கம்யூனிஸப் புரட்சியின் புண்ணியத்தில் தொலைக்காட்சிக்கு ஏற்றவாறு உலா நடத்துகிறார்கள்.

விழாவிற்கென்றே பிரத்தியேகமாக அழைக்கப்பட்டிருந்த, விவிஐபிக்களும், நிருபர்களும் மட்டுமே அணிவகுப்பை நேரடியாகப் பார்க்க முடியும். உள்ளுர்வாசிகள் எவரும் திருவிழா தேரோட்டத்தைப் பார்க்க இயலாது. தொலைக்காட்சியில் மட்டுமே ஒளிபரப்பாகும். சீன டிவி என்ன காட்ட விரும்புகிறதோ, அதை மட்டுமே பார்க்க இயலும். 1984ல் நடந்த விழாவில் ‘ஹலோ டங் ஷாவ்பிங் (Deng Xiaoping)’ என்னும் பதாகையை படம் பிடிக்குமாறு அறிவுறுத்தப் படாததால், தொலைக்காட்சிக் குழுவினர் தவிர்த்துவிட்டனர். கட்சித்தலைமை, அந்தப் பதாகையை வைத்திருந்தவர்களை வெட்டி ஒட்டி சேர்த்துக் கொள்ளுங்கள் என்றவுடன், தனியாக படம் பிடித்து, நடுவே கோர்த்து ஒளிபரப்பிவிட்டார்கள்.

2009ல் நடந்த தேசிய விழாவின் சிறப்பசம் என்னவென்றால் ’பீஜிங் பெண்கள் படை’ நடத்திய நேர்த்தியான அணிவகுப்பு ஆகும். முட்டியைத் தொடாத சிக்கென்ற சிவப்பு குட்டிப் பாவாடைகள்; முட்டி வரை நீளும் வெள்ளை சப்பாத்துகள். ”இராணுவத்தில் இத்தனை பதின்ம வயது பதுமைகளா!” என சீனாவிற்கு குடிபெயர நினைக்க வைக்கும் வார்ப்புருத் தோற்றம் கொண்டவர்கள். கொஞ்சம் நாள் தீவிரமாக ஆராய்ந்ததில் அத்தனை பேரும் மாடல் நடிகர்கள் எனத் தெரிய வந்தது.

இவ்வளவு கோலாகலத்திற்கும் நடுவே கோட்டு சூட்டு போட்ட ஜூ ஜின்டாவ் (Hu Jintao) பந்தாவான படகுக் காரில் வந்தார்.

ஆஸ்காரும் இதே போல்தான். கோட்டு சூட்டு போட்டு நீல் பாட்ரிக் ஹாரிஸ் வந்தார். நிறைய பேர் நடனம் ஆடினார்கள். பாடினார்கள். கௌரவிக்கப்பட்டார்கள். நான் டால்பி தியேட்டருக்கு செல்லவில்லை. லாஸ் ஏஞ்சலீஸ் பக்கத்தில் கூட வசிக்கவில்லை. தொலைக்காட்சியில் என்ன காண்பிக்கப்பட்டதோ அதைப் பார்த்தேன். அந்த ஆஸ்கார் நிகழ்வுகள் எல்லாமே கடும் ஒத்திகைக்கு உட்பட்டது. சொதப்பல்கள் கூட நேர்த்தியான நடிப்புகளோ என எண்ணவைக்குமளவு இயல்பாக அரங்கேறும் நிகழ்வைப் பற்றிய குறிப்புகள்:

”எப்பொருள் யார் யார் வாய் எங்கெங்குக் கேட்பினும் அப்பொருளை தரவாக்கி ஆராய்வது அறிவு” என்னும் வள்ளுவப் பெருந்தகையின் குறளுக்கேற்ப, ஹார்வார்டு மாணவன் பென் (@BensOscarMath) யார் வெற்றி பெறுவார்கள் என்பதை ஆருடம் சொல்லியிருந்தார். அவர் சொன்னதற்கேற்பவே அனைத்து விருதுகளும் (ஓரிரண்டைத் தவிர) அமைந்தும் இருந்தன.

எனவே, ஆஸ்கார் பரிசை வென்றவர்களில் பெரிய ஆச்சரியங்கள் காத்திருக்கவில்லை.

ஆஸ்கார் பரிசுக்கான பரிந்துரைப் பட்டியலில் இடம்பெறுவதெற்கென்று சில சாமுத்ரிகா இலட்சணங்கள் இருக்கின்றன. முதலாவது அமெரிக்க பாசம். நீங்கள் எடுக்கும் படம் அமெரிக்கரின் நேர்மையையும் தேசத்தையும் அறத்தையும் பாட வேண்டும். இரண்டாவது நகைச்சுவை கேளிக்கைப் படமாக இருக்கக் கூடாது. சொல்லும் விஷயத்தை உருக்கமாக, சோகமாக, கோபமாக சொல்ல வேண்டும். கடைசியாக நிஜத்தில் நடந்ததைத் தழுவி, உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தால் இன்னும் அதிக வாய்ப்பு.

இது பரிந்துரைப் பட்டியலில் வருவதற்கான முஸ்தீபுகள். பரிந்துரையில் ஐந்து அல்லது ஆறு பேர் இடம்பிடிக்கிறார்கள். அவர்களில் இருந்து விருது பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும்?

முதலில் வாக்களிக்கும் அகாடெமி உறுப்பினர்களை நன்கு கவனிக்க வேண்டும். அவர்களுக்கு, உங்கள் படத்தின் அருமை பெருமைகளை விளக்கமாகச் சொல்ல வேண்டும். ஒவ்வொரு காட்சிக்கும் எவ்வளவு உழைப்பு தேவைப்பட்டது என்பதை விலாவாரியாக ஊடகங்களில் பேட்டியாகத் தர வேண்டும். எல்லா பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும் அலசல்களும், ஆராய்ச்சிகளும் இடம்பெற வைக்க வேண்டும். பிரச்சாரமும் அன்பளிப்பும் எவ்வளவு வலுவாக இருக்கிறதோ, எத்தனைக்கு எத்தனை பரவலாக கொடுக்கப்படுகிறதோ, அத்தனைக்கு அத்தனை வெற்றி வாய்ப்பு அதிகரிக்கிறது. (மேலும் வாசிக்க: The Average Oscar Campaign Costs $10 Million, And Other Oscar Facts)

இரண்டாவதாக உங்களின் வயது. சாகப்போகிற வயதில் உங்களுக்கு பரிந்துரை கிடைத்தால், ஆஸ்கார் விருது நிச்சயமாகக் கிடைத்துவிடும். இனிமேல், உங்களுக்கு இன்னொரு நல்ல படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்குமோ என்னும் பயம் ஒரு பக்கம் இருக்கும்; இன்னொரு பக்கம், இத்தனை ஆண்டுகளாக நடித்தும் ஆஸ்கார் வாங்காமல் இறந்துபோனாரே என்னும் பழி வரும் என்னும் நாணமும் அகாதெமி வாக்காளருக்குத் தோன்றும். எனவே, உங்களுக்கு அறுபதைத் தாண்டிவிட்டால், வெற்றி வாய்ப்பு பிரகாசம் ஆகும்.

கடைசியாக உங்களுக்கு ஏற்கனவே விருது தராமல் தவறவிட்டதற்கான பிராயசித்தம். ’மூன்றாம் பிறை’ எடுத்தபொழுது ”சிறந்த இயக்குந”ராக பாலு மஹேந்திராவைச் சொல்ல முடியவில்லையா? அதனால் என்ன… ”நீங்கள் கேட்டவை” எடுக்கும்போது கொடுத்துவிடுவோம் என்று முன்பு செய்த பிழைகளை நீக்கிக் கொள்வதற்கான பரிசாக சில சமயம் அமையும்.

heros_journey_cambell

Hero’s journey chart from Wikipedia

பார்த்தவுடன் அனுபவித்து ரசித்த பாய்ஹுட் திரைப்படத்திற்கு ஒரேயொரு விருது மட்டுமே கிடைத்தது. நமக்குத் தெரிந்த தூரத்து மாமா பையனுக்கு ஐஐடியில் இடம் கிடைக்காதது போல் லேசாக வருத்தமாக இருந்தது.

இந்த மாதிரி விருதுகளைத் தவறவிட்டவர்களுக்கு சிறந்த இயக்குநருக்காக ஆஸ்காரை வென்ற அலெக்ஸாண்ட்ரோ (Alejandro González Iñárritu) பேச்சு மருந்தாக அமைந்திருக்கும். “இன்று நீங்கள் விருதுகளாகக் கொடுத்து என்னையும் என் படத்தையும் கௌரவித்தீர்கள். நன்றி. உங்கள் அன்பிற்கு தலைவணங்குகிறேன். இன்று நிறைய விருதுகளைப் பெறும் படம் புகழ்பெறலாம்… பெறாமலும் போகலாம். காலம் மட்டுமே ஒரு படைப்பின் நீதிபதி. எந்தப் படம் செல்வாக்குடன் இருக்கிறது என்பதை இருபதாண்டுகள் கழித்து, கொஞ்சம் நாள் கழித்துப் பார்த்தால் மட்டுமே தெரிகிறது.”

இண்டெர்ஸ்டெல்லார் திரைப்படத்திற்கு ஆஸ்காரில் இடம் கிடைக்காத வருத்தத்தை, ‘பர்ட் மேன்’ (Bird Man) படப் பேச்சு நிவர்த்தி செய்தது. சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த படத்தொகுப்பு என எந்த முக்கிய விருதுக்கான ஓட்டத்திலும் இன்டெர்ஸ்டெல்லர் இடம்பெறவில்லை. தந்திரக் காட்சிகள், அரங்க அமைப்பு, இசை, இசைக்கலவை என ஆறுதல் பரிசு போல் சிலவற்றில் தூவி இருந்தார்கள். (சொல்வனம் இதழில் ஜாவா குமார் இந்தப் படத்தைக் குறித்து எழுதிய கட்டுரை)

ஆஸ்கார் பட்டியலில் இடம் பெறாவிட்டால் என்ன… டிசம்பர் மாதத்திற்கான ’வயர்ட்’ (Wired) இதழ் இன்டெர்ஸ்டெல்லர் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலனை வைத்து தங்கள் இதழைத் தயாரித்து இருந்தார்கள். நோலன் இடது கைக்காரர். எல்லாப் பத்திரிகையையும் கடைசியில் இருந்துதான் படிக்க ஆரம்பிப்பார். அப்பொழுதுதான் சடசடெவென்று பக்கங்களை இடது கை கொண்டு புரட்ட முடியும். அந்த எண்ணத்தின் நீட்சியாகத்தான் ‘மெமண்டோ’ திரைப்படத்தை இறுதியில் இருந்து துவக்கினேன் என்பதில் பத்திரிகையைத் துவங்கி இருந்தார்.

இண்டெர்ஸ்டெல்லர் திரைப்படத்தை எடுக்க எட்வின் ஏ ஆபட் (Edwin A Abbott) எழுதிய தட்டையுலகம் (Flatland) நாவல் உந்துதலாக அமைந்து இருக்கிறது. அந்தக் கதையில் முப்பரிமாணத்தில் இயங்கும் விலங்கு ஒன்று இரட்டைப் பரிமாண உலகிற்குள் நுழைகிறது. டிவியில் பார்ப்பது இரட்டைப் பரிமாணம். முக்கோணம், வட்டம், சதுரம், மனித உடல் போன்ற அமைப்பு என்னும் வடிவங்கள் உண்டு. ஆனால், அந்த உலகில் இருப்பவருக்கு எப்படி முப்பரிமாணத்தை, கனசதுரத்தையும் உருளை உலகையும் விளக்குவீர்கள்? இதே போன்ற சிக்கலை நான்கு/ஐந்து பரிமாணமாக யோசிக்க வைப்பதே இண்டெர்ஸ்டெல்லர் கரு.

திரைப்படத்தில் முக்கிய பங்கு வகிக்கும் அந்த புத்தக அலமாரியில் ஒவ்வொரு புத்தகமும் கவனமாக பொறுக்கி எடுக்கப்பட்டிருக்கிறது. அவர் விரும்பிய நூல்கள்:

1. The Wasp Factory – Iain Banks
2. Selected Poems – TS Eliot
3. The Stand – Stephen King
4. Gravity’s Rainbow – Thomas Pynchon
5. Emma – Jane Austen
6. A Wrinkle in Time – Madeleine L’Engle
7. Labyrinths – Jorge Luis Borges

நிஜ மனிதர்களைக் கூட கணினி மூலமாக வரைபடமாக அசைவூட்டம் கொடுத்து கோச்சடையான் ஆக்கி விடும் தொழில்நுட்ப பிரும்மாண்டத்தின் நடுவில் இண்டெர்ஸ்டெல்லர் வந்து இருக்கிறது. இந்தப் படத்தில் வரும் ரோபாட்டுகள், விண்கலன்கள், ஆராய்ச்சி மையங்களின் ராட்சஸ எந்திரங்கள் போன்றவற்றை கணினி கொண்டு வரையாமல், மெய்யாக உருவாக்கி இருக்கிறார்கள். ரோபாட் இருப்பதாக நினைத்துக் கொண்டு பேசுவதை விட, இயந்திர மனிதன் உள்ள அறையில் அதனுடன் உரையாடுவது மேலும் நடிகரை மெருகேற்றும் என்கிறார் நோலன். திரைப்படத்தில் பிரளயம் வரும். கடுமையான பனிப் பிரதேசம் வரும். செங்குத்தான அதல பாதாளம் கூட தெரியாத வேற்றுகிரகங்கள் தோன்றும். அவை எல்லாம் கண்டுபிடிக்க எரிமலை வெடிக்கும் இடங்களையும் கண்டு அஞ்சாமல் பயணித்த கதையும் சுவாரசியமானது. ஆய்லரின் தேற்றம் என்று தீவிரமான அறிவியலும் உண்டு; இறந்தவர்களுடன் உரையாடல் என்று அமானுஷ்யங்களும் உண்டு.

அதெல்லாம் இருக்கட்டும். ஆஸ்கார் விருதுகள் குறித்து பேச வந்துவிட்டு இண்டெர்ஸ்டெல்லர் குறித்து ஏன் கதை அளக்க வேண்டும்? சிறந்த படத்திற்கான பட்டியலில் இண்டெர்ஸ்டெல்லர் இல்லை. இங்காவது கவனிப்போமே என்னும் நல்லெண்ணம் மட்டுமே காரணம் ஆகும்.

இண்டெர்ஸ்டெல்லர் படத்தைக் குறித்து கருந்தேள் ராஜேஷ் சிறப்பான கட்டுரைகள் எழுதி இருக்கிறார்.

அப்படியானால் யார் எல்லாம் சிறந்த ஹாலிவுட் படத்திற்கான போட்டியில் இருந்தார்கள்?

அ) அமெரிக்கன் ஸ்னைப்பர் – இது க்ளிண்ட் ஈஸ்ட்வுட் எடுத்த படம். தியேட்டர்களில் சக்கை போடு போட்டு மிகப் பெரிய வெற்றியும், மற்ற எல்லா ஆஸ்கார் படங்களும் சேர்த்தால் கிடைத்த லாபத்தை விட இரு மடங்கு பண வரவுக் கொழிப்பும், அவை எல்லாவற்றையும் விட சர்ச்சைகளையும் பெற்று இருக்கிறது. அப்படி என்ன சர்ச்சை? தொலைதூரத்தில் இருந்து, நூற்றி அறுபது இராக்கியர்களை, புறமுதுகில் சுட்டுக் கொன்றவரின் நிஜக்கதையை அடிப்படையாகக் கொண்ட திரைப்படம் இது.

ஆ) பர்ட்மேன் – பல ஆஸ்கார்களை வென்று குவித்த படம். சூப்பர் ஸ்டாராக உலா வந்த ஒரு புகழ்பெற்ற நடிகன், தன்னுடைய மதிப்பு வீழ்ந்த பிறகு எப்படி நடக்கிறான் என்பதை உளவியல் ரீதியாக ஆராய்கிறது.

இ) பாய்ஹுட் – இந்தப் படம் குறித்து நான் எழுதிய விமர்சனம்.

ஈ) தி கிராண்ட் புடாபெஸ்ட் ஹோட்டல் – வித்தியாசமான படம். இரண்டாம் உலகப் போர் காலத்து விநோத பழக்கவழக்கங்களும், விடுதி சிப்பந்திகளின் குணாதிசயங்களும், கொண்ட கொள்கையில் உறுதியாக இருப்பவர்களின் நேர்மையும் – துப்பறியும் த்ரில்லராக வந்திருக்கிறது.

உ) தி இமிடேஷன் கேம் – இரண்டாம் உலகப் போரில் ஆலன் டூரிங் ஆற்றிய பங்கை இந்தப் படம் சொல்கிறது. கூடவே, அவருக்கு இருந்த தற்பால் விழைவை முன்னிலையாக்கி, அதனால் அவர் சந்தித்த இடர்களைப் பேசுகிறது. ஒருவரின் வாழ்க்கையைச் சொல்லும் திரைப்படங்கள், அந்த நபரின் சம்பவங்களை நேர்மையாகச் சொல்ல வேண்டும். ஆனால், இந்தப் படம் கற்பனையாக ஜோடிக்கிறது என்று கடுமையான விமர்சனத்திற்குள்ளானது. (மேலும் வாசிக்க: Saving Alan Turing from His Friends by Christian Caryl | The New York Review of Books)

ஊ) செல்மா – கொஞ்சமே கொஞ்சம் லிண்டன் ஜான்ஸனை மனிதத்தன்மையுள்ள சாதாரணராகக் காட்டிவிட்டார்கள் என்பதற்காக மற்ற எல்லா விருதுகளிலும் இருந்து ஓரங்கட்டப் பட்ட படம். வெள்ளையர் வழிநடத்தல் இல்லாமல், மார்டின் லூதர் கிங் மட்டுமே முன்னிறுத்தப்படுவதால் சிறந்த இயக்குனர்/நடிகர் என எதிலுமே இடம் கிடைக்கவில்லை. ஆப்பிரிக்க-அமெரிக்கர்களை இரத்தம் வழிய அடித்ததை எல்லாம் அப்படியே காட்டுவதால் அசூயை வேறு எழுகிறது என விமர்சனத்திற்குள்ளானது.

எ) தி தியரி ஆஃப் எவரிதிங் – அறிவியலாளர் ஸ்டீஃபன் ஹாகிங் குறித்த படம். அமெரிக்கர்களுக்கு இது போன்ற எழுச்சிப் படங்கள் எப்பொழுதுமே பிடிக்கும். ஒரு மாமாங்கம் முன்பு நாஷ் என்னும் பொருளாதார மேதையையும் அவரின் உடலியல் சிக்கல்களையும் மீறி நோபல் பரிசு வென்றதையும் படமாக்கிய ‘A Beautiful Mind’ நிறைய பரிசுகளை வென்றது. அதே போல் இரண்டு வருடமே வாழ முடியும் என சொல்லப்பட்ட பின் ஐம்பதாண்டுகளாக ஆராய்ச்சியில் திளைக்கும் ஹாக்கிங் குறித்த திரைப்படம். அறிவியல் விஷயங்களைப் பற்றி இரண்டே இரண்டு காட்சிகளில் பேசிவிட்டு, அவரின் குடும்ப வாழ்க்கையை நிறையப் பேசி இருந்தார்கள். அவருக்கு எத்தனை குழந்தை பிறந்தது, உடல் ஊனமான பிறகும் எவ்வாறு குழந்தை பிறந்தது, அவரின் மனைவி இப்பொழுது எவருடன் வாழ்கிறார் என்பதை விலாவாரியாக காண்பித்து இருந்தார்கள். சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் பரிசை வென்றது.

ஏ) விப்லாஷ் – குறும்படத்தில் இருந்து உருவான படம். மூன்று பரிசுகளை தட்டிச் சென்றது.

சாதாரணமாக இத்தனை பேரின் சரித்திரங்கள் திரைப்படமாக வெளியானால், அந்த ஆஸ்கார் விழாவின் துவக்கம் சிறப்பாக இருக்கும். அத்தனை படங்களையும் ஒருங்கிணைத்து ஆடலும் பாடலுமாகத் துவங்கும். விழாவைத் தொகுப்பவரே ஆலன் ட்யூரிங் ஆக வருவார்; அடுத்த நிமிடம் ஸ்டீஃபன் ஹாக்கிங் போல் சக்கரவண்டியில் தோன்றுவார்; துள்ளி எழுந்து மார்ட்டின் லூதர் கிங் போல் சொற்பொழிவாற்றுவார். இந்த தடவை விழாவை ஒருங்கிணைத்த நீல் பாட்ரிக் ஹாரிஸ் அவ்வாறெல்லாம் வித்தியாசப்படுத்தவில்லை. தனக்கு இடப்பட்ட காரியத்தை செவ்வனே நிறைவேற்றினார். மொத்தமாக சொன்ன நாற்பத்தியெட்டு ஜோக்குகளில் ஓரிரண்டுக்கு சிரிப்பு கூட எட்டிப் பார்த்தது.

சிரிப்பை விட கண்ணீர் அதிகம் தென்பட்ட ஆஸ்கார் ஆக 2015 விழா அமைந்து இருந்தது. ‘செல்மா’ படத்தின் பாடலை ஜான் லெஜண்ட் (John Legend) என்பாரும் காமன் (Common) என்பவரும் பாடியது உருக்கமாக இருந்தது. தற்கால நிகழ்வுகளான ஃபெர்கூஸன் போன்ற செய்திகளையும் ஒருங்கிணைத்து பாடினார்கள். (மேலும் வாசிக்க: தொடரும் பன்னிரண்டாண்டுகள் – 12 Years a Slave, திரைக்கு அப்பால்)

இந்தப் பாடலின் போது க்ரிஸ் பைன் (Chris Pine) அழுததை வைத்துக் கொண்டு வெள்ளையினத்தவரின் இரக்கத்தையும் நல்லுள்ளத்தையும் ஊடகங்கள் பெரிதுபடுத்தியதா அல்லது செல்மாவில் மார்டின் லூதர் கிங் ஆக நடித்த டேவிட் (David Oyelowo) கண்களில் இருந்து கண்ணீர் கசிந்ததை தொலைக்காட்சி அதிக நேரம் காட்டியதா என்பதை ஸ்டார் விஜய் டிவியில் சாந்தலிங்க ராமசாமி அடிகளார் தலைமையில் பட்டிமன்றம் நடக்கும் என விஷயமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அசைவூட்ட புகைப்படங்களுக்கு The 27 Most Important Moments From The Oscars
மேற்பட்ட வருணணைகளுக்குOscars 2015: All the winners, speeches, and best moments – Vox

தழற்சொல் – சிறுகதை பரிந்துரை

Thomas_Pierce_This_is_an_alert_New_Yorker

இந்தக் கதையை நியு யார்க்கர் இதழில் வாசிக்கலாம்: This Is an Alert – The New Yorker

இந்தக் கதையைப் படித்தால் அறிபுனை கதையைப் படிப்பது போல் இருக்கிறது. வருங்காலத்தில் எங்கெங்கும் பீடித்திருக்கும் போர் மற்றும் போர்ச்சூழலினால் தோன்றும் அச்சத்தையும் பிரதிபலிக்கிறது. அறிவியலின் வளர்ச்சியான ஆளில்லாமல் பறக்கும் தூரயியங்கி விமானங்களின் ஆபத்துகள் நிறைந்த அவநம்பிக்கையான சமூகத்தைச் சுட்டுகிறது. அறிவியல் குறைவாகவும், புனைவு அதிகமாகவும் காணப்படுவதால் அறிபுனை என்னும் வகையில் இந்தக் கதையை வைக்கிறேன்.

பதினான்கு வயது மகளுடனும் மனைவியுடனும் மாமியார் வீட்டிற்கு விருந்துண்ணச் செல்பவனின் நிகழ்வுகளை தாமஸ் பியர்ஸ் எழுதி இருக்கிறார். கதையின் தலைப்பில் சொல்வது போல், ‘இது ஒரு எச்சரிக்கை’ என்னும் அறிவிப்பு, அவர்களை அன்றாடம் துரத்துகிறது. எப்போது அந்த அபாய அசரீரி ஒலிக்கும், எதற்காக அதற்கு அடிபணிகிறோம், எவ்வளவு நேரம் அந்த எச்சரிப்பு நீடிக்கும் என்று தெரியாது.

பதின்ம வயதில் மகளுக்கு நிகழும் மாற்றங்களும் குழப்பங்களும் இயல்பாக வந்து போகின்றன. மார்பகப் புற்றுநோஇல் இருந்து மீண்ட மாமியாரின் செய்கைகள், வயதானோரின் பாதுகாப்புணர்வை சொல்கின்றன. கணவன் உடன்பிறந்தான் பார்க்கும் காமப் பார்வைகள் வருங்காலக் கதைக்கு உயிரூட்டுகின்றன. சொட்டைத் தலையை நினைத்து வருந்தும் நடுத்தர வயதினன் கதையோடு ஒன்ற வைக்கின்றன.

ரொம்பவே போரடித்து விடக் கூடிய களம். அதை எப்படி கதாசிரியர் சுவாரசியமாக்குகிறார்? கொஞ்சம் போல் பாலுணர்வு உலவ விடுகிறார். துப்பாக்கி வைத்திருக்கும் உரிமை குறித்த விவாதத்தை எழுப்புகிறார். இதுதான் இறுதி முடிவு என்று சொல்லாமல் விட்டு வைக்கிறார். ஆறு கதாபாத்திரங்கள் இருந்தாலும் நாய்க்குக் கூட போதிய அளவு விவரிப்புகளும் குறியீடுகளும் கொடுக்கிறார்.

ஐஸிஸ் வளராமல் இருக்க எங்கோ இருக்கும் சிரியாவில் குண்டு போடுகிறார்கள். ஹௌத்திகள் வளராமல் இருக்க யேமனில் பறந்து பறந்து தாக்குகிறது சவுதி அரேபியா. தலைக்கு மேலே எங்கோ நடக்கும் சண்டைகள். அமெரிக்காவில் நிலத்தில் வாழ்வோருக்கும் இந்தப் போர்களுக்கும் சம்பந்தமே இல்லை. அந்தச் செய்திகளை, தொலைக்காட்சியிலும், தினசரிகளிலும், இணையத்திலும் மட்டுமே பார்க்கிறோம். அவர்கள் கெட்டவர்கள் என்பதால் தாக்குகிறோம். இந்தக் கதையில் வான்வெளியில் நடப்பதாகச் சொல்லப்படும் டிரோன் போர்கள் அதை நினைவுக்குக் கொணர்ந்தது. ”இந்த நாட்டிற்குச் செல்லாதே” என்னும் கபர்தார் அறிக்கைகள், அவ்வப்போது வரும் அசரீரிகள் உணர்த்தின.

தாமஸ் உடன் ஆன நேர்காணலை இங்குப் படிக்கலாம்: » INTERVIEW: Thomas Pierce, author of Hall of Small Mammals

சிறுகதைத் தொகுப்பு புத்தகத்திற்கான விமர்சனம்: ‘Hall of Small Mammals,’ Short Stories by Thomas Pierce – NYTimes.com

Uttama Villain – Movie Review: உத்தம் வில்லன் விமர்சனம்

Kamal_Movies_UthamaVillan_uttama-villain

சினிமாவில் வாழ்க்கையைத் தேடுபவர்கள் தமிழர். திரையில் நாயகர் நியாயத்தைத் தட்டிக் கேட்டால், நிஜத்திலும் அவ்வாறே இருப்பார் என நினைப்பர் தமிழர். சமீப காலத் தமிழ்ப்படங்களில் அந்த வகை கதாநாயகர்களை உரித்துக் கொடுக்கும் படங்கள் வர ஆரம்பித்தன. சித்தார்த் நடித்த ‘ஜிகர்தண்டா’ அவ்வகையில் வந்த படம். கமல்ஹாசனின் ‘உத்தம வில்லன்’, அதே ரகத்தில் இன்னொரு படம்.

கமலுக்கு எந்த மாதிரி திரைப்படங்கள் நல்ல பெயரைப் பெற்றுக் கொடுக்கும்? நடனத்தில் பரிமளித்த சலங்கை ஒலி, கடைசியில் இறந்து போகும் குணா, இரு வேடத்தில் தோன்றிய ஆளவந்தான் போன்றவை நினைவுக்கு வருகின்றன. ”உத்தமவில்லன்” திரைப்படத்தில் இவை அனைத்தும் காணக் கிடைக்கின்றன. பழங்கால வேடத்தில் உத்தமனாகவும் நிகழ்கால கதாநாயகன் மனோரஞ்சன் ஆகவும் இரு வேடத்தில் கமல் வருகிறார். வித்தியாசமான நடனத்தை அபிநயம் செய்பவராக நடிக்கிறார்.

கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்கும்போது கட்டுரை எழுதச் சொல்வார்கள். அந்தக் கட்டுரையில் சொந்த விஷயங்களும், தனிப்பட்ட அனுபவங்களும் நிறைந்து இருக்க வேண்டும். அந்த மாதிரி நேர்மையாகவும் உண்மையாகவும் எழுத்தில் இருந்தால் மட்டுமே, அந்தக் கட்டுரையோ அல்லது கதையோ வாசகரின் மனதில் தங்கி நிலைத்திருக்கும். வேறொருவருக்கு நிகழ்ந்ததை புனைவாக்கினாலும் கூட அதில் கொஞ்சமேனும் சொந்த ஆசாபாசங்களை உணர்வுகளாக வடிக்க வேண்டும். அதில் கொஞ்சம் கற்பனையும் கலந்தால், புனைவுக்குரிய சுவாரசியத்தையும் உருவாக்கி விடலாம்.

’உத்தம வில்லன்’ படத்தில் நாயகன் மனோரஞ்சனுக்கு நடிகன் கதாபாத்திரம். அறுபது வயது ஆகிவிட்டாலும், தொந்தியும் தொப்பையும் குலுங்கினாலும் கூட, இருபது வயது நாயகிகளோடு ஆட்டம் போடும் கதாபாத்திரம். நாலு சண்டை, ஐந்து பாட்டு, ஏ / பி / சி வர்த்தகத்திற்கான வியாபார வித்தகங்கள் கொண்ட திரைப்படத்தில் நடித்து தள்ளுகிறார். திடீரென்று ஒரு நாள், தன்னுடைய பெயர் நிலைத்திருக்க என்ன செய்ய வேண்டும் என்னும் வினா எழுகிறது. தனக்கு துவக்க காலத்தில் நல்ல படங்களைக் கொடுத்து சிறப்பான நடிகன் என்று பலரும் பேச வைத்த 83 வயதான இயக்குநர் மார்க்கதரிசியிடம் செல்கிறார்.

மார்க்கதரிசியோடு இணைந்து ‘உத்தம வில்லன்’ படத்தைத் துவங்குகிறார். இதற்கு நடுவில் மூன்று காதல்கள். முதல் காதல் நிறைவேறவில்லை. இரண்டாவது மனைவி மட்டும் காதலிக்கும் இல்லத்தரசி காதல். மூன்றாவது மூத்த வயதில் இளவயதினரை பாசத்துடனும் காமத்துடனும் பற்றும் ஒவ்வாக் காதல்.

திரைப்படத்தில் வரும் மூன்று காதல் போல் மூன்று தந்தையர்களும் உண்டு. முதல் தந்தை மாமனார் பூர்ணசந்திர ராவ் ஆக வரும் கே விஷ்வநாத். இரண்டாவது தந்தை நாயகன் மனோரஞ்சன். மூன்றாவது தந்தை ஜேகப் ஜக்கரியா ஆக வரும் ஜெயராம்.

மாமனார் வருங்காலத்தைப் பற்றிக் கவலைப்படுபவர். தன் மகள் நலத்தை எண்ணி சிந்தித்து செயல்படுபவர். மகளுக்காக மாப்பிள்ளையை உருவாக்கியவர். ஒன்றுமில்லாத ஏழை ஆறுமுகத்தை காதல் இளவரசன் மனோரஞ்சன் ஆக்கியவர்.

மனோரஞ்சனுக்கு இரண்டு குழந்தைகள். முதல் குழந்தை மனோன்மணி. கல்லூரிப் படிப்பை முடிக்கும்வரை மனோன்மணி என்று தனக்கு ஒரு மகள் இருப்பதையே அறியாதவர். காதலில் பிறந்த குழந்தையை சூழ்நிலை நிர்ப்பந்தத்தால் கைவிட்டவர். இன்னொரு குழந்தை முறையாகப் பிறந்த குழந்தை. ஆனால், அந்த மகனுடனும் பெரியதாக அன்னியோன்யம் எதுவும் வளர்க்காதவர். தான் உண்டு, தன் நடிப்பு உண்டு, தன் முதிய காதலிகள் உண்டு என்று சுயலவாதியாக வாழ்க்கையைக் கொண்டாடுபவர்.

மூன்றாமவர் ஜேகப் சக்கரியா. ஜெயராம் இந்த கதாபாத்திரத்தில் அமரிக்கையாக வந்து போகிறார்.

திரைப்படத்தில் மூன்று பேரைக் குறிப்பிட்டு பாராட்ட வேண்டும்.

முதலாமவர் எம் கிப்ரான். படத்தின் பாடல்களில் பாரம்பரியமும் இருக்க வேண்டும். தற்காலத்திற்கு ஏற்ப கேட்கக் கூடிய துள்ளலாகவும் பாய வேண்டும். கதையோடும் இழைந்தோட வேண்டும். அவை எல்லாம் சாத்தியமாக்கி உள்ளார்.

தாலி கட்டிய மனைவியாக ஊர்வசி வருகிறார். ஆஸ்பத்திரி காட்சி மட்டுமே அவருடைய உயிர் ஊட்டத்திற்கு அத்தாட்சி. மைக்கேல் மதன காமரஜனில் பழக்கமான ஜோடி. கமலின் நிஜ வாழ்வில் சரிகா அவரை விட்டுப் பிரிந்ததை நினைவுறுத்தும் குணச்சித்திரம்.

மூன்றாவதாக சொக்கு செட்டியாராக வரும் மேனேஜர் எம் எஸ் பாஸ்கர். இவருக்குக் கொடுக்கப்பட்டதை ஒழுங்காகச் செய்யாவிட்டால்தான் செய்தி. கிரேசி மோகன் தனமான மொழிமாற்ற வசனங்களை சர்தார்ஜியுடன் சேர்ந்து கலகலக்கிறார். ‘அழுதா உங்களுக்கு நல்லாயில்ல!’ என்று மனோரஞ்சன் சொன்னாலும் அந்தக் காட்சியிலும் இயல்பான உடல்மொழியும் அவருக்கே பிரத்தியேகமான அன்றாட இயல்புகளின் பிரதிபலிப்பாலும் ”சொக்கு” நிலைத்திருப்பார்.

திரைப்படத்தின் மிகப் பெரிய பலவீனம் ‘உத்தமன்’ கதாபாத்திரம் வந்து போகும் நாடகீய தருணங்கள். அந்தப் பழங்காலக் கதையில் நிறைய சாத்தியங்கள் இருந்திருக்கின்றன. ராஜா – ராணிகளை கேம் ஆஃப் த்ரோன்ஸ் போன்ற தொலைக்காட்சித் தொடர்களில் கூட தத்ரூபமாகக் காட்டுகிறார்கள். ஆனால், தமிழ்த் திரைப்படத்தில் கிரீடம் வைத்து, கவசம் தைத்து, உத்தரீயணம் தரித்து, பஞ்சகச்சம் கட்டி சினிமா எடுப்பதாகச் சொல்கிறார்கள். இந்த மாதிரி பாவ்லா அரசர்களைக் கிண்டல் செய்வதில் பாடலில் ‘புலியை முறத்தால் விரட்டிய தமிழச்சி!’ என்று கோடிட்டு கிண்டலும் செய்கிறார்கள்.

அந்த மாதிரி நுண்ணிய நகைச்சுவை புரிகிறது. ஆனால், ‘ஜிகர்தண்டா’ போல் தமிழ் சினிமாவிற்குள் இருந்து கொண்டு தமிழ் சினிமாவை நக்கல் அடித்த காட்சியமைப்போ, வசனங்களோ எதுவுமே இடம்பெறவில்லை. “நான் புத்திசாலி!” என்று கமல் சொல்லிக் கொண்டே, “எனக்கு நடனம் தெரியும் பார்!”, “நான் தெய்யம் ஆடுகிறேன் பார்!”, “என்னுடைய நகைச்சுவையைப் பார்!” என்று காதில் வந்து கத்துவது போல் படம் மெதுவாக ஊர்ந்து ஊர்ந்து அன்னநடை இடுகிறது.

குறுநில மன்னர்களைப் பற்றியும் சேர, சோழ, பாண்டிய பேரரசுகளின் இலட்சணங்களை தோலுரித்து, அதே சமயம் காமெடியும் கலந்து கொடுத்த ‘இம்சை அரசன் 23ஆம் புலிகேசி’ போல் வெளிப்படையாக அரசியலும் பேசவில்லை. அந்தப் படத்தில் உக்கிரபுத்தன் என்னும் வீரன் ஒருவனும் புலிகேசி என்னும் கோழை மன்னனும் இருந்தார்கள். உத்தம வில்லனில், அந்த இருவரும் ஒருவராகவே வருகிறார்கள். ஆனாலும், இந்த நாடகத்தை இவ்வளவு நீட்டி முழக்கியதற்கு, சன் தொலைக்காட்சி படத்தொகுப்பாளரிடம் கொடுத்தால், அரை மணி நேரமாக வடிவேலுவின் காட்சிகளை சுருக்கித் தந்திருப்பார். அது இந்தப் படத்தை விட சுவாரசியமாக இருந்திருக்கும்.

கமலுக்கு இந்தப் படம் இன்னொரு மணிமகுடம். நிரலி எழுதுபவர் எனக்கு ஜாவா தெரியும், ஆரக்கிள் தெரியும், ரூபி தெரியும் என்று அடுக்கி, தன்னுடைய பயோ டேட்டா சொல்லிக் கொள்வார். அது போல் நான் நடிகனாக நடித்து இருக்கிறேன். தந்தையாக வந்திருக்கிறேன். கதக்களி ஆடி இருக்கிறேன். ஆண்ட்ரியாவோடு கொஞ்சி இருக்கிறேன். பூஜாவை கண்ட இடங்களில் தொட்டு இருக்கிறேன். மூளைக்கட்டி வந்தவனின் வேதனையைக் காட்டி இருக்கிறேன். – இப்படி பட்டியல் போட்டு, தன் ஆசைகளை நிறைவேற்றிக் கொண்டு இருக்கிறார்.

திரையரங்கில் இருந்தவர்கள் சிரித்த இடங்களில் எல்லாம் எனக்கு தமிழ் வசனம் புரியவில்லையோ என்று சந்தேகப்பட்டு ஆங்கிலத் துணையெழுத்துக்களைப் படித்தால், அப்பொழுதும் சிரிப்பு உண்டாகவில்லை. ஆனால், ஆங்கிலத்தில் மொழிமாற்றாமல், சூழலுக்குத் தக்கவாறு மொழிபெயர்க்கிறோம் என்று சம்பந்தமே இல்லாமல் இஷடத்திற்கு தங்களுடைய காவியத்தை உருவாக்கி இருக்கிறார்கள். தமிழ் வசனங்கள் நிஜமாகவேத் தேவலாம். நன்றாக இருக்கிறது. நிறைய இருக்கிறது. அதுதான் பிரச்சினை. படத்தின் முக்கிய பிரச்சினையும் கூட.

நான் கூட எனக்குத் தெரிந்த கிரேக்கத் தொன்மம், சமீபத்தில் ஹார்ப்பர்ஸ் இதழில் படித்த சிறுகதை என எல்லாவற்றையும் இங்கே நுழைக்கலாம். ஆனால், அதற்கெல்லாம் இந்தப் பதிவில் இடமில்லை. மணி ரத்னம் எடுத்த ஓகே கண்மணி போல் சுருக்க சொல்ல வேண்டாம். ஆனால், நிறைய வெட்டி எறிந்திருக்கலாம். வளவளா வசனத்தைப் பாதியாகக் குறைத்து, கொட்டாவியை தடுத்திருக்கலாம்.

இவ்வளவு சொல்லி விட்டு, திரைப்படத்தில் தேவையில்லாமல் வரும் ”அல்லா” வசன விளிப்பையும், மனோன்மணியின் கழுத்தில் தொங்கும் சிலுவையும், ‘நாங்க கிறிஸ்டியன்ஸ்! எனவே பெருந்தன்மையோடு நடந்து கொள்வோம்!” என்னும் பொதுமைப்படுத்தல்களையும் சொல்லாமல் செல்வது இழுக்கு. தொந்தி பெருத்த பிராமணர்கள் சாப்பிடுவதைக் காட்டுவது ஃபோர்டு பவுண்டேஷன் பாட்டாளிகளுக்கு உழைக்கிறது என்று நிறுவுவது போல் துருத்திக் கொண்டெல்லாம் இல்லை. கமல் படமென்றால் காமம் இருக்கும். நாராயண தூஷணையும் பார்ப்பான் பாஷிங்கும் இருக்கும் என்பது “அவர்கள்” எழுதிய விதி.

படத்தின் முதல் பலவீனம் ‘அகோ வாரும் பிள்ளாய்’ என பியூ சின்னப்பா ரக வசனங்கள் என்றால், கே பாலச்சந்தர் இன்னொரு முட்டுக்கட்டை. அவரை இந்த வயதில் இப்படி படுத்தி இருக்க வேண்டாம். எனக்கு லீலா சம்சனைத் தெரியும் என்று மணி ரத்னம் அவரை உபயோகித்தால், கொஞ்சமாவது பொருந்துகிறது. கான்ஸ்டபிள் வேடத்தில் நடிக்க கான்ஸ்டபிள் ஆகத்தான் இருக்க வேண்டுமா?

குண்டு கமலையும் அவருடைய மடியில் உட்கார்ந்து கொள்ளும் ஆண்ட்ரியாவையும் பார்த்தால் லஷ்மி நரசிம்மரைப் பார்த்த மாதிரி இருக்கிறது. ஆனால், இந்தத் திரைப்படத்தில் நரசிம்மர் செத்து விடுகிறார். தூணைப் பிளந்துகொண்டு நரசிம்மர் வருவார்… வருவார்… என பிரகலாதன் போல் நானும் அஷ்டாவதானி என்னும் வித்தகாதி வித்தக கமலுக்காக படம் நெடுகக் காத்திருந்தேன்.

இப்பொழுது அடுத்த கமல் படத்தில் ஆவது மீள்வார் எனக் காத்திருப்பேன்.

Jeyaganthan – ஜெயகாந்தன்

https://sway.com/s/uS8ywb6wbCH8hTSK/embed

Colorless Tsukuru Tazaki and His Years of Pilgrimage – Book Reviews

இன்னொருத்தருடன் உங்களுடைய இதயம் இணக்கமாக இருக்க ஒத்திசைவு மட்டும் காரணம் அல்ல. இரண்டு பேருக்கும் இடையே பொதுவாக நடந்த ரணங்களால்தான் இதயங்கள் இணைகின்றன. – சுகுரு டசாகி

ஜப்பானிய பழமொழியில் சொல்கிறார்கள்: ‘தலையைத் துருத்திக் கொண்டு தெரியும் ஆணியை, அடித்து உள்ளே தள்ளு!’

ஜப்பானில் சுற்றம் என்பது குடும்பத்தையும் தாண்டியது. வாழ்க்கையின் ஒவ்வொரு பாதையிலும் அந்த ஐக்கியமாகும் எண்ணம் பாய்கிறது. நீங்கள் தனித்துத் தெரிந்தால், பத்தோடு பதினொன்றாக ஆக்கப்படுவீர்கள். ஆமே (甘え) என்னும் சித்தாந்தம் இந்தக் குழுமப் பண்பாட்டை புரிந்து கொள்ள உதவும். ஆமே (甘え) என்பதன் அர்த்தம் ’அடுத்தவரிடம் அன்பைத் தேடு’. குழந்தைப்பருவத்திலேயே இது மூளையில் ஏற்றப்படுகிறது. இன்னொருவரிடம் பரிபூரண விசுவாசம் கொண்டிருப்பதற்கும் சமூகக் கூட்டமைப்பாக வாழ்வதற்கும் இந்த உணர்வு முக்கியம் என்று கற்றுத் தருகிறார்கள். சொல்லப் போனால், ஜப்பானிய மொழியில் சுய ஆளுமையைச் சொல்லும் கொஜின் ஷுகி (こじん-しゅぎ) என்றால் அது சுயநலம்/பேராசை போன்ற மோசமான அர்த்தத்திலேயே பயன்பாட்டில் இருக்கிறது.

ஆமே (甘え) என்பது குழந்தைக்கும் பெற்றோருக்கும் இடையே உள்ள உறவு போன்றது. அது எழுதப்படாத சமூக விதி. உங்களின் சக தொழிலாளரை, உங்களுடன் கூடப் படிக்கும் மாணவரை, உங்களுடன் கூட்டத்தில் வரும் பயணியை – ஒவ்வொருவருக்கும் நீங்கள் வாக்கு கொடுக்கிறீர்கள். நின்ஜோ (にんじょ) என்றால் உள்ளார்ந்து எழும் அனிச்சையான செயல்பாடு. அதாவது, ’நான் என்னுடைய கடமையாக, உங்களுக்கு பரிபூரண அன்பையும் எதிர்பார்ப்பற்ற அர்ப்பணிப்பையும் நல்குவேன்.’ அனைவரும் அனைவருடன் கைகோர்த்து வாழ்வோம் என்பதை பாலபாடமாக பதித்துக் கொள்கிறார்கள். இவ்வாறான சமூகக் குழுமங்களை கிரி (ぎり) என்கிறார்கள்.

இந்த மாதிரி உள்வட்டத்தில் இல்லாதவர்களை டனின் (たにん) என அழைக்கின்றனர். நின்ஜோ (にんじょ) உள்வட்டத்திலோ, கிரி (ぎり) குழுமத்திலோ இல்லாதவர்களை டனின் (たにん) எனக் கருதுகின்றனர். அதாவது, குடும்பமோ, பள்ளித் தோழமையோ, அலுவல் சகாக்களோ, அல்லாதவர்கள். டனின் (たにん)களுடன் எந்தப் பற்றுதலும் கிடையாது.

கடைசியாக வா (わ) என்னும் பதம். வா (わ) என்றால் ஒத்திசைவு; இணக்கம். இதுதான் ஜப்பானிய அறம். பழங்காலத்தில், நெல் விளைவிக்க தேவைப்படும் நதிநீரைப் பகிர வேண்டும். நெல்விளைச்சலைப் பாதுகாக்க வேண்டும். இந்த சமயத்தில்தான் குடியானவ சமூகத்தில் அமைதி நிலவ, வா (わ) சட்டத்தை அரசர் ஷொடொகு டைஷி முன்வைக்கிறார். விளையாட்டில், வர்த்தகத்தில் என்று எந்தத் துறையிலும் வா (わ) சித்தாந்தத்தைக் காணலாம். பரஸ்பர நம்பிக்கை, விட்டுக் கொடுத்து வாழ்தல், ஒத்துழைப்பு, மேலதிகாரியிடம் அசைக்கவியலா பற்றுறுதி, ஆகியவையே வா (わ)கருத்தியல். தனிமனித விளையாட்டான டென்னிஸ் போன்றவற்றில் ஜப்பானியர்கள் ஓரளவிற்கு மேல் எழும்ப முடியாததற்கும் இந்த அடிப்படைக்கும் பெரும் தொடர்பு உண்டு.

ஜப்பானில் தனித்துவம் தழைத்தோங்க, ஒரு சில துறைகளே இருக்கிறது: மலர் அலங்காரங்களைச் செய்யும் பணி, கவிதை புனைதல், கலை வெளிப்பாடு மற்றும் இசை.

உசாத்துணை: Phyllis Kepler, Brook S. Royse and John Kepler. Windows to the World: Themes for Cross-Cultural Understanding. Glenview, IL: GoodYearBooks, 1996

Haruki_Murakami_Colorless_Tsukuru_Tazaki_Novel_NYT

oOo

ஹருகி முரகமி எழுதிய ”நிறமற்ற சுகுரு டஸாகியும் அவன் யாத்திரை மேற்கொண்ட வருடங்களும் (Colorless Tsukuru Tazaki and His Years of Pilgrimage) படித்து முடித்தேன். ’மனிதரில் இத்தனை நிறங்களா’ என படம் வந்திருந்தது. இந்தக் கதையில் ஐந்து இளைஞர்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நிறம். ஒருத்திக்கு கருப்பு, இன்னொருத்திக்கு வெள்ளை; ஒருவனுக்கு சிவப்பு; இன்னொருவனுக்கு நீலம். கடைசியாக இருக்கும் ஐந்தாமவன் கதாநாயகன் – நிறமற்றவன்.

ஹருகி முரகமி எல்லா இடங்களிலும் ரசிகர்களை வைத்திருக்கிறார். அவருடைய புத்தகங்கள் பரபரவென்று விற்றுத் தள்ளுகின்றன. மகாரஷ்டிரா அளவில் இருக்கும் ஜப்பானில் மட்டுமே ஒரு மில்லியன் புத்தகங்கள் விற்கிறது! அதன் பிறகு, அதே புத்தகம் ஐம்பது மொழிகளில் மொழியாக்கம் காணப்பட்டு மேலும் ரசிகர்களைக் கவர்கிறது. இத்தனைக்கும் சிட்னி ஷெல்டன் போல், கென் ஃபாலெட் போல் பரபரப்பான துப்பறியும் மசாலா நாவல்களை முரகமி படைக்கவில்லை. நோபல் பரிசுக்கான ஓட்டத்தில் நெடுங்காலமாக இருக்கிறார். ஜேகே ரவுலிங் எழுதிய ஹாரி பாட்டார் போல் ஹருகி முரகமியின் நூல் நாயகர்களும் தங்களுக்கென்று உலகை சிருஷ்டித்துக் கொள்கிறார்கள். அவருடைய நூல்களின் கதாபாத்திரங்களின் அக மனது அபிலாஷைகள், யாரும் எதிர்பார்க்காத திசைகளில் பயணித்து, நமக்கு அறிமுகமான எண்ணங்களை பரிச்சயம் செய்வித்து, திக்கற்ற முக்குகளுக்கு இட்டுச் சென்று நம்முடைய சிந்தனையில் நீண்ட நாள் நிலைக்கும் பாதைகளை உருவாக்கவல்லது.

நாகர்கோவில் போன்ற குறுநகரத்தில் இருந்து டோக்கியோ நகரத்துக்கு வருகிறான் சுகுரு டஸாகி. அவனுக்கு கலைகளில் நாட்டம் கிடையாது. எந்தவிதமான பொழுதுபோக்கும் கிடையாது. எந்த கைவினைத் தொழிலும் தெரியாது. எளிதாக புன்னகைப்பான். சட்டென்று யாரோடும் பழக மாட்டான். புதியதாக எவராவது அறிமுகமானால், அவருடன் நட்பு பயில சிரமப்படுவான். வெளிப்படையாக பட்டெனப் பேசுவதில் சிரமம். தனியாகவே உலா வருகிறான். எவருடைய துணையும் இன்றி வாழ்க்கையை நடத்துகிறான். பேச்சுத் துணை கிடையாது. செல்பேசி அரட்டை கிடையாது. அலுவலில் நண்பர் கிடையாது. உண்ணும்போது சம்பவங்களைப் பகிர எவரும் கிடையாது. டிவி மாந்தர்களைக் கூட தொலைக்காட்சியில் பார்ப்பது கிடையாது.

சுகுரு என்பது அவனுடைய அப்பா, அவனுக்கு இட்ட பெயர். அந்தப் பெயருக்கு அர்த்தம் ‘பொருள்களைச் செய்பவன்’. இதனால், அவனுக்கு ஸ்திரமான விஷயங்கள் பிடித்துப் போகிறது. சின்ன வயதில் இருந்து தொடர்வண்டிகள் மேல் காதல். நாள் முழுக்க ரயில் நிலையத்தில் உட்கார்ந்திருக்கிறான். பயணிகளின் அவசரத்தைப் பார்க்கிறான். விற்கப்படும் பொருள்களை கவனிக்கிறான். தண்டவாளங்களில் தாண்டவமாடும் சுருதியை ரசிக்கிறான். இம்மி பிசகாமால், மாறி மாறிப் போகும் புகைவண்டிகளைப் பார்ப்பதோடு நில்லாமல், அந்தத் துறையிலேயே வேலை தேடவும் நாட்டம் கொள்கிறான்.

kuro_pottery

சுகுரு டஸாகியினுடைய குறுநகரத்தில் அவனுக்கு நான்கு நண்பர்கள் இருக்கிறார்கள். எப்பொழுதும் ஒன்றாகவே வளைய வருகிறார்கள். சுகுரு டஸாகி மட்டும் டோக்கியோவிற்கு கல்லூரியில் சேருகிறான். அதன் பிறகு நண்பர்களை இழக்கிறான். நண்பியைக் காமத்துடன் பார்க்கிறான். மூக்கு அரிப்பெடுத்தால் சொறிந்துகொள்வது போல், தன்னியல்பாக தினசரி பல மைல் தூரம் நீந்துகிறான். தற்பால் விருப்பமோ என கனவுறுகிறான்.

உங்களின் அத்யந்த சிநேகிதர்கள், சடாரென்று ஒரு நாள் – உங்களை ஒதுக்கி வைத்து விட்டால் என்ன செய்வீர்கள்? நிராகரிப்பை எப்படி எதிர்கொள்கிறீர்கள்? காதல் தோல்வி என்பது போல் தோழர்களின் தோல்வி என்று இந்த நிலையைச் சொல்லலாம். அவர்களிடம் சென்று ‘ஏன் என்னுடன் பேச மாட்டேன் என்கிறீர்கள்?’ என விசாரிப்போம். அவர்கள், நம்மை புறந்தள்ளும் காரணத்தை அறிய முயற்சிப்போம். நட்பை மீண்டும் உயிர்ப்பிக்க என்ன செய்ய வேண்டும் என்று முயல்வோம். சுகுரு டஸாகி அவ்வாறெல்லாம் எதுவும் செய்வதில்லை. டஸாகிக்கு அந்த மாதிரி ஆராய இயலாத உள்ளுக்குள்ளேயே மருகும் மனம். தானாகவேப் புழுங்கி தனக்குள்ளேயே குற்றங்களை உருவாக்கி அதற்கான தண்டனைகளை ஏற்றுக் கொண்டு நிர்க்கதியாக அலையும் சிந்தையைக் கொண்டிருக்கிறான் டஸாகி.

துப்பறியும் கதை போல் வேகமாக விரைகிறது இந்த நாவல். ஏன் அவனை வெறுத்து ஒதுக்கினார்கள் என்பது முதல் முடிச்சு. அப்படி வெறுத்து ஒதுக்கிய, பதின்ம வயது தோழமை எல்லோரையும் எதிர் கொள்வானா என்பது இரண்டாம் முடிச்சு. ஒவ்வொருவரையும் சந்திக்கும் போது, அவர்கள் சொல்லும் மனப்பதிவுகளும் அதன் தொடர்ச்சியான தகவல்களும் ‘அடுத்து என்ன… அடுத்து என்ன?’ என்று ஆர்வமூட்டுகிறது.

ஒவ்வொரு நண்பரும், பிறரை அவர்கள் எவ்வாறு பார்க்கிறார்கள் என்பதை வெளிக்கொணர்ந்தது நன்றாக இருந்தது. பியானோ இசைக் குறிப்புகளும் அதன் தொடர்ச்சியான ஆபரா, சிம்பொனி விமர்சனங்களும் வாழ்க்கையைச் சொல்கிறாரா, இசையைச் சொல்கிறாரா என எண்ண வைத்தது. ஃபிரான்ஸ் லிஸ்ட் என்பவரின் பியானோ இசைத்தட்டு ஆன Années de pèlerinage நாவல் நெடுக இடம்பெறுகிறது. கதையின் தலைப்பான ’யாத்திரை மேற்கொண்ட வருடங்களும்’ என்பதற்கும் பொருந்துகிறது.

tsukuru_overboard

கதைக்குள்ளேயே பல உபகதைகளும், கிளைக்கதைகளும், சிறுகதைகளும் உண்டு. நாவலின் நடுவே பியானோ வாசிப்பவர் குறித்த அத்தியாயம் வருகிறது. இது இந்த நாவலின் மிக சுவாரசியமான இடம். பியானோ கலைஞருக்கு சிறப்பு சக்தி வந்து இருக்கிறது. அவர் சாத்தானை சந்தித்து இருக்கிறார். அதனிடம் இருந்து, ஒருவரைப் பார்த்தவுடன் அவருடைய நிறம் என்ன என்பது அவருக்குத் தெரிந்து விடும் சக்தியைப் பெறுகிறார். தன்னுடைய நிறம் போலவே இருப்போருடன் அவருக்கு ஒத்துப் போகும், என்பதையும் அறிகிறார். இந்த ஞானமும், பிறரைப் பார்த்தவுடன் உணர்ந்து கொள்ளும் உள்ளுணர்வும் வந்ததால், அவரது நெடுநாள் ஆயுள், மாதங்களாகச் சுருங்கிவிட்டது. இந்த சிறப்புப் பார்வை கிடைக்கும் சூட்சுமத்தை அவர் யாருக்கு வேண்டுமானாலும் தாரை வார்க்கலாம். ஆனால், யாருக்குக் கொடுக்கிறாரோ, அவருடைய ஆயுள்காலமும் எண்ணப்படும் நாள்களாகிக் குறைந்து விடும். அவர் எப்பொழுது பியானோ வாசித்தாலும், தன்னுடைய ஜாடியை, பியானோ மேல் வைத்து விட்டு வாசித்தால்தான், பியானோ வாசிப்பு களை கட்டும். அவருக்கு ஆறாம் விரல் இருந்திருக்கிறது. ஆனால், ஆறாம் விரலோ, பியானோ வாசிப்பிற்கு இடையூறாக இருந்திருக்கும். அதை வெட்டி எடுக்கச் சொல்லி இருப்பார்கள். அந்த ஆறாம் விரல்தான் ஜாடியில் இருந்ததா? ரொம்ப நாளைக்கு, இந்த இடம் மனதிலே சிந்தையைக் கிளறிக் கொண்டே இருக்கும்.

நியு யார்க் டைம்ஸில் சொல்லி இருந்தார்கள். கனவை சிலர் நன்றாக எழுதுவார்கள். அற்புதமாக விவரிப்பார்கள். நிஜம் போலவே இருக்கிறமாதிரி கதையில் உருவாக்கி விடுவார்கள். ஆனால், முரகாமியோ, எது கனவு, எங்கே நிஜம் என சிந்தை திகைக்கும் அளவு கொண்டு செல்கிறார். இதை மீ எதார்த்தம் (surrealism) எனலாம். குழந்தைகளுக்கான கற்பனை உலகம் என்றும் எளிமையாக்கலாம்.

முரகாமியிடம் என்னவெல்லாம் எதிர்பார்த்தேனோ, அவை எல்லாமும் இந்தப் புத்தகத்திலும் கிடைத்தது: கொஞ்சம் போல் பாலுறவு வர்ணனை; இசையும் அதன் தாளங்களையும் வாழ்க்கையோடு சங்கமிக்கும் லயம்; அமானுஷ்யமான உணர்வுகளை காற்றோடு உலவவிடுதல்; அர்த்தமற்ற வாழ்க்கையை தேடல் நிறைந்ததாக ஆக்கிக் கொள்ளும் முட்டாள்தனம்; பிறரோடு ஒட்டாமல், குழுவாகத் திரிய விரும்பும் விசித்திரம்; ஓட்டப்பந்தயம் போல் முடிவைத் தொடும் பயணமாக இல்லாமல், 4×100 தொடர் பந்தயமாக மாரத்தான் ஓடும் உயிர் வித்தை – எல்லாம் போதிய அளவில் கலந்திருக்கிறது.

டிரெயின் ஸ்டேஷன் போல் வாழ்க்கை. போக நினைக்கும் ஊரை மனதில் வைத்து அவசரமும் ஆர்வமும் பதற்றமும் கொண்டு தொடர்வண்டியில் ஏறுகிறோம்; இறங்குகிறோம். பயணங்களில் நிறைய பேரை சந்திக்கிறோம். சிலருடன் அதே இடங்களில் வசிக்கிறோம். சில சமயம் வழியனுப்ப மட்டும் ரெயில்வே ஸ்டேஷனுக்குச் செல்கிறோம். மேலிருந்து ஒருத்தன், இந்த கால அட்டவணையை உருவாக்கி, மின்வண்டியைப் போல் எல்லோரையும் இயந்திர கதியில் செலுத்துகிறான்.

tsukuru_train

பிறரின் இறப்பிற்கு நாம் காரணமாக இருக்கும்போது எப்படி உணர்கிறோம்? எதை உருவாக்குகிறோம்? யாரை திருப்தி செய்ய வாழ்கிறோம்? காதல் என்றால் என்ன? வெற்றி பெறுவது எப்போது? நிறைய யோசிக்க வைக்கிறது.

“நினைவுகளை மறைத்து விடலாம். ஆனால், அந்த நினைவை உருவாக்கிய சம்பவங்களை அழித்துவிட இயலாது.” – சுகுரு டசாகியிடம் சாரா சொல்வது

உன்னப் பெத்ததுக்கு உங்கப்பா அம்மா நைட் ஷோ போயிருக்கலாம்டா!

Cat_Critic

மகள் எட்டாம் வகுப்பு படிக்கிறாள். மகளைப் பள்ளிக்கூடத்தில் இருந்து பெற்று வருவதற்காக பள்ளிக்கு சென்றிருந்தேன். அவளுக்கு ஏதோ வேலை இருந்தது. பத்து நிமிடம் காத்திருக்குமாறு சொல்லிவிட்டு சென்றுவிட்டாள்.

காத்திருக்கும் அறையில், மகளின் வகுப்பில் படிக்கும், சக மாணவனைப் பார்த்தேன். அவனுக்கு வகுப்பு முடிந்துவிட்டது. பெற்றோருக்காகக் காத்திருக்கிறான். காத்திருக்கும் சமயத்தில் பல சமயம் அவனைப் பார்த்திருக்கிறேன். வீட்டுப்பாடம் செய்து கொண்டிருப்பான். கடகடவென்று எழுதுவான். அன்று ABCDEFGHIJKLMNOPQRSTUVWXYZ என்று எழுதிக் கொண்டே இருந்தான். ஒரு முறை… இரு முறை… ஐந்தாம் முறை எழுதும்போது பொறுக்கவில்லை.

கேட்டுவிட்டேன். “ஏன் இப்படி ஏபிசிடி… எழுதிக் கொண்டிருக்கிறாய்? செல்பேசி வைத்திருக்கிறாய். அதில் ஏதாவது விளையாடலாம்; அரட்டை அடிக்கலாம். உன்னுடைய புத்தகப் பையில் கதைப் புத்தகம் இருக்கிறது. அதையாவது வாசிக்கலாம். நாளைக்கு அறிவியல் பரீட்சை இருக்கிறது. அதற்காவது படிக்கலாம். அதையெல்லாம் விட்டுட்டு… எதற்கு ஏபிசிடி…?”

“எனக்கு இடது கைப் பழக்கமாச்சே! இத்தனை நாளாப் பார்க்கறீங்களே? இதைக் கூட கவனிச்சது இல்லியா? வலது கையிலும் எழுதிப் பழக்கிக் கொள்ளலாம்னு இந்தக் கையில் எழுதிப் பார்க்கிறேன். Ambidextrous கேள்விப்பட்டதில்லையா? லியனார்டோ டாவின்சி, ஐன்ஸ்டீன், லெப்ரான் ஜேம்ஸ், பெஞ்சமின் ஃப்ராங்க்ளின்… எல்லாருமே இரண்டு கையிலும் சமமாக உபயோகிக்கக் கூடியவர்கள். நானும் அப்படி ஆகப் பார்க்கிறேன்.” என்றான்.

அது மாதிரி நீங்கள் ஃபேஸ்புக், ட்விட்டர் என்று நிலைத்தகவல் எழுதினால், ”நீயெல்லாம் எழுதறதுக்கு, உங்க அப்பா அம்மா நைட் ஷோ போயிருக்கலாம்டா!” என்று எவர் எப்படி பாராட்டினாலும், தொடர்ந்து எழுதிப் பழகுங்கள். நீங்கள் எழுதுவதைப் பார்த்து, “அட… நான் இதை விட நன்றாக எழுதுவேனே!” என்று பலரை எழுத்துத்துறைக்கு கொண்டுவரும் உற்சாக டானிக் ஆக நீங்கள் இருக்கிறீர்கள்.

சிங்கப்பூர்: முதலிய நாடா? கம்யூனிசத் தோட்டமா?

எகனாமிஸ்ட் பத்திரிகையையும் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் தினசரியையும் மட்டுமே வாசித்துக் கொண்டிருந்தால், சிங்கப்பூர் தடையிலா வணிகக் கொள்கை கொண்டிருக்கிறது என நினைப்போம். அயல்நாட்டினரிடம் இருந்து மூலதனத்தை, இரு கரம் கொண்டு சிரம் தாழ்த்தி வரவேற்பதாகக் கேட்டிருப்போம். இதனால் வரிக் கட்டுப் பாடற்ற வாணிபமும் வியாபாரத் தடையின்மையும் சிங்கப்பூரின் வளர்ச்சிக்கு வித்திட்டன என உறுதியான தீர்மானத்திற்கு வந்திருப்போம்.

சிந்தனைக்கு சில தகவல்களும் எண்ணங்களும்:

  1. சிங்கப்பூரின் நிலம் அனைத்தும் அரசாங்கத்திற்கே, முழுக்க முழுக்க சொந்தம்.
  2. உங்களுக்கு வீடு வாடகைக்கு வேண்டுமானால், அரசுத்துறை சார்ந்த ’குடியமைப்பு அபிவிருத்தி குழு’விடம் இருந்து பெறலாம். – கிட்டத்தட்ட 85% குடியிருப்புகளை நிர்வாகமே தருகிறது.
  3. உலக அளவில் வெறும் பத்து சதவிகிதமே அரசு சார்ந்த நிறுவனங்களால் நாட்டின் பொருளாதாரத்தை நிர்ணயிக்கிறது. சிங்கப்பூரில் இது உலக அளவை விட இரண்டு மடங்கு அதிகம்! நடுவண் அரசின் நான்கில் ஒரு பங்கு எடுமுதல் பயன்பாட்டை அரசாங்க அமைப்புகளே உருவாக்குகிறது.
  4. சென்னை, மும்பை போன்ற நகரங்களின் அளவோடும், மக்கள் தொகையோடும் சிங்கப்பூர் நகரத்தையும் ஒப்பிடலாம்:

 

நகரம்

சிங்கப்பூர்

மும்பை

சென்னை

1. நிலப்பரப்பு 277 ச.மை. 233 ச.மை. 164.8 ச.மை.
2. மக்கள்தொகை 5,469,700 12,478,447 4,681,087
3. மக்கள் தொகை அடர்த்தி 19,725/ச.மை. 54,000/ச.மை. 28,000/ச.மை.
4. தண்ணீர் போத்தலின் விலை (0.33 லிட்டர் புட்டி) 53.80 14.50 14.50
5. பியர் விலை (0.5 லிட்டர் மது) 362.53 60.00 60.00
6. மின்சார கட்டணம்(சராசரி) 9,629.71 1,483.33 1,483.33

இதை சோஷலிஸம் என்பதா? மார்க்சிஸம் என்பதா? கீனிசிய கோட்பாடு என்பதா?புதுச்செவ்வியல்வாதம் (neoclassicism) என்பதா?

யாராவது, சிங்கப்பூர் முதல் பிரதமர் லீ குவான் யூ கொண்டிருந்த சித்தாந்தம் ‘இதுதான்!’ என்று அறுதியிட்டு வாதிட்டால், அந்த நபருக்கு நிதிநிலைக் கொள்கை, பொருளாதாரக் கருத்தியல் ஆகியவற்றில் எதுவும் தெரியாது என்பதை மட்டும் உறுதியாக அறியலாம்.

சாது மிரண்டால்: சிக்கல் பின்னல்

வாசிக்க: “Labyrinth” – The New Yorker

Amelia Gray is the author of the novel “Threats” and the short-story collection “Gutshot,” which will be published by FSG Originals in April. Amelia Gray’s “Labyrinth” was originally published in the February 16, 2015 issue of The New Yorker.

Amelia+Gray_Labyrinth_New_Yorker_Fiction_Story

அமீலியா கிரே எழுதியதில் இது சற்றே சாதாரணமான கதை. பழங்காலத் தொன்மத்தை, நவீன யுகத்திற்கு ஏற்ப சொல்வது அமீலியாவின் வழக்கம். இந்தக் கதையும் அவ்வாறே முன்னுமொரு யுகத்தில் நம்பப்பட்ட கதையை, தற்காலச் சூழலில் விவரிக்கிறது.

சிக்கல்வழி என்னும் இந்தக் கதைக்கு கிரேக்கப் புராணத்தில் வரும் தீஸியஸ் கதை தெரிந்திருப்பது அவசியம். ஹிந்து மதத்தில் வரும் நந்தி போல் கிரேக்க ஹெல்லனிய தொன்மத்தில் மினடோர் இருக்கிறான். கீழே அவனைப் பார்க்கலாம். பாதி மனிதன்; பாதி எருது.

minotaur-Nandhi_Theseus_Greek_Hellenic_Mythology_Apis_Egypt

பேரரசன் மினோஸ் என்பவருக்கும் அவரின் அரசியார் ஆன பாஸிஃபே என்பவருக்கும் மகனாகப் பிறக்கிறார் மினொடார். சூஸ் (Zeus) அனுப்பிய காளையோடு அரசி பாஸிஃபே உறவு கொண்டு, அந்தக் கள்ள உறவினால் ரிஷபத்தின் தலையும் மானுட உடலுமாகப் பிறக்கிறான் மினொடார். இதைக் கண்டு அரசன் மினோஸ் வெட்கம் கொண்டு, வினோத மினொடார் குழந்தையை ’இடர்ப்பின்னல்’ (labyrinth)ல் அடைத்து வைக்கிறான்.

நாட்டில் குற்றம் புரிபவர்களையும், போரில் சிறைப் பிடித்தவர்களையும் இந்த இடர்ப் பின்னலுக்குள் அனுப்பி வைப்பான் அரசன் மினோஸ். அவர்களால், அந்த சிக்கலில் இருந்து வெளியே வர இயலாது. மாட்டிக் கொள்வார்கள்; முழிப்பார்கள். இந்த முரட்டுக் குழந்தைக்கு தீனியாவார்கள்.

காலம் ஓடுகிறது. அரசன் மினோஸின் இன்னொரு மகன் ஆன இளவரசன் ஆண்ட்ரோஜியஸ் (Androgeus) ஒலிம்பிக்ஸில் கலந்துகொள்ளச் செல்கிறான். ஏஜியஸ் (Aegeus) அரசனின் சொந்த ஊரில் ஏத்தனிய (Panathenaic) போட்டிகள் நடக்கின்றன. போட்டிக்குச் சென்ற இடத்தில் தன்னுடைய அம்மாவை முறைதவறி உறவு கொண்ட காளையோடு மராத்தான் ஓட்டம் ஓடுகிறான். அந்தக் காளை, மினொடாரின் தந்தை. மினொடாரின் தந்தை, இளவரசன் ஆன்டிரோஜியஸைக் கொன்று விடுகிறது.

ஏஜியஸ் அரசனின் ஆளுகைக்கு உட்பட்ட இடத்தில் நடந்த இந்தப் பலிக்கு பிராயச்சித்தமாக ஒவ்வொரு வருடமும் ஏழு ஆண்களையும், ஏழு பெண்களையும் பலியாகத் தருமாறு அரசன் மினோஸ் ஒப்பந்தம் போடுகிறான். ஏஜியஸ் அரசனும், இந்த பலிக்கடாக்களை மினோடார் இருக்கும் சிக்கல் வளைக்குள் அனுப்பி இரையாக்குகிறான்.

மகாபாரதத்தில் பீமனின் பகாசுர வதம் நினைவுக்கு வரலாம். ஏகசக்ர நகரத்தில் பாண்டவர்கள் தங்கியிருந்தபோது பீமனால் பகாசுர வதம் நடைபெற்றது. பகன் என்னும் அசுரன் இந்த நகரத்தை ஒட்டிய மலையடிவாரத்தில் இருந்துகொண்டு ஊரில் உள்ள அவ்வளவு பேரையும் அடித்துக் கொன்று ஊரையே ரணகளமாக்கியிருந்தான். இதனால் அவர்கள் ஒன்று திரண்டு பகாசுரனை சந்தித்து ஒப்பந்தம் செய்து கொண்டனர். அதன்படி பகாசுரன் பசிக்கு உணவாக “எள்ளு அன்னம், மூன்று வகையான பருப்பு உருண்டைகள், பொரி, அப்பம், கள், சாராயக் குடங்கள், கரடி, பன்றி மாமிசம், கறுப்பு நிறம் கொண்ட இரண்டு காளைமாடுகள், ஒரு நரனாகிய மனிதன்” என்று ஒரு பட்டியலை தயார்செய்து தினமும் வேளை தவறாமல் அனுப்பி வைப்பதாக ஒப்பந்தம் செய்து கொண்டிருந்தனர்.

பீமன் வண்டி நிறைய உணவு இருக்க அந்த வண்டியை ஓட்டிக்கொண்டு மலையடிவாரத்துக்கு சென்று, பகாசுரனையும் யுத்தம் செய்ய அழைத்து அவனோடு மோதி, அவன் குடலை உருவி மாலையாகவே போட்டுக்கொள்கிறான். குடல் மாலையோடு பகாசுரனை தலைக்கு மேல் தூக்கி வந்து ஊர் எல்லையில் கொண்டுவந்து போட, ஊரே ஊர்வலம் போல வந்து இறந்துகிடந்த பகாசுரனைப் பார்த்து மகிழ்கிறது.

ஆனால், கிரேக்கக் கதை கொஞ்சம் மாறுபடுகிறது.

இரண்டாண்டுகளாக ஏஜியஸ் அரசன் தன்னுடைய குடிமக்களை அனுப்பி வைக்கிறான். மூன்றாம் ஆண்டு ஏஜியஸ் அரசனின் மகன் தீஸியஸ் (Theseus) “என்னை அனுப்பு! அந்த அதிகாரநந்தியைக் கொல்கிறேன்!” எனச் சூளூரைக்கிறான்.

கடலில் செல்வதற்கு முன் கடைசியாகச் சொல்கிறான். “நான் வெற்றியோடு திரும்பினால், இந்தப் பாய்மரப் படகில் வெள்ளை நிறப் பாய் பறக்கும். மினாடொரிடம் பலியாகி விட்டால், கறுப்பு நிறப் பாய் இருக்கும்! அதை வைத்து உன்னைக் காப்பாற்றிக் கொள்!” என முன் ஜாக்கிரதையாக இருக்குமாறு சொல்லியும் செல்கிறான்.

மினொடாருக்கு ஏரியாட்னி (Ariadne) என்னும் மகள் இருக்கிறாள். எல்லா இளவரசிகளையும் போலவே, இவளும் பேரழகி. ஆண்வாடையே பார்க்காமல் வளர்ந்தவள். வந்த ஒன்றிரண்டு ஆண்களும் அப்பா மினொடாருக்கு இறையாகிப் போனவர்கள். தீஸியஸைக் கண்டதும் காதல் வருகிறது. தீஸியஸிற்கு மினொடார் இருக்கும் சிக்கல் வளையின் நுட்பங்களைச் சொல்கிறாள்.

ஒரு நூற்கண்டைக் கொடுக்கிறாள். உள்ளே நுழைவது எளிது. நடுவை அடைந்து விடுவதும் எளிது. மினோடாரை கொன்று விடுவது கூட எளிது. ஆனால், கொன்ற பிறகு எவ்வாறு வெளியேறுவது? அபிமன்யு போல் சக்கர வியூகத்தை பிளந்து கொண்டு நட்ட நடு வலைப்பின்னலில் வந்து விடலாம். அந்த இடர்ப்பின்னலில் இருந்து சுருக்கே வெளிப்பாதை கண்டுகொள்வது எவ்வாறு? அந்த நூற்கண்டை வைத்து, உள்ளே வந்த வழியை அடையாளம் காணலாம். நூற்கண்டின் வாலைப் பிடித்தால், வெளிச்சம் கிட்டும் என்கிறாள்.

அவனும் இளாவரசி ஏரியாட்னி சொற்படியே நடக்கிறான். நூலைப் பிரித்துப் போட்டுக் கொண்டே இடர்ப்பின்னல் உள் செல்கிறான். Mazerunner படம் போல் இருக்கிறது. மினொடார் நந்திதேவரை வீழ்த்துகிறான். நூல் போட்ட பாதையிலேயே வெளி வந்து இளவரசி ஏரியாட்னியின் கைப்பிடிக்கிறான்.

இங்கே சுபம் போட்டிருக்கலாம். ஆனால், கதை நீள்கிறது.

வெற்றிக் கொடி கட்டிய தீஸியஸ் படகை நடுவில் இளைப்பாறலுக்காக நக்ஸோஸ் (Naxos) தீவில் நிறுத்துகிறான். உல்லாசமாகப் பொழுது போகிறது. விடியற்காலையில் எழுந்து படகை செலுத்துகிறான். இளவரசி ஏரியாட்னியை தீவிலேயே மறந்து (?!?) விட்டுவிடுகிறான். அவளைப் பிரிந்த துக்கம் தாளாது, தன்னுடையக் கப்பலில் கறுப்புக் கொடியைப் பறக்கவிட்டுத் திரும்புகிறான்.

கறுப்புப் பாய்மரத்தை பார்த்த அப்பா ஏஜியஸ், மினோடார் வருகிறான் என பயந்து, கடலில் குதித்து தற்கொலை செய்துகொள்கிறான்.

இப்பொழுது, மீண்டும் நியு யார்க்கர் கதைக்கே வந்துவிடலாம். அதற்கு முன் எனக்கு ஏன் அமீலியா கிரே பிடிக்கும் என்பதைச் சொல்லிவிடுகிறேன்.

நியு யார்க்கர் பேட்டியில் அமீலியா இவ்வாறு சொல்கிறார்: “நான் புராணத்திலும் பைபிளிலும் தொன்மக் கதைகளிலும் வளர்ந்தவள். எந்தப் புத்தகத்தை எடுத்தாலும், அதில் உள்ள மிக மிகச் சிறியக் கதையில்தான் படிக்கத் துவங்குவேன். குறைந்த வார்த்தைகளில் என்ன சொல்ல முடியும்? அதை எப்படி இந்தக் கதாசிரியர் சொல்கிறார்? பெரிய நாவல் எழுதும்போது கூட குட்டி விஷயங்களில் தனித்து நிற்கும் காட்சிப்பரப்பைக் கண்டுகொள்வதில் தனி சுகம் கிடைக்கிறது!”

என்னதான் ஜெயமோகனைக் கும்பிட்டாலும், இந்த மாதிரி சுறுக் புனைவுகள் தரும் சுகம் அலாதியானது.

Amelia Gray on October 28, 2010

உள்ளுர் திருவிழாவில் நியு யார்க்கர் கதை துவங்குகிறது. ரங்க ராட்டினம் ஒரு புறம். விதவிதமான தின்பண்டங்கள் இன்னொரு புறம். வருடா வருடம் நடக்கும் அறுவடைக் கொண்டாட்டம். அதன் ஒரு அங்கமாக மனிதனை விட உயரமாக வளர்ந்து இருக்கும் கதிர்களின் நடுவே கண்ணாமூச்சி விளையாட்டு இருக்கிறது. இந்த வருடம் அது கிடையாது.

ஒரு இடத்தில் துவங்கி, இன்னொரு இடத்தில் முடியும் புதிர்பாதை (corn maze) கிடையாது. வாழ்க்கை போல், இதுதான் ஆரம்பம், இது நடுப்பகுதி, இது இறுதி இடம் என்று சென்று முடிக்க முடியாது. இந்த வருடம் கதையின் தலைப்பில் வரும் ‘சுருள் வளைவு சிக்கல் அமைப்பு’ (labyrinth). இதன் மையத்தை அடைந்தால் “உங்களுக்கு வாழ்க்கையில் என்ன வேண்டுமோ, அதை உணர்வீர்கள்!” என்கிறார், இந்த அமைப்பைக் கட்டியவர்.

எவருமே அந்தச் சுழலுக்குள் செல்ல விரும்பவில்லை. தலையை எதற்கு தேவையில்லாமல் நுழைக்க வேண்டும்? வழக்கம் போல், எல்லா வருடங்களும் போல், கூட்டம் கூட்டமாக, மந்தை மந்தையாக, சாரி சாரியாக, ஒன்று சேர்ந்து, ஒரு பாதையில் செல்வோம். நடுவே வழி தெரியாமல் தொலைந்து போவோம். எல்லோருடனும், ஒன்றாக வெளியேறுவோம். அதைத்தான் ஆசைப்படுகிறோம் என்கிறார்கள்.

சுழல்பாதையைக் கட்டியவனுக்கோ கோபம்; அப்படியே நிறைய வருத்தம்; கூடவே கழிவிறக்கம். என்னடா இது! ஒருவருக்குக் கூடவா, இந்தப் பாதைக்குள் நுழைந்து பார்க்க திராணி இல்லை! எதற்காக ஆசைப்படுகிறோம் என்பதைக் கண்டு அடைவதுதானே, இந்தச் சுழலின் நோக்கம்? அதைச் செய்து பார்க்காமல், ஒதுங்கி, கரையிலேயே தேங்கி இருக்கிறார்களே!

கரையிலேயேத் தேங்கி இருக்கிறோம் என்று பிறர் சொல்வதை நாம் ஏன் குற்றமாகப் பார்க்கிறோம்? எதற்காக, யாருக்கு நிரூபிப்பதற்காக எந்தவொரு விஷயத்தையும் கையில் எடுக்கிறோம்? மற்றவர்களின் சான்றிதழுக்காகத்தான் போட்டிகளில் குதிக்கிறோமா?

கோட்டையில் ஏறி கொடியை நாட்டியபின், கீழிறங்கும் வித்தை உங்களுக்குத் தெரியுமா? சுழலை வெற்றிகரமாக முடித்துவிட்டபின், அந்த சுழலை முழுமையாகப் புரிந்துகொண்டபின், அதைவிட்டு, வெளியேற முடியுமா?

இந்தக் கதையைப் படித்தபின் உங்களுக்கு என்ன கேள்விகள் தோன்றின…?

சரி… இந்த சாதாரணக் கதையை நியு யார்க்கர் ஏன் தேர்ந்தெடுத்தார்கள்? இரு பதிப்பாசிரியர்களின் உரையாடலை இங்கேக் காணலாம்:

ஜெயமோகனின் ‘மகாபாரதம்’: ஏன் மற்ற பாரதங்களை விட மிகச் சிறந்தது?

Bulomai_Bruhu_Puloman_Indrani_Sasi_Indiran_Lords_Mahabharatha_Agni_Fire_God_Varuna_Shanmuga_Vel
ஓவியம்: ஷண்முகவேல்

இது சின்ன வயதில் படித்த மகாபாரதக் கதை. முக்கோணக் காதல் கதை. பிருகு முனிவர் புலோமையை விரும்புகிறார். புலோமையோ புலோமனை விரும்புகிறாள். ஆனால், யாராவது தன்னுடைய நேசத்தை அங்கீகரித்தால் மட்டுமே, கட்டிவைக்கப்பட்ட கணவன் பிருகுவை விட்டு விட்டு, இராட்சஸன் புலோமன் பின் செல்லலாம். அக்னியை அழைக்கிறாள். அக்னிதேவனும், ‘மனசுக்குப் பிடிச்சா, போயிட்டு வா!’ என ஆக்ஞை தர, அரக்கன் புலோமனுடன் சந்தோஷமாக இருந்து விட்டு, மகள் இந்திராணி பிறந்தவுடன் முன்னாள் கணவன் ஆன, பிருகு முனிவரிடமே திரும்பி விடுகிறாள்.

இவ்வளவுதான் கதை. சின்னக் கதை. தினத்தந்தியில் கூட வந்து இருக்கிறது. சிவமகா புராணம் தர்ம ஸம்ஹிதையில் இடம் பெற்ற கதை. நைமிசாரணிய முனிவர்கள், தக்ஷப்பிரஜாபதி, காஸ்யப முனிவர், வைவஸ்வத மன்வந்தரம், பூதகிருதாயி என கோடிக்கணக்கான கதாபாத்திரங்களும் இடங்களும் மிருகங்களும் இயற்கை அதிபதிகளும் வந்து போகும் மஹாபாரதத்தில் இடம் பெற்ற கதை. அரச வம்சாவழி, அவர்கள் திருமணம் செய்து கொண்டவர்கள், முறைப்படி மணம் புரியாமல் காதல் புரிந்தவர்கள், அவர்களின் சந்ததி என பட்டியலிட்ட காவியத்தில் ஒரு துளி.

அரிசி வெந்துவிட்டதா என சரிபார்க்க ஒரேயொரு பருக்கையை எடுத்து வாயில் போட்டு பார்ப்பது மாதிரி இந்தப் பகுதியை வாசித்தேன்: ‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 2

இத்தனை விஷயங்களையும் கதையில் வைக்கிறார். அதைவிட இலக்கிய நயம் என்றால் எப்படி இருக்கும் என்பதை சொல்லுமாறு எழுதுகிறார். குழப்பமான குடும்ப அமைப்புகளையும், யாருக்கு யார் தகப்பன், எப்பொழுது எங்கே மகவு பிறந்தது, எவ்வாறு வளர்ந்தது, என்னும் சிக்கல் மிகுந்த கிளைகளை லாவகமாகச் சொல்கிறார். எல்லா விஷயங்களையும் சொல்வது ஒரு கலை; அந்த விஷயங்களை மனதில் பதியுமாறு ‘திருஷ்யமா’க ஆக்கி வார்த்தைகளில் விளக்கினாலும் நினைவின் அடி ஆழத்தில் இருத்துவது இன்னொரு கலை. அகரமுதலியையும் அபிதான கோசத்தையும் வைத்துக் கொண்டு படிக்க வேண்டிய காப்பியத்தை சுளுவாக உரித்து ஊட்டி விடுகிறார்.

ஜெயமோகனை எவ்வளவோ பாராட்டி இருப்போம். இருந்தாலும் அசகாய சூரரை இன்னொரு தடவை வாழ்த்துகிறேன்.