Tag Archives: நெருப்பு

அழகிய பெரியவன் ஏன் “இந்து தமிழ்” நாளிதழை எரித்தார்?

காரணங்கள்:

1. திராவிட முன்னேற்றக் கழகத்தின்  தற்போதைய  தலைவரான மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக-வில் இருந்து நீக்கப்பட்ட மு.க.அழகிரி ஆகிய இருவரில் யார் கலைஞரின் அடுத்த அரசியல் வாரிசு என்ற கருத்துக்கணிப்பு முடிவுகளை 2007 ஆம் ஆண்டு மே 9-ம் தேதி தினகரன் நாளிதழ் வெளியிட்டது. தினகரன் நாளிதழ் கலைஞரின் பேரன் கலாநிதி மாறனின் சன் டி.வி குழுமத்தின் அங்கமாகும். கலைஞரின் அரசியல் வாரிசு யார் என்ற கருத்துக்கணிப்பில் மு.க.ஸ்டாலினுக்கு மக்களின் ஆதரவு அதிகம் இருப்பதாக முடிவுகளை வெளியிட்டது தினகரன் நாளிதழ். மு.க.அழகிரியின் ஆதரவாளரும், திமுக தொண்டரணி அமைப்பாளருமான அட்டாக் பாண்டி தலைமையிலான குண்டர்கள் மதுரையில் இருந்த தினகரன் அலுவலகத்தை தாக்கினர். பத்திரிகை அலுவலகம் மீது தாக்குதல் நடத்தி, பெட்ரோல் குண்டுகளை வீசியதில் அலுவலகத்தில் கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர்களாகப்  பணியாற்றிய வினோத், கோபி மற்றும் காவலாளி முத்து ராமலிங்கம் ஆகிய மூன்று பேர் கொல்லப்பட்டனர்.

அந்த நிகழ்வை நினைவு கூறுவதற்காக, சிம்பாலிக் ஆக, அந்த அப்பாவி உயிர்களை நினைவு கோருகிறார் எழுத்தாளர் அழகிய பெரியவன்.

எழுத்தாளர் அழகியபெரியவன்.

2. தினத்தந்தி பத்திரிகையை இதே ‘குற்றத்துக்காக’ எரிக்க முடியுமா? நாடார் படைகள் வந்து சுளுக்கெடுத்துவிடும் என்கிற பயமா?

(என்னும் கேள்வியை அழகிய பெரியவனிடம் முன் வைக்கிறார் ஒத்திசைவு) வெ. ராமசாமி

தினத்தந்தி பத்திரிகை

3. அதிமுக கொடுத்த பணத்தை எரிக்க முடியாது. தினகரன் கும்பல் கைமாற்றிய பிட் காயினைப் பற்ற வைக்க முடியாது. அதெல்லாம் நிஜமாகவே காசு செலவாகிற விஷயம். எனினும், வாளாவிருக்க இயலாது. அதற்காக பைசா பிரயோசனம் இல்லாத அறச்சீற்றத்தைக் கையாள்கிறார் ரைட்டர் அழகியபெரியவன்.

4. ஹோமம் செய்தால் ஆன்மிகம் ஆகி விடும். அக்கினி வளர்த்தால் பிராமணக் கட்சி ஆகி விடும். எனவே, இவ்வாறு யக்ஞம் செய்கிறார் அழகிய பெரியவன்.

5. எல்லாப் பேப்பரையும் வாங்கி எரிப்பது நிஜமாகவே போர் அடிக்கும் வேலை. பாதி செய்தித்தாள் கடைகள் இயங்குவதில்லை. அன்றாடம் செய்தித்தாள் வாங்காவிட்டால், செய்தித்தாளே கையில் கிடைக்காது. தினசரி படிப்பதைத்தானே எரிக்க முடியும் என்கிறார் அழகிய பெரியவன்.

6. செய்தித்தாள்கள் எல்லாம் இது காலம் மட்டும் நிஜமாகவே “நான்காவது தூண்” என்று நம்பிக் கொண்டு இருந்தார் அழகியபெரியவம். அந்த போலி சாயம் போய் வெளுத்துவிட்டதில் அதிர்ச்சி அடைகிறார். அன்றாட பேப்பர்கள், ஊடகங்கள், மீடியாக்கள் எல்லாமே காசுக்காக அச்சிடுபவை என்றும் பணம் கொடுத்தால் என்ன வேண்டுமானாலும் செய்தியாக வெளியிடும் என்பதை உணர்கிறார் அழகியபெரியவன். அதனால் வந்த ஆத்திரம் இவ்வாறு வெளிப்பட்டது.

7. ஃபேஸ்புக், வாட்ஸப், ட்விட்டர் போன்ற ஊடகங்கள் மட்டுமே இவ்வாறு ஃபேக் நியூஸ் போட வேண்டுமா என்று போட்டிக்கு பிள்ளைப் பெற்றது தமிழக தினசரிகள். அன்றாடம் ஃபேஸ்புக், வாட்ஸாப் பார்க்காமல் இருக்க முடியாது. அந்த அப்ளிகேஷன்களை ஐஃபோனை விட்டு நீக்கவும் முடியாது. ஆப்பிள் ஃபோனையும் எரிக்க முடியாது. “எடுடாப் பேப்பரா… எரிடா பொறுப்பா!” என்று செயலில் இறங்கி ஃபேஸ்புக்கில் தன் கண்டனத்தைப் பதிவு செய்கிறார் அழகியபெரியவன்.

8. தேர்தலில் அவருக்கு சீட் கிடைக்கவில்லை. தேர்தல் நாளன்று பேசப்பட விரும்பி, இச்செயலை நிறைவேற்றினார் அழகியபெரியவன்.

9. அமெரிக்காவில் “Burning Man” புகழ்பெற்ற விழா. அது வீடு அடங்கிக் கிடந்த காலத்தில் தள்ளிப் போடப்பட்டது. அதைத் தமிழ்நாட்டிற்குக் கொண்டு செல்கிறார் அழகியபெரியவன்.

ஜெயமோகனின் ‘மகாபாரதம்’: ஏன் மற்ற பாரதங்களை விட மிகச் சிறந்தது?

Bulomai_Bruhu_Puloman_Indrani_Sasi_Indiran_Lords_Mahabharatha_Agni_Fire_God_Varuna_Shanmuga_Vel
ஓவியம்: ஷண்முகவேல்

இது சின்ன வயதில் படித்த மகாபாரதக் கதை. முக்கோணக் காதல் கதை. பிருகு முனிவர் புலோமையை விரும்புகிறார். புலோமையோ புலோமனை விரும்புகிறாள். ஆனால், யாராவது தன்னுடைய நேசத்தை அங்கீகரித்தால் மட்டுமே, கட்டிவைக்கப்பட்ட கணவன் பிருகுவை விட்டு விட்டு, இராட்சஸன் புலோமன் பின் செல்லலாம். அக்னியை அழைக்கிறாள். அக்னிதேவனும், ‘மனசுக்குப் பிடிச்சா, போயிட்டு வா!’ என ஆக்ஞை தர, அரக்கன் புலோமனுடன் சந்தோஷமாக இருந்து விட்டு, மகள் இந்திராணி பிறந்தவுடன் முன்னாள் கணவன் ஆன, பிருகு முனிவரிடமே திரும்பி விடுகிறாள்.

இவ்வளவுதான் கதை. சின்னக் கதை. தினத்தந்தியில் கூட வந்து இருக்கிறது. சிவமகா புராணம் தர்ம ஸம்ஹிதையில் இடம் பெற்ற கதை. நைமிசாரணிய முனிவர்கள், தக்ஷப்பிரஜாபதி, காஸ்யப முனிவர், வைவஸ்வத மன்வந்தரம், பூதகிருதாயி என கோடிக்கணக்கான கதாபாத்திரங்களும் இடங்களும் மிருகங்களும் இயற்கை அதிபதிகளும் வந்து போகும் மஹாபாரதத்தில் இடம் பெற்ற கதை. அரச வம்சாவழி, அவர்கள் திருமணம் செய்து கொண்டவர்கள், முறைப்படி மணம் புரியாமல் காதல் புரிந்தவர்கள், அவர்களின் சந்ததி என பட்டியலிட்ட காவியத்தில் ஒரு துளி.

அரிசி வெந்துவிட்டதா என சரிபார்க்க ஒரேயொரு பருக்கையை எடுத்து வாயில் போட்டு பார்ப்பது மாதிரி இந்தப் பகுதியை வாசித்தேன்: ‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 2

இத்தனை விஷயங்களையும் கதையில் வைக்கிறார். அதைவிட இலக்கிய நயம் என்றால் எப்படி இருக்கும் என்பதை சொல்லுமாறு எழுதுகிறார். குழப்பமான குடும்ப அமைப்புகளையும், யாருக்கு யார் தகப்பன், எப்பொழுது எங்கே மகவு பிறந்தது, எவ்வாறு வளர்ந்தது, என்னும் சிக்கல் மிகுந்த கிளைகளை லாவகமாகச் சொல்கிறார். எல்லா விஷயங்களையும் சொல்வது ஒரு கலை; அந்த விஷயங்களை மனதில் பதியுமாறு ‘திருஷ்யமா’க ஆக்கி வார்த்தைகளில் விளக்கினாலும் நினைவின் அடி ஆழத்தில் இருத்துவது இன்னொரு கலை. அகரமுதலியையும் அபிதான கோசத்தையும் வைத்துக் கொண்டு படிக்க வேண்டிய காப்பியத்தை சுளுவாக உரித்து ஊட்டி விடுகிறார்.

ஜெயமோகனை எவ்வளவோ பாராட்டி இருப்போம். இருந்தாலும் அசகாய சூரரை இன்னொரு தடவை வாழ்த்துகிறேன்.

மைக்ரோவேவ் அடுப்பினால் ஆபத்தா?

இணையம் விநோதமான இடம். புரிகின்ற ஆங்கிலத்தில் புரியாத நடையில் கரடுமுரடான ஆராய்ச்சிகள் இருக்கிறது. ஆயிரக்கணக்கான திரைப்படங்களும் புத்தகங்களும் திருட்டுத்தனமாக இலவசமாகக் கிடைக்கிறது. அரை லூசு அறிவியலும் கிடைக்கிறது. ஆனால், எது முழு கிறுக்கு, எது முக்கால் கிறுக்கு, என்று தெளிவதற்குள் நாமே எழுத ஆரம்பித்துவிடக் கூடாது என்பதுதான் விதி.

அப்படி பார்த்த ஒரு கபர்தார் செய்தி: ‘நுண்ணலை அடுப்பினால் விளையும் 12 ஆபத்துகள்!’

மேற்குலகில் எங்கு பார்த்தாலும் மைக்ரோவேவ் ஓவன். பால் சுட வைப்பது முதல் பால்கோவா காய்ச்சுவது வரை நுண்ணலை அட்டுப்பில்தான் நடக்கிறது. அதனால் ஆண்மை பறிபோகிறது. புரதச் சத்து இழந்த உணவை உண்கிறோம். நல்ல சாப்பாட்டை நச்சு சாப்பாடு ஆக்குகிறோம். கதிரியக்க வீச்சு பாய்ந்த பொருளைக் குடலுக்குள் தள்ளுகிறோம். விட்டமின் சத்தை இழக்கிறோம். புற்றுநோய் உருவாகும்.

இந்தப் பதிவை நீங்கள் லைக் செய்யாவிட்டால், வேதியியல் பட்டப்படிப்புக்கு உள்ளாவீர்கள். இந்தப் பதிவை நாற்பது பேரிடம் பகிராவிட்டால், கியாஸ் அடுப்பு கிடைக்காமல் கெரஸீன் தேடி தெருதெருவாய் அலைவீர்கள்! ஜாக்கிரதை.