Uttama Villain – Movie Review: உத்தம் வில்லன் விமர்சனம்


Kamal_Movies_UthamaVillan_uttama-villain

சினிமாவில் வாழ்க்கையைத் தேடுபவர்கள் தமிழர். திரையில் நாயகர் நியாயத்தைத் தட்டிக் கேட்டால், நிஜத்திலும் அவ்வாறே இருப்பார் என நினைப்பர் தமிழர். சமீப காலத் தமிழ்ப்படங்களில் அந்த வகை கதாநாயகர்களை உரித்துக் கொடுக்கும் படங்கள் வர ஆரம்பித்தன. சித்தார்த் நடித்த ‘ஜிகர்தண்டா’ அவ்வகையில் வந்த படம். கமல்ஹாசனின் ‘உத்தம வில்லன்’, அதே ரகத்தில் இன்னொரு படம்.

கமலுக்கு எந்த மாதிரி திரைப்படங்கள் நல்ல பெயரைப் பெற்றுக் கொடுக்கும்? நடனத்தில் பரிமளித்த சலங்கை ஒலி, கடைசியில் இறந்து போகும் குணா, இரு வேடத்தில் தோன்றிய ஆளவந்தான் போன்றவை நினைவுக்கு வருகின்றன. ”உத்தமவில்லன்” திரைப்படத்தில் இவை அனைத்தும் காணக் கிடைக்கின்றன. பழங்கால வேடத்தில் உத்தமனாகவும் நிகழ்கால கதாநாயகன் மனோரஞ்சன் ஆகவும் இரு வேடத்தில் கமல் வருகிறார். வித்தியாசமான நடனத்தை அபிநயம் செய்பவராக நடிக்கிறார்.

கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்கும்போது கட்டுரை எழுதச் சொல்வார்கள். அந்தக் கட்டுரையில் சொந்த விஷயங்களும், தனிப்பட்ட அனுபவங்களும் நிறைந்து இருக்க வேண்டும். அந்த மாதிரி நேர்மையாகவும் உண்மையாகவும் எழுத்தில் இருந்தால் மட்டுமே, அந்தக் கட்டுரையோ அல்லது கதையோ வாசகரின் மனதில் தங்கி நிலைத்திருக்கும். வேறொருவருக்கு நிகழ்ந்ததை புனைவாக்கினாலும் கூட அதில் கொஞ்சமேனும் சொந்த ஆசாபாசங்களை உணர்வுகளாக வடிக்க வேண்டும். அதில் கொஞ்சம் கற்பனையும் கலந்தால், புனைவுக்குரிய சுவாரசியத்தையும் உருவாக்கி விடலாம்.

’உத்தம வில்லன்’ படத்தில் நாயகன் மனோரஞ்சனுக்கு நடிகன் கதாபாத்திரம். அறுபது வயது ஆகிவிட்டாலும், தொந்தியும் தொப்பையும் குலுங்கினாலும் கூட, இருபது வயது நாயகிகளோடு ஆட்டம் போடும் கதாபாத்திரம். நாலு சண்டை, ஐந்து பாட்டு, ஏ / பி / சி வர்த்தகத்திற்கான வியாபார வித்தகங்கள் கொண்ட திரைப்படத்தில் நடித்து தள்ளுகிறார். திடீரென்று ஒரு நாள், தன்னுடைய பெயர் நிலைத்திருக்க என்ன செய்ய வேண்டும் என்னும் வினா எழுகிறது. தனக்கு துவக்க காலத்தில் நல்ல படங்களைக் கொடுத்து சிறப்பான நடிகன் என்று பலரும் பேச வைத்த 83 வயதான இயக்குநர் மார்க்கதரிசியிடம் செல்கிறார்.

மார்க்கதரிசியோடு இணைந்து ‘உத்தம வில்லன்’ படத்தைத் துவங்குகிறார். இதற்கு நடுவில் மூன்று காதல்கள். முதல் காதல் நிறைவேறவில்லை. இரண்டாவது மனைவி மட்டும் காதலிக்கும் இல்லத்தரசி காதல். மூன்றாவது மூத்த வயதில் இளவயதினரை பாசத்துடனும் காமத்துடனும் பற்றும் ஒவ்வாக் காதல்.

திரைப்படத்தில் வரும் மூன்று காதல் போல் மூன்று தந்தையர்களும் உண்டு. முதல் தந்தை மாமனார் பூர்ணசந்திர ராவ் ஆக வரும் கே விஷ்வநாத். இரண்டாவது தந்தை நாயகன் மனோரஞ்சன். மூன்றாவது தந்தை ஜேகப் ஜக்கரியா ஆக வரும் ஜெயராம்.

மாமனார் வருங்காலத்தைப் பற்றிக் கவலைப்படுபவர். தன் மகள் நலத்தை எண்ணி சிந்தித்து செயல்படுபவர். மகளுக்காக மாப்பிள்ளையை உருவாக்கியவர். ஒன்றுமில்லாத ஏழை ஆறுமுகத்தை காதல் இளவரசன் மனோரஞ்சன் ஆக்கியவர்.

மனோரஞ்சனுக்கு இரண்டு குழந்தைகள். முதல் குழந்தை மனோன்மணி. கல்லூரிப் படிப்பை முடிக்கும்வரை மனோன்மணி என்று தனக்கு ஒரு மகள் இருப்பதையே அறியாதவர். காதலில் பிறந்த குழந்தையை சூழ்நிலை நிர்ப்பந்தத்தால் கைவிட்டவர். இன்னொரு குழந்தை முறையாகப் பிறந்த குழந்தை. ஆனால், அந்த மகனுடனும் பெரியதாக அன்னியோன்யம் எதுவும் வளர்க்காதவர். தான் உண்டு, தன் நடிப்பு உண்டு, தன் முதிய காதலிகள் உண்டு என்று சுயலவாதியாக வாழ்க்கையைக் கொண்டாடுபவர்.

மூன்றாமவர் ஜேகப் சக்கரியா. ஜெயராம் இந்த கதாபாத்திரத்தில் அமரிக்கையாக வந்து போகிறார்.

திரைப்படத்தில் மூன்று பேரைக் குறிப்பிட்டு பாராட்ட வேண்டும்.

முதலாமவர் எம் கிப்ரான். படத்தின் பாடல்களில் பாரம்பரியமும் இருக்க வேண்டும். தற்காலத்திற்கு ஏற்ப கேட்கக் கூடிய துள்ளலாகவும் பாய வேண்டும். கதையோடும் இழைந்தோட வேண்டும். அவை எல்லாம் சாத்தியமாக்கி உள்ளார்.

தாலி கட்டிய மனைவியாக ஊர்வசி வருகிறார். ஆஸ்பத்திரி காட்சி மட்டுமே அவருடைய உயிர் ஊட்டத்திற்கு அத்தாட்சி. மைக்கேல் மதன காமரஜனில் பழக்கமான ஜோடி. கமலின் நிஜ வாழ்வில் சரிகா அவரை விட்டுப் பிரிந்ததை நினைவுறுத்தும் குணச்சித்திரம்.

மூன்றாவதாக சொக்கு செட்டியாராக வரும் மேனேஜர் எம் எஸ் பாஸ்கர். இவருக்குக் கொடுக்கப்பட்டதை ஒழுங்காகச் செய்யாவிட்டால்தான் செய்தி. கிரேசி மோகன் தனமான மொழிமாற்ற வசனங்களை சர்தார்ஜியுடன் சேர்ந்து கலகலக்கிறார். ‘அழுதா உங்களுக்கு நல்லாயில்ல!’ என்று மனோரஞ்சன் சொன்னாலும் அந்தக் காட்சியிலும் இயல்பான உடல்மொழியும் அவருக்கே பிரத்தியேகமான அன்றாட இயல்புகளின் பிரதிபலிப்பாலும் ”சொக்கு” நிலைத்திருப்பார்.

திரைப்படத்தின் மிகப் பெரிய பலவீனம் ‘உத்தமன்’ கதாபாத்திரம் வந்து போகும் நாடகீய தருணங்கள். அந்தப் பழங்காலக் கதையில் நிறைய சாத்தியங்கள் இருந்திருக்கின்றன. ராஜா – ராணிகளை கேம் ஆஃப் த்ரோன்ஸ் போன்ற தொலைக்காட்சித் தொடர்களில் கூட தத்ரூபமாகக் காட்டுகிறார்கள். ஆனால், தமிழ்த் திரைப்படத்தில் கிரீடம் வைத்து, கவசம் தைத்து, உத்தரீயணம் தரித்து, பஞ்சகச்சம் கட்டி சினிமா எடுப்பதாகச் சொல்கிறார்கள். இந்த மாதிரி பாவ்லா அரசர்களைக் கிண்டல் செய்வதில் பாடலில் ‘புலியை முறத்தால் விரட்டிய தமிழச்சி!’ என்று கோடிட்டு கிண்டலும் செய்கிறார்கள்.

அந்த மாதிரி நுண்ணிய நகைச்சுவை புரிகிறது. ஆனால், ‘ஜிகர்தண்டா’ போல் தமிழ் சினிமாவிற்குள் இருந்து கொண்டு தமிழ் சினிமாவை நக்கல் அடித்த காட்சியமைப்போ, வசனங்களோ எதுவுமே இடம்பெறவில்லை. “நான் புத்திசாலி!” என்று கமல் சொல்லிக் கொண்டே, “எனக்கு நடனம் தெரியும் பார்!”, “நான் தெய்யம் ஆடுகிறேன் பார்!”, “என்னுடைய நகைச்சுவையைப் பார்!” என்று காதில் வந்து கத்துவது போல் படம் மெதுவாக ஊர்ந்து ஊர்ந்து அன்னநடை இடுகிறது.

குறுநில மன்னர்களைப் பற்றியும் சேர, சோழ, பாண்டிய பேரரசுகளின் இலட்சணங்களை தோலுரித்து, அதே சமயம் காமெடியும் கலந்து கொடுத்த ‘இம்சை அரசன் 23ஆம் புலிகேசி’ போல் வெளிப்படையாக அரசியலும் பேசவில்லை. அந்தப் படத்தில் உக்கிரபுத்தன் என்னும் வீரன் ஒருவனும் புலிகேசி என்னும் கோழை மன்னனும் இருந்தார்கள். உத்தம வில்லனில், அந்த இருவரும் ஒருவராகவே வருகிறார்கள். ஆனாலும், இந்த நாடகத்தை இவ்வளவு நீட்டி முழக்கியதற்கு, சன் தொலைக்காட்சி படத்தொகுப்பாளரிடம் கொடுத்தால், அரை மணி நேரமாக வடிவேலுவின் காட்சிகளை சுருக்கித் தந்திருப்பார். அது இந்தப் படத்தை விட சுவாரசியமாக இருந்திருக்கும்.

கமலுக்கு இந்தப் படம் இன்னொரு மணிமகுடம். நிரலி எழுதுபவர் எனக்கு ஜாவா தெரியும், ஆரக்கிள் தெரியும், ரூபி தெரியும் என்று அடுக்கி, தன்னுடைய பயோ டேட்டா சொல்லிக் கொள்வார். அது போல் நான் நடிகனாக நடித்து இருக்கிறேன். தந்தையாக வந்திருக்கிறேன். கதக்களி ஆடி இருக்கிறேன். ஆண்ட்ரியாவோடு கொஞ்சி இருக்கிறேன். பூஜாவை கண்ட இடங்களில் தொட்டு இருக்கிறேன். மூளைக்கட்டி வந்தவனின் வேதனையைக் காட்டி இருக்கிறேன். – இப்படி பட்டியல் போட்டு, தன் ஆசைகளை நிறைவேற்றிக் கொண்டு இருக்கிறார்.

திரையரங்கில் இருந்தவர்கள் சிரித்த இடங்களில் எல்லாம் எனக்கு தமிழ் வசனம் புரியவில்லையோ என்று சந்தேகப்பட்டு ஆங்கிலத் துணையெழுத்துக்களைப் படித்தால், அப்பொழுதும் சிரிப்பு உண்டாகவில்லை. ஆனால், ஆங்கிலத்தில் மொழிமாற்றாமல், சூழலுக்குத் தக்கவாறு மொழிபெயர்க்கிறோம் என்று சம்பந்தமே இல்லாமல் இஷடத்திற்கு தங்களுடைய காவியத்தை உருவாக்கி இருக்கிறார்கள். தமிழ் வசனங்கள் நிஜமாகவேத் தேவலாம். நன்றாக இருக்கிறது. நிறைய இருக்கிறது. அதுதான் பிரச்சினை. படத்தின் முக்கிய பிரச்சினையும் கூட.

நான் கூட எனக்குத் தெரிந்த கிரேக்கத் தொன்மம், சமீபத்தில் ஹார்ப்பர்ஸ் இதழில் படித்த சிறுகதை என எல்லாவற்றையும் இங்கே நுழைக்கலாம். ஆனால், அதற்கெல்லாம் இந்தப் பதிவில் இடமில்லை. மணி ரத்னம் எடுத்த ஓகே கண்மணி போல் சுருக்க சொல்ல வேண்டாம். ஆனால், நிறைய வெட்டி எறிந்திருக்கலாம். வளவளா வசனத்தைப் பாதியாகக் குறைத்து, கொட்டாவியை தடுத்திருக்கலாம்.

இவ்வளவு சொல்லி விட்டு, திரைப்படத்தில் தேவையில்லாமல் வரும் ”அல்லா” வசன விளிப்பையும், மனோன்மணியின் கழுத்தில் தொங்கும் சிலுவையும், ‘நாங்க கிறிஸ்டியன்ஸ்! எனவே பெருந்தன்மையோடு நடந்து கொள்வோம்!” என்னும் பொதுமைப்படுத்தல்களையும் சொல்லாமல் செல்வது இழுக்கு. தொந்தி பெருத்த பிராமணர்கள் சாப்பிடுவதைக் காட்டுவது ஃபோர்டு பவுண்டேஷன் பாட்டாளிகளுக்கு உழைக்கிறது என்று நிறுவுவது போல் துருத்திக் கொண்டெல்லாம் இல்லை. கமல் படமென்றால் காமம் இருக்கும். நாராயண தூஷணையும் பார்ப்பான் பாஷிங்கும் இருக்கும் என்பது “அவர்கள்” எழுதிய விதி.

படத்தின் முதல் பலவீனம் ‘அகோ வாரும் பிள்ளாய்’ என பியூ சின்னப்பா ரக வசனங்கள் என்றால், கே பாலச்சந்தர் இன்னொரு முட்டுக்கட்டை. அவரை இந்த வயதில் இப்படி படுத்தி இருக்க வேண்டாம். எனக்கு லீலா சம்சனைத் தெரியும் என்று மணி ரத்னம் அவரை உபயோகித்தால், கொஞ்சமாவது பொருந்துகிறது. கான்ஸ்டபிள் வேடத்தில் நடிக்க கான்ஸ்டபிள் ஆகத்தான் இருக்க வேண்டுமா?

குண்டு கமலையும் அவருடைய மடியில் உட்கார்ந்து கொள்ளும் ஆண்ட்ரியாவையும் பார்த்தால் லஷ்மி நரசிம்மரைப் பார்த்த மாதிரி இருக்கிறது. ஆனால், இந்தத் திரைப்படத்தில் நரசிம்மர் செத்து விடுகிறார். தூணைப் பிளந்துகொண்டு நரசிம்மர் வருவார்… வருவார்… என பிரகலாதன் போல் நானும் அஷ்டாவதானி என்னும் வித்தகாதி வித்தக கமலுக்காக படம் நெடுகக் காத்திருந்தேன்.

இப்பொழுது அடுத்த கமல் படத்தில் ஆவது மீள்வார் எனக் காத்திருப்பேன்.

17 responses to “Uttama Villain – Movie Review: உத்தம் வில்லன் விமர்சனம்

  1. nice. taken much effort to find something in this film ! thanks Bala

  2. அட ராமா!!!! வசனம் யாரு? பா ரா வா?

  3. நல்ல விமர்சனம் பாபா. Clean and hitting the bulls eye.

  4. நல்ல விமர்சனம் பாபா.. Clean and to the point.

  5. ஐயங்கார் விமர்சனம் எழுதியது போல இருக்கிறது. கமல் மடியில் உட்கார்ந்த ஆண்ட்ரியாவைப் பார்த்தால் லக்‌ஷ்மி – நரசிம்மர் மாதிரி இருக்கிறதா? தலையெழுத்து. முன்னே பின்னே லக்‌ஷ்மி-நரசிம்மரைப் பார்த்திருப்பாரோ இந்த விமர்சகர்? இரணியன் மடியில் ப்ரகலாதன் உட்கார்ந்த மாதிரி என்று சொன்னாலாவது கொஞ்சம் பொருந்தும்.

    விமர்சனம் பற்றிய விமர்சனம்: இந்தக் குப்பையைப் பார்ப்பானேன். பார்த்துவிட்டு குப்பை என்று சொல்வானேன். இது கமல் எடுத்த வீடியோ என்று சொல்லி இருக்கலாம்.

  6. If you narrate the whole story, your motive has to be suspected

  7. உங்களைப் போன்றவர்களுக்குத்தான் சுஹாசினி அம்மையார் அதுபோல பேசியிருக்கிறார் எனத் தொன்றுகிறது. விமர்சனம் ஒரு கலை. அதற்கு உங்களைத் தயார் படுத்திக் கொண்ட பிறகு களத்தில் குதியுங்கள்..

  8. விமர்சனத்துக்கு, நன்றி!///மேலோட்டமாக ஈழம் குறித்தும் ஏதோ சொல்கிறாராமே?

  9. இனிமேல் மௌஸ் பிடித்து விமர்சனம் எழுதுபவர்கள் சுஹாசினியிடமும் மேலேயிருக்கும் தமிழிடமும் அனுமதியும் ஒரு சான்றிதழும் வாங்கிக்கொண்டு எழுதுங்கள்.

  10. கமல் எப்போதுமே தன்னை முன்னிலைப் படுத்திக் கொள்வதில் கெட்டிக்காரர். இதிலும் அப்படியே என்று புரிகிறது. நல்லவேளையா இந்த மாதிரிப் படத்தை எல்லாம் பார்த்துப் பொழுதை வீணாக்கிக்கிறதில்லை. எப்போவானும் தொ(ல்)லைக்காட்சியில் வரும், அப்போப் பார்த்துக்கலாம். 🙂

  11. குண்டு கமலையும் அவருடைய மடியில் உட்கார்ந்து கொள்ளும் ஆண்ட்ரியாவையும்
    பார்த்தால் லஷ்மி நரசிம்மரைப் பார்த்த மாதிரி இருக்கிறது

  12. thambi ne apocalypse now matrum birdman irandu padangalukkum vimarsanam eluthu parpom.

  13. THANKS FOR THE GOOD REVIEW.

  14. பிங்குபாக்: தூங்காவனம் – ஸ்லீப்லெஸ் நைட் | Snap Judgment

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.