வாசகர்களிடம் ஒரு கேள்வி. நீங்கள் படித்ததில் எந்த ஆக்கத்தை நவீன உருவகக் கதையாக கருதுகிறீர்கள்? எவை படிமத்தை தன்னுள்ளே கொண்டே நாவலின் தன்மையையும் தன்னுள்ளே வைத்திருக்கிறது?
வெ.சா.
ஆர்தர் கெஸ்லர் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து விரக்தியும் ஏமாற்றமும் அடைந்து விலகினார். அது பற்றி ஒரு குறியீட்டு (allegorical) நாவlலும் எழுதினார். Darkness at Noon என்று அதற்குப் பெயர். அது உடனே உலகம் முழுதும் புகழப்பட்ட, கெஸ்லருக்கு உலகப் புகழ் அளித்த நாவலும் ஆயிற்று. நாவல் முழுதும் நிகழ்வது ஒரு சிறைச்சாலையில். அரசியல் கைதியின் சிறைவாசம் பற்றியது. ஒரு கைதிக்கும் இன்னொரு கைதிக்கும் (அவனும் அரசியல் சதிச்செயலில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டவன்} இடையே பழக்கம் ஏற்படுவது கதவைத் தட்டித்தான். கதவையா, சுவரையா? என்பது மறந்து விட்டது. அந்தத் தட்டலிலும் ரகசியக் குறிப்புகள் உண்டு. எல்லாமே அன்றைய ரஷ்யாவில் நடந்த அரசியல் சதிகள், வழக்குகள், கொலைகளைப் பிரதிபலிப்பதாகத் தான் சிறைச்சாலை நடப்புகளை நாம் புரிந்து கொள்வோம். இதே போல இன்னொரு குறியீட்டு நாவலும் அப்போது பெரும் சலசலப்பை உண்டாக்கியது. ஜியார்ஜ் ஆர்வெல் என்னும் ஆங்கில நாவலாசிரியரின் மிருகங்களின் பண்ணை ( Animal Farm) என்னும் ஒரு நாவல். பன்றிகள் அந்தப் பண்ணையைக் கைப்பற்றி விடுகின்றன. முன்னால் இரண்டு கரடிகள் ஓன்றையொன்று அழிக்கத் திட்டமிட்டு இரண்டுமே அழிகின்றன. பன்றிகளின் ராஜ்யத்தில் ஒரு கோஷம் “எல்லாரும் சமம் இங்கு. ஆனால் கொஞ்சம் கூட சமம் கொண்ட பன்றி தான் அதிகாரம் செய்கிறது. (All are equal. But some are more equal) நமக்குப் பரிச்சயமான பஞ்ச தந்திரக் கதைகள் பாணியில் ரஷ்யாவில் நடைமுறையிலிருந்த கோஷங்களையும் அதன் நடைமுறை அர்த்தங்களையும் கிண்டல் செய்தது மிருகங்களின் பண்ணை.
கருத்துருவகம் (அலிகரி) ஒரு திட்டவட்டமான பொருளைச் சுட்டும் பொருட்டு உருவாக்கப்பட்ட இன்னொரு பொருள் அல்லது அமைப்பு அல்லது கூற்று.
பராசக்தி ஒரு உருவகக்கதையாக (allegory) அமைக்கப் பட்டிருந்தது 1952 வெளிவந்த இந்தப்படக்கதை பிரிட்டீஷ் இந்தியாவில் அதாவது 1952 நடப்பதாக அமைக்கப்பட்டிருந்தது. அதிலும் அந்த புகழ்பெற்ற நீதிமன்றக் காட்சி, நீதிபதியின் இருக்கைக்கு மேலிருக்கும் பிரிட்டீஷ் அரசின் சின்னத்தின் வெகுஅண்மைக்காட்சியுடன் தொடங்குகின்றது. தணிக்கை முறையிலிருந்து தப்ப பலநாடுகளில் இத்தகைய உத்தி அமைக்கப் பட்டிருந்தாலும் பராசக்தி தணிக்கை வாரியத்தில் சிக்கலை எதிர்கொள்ள வேண்டியிருந்தது
– சு. தியடோர் பாஸ்கரன் (மீதி வெள்ளித்திரையில்)
என் பார்வையில் கீழ்க்கண்ட தமிழ்ப் படைப்புகளைச் சொல்வேன்:
காடு – ஜெயமோகன்
வெயிலைக் கொண்டு வாருங்கள் – எஸ். ராமகிருஷ்ணன்
ஜே.ஜே. சில குறிப்புகள் – சுந்தர ராமசாமி (சூரியனுக்கு அருகே சென்று கருக விரும்பும் பறவையாக ஜோசப் ஜேம்ஸை கற்பிதம் செய்வது)
பூனைக் கதை – பா. ராகவன்
அட்லாண்டிஸ் மனிதன் மற்றும் சிலருடன் – எம்.ஜி. சுரேஷ்
அது சடாரென்றுதான் எனக்கு நிகழ்ந்தது. ஒரு வார காலம் அவகாசம் கொடுத்திருப்பார்கள். சொல்வனம் இயங்கும் வோர்ட்பிரெஸ் தளத்தில் என் வலைப்பதிவை வைத்திருந்தேன். அந்த வலைப்பதிவில், ஆங்கிலத்தில் பல இடங்களில் வரும் விஷயங்களை சுட்டு, மறுபதிப்பாக என் தனி வலையாக சேமிப்பது வழக்கம். ஹார்வார்டு பிஸினெஸ் ரிவ்யூ போன்ற புகழ் பெற்ற பத்திரிகைகள், மெக்கின்ஸி போன்ற செல்வாக்கான மேலாண்மை நிறுவன ஆராய்ச்சிகள், நியூ யார்க்கர் போன்ற வெகுஜன பத்திரிகைகளில் வந்த முக்கிய கட்டுரைகள், வால் ஸ்ட்ரீட் ஜர்னல் போன்ற தினசரிகளின் தலையங்கங்கள் – இது போன்று காசு கொடுத்து படிக்க வேண்டிய விஷயங்களை, இலவசமாக விநியோகித்தேன். சும்மா கொடுப்பது போதும்; இனிமேல் எல்லாமே காசு கொடுத்தால் மட்டுமே கிடைக்கும் என்று காப்புரிமை குறித்து அப்போது கெடிபிடி அதிகமான காலம். ஆலன் ஷ்வார்ஸ் தற்கொலைக்கு ஓரிரு வருடங்கள் முன்பான நேரம். ஒரே வாரம் கெடு தந்தார்கள். அதன் முடிவில் என் வலையகத்தை முடக்கி, நொடியில் வலையில் இருந்து காணாமல் போக்கிவிட்டார்கள். சிலிக்கான் வேலி நிறுவனங்கள் எல்லாம் எதுவும் செய்யத் துணிந்தவை என்பதை நேரடியாக பாதிப்பின் அடிப்படையில் உணர்ந்தேன். என்னுடன் வாருங்கள் என்று 8சான் (8chan) மாதிரி க்யூஅனான் (QAnon) மாதிரி தனது பைநாகப்பையை சுருட்டிக் கொண்டு கிளம்பும் திருமழிசைப் பெருமாள் போன்ற டொனால்டு டிரம்ப்பும் கிடையாது. நானும் ஆழ்வார் கிடையாது.
கணிகண்ணன் போகின்றான் காமருபூ கச்சி மணிவண்ணா நீ கிடக்க வேண்டாம் துணிவுடைய செந்நாப்புலவனும் போகின்றேன் நீயும் உன் பைநாகப் பாயை சுருட்டிக்கொள்
கணிகண்ணன் போக்கொழிந்தான் காமருபூகச்சி மணிவண்ணா நீ நிற்க வேண்டாம் துணிவுடைய செந்நாப்புலவனும் போக்கொழிந்தான் நீயும் உன் பைநாகப் பாயில் படுத்துக்கொள்
பார்லர் நிறுவனத்தை முடக்கிய கதை
ஜன.6. – பெரும்பாலோரின் முதல் எதிர்வினை நிம்மதி பெருமூச்சாக இருந்தது. ஜனவரி மாதத்தின் ஆறாம் நாள் அந்த அதிரடிகள் துவங்கின. தன்னுடைய பதவிக்காலத்தில் பதினான்கே பதினான்கு நாள்கள் மட்டுமே டொனால்ட் டிரம்ப் பாக்கி வைத்திருந்தார், ஜனவரி 6 – ஜனாதிபதியின் டிவிட்டர் கணக்கு முடக்கப்பட்டது. எண்ணற்ற துஷ்பிரயோகங்கள், பொய்கள் மற்றும் முட்டாள்தனங்களை இனிமேல் அவரால் டிவிட்ட முடியாது. அதன் தொடர்ச்சியாக அவருடைய அடிவருடிகள் கணக்கும் நிறுத்தி நீக்கப்பட்டது. ட்ரம்ப்பின் பல நண்பர்களும் ஆதரவாளர் கணக்குகளும் மூடப்பட்டது. அவர்களின் அவச்சத்தத்தின் முடிவு ஆனந்தமாக இருந்தது. சமாதானத்திற்கான விலை என்பது சுதந்திரப் பேச்சைக் கட்டுப்படுத்துவது என்பது – ஜனநாயக நாடுகளுக்கு தலைகுனிவு.
பேச்சுரிமையின் காவலராக தொழில்நுட்ப நிறுவனங்கள்
ஜனவரி ஏழாம் தேதி ஃபேஸ்புக் நிறுவனம் டொனால்ட் டிரம்ப்பின் கணக்கை காலவரையற்ற நிலுவையில் வைப்பதாக அறிவிக்கிறது. அதற்கு மறுநாள் டிவிட்டர் அவரின் கணக்கை நிரந்தரமாக மூடுகிறது. ஸ்னாப்சாட் சமூக ஊடகமும் வீடியோக்கள் போடும் கூகுள் நிறுவனத்தின் யூடியுப் தளமும் இதே போன்ற தடைகளை ஜனாதிபதி டிரம்ப் மேல் போடுகிறது. டிரம்ப்பை போன்றே செல்வாக்குடன் திகழ்ந்த பல தீவிர வலதுசாரி சார்பாளர்களுக்கும் இதே கதி. அவர்களின் கணக்குகளும் முடக்கப்படுகின்றன.
கூகுள் நிறுவனத்தின் ப்ளே ஸ்டோர் கடையும் ஆப்பிள் நிறுவனத்தில் ஐஃபோன் கடையிலும் இருந்து “பார்லர்” (Parler) நீக்கப்படுகிறது. பார்லர் – வலதுசாரிகளிடம் புகழ்பெற்றது. டிவிட்டர் மாதிரி பார்லரும் ஒரு சமூக ஊடகம். ஆனால், ட்விட்டரை விட அளவில் மிகச் சிறியது. டிவிட்டர் பயனர்கள் மொத்தம் 32 கோடி; பார்லர் மூடியபோது, அதன் பயனர்கள் எண்ணிக்கை மொத்தம் 23 லட்சம். ட்விட்டரை விட்டு நீக்கப்பட்டவர்கள் பார்லருக்கு சென்று கடையைத் துவங்கினர். வலதுசாரிகளுக்கு தங்களின் கருத்துகளையும் சித்தாந்தங்களையும் ஆக்ரோஷமாக முன்வைக்க பார்லர் உதவியது. கூகிள் கடையும் ஆப்பிள் செல்பேசி கடையும் நீக்குவதனால் – இனிமேல் எந்தப் புதிய நபராலும் பார்லர் நிரலியை தரவிறக்க முடியாது. எனினும், இதற்கு சந்து பொந்து ஓட்டைகள் இருந்தன.
A screenshot included in Amazon’s letter to Parler
இந்த நிலையில் அமேசான் நிறுவனம் பார்லருக்கு மரண அடி கொடுத்தது. பார்லர் செயலி இயங்குவதற்கு ஆதாரமாக இருப்பது அமேசான் வெப் செர்வீசஸ் எனப்படும் ஏ.டபிள்யு.எஸ் (AWS). அந்த வசதிகள் நிறுத்தப்படும் என்று அமெசான் ஒரு நாள் கெடு கொடுத்து, அடுத்த நாளே பார்லரை செயலிழக்க வைக்கிறது.
வெறியாட்டத்தைத் தூண்டிய மந்தை கும்பல் இவர்கள், என்று பார்த்தால் நிச்சயமாக இது ஏற்றுக்கொள்ளத்தக்கது. அமேசானும் கூகுளும் ஃபேஸ்புக்கும் ட்விட்டரும் தனியார் நிறுவனங்கள்; எனவே, தங்களின் வசதிக்கேற்ப, தங்களின் சுயவிருப்பத்திற்கேற்ப – என்ன வேண்டுமோ அதைச் செய்யும். நாம் எல்லோரும், ஒரு நிரலியையோ செயலியையோ தரவிறக்கும்போதும், உபயோகிக்கும் போதும், “உரிமைதுறப்பு” என்பதை ஒப்புகொண்டு, அந்தந்த பெருநிறுவனங்களின் விருப்பத்திற்கேற்ப கட்டுப்படுவோம் என்பதை ஒப்புக் கொள்கிறோம். அதிபர் டிரம்ப் கொஞ்சம் எசகுபிசகாக டிவிட்டுகிறார். அவரின் நிலைத்தகவலைக் கேட்டோர் கொதித்தெழுகின்றனர். கிளர்ச்சியில் ஈடுபடுகின்றனர். எனவே, பார்லர் நிரலியை நாங்கள் வழங்கமாட்டோம் என முடிவெடுத்ததாக அமேசான் கடிதம் போடுகிறது.
ஆனால், இன்றைய அளவிலும் அயொத்தொல்லா அலி கொமேனி டிவிட்டரில் இயங்குகிறார். டொனால்டு டிரம்ப்பை போல் அறச்சீற்றம் எல்லாம் கொள்ள தன் ஆதரவாளர்களை அவர் தூண்டவில்லை. 8,815,000த்துக்கும் மேற்பட்ட தன் சீடர்களுக்கு, ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா அலி காமெனி நேரடியாக “இன்னாரை தீர்த்துக் கட்டு” என்று ஃபாத்வா கொலை உத்தரவை இன்றளவும் விடுத்துக் கொண்டே இருக்கிறார். அவர் ட்விட்டரில் தான் இன்னும் இருக்கிறார். அந்த மாதிரி வெளிப்படையான வெறித்தாக்குதல் அழைப்புக்கும் மறைமுகமாகத் தூண்டி விடுவதற்கும் உள்ள வேறுபாடு கூட சமூக மிடையக் காவலர்களுக்குத் தெரியவில்லையா?
Supporters listen as President Trump speaks during a Save America Rally near the White House on January 6—not long before a pro-Trump mob stormed the Capitol Building
உங்களின் வலை செயல்பாட்டிற்கும், வலையகம் இயக்குவதற்கும் “ஏற்றுக்கொள்ளக்கூடிய பயன்பாட்டுக் கொள்கை” (acceptable use policy) என்பதை நீங்கள் ஒப்புக் கொள்கிறீர்கள். சேவை விதிமுறைகள் (terms of service) என்பது கட்டுப்பாடுகளும் சட்ட திட்டங்களும் கொண்டவை. அவை தேசங்களுக்கேற்ப மாறும். ஆனால், “ஏற்றுக்கொள்ளக்கூடிய பயன்பாட்டுக் கொள்கை” என்பது நிறுவனங்களுக்கு நடுவே நிலவும் பரஸ்பர புரிதல்.
இது எப்பொழுது, எப்படி நடைமுறைக்கு வந்தது?
தொண்ணூறுகளில் எரிதம் (spam) அஞ்சல்கள் தலைவிரித்தாடியது. சாதரண மக்களால் அனுப்பப்படும் மின்னஞ்சல்கள், மொத்த வலையையும் ஸ்தம்பிக்க வைத்தது. வணிக நிறுவனங்களால் தங்களின் குறைந்த பட்ச சேவையைக் கூட வழங்க இயலாதவாறு எரிதங்கள் ஆக்கிரமித்தன. அப்பொழுது இந்த அடாவடியை அடக்க அடாவடியான அணுகுமுறை, பல்வேறு சேவை வழங்குநர்களால் (ISPs) ஒப்புக்கொள்ளப்பட்டன.
இதற்கெல்லாம் கண்ணாமூச்சி காட்டி மாற்றுப் பாதையில் பயணிக்க பிறிதொரு மார்க்கம் இல்லையா?
இருக்கிறது. அது ருஷிய வழி. டி-டாஸ் காவலர் (DDoS-Guard) என்னும் பேரில் தீவிரவாத ஹமாஸ் முதற்கொண்டு எல்லா பாதகர்களுக்கும் வலைச்சேவை வழங்குகிறார்கள். மற்ற நாடுகளின் சட்டங்களையும் சாதாரண தயவு தாட்சண்யங்களும் பாராமல் வெறுப்பையும் வன்மத்தையும் பஞ்சமா பாதகத்தையும் பரப்புவதற்கு பாதை அமைத்துக் கொடுக்கிறார்கள்.
அதிருக்கட்டும். இந்தியாவில் ஒரு இணையம். சீனாவில் இன்னொரு இணையம். இதெல்லாம் எப்படி சாத்தியம்?
இணையம் என்பது கூட்டாட்சி. இந்தியாவில் அது ஜியோ, பி.எஸ்.என்.எல்., ஏர்டெல். அமெரிக்காவில் அது ஏடி அண்ட் டி, வெரைசான், ஸ்ப்ரிண்ட், டி – மொபைல். ஜெர்மனியில் டாயிச் டெலிகாம்.
People associated with far-right online movements such as QAnon breached the Capitol on Wednesday
மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத முதலாளிகள் சட்டத்திற்கு அப்பாற்பட்டு இயங்குகிறார்களா?
கிளவுட்-கம்ப்யூட்டிங் சேவைகள் உட்பட இணையத்தின் உள்கட்டமைப்பு நடுநிலையாக இருக்க வேண்டும். பிளவுபடுத்தும் பாகுபாடான போர்களில் இழுக்கப்பட்டாலும் நாடுகளுக்கு அப்பாற்பட்ட ஒரே மாதிரியான முடிவுகளை எடுக்க வேண்டும். இந்த முடிவுகளை எவர் எடுக்கிறார்கள்? தொழில்நுட்ப நிறுவனங்களின் கையில் இந்த சாவி இருக்கிறது. தேர்ந்தெடுக்கப்படாத மற்றும் கணக்கிட முடியாத சில நிர்வாகிகள் கட்டுப்பாட்டில் இவை இருக்கின்றன.
தங்களை மேய்க்கப்போகும் எல்லா செயற்குழுக்களையும் டெமோகிராட் கட்சி கையில் எடுத்து விட்டது என்பதை FAAMG எனப்படும் ஃபேஸ்புக், ஆப்பிள், அமேசான், மைக்ரோசாஃப்ட், கூகிள் உணர்கிறது. ஜியார்ஜியா மாகாண தேர்தல் முடிவுகளும் வந்துவிட்டன. இனிமேல் தங்களின் குடுமி ரிபப்ளிகன் கட்சியிடம் இல்லை. டொனால்ட் டிரம்ப்பும் அவரின் ரிபப்ளிகன் கட்சியும் எந்த முடிவும் எடுக்கப் போவதில்லை என்பதைப் புரிந்து கொள்கிறார்கள்.
டெமோகிரட் பெரும்பான்மை. ஜனாதிபதி ஜோ பைடன்; செனேட் பெரும்பான்மைக்கு துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ்; ஹவுஸ் ஆஃப் ரெப்ரசெண்டேடிவ்ஸ் எனப்படும் காங்கிரசிலும் ஜனநாயகக் கட்சியே வெற்றி பெற்றுள்ளது. அவர்கள் என்ன சொல்கிறார்களோ, அதை செய்து நிறைவேற்றி விட்டார்கள். இந்த சிலிகான் வாலி பெருநிறுவனங்களில் வேலை பார்ப்போரின் 95% தேர்தல் காணிக்கைகள் ஜோ பைடனுக்கு சென்றுள்ளது. (பார்க்க: Silicon Valley Opens Its Wallet for Joe Biden | WIRED). பார்லர் பெரு முதலையாக இருந்தால், இந்த மாதிரி, “எடுத்தோமா… கவிழ்த்தோமா” என்னும் மூடுவேலை சாத்தியமேயில்லை.
கீழேக் காணும் ட்விட்டை போட்டவர் ஜெனிஃபர் பால்மியெரி (Jennifer Palmieri). இவர் க்ளிண்டன் ஆதரவாளர்.
It has not escaped my attention that the day social media companies decided there actually IS more they could do to police Trump’s destructive behavior was the same day they learned Democrats would chair all the congressional committees that oversee them.
இதனால் கூகிள் நிறுவனம், சில பல சில்லறையாக சிதற வேண்டாம். ஆப்பிள் எத்தனை காசுக்கு வேண்டுமானாலும் ஐஃபோனை விற்றுக் கொள்ளலாம். அமேசான் வருமான வரியை அதிக அளவில் கட்ட வேண்டாம்.
இன்று ஜனநாயகக் கட்சிக்கு ஆதரவாக செயல்படும் சிலிகான் வேலி நிறுவனங்கள், நாளைக்கே குடியரசுக் கட்சி பெரும்பான்மை பெற்றால், அவர்களின் துதி பாடி, இன்னொரு ஆட்சி சொல்வதை சிரமேற்கொண்டு இரும்புக்கரத்தினால் இன்னொருவரை அடக்கும் என்பதில் எவருக்கும் துளிக் கூட ஐயமிருக்கக் கூடாது. ஜெர்மனியின் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல், “தனியார் நிறுவனங்கள் பேச்சு விதிகளை தீர்மானிக்கக்கூடாது.” என்றார். ருஷியாவைல் வெளியேறிய அதிருப்தியாளரான அலெக்ஸீ நவல்னி (Alexei Navalny), “இந்தத் தணிக்கை ஏற்றுக்கொள்ள முடியாத செயல்” என்று தன் கண்டனத்தைப் பதிவு செய்தார். இவ்வளவு ஏன்!? ட்விட்டர் நிறுவனத் தலைவரான, ஜாக் டார்சி கூட “ஆபத்தான முன்மாதிரி” என வருந்தியிருக்கிறார்.
List of most-downloaded apps on Apple Store, Jan. 8, 2021
வருங்காலத்திற்கான சில தீர்வுகள்
ஒரு சில நிறுவனங்களே இப்போது எவர் பேசலாம், எதைப் பேசலாம், எவ்வளவு பேசலாம், எப்படி பேசலாம் என்பதை முடிவு செய்கின்றன. இந்த நிலை மாற விதவிதமான விளம்பரம் சார்ந்த, விளம்பரங்கள் சாராத வணிக அமைப்புகள் வரவேண்டும்.
வைரல் ஆவது என்பது இன்றைய நிலையில் எல்லோருக்கும் முக்கியமாக அமைந்திருக்கிறது. விற்கிறதோ இல்லையோ – எல்லாவிதமான நூல்களும் அச்சிடப்பட்டது ஒரு காலம். அது போல், பரவலாக பல்லாயிரம் பேரைச் சென்றடையாவிட்டாலும் முக்கியமான விஷயங்களை முன்னிறுத்துவது எப்படி என்று யோசிக்க வேண்டும்.
எதை தணிக்கை செய்வது என்பது குறித்து பல்வேறு சிந்தனையாளர்களிடமிருந்து கருத்துக்களைப் பெறவேண்டும்.
சில ஸ்டேட்டஸ் தகவலுக்கு அடியில் “இது உண்மை அல்ல.” என்பது போன்ற எச்சரிகைகள், கொட்டை எழுத்தில் போட வேண்டும்.
எந்த விதமான நடவடிக்கை எடுக்கப் படுகிறதோ, அது வெளிப்படையாகவும் கணிக்கக்கூடியதாகவும் அமையவேண்டும்.
கடினமான தீர்ப்புகளை பாதிக்கப்பட்ட மக்கள், மறு முறையீடு செய்வதற்கான உரிமையை வழங்கும் சுயாதீனமான சட்டரீதியான வாரியங்கள் அமைய வேண்டும்.
உகாண்டாவில் தன் நிரலி கிடைக்காது என்பதற்காக, நாட்டிற்கேற்ப வளைந்து கொடுக்காத சுதந்திர செயலிகள் இயங்க வேண்டும்.
இன்றைக்கு சரியெனப் படுவது நாளைக்கு தவறாக இருக்கும். பன்னிரெண்டாம் நூற்றாண்டில் பனிரெண்டு வயதில் மணமுடித்து, 13ல் குழந்தை பெறுவது சகஜமாக இருந்தது. அது போல், காலத்திற்கேற்பவும் வளர்ச்சிக்கேற்பவும் மாறும் சட்டதிட்டங்களை சமூகங்களும் பிரஜைகளும் உருவாக்க வேண்டும். விற்பனையைக் குறிக்கோள் வைக்கும் நிறுவனங்கள் கையில் இந்த முடிவுகள் இருக்கக் கூடாது.
ஒவ்வொரு நாட்டிற்கும் ஒவ்வொரு சட்டதிட்டங்கள் இருக்கின்றன. இழிமொழியை கதையில் வரும் கதாபாத்திரம், அந்தச் சூழலுக்கேற்ப பயன்படுத்தலாம். அது ஒப்புக்கொள்ளக் கூடியதே. அதே வெறுப்பு மொழியை டிவிட்டரில் பயன்படுத்த முடியாது. இது சுதந்திர நாட்டிற்கும் கொடுங்கோல் ஆட்சி நடக்கும் பிரதேசத்திற்கும் இடையே வேறுபடும். சீனர்களுக்கு ஒரு சட்டம், அமெரிக்கர்களுக்கு ஒரு சட்டம் என்று பிரிவுபடுத்தாத உலகளாவிய ஒரு நோக்கு வரவேண்டும்.
ருட்யார்ட் கிப்ளிங் எழுதிய “ஒருவேளை” புத்தாண்டு வாழ்த்தாகக் கிடைத்தது:
ஒருவேளை
தங்களுடையதை இழந்து உங்கள் மீது பழி சுமத்தும் சமயத்தில், உங்களை ஒருநிலையாக வைத்திருக்க முடிந்தால் எல்லா மனிதர்களும் உங்களை சந்தேகிக்கும்போது உங்களை நீங்கள் நம்பினால், எனினும் அவர்களின் சந்தேகத்திற்கும் அனுமதி கொடுத்திருங்கள்; காத்திருக்கும் காலங்களில் சோர்வடையாமல் காத்திருந்தால், அல்லது பொய்கள் சொல்லப்பட்டாலும், அந்தப் பொய்களை கையாளாதீர்கள், அல்லது வெறுக்கப்பட்டாலும், வெறுப்புக்கு வழி விடாதீர்கள், இன்னும் அழகாகத் தோன்றாதே, புத்திசாலித்தனமாகப் பேசாதே:
உன்னால் கனவு காண முடிந்தால் – கனவுகளை உன்னுடைய எஜமானனாக ஆக்காமல் இருந்தால்; உங்களால் சிந்திக்க முடிந்தால் – எண்ணங்களை உங்கள் குறிக்கோளாக ஆக்காமல் இருந்தால்; நீங்கள் ஜயகோஷத்தையும் பேரழிவையும் சந்திக்க முடிந்தால் அந்த இரண்டு ஏமாற்றுக்காரர்களையும் ஒரே மாதிரியாக நடத்துங்கள்; நீங்கள் சொன்ன உண்மையை உரைக்குமாறு கேட்க உங்களால் முடிந்தால் முறுக்கப்பட்ட கத்திகளால் முட்டாள்களுக்கான ஒரு பொறியை உருவாக்க, அல்லது உங்கள் வாழ்க்கையை நீங்கள் அர்ப்பணித்து, அதன் பின்னும் நொறுங்கிய விஷயங்களைப் பாருங்கள் மேலும் தேய்ந்து போன கருவிகளைக் கொண்டு குனிந்து அவற்றை மீட்டெழுப்பி உருவாக்குங்கள்:
உங்கள் எல்லா வெற்றிகளிளையும் ஒரேயொரு பந்துக் குவியலாக உருவாக்க முடிந்தால் மொத்தத்தையும் சுண்டிப் போட்டுப் பார்த்து இடருக்கு உள்ளாக்கி இழக்கவும், உங்கள் தொடக்கத்தில் மீண்டும் தொடங்கவும் உங்களின் பழைய இழப்பைப் பற்றி மீண்டும் ஒருபோதும் மூச்சுவிடாதீர்கள்; உங்கள் இதயத்தையும் நாடி நரம்புகளையும் நீங்கள் கட்டாயப்படுத்தினால் அவை தேய்ந்து மறைந்து நீண்ட நாட்களுக்குப் பிறகும் உங்களுக்கு சேவை செய்ய, உங்களிடம் எதுவும் இல்லாதபோது பிடித்துக் கொள்ளுங்கள் அவற்றிடம் சொல்லும் மனத்திட்பத்தைத் தவிர: ‘பொறுங்கள்!’
பெருங்கூட்டத்தினரோடு பேசி உங்கள் நற்பண்புகளைக் கடைப்பிடித்தால், அல்லது அரசர்களுடன் உலாவி நடந்தாலும் – சாதாரணத் தொடர்பை இழக்காதீர்கள், எதிரிகளோ அல்லது அன்பான நண்பர்களோ உங்களை காயப்படுத்த முடியாது என்றால், எல்லா மனிதர்களும் உங்களை நம்பகமாக எண்ணினாலும், எவரும் அளவுக்கதிகமாக சார்ந்தும் இல்லாமல்; மன்னிக்காத நிமிடத்தை உங்களால் நிரப்ப முடிந்தால் அறுபது வினாடிகள் மதிப்புள்ள தூர ஓட்டத்துடன், பூமியும் அதில் உள்ள அனைத்தும் உன்னுடையது, மேலும்-அது அதிகம் – நீ ஒரு மனிதனாக இருப்பாய், மகனே!
இன்று கிழிமுறி – ‘கேன்சல்’ கலாச்சாரம் (Cancel Culture). இமையிலி — “விழித்திரு” (Woke) அறைகூவல் காலம்.
1941-இலேயே கிப்ளிங்-கை ஜார்ஜ் ஆர்வெல் ஒரு கை பார்த்து இருக்கிறார்:
கிப்ளிங் ஒரு ஏகாதிபத்திய போர் வெறியர். அவர் தார்மீக ரீதியாக உணர்ச்சியற்றவர் மற்றும் அழகியல் ரீதியாக அருவருப்பானவர். அதை ஒப்புக்கொண்டு தொடங்குவது நல்லது,
மிகவும் தொழில்மயமான நாடுகளில் உள்ள அனைத்து இடதுசாரிக் கட்சிகளும் ஒரு ஏமாற்று நிலையில் உள்ளன. ஏனென்றால் அவர்கள் உண்மையில் அழிக்க விரும்பாத ஒன்றை எதிர்த்துப் போராடுவதைத் தங்கள் தொழிலாகக் கொண்டுள்ளனர். அவர்கள் சர்வதேசிய நோக்கங்களைக் கொண்டுள்ளனர், அதே நேரத்தில் அந்த நோக்கங்கள் பொருந்தாத வாழ்க்கைத் தரத்தைத் தக்கவைக்க அவர்கள் போராடுகிறார்கள். நாம் அனைவரும் ஆசியக் கூலிகளைக் கொள்ளையடிப்பதன் மூலம் வாழ்கிறோம், மேலும் ‘அறிவொளி’ பெற்றவர்கள் அனைவரும் அந்தக் கூலியாட்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்று கருதுகிறோம்; ஆனால் நமது வாழ்க்கைத் தரம், அதனால் நமது ‘அறிவொளி’, கொள்ளை தொடர வேண்டும் என்று கோருகிறது.
எந்தவொரு அரசியல் கட்சியுடனும் அவருக்கு நேரடி தொடர்பு இல்லை என்றாலும், கிப்ளிங் ஒரு பழமைவாதவாதி, இது இப்போதெல்லாம் இல்லை. இப்போது தங்களை பழமைவாதிகள் என்று சொல்லிக்கொள்பவர்கள் லிபரல், பாசிஸ்டுகள் அல்லது பாசிஸ்டுகளின் கூட்டாளிகள். அவர் தன்னை ஆளும் அதிகாரத்துடன் அடையாளப்படுத்தினார், எதிர்க்கட்சியுடன் அல்ல. ஒரு திறமையான எழுத்தாளருக்கு இது நமக்கு விசித்திரமாகவும் அருவருப்பாகவும் தோன்றுகிறது, ஆனால் கிப்ளிங்கிற்கு யதார்த்தத்தின் மீது ஒரு குறிப்பிட்ட பிடியைக் கொடுப்பதற்கு இது உதவுகிறது.
இந்த ஆர்வெல் கட்டுரையின் துவக்கத்தில் டி.எஸ். எலியட் என்பவரும் ஃபாஸிஸ்ட் ஆகவும் யூத எதிர்ப்பாளராகவும் அடையாளம் ஆகிறார்.
தமிழிலும் எக்கச்சக்கமான பேர்கள், எழுத்தாளர்கள் தடை செய்யப்பட்டு, அவர்களின் எதிர்தரப்பினாரால் ப்ளாக் ஆகி, கருத்துக்களைக் கேட்காமல் விட்டுவிடுகிறார்கள்.
கேள்விகள்:
”படைப்பாளியைப் பார்க்காதே. படைப்பைப் பார்!” – என்று வாசிக்க வேண்டுமா?
கோபத்தில் வரும் தகாத வார்த்தை வெளிப்பாடு என்பது ஆழ்மனதில் பொதிந்திருக்கும் வெறுப்பை பொதுவிற்குக் கொணர்கிறதா?
ஒவ்வொரு பிரயோகத்தையும் எவ்விதமான கருத்தையும் – இது யார் மனத்தை புண்படுத்தும்? எந்தச் சமூகத்தை பாதிக்கும்? எவருடைய இனத்தை, மதத்தை, குறியிட்டு இழிபடுத்தும்? :: என்று கவனித்து, யோசித்து, கத்திரி போட்டு, அதன் பின் இன்னும் ஆறப்போட்டு, வெட்டி, சரி செய்த பிறகே ஃபேஸ்புக் / டிவிட்டரில் இட வேண்டுமா?
அந்தக் கால விழுமியங்கள், அப்போதைய கலாச்சாரம் என எல்லாவற்றையும் கருத்தில் இடஞ்சுட்டி பொருள் விளக்க வேண்டுமா?
விக்கிரமாதித்தன் என்னும் மனிதரை விவரிக்க வேண்டுமா அல்லது விக்கி அண்ணாச்சியின் கவிதைகள் எவ்வாறு, அடு எவ்வகை உணர்வுகள் எழுப்புகின்றன என விஷ்ணுபுரம் மேடையில் உரையாற்ற வேண்டுமா?
காசு கொடுத்தால் பத்திரிகைகள் விளம்பரம் கொடுக்கும். தேர்தல் நாளன்று முதல் பக்கத்தை தாரை வார்த்துத் தரும். நடிகர் பணம் கொடுத்தால், அவரின் படத்தை அட்டையில் போடும்.
அமெரிக்காவை விட பணக்கார நாடாகி வரும் சீனா சும்மா இருக்குமா?
எங்களிடம் பாலும் தேனும் ஓடுகிறது. எல்லோரும் தங்கள் இஷ்டப்படி கட்டுப்பட்டு, அடங்கி ஒடுங்கி இருக்கிறார்கள். கம்யூனிசத் தலைவர்கள் எல்லோரும் உத்தமர்கள். எந்த டென்னிஸ் வீராங்கனைகளையும் வன்புணர்வு எதுவும் செய்வதில்லை. பேச்சுரிமை இருந்தாலும் எவரும் வாய்திறப்பதில்லை. அவ்வளவு கேளிக்கைமயமாக குடிமக்கள் பொழுதுபோக்குகிறார்கள். எப்போதும் இயற்கையோடு ஒன்றோடு ஒன்றாக இயைந்து வாழ்கிறார்கள். ஆடல், பாடல், இசை என உற்சாகமாக ஓய்வெடுக்கிறார்கள். நஞ்சில்லா வேளாண்மை உணவை சல்லிசாக சோஷலிசம் விற்பதால் எல்லோரும் நலமாக உண்கிறார்கள்.
திராவிட மேடை தோற்றது! கட்சிப் பிரச்சாரங்கள் கூசி நாணும் அளவு சீனாவை எப்படி உலகிற்கு சந்தையாக்கம் செய்கிறார்கள்?
சென்னையில் மருந்தகங்களே மருத்துவராக மாறி நோயை குணப்படுத்துவார்கள். மேற்கத்திய உலகில் சட்டங்களும் திட்டங்களும் அதிகம். தெருமுக்கில் ஒற்றை அறையில் உங்களை நாடி பிடித்து குணப்படுத்தும் நம்பகமான ஐந்து ரூபாய் டாக்டர் கிடையாது.
அவசர அவசரமாக உடனடியாக சிகிச்சை பெற வேண்டுமானால் உயர்தரமான சேமநல காப்பீடு வேண்டும். அந்த மாதிரி முன் ஜாக்கிரதையாக இன்ஷூரன்ஸ் எடுக்காதவர்களுக்கு உடம்பு சரியில்லாமல் போனால் சொத்தையே எழுதி வைக்க வேண்டும்.
இதற்கெல்லாம் மாற்றாக ஒபாமா-கேர் வரப் பார்த்தது. மாஸசூஸட்ஸ் மாநிலத்தை முன் மாதிரியாக வைத்து உருவான சகலருக்குமான காப்புறுதி திட்டம் அது. பராக் ஒபாமாவின் காலத்திலேயே அது நீர்த்துப் போய் பேருக்கு காப்புறுதி கொடுத்தது. டொனால்டு டிரம்ப் வந்து அந்த ஹெல்த்-கேர் திட்டங்களை இன்னும் காலாவதியாக்கினார்.
அதில் விட்டதையும் தொட்டதையும் தற்போதைய அதிபர் பைடன் சட்டமாக்கப் பார்க்கிறார். எக்கச்சக்க விலை கொடுத்து வாங்க வேண்டிய மருந்துகளை சகாயமாக அணுகக் கூடிய விலையில் தர முயல்கிறார்.
“வெப்3-இல் வேலை செய்ய $500,000 சம்பளம் கொடுக்கிறோம். வாங்க…” என்கிறார்கள்.
‘அம்மாவிற்கு கிறிஸ்துமஸ் பரிசாக என்.எஃப்.டி.-இல் கிடைத்த லாபத்தை வைத்து சான் ஹோஸே நகரத்தில் மூன்று மில்லியன் டாலர்கள் ரொக்கமாகக் கொடுத்து வீடு வாங்கிவிட்டேன்!” என்கிறார்கள்.
இதெல்லாம் கட்டுக்கதை இல்லை. நிஜமாகவே பற்பலரின் அனுபவம்.
சமூக ஊடகம், நேரடிச் சந்தை, இடைத் தரகரில்லாத வியாபாரம் – 2010கள்
இப்பொழுது க்ரிப்டோ, பிட்காயின், ப்ளாக்செயின், மாற்றமுடியா முத்திரை (NFT), மெய்யுரு (non fungible token), மெட்டா, மெய்நிகர் உலகம் – 2020கள்.
இந்த நுட்பங்களுக்கு நுழைவாயிலாக பானுமதி ந. எழுதும் தொடர் அமைந்திருக்கிறது. கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளிக்கும் விதமாக கட்டுரைகள் இருக்கின்றன:
1. ஒவ்வொரு நாட்டு அரசாங்கமும் இந்த சங்கேத பட்டுவாடாக்களை எவ்வாறு எதிர்கொள்கின்றன?
2. இந்த Decentralized Autonomous Organization, DeFi எல்லாம் வைத்து செல்வம் சேர்ப்பது ஒரு சிலரால் மட்டுமே ஆக்கிரமிப்புக்குள் அடங்கி, மற்ற எல்லாருக்கும் சில்லறைக் காசு மட்டுமே அள்ளித் தெளிக்கப்படுகிறதா?
பணம் மட்டுமல்ல. நீங்கள் எந்தத் துறையாக இருந்தாலும்… பயணத்துறை, கல்வித்துறை, விவசாயம், கட்டுமானம், மருந்து, உடல்நலம், உணவு, கேளிக்கை, இலக்கியம், அச்சு, செய்தித்துறை, இசை – எதுவாக இருந்தாலும் நுண்நாணயம் தன் வீச்சை செலுத்தப் போகிறது. அதை பயன்படுத்த நீங்கள் தயாரா?
முதல் பகுதிக்கான அறிமுகம்:
நாய் மனிதனைக் கடித்தால் செய்தி இல்லை; மனிதன் நாயைக் கடித்தால் செய்தி.
அது போல் உங்கள் நிறுவனத்தையோ நகரத்தையோ கள்வர்கள் வந்து கணினியை முடக்கினால் செய்தி இல்லை. நீங்கள் அந்தக் கயவர்கள் யார், எவர் எனத் தெரிந்து கொண்டால் மட்டுமே செய்தி.
இதைக் குறித்த விரிவான கட்டுரையை இந்த சொல்வனம் இதழில் வாசிக்கலாம்.
சின்ன கம்பெனி முதல் பெரிய ஃபார்ச்சூன் 500 அமைப்பு வரை எல்லோரும் கொந்தர்களிடம் மாட்டிக் கொள்கிறார்கள். அதன் பின் அவர்கள் கேட்கும் பிட்காயின் / எதிரீயம் தொகையை பட்டுவாடா செய்கிறார்கள். அதன் பின் தங்கள் வியாபாரத்தை நிர்வாகத்தைத் தொடர்கிறார்கள்.
நாடுகளே இதில் தங்கள் ஆள்களை உலவ விட்டிருக்கிறார்கள். சீனா, ருஷியா போன்ற நாடுகளுக்கு இது அதிகாரபூர்வமற்ற திருட்டு வியாபாரம். உக்ரைன், கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு இது கண்ணாமூச்சி ஆட்டம்.
முதல் பகுதியை ந. பானுமதி சிறப்பாக அறிமுகம் செய்திருக்கிறார்.
– அமெரிக்காவிற்கும் மேற்குலகிற்கும் இதனால் என்ன லாபம்?
– கள்ள இணையம் எனப்படும் டார்க் வெப் எப்படி இயங்குகிறது?
– கறுப்பை வெளுப்பாக்குவது போல் புலப்படா இணையப் பணம் எவ்வாறு அமெரிக்கன் டாலராக மாறி நிதிப் புழக்கத்திற்கு விடப்படுகிறது?
– காப்பீடு நிறுவனங்கள், கஞ்சா விற்பவர்கள், தகாத செயல்கள் செய்பவர்கள் சில்லறை வியாபாரிகளாக இருந்த காலம் மாறி எப்படி முறைசார்ந்த அடுக்குமுறை அதிகாரவர்க்கத்தின் அடியில் ஒழுங்காக இயங்குகிறார்கள்?
Vikramadithyan Documentary | Vishnupuram Awards 2021: ‘வீடும் வீதிகளும்’, 2021ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது பெறும் கவிஞர் விக்ரமாதித்யன் அவர்களைப் பற்றிய ஆவணப்படம் பார்த்தேன்.
சில எண்ணங்கள்:
1. துணையெழுத்து இல்லாமை: தமிழ்க் கவிஞரைப் பற்றிய அறிமுகப் படத்தில் வரும் உரையாடலை, உரையாடற் மொழியிலோ பிற வேற்று மொழியிலோ எழுத்து வடிவில் காட்டப்படும் உரை; ஆங்கிலத்தில் துணையுரை இல்லாமல் இருப்பது ஏமாற்றம் அளிக்கிறது.
2. அரை மணி நேரத்தில் முடிக்க வேண்டும் என்று அவசர கதியில் மிச்சம் மீதியைப் போட்டு செய்யும் வடகறி கொத்து பரோட்டா போல் வந்திருக்கிறது. வடகறி சுவையாக இருக்கும். ஆனால், இங்கே சாஸ்திரோப்தமான சூப், சிற்றுண்டி பலகாரம், தலைவாழை இலை சாப்பாடு, பீடா எல்லாம் எதிர்பார்க்கிறேன்.
3. இந்தப் படங்கள் எவரைக் குறிவைத்து எடுக்கப்படுகின்றன?
அ) தமிழ்க் கவிஞர்களை அதிகம் அறியாத தமிழ் தெரிந்தோர்
ஆ) விக்கிரமாதித்தனை நன்கு அறிந்தோர்
இ) தமிழ் இலக்கியத்தில் நிறைய பரிச்சயம் இருந்தாலும் விக்கிரமாதித்தனை அறியாதோர்
ஈ) தமிழ் புரிந்தாலும் எழுத/வாசிக்கத் தெரியாத தலைமுறை
உ) விஷ்ணுபுரம் வாசகர் வட்டம்
என்னை (இ) பிரிவில் வைத்திருக்கிறேன். என் மனைவியை (அ) பிரிவில் வைக்கிறேன். எங்கள் குழந்தைகளை (ஈ) பிரிவில் வைக்கலாம். இந்த மூவருக்குமே இந்தப் படம் எதையும் கொண்டு சேர்க்கவில்லை.
4. நான் எதை எதிர்பார்த்தேன் – இந்தப் படத்தில்?
i) தமிழ்க் கவிஞர்கள் – சுருக்கமான பாரம்பரியம்; எந்த இடத்தில் விக்கிரமாதித்தன் வருகிறார்?
ii) விக்கிரமாதித்தன் தோற்றமும் வளர்ச்சியும் – எவ்வாறு அந்தக் கவியாளுமை உருவானது?
iii) சமகால கவிஞர்களை எவ்வாறு அவர் ஊடுருவுகிறார்? அவரின் நெடிய இலக்கிய பயணத்தில் என்னென்ன மாற்றங்கள் தோன்றின?
iv) கவிஞரை வாசித்ததால் அவரவருக்கு என்ன கிடைத்தது? போகன் சங்கர், லஷ்மி மணிவண்ணன், வண்ணதாசன் – சுய அனுபவம் / நேர்மையான தன்மை நிலைப் பார்வை / அகப் பகிர்வு – இது இல்லாமல் பீடத்தில் இருந்து கொண்டு சொற்பொழிவாற்றுவது ‘ராஜாதி ராஜ ராஜ கவிராய ராஜ மார்த்தாண்ட ராஜ கம்பீர விக்கிரமாதித்தாய நமஹ!’ என அலறுகிறது.
5. அறிமுகமாக அந்த வீணை இசை மெல்லிய அபாரம். படம் முழுக்கவே சத்தமாக, “நான் இருக்கிறேன்!” என்று கத்தாமல், படத்தோடு இயைபான இசை.
6. ஏன் பேசுபவர்களின் பெயர்களை ஆங்கிலத்தில் போடுகிறார்கள்? பேசுபவர் யார், எங்கிருக்கிறார், என்ன எழுதியிருக்கிறார், ஏன் பேசத் தகுதியானவர் என்றெல்லாம் போட வேண்டும்.
7. கவிஞரைக் குறித்த ஜெயமோகனின் அறிமுகம் முகஞ்சுளிக்க வைத்தது. இன்னாரைப் பாராட்டி சீராட்டும் தருணத்தில் “சட்டையில்லாமல் வந்தார்! சண்டைக்காரராக முன்வந்தார்!!” என்று சொல்லிவிட்டு, “நான் எழுதியதுதான் அவரைப் பற்றிய முதல் கட்டுரை!” என்று ஜம்பமும் தட்டிக் கொள்வது உவ்வேக். கொஞ்சம் தன்னடக்கத்தோடு உரையாடியிருக்கலாம்.
8. இறுதியில் போடப்படும் பெயர் பட்டியல் – அகர வரிசைப்படி இருக்க வேண்டும். இது ஏதோ இலக்கிய அந்தஸ்து பீடம் போல் வயதை வைத்து போடப்பட்டிருக்கிறது.
9. ஒரே ஒரு பெண்ணாக சுபஸ்ரீ வந்து போகிறார். நன்றாகப் பேசினார்.
10. விக்கிரமாதித்தன் உரையாடலை இன்னும் தீவிரமாக ஆழமாக நடத்தியிருக்க வேண்டும். குடியோடு என்றால் குடியோடு. ஏழெட்டு நாள்கள் என்றால் அத்தனை பொறுமையோடு. அதன் பின் கத்திரி போட்டு ஆங்காங்கே கிடைத்த நறுக்குகளைக் கொண்டு அவரின் பேச்சு வந்திருக்க வேண்டும். இப்பொழுது ஏதோ தாதா சாகேப் பால்கே விருது பெற்ற ரஜினிகாந்த்தை வைத்து பொம்மை கோச்சடையான் எடுத்த மாதிரி தீட்டியிருக்கிறார்கள்.
இந்தப் படத்தின் திரைக்கதையில் ஏகப்பட்ட பிரச்சினைகள் இருக்கின்றன. தர்க்கப் பிழைகள் இருக்கின்றன. இதன் க்ளைமாக்ஸ் ஓர் உதாரணம். அதன் காரணமாக படம் நன்றாக இல்லை.
இப்படம் இஸ்லாமியர்களை ‘மட்டும்’ மோசமாகச் சித்தரித்திருப்பதாகவும் அவர்களது தீவினைகளுக்கு எதிர்வினையாகவே இந்துத்வர்கள் செயல்படுவது போலக் கட்டமைக்கப் பிரயத்தனப்படுகிறது என்றும் பலரும் அபிப்ராயப்படுவதை நான் ஏற்கவில்லை.
முதல் விஷயம், பிருத்விராஜ் சொல்கிற ஃப்ளாஷ்பேக். ஃபிரான்சின் நவீன மனநிலையுடன் ஒப்பிடும்போது, அவர்களது முற்போக்குத்தனத்துடன் ஒப்பிடும்போது, இஸ்லாமியர்கள் அங்கே நிகழ்த்திய வன்முறை – நேரடியாகவும் கருத்தியல் ரீதியிலும் – சகித்துக்கொள்ள முடியாதது. சார்லி ஹெப்டோ பத்திரிகையில் முகமது நபியின் கேலிச் சித்திரத்தை வரைந்ததற்காக குண்டு வைத்த இஸ்லாமியர்களைக் கண்டு ஐரோப்பியர்கள் அஞ்சுவது நியாயமானதே. புரிந்துகொள்ளக்கூடியதே. அவர்கள் முந்நூறு ஆண்டுகளாக இரத்தம் சிந்தி அந்தக் கருத்துச் சுதந்திரத்தை அடைந்தவர்கள். அவர்களுக்கு அதன் மதிப்பு தெரியும்.
இந்தப் படம் இஸ்லாமியக் குடியேறிகள் ஃப்ரான்ஸில் செய்த அட்டூழியங்களையும் அவர்கள் ஈடுபட்ட ஜனநாயக விரோத நடவடிக்கைகளையும் தன்னுடைய கதாபாத்திரத்தின் மனநிலையை வகுப்பதற்கான reference-ஆக எடுத்துக்கொள்கிறது. இதில் எந்தத் தவறுமில்லை.
நான் இப்படிப் புரிந்துகொள்கிறேன்.
இரண்டு விதமான இஸ்லாமியர்களை இப்படம் சித்தரிக்க முயல்கிறது.
1. தங்களது மதவெறி காரணமாக கொலைவெறிச் செயல்களில் ஈடுபடுபவர்கள்.
2. இஸ்லாமிய மதநெறியின் பொருட்டு தங்களது நன்னம்பிக்கை வழுவாது வாழ்பவர்கள். யாருடைய பார்வை சரி, எந்தத் தரப்பு தவறு என்பதற்குள் விரிவாகச் செல்லாமல் சுருக்கமாக இப்படி வரையறுக்கலாம். இந்த இரண்டு தரப்பு இஸ்லாமியர்களுமே தங்களது நம்பிக்கை மீது மிகுந்த பிடிப்புடனும் பற்றுடனும் வாழ்கிறார்கள். அதில் பாவனை இல்லை, நாடகம் இல்லை, போலித்தனம் இல்லை. சரியோ தவறோ தாங்கள் தீர்க்கமாக நம்புவதைக் கடைபிடிப்பதில் தயக்கங்கள் இல்லை. இதில் அவரவர்க்கு அவரவர் நியாயம் இருக்கிறது.
ஆனால், பலரும் கருதுவதைப் போல அந்த இந்துத்வ சிறுவனை இப்படம் அப்பாவியாகக் காட்டவில்லை. அவனை ஒரு புழுவைப் போல காட்டுகிறார்கள். அவன் தனது கொள்கைக்கு விரோதமாக மாட்டுக்கறி உண்கிறான். தன்னைக் காப்பாற்றிக்கொள்ள எந்த எல்லைக்கும் செல்லத் தயாராக இருக்கிறான். இதன் மூலம் அவன் எவ்வளவு அற்பமானவன் என்பதை நிறுவிவிடுகிறார்கள்.
‘அவங்க கோவிலை எரிச்சாங்க. இவன் கத்தியை எடுத்துட்டான்’ என இந்துப் பெண் சுமா சொல்லும் காரணம்கூட வெறும் சால்ஜாப்புதான். இஸ்லாமியர்களைப் போல தன்னுடைய செயலுக்கான விளைவுகளை (conviction) ஏற்றுக்கொள்ள அவன் தயாராக இல்லை. தன்னுடைய வயதைக் காரணம் காட்டி அடுத்தவர்கள் மீதோ பழிசுமத்தி தன்னைத் தூய்மையில் நிறுத்திக்கொள்ள அவன் நடிக்கிறான். அதற்கு சுமா துணைபோகிறாள். கடைசியில், தான் உயிர் பிழைப்பதற்காக, தன்னைக் காப்பாற்றிய சுமாவையும் அவளது அண்ணனையும் நடுக்காட்டில் தள்ளிவிட்டு இருவரையும் உயிருக்குப் போராட விட்டுவிடுகிறான். எவ்வளவு சுயநலம்! குள்ளநரித்தனம்! (ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கே மதவெறி/சாதிவெறி அதிகம் எனக் கோடிட்டுக் காட்டுகிறார்கள்.)
பிரச்சினை என வந்துவிட்டால், இஸ்லாமியர்கள் ஒருவருக்கொருவர் சளைக்காமல் உதவுகிறார்கள். தங்களது கூட்டாளிகளைப் பாதுகாக்கிறார்கள். ஆனால், இந்துத்வனோ, தான் மட்டும் தப்பிப் பிழைத்தால் போதுமென நினைக்கிறான். ஓர் இந்துத்வனை நம்பி சக இந்துக்கள் அவனுக்கு உதவிசெய்ய நினைப்பதுகூட பேராபத்தில்தான் முடியும் என்பதல்லவா இதன் பொருள்? அவன் கடைசிவரை தன் தவறை ஒப்புக்கொள்வதில்லை, மனம் திருந்துவதில்லை, தனக்காகச் சொந்த மதத்தினரைப் பகைத்துக்கொண்ட ஓர் இஸ்லாமியக் குடும்பத்தின் வேதனை எந்த விதத்திலும் அவனைப் பாதிக்கவில்லை. அவர்களது குருதியை உறிஞ்சிவிட்டு இன்னமும் வெறி அடங்காது வெறுப்புடன் திரிகிறான். இவனை விடவா இப்படத்தின் இஸ்லாமியத் தீவிரவாதிகள் மோசமானவர்கள்?
அதனால், அந்த இந்துத்வனை அப்பாவியாகச் சித்தரித்திருக்கிறார்கள் என்பதைத் தர்க்கரீதியில் ஒப்புக்கொள்ள முடியாது. அவனைத் தீமையின் உருவகமாகக் காட்டியிருக்கிறார்கள் என்கிற முடிவுக்கே வரவேண்டியிருக்கிறது.
‘குருதி’ மலையாள திரைப்படம் பார்த்தேன். மேற்கண்ட வாக்கியம்தான் இந்தப் படத்தின் ஆதார மையம் என்று தோன்றுகிறது.
‘இந்த வாக்கியத்தை உங்களால் தாண்டி வர முடியுமா?” என்கிற சவாலான கேள்வியை, மூசா என்கிற ஓர் இஸ்லாமியப் பெரியவரின் வழியாக ஒவ்வொரு பார்வையாளனையும் நோக்கி கேட்கிறது இந்தப் படம்.
ஆயிரம்தான் இருந்தாலும் மதம் என்பது ஒரு கற்பிதம்தான். அது நம்முள் விதைக்கும் நல்ல விஷயங்களைத் தாண்டி வன்மமாகவும் வெறுப்பரசியலாகவும் பரவும் அபத்தத்தை ரத்தக் கறையோடு விறுவிறுப்பாக சொல்லிச் செல்கிறது இந்தத் திரைப்படம்.
அனைத்து மதத்திலும் சில அடிப்படைவாதிகள் இருப்பார்கள். மத அரசியலின் புகையை ஊதிக் கொண்டே இருப்பார்கள். இந்தச் சாத்தான்களின் குரலை புறக்கணித்து விட்டாலே போதும்.
அப்படியொரு ‘சாத்தானாக’ ருத்ரதாண்டவம் ஆடியிருக்கிறார் பிருத்விராஜ். அவருடைய தயாரிப்பாக இருந்தாலும் இப்படியொரு எதிர்மறைப் பாத்திரத்தை எடுத்ததற்கு பாராட்டு. (ஹேராமில் கமல் ‘அப்யங்கர்’ பாத்திரத்தை எடுத்திருப்பாரா என்கிற கேள்வி இங்கு எழுகிறது).
படம் இழுவையான காட்சிகளுடன் துவங்கினாலும் ஒரு கட்டத்தில் நெருப்பு மாதிரி பற்றிக் கொள்கிறது. பிறகு வேகம். வேகம்தான்..
மதக்காழ்ப்பு என்பது சிலரிடம் அப்பட்டமாகவும் பலரிடம் மறைமுகமாகவும் ஒளிந்திருக்கும் ஆபத்து, ‘நாம்’ ‘அவர்கள்’ போன்ற பிரிவினைவாத சிந்தனைகள் எவ்வாறு உருவாகின்றன என்பது உள்ளிட்ட பல விஷயங்களை சொல்லிச் செல்கிறது, இந்தப்படம்.
திரைக்கதை, ஒளிப்பதிவு, பின்னணி இசை என்று பல தொழில்நுட்ப சமாச்சாரங்கள் சிறப்பாக அமைந்துள்ளன. நிச்சயம் தவற விடக்கூடாத திரைப்படம்.
சிறப்பான படத்தை பார்த்த ஒரு திருப்தி. வாழ்வில் நாம் காணும் மனிதர்களின் மேல் அரசியல் , சுயநலம் ,பொறாமை என்ற பெயரில் நாம் செலுத்தும் வெறுப்பை நம் கண் முன்னே ஓர் இரவின் நிகழ்வுகள் பின்னணியில் சொல்லிவிடுவதே இந்த படம்.
மதத்தின் மேல் பலருக்கும் பல கருத்துக்கள் இருக்கும். அந்த கருத்துக்கள் ஒரு பக்கம் இருக்கட்டும் , அதன் இரு வேறு நன்மை தீமைகளை எடுத்துக்கூறும் ஒரு திரைக்காவியம் என்பதாக இந்த படத்தை நாம் காணலாம்.
ஒரு காட்சி என்னை மிகவும் கவர்ந்தது, கொல்வதற்காக வரும் எதிரிகள் வீட்டு மெயின் ஸ்விட்சை அணைக்கிறார்கள் அப்பொழுது அங்கு உள்ளிருக்கும் இருவர் தன்னைத்தான் கொல்ல வருகிறான் என்று நினைத்து இரு மத இளைஞர்கள் எதிர் எதிர் ஒரு ஆயுதத்தை ஏந்தி எதிர்த்து நிற்பார்கள் . அப்பொழுது அங்கிருக்கும் பெரியவர் ” இதுதான் நம் நாட்டின் பிரச்சனையும் ” என்பார். எவ்வளவு நாசூக்காக நம் நாட்டின் மத பிரச்சினையை விளக்கி விட்டார்.
ஒரு எழுத்தின் சாயல் உங்கள் மீது பட்டு விடாமல் இருக்க கண்டதையும் படிக்க வேண்டும். வித விதமாக வாசிக்க வேண்டும். ஆய்வுக் கட்டுரை முதல் ஆன்மிகம் வரை எதையும் விடக் கூடாது.
அதுவும் அறிவியல் புனைவு மாதிரி எழுத நினைக்கும் போது ஃபிலிப் ராத் கதைகளும் ஜெயகாந்தன் புனைவுகளும் கையில் எடுக்க வேண்டும். சம்பந்தமே இல்லாத துறையில் ஆழ்ந்து, அமைதியாக மூழ்கினால் நல்ல எழுத்து வரும்.
அந்த நினைப்பில் மீண்டும் தி.ஜா.வை எடுத்தேன். பயப்பட வேண்டாம். இன்னும் எதுவும் எழுத ஆரம்பிக்கவில்லை. எனினும், அரூ போட்டி முடிவவில் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகளும், அதில் சில கதைகள் ஜெயமோகனின் சாயலில் இருப்பதாக வெளியான கட்டுரைகளும் இந்த முன்குறிப்பை எழுத வைத்தது.
தலைப்புக்கு போய் விடலாம்: ”வெங்கிட்டு சார் ஏன் ஓடினார்” – குறுநாவல் அளவில் ஒரு சிறுகதை. நல்ல வேளையாக இணையத்தில் கிடைக்கவில்லை.
கதையை சொல்லாமல், இந்த ஆக்கம் ஏன் எனக்குப் பிடித்தது என்று பட்டியல் போடலாம்:
பா. ராகவன் சொல்வார் (அவர்தான் என்று நினைக்கிறேன். இல்லாவிட்டாலும் சிக்கலில்லை) – ஒரு நல்லவர் கெட்ட விஷயத்தை செய்ய வேண்டும். கெட்டவராக சித்தரிக்கப்படும் கதாபாத்திரம் ஏதாவதொரு உத்தமமான விஷயத்தை செய்ய வேண்டும். அதெல்லாம் இந்தக் கதையில் நடக்கிறது.
2. என்னுடைய மாமா அன்னதாதா. நிறைய தான தருமங்கள் செய்பவர். தினமும் வீட்டு வாசலில் வரும் மாடு முதல் எங்கோ இருக்கும் குப்பைமேட்டில் பொறுக்குபவர் வரை தேடிச் சென்று உணவுப் பொட்டலங்களும் ஆடைகளும் தருபவர். கோடையில் அவரின் நிலத்தடி நீர் வற்றி விட்டது. கிணற்றை தூர் வார ஆட்களை அழைத்திருந்தார். நூறடி வரை புரட்டிப் போட்டு வெளியகற்றுவது என்று ஒப்புதல். வந்த மூன்று பேரும் காலை ஏழில் இருந்து மாலை நான்கு வரை அடைப்பை நீக்கி தெளிவாக்கின்றனர். வண்டலை இழுத்து வெளியேற்றி விட்டதாகச் சொல்கின்றனர். நீர்நிலைகளின் கொள்ளளவு அதிகமாகி நீரேந்தும் அளவும் மேம்பட்டதாக கண்ணுக்கு பட்டது. ஆனால், என் மாமாவோ, “இது நூறடி இல்லை!” என்றார். அவர்கள், “சாமீ… இது சத்தியமா நீங்க சொன்ன கூலிக்கு, ஒப்பந்தப்படி முழுக்க தூர் வாரிட்டோம்.” என இறைஞ்சுகிறார்கள்.
கடகடவென் மாமா கிணற்றில் கயிற்றைப் பிடித்துக் கொண்டு அதல பாதாளத்தை நோக்கி இறங்க ஆரம்பித்தார். கையில் நூறடியை அளக்கும் அளவுகோல் வேறு. நான் மிரண்டு விட்டேன். அவர்களும் அரண்டு விட்டார்கள். கடைசியில் அளந்து பார்த்ததில் எண்பத்தி ஏழு அடிதான் ஆகி இருந்தது. தானம் கொடுத்த மாட்டின் பல்லைப் பிடித்துப் பார்க்க மாட்டார்; ஆனால், ஆற்றில் போடும் ஊதியத்தை அளந்து பார்ப்பார்கள் மனிதர்கள்.
மீண்டும் பாரா: சிறு சிறு விவரங்கள் சிறுகதைக்கு முக்கியம். ஒரு கதையில் ஆள், உயரம்,வாசனை,நடை, நாற்றம்,லே அவுட், மேனரிசம், கோபம், புன்னகை,அழுகை, துடிப்பு, வேகம்,சூழல், செயல், செயலின்மை, பேச்சு, மௌனம் இதெல்லாம் வரவேண்டும்; தெரியவேண்டும். – இதெல்லாம் வைத்திருக்கிறார் ஜானகிராமன்.
இதைத்தான் சிவசங்கரி “சின்ன நூற்கண்டா உங்களை சிறைப்படுத்தும்?” என்று அ-புனைவாக ஆக்கினார்?
தி.ஜா.ரா.வின் வார்த்தையிலே சொல்வதானால்: “எடுத்துக்கொண்ட விஷயம் உணர்வோ, சிரிப்போ, புன்சிரிப்போ, நகையாடலோ முறுக்கேறிய, துடிப்பான ஒரு கட்டத்தில்தான் இருக்கமுடியும். சிறிது நேரத்தில் வெடித்துவிடப் போகிற ஒரு தெறிப்பும், ஓர் அவசரத் தன்மையும் நம்மை ஆட்கொள்ள வேண்டும். தெறிக்கப் போகிறது பட்டுக் கயிறாக இருக்கலாம். எஃகு வடமாக இருக்கலாம். ஆனால் அந்தத் தெறிப்பும் நிரம்பி வழிகிற துடிப்பும் இருக்கத்தான் வேண்டும். இந்தத் தெறிப்பு விஷயத்திறகுத் தகுந்தாற்போல் வேறுபடுவது சகஜம். கதையின் பொருள் சோம்பல், காதல், வீரம், தியாகம், நிராசை, ஏமாற்றம், நம்பிக்கை, பக்தி, உல்லாசம், புதிர் அவிழல் அல்லது இவற்றில் சிலவற்றின் கலவைகளாக இருக்கலாம். அதற்குத் தகுந்தபடி அந்தத் தெறிப்பு பஞ்சின் தெறிப்பாகவோ, பட்டின் தெறிப்பாகவோ, எஃகின் தெறிப்பாகவோ, குண்டு மருந்தின் வெடிப்பாகவோ சத்தம் அதிகமாகவோ குறைந்தோ மௌனமாகவோ மாறுபடும். ”
இந்தக் கதையில் என்னத் தெறிப்பு என்பதை வாசித்து விட்டு சொல்லுங்கள்.
மயிலாப்பூர் டி.எஸ்.வி கோவில் தெருவில் ஒரு சின்ன அறையில் அவரின் பார்வையறை இருக்கும். அந்தத் தெருவிற்கு ஏன் “டாக்டர் நாகேஸ்வரன் தெரு” என்று பெயர் வைக்கவில்லை என்று நினைத்திருக்கிறேன்.
அவர் குழந்தை நல மருத்துவர். அவர் ஒரு மனநல மருத்துவரும் கூட. அவரை குருஜி என்றும் சொல்ல வேண்டும். பலர் அவரை தங்களின் ஆலோசகர் + வழிகாட்டுனர் ஆகவே பார்த்தார்கள்.
சுருக்கமாக நல்ல மனிதர். பழகுவதற்கு எளிமையானவர். வாழ்க்கை சிக்கல்கள் ஆகட்டும்; உடல்நலக் குறைபாடுகள் ஆகட்டும்; பிரச்சினையில் சிக்கித் தவிக்கும் எண்ணற்றோருக்கு சுருக்கமான தீர்வுகளை ஐந்து ரூபாயில் தந்தவர்.
மயிலையில் நிறைய விஷயங்களுக்கு கூட்டம் அலை மோதும். வருடத்திற்கொரு முறை அறுபத்து மூவர். ஆண்டிற்கொரு முறை வைந்த ஏகாதசியின் போது ஸ்ரீனிவாசப் பெருமாள். கிறிஸ்துமஸ் இரவின் போதும் புனித வெள்ளி காலத்தின் போதும் சாந்தோம் சர்ச். ஆனால், நாகேஸ்வரன் எப்பொழுதெல்லாம் அவர் க்ளினிக்கில் இருக்கிறாரோ, அப்பெழுதெல்லாம் அந்தத் தெருவே ரொம்பி வழியும்.
சாதாரண பொது சந்திப்பு, சிறப்பு வழி, ஐநூறு ரூபாய் வழி, பின் வழி, வி.ஐ.பி. வழி என்பதெல்லாம் திருப்பதி பெருமாளுக்கு மட்டும் உரியதல்ல. டாகடர் நாகேஸ்வரனுக்கும் உரியது. சொல்லப் போனால், திருமலை தேவஸ்தானத்திற்கு இவர்தான் வழிகாட்டி.
மருத்துவமனையை நடத்தும் நேரம் போக, தன் நோயாளிகளின் நல்ல / கெட்ட விஷயங்களுக்கும் தவறாமல் ஆஜர் ஆவார். காதுகுத்து, கல்யாணம் என்று பத்திரிகை வைத்தால், அவரின் அக்மார்க் சிரிப்புடன் வருவார். ஓரமாக உட்கார்ந்திருப்பார். சகஜமாகப் பேசுவார். உங்களை இயல்பாக்குவார்.
நான்கைந்து முறை அவரைப் பார்க்க நான் சென்றிருக்கிறேன். கடுமையான ஜுரம், வாந்தி / பேதி, உடல்கட்டிகள் என்று விதவிதமான உடலியல் சிக்கல்களுடன் போயிருக்கிறேன். ஒவ்வொரு முறையும் அதற்குரிய கவனிப்பையும் மருந்தையும் கொடுத்துவிட்டு, அவர் என்னிடம் பல்வேறு முக்கியமான விஷயங்களைப் பற்றி உரையாடியிருக்கிறார்.
‘நீ ஏன் மதராஸ் மொழியில் பேசுகிறாய்? நல்ல தமிழில் உரையாட வருமா?’; என் அம்மாவைப் பார்த்து, “இந்தப் பையனுக்கு சுத்தமா பிராமண பாஷையே வருவதில்லை… இல்லியா?” – வந்த சிக்கல் போயேவிடும். உண்மையான சிக்கல் உரைக்கும்.
“வடக்கிந்தியா வாசம் எப்படி இருக்கிறது? வீட்டை விட்டு தொலைதூராம் இருக்கிறாயே… பிரிவை எவ்வாறு சமாளிக்கிறாய்?”
“ஆளைப் பார்த்தால் மூன்று வேளை சாப்பிடற மாதிரியே தெரியலியே! பூஞ்சான் மாதிரி இருக்கே… புரதச் சத்து சேர்த்துக்கோ; கார்த்தாலே சாப்பிடாம இருக்கியோ?”
அவரைப் போல் உழைக்க வேண்டும். சக உயிர்கள் மீது கரிசனமும் பரிவும் வேண்டும். சரியான கவலைகளை நோக்கி நமக்குத் தெரிந்தவர்களை முன் செலுத்த வேண்டும்.
வாழும் காலத்தில் ஆரவாரமின்றி மருத்துவர் நாகேஸ்வரன் போல் சுற்றத்தினாரின் மகிழ்ச்சிக்காவும் ஆரோக்கியத்துக்காகவும் அர்ப்பணிப்புடன் ஆர்வத்துடன் இயங்க வேண்டும்.
* Accept that some days you’re the pigeon, and some days you’re the statue.
* Solitude is independence
* Call no man happy until he is dead - Oedipus
* It is what you read when you don't have to that determines what you will be when you can't help it. - Oscar Wilde
* The difference between literature and journalism is that journalism is unreadable and literature is not read. - Oscar Wilde