
தீபாவளிக்கு முந்தைய நாள் இரவு சன் டிவியில் ஆளவந்தான் போட்டிருக்கிறார்கள். தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகளை பார்த்து விடலாம் என்று பெரிய மனது செய்து, பதிவானவற்றை மேய்ந்ததில் தெரிய வந்தது.
அரை மணி நேரம்தான் கிடைக்கப்பெற்றேன். அடுத்த முறை இந்தியா போகும்போது மோஸர் பேயரில் வாங்கி வர வேண்டும்.
நந்து அறிமுகமாகும் காட்சியில் கூடவே குரங்கு தோன்றுகிறது. அது கடுவணா, மந்தியா என்றெல்லாம் யோசிக்காதவனாக நந்து வளர்ந்திருக்கிறான்.
‘கடவுள் பாதி மிருகம் பாதி’ பாடலின் ஆரம்பத்தில் வெளியே சுற்றும் குரங்கைத் துரத்தியடித்துவிட்டு ஆடிப் பாடுகிறான். போதையின் கிளர்ச்சியாக வரும் திரை மாற்றங்கள் தமிழ்ப்படங்களில் இது வரை யாருமே செய்யாதவை.
‘ராஜா சின்ன ரோஜா’வாக கார்ட்டூன் போடாமல், கோபத்தில் அடிதடி போடும் பொம்மை மனது. கம்பத்தைத் தேய்த்து காமாக்னியை தணித்துக் கொள்ளும் பாவம். விளையாட்டு மட்டையில் வெறியை உருட்டும் ஷோகேஸ்கள்.
நுழைவுச்சீட்டு வாங்கும் வரிசையில் நிற்கும் குழந்தையின் ஐஸ்க்ரீமை சார்லி சாப்ளின் கபளீகரம் செய்தால் சிரிக்கும் குழந்தையிடம் அதே செய்கையை செய்து, நிழல் நிஜமாவதின் யதார்த்தம்.
‘நீ பேசுவது புரியல’ என்று துணையெழுத்து படிக்கும் நக்கல். மனிதர்களே காட்சிப் பொருளாகவும் காட்சிப் பொருள்களே கனவாகவும் கனவுகளே வக்கிரமாகவும் நிற்பவை.
பச்சை வண்ணக் சொப்பனக் கலவை; சிவப்பு நிற வேகம்; நீல நிற குளிர் தாய்மை.
சாரு நிவேதிதாக்களுக்கு விளங்கவில்லையா? புரியாத மாதிரி வெறுப்பேற்றி காலந்தள்ளுகிறார்களா?
படம் பார்த்த அரை மணி நேரத்திலேயே சுஜாதாவின் கருத்துகள் தோன்றிப்போகிறது:
ஒரே படத்தில் பல விஷயங்களைச் சொல்ல வேண்டும், பல திறமைகளை தொழில்நுட்பங்களை காட்ட வேண்டும் என்கிற உங்கள் பரபரப்பினால் படம் நிச்சயம் பல இடங்களில் பாதிக்கப்படுகிறது. அவை இவை:
- மாமாவின் தொண்டை கான்சரும், அதனால் அவர் கருவி மூலம் பேசுவதும் ஒரு அனாவசியமான கவனக் கலைப்பு.
- கதையில் விஸ்தாரமாகக் காட்டப்பட்டு பயன்படுத்தப்படாத விஷயம் நந்து செத்துப் போய் விட்டான் என்று கடித்துக் குதறி, தலையை வெட்டி, அதிகாரிகளை விஸ்தாரமாக நம்ப வைப்பது விரயமாகி விடுகிறது. அடுத்த சீனிலேயே விஸய், ‘நந்து செத்து போயிருக்க மாட்டான்‘ என்று சொல்லிவிடுகிறான்.
…
சினிமா எடுப்பதின் மற்ற அவஸ்தைகளும் இடைவௌியில் தங்களுக்கு ஏற்பட்ட அதிர்ச்சிகளும் மன உளைச்சல்களும் தாமதங்களும் முடிக்க வேண்டிய கட்டாயங்களும் காரணங்களாக இருக்கலாம்.
இதயம் பேசுகிறது ‘தாயம்’ தொடர்கதையை விட திரைக்கதை-வசனத்தில் கமல் நன்றாகவே செய்திருக்கிறார்.