Thamizmanam Awards 2008 – User Interface & Web Page: Suggested Improvements


தமிழ்மண மின்மடல் அறிவிப்பு:

அன்புள்ள பதிவருக்கு,

தமிழ்மணத்தின் வணக்கங்கள்.

இவ்வாண்டின் மிகச்சிறந்த இடுகைகளைத் தெரிவுசெய்யும் தமிழ்மணம் விருதுகள்-2008 வழியாக உங்களைச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறோம்.

இவ்விருது பற்றிய அறிவிப்புகள், ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்தன. தற்சமயம் இத்தெரிவு பற்றிய முழுமையான விபரங்கள் தமிழ்மணம் வலைப்பதிவில் வெளியிடப்படிருக்கின்றது.

இப்பொழுதிலிருந்து 2009-01-05 11:59 PM வரை, இவ்விருதுத் தெரிவிற்கென அமைக்கப்பட்டிருக்கும் சிறப்புப் பக்கத்தில் இவ்வாண்டில் (2008) எழுதப்பட்டவற்றுள் மிகச்சிறந்ததாக நீங்கள் கருதும் உங்களது இடுகைகளை பரிந்துரைக்கலாம்.

இதற்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்புத் தளத்தில் உள்நுழைவதற்கான தொடுப்பு இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இது உங்களுக்கு மட்டுமேயான தனித் தொடுப்பாகும்.

இத்தெரிவுத் தளத்தில் இவ்வாண்டில் நீங்கள் எழுதிய அனைத்து இடுகைகளும் வரிசைப்படுத்தப்பட்டிருப்பதைக் காணலாம். இதில் பிரிவுக்கு ஒன்றாக உங்களது சிறப்பான இடுகைகளை சமர்ப்பிக்க இயலும்.

இப்பக்கத்திற்கு நியமனங்கள் வரவேற்கப்படும் கால இடைவெளியில் எத்தனை முறை வேண்டுமானாலும் உட்செல்லலாம்.

இச்செயல்பாடுகள் குறித்து உங்களுக்கு எழும் கேள்விகளை/ஐயங்களை தமிழ்மணம் வலைப்பக்கத்தில் பின்னூட்டமாக எழுப்பலாம்.

இவ்விருதுகள் சிறக்க உங்களின் பங்களிப்பை ஆர்வமுடன் எதிர்நோக்குகின்றோம்.

புரிந்துணர்வுடன் தொடரும் உங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி.

வாழ்த்துக்களுடன்
தமிழ்மணம்.நெட் – விருதுக்குழு::2008

குறிப்பு: இம்மின்னஞ்சல் தானியங்கியாக அனுப்பப்படுவதால், இம்முகவரியை எவ்விதத்திலும் உபயோகிக்க இயலாது.

tm-awards-2008-nominations-tamil-bloggers-posts-user-interfaceஇப்போது மேம்படுத்த சில ஆலோசனை + கருத்து:

  1. இன்டெர்னெட் எக்ஸ்ப்ளோரர் 7-இல் சரியாகத் தெரியவில்லை. பக்கவாட்டில் உள்ளது போல் தெரிகிறது.
  2. ‘ஏன் இவ்வாறு தெரிகிறது? என்ன நிவர்த்தி?’ என்பதை எல்லாம் தீர்த்துவைக்க மின்னஞ்சல் முகவரி கொடுத்து உதவலாம். தொடர்பு கொள்ள ட்விட்டர் முதற்கொண்டு பல்வேறு தொழில் நுட்ப கருவிகள் இருக்கும் யுகத்தில் Contact Form, அரட்டை ஐடி என்று எதுவும் இல்லாமல் இருப்பது வசதி அளிக்கவில்லை.
  3. ‘ஐயங்களை தமிழ்மணம் வலைப்பக்கத்தில் பின்னூட்டமாக எழுப்பலாம்’ என்பது சிரமமான வசதி. மறுமொழி ஒழுங்காக சென்றதா? ஸ்பாம், எரிதத் தடுப்பானில் கபளீகரம் ஆனதா? விவகாரமான கேள்வி என்பதால் மட்டுறுத்தப் பட்டு மறுக்கப்பட்டதா? என்று கதங்கதங்கென்று கதி கலங்காவிட்டாலும், ஏதுவாக இல்லை.
  4. ‘தெரிவுத் தளத்தில் இவ்வாண்டில் நீங்கள் எழுதிய அனைத்து இடுகைகளும் வரிசைப்படுத்தப்பட்டிருப்பதைக் காணலாம்.’ என்கிறார்கள்: ஆனால், 2006இலிருந்து நான் எழுதிய அனைத்துப் பதிவுகளும் இடம்பிடித்துள்ளன.
  5. ஒரு வருடத்துக்கு ஏறக்குறைய 400+ பதிவுகள். எல்லாவற்றையும் மூன்று முறை இடம்பிடிக்க வைக்கும் பக்கத்திற்கு பதிலாக மேட்ரிக்ஸ் கொடுத்து சுலபமான இடைமுகம் ஆக்கி இருக்கலாம். பிரிவு-1, பிரிவு-2 என்று எளிதாக செல்லுமாறு வடிவமைத்து, ஸ்க்ரால் செய்து தவறவிடுவதை இந்த மாதிரி புத்திசாலித்தனமான லிஸ்ட் தவிர்க்கும்.
  6. தேர்வு செய்த்தை வாபஸ் வாங்கும் வசதியும், போட்டிக்கான இடுகையை மாற்றி அமைத்துக் கொள்ளும் மறுவாய்ப்பும் தூள்.
  7. எதைத் தேர்ந்தெடுத்திருக்கிறோம் என்பதை மிகவும் சுலபமாக (Can you confirm your selections? என்பது போல்) வைக்கலாம். மீண்டும் சிறப்புத் தளத்தில் உள்நுழைவதற்கான தொடுப்பு  கொண்டு நம்முடைய தேர்வு பக்கத்திற்கு சென்றால் சட்டென்று மூன்று விழைவுகளையும் முகப்பில், பக்கத்தின் மேலே பளிச்சென்று காட்டவேண்டும்.
  8. இதுவரை நாமினேட் ஆனவர்கள் பட்டியல் எங்கே கிடைக்கிறது?
  9. போட்டி வெற்றிகரமாக நடக்க மகிழ்ச்சி கலந்த வாழ்த்துகள்.
  10. நீங்க கலந்து கொண்டாச்சா?

தொடர்புள்ள இடுகை: தமிழ்மணம் விருதுகள் 2008 – இடுகைப் பரிந்துரைகள் துவக்கம்

4 responses to “Thamizmanam Awards 2008 – User Interface & Web Page: Suggested Improvements

  1. அருமையான யோசனை. நானும் இந்த கேள்விகளுக்கு விடை தெரிந்து கொள்ள பிரயத்தனப்பட்டுக் கொண்டிருந்தேன்.

    விடைகள் தெரிய வந்தால் இதே பதிவில் சேர்த்து விடுங்கள். எல்லாருக்கும் உதவியாக இருக்கும்.

  2. —விடைகள் தெரிய வந்தால் இதே பதிவில் சேர்த்து விடுங்கள். —-

    தமிழ்மணமே தனிப் பதிவாக இட்டு வாசகர்களின் வ.கே.கே. பதில் போட்டால் நன்றாக இருக்கும்.

  3. “இவ்வாண்டில் (2008) எழுதப்பட்டவற்றுள் மிகச்சிறந்ததாக நீங்கள் கருதும் உங்களது இடுகைகளை பரிந்துரைக்கலாம்.”

    எங்களது இடுகையை நாங்களே பரிந்துரைப்பதென்பது………. எந்தளவில் சாத்தியம்?

  4. தமிழ்நதி,

    இன்னொருத்தரை பரிந்துரைக்க சொல்வதில் நிறைய பிரச்சினை இருக்கிறது.

    1. எனக்கு கலந்துகொள்வதில் விருப்பம் இல்லாமல் இருக்கும். (தோல்வி பயம்; போட்டியில் நம்பிக்கையின்மை; வாக்கெடுப்பில் குளறுபடிகள் அரங்கேறும் என்பதால் புறக்கணித்தல் என பல காரணங்களில் ஒன்று)

    என்னை இன்னொருத்தர் சமர்ப்பிப்பதை நான் விரும்பமாட்டேன்.

    2. இன்னொருத்தர் தேர்ந்தெடுக்கும் பதிவு மொக்கை பதிவு என்று நான் நினைக்கலாம்.

    தான் எழுதியதில் தனக்குப் பிடித்ததை பலர் முன் வாசிக்கும் புத்தக எழுத்தாளர் போல், நீங்க எழுதியதில் எது பெஸ்ட் என்று நீங்கதான் சொல்லணும்.

    3. பிறர் பரிந்துரைப்பதில், ஒரே பதிவரின் பல்வேறு இடுகைகள் பலமுறை இடம்பெறும் அபாயம் இருக்கிறது.

    4. ‘என்னை நீ பரிந்துரை; நான் உன்னை பரிந்துரைக்கிறேன்!’ என்று கூட்டுக் களவாணி உபத்திரவமும் வந்து சேரும்.

    எனவே, நம்முடைய இடுகையில் அதிக மறுமொழி வந்ததையோ, அல்லது மிக நீண்டதையோ அல்லது பிறிதொரு காரணத்திற்காக மனதினருகில் நிலைத்திருக்கும் பதிவை நாமே முன்மொழிந்து, வழிமொழிவது உகந்தததே?

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.