Tag Archives: Shia

ராஜேஷ் சந்திரா: அமெரிக்காவும் அயல்நாடுகளும் – வளைகுடா நாடுகளுடனான உறவு

முந்தைய இடுகையின் தொடர்ச்சி:

3. லெபனான், பாலஸ்தீனம்: சுதந்திரம், விடுதலை போன்றவை ஹெஸ்பொல்லா, ஹமாஸ் என்று மொழியாக்கப்பட்ட நிலையை அமெரிக்கா தோற்றுவித்திருக்கிறது. நல்லதா/கெட்டதா? அடுத்து எங்கே ராஜா கவிழ்ந்து மக்கள் ராச்சியம் உதிக்கும்? உதிக்க வேண்டுமா?

லெபனான், பாலஸ்தீனத்தில் அமெரிக்கா எப்போதுமே முற்றும் கோணல். இஸ்ரேல் பேச்சையும், அராஃபத்தையும் நம்பி இழந்தவை ஏராளம். ஹமாஸை தீவிரவாத இயக்கமாகவே பார்த்து அதை மேலும் வளர்த்தது இதில் அடங்கும். அராஃபத்தை விட கட்டுக்கோப்பானவர்கள் ஹமாஸ். அரசியலிலும், பாலஸ்தீனிய அகதிகள் முகாம்களில் மக்கள் தேவையைக் கவனிப்பதில் ஹமாஸ் முதலிடம்.

அராஃபத்தும் அவருடைய ஜால்ராக்களும் பணத்தை வாங்கி தங்களை வளப்படுத்திக் கொண்டது மட்டும் மிச்சம் (இதில் மூன்றாம் உலக நாடுகளில் அராஃபத்துக்குக் கிடைத்த கதாநாயக அந்தஸ்து மிகவும் நகை முரணானது).

இஸ்ரேலுக்கும் அராஃபத்தை அமெரிக்கா ஆதரிப்பது வசதியாக இருந்தது. விலைப் போகக் கூடியவர். ஹமாஸ் தலைவர்களை ஒழிப்பது இந்த வகையில் சாத்தியமாக இருந்தது.

ஹமாஸ் தீவிரவாததிற்கு ஒன்றும் குறைந்ததில்லை. ஆனால் அவர்களை ஜனநாயகத்திற்குத் திருப்பாதது இன்றும் அமெரிக்கா மத்தியக் கிழக்கில் கொடுக்கும் விலை.

ஹமாஸ் இலங்கை விடுதலைப் புலிகளைப் போன்றவர்கள்.

ஹெஸ்பொல்லா என்னைப் பொறுத்தவரை எடுப்பார் கைப்பிள்ளை. இன்று இரான், நாளை சிரியா என ஆடை மாற்றிக் கொண்டிருக்கும். ஆனாலும் இஸ்ரேலை லெபனானில் மண் கவ்வ வைத்ததில் இவர்கள் பங்கு அதிகம்.

மேற்சொன்ன இரண்டும் அமெரிக்காவைப் பற்றி நல்லதாக நினைக்கப் போவதில்லை. அதற்கு சரித்திரமே 1900-க்குப் பிறகு திருப்பி எழுதினால்தான் உண்டு. மாற்றம் கொண்டு வரவேண்டியவர்கள் மிதவாத மக்கள். சோகமான விஷயம் என்னவெனில் பொது மக்களும் அரசியல் நிலையாமையில் மிகுந்த கசப்பில் இருக்கிறார்கள்.

மத்தியக் கிழக்கு நாடுகளைப் பொறுத்த வரை மக்களாட்சி என்பது அங்கே எண்ணை கிடைக்கும் வரை வராது (எண்ணெய் தீர்ந்தவுடன் அங்கே ஆட்சி செய்ய ஒன்றும் இருக்காது). Pseudo மக்களாட்சி நடக்க வாய்ப்புண்டு. ஒமான் போன்ற நாடுகள் சும்மா ஒப்புக்கு சப்பாணியாக பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கிறார்கள். அதிகாரம் முழுக்க ராஜா கையில். ஆனாலும் அது ஒரு விதத்தில் நல்லதுதான். இதன் தொடர்ச்சி மேலும் மக்களுக்கு அதிகாரங்களைக் கொடுக்கும்.

4. இஸ்ரேல்: யூதர்களின் தேர்தல் நிதி காணிக்கை; ஊடக ஆதிக்கம்; ஆளுமை நிறைந்த பதவிகள் — இவற்றை தாண்டி மஹ்மூத் அகமதிநிஜாதுடன் அமெரிக்க அதிபர் உரையாடுவதால் மட்டும் இங்கே என்ன மாற்றம் விளைந்துவிடும்? புஷ், க்ளின்டன்கள் எவ்வாறு இந்த பிரச்சினை நாட்டை கையாண்டார்கள்?

1979-ல் ஷா வெளியேறியதிலிருந்து அமெரிக்கா இரானை ஜென்ம விரோதியாகத்தான் பார்க்கிறது. இதில் இஸ்ரேலின் பங்கு தேவைப்படவில்லை. அகமதிநிஜாத் தன்னை ஒரு தைரியமான தலைவராகக் காட்டிக் கொள்ள தடாலடி வேலைகளைச் செய்து கொண்டிருக்கிறார்.

  • யூதப் படுகொலைகளை ஆராயும் மாநாடு,
  • இஸ்ரேலை ஐரோப்பாவிற்கு விரட்டுவது

என கானல் நீர் கனவில் அரபு மக்களைத் திருப்தி படுத்தும் வரை இவரோடு அமெரிக்கா பேச்சு வார்த்தை நடத்தப் போவதில்லை.

இவரின் ஒரு நேர்காணலை கொஞ்ச நாட்கள் முன் தொலைக் காட்சியில் காண நேர்ந்தது. அபத்தமான பதில்கள், முன்னுக்குப் பின் முரணாக பேசுவது என்று அரசியல் கோமாளியாகக் காட்சி அளித்தார்.

ஒரு வேடிக்கை என்னவென்றால் இராக்-இரான் யுத்தத்தில் அமெரிக்காவின் ஆயுதங்கள் இஸ்ரேல் மூலமாக இரானுக்கு அனுப்பப்பட்டது. எல்லாம் சகஜம்.

மற்ற நாடுகளை தன் வான் படையைக் கொண்டு மிரட்டும் அமெரிக்கா இதுவரை இரானுடன் மோதுவதில் பெரிதும் தயக்கம் காட்டுகிறது.

புஷ், கிளிண்டன்களின் இரான் கொள்கை ரேகனின் அடியொற்றி எடுக்கப்பட்டவை. அதாவது சும்மா சலம்புவது, பின் இரானிடமிருந்து எண்ணையை வாங்கிக் கொள்வது.

5. கல்வியை முன்னிறுத்தும் கத்தார், பஹ்ரைன் போன்ற மேற்கத்திய குடாநாடுகள்; நட்பு கொஞ்சமும் எண்ணெய் நிறையவும் கொண்ட சவூதி அரேபியா, குவைத் போன்றவர்கள்; முதலாளித்துவத்தை முன்னிறுத்தி வியாபாரத்தை கவனிக்கும் அமீரகம் – அடுத்த அமெரிக்கா இங்கே ஒளிந்திருக்கிறதா? அல்லது USSR பதுங்கி இருக்கிறதா? இரண்டும் இல்லாமல் ஐரோப்பிய ஒன்றியம் போன்ற ஆனால் பன்மடங்கு பலம் வாய்ந்த புலி நித்திரை கலைக்குமா?

கல்வியை முன்னிறுத்தினாலும் மக்களின் சமூக வாழ்க்கை முன்னேறியுள்ளதா என்பது கேள்விக்குறியே. உதாரணமாக எனக்குத் தெரிந்தவரை, பெண்கள் அங்கே தேர்தலில் போட்டியிட முடியாத சூழல் இருக்கிறது. நகரங்கள் முன்னேறிய முகம் காட்டினாலும் சிறு கிராமங்களை இந்த வளர்ச்சிகள் அடைகின்றதா என்பதே சந்தேகம்.

நீங்கள் குறிப்பிட்ட நாடுகள் ஏற்கெனவே OPEC மூலமாக இனந்திருக்கின்றன. ஆனால் ஒன்றியமாக இணைய அனவரையும் கவர்ந்த ஒரு தலைவர் வேண்டும் (நாசர் போல). ஆனால் இந்த குறு மன்னர்கள் அதை யோசிக்கவில்லை. தேவையும் இல்லை என நினக்கிறார்கள். எண்ணை, மதம் இவர்களை இணைத்தாலும் மத உட்பிரிவுகளை (ஷியா, சுன்னி மற்றும் வஹாபி) இவர்களால் வெல்ல முடியவில்லை (வெல்ல வேண்டுமா என்பது வேறு). அது நடக்கும் வரை ஒன்றினைந்த மாகாணங்களாக ஆக இயலாது.

அமெரிக்கா என்று எதைக் குறிப்பிடுகிறீர்கள்?

பொருளாதாரம்? நிச்சயமாக இல்லை. முன்பே சொன்னது போல் எண்ணை இல்லையெனில் பொருளாதாரம் இல்லை.

படைபலம்? இல்லை. இயற்கை வளம்? கேள்விக் குறிதான்.

அரசியல் பலம்? குரான் வழி ஆட்சி நடப்பதால் இவைகள் இணைய வாய்ப்பு உண்டு. ஆனால் அரசியல் முதிர்ச்சி அடைய மத வழி அரசியல் மட்டும் போதாது.

பி.கு.: ஒரு கேள்வி தோன்றியது…ஏன் மேற்கத்திய ஊடகங்கள் மத்தியக் கிழக்கு நாடுகளை இன்னும் அலாவிதீன், அலிபாபா காலத்திலேயே பார்க்கின்றன என்று…பின் யோசித்ததில் அந்தக் கோணத்தில் படிக்க வேண்டியது நிறைய, இந்த வலைப் பக்கத்திற்கு பொருந்தாது மற்றும் அது சக நண்பர்களோடு விவாதிக்கப் பட வேண்டிய ஒன்று.

ராஜேஷ் சந்திரா

அமெரிக்க தேர்தல்: வெளியுறவுக் கொள்கை

ராஜேஷ் சந்திரா:

1. இராக்: ஒபாமா வந்தாலும் உடனடியாக வாபஸ் ஆரம்பித்துவிடுமா? அங்கு நிலை எப்படி இருக்கிறது? குர்துக்கள் தனி நாடாக்கிக் கொள்வார்களா? மெகயின் அதிபரானால் ஒபாமாவின் நிலையில் இருந்து எவ்வாறு சூழல் மாறுபடும்? ஆருடம் ப்ளீஸ்!

1a) ஒபமா வந்தால் : வாபஸ் ஆரம்பிக்காது. பிரச்சாரத்தில் இதுவரை ஒபாமா தெளிவாகத் தன் நிலையை விளக்கவில்லை. விரைவில் வெளியேறுவோம் என முழங்கி தென் மாகாணங்களை அவர் இழக்கத் தயாராக இல்லை (முக்கியமாக இராணுவத் தலைமையை).

1983-ல் லெபனானை விட்டு வெளியெறுவதற்கு ஒரு குண்டு வெடிப்பு போதுமானதாக இருந்தது. இராக்கில் அது இயலாது. காரணம்: எண்ணை வளம். அருகாமையில் இரான். அமெரிக்கப் ப்டைகள் வெளியேறினால் நிச்சயம் அந்தப் பிராந்தியம் 1800-களுக்குச் செல்லும் வாய்ப்புகள் நிறைய. பிரிட்டன் இரண்டாம் உலகப் போருக்குப் பின் செய்தத் தவறை அமெரிக்கா செய்யாது. இப்பொதைக்கு அமெரிக்கா அங்கே ஆப்பசைத்தக் குரங்கு.

ஒபாமா என்ன செய்ய வேண்டும்: செனட்டில் இருப்பது வேறு, ஜனாதிபதியாக இருப்பது வேறு என்று ஒபாமாவிற்கு முதல் நாளே தெரிந்து விடும் (இதுவரை தெரியாமல் இருந்தால்). எனவே வறட்டு ‘ராம்போ’ வசனங்களை எல்லாம் மூட்டைக் கட்டி வைத்து விட்டு இராக்கிய மித வாதிகளைக் கண்டறிய வேண்டும். அவர்களை இராக் மக்களிடையே கொண்டு செல்ல வேண்டும்.

இராக் நாடு மதப்பிரிவுகளில் மிகுந்த அக்கறை காட்டும் நாடு. இதனால் அனைத்துப் பிரிவினரயும் உள்ளடக்கிய ஒரு குழு பதவியில் இல்லாமல் மக்களை அணுக வேண்டும். தேவைப்பட்டால், முக்தாதா அல் சதர் போன்ற உக்கிரமான மதத் தலைவர்களையும் அந்தக் குழுவில் இடம் பெறச் செய்யவேண்டும். வரும் வன்முறைகளுக்கு அந்த மதத் தலைவர்கள் பொறுப்பு என சுட்ட வேண்டும். இதையும் மீறி அந்த மதத் தலைவர்களின் ஆட்கள் வன்முறையில் இறங்கினால் மக்களே புறக்கணிப்பார்கள். இவை அனைத்தும் பின்புலத்தில் நடக்க வேண்டும்.

தற்போதைய அரசாங்கம் சதாமிற்கு ஒரு மாற்றுதானே தவிர மக்கள் இன்னும் அதை ‘வரதராஜ பெருமாள்’ அரசாகத்தான் பார்க்கிறார்கள்.

அமெரிக்க அரசாங்கம் (அரசியல் செயல்களில்) முண்ணனியில் இருப்பதாகக் காண்பித்துக் கொண்டால் பிரிவினை/தீவிர வாதிகள் நிச்சயம் விரும்பமாட்டார்கள். இதன் பின் அமெரிக்கத் துருப்புகள் விலகல் ஆரம்பித்தால் நல்லது. நிச்சயம் இன்னும் இரண்டு வருடங்களாவது ஆகும்.

1b) அங்குள்ள நிலை: சதாம் இருந்த வரை செய்திகள் கசிந்தன. இப்போதைய அரசில் (?!) வெளி வருகின்றன. மற்றபடி ஆட்சி முறை அப்ப்டியே தான் இருக்கிறது. ஷியா, சுன்னி பிரிவினரிடயே ‘அமெரிக்கா எப்போ ஒதுங்குவான், நம்ம அடித்துக்கொண்டு சாகலாம்’ என்று காத்திருக்கிறார்கள். ஆட்சியாளர்கள் ‘இதெல்லாம் இருக்கட்டும், வடக்கே குர்துக்களின் தலையை எப்படி எடுக்கலாம்’ என்று யோசித்துக் கொண்டிருக்கிறார்கள்.

மற்றபடி, பணத்துக்கு விலை போதல், இரு குழுக்களிடையே மோதல் உண்டாக்கி குளிர் காய்தல், வருங்காலத்தைப் பற்றி யோசிக்காமல் முட்டாள்களாகவே இருத்தல் என்ற typical அராபிய ஆட்சி முறை ஜோராக நடக்கிறது.

1c) குர்துக்கள் தனிநாடு பெறுவது இராக்கை விட துருக்கியின் கைகளில் தான் இருக்கிறது. துருக்கி இராணுவம் பலமானது (மற்ற அரபு நாடுகளோடு ஒப்பிடும் போது). இவர்களை மீறி வடக்கே இராக்கில் மட்டும் குர்துக்கள் தனி நாடு பெற முடியாது. துருக்கி நேட்டோவில் இருப்பதால் மேற்கத்திய வல்லரசுகள் சும்மா முனகிவிட்டு பேசாமல் போய்விடும்.

காஷ்மீரைப் போன்றது இந்தப் பிரச்சினை.

1d) மெக்கெய்ன் அதிபரானால்: ஆரம்பத்தில் மெக்கய்னிடம் இருந்த நம்பிக்கை போகப் போக நீர்த்து விட்டது. இராக் பிரச்சினக்கு, இவர் ஆட்சிக்கு வருவதும், டிக் செய்னி வருவதும் ஒன்றுதான். இயல்பாகவே மெக்கெய்ன் இராணுவ வீரர். இவரால் விட்டுக் கொடுத்து தொலை நோக்குப் பார்வையோடு இராக் மிதவாதத் தலைவர்களை அணுக முடியாது,

2. Africom: ஆப்பிரிக்காவில் மூக்கை நுழைப்பது ஜெர்மனி/ஜப்பானில் இருக்கும் நிரந்தர அமெரிக்க படை போல் சாதுவாக சமாதானமாக அமையுமா? அல்லது சவூதியில் புகுந்த அமீனாவாக இன்னும் சில குவைத்களையும் இராக்குகளையும் குட்டி போட்டு குழப்பத்திற்கு இட்டு செல்லுமா?

மத்தியக் கிழக்கு நாடுகளில் பட்ட சூட்டில் ஆப்பிர்க்காவில் அமெரிக்கா சர்வ ஜாக்கிரதையாகத்தான் இருப்பதாகக் கருதுகிறேன் (இதைப் பற்றி சொற்பமாகப் படித்த வரையில்). சொமாலியா மற்றும் சூடான் தவிர்த்து மிகப் பெரியப் பிரச்சினை இதுவரை இல்லை. எகிப்து அமெரிக்காவின் செல்லப் பிள்ளை.

லிபியா, சதாமுக்கு நடந்த மண்டகப்படியில் அரண்டுப் போய் கிடக்கிறது. மற்ற ஆப்பிரிக்க மக்கள் தங்களின் அன்றாடத் தேவைகளிலும் தங்கள் இனத்திலேயே அடைந்துக் கிடப்பதாலும், அமெரிக்காவைப் பற்றி கவலைக் கொள்ளவில்லை.

3. லெபனான், பாலஸ்தீனம்: சுதந்திரம், விடுதலை போன்றவை ஹெஸ்பொல்லா, ஹமாஸ் என்று மொழியாக்கப்பட்ட நிலையை அமெரிக்கா தோற்றுவித்திருக்கிறது. நல்லதா/கெட்டதா? அடுத்து எங்கே ராஜா கவிழ்ந்து மக்கள் ராச்சியம் உதிக்கும்? உதிக்க வேண்டுமா?