Tag Archives: Religion

அவதூறு வழக்கும் அவதூதர்களும்

மஹராஜ் – அசப்பில் மோடியைச் சொல்கிறார்களோ என்னும் சம்சயம்.

எல்லோருக்கும் குழந்தையைத் தருகிறேன் என்கிறார்.
தான் மனிதனே அல்ல என நம்புகிறார். தெய்வாம்சம் ஆகவே நடந்து கொள்கிறார்.
அவரின் சீடர்கள் மகராஜை தெய்வமாகவேப் பார்க்கிறார்கள்.

நல்ல வேளை. கவனமாக எந்த நேரடி ஒப்பிடலோ, மறைமுக வசனமோ, குறிப்பால் உணர்த்தும் காட்சியோ பா.ஜ.க.வையோ பிரதம மந்திரி நரேந்திர மோடியையோச் சொல்லவில்லை.

இரு நூறாண்டுகள் முன்பு நடந்த அசல் சம்பவங்கள். நிஜ நாயகரின் பெயர் கர்சன் தாஸ் முல்ஜி – தயானந்த சரஸ்வதி போல்… ராஜா ராம் கோகன் ராய் போல்…

சமூக சீர்திருத்தவாதிகளைக் குறித்து பள்ளி புத்தகங்களில் படித்தவுடன், இவர்களை ஏன் படமாக எடுக்காமல், தூர்தர்ஷனில் நாடகமாக மட்டுமே போடுகிறார்கள் என்னும் சந்தேகம் கலந்த சோகம் எழுந்ததுண்டு. அப்பொழுது ஆமிர் கான் நடிக்க வந்த காலம்.

இப்பொழுது, ஆமிர் கான் மகனின் முதல் படம்.
முந்தையத் தலைமுறை நாயகர்கள் எல்லாம் மசாலாப் படங்களில் அறிமுகம் ஆனவர்கள்.

ஃபூல் அவுர் காண்டே – அஜய் தேவ்கன்
மைனே பியார் கியா – சல்மான் கான்
சான்வரியா – ரன்பீர் கபூர்
கஹோ நா பியார் ஹை – ஹ்ரிதிக் ரோஷன்
பான்ட் பாஜா பாராத் – ரன்வீர் சிங்
பாபி – ரிஷி கபூர்
ஹீரோ – ஜாக்கி ஷ்ராஃப்
பர்சாத் – பாபி தியோல்
கயாமத் ஸே கயாமத் தக் – ஆமிர் கான்
தீவானா – ஷாரூக் கான்

எல்லோரும் ஆடலும், பாடலும், காதலும், அடிதடியும் கொண்டு வெள்ளித்திரைக்குக் கொணரப்பட்டவர்கள். ஆனால், ஜுனைத் கான் வேறு மாதிரி களத்தில் இறங்கி இருக்கிறார்.

ஆஸ்காருக்கு பாடுபட்ட ‘டைட்டானிக்’ நாயகர் லியொனார்டோ டிகப்ரியோ வரலாற்று நாயகர்களாக பல படங்களில் நடித்தவர். அவர்களின் சரித்திரங்களையும் சாகசங்களையும் தகிடுதத்தங்களையும் நடித்து அகாதெமி விருது பெற்றவர்.

ஆமிர் பையனுக்கும் அதே ஆசை. ஹாலிவு படங்களில் கொஞ்சம் நியாயம் இருக்கும். வில்லனுடைய பார்வையைச் சொல்வார்கள். சமய, சந்தர்ப்பங்களை விளக்குவார்கள். சூழ்நிலைக் கைதியாவதை உணர்த்துவார்கள்.

மஹாராஜ் – இங்கெல்லாம் சறுக்குகிறது. ஹவேலி ஏன் உருவானது? எவ்வாறு அதன் உறுப்பினர்களைக் கட்டுக்குள் வைத்திருந்தது? பெரிய சமாஜ், சங்கர மடம் போன்றவற்றிற்கு ஏன் அவ்வளவு செல்வாக்கு கிடைத்தது? எப்படி வியாபாரத்தை உள்குழுவிற்குள் வைத்து, செல்வத்தைப் பெருக்கினார்கள்? – இது போன்ற சம்பவங்களைக் கொணர்ந்திருக்க வேண்டும். மகராஜின் இன்னொரு முகத்தைக் காண்பித்திருக்க வேண்டும்.

ஒரு வில்லன்; ஒரு கெட்ட விஷயம்; ஒரு நல்லவன் – எவ்வாறு தன் நாவன்மையாலும் எழுத்துத் திறமையாலும் அதிகாரத்தை வீழ்த்துகிறான் என்பதற்கு ஊறுகாயாக இரண்டு காதலிகளை வைத்து கச்சிதமாகக் கதையை முடித்து இருக்கிறார்கள். சுவாரசியமான, பார்க்க வேண்டிய படம்.

ஜெய்தீப் அலாவத் – வாழ்ந்திருக்கிறார். அடுத்த படத்தில் நவாசுதின் சித்திக்கி மாதிரி ரஜினி கையால் அடி வாங்குமளவு அசத்தியிருக்கிறார்.

ஆமிரும் புத்திரரும் அடுத்து எந்த மதகுருவை கையில் எடுப்பார் என நினைக்கிறீர்கள்?

சிறுகதை – பரிந்துரை

நல்ல மலையாளப் படம் போல் தத்ரூபமான கதை.
வெண்முரசு எழுதியதின் மிகுதியில் உருவான சேடி.
தத்துவமும் குட்டிக்கதையும் பின்னிப் பிணைந்திருக்கும் பாதை.

கலைமகள், அமுதசுரபி, மஞ்சரி, ஞானபூமி போன்ற இதழ்களில் படித்திருக்க வேண்டியது;
பார்த்தனும் முராரியும் உரையாடுவது;
சாந்தமாக நிச்சிந்தையாக நேரம் எடுத்துக் கொண்டு நீண்ட காலம் நெஞ்சில் நிலைத்திருப்பது.

இந்த 310ஆம் சொல்வனம் இதழில் ராமராஜன் மாணிக்கவேல் எழுதிய “கொடை” குறிப்பிடத்தக்க ஆக்கம்.
வாசியுங்கள்

முடிபொருட்டொடர்நிலை

ராணி: ட்விட்டர்ல் ஒண்ணு பார்த்தேன்.

ராஜா: தப்பு… தப்பு! முதல்ல அது டிவிட்டர் கிடையாது ஆக்கும் — எக்ஸ் என்பார் எலான். இரண்டாவது என்னிக்காவது ட்விட்டரில் ஒண்ணேயொண்னை மட்டும் பார்க்க முடியுமா என்ன!?

ராணி: மிடில… நான் படிச்சது, ‘மனித இனம் ஏன் மற்ற மிருகங்களை முன்னேற்றவில்லை?’ – என்னும் வினா.

ராஜா: ஆட்டுக்குட்டியை இன்னும் சதைப் பற்றொடு வளர்ப்பது எப்படி? பூனையும் நாயும் பிறந்தவுடனேயே சொன்னபடி கேட்டு நடக்கும் செல்லப்பிராணி ஆக ஆக்குவதெப்படி? கசாப்புக் கடைக்கு மிச்சம் மீதி இல்லாமல் முழு ஊனையும் தருவதெப்படி… இப்படியா?

ராணி: முருகா! அதைவிட மனுஷன் மனசு வச்சா எந்த உயிரினத்தையும் புத்திசாலியாக மாற்றி இருக்கலாம்.

ராஜா: கணினிக்கு அறிவுத் திறன் ஊட்டுவதற்கு பதிலாக விலங்குகளுக்கு மதி நுட்பம் புகுத்தியிருக்கலாம் என்கிறாய். இத்தனை ஆண்டுகளாக நாகரிகமாக வாழும் நாமே இன்னும் மந்தையாகத்தான் செயல்படுகிறோம். அதெல்லாம் நடக்கிற காரியமா?

ராணி: Payton E. Pearson III எழுதிய “Artificially Selecting for Intelligence in Dogs to Produce Human-level IQ Within 100 Generations” தேடிப் பார் என்பது ட்விட். அதை வச்சு, ‘ஏன் எவளும் அறிபுனை கதை ஒன்று எழுதவில்லை?’ என்பது சங்கிலிக் கேள்வி.

ராஜா: நல்ல கேள்வி. இதைக் கேட்டவுடன், எனக்குத் தோணுது… ‘கும்பகர்ணன் என்பது AGI குறியீடு. தூங்கிட்டிருக்கிற AI சிங்கம். சாமா-னு செல்லமாக அழைக்கப்படுகிற சாம் ஆல்ட்மேன் தான் இராவணன்!’ – இப்படி ஒரு அறிவியல் புனைவை ராமகாவியமாக எழுதப் போறேன்.

ராணி: ராவணன் திராவிடர் ஆச்சே?

ராஜா: ராவணன் மணி ரத்தினம் எடுத்த படம்.

ராணி: உசிரே போகுதே!

ராஜா: அப்ப மணியும் இல்லுமினாட்டிங்கிற!!

இடஞ்செல்லுகையும் வலம்படுதலும்

நம்ம சாமிகளில் எவரெவர் எந்தக் கையை பெரிதும் பயன்படுத்துகிறார்?

ராஜா ரவி வர்மா போன்ற பெரும்பாலான ஓவியர்கள் வலக்கை பழக்கம் கொண்டவர்களாக இருக்கலாம். ஹிந்து மதத்திலும் சோற்றாங்கை, பீச்சாங்கை என்று வகைப்படுத்தியதால் அனைத்து தெய்வங்களின் ஆயுதங்களும் கருவிகளும் வலப்பக்கத்துக் கைக்கே தரப்படுகிறது. ஒரட்டாங்கையில் கபாலமும் கமண்டலமும் கிடைக்கிறது.

முதலில் எளிதாகக் கண்டுபிடிக்கக் கூடிய இராமர். வலக்கையை ஆதிக்கமாக கொண்டவர். அதனால்தான் இடது தோளின் மேல் அம்பை வைத்திருக்கிறார். அம்பறாத்துணியை வலது தோளின் மீது வலது கைக்கு வாகாக வைத்திருக்கிறார்.

அவரின் எல்லாமுமான அனுமார் – வலதுகையில் கதை. இடது கையில் சஞ்சீவி மலையைத் தூக்கி இருக்கிறார். குரங்கிற்கு இடது, வலது என்றெல்லாம் பாகுபாடு உண்டா! இரண்டும் சரிசமமாக பலம் வாய்ந்தவை. எது இவருடைய ஆதிக்க கையாக இருக்கும்?

ராமரைப் போலவே அய்யப்பன். அதே போல் வில்லையும் அமபுகளையும் வைத்திருக்கிறார்.

ராமர் என்றால் கிருஷ்ணரைச் சொல்ல வேண்டும். சக்கரம் இவரையும் வலதுகையர் ஆக்குகிறது. புல்லாங்குழலை அடுப்பூத மட்டுமே நேரடியாக ஃபிடில் போல் ஊதியதால், வேணுநாதனின் பிடி பிடிபடவில்லை.

அடுத்ததாக சரஸ்வதி. கையில் இருக்கும் வீணையோ, கிடாரோ, தம்பூராவோ – வலதுகைக்காரி ஆக்குகிறது.

முருகரும் கோவணாண்டியாக இருந்தாலும் வலது கையிலேயே வேலைத் தாங்கி இருக்கிறார்.

எல்லாவற்றுக்கும் துவக்கத்தில் இவரைச் சொல்லி இருக்க வேண்டும். ஏழாவதாக விநாயகர். வியாசர் சொல்லச் சொல்ல வலது கையால் பாரதத்தை தந்தத்தை உடைத்து எழுதியவர். மோதகம் சாப்பிடுவதற்கு தனியாகத் தும்பிக்கையை கொண்டவர்.

இரண்டு கையும் உபயோகிப்பவர் என்றால் லஷ்மியைச் சொல்லலாம். இரு கையிலும் தாமரை வைத்திருக்கிறார். தங்கப் பொக்கிஷ குடத்தை இடது கையில் வைத்திருக்கிறார். வலக்கை பழக்கம் உள்ளவர்கள் இடக்கையிலேயே பளுவைத் தூக்குவார்கள் என்பதால் இவ்வாறு இருக்கும்.

இவர்களைப் போலவே சிவனும் திரிசூலத்தை வலது கையிலும் தாங்குகிறார். இடக்கையிலும் சில சமயம் கொண்டிருக்கிறார். கால் மாறி ஆடியவர் ஆயிற்றே!

பத்தாவதாக பத்ரகாளி, துர்காதேவி – இவரும் ambidextrous.

எந்தக் கையாக இருந்தால் கை இருந்தால் சரி என்றால் சைவம் எனலாம்.
வலது கை யே சிறந்தது என்றால் அனேகமாக வைணவம் எனலாமா?

சிறார் கதைகளும் ஆன்மிகமும் சற்றே ஜோதிடமும் – ஆர். பொன்னம்மாள்

ஆசானின் தளத்தில் அம்மாவைப் பற்றி பார்த்தபொழுதில் பெரிதும் மகிழ்ச்சியாக இருந்தது.

அதிலும் எங்கோ சிம்மாசனத்தில் காந்தியைப் போல், ராமானுஜரைப் போல், ரஜினியைப் போல் அமர்த்தி வைத்து பின்பற்றுவோனை “நண்பர்” என்று வேறு சொல்லியிருந்தது ஊக்கமும் பெருமிதமும் கொள்ள வைத்தது.

ஜெயமோகன் எப்பொழுதுமே செயல்வேகமும் தண்மையான பரிந்துணர்வும் கொண்டவர். அம்மாவும் ஒரு வகையில் அவ்வாறே.
ஜெ.மோ. எப்பொழுது கடிந்து கொள்வார், எவ்வாறு அறச்சீற்றம் என்னை இடித்துரைக்கும் என்று புயல் கடந்த பிறகே உணர முடியும். அம்மாவும் ஒரு வகையில் அவ்வாறே.
ஜெயம் என்றால் எழுத்துப் பிசாசு, கதைசொல்லி. அம்மாவும் ஒரு வகையில் அவ்வாறே.

ஆர்.பொன்னம்மாள் – Tamil Wiki

விக்கி பக்கத்தைக் குறித்து அம்மாவிடம் காண்பித்தேன்; சொன்னேன்.

“நீயும் விக்கிப்பீடியா பக்கம் செய்யறேன்னு சொன்னே… என்னிக்காவது நேரம் கிடைக்கும்போது, ரிடையர் ஆனபிறகு செஞ்சுடுவே! நம்பிக்கை இருக்கு… ஒண்ணும் அவசரமில்ல!” என்றார்.

வாழும் போது கிடைக்கும் மரியாதை அட்சர லட்சம்!

ஆர்.பொன்னம்மாள் | எழுத்தாளர் ஜெயமோகன் (jeyamohan.in)

மிகவானுள் எரி தோன்றினும் குளமீனொடுந் தாட்புகையினும்

ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கிடைத்த உரையாடல்:

Meet C/2022 E3 (ZTF) (her friends call her the green comet for short)

“பீஷ்ம ஏகாதசிக்காக புதன்கிழமையன்று வானில் பெருமாள் தோன்றினார். பார்த்தாயா!?”

“தவறவிட்டுட்டேனே… எப்பொழுது, எப்படி வந்தார்?”

“அது வால் நட்சத்திரம் எனலாம்… பச்சை நிறத்தில் இருக்கிறது. இந்த வால் நட்சத்திரத்தின் மையப்பகுதி இரு கார்பன் அணுக்கள் சேர்ந்த டைகார்பன் (C2) என்ற மூலக்கூறுகளால் நிறைந்துள்ளது. சூரிய ஒளியோடு இந்த டைகார்பன் அணுக்கள்  வினைபுரிவதால் இந்தப் பச்சை நிற ஒளி வருகிறது.”

அருஞ்சொல் தளத்தில் ஜோசப் பிரபாகர் கட்டுரை எழுதுவது போல் பாடம் எடுக்கிறீர்கள். ஆன்மீகமாகச் சொல்லுங்களேன்…”

“மகாவிஷ்ணு மரகத மேனியனாக பச்சை நிறத்தில் பீஷ்மருக்காக விஸ்வரூப தரிசனம் தருகிறார். எனவே இந்த காட்சியை ‘பச்சை வண்ண பெருமாள்’ எனலாம்!”

“ஏதோ ஏகாதசினு சொன்னீங்களே?”

“பீமன் கூட பட்டினி இருப்பதால் நேற்றைக்கு பீம ஏகாதசி என்று பெயர்.”

“எனக்குத்தான் காது ஒழுங்காக் கேக்கலியா! பீஷ்ம ஏகாதசினு சொல்லிட்டு இப்பொழுது சாப்பாட்டு ராமனை உபவாசம் இருப்பதாக சொல்கிறீரே?”

“பீஷ்மர் கதை உங்களுக்குத்தான் தெரியுமே! அவர் அஷ்ட வசுக்களில் ஒருவர். வசு எனும் சொல்லுக்கு வெளி (Space) என்று பொருள். இவர்கள் இயற்கையையும் இயற்கைக் கோட்பாடுகளையும் உருவகிப்பவர்கள்.”

“அதெல்லாம் சரி… பீஷ்மருக்கும் வால் நட்சத்திரத்திற்கும் என்ன சம்பந்தம்?”

“பிரபாசன் எனும் வசு வைகறையை குறிப்பவர். அவருடைய மனைவியின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக, வசிட்டரின் காமதேனு பசுவை கவர்ந்து செல்கையில், வசிட்டரால் சாபம் பெற்று மண்ணுலகில், சாந்தனு – கங்கை தம்பதியர்க்கு பீஷ்மராக பிறந்தார்.”

“பீஷ்ம ஏகாதசி அன்னிக்குத்தான் பீஷ்மர் பரமபதம் அடைந்தார். அன்றைக்கு பச்சை வால் நட்சத்திரம் வருது. சரியா?”

“இல்லை. பீஷ்மர் அஷ்டமியில் மரணமடைந்தார். அதாவது ரத சப்தமி அன்று பரந்தாமத்திற்கு செல்ல நிச்சயித்தார்.”

“அப்படியானால், பச்சை தூமகேது… ஏகாதசி பெருமாள்… பீஷ்ம ஏகாதசி… எல்லாம் எதேச்சைதானே?”

“கோதர்ம: சர்வதர்மாணாம் பவத: பரமோ மத: !

கிம் ஜபன் முச்யதே ஜந்துர் ஜன்மசம்சார பத்தனாத் !

என்ற யுதிஷ்டிரன் வினவியபோது, “அனைத்து தர்மங்களிலும் சிறந்த தர்மம் எது என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?” என்று கேட்டபோது, “நாராயண நாம ஸ்மரணையே சிறந்த தர்மம்” என்று பதிலளித்தவர். அர்ஜுனனின் ரத சாரதியாக குதிரைகளை வழி நடத்தும் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா என் இதயத்தில் எப்போதும் நிலைக்கட்டும் என்று தியானம் செய்கிறார் பீஷ்மர்”

“வானியல் அறிவு அதிகம் வளராத காலகட்டத்தில் இருந்த மனிதர்கள் அவ்வப்போது வானத்தில் திடீரென்று ஒரு பொருள் நட்சத்திரம் போன்றே ஒளிர்ந்துகொண்டே வால் போன்ற தோற்றத்தில் இருந்ததால் இதற்கு வால் நட்சத்திரம் என்ற பெயரிட்டு அழைத்தார்கள். ஆனால், இது உண்மையில் நட்சத்திரம் அல்ல. கோளும் அல்ல. அதற்கு வால் எப்போதும் இருப்பதில்லை. – என்பார் ஜோசப் பிரபாகர்.”

“சரியே… அதனால்தான் விஷ்ணு சஹஸ்ரநாமம் பூராவும் சொல்லி முடித்தபின், ‘ரதாங்கபாணி ரக்ஷோப்ய: சர்வப்ரஹரணாயுத’ என்ற நாமத்தோடு முடிக்கிறார். அதற்கு முன்பே ‘சக்ரீ’ என்கிறார். அந்த சக்கரத்தின் கனற்கொடியை C/2022 E3 (ZTF) எனலாம்.”

“அந்த மாதிரி ஜீரோ டிகிரி ஃபாரென்ஹீட்டில் தேவுடா காத்தால் பச்சை வண்ணப் பெருமாள் தெரிவார் என்கிறீர்கள்?”

“அதே… அதே… சபாபதே!”

பாஸ்டன் பெருமாள் – பார்த்தசாரதி கோலம்

இந்தியக் கடவுள்களைக் கனவு கண்ட இத்தாலிய பல்துறையறிஞர்

நம்பியின் கட்டுரைகள் பல சமயம் நுழைவதற்கு தடுமாற வைக்கும். அதற்காக முன் பின்னாக வாசிப்பேன். கடைசி பத்தி, நடுவில் ஒரு பத்தி. இடையில் வரும் இன்னொரு அத்தியாயத்தின் முதல் பத்தி. அதன் பின் மீண்டும் இரண்டாம் பக்கத்தில் விட்ட இடத்தில் தொடர்வேன்.

ரொபெர்ட்டோ கலாஸ்ஸோ குறித்த அவரின் கட்டுரை அந்த மாதிரி தாவலை வேண்டாமல், நேரே வாசிக்க வைத்தது.

ஒன்று நம்பி வெகுஜன எழுத்தாளர் ஆகியிருக்க வேண்டும்.
அல்லது எனக்கு நம்பியின் எழுத்துக்கள் பிடிபட்டிருக்க வேண்டும்.

ஆனால், காரணம் இரண்டுமில்லை. இது எடுத்துக் கொண்ட துறை. அதன் பிறகு கொஞ்சம் லகுவாக சொன்ன விதம். வாசகரை எப்படி உள்ளே இழுப்பது என்பதை நம்பி திறம்படக் கற்றுக் கொண்டு விட்டார். அதனால், சற்றே அடர்த்தியையும் விஷய தானத்தையும் கட்டுரை நெடுகத் தூவ விட்டிருக்கிறார்.

இன்னொன்று இந்து மதக் கதைகள்; நன்றாக அறிந்த புராண விஷயங்கள்; இதிகாசங்களிலும் கர்ண பரம்பரையாகவும் சுலோகங்களாகவும் வேதங்களாகவும் சொல்லப்பட்ட தகவல்களை உவமானங்களை தத்துவங்களை அவர் கோர்த்துத் தந்திருக்கும் விதம் அபாரம்.

இப்படி படிக்கட்டு படிக்கட்டாக ஏற்றி நம்மை எங்கெங்கோ அழைத்துப் போகிறார். கிரேக்க தொன்மங்கள், எகிப்திய கடவுள்கள், ரோமானியப் புனைவுகள் – அப்புறம் தற்கால நபகோவ், டி.எஸ். எலியட் என்று நிகழ்கால ஜாம்பவான்களையும் கதம்பமாக்கி மாலையாக்கி இருக்கிறார்.

தமிழுக்கு எப்போதுமே நல்ல எழுத்தாளர்கள் உருவாகிக் கொண்டேயிருப்பார்கள். இப்போது நம்பி.

https://solvanam.com/series/writer-roberto-calasso/

கிருஷ்ணாவும் அவனது லீலைகளும்

  1. ருக்மிணி, (சத்ய)பாமா, ராதா – மூன்று நாயகிகள். பாமா ஆக ஷ்ரதா ஸ்ரீநாத் (நேர் கொண்ட பார்வை படத்தில் நடித்தவரேதான்).
  2. பாடல்கள் நன்றாக பொருந்துகின்றன. “அலைபாயுதே கண்ணா” கூட உண்டு.

3. தஞ்சாவூர் ஷங்கர் அய்யரின் தில்லானா; ஆனந்த பைரவி ராகம்; இசை: மகேஷ் இராகவன்; பாடுவோர்: வினோத் கிருஷ்ணன், சுஷ்மிதா ரவிக்குமார்; மிருதங்கம்: விவேக் ரமணன்: EDM-ised version of Thanjavur Shankar Iyer’s thillana in Ananda Bhairavi ragam, performed by Vinod Krishnan, Sushmitha Ravikumar with Vivek Ramanan on mridangam. Music arranged by Mahesh Raghvan

4. குறிஞ்சி ராகத்தில் அன்னமாச்சார்யா கிருதியான ‘முத்துகாரே யசோதா’

முத்தமிட்டாள் யசோதா… முற்றத்தில் நல்முத்தை எடுத்து, எத்தனையுன் மகிமைகள்?! தேவகியின் மகனே!!
சரணம்
எத்தனையோ ஆய்ச்சியர்கள், கையிலேந்திய மாணிக்கமே!துஷ்டனான கம்சனை, கொன்றதுன் கை வைரமோ? (2) ஒளிபொழியும் மூன்று லோகத்தில், மரகதமாய் படர்ந்தாய்! (2) எங்கள் உள்ளே வாசம் செய்யும் சின்ன கிருஷ்ணனே! (2)
   (முத்தம்…)
ரதிதேவி ருக்மிணியின்  அதரத்தில் நீ பவழமோ? கோவர்த்தனம் சுமந்த  கோமேதகம் நீயோ? (2) என்றும் சங்கு சக்கரத்தின் நடுவில் நிற்கும் வைடூர்யமே! (2) கதியென்றோம்  எமைக் காப்பாய்! கமலக் கண்ணா !! (2)
   (முத்தம்…)
காலிங்கனின் தலைமேலே நர்த்தனமாய் புஷ்பராகமே!என்றென்றும் ஸ்ரீவெங்கடாத்திரியில் நின்று ஆளும் நீலமே!! (2) பாற்கடலில் அற்புதங்களில், ரத்தினமாம் அற்புதமே! (2) பாலகனாய் திரிந்தாய் பத்மநாபனே !! (2)
    (முத்தம்…)

5. கிருஷ்ணருக்கு முன்பே காதல் இருந்தது என்பதற்கு ஆர்ச்சி சாட்சி. ஆர்ச்சி கதாபாத்திரத்திற்கு பெட்டி + வெரோனிகா என்று இரட்டை நாயகிகள். எண்பதுகளில் சுனௌதி என்றொரு ஹிந்தி தொடர் வந்தது. அதில் வரும் ரெட்டை வால் குருவி போன்ற பாத்திரப் படைப்பு இன்றும் கிளரவைக்கிறது.

6. ஆனால், வெறும் ஆண் பார்வை என்று சொல்ல முடியாத பாத்திரப் படைப்புகள் & வசனங்கள். “சத்யா” கதாபாத்திரம் துவக்கக் காட்சியில் நாயகனை விட்டு விலகும் காட்சியைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். “நான் ஒன்றும் உன் உடைமை அல்ல! நீ எவருடன் பழகச் சொல்கிறாயோ, அவர்களுடன் மட்டும் நட்பு பாராட்ட…” என்று “கிருஷ்ணா”வை விட்டு விலகும் ஆளுமை கலந்த நாடியறியும் பயணத்தைத் துவக்குவதில் மகளிர் எண்ணத்தை உரைக்கிறார்.

7. அந்த மாதிரி ஓரிண்டு காட்சிகள் தவிர இது பாலு மகேந்திரா, மஹேஷ் பட், காக்டெயில் போன்ற கொண்டாட்ட படம் இது. “உனக்கு பீரியட்ஸ் டைம் போல – that time of the month” என்று காதலியின் கோபத்தை உதாசீனம் செய்வது முதல் “எல்லோர் மீதும் பிரியம் வருகிறது, இச்சை தோன்றுகிறது” என்பதை நியாயப்படுத்துவது வரை – அக்மார்க் ஆண் படம்.

8. யாராவது, எந்த மடையனாவது பழைய காதலியின் உடன் எடுத்த புகைப்படங்களை ஃபோனில் வைத்து இருப்பானா? அதெல்லாம் பலான படம் போல் பத்திரமாக எங்கேனும் கிளவுட் டிராப் பாக்ஸ் கணக்கில், ரகசியமாக எவருக்கும் தெரியாமல் சேமித்து வைக்க வேண்டாமா? இந்த மாதிரி டெக் தெரியாத கிராக்கி எல்லாம் எப்படி எட்டு பொண்டாட்டி வைத்து சமாளிப்பான்?

9. இதன் அடுத்த பாகத்தை சத்தியமாக எதிர்பார்க்கலாம். பகவத் புராணப்படியும் ஜெயமோகன் எழுதிய வெண்முரசு இந்திரநீலம் படியும் கண்ணன் ஜாம்பவதி, கலிந்தி, மித்ரவிந்தா, நக்நஜித்தி, பத்ரா, லஷ்மணா மற்றும் ருக்மிணி, சத்யாபாமா, என்னும் எட்டு நாயகியரை கொண்டவர்.

ஸ்ரீமத் ராமானுஜ வைபவம்: ஆர்.பொன்னம்மாள்

Srimadh_Ramanuja_Vaibhavam_R_Ponnammal_Cover

Via Senkottai Sriram

வானதி பதிப்பகத்தின் சார்பில் நூலாகியுள்ளது. ஆர்.பொன்னம்மாள் எழுதியுள்ளார். ஸ்ரீமத் ராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டு திருநட்சத்திரத்தை ஒட்டி வெளியிடப்பெற்றுள்ள தொகுப்பு!

வழக்கமாக தற்போது நடைபெறும் புத்தக வெளியீடுகள் போல் அல்லாது, வித்தியாசமாக யோசித்தார் வானதியின் பெயரன் சரவணன்.

ஒருநாள் காலை… கைபேசியில் அழைத்தார். அண்ணா, ஸ்ரீமத் ராமானுஜர் புத்தகம் போடுகிறோம்.. என்று சொல்லி, நூல் தலைப்பு, உள்ளடக்க குறிப்பு தொடர்பாக சில விளக்கங்களைக் கேட்டார். சொன்னேன். அடுத்த சில நாட்களில் மீண்டும் அழைத்தார். அண்ணா… நாம ஸ்ரீபெரும்புதூர் போய், அங்கேயே உடையவர் சந்நிதியில் நூலை வெளியிட்டு உடையவர் பாதத்தில் வைத்து வந்துடலாம். நீங்கதான் வெளியிட வரணும். உங்க கையால் வெளியீடு. ராமானுஜ நூற்றந்தாதி பாடிய உஷா பத்மநாபன் அம்மாவ அழைச்சிண்டு வரேன். அவர் முதல் பிரதியை வாங்கிப்பார் என்றார்.

மறுக்கவில்லை. சரியாக நேற்று திருவாதிரை. எம்பெருமானார் திருநட்சத்திரம். காலை அடியேன் பொத்தேரியில் இருந்து வண்டியில் ஸ்ரீபெரும்புதூருக்கு சென்றுவிட்டேன். அவர்களும் வந்தார்கள். சந்நிதிக்குச் சென்று பெருமாளை, உடையவரை ஸேவித்தோம். பாதத்தில் புத்தகக் கட்டை வைத்து ஆசி பெற்றோம். அப்போது நம் எம்பார் ஜீயர் நினைவுக்கு வர, சரவணனிடம் சொன்னேன்…. நம் ஜீயர் ஸ்வாமிதான் புத்தகத்தை வெளியிட சிறப்பானவர். அவர் திருமாளிகைக்குப் போய், அவர் கையாலேயே வெளியிட்டுவிடுவோம் என்றேன்.

Senkottai_Sengottai_Sriram_Book_Release_Ramanujar_Ponamal_Vaishnaivism

அவ்வாறே சென்றோம். ஜீயர் ஸ்வாமி திருமாளிகையில் அன்று அன்பர் குழாம் அதிகம்! அதோடு அதாக, ஜீயர் ஸ்வாமி புன்னகையுடன் நூலை வெளியிட்டு, பிரதியை உஷா பத்மநாபனுக்கும் அடியேனுக்கும் வழங்கினார்.

பின்னர், அப்படியே எல்லாரும் அமருங்கள். பிரசாதம் சாப்டுட்டு போயிடலாம் என்றார் ஸ்வாமி. அருமையான கதம்ப சாதம், தயிர் சாதம்..! பக்கத்தில் உள்ள மதுரமங்கலம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த சிஷ்ய கோடிகள் பாகவத சிரோமணிகள் வழக்கமாக திருவாதிரை நட்சத்திரத்தில் கோயிலுக்கு வந்துவிட்டு ஸ்வாமி சந்நிதிக்கு வந்து மதியம் சாப்பிட்டு விட்டுச் செல்வார்களாம். அதனால் ஒரே தடபுடல்!

பரம திருப்தியுடன் எளிய, ஆனால் ஆத்மார்த்தமான ஒரு நிகழ்வுடன் அங்கிருந்தே அலுவலகம் விரைந்தேன்.

பின் இணைப்பு:
புத்தகம் குறித்து பலரும் விசாரிப்பதால், வானதி பதிப்பக எண் தருகிறேன்… போனில் விசாரித்துக் கொள்ளுங்கள்..
VANATHI PATHIPPAKAM
23,Deenadayalu street,T.nagar, Chennai-17
Ph-no: 044 – 2434 2810 / 2431 0769

செங்கோட்டை ஸ்ரீராம்

Srimadh_Ramanuja_Vaibhavam_R_Ponnammal_Back_Cover_Book

நூலின் முன்னுரையில் சுதா சேஷய்யன் எழுதியதில் இருந்து சில பகுதிகள்:

(இந்த நூலின்) சிறப்பு, நூலின் எழுத்தமைப்பால் ஏற்படுகிறது. பன்னெடுங்காலமாகப் புழக்கத்தில் உள்ள செய்திகளை, அதுவும் மரபும், சமயமும் சார்ந்த செய்திகள, எடுத்துரைக்கும்போது, அவ்வாறான நூலின் மொழி நடை, பாரம்பரியமும், பரிபாஷையும் சார்ந்ததாக அமைந்துவிடும் வாய்ப்பு உண்டு. மிகுதியான பரிபாஷைச் சொற்களும் வடமொழி மணிப்ரவாளச் சொற்களும் கலந்துவிடுமானால், வாசகர்கள் பால்ர் ஒதுங்கிவிடுவார்கள். குறிப்பாக இளைய தலைமுறை வாசகர்கள் அத்தகைய நூலைக் கையிலெடுக்கவே தயக்கம் காட்டுவார்கள்.

Srimadh_Ramanuja_Vaibhavam_R_Ponnammal_Sudha_Seshayyan_1

நூலின் மூன்றாவது சிறப்பு, கருப்பொருளுக்கு முன்னாலும், பின்னாலும் உள்ள வரலாற்றுக் குறிப்புகளைத் தக்க இடங்களில், தக்க முறைகளில் அமைத்திருக்கும் பாங்கு. …

Srimadh_Ramanuja_Vaibhavam_R_Ponnammal_Sudha_Seshayyan_2_Munnurai_Preface

… வைணவ குரு பரம்பரையின் பிரபாவத்தை வாசகனுக்குக் கொடுக்க வேண்டும் என்பதை உணர்ந்த நூலாசிரியர், அதற்கான தகவல்களை, திருமலை நம்பி – ராமானுஜர் ஆகியோரின் உரையாடல்களில் பொதித்துக் கொடுப்பது மிகச் சிறந்த யுத்தி.

வைணவ உரைகளில் ‘ஈடுகள்’ முக்கிய இடம் பெறுகின்றன. ஈடு என்பது என்ன, எதைக் கொண்ட ஈட்டுக் கணக்கு வருகிறது போன்ற தகவல்களையும் நூலாசிரியர் போகிற போக்கில் விளக்கியுள்ளார்.
Srimadh_Ramanuja_Vaibhavam_R_Ponnammal_Sudha_Seshayyan_3

குரான்படி நடக்கும் இஸ்லாமியர் யார்?

ஐஸிஸ் பிடியில் இருந்து தப்பித்து வந்த இருபத்தியோரு யெஸிடி பெண்களுடன் ருக்மிணி கலிமாக்கி அவர்களுக்கு பேச வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதை நியு யார்க் டைம்ஸில் எழுதியிருக்கிறார். முஸ்லீம் இறையியலின்படி பெண்களை அடிமையாக நடத்துவது மட்டுமல்ல, வன்புணர்வையும் மதக் கடமையாக மேற்கொள்ளவேண்டும் என்பதை ஐஸிஸ் சட்டமாக வைத்திருக்கிறது.

போரின் போது பெண்கள் வன்முறைக்கு உள்ளாவது புதிது இல்லை. ஐ.நா. செயலர் பான் கி மூன் மாதந்தோறும் மன்னிப்புக் கேட்டுகொள்வது மாதிரி ஐ.நா. அமைதி காக்கும் படைகள் முதற்கொண்டு எந்த நாட்டு இராணுவம் அன்னிய நாட்டிற்குள் நுழைந்தால் – பெண்கள் மீது அத்துமீறல் சகஜமாக நிகழ்த்தப்படுகிறது. 2011ல் ஐக்கிய நாடுகள் சபை வெளியிடும் செய்தித்தாளில் இதுதான் தலைப்புச் செய்தி: “காங்கோவிலும் லைபீரியாவிலும் ஐ.நா. அமைதிப்படை மீதான பாலியல் பலாத்கார குற்றச்சாட்டுகள் குறையத் துவங்கியிருக்கின்றன”

ஆனால், ஐஸிஸ் போர்க்குற்றமாக பெண்கள் மீதான வன்முறையை நடத்துவதில்லை. ஒரு ஊருக்குள் நுழைகிறார்கள். அந்த ஊரை ஆக்கிரமிப்பதற்கான முதல் படியாக, அந்த சிற்றூரில் இருக்கும் சிறுமிகளையும், பெண்டிர்களையும், லாரி லாரியாக அபகரிக்கிறார்கள். அதன் பிறகு அவர்கள் அனைவரிடமும் தங்களின் கேள்விப் பட்டியலில் இருந்து விடை கேட்டு குறித்துக் கொள்கிறார்கள். எப்போது மாதப்போக்கு வந்தது போன்ற அந்தரங்கங்களையும் விடாமல் ஒவ்வொன்றாக சொல்லச் சொல்கிறார்கள். ஏனென்றால் கருவுற்றிருக்கும் தாயை பலாத்காரம் செய்யக் கூடாது என்று இறைதூதர் காலத்தில் இருந்த வழக்கத்தை இன்றும் பின்பற்றுவதே காரணம்.

பிறகு, அந்தப் பெண்களை அடிமை ஏலம் விடுகிறார்கள். அடிமையைப் பெற்றுக் கொண்டவரின் கடமை என்ன? முதலில் நமாஸ் செய்யவேண்டும். தொழுகை முடிந்தவுடன் பன்னிரெண்டு வயதுச் சிறுமியை பலாத்காரம் செய்யவேண்டும். அதன்பின் குளித்துவிட்டு, மீண்டும் நமாஸ் செய்து இறைக்கடமையை முடித்துக் கொள்ள வேண்டும். அதன் பின், மீண்டும் அந்த குழந்தை விற்கப்படுகிறார்.

யெஸிடிகள் மீது இன்னும் கோபத்துடன் இந்த வன்முறையை ஐஸிஸ் செலுத்துகிறது. கிறித்துவர்கள் போல், இஸ்லாமியர்கள் போல் ஒரு இறைவர், அவர்களின் தூதர் என்று ஒற்றைப்படையில் இல்லாமல், ஏழு தெய்வங்களை யெஸிடிகள் வணங்குகிறார்கள். அவர்களின் புனித நூல் குரான் போல் பைபிள் போல் எழுத்தில் இல்லாமல், வழிவழியாக முன்னோர்களின் வாய்ப்பேச்சு மூலமாகவே தலைமுறை தாண்டி ஓதப்பட்டு வருகிறது. இதைக் கண்டு ஐஸிஸ், பன்கடவுள் கொண்ட சமூகம் மீது நபிகள் நாயகம் காலத்தில் விளங்கிய நிலையை விரிவாக எடுத்தோந்தும் நூல்களை வெளியிட்டிருக்கிறது. நபிகளும் அவர்களின் தோழர்களும் எவ்வாறு பலதெய்வ வழிபாடு செய்தவர்களை பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கினார்கள் என்பதை வழிகாட்டி விளம்பரமாக வெளியிட்டு தங்களின் கோரத் தாக்குதலைத் தொடர்ந்து முன்னெடுக்கிறது.

இன்னும் இந்த நிலையில் ஐயாயிரத்திற்கு மேற்பட்ட யெஸிடி பெண்களை கொத்தடிமைகளாக ஐஸிஸ் வைத்திருக்கிறது. இவர்களை எப்படி விற்க வேண்டும், நபிகள் காலத்தில் நடந்த தொன்மையான வழக்கப்படி எவ்வாறு பலாத்காரம் செய்வது, அடிமை வர்த்தகத்தில் ஐஸிஸ் அரசிற்கு எவ்வளவு வரிகட்ட வேண்டும் என்பதை தங்களின் பிரதேசத்தில் சட்டமாக்கி இருக்கிறார்கள்.

முழுக் கட்டுரையை இங்கே வாசிக்கலாம்.