Tag Archives: Magazine

சொல்வனம் #312

புதிய சொல்வனம் இதழில் பல முக்கிய ஆக்கங்கள் இருக்கின்றன. முகப்புக் கட்டுரையை விட்டுவிடலாம். எழுதியவரும் எழுதப்பட்டவரும் சொல்வனம் ஆசிரியர் குழுவில் தொடர்ந்து காத்திரமாகப் பங்களிப்பவர்கள். பத்து சிறுகதைகள். ஒவ்வொன்றையும் தனித்தனியாக பின்னொரு ரத சப்தமி அன்று அறிமுகம் செய்யலாம். ஐந்தாறு தொடர்கள்; இரண்டு வாசகர் கடிதங்கள் போன்றவற்றையும் ‘பார்த்த ஞாபகம் இல்லையோ’ என எங்கேனும் ஏற்கனவே எழுதியிருப்பேன்.

312ஆம் சொ.வ. இதழில் என்னைக் கவர்ந்தவை:
1. செமிகோலன் எழுதிய கவிப்பித்தனின் சாவடி தொகுப்பிற்கான எண்ணங்கள்
2. வெங்கட்ரமணன் எழுதிய கிணற்றிலிருந்து வெளிவரும் உண்மை

முதல் பதிவு நேர்மையாக சக காலப் படைப்பாளியின் ஆக்கங்களை அணுகுகிறது. ஒவ்வொரு புத்தகக் கண்காட்சியிலும் பத்து, பதினைந்து புதிய எழுத்தாளர்களின் புத்தம்புதிய நாவல்களையும் தொகுப்புகளையும் வாங்கினாலும், எவரைக் குறித்தும் பதிவு செய்வதில்லை. அந்தக் குறையை அரைப்புள்ளி நீக்குகிறார். அதற்காக “வாழ்க!” (“தொடர்க”வும் கூடவே சொல்லி வைக்கிறேன்).

கனடா வெங்கட் எழுதிய கட்டுரையை அலுவலில் திறந்து விடாதீர்கள். அக்கம்பக்கம் பார்த்துப் படியுங்கள். (சரோஜாதேவி புத்தகம் என்று ராம்பிரசாத் எழுதியதைப் பொதுவிடங்களில் பலர் பார்க்க புரட்டுவதில் எந்த ஆபத்தும் இல்லை). க.வெ. (இவர் டொரொண்டோ பக்கம் இருப்பதால் என்னைப் போன்றோரால் டொரொண்டொ வெங்கட் என்றும் அழைக்கப்படுகிறார்) தத்துவத்தில் துவங்கி, ஓவியத்திற்கு பாய்ந்து கர்ண பரம்பரைக் கதைகளைச் சொல்லி சிறுவாணியாகப் பாய்ந்தோடுகிறது.

உண்மையாக ஓவியத்தைப் பார்த்தால் இளமையாக இருக்கிறது. இன்றைய டிக்டாக் காலத்தில் போலி முகத்தைப் பொருத்தி உலா வருவது சகஜம். அந்தக் காலத்தில் செயற்கை நுண்ணறிவு இல்லாமலே சொந்தமாக வேஷம் போட்ட பொய்யை எல்லோரும் தீட்டிக் கொண்டிருக்க, உண்மையை படம் வரைந்தவரின் கதையைப் படியுங்கள்.

சிறுகதை – பரிந்துரை

நல்ல மலையாளப் படம் போல் தத்ரூபமான கதை.
வெண்முரசு எழுதியதின் மிகுதியில் உருவான சேடி.
தத்துவமும் குட்டிக்கதையும் பின்னிப் பிணைந்திருக்கும் பாதை.

கலைமகள், அமுதசுரபி, மஞ்சரி, ஞானபூமி போன்ற இதழ்களில் படித்திருக்க வேண்டியது;
பார்த்தனும் முராரியும் உரையாடுவது;
சாந்தமாக நிச்சிந்தையாக நேரம் எடுத்துக் கொண்டு நீண்ட காலம் நெஞ்சில் நிலைத்திருப்பது.

இந்த 310ஆம் சொல்வனம் இதழில் ராமராஜன் மாணிக்கவேல் எழுதிய “கொடை” குறிப்பிடத்தக்க ஆக்கம்.
வாசியுங்கள்

வட்டிகை (சொல்வனம் #310)

பத்திரிகைகளில் லே-அவுட் என்பது கண்கவர் வித்தை.

அவற்றை தலைசிறந்த ஓவியர்கள் கொண்டு வடிவமைப்பது பிரசித்தம். அன்றைய ஆனந்த விகடனுக்கு கோபுலு, மாலி. இதயம் பேசுகிறது வாராந்தரிக்கு மாயா. குமுதம் குழுமத்தில் இராமு, அர்ஸ், மாருதி, வர்ணம் என எல்லோரும் பங்களித்ததாக நினைவு.

வயதானவர்களுக்கு பழைய நினைப்பு எப்பொழுதும் பிளாட்டினம் காலம். தீபாவளி சிறப்பிதழோ புத்தாண்டு மலரோ கொண்டு வந்து, பெரிய புத்தகத்தை வெளியிட்டு, கடைகளுக்கு அனுப்பி வைத்து விட்டால் — நியு யார்க்கர் பதிப்புக் குழு மாதிரி சுருட்டும் விஸ்கியும் பருகாவிட்டாலும், அந்த அச்சாபீஸ் ஊதுபத்தி மணக்க, இதழ் வெளியாக உழைத்த ஒவ்வொருவரும், மகப்பேறை அடைந்த மகிழ்ச்சியோடு அந்த நூலைக் கொண்டாடினார்கள்.

இன்றைய இணையச் சூழலில் ஒரேயடியாக இத்தனை கனமான விஷயங்களைக் கொடுத்தால் எவரும் வாசிக்க மாட்டார்கள். ஒவ்வொரு கட்டுரையாக, தனித்தனி தினங்களில், இந்திய விடுமுறைகளைத் தவிர்த்து, போதிய அளவு முன்னோட்டங்களை சமூக ஊடகங்களில் துளிரவிட்டு, புதன் சாயங்காலமாக வலையில் போட்டால், வாசகர்கள் அள்ளும். அதன் புறகு அந்தப் பதிவிற்கு துணைப் பதிவு, கொசுறு கலவரம், அடுத்த நாள் மீம் என்று விளம்பரங்களையும் விழியங்களையும் உலவ விட வேண்டும்.

இது சமூக பரவல் சித்தாந்தம். இதற்கும் ஓவியர்களுக்கும் என்ன சம்பந்தம்?

ஓவியர்கள் கண்ணைப் பறிக்கும் செப்படி வித்தைக்காரர்கள்; சமூகப் பம்பல்கள் கண்ணில் பட்ட இடமெல்லாம் விதை தூவும் விளம்பரதாரர்கள்.
சித்திரக்காரர் உங்கள் சிந்தையை நீங்களே அறியாமல் கவர்வார்; சமூகப் பம்பல்காரர் அலறி முகத்தில் அடித்து ஆக்கிரமிப்பார்.
எழுத்துக்காரரின் ஆக்கத்தை தூரிகை கொண்டு தூண்டில் போடுபவர் அவர். மூச்சு முட்டுமளவு நாமம் அடித்து பட்டை போட்டு எழுத்தையும் சிந்தையையும் மறைப்பவர் மீம்காரர்.

செல்பேசி இருப்பவரெல்லாம் ஒளிப்படம் எடுத்து தள்ளுவது இக்காலம். இந்தக் காலத்தில் நல்ல புகைப்படக்காரரை கண்டுகொள்வது எவ்வளவு கடினமோ…
அதை விட கடினம்: நல்ல படக்காரரை கண்டுகொள்வது.

சாட் ஜிபிடி-யோ, பிங் அரட்டை பெட்டியோ, டால்-ஈ, மிட் ஜர்னி, கூகுள் பார்ட் என எந்தப் பக்கம் பார்த்தாலும் செயற்கை நுண்ணறிவு ஓவியம் தீட்டுகிறது. கைவிரல்களை எண்ணாத வரைக்கும் அசல் படைப்பாளி மாதிரியே பாவ்லா காட்டுகிறது. இந்தக் கூட்டத்தில் தமிழுக்கும் இந்தியத்திற்கும் புனைவிற்கும் பொருத்தமாக வரைய இருவர் கிட்டி இருக்கிறார்கள்.

அருண் – இரா முருகனின் மிளகு என்னும் பெருநாவலுக்கு சொல்வனம் தளத்தில் வரைந்து காட்சிகளை உருவாக்குகிறார்.


சங்கர நாராயணன். – கவிஞர் ஜகன்னாத பண்டித ராஜா மொழியாக்கத்திற்கு உயிர் கொடுக்கிறார்.

பொக்கிஷங்கள்! தொடர்ந்து மென்மேலும் உருவாக்கி நம் எண்ணத்தை செழுமையாக்க வாழ்த்துகள்

குழந்தை இலக்கிய எழுத்தாளர்: பொன்னம்மாள் பேட்டி

விடியல் இலக்கிய இதழ் – பெண் எழுத்தாளர்களின் ஆக்கங்களை தாங்கி வெளியாகி இருக்கிறது.

இந்த இதழில் என் அம்மாவின் பேட்டியைக் கேட்டு வாங்கிக் கொண்டார் புதுவை ரா. ரஜினி. அவரின் தொடர்ச்சியான நினைவூட்டல்களும் நிலையான உறுதிப்பாடும் விடாமுயற்சியும் இல்லாவிட்டால் இந்த நேர்காணல் சாத்தியமாகி இருக்காது.

பலரும் இலக்கியம் என்றால் இன்ன வரைமுறை என்று வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

சிலருக்கு ஆதர்சங்கள் – தலைவர்களைப் போன்ற ஆளுமைகள்.
சிலருக்கு கொள்கைகள் – மார்க்சியம், பெண்ணியம், சுற்றுச்சூழல்
சிலக்கு கட்சிகள் – திராவிடம், கம்யூனிசம், இந்துத்துவம்
சிலருக்கு கோட்பாடுகள் – முதலியம், சமத்துவம், சூழலியம்
சிலருக்கு இயக்கன் க்கள் – செம்மொழி இயல், அறிவொளி இயக்கம், அபத்தவியல், இருத்தலியல், கட்டமைப்பு இயல், புனைவியல், புது புனைவியல், எதார்த்தம், மீ எதார்த்தம், நவீனத்துவம், பின் நவீனத்துவம், பின்காலனியத்துவம், பின்-பின் நவீனத்துவம்

இதெல்லாம் நம்பிக்கை சார்ந்தது. புதுவை எழுத்து என்றில்லாமல் எல்லோருக்கும் இடம்; புகழ் பெற்றவர்கள் என்றில்லாமல் அனைவரையும் அனைத்துப் போகும் குணம்; சுமார், பரவாயில்லை என்று பூரணத்துவத்தை மட்டும் எதிர்நோக்காமல் ஊக்குவிக்கும் மனோபாவம் – இதழுக்கும் இதழாசிரியர்களுக்கும் என் நன்றிகளும் வாழ்த்துகளும்.

குழந்தை இலக்கிய எழுத்தாளர் ஆர். பொன்னம்மாள் பேட்டியைப் படிக்க வாருங்கள். சந்தா கட்டுங்கள். ஆதரியுங்கள்!

July 14 S Ramakrishnan Event at Toronto: Kaalam Magazine Invite

தென்றல் மாத இதழ்: மே 2012: ஆர். பொன்னம்மாள் – அரவிந்த்

நன்றி: எழுத்தாளர் பகுதி: அமெரிக்காவில் வெளியாகும் தென்றல் பத்திரிகை

தமிழ்ப் படைப்பிலக்கிய உலகில் வரலாறு, சமூகம், நகைச்சுவை போன்றவற்றைப் போலவே ஆன்மீகத்திற்கும் மிக முக்கிய இடமுண்டு. ஆறுமுக நாவலர் தொடங்கி வேதநாயக சாஸ்திரியார், ரா. கணபதி, பரணீதரன், மணியன், லக்ஷ்மி சுப்ரமணியம் எனப் பலர் இதன் வளர்ச்சிக்குப் பங்காற்றியுள்ளனர். இவர்கள் வரிசையில் மூன்று தலைமுறைகளாக எழுதி வருபவர் ஆர். பொன்னம்மாள். இவர், மே 21, 1937 அன்று சென்னை, திருவல்லிக்கேணியில் ராமசுப்ரமண்யம்-லக்ஷ்மி அம்மாள் தம்பதியினருக்கு மகளாகத் தோன்றினார். பள்ளிப்படிப்பு சென்னையில். ஏழு வயதில் தந்தையை இழந்தார். அதன் பின் எட்டாம் வகுப்பு வரை மட்டுமே இவரால் கற்க முடிந்தது. குடும்பம் கல்லிடைக் குறிச்சிக்குக் குடி பெயர்ந்தது. சிறுவயதில் படித்த அம்புலிமாமா, ஜில்ஜில், டமாரம், பாப்பா மலர், பாலர் மலர், கல்கண்டு போன்ற பத்திரிகைகள் இவரது வாசிப்பார்வத்தைத் தூண்டின. வளர வளர கல்கி, தேவன், பி.எஸ். ராமையா, எஸ்.வி.வி., எல்லார்வி, லக்ஷ்மி போன்றோர் எழுதிய நூல்கள் படிக்கக் கிடைத்தன. அவை இவரது அறிவை விசாலமாக்கியதுடன் எழுதும் ஆர்வத்தையும் தூண்டின.

தனது வீட்டைச் சுற்றி வசித்த குழந்தைகளுக்கு தினமும் கதைகள் சொல்வது வழக்கமானது. ‘தமிழ்நாடு’ இதழ் அறிவித்த சிறுகதைப் போட்டிக்கு சிநேகிதி ருக்மிணியின் தூண்டுதலால் ஒரு சிறுகதையை எழுதி அனுப்பினார். ஆசிரியரின் பாராட்டுதலுடன் ‘இரட்டைப் பரிசு’ என்ற அச்சிறுகதை பிரசுரமானது. தொடர்ந்து தமிழ்நாடு இதழிலேயே ‘அன்பு மனம்’, ‘வழிகாட்டி’, ‘இன்ப ரகசியம்’, ‘விதி சிரித்தது’, ‘கண் திறந்தது’, ‘சந்தேகப் பேய்’ போன்ற பல சிறுகதைகள் வெளியாகி வரவேற்பைப் பெற்றன. 1958ல் எஸ்.எம்.சுப்ரமண்யத்துடன் திருமணம் நிகழ்ந்தது. குடும்பப் பொறுப்பு மிகுந்ததால் தொடர்ந்து எழுத இயலவில்லை என்றாலும் புத்தக வாசிப்பும் நேசிப்பும் தொடர்ந்தது. கணவர் ஒரு பத்திரிகை ஆர்வலராக இருந்ததால் பத்திரிகைகள், நாளிதழ்கள் வாசிக்கக் கிடைத்தன. கணவரின் உறுதுணையுடன் ஜோதிடம் மற்றும் சம்ஸ்கிருதத்தை நன்கு கற்றுத் தேர்ந்தார்.

1976ல் தினமணி நாளிதழ், குழந்தை எழுத்தாளர் சங்கப் போட்டி ஒன்றை அறிவித்தது. குடும்பச் சூழலால் அதுவரை எழுதாமலிருந்த பொன்னம்மாள் தனது குழந்தைகளின் தூண்டுதலால் ‘கடவுளின் கருணை’ என்ற சிறுகதையை எழுதி அனுப்பினார். அது பிரசுரத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதுடன் பரிசும் கிடைத்தது. தொடர்ந்து சில சிறுகதைகளயும் வானொலி நாடகங்களையும் எழுதிய போதும் முழுமையாக எழுத்தில் ஈடுபட இயலவில்லை. சில ஆண்டுகள் இடைவெளிக்குப் பின் மீண்டும் எழுத ஆரம்பித்தார். 1983ல் இவர் எழுதிய ‘கருணை விழிகள்’ என்ற நாவல் தங்கப் பதக்கம் பெற்றது. அது பின்னர் கோகுலத்தில் தொடராக வெளிவந்து சிறுவர்களின் வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து தீவிரமாக எழுத ஆரம்பித்தார்.

இவரது முதல் சிறுகதைத் தொகுப்பான ‘கடவுளின் கருணை’யை பழனியப்பா பிரதர்ஸ் வெளியிட்டு ஊக்குவித்தது. இவர் எழுதிய ஆயிரம் பக்கங்களுக்கு மேல் உள்ள ‘பாண்டுரங்க மகிமை’யை பிரபல கிரி டிரேடிங் நிறுவனம் வெளியிட்டது. தொடர்ந்து எழுதுமாறு அதன் உரிமையாளர் கிரி ஊக்குவிக்கவே பல நூல்களையும், ‘காமகோடி’ இதழுக்காகப் பல்வேறு, கதை, கட்டுரை, வரலாற்றுச் சம்பவங்களையும் எழுத ஆரம்பித்தார். குறிப்பாக இவர் குழந்தைகளுக்காக எழுதியிருக்கும் ‘கருணை விழிகள்’, ‘பறவைகள் பலவிதம்’, ‘பொன்மனம்’, ‘திருக்குறள் கதைகள்’, ‘பாட்டி சொன்ன கதைகள்’ (மூன்று பாகங்கள்) போன்ற 50க்கும் மேற்பட்ட நூல்கள் குறிப்பிடத்தக்கன. ‘ஸ்ரீமத் பாண்டுரங்க விஜயம்’, ‘சிவலீலை’, ‘நாராயணீயம்’, ‘தேவி திருவிளையாடல்’, ‘கருட புராணம்’, ‘நாலாயிர திவ்ய பிரபந்த விளக்கம்’, ‘பரமாச்சர்யாள் பாதையிலே’, ‘குரு ரத்னங்கள்’, ‘சத்ய சாயி வரலாறு’, ‘மகாபாரதக் கதைகள்’ போன்ற ஆன்மீக நூல்கள் பல பதிப்புகள் கண்டவையாகும். குறிப்பிடத்தக்க வகையில் சில நாடகங்களையும் பொன்னம்மாள் எழுதியிருக்கிறார். அவற்றில் சிலவற்றுக்குப் பரிசும் கிடைத்துள்ளது. குழந்தை இலக்கியம், ஆன்மீகம், நாவல், சிறுகதை, வாழ்க்கை வரலாறு என 90 நூல்கள் வரை எழுதியிருக்கும் பொன்னம்மாளின் படைப்புகளை வானதி பதிப்பகம், நியூ ஹொரைஸன் மீடியாவின் தவம் பதிப்பகம் போன்றவை தொடர்ந்து வெளியிட்டு ஊக்குவித்து வருகின்றன. இவரது நூல்களுக்கு தமிழக அரசுப் பரிசு, மத்திய அரசின் சிறந்த நூல் விருது, குழந்தை எழுத்தாளர்கள் சங்கப் பரிசு, ஏவிஎம்மின் தங்கப் பரிசு, ஸ்டேட் பாங்க் பரிசு, பபாசி விருது, குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா விருது போன்றவை கிடைத்துள்ளன.

“இன்றைக்கு டிவி மற்றும் பெரியவர்களின் ஒத்துழைப்பின்மை குழந்தை இலக்கியத்தை நசிய வைத்திருக்கிறது. குழந்தைகளும் சீரியல் பார்ப்பதற்கு ஃபோர்ஸ் செய்யப்படுகிறார்கள். இதனால் ஏற்படும் விளைவு குழந்தைகள் தங்களின் உலகத்தை இழக்கிறார்கள். முன்பு பெரியவர்கள் குழந்தைகளை ஒதுக்கும்போதோ, ஒதுங்கும்போதோ – புத்தகம் தோழன் ஆனது. புத்திசாலித்தனம் வளர்ந்தது. ஆனால், இன்று டிவி வீட்டுக்குள் வந்துவிட்டபின் நிலைமை மாறிப்போய் விட்டது” என்று கூறும் பொன்னம்மாள், “சிறுவர் இலக்கியத்தில் அழ. வள்ளியப்பாவுக்குப் பிறகு பெரிய வெற்றிடம் ஏற்பட்டிருக்கிறது. அறிவியல் சமாசாரங்களை ஈ.எஸ். ஹரிஹரன் எளிய முறையில் கதைகள் மூலமாக சொல்கிறார். தாவரங்கள், மிருகங்கள் குறித்த வாண்டுமாமாவின் புத்தகங்கள் குறிப்பிடத்தக்கனவாய் இருக்கின்றன. மா.கோதண்டராமன் எழுதிய அறிவியல் கட்டுரைகள் ஆழமாகவும் சுவையாகவும் சிறுவர்களுக்கு ஏற்ற முறையில் இருக்கும். பூவண்ணன் நடைமுறைக்கு ஏற்ப புனைகதைகள் படைக்கிறார். சௌந்தர் எழுதும் குழந்தைகளுக்கான படைப்புகளும் அவசியம் சிறுவர்களின் புத்தக அலமாரியில் இருக்கவேண்டும். ஆனால் இன்று குழந்தை இலக்கிய வளர்ச்சி மிகவும் பின்தங்கியே இருக்கிறது” என்று வருந்துகிறார்.

இன்றைய சிறார் இதழ்கள் குறித்து, “குழந்தைகளே எழுதும் புதிர்கள், ஓவியங்கள் அவர்களின் திறமையை வெளிப்படுத்துகிறது. தமிழார்வத்தையும் வளர்க்கிறது. குழந்தைகளுக்கு மட்டும் நடத்தப்படும் சிறுகதைப் போட்டி, அறிவியல் போட்டி போன்றவையும் வரவேற்கத்தக்கன. சாதனை புரிந்தவர்கள், ரோல் மாடல்கள், பல்துறை விற்பனர்கள், உடல் ஊனமுற்றவர்கள் என பலரின் வாழ்க்கை குறிப்புகளும், சரிதைகளும் குழந்தைகளுக்கு ஊக்கம் கொடுக்கிறது. தூண்டுகோலாக அமைகிறது.” என்கிறார். “குழந்தைகள் ஈரமண். அனைத்து ஊடகங்களும் பத்து சதவீதமாவது முழுக்க முழுக்க வயதுவாரியாகக் குழந்தைகளுக்கு ஒதுக்க வேண்டும். பொறுமை, முன்னேற்றம், தன்னம்பிக்கை, அன்பு, பணிவு, சேமித்தல், ஆடம்பரம் தவிர்த்தல், நேரம் விரயமின்மை, காலங்கள் மாற்றம், கனவு, நம்பிக்கை போன்றவற்றை விதைத்து வருங்காலத்திற்குத் தயார் செய்ய வேண்டும்” எனச் சொல்லும் பொன்னம்மாளின் வேண்டுகோள் அவசியம் ஊடகங்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று.

இன்றும் இளைய தலைமுறையினருக்கு இணையாக எழுத்துப் பணியை மேற்கொண்டு வருகிறார் ஆர். பொன்னம்மாள். எழுத்தாளர், கட்டுரையாளர், விமர்சகர் பாஸ்டன் பாலாஜி இவரது மகன்.