Tag Archives: America

டைனோ: எல்லோரும் துப்பாக்கி சுட கற்றிருக்கணும்

டைனோ Says:
நவம்பர் 29, 2008 at 2:04 பிற்பகல்

அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் பெருகி விட்டது, துப்பாக்கி வைத்திருப்பனெல்லாம் கன்சர்வேட்டிவ் என்று கட்டியம் கூறி வெறுப்பை உமிழ்பவர்கள் இதையும் படிக்கவேண்டும்! NRAவின் பக்கத்து நியாயங்கள் அவர்களின் வாழ்க்கையை வாழ்ந்து பார்த்தால்தான் தெரியும். Right to self-defense!

அனைவருக்கு துப்பாக்கியும் தோட்டாவும் கொடுப்பதால் கிடைக்கும் நன்மை பயக்கும் திட்ட வரைவுகள்:

  1. மீசை இருந்தால் ஆம்பளை என்பது பழமொழி. துப்பாக்கி வைத்திருப்பவர் வீரர். அத்துமீறி உள்ளே வருபவர்களை துப்பாக்கியை வைத்து சுட குறி பார்ப்பதற்குள், அவர்கள் உங்களிடமிருந்து ஆயுதத்தைப் பறிப்பார்கள். ‘ஏழைகளுக்கும் தோட்டா‘ என்று இந்தத் திட்டத்திற்கு நாமகரணமிடலாம்.
  2. பாஸ்டன் பக்கம் மாதத்திற்கு இரண்டு குழந்தை (சமீபத்திய இறப்பில் பத்து மாசம் ஒன்றும் மூன்று வயது சிறுவனும்) இறக்கிறார்கள். இந்த மாதிரி துப்பாக்கி வைத்திருப்பவர்களின் வீட்டில், விளையாட்டாக எடுத்து சுட்டுப் பார்த்து ‘மக்கள் தொகையை மட்டுப்படுத்தல் திட்டம்‘ வெற்றிகரமாக என்.ஆர்.ஏ வினால் நடத்தப்படுகிறது.
  3. வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்பதாக காய்கறி கத்தியைக் கூட ஸ்திரமாக பிடிக்கத் தெரியாதவர்கள் கையில் துப்பாக்கியை திணித்து, ‘புல்லாங்குழல் அடுப்பூதும் திட்டம்‘ என நடுநடுங்க வைக்கலாம்.
  4. வீழ்ந்து கிடக்கும் நிதிநிலையை நிலைநிறுத்த, துப்பாக்கி விற்பனையை அதிகரித்து, அதனால் புல்லட் ப்ரூஃப் மேலணி மேனியாவை முடுக்கி, தொடர்ச்சியாக தோட்ட புகமுடியா கார்கள் என்று ‘சந்தைப்படுத்தி சதை துப்பும் திட்டம்’ வரவைக்கும்.
  5. பள்ளிகளில் கடந்த மாதம் எந்தவித தாக்குதலும் நடைபெறவில்லை. (Timeline: US shooting sprees – History of school shootings). இது அமெரிக்க கலாச்சாரத்திற்கு மிகப் பெரிய இழுக்கு. இதைப் போக்க ‘வாசகசாலை சிறார்களை சகட்டுமேனிக்கு சுட்டுத் தள்ளும் திட்டம்‘ அறிமுகம்.
  6. நத்தார் தினம் நெருங்குகிறது. விரும்பிய டிஃபனி பரிசையும் லெக்சஸையும் கொடுக்க முடியாத வறியவர்கள் (பார்க்க #1 ‘ஏழைகளுக்கும் தோட்டா’) கையில் துப்பாக்கியை கொடுத்து அங்காடிகளையும் கடைகளையும் பாதுகாப்பற்றதாக ஆக்கி, பனி விழாத புவிவெப்ப சூழலின் இறுக்கத்தைக் குறைத்து ‘சடலம் விழும் காலம்’ வருகிறது.
  7. மான்களும் மூஸ்களும் இன்னும் கொஞ்ச காலமே காடுகளில் காணக்கிடைக்கும். அதற்குள் பாக்கி இருக்கும் ஒன்றிரண்டையும் ஒழித்துவிட ‘சாரா பேலின் சகாயம்’ உதயம்.
  8. தீவிரவாதி கையில் மட்டும் ஏகே-47 இருக்கிறதே? சஞ்சய் தத் ஆசைப்பட்டதும் இதுதானே! உங்களிடமும் வெடிகுண்டும், ஏவுகணைகளும் கிடைத்தால் ‘பக்கத்து விட்டு பரமசிவத்துடன் பஞ்சாயத்துக்கு செல்லேல்’ என சடக்கென்று பாயும்.

அனானிகள் போலி முகம் கொண்டு அடுத்தவரைத் திட்டுவது போல் அசட்டு தைரியம் கொடுக்க துப்பாக்கி உதவுகிறது.

'என்னவாக இருந்தாலும் தமிழகத் தேர்தல் மாதிரி வருமா?' – வாஷிங்டனில் நல்ல தம்பி

இவரின் முந்தைய பதிவு: மாநாடுகள் குறித்த ஒரு ஒப்பீட்டு அலசல்
தொடர்புள்ள பதிவு: வாக்களித்த வைபவம்மைத்ரேயன்

நேற்று மாலை அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு வந்து கொண்டிருந்த பொழுது 6 மணிக்கே நன்கு இருட்டி விட்டிருந்தது. லேசான மழையில் இலையுதிர்க்கால பொன்னிற இலைகளின் சருகுகளால் சாலையோரங்கள் பொன்னிறக் காசுக் குவியல் போல மழைநீரில் மின்னிக் கொண்டிருந்தன. சிக்னலில் சிவப்பு விழ அநிச்சையாக கால்கள் காரை நிறுத்தின. மழை பெய்யும் பொழுது சிக்னல்களின் மஞசள், சிவப்பு, பச்சைகளை ஒரு வித அழகுடன் மின்னும். மழைக்காலத்து சிக்னல்கள் என் மனதுக்குப் பிடித்த ஒரு காட்சி.

மழையில் நனைந்த சிக்னலனின் ஈரமான சிவப்பை ரசித்துக் கொண்டிருந்த பொழுதுதான் தீடீரென நாளைக்கு எலக்‌ஷன் நாள் என்பது உறைத்து இடது புறம் இருந்த ஓட்டுச் சாவடியாகிய தீயணைப்பு நிலையத்தை நோக்கினேன். சாதாரண நாட்களில் கூட ஒரு சில தீயணைப்பு வண்டிகள் பள பளவென வெளியில் நிற்க ஆளரவம் தெரியும் அந்த நிலையமோ. மழையிலும் இருட்டிலும் அநேகமாக காணாமலேயேப் போயிருந்தது. இந்த இடத்திலா நாளைக்கு சுமார் ஆயிரம் பேர் ஓட்டுப் போடப் போகிறார்கள் என்று. எந்தவித பரபரப்பும் இன்றி இருட்டில் கிடந்தது அந்த தீயணைப்பு நிலையம்.

மழையில் ஊறிய பச்சை மிளிர, கார் முன்னே செல்ல என் நினைவுகள் மெல்ல பின்னே சென்றன. தேர்தல் என்பது இந்தியாவின் பல்லாயிரக்கணக்கான பண்டிகைகளில் தேர்தலும் ஒரு திருவிழாவக மாறிப் போன கால கடத்தில் பல தேர்தல்களைப் பார்த்திருக்கிறேன்.

நம் மக்களுக்கு பரபரபுத் தீனி போடவும், கொண்டாடவும் வம்பு பேசவும் வாய்ப்பளிக்கும் மற்றொரு திருவிழாவாக மட்டுமே நம் தேர்தல்கள் இயங்கி வருகின்றன. உபரியாக தேர்தல் தினங்கள் கிரிமினல்களை உற்பத்தி செய்யும் தினமாகவே மாறி வருகின்றன. தேர்தல் கமிஷன்களின் கெடுபிடியால் திருவிழாவின் உற்சாகம் இப்பொழுதெல்லாம் கொஞ்சம் மட்டுப் பட்டிருக்கும் என்றே நினைக்கிறேன்.

இருந்தாலும் சிறு வயதில் தீபாவளியைப் போலவே தேர்தல் தினங்களும் உற்சாகமளிக்கும் தினங்களாகவே இருந்தன.

நிச்சயம் இந்த அமெரிக்க ஓட்டுச் சாவடி போல களையிழந்த ஒரு ஓட்டுச் சாவடியை இந்தியாவின் மனித நடமாட்டமில்லாத காட்டுப்புற ஓட்டுச் சாவடிகளில் கூடக் காண இயலாதுதான். வாக்குச் சாவடிகள் என்றுமே பரபரப்பான ஒரு வித ஆர்வத்தைத் தூண்டும் இடங்களாகவே உள்ளன. ட்யூப் லைட்டுக்கள், துப்பாக்கிகளுடன் போலீஸ்காரர்கள். கலவரப் பகுதிகளில் சட்டித் தொப்பி போலீஸ்கள், பூத்தைச் சுற்றி சுற்றி வந்து காவல் காக்கும் கட்சிக் காரர்கள், மறுநாள் தேர்தலை நடத்த முந்திய நாளே வந்திருந்து

பள்ளிக்கூடங்களில் தங்கியிருக்கும் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள், அவர்களுக்கு உபசாரம் செய்ய டீக் கடைகள், வரிசை, வரிசையாக வந்து ஏற்பாடுகளைச் சரிபார்க்கும் தேர்தல் அதிகாரிகளின் ஜபர்தஸ்துகள், போலீஸ்காரர்களின் விரட்டல்கள் என்று பூத்கள் மறுநாள் மர்மத்தைத் தன்னிடம் தேக்கி வைத்திருக்கும் ப்ரபரப்பான இடங்களாக்வே இருக்கும்.

தேர்தல் தினத்தன்று ஓட்டுச் சாவடிக்கு 200 அடிக்கு முன்னாலேயே கீற்றினால் வேயப் பட்ட கட்சி அலுவலகங்கள் பரபரப்பாக இயங்கும். கரை வேட்டித் தொண்டர்கள் கைகள் கூப்பி வரவேற்றுக் கொண்டேயிருப்பார்கள். ஒவ்வொரு வீட்டிற்கும் ஓட்டருக்கும் கட்சி சின்னம் பொறிக்கப் பட்ட சின்ன ஸ்லிப் தயார் செய்வது சரிபார்ப்பது அவற்றை வீடுகளில் கொண்டு கொடுப்பது, என்று தேர்தலுக்கு முந்திய நாளும் தேர்தல் நாளும் பரபரப்பாக இயங்கும் தினங்களாகவே இருக்கும்.

வேட்பாளர்கள் கடைசி கடைசியாக வீடு வீடாகப் போய் ஓட்டுச் சேகரிப்பதும் மும்முரமாய் அந்த இரு தினங்களே நடக்கும். வயதான பாட்டி தாத்தக்களை காரில் அழைத்து வந்து ஓட்டுப் போட வைத்து பத்திரிகைகளுக்கு போஸ் கொடுப்பது தனி காமெடியாக இருக்கும். முக்கியமாக தேர்தல் தினங்களில் விடுமுறை இருக்கும். யார் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது கணவன்மார்களால் மனைவிகளுக்கு நினைவுறுத்தப் பட்ட படியே இருக்கும்.

கிருஷ்ணன் நம்பியின் மருமகள் வாக்கு என்ற சிறுகதையில் மாமியாருக்கு ஓட்டுப் போட்டேன் என்று சொன்ன மருமகள் நினவுக்கு வருகிறது. ஓட்டுப் போடும் தினத்தன்று ஃபார்முலா தமிழ் படங்கள் போலவே வெட்டு குத்து கொலை போன்ற வயலன்ஸ் காட்சிகளுக்கும் நம் தேர்தல்கள் குறை வைப்பதேயில்லை. சமீப காலங்களாக தெலுங்குப் படங்களை நிறுவுத்தும் காட்சிகளை தமிழினத் தலைவரும் அவரதம் புத்திரபாக்கியங்களும் குறையில்லாமல் அரங்கேற்றி வருகின்றனர். தமிழகத்தில் தேர்தல் என்றாலே பரபரப்பு மிகுந்த ஒரு மசாலா படத்திற்கு இணையானதாகவே இருந்து வருகிறது.

அமெரிக்காவில் ஓட்டுப் போடும் இடம் என்பது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். எங்கள் தெருவில் தீயணைப்பு நிலையம். பள்ளிக் கூடம், அரசு கட்டிடங்கள் மட்டுமல்லாது யார் வீட்டு கார் நிறுத்தும் காரேஜ் கூட ஓட்டுச் சாவடியாக உருமாறி விடுகிறது. தேர்தல் நாளன்று காலையில் வந்து ஓட்டுப் பெட்டிகளையும் இன்ன பிற சாதனங்களையும் சாவகசாமாகக் கொண்டு வைத்து விடுகிறார்கள்.

இங்கு ஜனாதிபதி வேட்பாளர்கள் தவிர வேறு யார் யார் நிற்கிறார்கள் என்பதை நாம் தான் கண்டு பிடித்துக் கொள்ள வேண்டும். ஒரு சில போட்டியாளர்கள் ஆட்களை வேலைக்கு அமர்த்தி வீட்டுக்குப் ஃபோன் போட்டு ஓட்டுக் கேட்க்கிறார்கள். மற்றவர்கள் சின்னதாக ஒரு சில இடங்களில் போர்டுகள் வைப்பதுடன் தங்கள் பிரச்சாரத்தை நிறுத்தி விடுகிறார்கள்.

தாரை தப்பட்டை, ரெக்கார்ட் டான்ஸ், ஒயிலாட்டம், மயிலாட்டம் போன்றவை முன்னே வர வேட்டிகளும் துண்டுகளும் தரையைத் துடைக்க வரும் வேட்ப்பாளர்களை இங்கு காண முடிவதில்லை. இங்கு தேர்தல்கள் டி வி யில் தொடங்கி டி வி யிலேயே முடிந்து விடுகின்றன. உற்சாகத் திருவிழாக்கள் காணக் கிடைப்பதில்லை. தலைவர்களின் திருமுகங்கள் டி வி யில் மட்டுமே காணக் கிடைக்கின்றன.

இந்தியாவில் தேர்தல் திருவிழாவின் பொழுதுதான் தலைவர்கள் வெளியே வருவார்கள். ஐந்தாண்டுகள் ஓய்வில்லாமேலேயே ஹைதராபாத் தோட்டத்திலும் கொடநாட்டுப் பங்களாவிலும் ஒயாது ஓய்வில் இருக்கும் ஜெயலலிதா கூட தேர்தல் திருவிழாக்களின் பொழுது மக்களுக்குத் தரிசனம் தரத் தவறுவதேயில்லை. தலைவர்கள் மட்டும் என்ன சிவாஜி, எம் ஜி ஆர் தொடங்கி தவக்களை குமரி முத்து வரை நடிகர்களையும் அருகில் இருந்து பார்க்கக் கிடைக்கும் தருணங்களும் இந்தத் திருவிழாக்கள்தானே?

சிவாஜி என்றால் சிவப்பு, பச்சை, மெரூன், அல்லது ஊதா நிறத்தில் பட்டில் செய்த இறுக்கமான ஜிப்பா அணிந்து வருவார். எம் ஜி ஆரோ பள பளக்கும் வெள்ளை வேட்டி சட்டையில் புசு ப்சு தொப்பியும் ஒரு இஞ்சு ரோஸ் பவுடருமாக தரிசனம் தருவார். இன்னும் பல தலைவர்கள் ஜீப்புகளில் கைகளைக் கூப்பிக் கொண்டு நின்று வரும் பிம்பங்களாகவே மனதில் பதிந்து போய் விட்டனர்.

காமராஜர், அண்ணாத்துரை, ராஜாஜி, ஜூப்பில் இருந்து ஊன்று கோலோடு இறங்கிய பி.ராமமூர்த்தி துணையாக ஏ பாலசுப்ரமணியன் போன்ற தலைவர்கள் அவர்கள் நின்று வரும் ஜீப்புடன் சேர்ந்தே என் மனதில் பதிந்து உறைந்து போயினர். இந்திரா என்றால் தலையில் கட்டிய ஸ்கார்ஃப் பட படக்க கூலிங் கிளாசுடன் கன்வெர்டிபிள் காரில் பறந்து செல்லும் படிவம், ராஜீவ் என்றால் ஜிப்சி ஜூப்பில் தொங்கிக் கொண்டு போகும் உருவம், ஜெயலலிதா என்றால் டாட்டா சுமோவில் கண்ணாடிக்குப் பின்னால் அமர்ந்து கொண்டு கையசைக்கும் தோற்றம் என்று வாகனங்களை விலக்கித் தலைவர்களின் உருவங்களை மனக்கண் முன் கொண்டு வர முடிவதேயில்லை. அது போல வாகனங்களில் விரைந்து செல்லும் தரிசனங்களைக் கூட இங்குள்ள தலைவர்கள் தருவதில்லை.

பல்லாயிரம் வாட்ஸ் ஃபோகஸ் லைட்டுக்களின் வெளிச்சத்தையும் மீறி பளீரென்று தோன்றிய அழகி ஜெயலலிதாவின் முகத்தை முதன் முறை கண்ட நினைவை இன்றும் என்னால் மறக்க முடிவதேயில்லை. தமிழ் நாட்டில் எந்தவொரு நடிகைக்கும் இல்லாதிருந்த தோரணை அது. அந்தத் தேர்தலில் ஜெயலலிதாவுக்காக ஓட்டுப் போட்டேன் என்பதைத் தனியாகச் சொல்லத் தேவையில்லை 🙂

அதே அழகும் கவர்ச்சியும் இன்று சாராப் பெல்லனிடம் இங்கு காண்கிறேன். ஜெயலலிதாவிடம் இருக்கும் அறிவு மட்டுமே இவரிடம் மிஸ்ஸிங். மற்றபடி இவர ஒரு ஜெயலலிதாவின் க்ளோனாகவே தோன்றுகிறார்.

ஒரு முறை தாசில்தார் ஒருவர் ஓட்டுச் சாவடி அமைப்பதற்காக மேற்உத் தொடர்ச்சி மலைக்குச் செல்ல நேர்ந்ததையும் யானை துரத்தியதால் வெகு நேரமாக பதுங்கிக் கிடந்ததையும் சொல்லி என் ஆர்வத்தைத் தூண்டி விட்டார். யானைகள், சிறுத்தைகள் அதிகம் உள்ள தொலை தூர மலைக் கிராமம் அது. இந்தியத் தேர்தலகள் இது போன்ற சாகசங்களையும் உள்ளடக்கியது.

என் பக்கத்து வீட்டுக்காரர் எலெக்‌ஷன் டூட்டிக்காக ஒரு ஊருக்குப் போய் விட்டு ரெண்டு கட்சிக்காரர்களுக்குள் சண்டை வந்து விட ஓட்டுப் பெட்டிகளுடன் தூக்கிப் போட்டு இவரையும் கொளுத்த இருந்திருக்கிறார்கள்,. பத்து மைல் தூரம் ஓடி வந்து உயிர் பிழைத்த கதையை இன்றும் சொல்வார். தேர்தல் வேலைக்குப் போவது அப்படி ஒன்றும் சுவாரசியமான காரியமோ, பாதுகாப்பான காரியமோ கிடையாது. உயிருக்கு உத்தரவாதமில்லாத ஓட்டுச் சாவடிகள் இந்தியாவில் லட்சக்கணக்கில் உள்ளன. உயிர் பலி விழாமல் ஒரு பஞ்சாயத்துத் தேர்தலைக் கூட இந்தியாவில் நடத்தி விட முடியாது.

பழைய நினைவுகளுடன் வீடு வந்து உறங்கி காலையில் சற்றுச் சந்தேகத்துடனேதான் ஓட்டுச் சாவடிக்குச் சென்றேன். ராத்திரி ஒருவரைக் கூட காணுமே இன்றைக்கு நிஜமாகவே இந்த இடத்தில் எலக்‌ஷன் நடக்குமா என்றொரு சம்சய்த்தோடுதான் சென்றேன்.

வீட்டிலிருந்து ஒரு இருநூறு அடி தூரத்திலேயேதான் ஓட்டுச்சாவடி (ஓட்டுப் போட்டால் சாவடிப்பார்கள் என்று எவ்வளவு முன்யோசனையுடன் பெயர் வைத்திருக்கிறார்கள் பாருங்கள்) இருந்தது, காலையில் ஒரு எட்டரை வாக்கில் நடந்தே சென்றோம். வழி மறித்து யாரும் ஓட்டுக் கேட்க்கவில்லை. தோரணங்கள் இல்லை. கொடிகள் இல்லை. ஆரவாரங்கள் இல்லை. ஸ்லிப் கொடுக்க ஆளில்லை.

வயதானவர்களை ஏற்றிச் செல்ல வாகனங்கள் வரவில்லை. கரை வேட்டிகள் இல்லை. பட்டா பட்டி டவுசர்கள் இல்லை, அம்மா இரட்டை இலைக்குப் போடுங்க, ஐயா உதய சூரியனுக்குப் போடுங்கள் என்ற கெஞ்சல்கள் இல்லை. அப்படி ஒரு பேரமைதி,.

தீயணைப்பு நிலையத்தில் இருந்து ஒரு நூறடி தூரத்தில் ஒரு பெண் ப்ரோபிஷன் 8 க்கு நோ என்று ஓட்டுப் போடுங்கள் என்று ஒரு நோட்டீஸ் கொடுத்தார்.

ஃபையர் ஸ்டேஷன் முன்னால் சோம்பலாக ஒரு இருபது பேர்கள் வரிசையில் நின்றார்கள்.

அங்கிருந்த ஒரு வாலண்டியரிடம் ஏனுங்க நிஜமாகவே எலக்‌ஷன் நடக்குதுங்களா என்றேன். ஏன் சந்தேகம் என்றவரிடம் ஒரு போலீசைக் கூடக் காணோமே என்றேன். போலீசா? அவர்கள் எதற்கு என்று சற்றே மிரண்டு போய் என்ன ஏற இறங்கப் பார்த்தார்.

வரிசையில் நகர்ந்து உள்ளே போனோம். முதல் முறையாக ஒரு தீயணைப்பு நிலையத்திற்குள் நுழைந்தேன். உள்ளே எஞ்சினீயரிங் காலேஜ் ஹைட்ராலிக்ஸ் லாப் போல இருந்தது. சுற்றி உயர உயர ஏணிகளை சாத்தியும் நிறுத்தியும் வைத்திருந்தார்கள். மேலே ராட்சச மஞ்சள் வண்ன தண்ணீர் ஹோஸ்கள் ஓடிக் கொண்டிருந்தன. அந்த ஃபயர் ஸ்டேஷனில். இருந்த ரெண்டும் எஞ்சினையும் வெளியே டிரைவ் வேயில் கொண்டு போய் நிறுத்தி உள்ளே ஓட்டுப் போட இடம் தயார் செய்து வைத்திருந்தார்கள்.

எலக்‌ஷனை நடத்தியதும் தொண்டர்களே. அரசாங்க அதிகாரிகள், ஜீப்புகள். ஜபர் தஸ்துகள், கலெக்டர், எஸ் பி விசிட்கள் ஏதும் கிடையாது. நிறைய பேர் குழந்தைகளையும் வேடிக்கை காண்பிக்க அழைத்து வந்திருந்தனர். எனக்கு முன்னால் நின்ற கருப்புப் பெண்மணி தன் பையனையும் பள்ளிக் கூடத்துக்குப் பெர்மிஷன் சொல்லி விட்டு அழைத்து வந்திருந்தார். அவர்கள் இனத்தில் ஒருவர் பிரசிடெண்டாகப் போகும் வரலாற்றுத் தருணத்தைத் தன் பையனும் காண வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்த பரபரப்பு அவரிடம் தெரிந்தது.

எல்லோரிடமும் ஒரு வித தோழமையும் புன்னகையும் தவழ்ந்து கொண்டிருந்தது, மாற்றம் வரப் போகிறது என்று சொல்லாமல் சொல்லிக் கொண்டன அந்தப் புன்னகைகள். அனேகமாக 90 சதம் ஒபாமாவுக்கு ஓட்டுப் போடும் கூட்டம் அது. நாங்கள் ஓட்டுப் போடுவதை வேடிக்கைப் பார்க்க சில வயதான இந்தியர்கள் கூடியிருந்தார்கள். யாரையும் யாரும் விரட்டவிலலை. எந்த விதமான கெடுபிடிகளோ பரபரப்புக்களோ இல்லை.

ஒரு பாட்டி என் பெயரைச் சரிபார்த்து இவ்வளவு நீள பெயரை என் வாழ்நாளில் உச்சரிக்க முடியாது டியர் வெரி சாரி என்று சொல்லி, பட்டியலில் இருந்த என் பெயருக்கு மேலாக ஒரு அடிஸ்ஸ்கலை வைத்து பென்சிலால் பெயரை அடித்து விட்டு என்னிடம் வாக்குச் சீட்டைக் கொடுத்தார்.

கையில் மை வைப்பது எல்லாம், இல்லை. ஒரு ரெஜிஸ்டரில் கையெழுத்து வாங்கிக் கொண்டார்கள் அவ்வளவுதான். அதை ஓட்டுச் சீட்டு என்று சொல்வது அபத்தம்,. ரெண்டு பக்கங்களும் 26 தேர்தல்களும் அடங்கிய பெரிய லிஸ்ட் அது. ஜனாதிபதி தேர்வில் ஆரம்பித்து உள்ளூர் முனிசிபாலிட்டி ஸ்கூல் போர்டு வரைக்கும் மொத்தம் 16 பதவிகளுக்கான வாக்கெடுப்புக்களும், ஒரு 10 பிரசின்னைகளுக்கான வாக்கெடுப்புக்களும் நிரம்பியிருந்தன,.

ஜனாதிபதி வேட்பாளர் தவிர பிற பதவிகளுக்குக் குத்து மதிப்பாக ஒரு பெயருக்கு நேர் கோடு போட்டோம். ஆம் பேனாவால் நாம் விரும்பும் பெயருக்கு நேராக ஒரு கோடு கிழிக்க வேண்டும். நம்ம ஊர் மாதிரி முத்திரை குத்துவது எல்லாம் கிடையாது. பல பிரச்சினைகளுக்கான கேள்விகள் குழப்பமான வாக்கிய அமைப்புகளாக இருந்தன.

படித்துப் பார்த்து ஓட்டு போட்டால் சரியாகத் தப்பாகப் போட்டு விடும் விதத்தில் கேள்விகளை மிகப் புத்திசாலித்தனமாக அமைத்திருந்தனர் முட்டாள்கள்.

உதாரணமாக ப்ரோபிஷன் 8: ஓரினபாலர் திருமணத்தைத் தடை செய்ய வேண்டும். இதற்கு யெஸ் என்று கோடு கிழித்தால் ஆம் தடை செய்ய வேண்டும் நோ என்பதற்கு நேர் கோடு கிழித்தால் ஓரின திருமணத்தைத் தடை செய்யும் முயற்சியைத் தடை செய்ய வேண்டும் என்று விசு பட வசனம் போலக் கேள்விகள் அமைந்திருந்தன.

இப்படி ஒரு குப்பாச்சு குழப்பாச்சாக ஓட்டுச் சீட்டை வடிவமைத்தால் எப்படி ஜனநாயகம் வெளங்கும்? ஓரினத் திருமணத்தை தடை செய்ய வேண்டுமா வேண்டாமா?, ரெண்டு நகரங்களுக்கு இடையில் ரெயில் விடலாமா வேண்டாமா? மிருகங்களைச் மாமிசத்திற்காகக் கொல்வதற்கு முன்னால் அவைகளைச் சுதந்திரமாக இருக்க விட வேண்டுமா வேண்டாமா? விபச்சாரத்தை சட்டப் படி அனுமதிக்கலாமா வேண்டாமா? உள்ளூர் பார்க்குகளை மேற்பார்வை செய்ய வரி விதிக்கலாமா வேண்டாமா என்பது போல ஒரு பத்து வேண்டுமா வேண்டாமா ஓட்டுக்களுக்கும் வாக்கிழித்தோம்.

இவர்கள் எலக்‌ஷன் நடத்தும் விதம் அப்படி ஒன்றும் திருப்திகரமாக இல்லை. அமெரிக்கா இந்த விஷயத்தில் இந்தியாவிடம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். அல்லது டி என் சேஷனிடம் இந்த வேலையை அவுட் சோர்ஸ் செய்து விட வேண்டும். 200 வருடங்களுக்கு மேலாகியும் ஒரு எலக்‌ஷனை ஒழுங்காக நடத்தத் துப்பில்லாத ஒரு தேசமாகவே இருப்பதாகத் தோன்றுகிறது.

நானும் என் மனைவியும் ஓரமாக உட்கார்ந்து கொண்டு ஆலோசனையெல்லாம் செய்து கோடு கிழித்து, கோடு கிழித்து ஓட்டுப் போட்டுக் கிழித்தோம். எல்லா தேர்வுகளுக்கும் சரியாகத் தப்பாகக் கோடு கிழித்த பின்னால் பூர்த்தி செய்த பாலட்டை ஒரு குப்பைத் தொட்டி போன்றிருந்த மெஷினில் உள்ளே கொடுத்தோம். அது உள்ளே வாங்கிக்க் கொண்டு 111 என்று எனது எண்ணைக் காட்டியது.

காலை 6 மணி முதல் 9 வரை மொத்தம் 111 பேர்கள் போட்டிருந்தனர். பலர் ஏற்கனவே ஓட்டுப் போட்டு போஸ்டலில் அனுப்பி விட்டார்கள். நேரில் வந்து போடுபவர்கள் மிகக் குறைவாக இருந்தது. ஓட்டுச் சீட்டை அந்தக் குப்பைத் தொட்டிக்குள் போட்ட்வுடன் ஒருவர் ஐ வோட்டட் என்றொரு ஸ்டிக்கரைக் கொடுத்தார்.

அமெரிக்க வரலாற்றின் ஒரு முக்கியமான தேர்தல் முதல் முறையாக ஒரு ஆப்பிரிக்க அமெரிக்கர் முக்கிய பதவிக்கு வரப் போகும் எலக்‌ஷன். வரலாற்றில் நானும் ஒரு அங்கமாக இருந்தேன் என்று சொல்லிக் கொள்ளலாம்

வாக்களித்த வைபவம் – மைத்ரேயன்

இவரின் முந்தைய பதிவு: ஒபாமா ஜனாதிபதியானால் என்ன செய்வார்?

இங்கே வாக்களித்து விட்டேன்.

நானும் இன்று வாக்குச் சாவடிக்குப் போனேன். சிறிது மழையில் வீடுகளெல்லாம் நனைந்திருந்தன. நல்ல குளிர். காலை 7.45க்குப் போனால் எப்படி இருக்கும்?

வழக்கமாக வீடுகளெல்லாம் கோடை முடிவதற்குள் வெளிப்பக்கம் அடிக்க வேண்டிய (தேவையாய் இருந்தால்) பெயிண்ட் எல்லாம் அடித்து, கூரைகளை எல்லாம் புதிதாக்கி 90 சதவீதம் வீடுகள் புதுப்பிக்கப் படும் ஒரு பகுதியில் இருக்கிறேன். இந்த வருடம், சென்ற வருடம் போலவே, மக்களின் நிதி நிலை சரியில்லை என்பது தெரிய வர ஆரம்பித்திருக்கிறது. ஒரு தெளிவான வேறுபாடும் புலப்படுகிறது.

காலை இளம் வெயிலில் அந்த ஈரப் பிசுபிசுப்பு உள்ள மெலிய குளிர் காற்றில் நடக்கையில் பல வீடுகள் தம் பொலிவிழந்து காணப்பட்டது புலப்பட்டதில் சிறிது யோசித்ததில் அவை அனேகமாக வயதான மனிதர்கள் வாழும் வீடுகள் என்பது புலப்பட்டது. ஓய்வு ஊதியம், சேமிப்பில் காலம் தள்ளும் மனிதருக்கு வயதானவருக்கு இந்த வருடங்கள் நல்ல வருடங்களே அல்ல.

ஓரளவு பார்க்கப் புதிதாகவும் நல்ல பராமரிப்பிலும் இருந்த வீடுகள் தெருவில் எவை என்றால் புதிதாய்க் குடி வந்தவர்கள், இளம் குழந்தைகள் உள்ளவர்கள், இருவரும் வேலைக்குப் போகும் மனிதர் உள்ள வீடுகள் இப்படி. இன்னும் வேலை பார்க்கும் குடும்பங்களால் இந்தக் கஷ்ட காலத்திலும் அதிகம் பிரச்சினை இல்லாமல் காலம் தள்ள முடிகிறது போலும்.

கூட என் மகள் வந்தாள். கல்லூரியில் இருந்து நேற்று இரவே வந்து விட்டாள்.

ப்ரைமரியில் முதல் தடவையாக வாக்களித்தாள். அவளுடைய மொத்த ஹாஸ்டலும் ஒபாமா என்று தெரிவித்தாள். சிலர் பழமைப் பார்வை உள்ளவர்கள்- மகெய்ன் ஆதரவாளர்கள் உண்டு, ஆனால் ஒபாமாவுக்கு உள்ள பெரும்பான்மை ஆதரவால் மௌனம் காக்கிறார்களாம்.

அவளுக்கு இந்தத் தேர்தலில் வாக்களிப்பதில் மிக மகிழ்ச்சி, பெருமை. அவளை விட வாக்குப் போட உரிமை பெற பல ஆண்டுகள் இன்னும் இருக்கும் மகனுக்கு ஒரே துடிப்பு, தானும் வருவேன் என்று. அம்மாவோடு போ என்று சொல்லி, பள்ளிக்கு அனுப்பி
வைத்தேன்.

பெயரைக்கேட்டு சிறிது திக்குமுக்காடினார் வாக்காளர் உதவியாளர். வயதானவர். ஒரு பென்சில் டிக் போட்டு விட்டு அடுத்த மேஜையில் வாக்குச் சீட்டு கொடுத்தவரிடம் அனுப்பினார்.

சீட்டு கையில். பெண் ஒரு பூத் போன்ற இடத்தில் எல்லாவற்றிலும் வாக்கு போட்டாள். நான் ஒரு மேஜையில் அமர்ந்து கவனமாகக் குறித்தேன். இருவரும் ஓட்டுப் போட அந்த எந்திரத்துக்கு அருகில் போகையில் ஒரு போலிஸ்காரர், மேஜையில் அமர்ந்து பெயர், முகவரி கேட்டார். சொன்னதற்கு அவரும் ஒரு டிக் போட்டுக் கொண்டார் (நோட்டுப் புத்தகத்தில்).

Optical scanner எந்திரத்தருகே இருந்த பெண்மணி என் மகளிடம் இதுதான் முதல் தடவையா பெண்ணே என்றார். இல்லை, ப்ரைமரியில் வாக்களித்தேன் என்றாள்.

வாக்காளருக்கு உதவி செய்பவர்கள் சார்பின்றி இயங்க வேண்டும் என்று ஒரு விதி உண்டு. என்றாலும் மகளுடைய உற்சாகத்தைப் பார்த்து அவ்ருக்கும் உற்சாகம்.

Exciting isn’t it? என்றார்.

ஏன் அப்படிச் சொல்கிறார் என்று எங்கள் மூவருக்கும் தெரியும். சிரித்து விட்டுத் தலை அசைத்தோம். அந்த எந்திரத்துக்குப் போவதற்குள், ஒரு சர்ச்சுடைய பெரிய சமுகக் கூட்ட அறையான அந்த பெரிய கூடத்தில் நாங்கள் பல கருப்பர்களைக் கடந்தோம். அவர்களில் சிலர் வாக்காளர், சிலர் உதவியாளர். நாங்கள் ஒருவரை ஒருவர் பார்த்துப் புன்னகைத்துக்
கொண்டோம்.

சொல்லாமல் சொல்வது ஊக்குவிப்பது பாராட்டுவது வாழ்த்துவது எல்லாம் அந்தச் சிறு சிரிப்புகளில் பரிமாறப்பட்டன. அதே பரிமாறல் இந்த நடுவயதைத் தாண்டிய வெள்ளைப் பெண்மணியுடனும் நடந்தது.

வெளியே வந்தோம். சரித்திரம் நிகழ்ந்தது, அதில் நாம் ஒரு சிறு பங்கு வகித்தோம் என்று எங்களுக்குத் தெரிந்திருந்த ஒரு அதிசய நேரம் அது.

ஜனாதிபதி பராக் ஒபாமா – வாழ்த்துகள்

போடுங்கம்மா வோட்டு!

வாக்கு போட்டாச்சா?

நன்றி: GOOD » Project 001: If You Can Read This…»

இன்று இரவு மெகயின் ஏன் ஜெயிக்கக் கூடும்?

முதலில் வீடியோ பார்த்துவிடவும்: (இறுதி வரை பார்க்கவும்)

அமெரிக்காவில் ஈகோ முக்கியம். தோல்வி என்பது அகராதியில் கூடாது. இராக்கில் பின்வாங்கும் ஒபாமாவுக்கு வாக்கா? அல்லது வெற்றித் திருமகன் ஜான் மெகயினா?

போரில் சிறைபிடிக்கப்பட்டாலும் உள்ளந்தளராத உத்தமர் மெகயின் என்பது முதற் காரணம்.


அடுத்த வீடியோவும் அமெரிக்கர்களின் மனவோட்டத்தை சொல்கிறது:

நீங்கள் சம்பாதிக்கும் ஓரணாவில் இருந்து அரையணாவைப் பிடுங்கி, பிச்சையெடுப்பவருக்கு தரும் ஒபாமாவுக்கு ஓட்டா? அள்ளது சோம்பேறிகளை உழைத்து சம்பாதித்து முன்னேறச் சொல்லும் ஜான் மெகயினா?

கிடைக்கிற சம்பளத்தை சுளையாக வீட்டுக்கு எடுத்துப் போக சொல்பவரா? ஈட்டிக்கடைகாரராக பாதி பிடுங்கிக் கொள்பவரா?

மெகயின் வருமான வரிவிலக்கு தருவார் என்பது இரண்டாவது காரணம்.


தொடர்புள்ள இடுகைகள்:

1. அசலாக சொன்ன பத்து காரணங்கள்: ஏன் மெகயின்?

2. அமெரிக்க தேர்தல் களம், பாஸ்கர் – உயிரோசை:

மெகைனின் திட்டத்தைப் பொறுத்த வரை கார்ப்பரேட் நிறுவனங்களின் வரியை 35% இல் இருந்து 25% குறைப்பது, புஷ் தற்காலிகமாக அறிமுகப்படுத்திய வரிக் குறைப்பை நிரந்தரமாக்குவது, முக்கியமாக அரசாங்கத்தின் செலவைக் குறைப்பது முதலானவை பிரதான அம்சங்கள். ஈராக்கில் உள்ள ராணுவத்தை இப்போதைக்கு, திரும்ப அழைக்க முடியாது என்ற நிலைப்பாட்டைக் கொண்டுள்ளார் மெகைன்.

தமிழ்ப்பதிவுகளில் அமெரிக்க அதிபர் தேர்தல்

ஒரு அகதியின் நாட்குறிப்பு

அமெரிக்காவின் 44வது ஜனாதிபதியாக பராக் ஒபாமா தேர்ந்தெடுக்கப்படும் சாத்தியக்கூறுகள் மிகப்பிரகாசம் – பேராசிரியர் எரிக் அஸ்லானர் நேர்காணல் :: வீரகேசரி நாளேடு – 10/27

கேள்வி: இலங்கை போன்ற நாடுகளில் கடைசி நேர அனுதாப அலைகள் தேர்தல் முடிவில் தாக்கம் செலுத்துவது வரலாற்றில் நிருபணமாகியுள்ளது அந்தவகையில் தற்போது பின்னிலையிருக்கும் மக்கெய்னுக்கு சாதகமாக ஏதேனும் திடீர் திருப்பங்கள் ஏற்படச்சாத்தியமுள்ளதா?

:::
கேள்வி: இந்தத்தேர்தலுக்கு முன்னர் அதிகம் அறியப்படாத பராக் ஒபாமாவின் எழுச்சிக்கு காரணம் யாது?

பதில்:

  • ஒபாமா ஒரு ரொக் இசைக்கலைஞர் போன்று மக்களை வசீகரிக்கக்கூடிய அபார பேச்சாற்றல் மிக்கவர்
  • தேர்தலில் முன்பெல்லாம் அதிக நாட்டங்காண்பிக்காத இளைஞர் யுவதிகளை தேர்தல் பிரசார மேடைகளுக்கு இழுத்துவந்தமை அவரது வெற்றிக்கு காரணம்
  • இணையம் கைத்தொலைபேசி குறுஞ்சேவை உட்பட நவீன தொலைதொடர்பு சாதனங்களை மிக உச்சளவில் பயன்படுத்தியமையும் அவரது ஏற்றத்திற்கு காரணம்

ஏன் ஒபாமா வெற்றி பெற வேண்டும்?

– முனைவர் நாகேஸ்வரி அண்ணாமலை

மிகவும் நோயுற்றிருக்கும் அவருடைய தாய் வழிப் பாட்டியைப் பார்க்க ஹவாய்க்குப் போயிருக்கும் ஒபாமா தான் அமெரிக்கப் பிரஜை இல்லை என்பதற்கான ஆவணங்களை அழிக்கப் போயிருக்கிறார் என்ற வதந்தியைக் கிளப்பியிருக்கிறது.

:::

ஸ்பெயினைத் தோற்கடித்து கியூபாவை அமெரிக்கா தன் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்தது. அது மட்டுமல்ல, பிலிப்பைன்ஸ், போர்ட்டரீகோ மற்றும் பசிபிக் கடலில் உள்ள குவாம் என்னும் தீவு ஆகியவற்றையும் தன் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்தது.

:::

இந்திய பத்திரிக்கையாளர் எம்.ஜே. அக்பர் கூறுவது போல் உள்நாட்டைப் பொறுத்தவரை அமெரிக்கா ஜனநாயக நாடு என்றாலும் உலகைப் பொறுத்தவரை ஒரு சர்வாதிகாரி.

:::

அமெரிக்காவின் முழு ஆளுமையிலிருந்து இந்தியாவைக் காப்பாற்றிய பெருமை, மறைந்த பாரதப் பிரதமர் இந்திரா காந்தியைத்தான் சேரும்.

:::

தன் சிறு வயதில் இந்தோனேஷியாவின் ஜாகர்த்தாவில் வளர்ந்து வந்த போது எப்போதும் சண்டை போட அமெரிக்கா தயாராக இருப்பதையும், தன்னுடைய பொருளாதார அமைப்பை மற்ற நாடுகளின் மீது திணிக்க விரும்புவதையும், தன் நலனுக்காக ஊழல் நிறைந்த சர்வாதிகார்களை அமெரிக்கா ஆதரித்து வந்ததோடு அந்த நாடுகளில் நடக்கும் ஊழலைக் கண்டுகொள்ளாமல் இருந்ததையும் அறிந்ததாகவும் தன் புத்தகத்தில் கூறியிருக்கிறார்.


ஒளியேற்றுவாரா ஒபாமா

ஸதக்கத்துல்லாஹ், கடையநல்லூர்

அமெரிக்கத் தேர்தல் முடிவை விட அங்குள்ள மக்கள் அதிகம் எதிர்பார்ப்பது பொருளியல் பிரச்சினைக்கான தீர்வைத்தான். ஓராண்டுக்கு முன் அதிபர் தேர்தல் பிரசாரம் தொடங்கியபோது, அமெரிக்கப் பொருளியல் நிலைத் தன்மையோடு இருந்தது.


4. Conservative Tamils for McCain | Asian Americans for McCain

உங்களுக்குப் பிடித்த அமெரிக்க ஜனாதிபதி யார்?

அமெரிக்க அதிபராக நடித்தவர்களுள் ஹாரிஸன் ஃபோர்ட் மிகவும் சிறப்பாக மிளிர்ந்ததாக கருத்துக்கணிப்பு வந்துள்ளது.

குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடும் ஜான் மெகயினுக்கும் ஹாரிசன் போர்டுக்கும் ஆறு வயசுதான் வித்தியாசம். இரண்டாம் நிலையில் ஆப்பிரிக்க அமெரிக்கரான ஒபாமாவை ஒத்த மார்கன் ஃப்ரீமன் வந்துள்ளார்.

செய்தி: Harrison Ford voted best U.S. movie president | Entertainment | Reuters

தலை ஐந்து நடிகர்கள்:

1. Harrison Ford in Air Force One

2. Morgan Freeman in Deep Impact

3. Michael Douglas in The American President

4. Bill Pullman in Independence Day

5. Kevin Kline in Dave.

அது சரி. ‘தமிழக முதலமைச்சர்களாக எவ்வளவு பேர், எந்த எந்தப் படங்களில் நடித்திருக்கிறார்கள்?’ என்று ட்விட்டரில் கேட்டதற்கு வந்த பதில்கள்:

வாஸந்தி: 'தமிழ்நாட்டிற்கும் ஒபாமா தேவை'

ஒபாமா: மாற்றத்தின் மந்திரச் சொல் : வாஸந்திஉயிர்மை

ஒபாமா எழுதியிருக்கும் The audacity of hope‘ என்ற புத்தகத்தைப் படித்துக் கொண்டிருக்கிறேன். அமெரிக்க அரசியலின் மிக அருமையான அதன் அலசலும் பட்சமற்ற விமர்சனமும் புதிய அறிவார்த்த முதிர்ச்சி மிகுந்த பார்வையும், அதில் தொனிக்கும் நேர்மையும் என்னை ஆட்கொள்கிறது.

:::

கருப்பர் என்பதால் பேச்சில் காழ்ப்பையோ, சரித்திர கால உள்ளார்ந்த வெறுப்போ பேச்சில் காண்பிப்பதில்லை.

::

அமெரிக்காவில் மட்டுமல்ல, இன்றைய தமிழ் நாட்டு அரசியல் சூழலிலும் மாறுபட்ட சிந்தனைக்கு ஒரு அவசரத் தேவை ஏற்பட்டிருகிறது.

  • கண்ணியமும் நாணயமும் மிக்க பரந்த உலகளாவிய பார்வைக்கு இடம் தேவை.
  • புதிய எழுச்சி மிகுந்த நேர்மையான பார்வை.
  • பலகாலமாக சித்தாந்தம் கொள்கை தமிழ் உணர்வு என்கிற போர்வையில் எழும் கூக்குரல்களும் அரங்கேறும் நாடகங்களும் மக்களுக்கு அலுத்துவிட்டன.
  • யாருக்காகக் குரல் கொடுக்கப் படுவதாகச் சொல்லப்படுகிறதோ அவர்களுக்கு நிச்சயம் உதவுவதாக இல்லை.
  • நாட்டுப் பற்று, மக்கள் நலன் என்பது வெற்று கோஷங்களில் நீர்த்துப் போகின்றன.
  • அரசியல் அரங்கில் இருக்கும் போட்டா போட்டிகளும் தலைவர்கள் ஒருவரை ஒருவர் நாகரீகமில்லாமல் சாடுவதும் சோர்வைத் தருகிறது.
  • எல்லாவிஷயங்களும், எல்லா துயரங்களும்- வெள்ளச் சேதம், சுனாமி சேதம், மனித உறிமை மீறலினால் அவதியுறும் இலங்கைத் தமிழர் பிரச்சினை என்ற எல்லாமே அரசியலாக்கப்பட்டு அவற்றில் சுயலாபத்தைத் தேடும் அவலமாகிவிட்டது.
  • உண்மையான மனித நேயக்குரல்கள் அடிபட்டுப் போகிண்றன.

நமது தலைவர்கள் ஏதோ ஒரு சக்கிரவியூகத்தில் மாட்டிக்கொண்டு அவஸ்தை படுவதுபோல இருக்கிறது.

முழுக்கட்டுரையின் பிரதி இனியொரு வலையகத்திலும் கிடைக்கிறது.

பணம் படைத்தவன்

விவரிப்பு:

  • அமெரிக்காவின் முக்கிய தொலைக்காட்சி எல்லாவற்றிலும் பராக் ஒபாமாவின் அரை மணி நேர விளம்பரம் ஒளிபரப்பாகியது.
  • பெரும்பாலான அமெரிக்கர்கள் டிவியின் முன் உட்காரும் இரவு எட்டு மணிக்கு ஒளிபரப்புவதற்காக சற்றேறக்குறைய ஐந்து மில்லியன் டாலரை ஒபாமா கரைத்துள்ளார்.

வியப்பு:

  • சன், ஜெயா, மக்கள், கலைஞர் எல்லாவற்றிலும் ஒரு கட்சி ஒரே சமயத்தில் பிரச்சாரம் செய்யும் சூழல் இல்லாத தமிழ்நாடு.
  • எதிராளிக்கு சம இடம் தராமல், தனியாளாக பிரச்சார போதனை செய்யும் அமெரிக்க நிலை.
  • பொது நிதியை மட்டும் பயன்படுத்தி மெகயினோடு சமமாக மோதுவேன் என்னும் வாக்குறுதி காற்றில் பறந்த மாதிரி இதுவும் பார்வையாளர் காதில் பூச்சூட்டலோ?

விளம்பரம்:

விமர்சனம்:

  • ஒபாமாவின் பிரச்சாரம் போலவே விளம்பரமும் அமைந்திருந்தது. நிறைய வசனம்; கொஞ்சமாய் கொள்கை விளக்கம்.
  • தன்னுடைய அம்மாவின் கடைசி காலம், மருத்துவ செலவுகளோடு மன்றாடுவதை சொல்லி அனுதாபம் தேடியது.
  • குழந்தைகள், தாத்தா, பாட்டி, குடும்பம் என்று ஒபாமாவின் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கும் விமர்சனங்களுக்கு பதில் தந்தது.
  • நிகழ்ச்சி முழுக்க சோகமயமாக, அமெரிக்காவின் எதிர்காலம் குறித்த பயமுறுத்தல்களைக் கொடுத்தது. ‘நான் ரொம்ப செலவழிக்கிறேனோ? வேலை போயிடுமோ??’ என்னும் அச்சமூட்டுவதாக அமைந்தது.
  • இறுதியாக நேரடி ஒளிபரப்பாக ஃப்ளோரிடா பேச்சைக் காட்டினார்கள். டிவியில் பார்க்கும் போதே உத்வேகம் எழும்பியது.

விளைவுகள்:

  • ஒவ்வொரு முறை டிவியில் தோன்றிய பிறகும் ஒபாமாவின் செல்வாக்கு உயர்ந்துள்ளது. இந்த முறையும் வாக்காளர்களிடையே மதிப்பு உயரலாம்.
  • ஜனநாயகக் கட்சி மாநாட்டில் வெள்ளை மாளிகை போல் மேடை அமைத்தார். இதில் ஜனாதிபதி அறை போன்ற தோற்றம், மக்களிடையே ‘இவர்தான் தலைவர்’ என்னும் பிம்பத்தை வளர்க்கலாம்.
  • அரை மணி முழுக்க ‘வரி விலக்கு’ என்பதே தாரக மந்திரமாக உச்சாடனம் செய்யப்பட்டது. சில சமயம் மெகயின்/குடியரசுக் கட்சி விளம்பரமோ என்று எண்ண வைக்குமளவு.
  • பென்சில்வேனியா உழைப்பாளிகள் முதல் ஃப்ளோரிடாவின் முதிர்ந்தோரைக் குறி வைத்த நிகழ்ச்சி. இந்த விளம்பரம் அவர்களை ஒபாமா பக்கம் சாயவைக்காது.
  • ஹில்லரியின் ப்ளூ காலர் வெள்ளைக்காரர்களையும் பேலின் வந்ததால் குடியரசுக் கட்சி வாக்காகி போன பெண்களையும் இந்த மாதிரி கவர்ச்சிகள் ஈர்க்குமா? அடுத்த வாரம் தெரிந்துவிடும்.

விளம்பரத்தின் உரை வடிவம்: Complete Text (and video) of Barack Obama campaign infomercial | Top of the Ticket | Los Angeles Times

அலசல்: All Obama, all the time – 2008 Presidential Campaign Blog – Political Intelligence – Boston.com