Category Archives: ஜனநாயகம்

தொலைக்காட்சி விளம்பரம் – செலவு எவ்வளவு?

செலவழித்த கணக்கு

  1. பராக் ஒபாமா: $145,064,338
  2. ஜான் மெகயின்: $90,415,962
  3. T. Boone Pickens: $24,026,256
  4. குடியரசுக் கட்சி: $10,080,774
  5. அமெரிக்க ஒய்வுற்றவர்கள் சங்கம்: $7,098,639
  6. முன்னாள் இராணுவ வீரர்கள் சங்கம் (Vets for Freedom):$3,899,753
  7. பள்ளி, படிப்பு, ஆசிரியர் சங்கம் (Strong American Schools):$3,075,462
  8. American Issues Project: $2,287,945
  9. S.E.I.U.:$2,019,476
  10. One Campaign (one.org):$1,451,238
  11. MoveOn.org: $1,448,331
  12. உடல்நலம், காப்பீடு சங்கம் (Health Care First): $1,397,726
  13. RightChange.com:$1,377,003
  14. Healthcare for America Now: $922,618
  15. Committee for Truth in Politics: $734,479
  16. United Auto Workers:$489,517
  17. ஜனநாயகக் கட்சி: $436,015
  18. திட்டமிடப்பட்ட தாய்மை (Planned Parenthood):$321,269
  19. கருக்கலைப்பு எதிர்ப்போர் சங்கம் (Vitae Society):$258,710
  20. முன்னாள் இராணுவ வீரர்கள் VoteVets:$201,752
  21. Let Freedom Ring:$197,030
  22. Judicial Confirmation Network:$192.882
  23. BornAliveTruth.org: $165,948
  24. விலங்குகள் பாதுகாப்பு/நல சங்கம்: $128,735
  25. தொழிற்சங்கங்கள்: $123,274
  26. Citizens United: $88,002
  27. U.F.C.W.:$85,012
  28. PowerPAC: $80,383
  29. California Nurses Association: $60,162
  30. Bring Ohio Back: $40,457
  31. Matthew 25 Network:$8.858
  32. Brave New PAC and Democracy for America: $3,293
  33. கறுப்பர் தொலைக்காட்சி: $3,036
  34. மதம்/கடவுள்/யேசு கிறிஸ்து – pH for America:$2,2,42
  35. Denver Group:$1,102

விளம்பர மோதல் (நியு யார்க் டைம்ஸ்):

தொலைக்காட்சி விளம்பர – வாரம் வாரியாக:

நன்றி:

1. The Ad Wars – Election Guide 2008 – The New York Times: “About $300 million has been spent from April 3 to Oct. 13, 2008 to broadcast over 200 ads, according to statistics compiled by Campaign Media Analysis Group, which tracks political advertising expenditures.”

2. Nearing Record, Obama’s Ad Effort Swamps McCain – NYTimes.com: “Senator Barack Obama on Friday in Roanoke, Va. Analysts say his campaign is on pace to surpass next week the record of $188 million in advertising spending in a general election.”

3. Day’s Campaigning Shows an Inverted Political Plane – NYTimes.com: “There was the feel of a political world turned upside down on Saturday as Senator John McCain found himself defending North Carolina and Virginia, while Senator Barack Obama was greeted by huge crowds in Missouri, which Republicans had also considered safe just months ago.”

'நான் சம்பாதிப்பதை அரசாங்கம் பிடுங்கிக் கொள்ளலாமா?' – ஜோ

கடந்த ஞாயிறன்று பராக் ஒபாமா ஒவ்வொரு தெருவாக சென்று வாக்கு சேகரித்தார். அப்பொழுது குழாய்களை சரி செய்யும் ஜோ (Joe Wurzelbacher) என்பவர் கேட்ட கேள்விக்கு விரிவாக பதிலளிக்கிறார்:

வருடத்திற்கு 250,000 டாலருக்கு மேல் சம்பாதிக்கும் என்னை மேலும் வரி போட்டு வாட்டுவது சரியாகுமா? என்பது அவருடைய கேள்வி.

விவாதம் முடிந்தவுடன் சிபியெஸ் தொலைக்காட்சியின் கேட்டி கௌரிக் உடன் ஜோ உரையாடினார். அந்த ஒளிப்பதிவு மற்றும் பேட்டி:
Joe The Plumber's Chat With Couric – Horserace

மேலும் விவரங்களுக்கு: And Then There’s Joe – The Caucus Blog – NYTimes.com

அமெரிக்காவில் தேர்தல் தில்லுமுல்லு – மெகயினை வெல்லவைக்கும் சூட்சுமம்

அமெரிக்க அதிபர் தேர்தல் 50 மாகாணங்களிலும் நடந்தாலும் சில இடங்கள் அதி முக்கியத்துவம் வாய்ந்ததாக அறியப்படுகிறது.

எடுத்துக்காட்டாக, நியு யார்க் மாநிலத்தில் ஜான் மெகயின் வெல்வதற்கு வாய்ப்பே கிடையாது. அதே போல் அரிசோனாவிலோ டெக்சாஸிலோ பராக் ஒபாமா ஜெயிப்பதற்கு எந்தவித முகாந்திரமும் இல்லை.

ஆனால், இரு கட்சி வேட்பாளர்களும் சற்றேறக்குறைய சமமாக இருக்கும் மாநிலங்களில் பிரச்சாரம் சூடாக நடக்கிறது. அவற்றில் ஆறு மாநிலத்தில் வாக்காளர் அடையாள அட்டை தருவதற்கு முரண்டு பிடித்திருக்கிறார்கள்.

இளம் ரத்தத்தைக் கவர்வதில் ஒபாமா முன்னணியில் நிற்கிறார்.

தற்போது ஆயிரக்கணக்கானவர்களை வாக்களிக்க விடாமல் தடுப்பதன் மூலம், இந்த மாநிலங்கள் ஜான் மெகயினுக்கு கிடைக்கும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.

சோஷியல் செக்யூரிட்டி அட்டையும் சொந்தப் பெயரும் ஒற்றுமையாக இருப்பது பிரம்மப்பிரயத்தனம். உங்கள் பெயரை பாபி ஜிண்டால் என்று மாற்றிக் கொண்டால், சோஷியல் அட்டையில் சில சமயம் தவறுதலாக ஜிண்டால் பாபி என்று மாற்றி உல்டாவாக்கி விடுவார்கள். அல்லது பாபியை முழுதாக்கி ராபர்ட் ஆக்கி அச்சிட்டிருப்பார்கள்.

ஓட்டுநர் உரிமத்துக்கு பதிலாக சோஷியல் செக்யூரிட்டி எண் கேட்பதால் இந்த மாதிரி தவறு நிகழ்ந்தவர்கள் அனைவருக்கும் ஜனநாயக உரிமை மறுக்கப்படும்.

பிரச்சினை எழுந்துள்ள மாநிலங்கள்:

  1. கொலராடோ – Colorado,
  2. இந்தியானா – Indiana,
  3. ஒஹாயோ – Ohio,
  4. மிச்சிகன் – Michigan,
  5. நெவாடா – Nevada
  6. வட கரோலினா – North Carolina

நன்றி: வாக்காளர் பட்டியலில் நடக்கும் மாற்றங்கள்நியு யார்க் டைம்ஸ்

முழுவதும் வாசிக்க: States’ Actions to Block Voters Appear Illegal – NYTimes.com

மெகயின் பக்கமும் குற்றச்சாட்டுகளை வீசியிருக்கிறது.

ஒருவரையே பன்முறை வாக்களிக்க வைக்கும் திட்டங்களில் ஜனநாயகக் கட்சி இறங்கியுள்ளது என்கிறார்கள்: VOTE-FRAUD-A-GO-GO – New York Post: “ACORN has been implicated in voter-fraud schemes in 15 states – including Ohio, from where The Post’s Jeane MacIntosh reports today that a Board of Elections investigation has unearthed evidence of widespread voter fraud.

Two voters told MacIntosh they had been dragooned by ACORN activists into registering several times – one reporting having signed up ’10 to 15′ times.”

Related

தலையைக் குனிதலும் முதுகைத் திருப்பிக் கொள்ளுதலும்

குடியரசுக் கட்சி வேட்பாளர் ஜான் மகயினுக்கும் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் பராக் ஒபாமாவுக்கும் இடையே இரண்டாவது தருக்கம். இதுவும் நடந்து முடிந்த முதல் விவாதம் போலவே இருந்தது.

அதிரடி மச்சான் கார்னர்:

மெக்கயின்: “நீங்கள் வீடு வாங்கும்போது வீட்டின் விலை இரண்டு லட்சம். தற்போதைய பொருளாதாரச் சரிவினால் வீட்டின் மதிப்பு ஒரு லட்சமாகக் குறைந்துள்ளது. நீங்கள் ஒரு லட்சம் மட்டும் கடனாகக் கட்ட ஆரம்பித்தால் போதுமானது”

என் கருத்து: இதற்கு எவ்வளவு நிதி ஒதுக்க வேண்டும்? இதனால் வீட்டு மனைகளின் விற்பனை நினைத்துப் பார்க்க முடியாத வீழ்ச்சி அடையாதா? அதன் தொடர்ச்சியாக பங்குச்சந்தையும் வீழுமே?

நான் உங்க வீட்டுப்பிள்ளை கார்னர்:

ஒபாமா: 700 பில்லியன் டாலர் மீட்பு மசோதாவினால் நடுத்தரவர்க்கத்தினருக்கு என்ன நன்மை என்பதை சொன்னார். வங்கிகளிடம் வைப்பு நிதி இல்லாத கதையை எளிமையாக சாதாரண பொதுமக்களும் விளங்கிக் கொள்ளுமாறு கதையாக்கினார்.

எ.க.: நடந்ததை நன்றாகத்தான் விளக்குகிறார். பேராசிரியர் ஆயிற்றே!

தர்ம அடி கார்னர்:

மெக்கயின்: “அமெரிக்காவின் இன்றைய நிதிநிலை தட்டுப்பாட்டுக்கான மூல காரணம் ஃபேனி மே மற்றும் ஃப்ரெடி மாக் திவாலனதில் ஆரம்பித்தது. அவர்களின் அதிகாரிகளிடம் மாறாப்பற்றும் விசுவாசமும் உடையவர் ஒபாமா.”

எ.க.: நீங்களும் ஏதோ தேர்தல் பிரச்சாரத்திற்காக பணம் பெற்றுக் கொண்டீர்களே. கூட்டிக் கழித்து பார்த்தால் இரண்டும் ஒன்றுதான் என்று ஒபாமா பதிலடிக்கு மறுப்பு ஏதேனும் உண்டா?

ஏழையின் சிரிப்பில் கார்னர்:

ஒபாமா: “நிறுவன முதலாளிகளின் சம்பளத்தைக் குறைப்பேன். லட்ச லட்சமாக சம்பாதிப்பவர்களின் வரியை உயர்த்தி பாட்டாளிகளின் வரிச்சுமையைக் குறைப்பேன்”

எ.க.: மெகயின்தான் மூச்சுக்கு மூவாயிரத்து நானூற்றியெட்டு தடவை வருமான வரி… வருமான வரி! என்று உச்சாடனம் ஜெபித்தால், நீங்களாவது அவரை வேறு திசையில் அழைத்துச் செல்லுமாறு விவாதிக்கக் கூடாதா?

கேனத்தனமான கேள்வி கார்னர்

விவாதத்திற்கு வழித்துணையாக இருந்த டாம் ப்ரகாவ் கேட்டார்: ‘ருசியா கெட்ட நாடா? நல்ல நாடா? ஆமாம் என்றால் மண்டை ஆட்டவும். இல்லை என்றால் நோ சொல்லவும். வேறு சொல்லக்கூடாது’

எ.க.: இவர்கள் இருவரும் பச்சிளம் பாலகர்களா? இந்த மாதிரி ஒன்றுக்கிருக்க வேண்டுபவர்கள் எல்லாம் ஒன்றாம் எண்ணைக் காட்டுக என்று கேட்பதற்கு 😦

டீச்சர்! இவன் என் பல்ப்பத்தை எடுத்துக்கிட்டான் கார்னர்:

மெக்கயின்: “சிகாகோ கோளரங்கத்திற்காக நிதி ஒதுக்கீடு செய்து கொண்டார் ஒபாமா.”

எ.க.: எக்ஸான் – மோபிலுக்கு வரிவிலக்கு அளிப்பதை விட சிரச்சேதம் செய்யுமளவு மோசடியா என்ன அது?

ஒன்று, இரண்டு மூன்று என்று வரிசைப்படுத்தும் கார்னர்:

ஒபாமா: “உங்க காருக்கு பெட்ரோல் போட எவ்வளவு பணம் செலவழிகிறது? முதலில் அதை கவனிப்பேன். அடுத்து உங்கள் குழந்தைக்கு உடம்பு சரியில்லை என்றால் மொத்த சொத்தையும் பிடுங்கும் மருத்துவத்தை சீர் செய்வேன். மூன்றாவதாக, தற்போதைக்கு ஓரளவு பரவாயில்லையாக இருக்கும் சேமநலநிதி.”

எ.க.: சாவதார கமல் பத்து வேடம் போட்ட மாதிரி மெகயின் எல்லாவற்றையும் நான் பார்த்துக்குவேன் என்று வசனம் பேச முடியுமா?

ஆடை பாதி கார்னர்:

ஜான் மகயினின் மனைவி நீல நிற ஆடையும் பராக் ஒபாமாவின் மனைவி சிவப்பு நிற ஆடையும் அணிந்திருந்தனர்.

எ.க.: தமிழ்நாட்டு அரசியலில் திமுக மகளிரணி பச்சை சேலையும் ஜெ. பேரவை மஞ்சள் சால்வையும் அணிந்து வர முடியுமா?

டாக்சி! டாக்சி! (அ) முஸ்தபா முஸ்தபா கார்னர்:

மெக்கயின்: பத்தொன்பது தடவை ஜான் மகயின் ‘மை ஃப்ரெண்ட்’ துணைக்கழைத்தார்.

எ.க.: வருடத்திற்கு 250,000 டாலருக்கு மேல் சம்பாதிக்கும் அனைவருக்கும் மகயின் ‘மை ஃபிரண்ட்’

கம்ப்யூட்டர் கார்னர்:

ஒபாமா: “கணினிப் புரட்சி போல் அடுத்த யுகப் புரட்சிக்கு வித்திடுவேன். பசுமைப் புரட்சி மூலம் ஐந்து மில்லியன் பேருக்கு வேலைவாய்ப்பு உண்டாக்குவேன். மாற்று எரிபொருளில் முதலீடு செய்வதால் எண்ணெய் மீது இருக்கும் மோகமும் மத்திய கிழக்கு நாடுகளிடம் மயங்கிக் கிடக்கும் அடிமைத்தனமும் விட்டு தூர ஓடும்.”

எ.க.: சண்டைக்குப் போனால்தான் அமெரிக்கா என்பது மாறி, சுற்றுச்சூழல் பாதுகாவலன் அமெரிக்கா என்று மாத்திடுவீங்க போலிருக்கே 🙂

என் கேள்விக்கு என்ன பதில் கார்னர்:

மகயினிடம் கேட்க மறந்த கேள்வி: ஒபாமாவிடம் அவர் கேட்ட மாதிரி அவருக்கு மட்டும் இதற்கெல்லாம் பணம் எங்கிருந்து குதிக்கும்?

ஒபாமா கேட்க மறந்த கேள்வி: மகயின் சோஷியல் செக்யூரிட்டியை பங்குச்சந்தையில் இட்டு தனியார்மயமாக்கப் போவதாக விளம்பரம் செய்வதைப் போல் நேரிலும் விவாதித்து தெளிவாக்கி இருக்கலாமே?

ஒருவரியில் எ.க. கார்னர்:

‘டாம்! டாம்! ஒரேயொரு நிமிஷம் பேசிக்கறேன் டாம்!’: வகுப்பில் கையைத் தூக்கும் சுட்டி மாணவர் ஒபாமா

‘நீ கேட்ட கேள்விக்கு நான் மட்டுமாவது உரிய பதில் தருகிறேன் டாம்!’: அலுவலில் முந்திரிக்கொட்டையாக குதிக்கும் மெகயின்

ஒபாமாவை மெகயின் எவ்வாறு சித்தரிப்பதாக கருதினார்: பச்சப்புள்ள (Green Behind the Ears)

ஒபாமாவை மெகயின் எவ்வாறு சித்தரித்தார்: அது (That One)

மெகயினை மெகயின் எவ்வாறு சித்தரித்துக் கொள்கிறார்: வழுக்கையை ஒப்பேத்த சவுரி வேண்டும் சராசரி (hair transplants)

குற்றஞ்சாட்டப்பட்டபோது தலையைக் குனிந்தவர் – ஒபாமா

தர்மசங்கடமான தகவல் சுட்டப்பட்டபோது முதுகைத் திருப்பிக் கொண்டார் – மெகயின்

இருவருமே கிளிப்பிள்ளை போல் சென்ற தடவை ஒப்பித்ததை மீண்டும் பரிமாற, மீண்டும் மெகயினே மிடுக்குடன் ராஜநடையில் மனதையும்; கம்பீரமான உரையில் ஜனாதிபதித் தோரணையையும் நிரூபித்திருக்கிறார்.

பெட்டர் லக் லாஸ்ட் டைம் ஒபாமா!

உள்ளடக்கமும் உருவமும்: துணை ஜனாதிபதி வேட்பாளர்கள் விவாதம்

அமெரிக்க ஜனாதிபதியாக போட்டியிடும் பராக் ஒபாமாவுக்கு துணையாகப் போட்டியிடும் ஜோ பைடனும், குடியரசுக் கட்சியின் ஜான் மெக்கெய்னுடன் களமிறங்கும் சாரா பேலினும் முதலும் கடைசியுமாக ஒளிபரப்பு செய்யப்பட்ட விவாதத்தில் கலந்து கொண்டனர்.

இந்த விவாதத்தில் யாரும் வெற்றி பெற்றது போல (எனக்குத்) தெரியவில்லை. ஆனால், ஜோ பைடன் வென்றதாக வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். எனினும், சாரா பேலினும் சரிசமமான மனங்களை கவர்ந்திழுத்து, ஏற்கனவே குடியரசு சார்புடையவர்களையும் தக்கவைத்திருப்பார் என்றே எனக்குப் படுகிறது.

ஏன்?

  • ஒபாமாவின் திட்டங்களை பைடன் வலியுறுத்தினார்.
  • ஜான் மெகயினை மிகக் கடுமையாக தாக்கினார் பைடன்.
  • அவ்வாறே பராக் ஒபாமாவை எள்ளலுடன் விமர்சித்தார் பேலின்.
  • ‘தான் உள்கை அல்ல!’ → தலைநகருக்கு அப்பால் தன்னுடைய பேட்டை என்பதால் அனைத்தையும் புரட்டிப் போடுவேன் என்றார் பேலின்.

ஸ்டைலு:

  • பேலின் குத்திக் கொண்டிருந்த அமெரிக்க கொடி பின் பளபளாவென்று கண்ணைப் பறித்தது – நாட்டுப்பற்று மிக்கவர்.
  • ‘என் வழி தனி வழி’ என்று கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் தனக்குத் தெரிந்த விடைகளை சொன்னார் பேலின்.
  • ‘மில்லியன், பில்லியன்’ என்று விஜய்காந்த் படம் போல் பைடன் பட்டியலிட்டார்.
  • தமிழ்க் கவியரங்குகளில் எல்லாவற்றையும் இரண்டாம் தடவை ரிப்பீட்டேய் என்று முழங்குவார்கள். பைடனும் தமிழகம் வந்திருப்பார் போல… பேசியதை எல்லாம் இரண்டு தடவை மறுமொழிந்தார்.

விஷயம்

  • ‘புஷ் ராஜாங்கம் மாபெரும் தவறுகளை இழைத்திருக்கிறது’ என்பதை வெளிப்படையாக பலமுறை ஒப்புக்கொண்டார் அவரின் கட்சியை சேர்ந்த பேலின்.
  • ‘என்னுடைய ஜனாதிபதியுடன் வேறுபடும் இடங்களைத் தயங்காமல் வெளிப்படையாக சொல்வேன்’ என்று முழங்கினார் பைடன்.

அப்படியானால்… இறுதியாக?

  • ‘அவரவர் நியாயங்களின் உட்புறச் சுவரைக் குடைந்துபார்க்க எல்லாருக்கும் சாத்தியமில்லை’ என்று பாரா சொல்வது போல் பைடனும் சொல்லி ‘ஆனால், அவரவர்களின் முடுவெடுக்கும் திறனை ஆராய்வது சாத்தியமே’ என்றது நெத்தியடி.
  • ‘புச்சா எதுனாச்சும் சொல்லுபா! இன்னும் பழைய பஞ்சாங்கத்தை வைத்து மாரடித்தால், உனக்கு நாங்க புதுசுன்னு புரியவைப்பதற்குள் தாவு தீருது’ என்பது பேலின் பதிலடி.

இரண்டணா கருத்து

  • பேலின் தம் கட்டி இவ்வளவு பெரிய அரங்கைக் கண்டு மிரளாமல், பைடனின் அதிரடி வினாக்களுக்கு மறைந்தோடி, புஷ்ஷையும் தன்னுடைய கட்சியையும் காவு கொடுக்காமல் → சிரித்து சிரித்து பல கோடி அமெரிக்கர்களை சிறையிலடைத்தார்.
  • இடுப்புக்குக் கீழே அடிக்கவும் தயங்கமாட்டேன் என்று → ஸ்பெயின் விஷயத்தில் மகயின் நாக்குழறியதையும், பேலினை டிக் சேனியோடு ஒப்பிட்டும், ஒபாமாவிற்கான புள்ளிவிவரங்களை பதினெட்டு வயசு பாலகரும் புரியுமாறு ஆணித்தரமாக ரிப்பீட்டியும் ஜோ பைடன் தன்னுடைய அனுபவத்தை எடுத்துரைத்தார்.

தொலைக்காட்சி நேரம்: அமெரிக்க தேர்தல் விளம்பரங்கள்

ஜான் மெகயினின் புத்தம்புதிய விளம்பரம்: முன்னாள் ஜனாதிபதி பில் கிளின்டனும் தோன்றுகிறார்:

ஒபாமா ஒரு ட்ரில்லியன் டாலார் செலவழிக்கும் திட்டத்தை முன்வைக்கிறார் என்று குற்றஞ்சாட்டும் குடியரசுக் கட்சி விளம்பரம்:

ஜனநாயகக் கட்சியின் விளம்பரம் – ஜான் மகயினுக்கும் சூதாட்ட மையங்களுக்கும் இடையே உள்ள சம்பந்தம்:

(ஆதாரம்: For McCain and Team, a Host of Ties to Gambling – NYTimes.com)

'தேர்தல் நடக்கும் சுவடே இங்கே வெளியே தெரியாது'

இந்த வாரம் வெங்கட்டுடன் உரையாடல்.

1. கனடாவிலும் புதிய தலைவர் வரப்போகிறார் போலிருக்கிறதே… பக்கத்து பக்கத்து நாடுகளின் உறவு எப்படி மாறும்? அமெரிக்க கோலகலத்தோடு ஒப்பிடுங்களேன்.

கனடாவில் புதிய தலைவர் வரப்போகிறாரா இல்லையா என்று தெரியவில்லை. இப்பொழுதிருக்கும் நிலவரத்தில் வலதுசாரி கன்ஸர்வேட்டிவ் பிரதமர் ஸ்டீவன் ஹார்ப்பரே திரும்ப வரக்கூடும். அமெரிக்கா கனடா விவகாரத்தைப் பார்க்குமுன் கனடாவின் அரசியல் அமைப்பைக் கொஞ்சம் தெரிந்துகொள்ளலாம்.

  • வலதுசாரி – கன்ஸர்வேட்டிவ் – தற்பொழுதைய பிரதமர் ஸ்டீவன் ஹார்ப்பர் (Stephen Harper) – ஜார்ஜ் புஷ்ஷின் நண்பர், (கொச்சையாக அமெரிக்க அடிவருடி என்று இங்கே சொல்லப்படுபவர்). அல்பெர்ட்டா எண்ணைய் முதலாளிகளின் நண்பர்

  • இடதுசாரி – லிபரல் – கிட்டத்தட்ட பதினைந்து வருட ஆட்சிக்குப் பின் இரண்டு வருடங்களாக முக்கிய எதிர்க்கட்சி – தலைவர் ஸ்டெஃபான் டியான் (Stéphane Dion) – பசுமை விரும்பி.
  • அதி இடதுசாரி – நியு டெமாக்ரடிக் – நிரந்த மூன்றாமிடம் – தொழிற்சங்க ஆதரவு; தலைவர் ஜாக் லெய்ட்டன் (Jack Layton)
  • க்யெபெக் பிரிவினைவாதி கட்சி – ப்ளாக் க்யெபெக்வா (Bloc Québécois) – தலைவர் கில் ட்யூஸெப் (Gilles Duceppe) – தற்பொழுது பல் பிடுங்கப்பட்ட பாம்பு; சித்தாந்தத்தில் லிபர்ல்களையொத்த இடதுசாரிகள்.

(இன்னும் கொஞ்சம் விபரம் என்னுடைய பழைய தேர்தல் பதிவிலிருக்கிறது)

  1. கனேடியத் தேர்தல் பிரச்சாரம் – முதல் வாரப் போக்கு
  2. கனேடிய அரசு நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் தோல்வி
  3. இந்திய பிராண்ட் அரசியல் கனடாவில் பரபரப்பாக விற்பனை

இதைத் தவிர புதிதாகப் பலம்பெற்று வரும் பசுமைக் கட்சி. ஆனால் இவர்களுக்கு ஒரூ இடம் கிடைத்தாலே பெரிய வெற்றியாகக் கருதப்படும். கடந்த இரண்டு ஆண்டுகளாக சிறுபான்மையாக அரசு நடத்திவரும் ஹார்ப்பர் தன் அரசாங்கம் செயலிழந்த நிலையிலிருப்பதாகச் சொல்லி அரசைக் கலைத்திருக்கிறார். இதற்கு முக்கிய காரணம் புதிய லிபரல் தலைவர் ஸ்டெஃபான் டியான் கொள்கைப் பிடிப்பு இருக்குமளவுக்கு ஜனரஞ்சக அரசியல் நடத்தத் தெரியாதவர். பேச்சுத் திறனற்றவர். (வரவிருக்கும் பிரதமர் விவாதங்களில் ஸ்டீவன் ஹார்ப்பரும் ஜாக் லெய்ட்டனும் இவரைக் கடித்துக் குதறப்போவது உறுதி).

அதி-இடதான புதிய ஜனநாயகத்தின் இருப்பு லிபரல்களை விட நாங்கள் லிபரல்களானவர்கள் என்று காட்டுவதில் இருப்பதால் அவர்களுக்கு கன்ஸர்வேட்டிவ்களைவிட டியான்-தான் முக்கிய எதிரி. என் கணிப்பில் மீண்டும் சிறுபான்மை ஆட்சியாக, ஆனால் முன்னைவிட சற்று அதிக இடங்களைப் பெற்று கன்ஸர்வேட்டிவ்கள் திரும்ப வரக்கூடும். ஆனால் இவர்களுக்கு கனடாவின் பொருளாதார இதயமான ஒண்டாரியோ மாநிலத்தில் சொல்லிக் கொள்ளத்தக்க எந்த வெற்றியும் கிடைக்காது.

படிப்பறிவு குறைந்த, எண்ணெய்வளம் மிக்க அல்பெர்ட்டா மற்றும் மேற்கு மாநிலங்களில்தான் ஆதரவு கிட்டும். க்யெபெக்கில் பிரிவினை கட்சி பலமிழந்து காணப்படுவதால் அங்கு வலதுசாரியினர் ஒன்றிரண்டு புது இடங்களைப் பெருவார்கள். மொத்தத்தில் இந்தத் தேர்தல் முற்றிலும் தேவையற்றது. லிபரல்களை இன்னொரு தோல்விக்குள்ளாக்கி (தான் முழு வெற்றி பெறாவிட்டாலும்) உட்கட்சிப் பூசலை வளர்த்து பலவீனப்படுத்துவது ஒன்றே இதன் நோக்கம். இந்தப் பம்மாத்தை மக்களிடம் பரிய வைக்கச் செய்யும் பேச்சுத்திறன் ஸ்டெஃபான் டியானுக்குச் சற்றும் கிடையாது.

இனி அமெரிக்க ஒப்பீடு:

அமெரிக்காவைப் பார்க்க இங்கே தேர்தல் அவ்வளவு கோலாகலம் கிடையாது. அதிகபட்சம் யாராவது ஒருவர் வீட்டில் மூன்று தட்டிகள் புல்பரப்பில் குத்தியிருப்பார்கள் (அவர் போட்டியாளர் அல்லது அவரின் மச்சானாக இருக்கக்கூடும்). மொத்தம் ஐந்து வாரங்களில் எல்லாம் முடிந்துவிடும்.

ஒருவரை ஒருவர் அதிகம் திட்டிக்கொள்ளமாட்டார்கள். (நீ முட்டாள் என்றுகூடச் சொல்லமாட்டார்கள், “ஏனுங்க நீங்க முட்டாளமாதிரி பேசுறீங்க” என்றுதான் சொல்வார்கள்). இங்கே பிட்புல், ஹாக்கி அம்மாக்கள், ராணுவத்தில் குண்டடிபட்டவர்கள், கீழே வேலைசெய்யும் பெண்ணிடம் தவறாக நடந்து கொள்பவர்கள், என்றெல்லாம் தலைவர்கள் பீற்றிக் கொள்ளமாட்டார்கள். குடும்பங்கள் பெரும்பாலும் அரசியலில் இழுக்கப்படாது. தொலைக்காட்சி விவாதத்தில் பணவீக்கம், படைக்குறைப்பு, பசுமையாக்கம் என்றுதான் பேசுவார்கள். (அதனால் எந்த சுவாரசியமும் இருக்காது, மறுநாள் பேப்பரில் படித்தால் போதும்).

ஒரு விஷயத்தைச் சொல்லியாக வேண்டும்; சராசரி கனேடியரின் விழுமியக்களெல்லாம் இடதுசாரிதான். கனேடிய வலதுசாரி கன்ஸர்வேட்டிவ்கள் அமெரிக்க டெமாக்ரடிக்களைவிட அதிகமாகவே லிபரல்கள். 40 மில்லியன் ஸ்பானிஷ் பேசும் ஹிஸ்பானிய அமெரிக்கர்களுக்கு அமெரிக்காவில் எந்தத் தனியுரிமையும் கிடையாது. ஆனால் க்யெபெக்கில் மாத்திரமே இருக்கும் ப்ரெஞ்சுக் குடிமகன் இரண்டுநாள் கார் பயணம் செய்து சென்றாக வேண்டிய அல்பெர்ட்டாவிலும்கூட ப்ரெஞ்சு உரிமைகளைப் பெறுவார். இதை எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் மாற்றமுடியாது.

அதே போலே

  • அடிப்படைக் கல்வி,
  • இலவசக மருத்துவ உதவி,
  • ஓய்வுக்காலப் பாதுகாப்பு,
  • சிறுபான்மை (இந்தியர், சீனர்) குடிவரவு,
  • தற்பாலர் உரிமைகள்,
  • கருக்கலைப்பில் பெண்களுக்கான உரிமை,

போன்றவற்றை கனேடியர்கள் பொதுவாக ஏற்றுக்கொள்கிறார்கள். அதில் பெருமிதமடைகிறார்கள். இதில் தீவிர வலதுசாரிகளும் அடக்கம், நான் சம்பாதிக்கிறேன், நான்தான் பலனடைய வேண்டும் என்ற வலதுசாரி இங்கே எடுபடாது.

ஹார்ப்பர் வந்தால், கூடவே மெக்கெய்னும் வந்தால் அமெரிக்க அராஜகங்களுக்கு அடுத்த நொடியிலேயே துணைநிற்பார். ஸேரா பேலின் ஜார்ஜியாவைக் காப்பாற்ற என்று சொல்லி ரஷ்யா மீது படையெடுத்தால் ஹார்ப்பர் அவர்களுக்கு பூட்ஸ் பாலீஷ் போடுக்கொடுப்பார். அமெரிக்கா எண்ணைக்காகத் துளையிட்டால் ஹார்ப்பர் அதைவிட ஆழமாக அல்பெர்ட்டாவில் துளையிட்டு அந்த எண்ணையை டெக்ஸாஸ்க்கு அனுப்புவார். அமெரிக்காவை உதாரணம்காட்டி இங்கும் மாசுக்கட்டுப்பாடு தேவையில்லை என்று சொல்வார்.

பொதுவில் இழந்துபோன ஆஸ்திரேலிய, ஸ்பெயின் நட்புகளை அமெரிக்கா கனடாவின் தோழமையால் சரிகட்டிக் கொள்ளலாம். அல்பெர்ட்டாவில் மெக்கெய்-பேலினுக்குக் கோவில்கட்டி அங்கும் கருக்கலைப்புக்குத் தடைவிதிக்க முயல்வார்கள். பொதுவில் லிபரல்களான பிற கனேடியர்களால் இது தீவிரமாக எதிர்க்கப்படும். ஆனால் உருப்படியாக அமெரிக்க-கனேடிய பரஸ்பர ஒப்பந்தம் எதுவும் வரும் என்ற நம்பிக்கை எனக்கில்லை. ஏனென்றால் அந்த நிலையில் பயனடையப்போவது ஒண்டாரியோ மாநிலமாகத்தான் இருக்கும், சக்திவாய்ந்த ஒண்டாரியோ ஹார்ப்பருக்கு எப்பொழுதுமே தலைவலிதான். எனவே கனடாவுக்கு அமெரிக்காவிலிருந்து எந்த நன்மையும் வராமல் பார்த்துக்கொள்வார்.

ஹார்ப்பர் வந்து ஒபாமா வந்தால் அடுத்த நொடியிலேயே ஹார்ப்பர் அவரிடமும் நட்பு பாராட்டுவார். ஆனால் ஒபாமா தேர்ந்தெடுக்கப்படாமல் இருக்க ஹார்ப்பர் ரிபப்ளிக்கன் கட்சிக்கு உதவ முயன்றதை ஒபாமா எளிதில் மன்னிப்பார் என்று தோன்றவில்லை. (ஜனநாயக் கட்சி ஆரம்ப கட்டத் தேர்தல் சமயத்தில், கனேடிய அரசு அதிகாரி ஒருவரிடம் தான் ஆட்சிக்கு வந்தால் கனேடிய நலன்கள் எந்த வகையிலும் மாற்றமடையாது என்று சொன்னார், உடனே கன்ஸர்வேட்டிவ் ஆட்கள் அதை அமெரிக்க ஊடகத்தில் பரப்ப ஒபாமா அமெரிக்க நலனுக்கு எதிரானவர் என்று ஹில்லரி முழங்கினார். கனேடிய பொதுநலனைவிட அமெரிக்க ரிபப்ளிக்கன்களின் நலன் முக்கியமா என்று எதிர்க்கட்சிகள் இங்கே வெடிக்க, அரசு அதிகாரி ஒருவரை பதவிநீக்கி ஹார்ப்பர் தன்னைக் காத்துக்கொண்டார்). ஒபாமா வருவது ஹார்ப்பருக்கு உவந்ததாக இருக்காது.

ஏதாவது அசம்பாவிதம் நடந்து லிபரல்கள் ஆட்சிக்கு வந்து மறுபுறத்த்தில் மெக்கெய்ன் ஆட்சிக்கு வந்தால் புஷ்ஷின் முதல் நான்காண்டுகளைப் போல கனடாவின் இருப்பை அமெரிக்க அரசு முற்றிலும் மறக்கும். வீராங்கனை பேலினுக்கு பஸ்மண்டை (nerd) டியோனை சீண்டி அழவிடுவது பொழுதுபோக்காக அமையும். அவரது அழுகையை மீண்டும் மீண்டும் ஒலிபரப்பி ரிபப்ளிக்கன் ஊடகங்கள் மாத்திரமல்லாமல் முழு அமெரிகாவுமே பொழுதுபோக்கு பெறும். குடியரசுக்கட்சியனர் எப்பாடுபட்டாவது கனடிய லிபரல் ஆட்சியை ஒழித்து கண்ஸர்வேட்டிவ்களைக் கொண்டுவர நன்றிக்கடனாக உதவுவார்கள்.

அந்த அசம்பாவிதம் இங்கே நடக்கும்பொழுது ஒபாமா ஆட்சிக்கு வந்தால் அமெரிக்க நலன்களுக்கு எதிராகக் கனடாவுக்கு உதவுவதாக ஒபாமாவை ரிபப்ளிக்கன்கள் சீண்டிக்கொண்டிருப்பார்கள். ஆனால் சில நீண்டகால ஒப்பந்தங்கள் உருவாகும். அதிகக் கூச்சல்கள் இல்லாமல் சில திட்டங்கள் நடக்கக்கூடும்.

ஆனால் எது எப்படியோ கிளிண்டன் போகும்பொழுது அமெரிக்காவும், க்ரெய்ட்ச்யென் போகும்பொழுது கனடாவும் பொருளாதாரத்தில் ஏறுமுகமாக இருந்தன. புஷ்ஷுக்குப் பிறகான அமெரிக்காவும் தற்பொழதைய வலதுசாரி அரசியலில் கனடாவும் பொருளாதாரச் சரிவில் இருக்கின்றன. இந்த நிலையில் அமெரிக்காவின் வேலைவாய்ப்புகளைக் கனடா பறித்துக்கொள்கிறது என்று அமெரிக்கார்கள் கூச்சலிடுவதையும் (இது அமெரிக்காவே முன்னின்று நடத்தும் உலகமயமாக்கலின் பின்விளைவுதான் என்பதை அமெரிக்கர்கள் உணர்வதாகத் தெரியவில்லை), கனடாவின் நீர், உலோகங்கள், பெட்ரோலியம், மரம் போன்ற இயற்கை வளங்களை அமெரிக்கா சூறையாடுகிறது என்று முனகும் கனேடியர்களும் பொருளாதாரச் சரிவு நிலையில் பரஸ்பர வெறுப்பைத்தான் உமிழப்போகிறார்கள் என்று தோன்றுகிறது. எல்லாம் நன்றாக இருக்கும் நிலையில் நட்பும் நன்றாகவே இருக்கும், கஷ்டகாலத்தில் நட்புகள் விரிசலடைவது இயற்கைததான்.

நான் இங்கே பொதுவான பார்வையைத்தான் வைத்திருக்கிறேன்.

பொருளாதாரம், பாதுகாப்பு, எல்லைப் பாதுகாவல், இயற்கை வளப் பகிர்வு, என்று பல விஷயங்களை விரிவாக அலச இங்கே இடமில்லை.

2. அமெரிக்காவுடன் ஒப்பிட்டால் கனடா அரசியலில் தெற்காசியர்கள் பெருமளவில் ஈடுபடுவதாக உணர்கிறேன். உண்மையா? இதனால் தமிழர்களின் நலன் முன்னெடுத்துச் செல்லப்படுகிறதா? அமெரிக்காவில் இந்திய வம்சாவழியினரின் தேர்தல் பங்களிப்பு குறித்த உங்கள் எண்ணங்கள் ப்ளீஸ்…

பதில் நாளை…

ஒபாமா கொடுத்த உம்மா

டென்வர் ஜனநாயகக் கட்சி மாநாட்டில் ஜோ பைடன் உரை முடிந்தவுடன் பராக் ஒபாமா திடீரென்று மேடையேறினார்.

ஜில் பைடனோடு உற்சாகத்தைப் பகிரும் முத்தத்தையும் பகிர்ந்தார் பராக்.

பொருத்தமான ‘டயலாக்’ வரவேற்கப்படுகிறது 🙂

[Democratic presidential candidate Barack Obama (R) kisses Jill Biden (C) after her husband Vice presidential candidate Joseph Biden’s (L) address to the 2008 Democratic National Convention at the Pepsi Center in Denver, Colorado USA, 27 August 2008. Obama made a surprise appearance after a speech by Biden.]

மைத்ரேயன்: பரக் ஒபாமாவா? ஜான் மெகயினா?

மைத்ரேயனின் கருத்துகள்…

பராக்கின் ரசிகன் அல்ல நான்.

ஹார்வர்டில் ஒரு சட்டம் பயின்று அதில் உயர் ராங்கில் தேறிய ஒரு வலுவான சிந்தனையாளர். அவர் தான் போதித்த கல்லூரியில் (பல்கலையில்) இதர சட்டப் பேராசிரியர்களிடம் இருந்து தனித்து நின்று மாணவர்களின் கவனத்தை ஈர்த்த ஒரு பேராசிரியர்.

ஜனநாயக் கட்சி பெரும் திமிங்கிலங்கள் உலவும் ஒரு கட்சி. எந்தப் பெரும் நிதியாளரும், பணமுதலையும் தனக்கு உதவாதபோது, பல இளைஞர்களை மட்டும் வைத்துக் கொண்டு ஹிலரியின் + பில் கிளிண்டனின் 20 ஆண்டு அரசியல் முதலீட்டில் அவர்கள் சேமித்து வைத்த பெரும் நிதிக் குவியல் அது கொணரும் ஏராளமான ஊடக பலம் எல்லாவற்றையும் தன் பேச்சு வன்மையாலும், மக்களை அது சென்று சேரும் தன்மையைப் புத்திசாலித்தனமாக நிர்வாகம் செய்ததாலும் வென்று வந்தவர்.

மகெய்னுக்கு இதே செயலைச் செய்ய கிட்டத்தட்ட முப்பதாண்டுகள் ஆயிருக்கின்றன.

பராக் கிட்டத்தட்ட தாம் எந்தக் கொள்கைகளை முதலில் முன்வைத்தாரோ அவற்றில் இருந்து பெரிதும் பின் வாங்காமல் இந்த உள்கட்சித் தேர்தலை வென்றிருக்கிறார்.

மகெய்ன் கடந்த 30 வருடங்களில் அடித்துள்ள அந்தர்பல்டிகள் நிறைய நிறைய. பெரும் பண முதலைகளின் பின்னணியும், கிருஸ்தவ சர்ச்சுகளின் பலமும், அமெரிக்க ஊடகங்களின் இயல்பான வலது சாரிச் சாயப் பார்வையும் அவருக்கு ஒரு வலு உள்ளதான பிம்பத்தைக் கொணர்கின்றன.

உண்மையில் மகெய்னுக்கு அமெரிக்கப் பொருளாதாரம் பற்றி ஏதும் உருப்படியாகத் தெரிந்திருக்காது என்பது என் கணிப்பு. பராக்கிடம் நிறைய சிறந்த நடுவயது executive talent அதுவும் குறிப்பாக financial sector இல் இருந்து சேர்ந்திருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன்.

ஒரு ஜனாதிபதி அமெரிக்காவில் அவரே எல்லாவற்றையும் சிந்தித்துத் தெரிந்து கொள்ளத் தேவை இல்லை என்பதை புஷ் 8 ஆண்டுகளில் திறம்பட நிரூபித்திருக்கிறார். ஒரு நாளைக்கு பல பிலியன் டாலர்கள் வாண வேடிக்கை விட்டுக் கொண்டு 8 வருடம் அமெரிக்கப் பொருளாதாரம் ரத்தம் கக்கிக் கொண்டு இருக்கிறது.

இது ஒன்றே போதும் அமெரிக்கப் பொருளாதாரத்தைக் கதிகலங்க அடிக்க.

பல ட்ரிலியன் டாலர் போர ஒன்றை அமெரிக்கா தொடர்ந்து நடத்தினால் அதன் பொருளாதாரம் க்ஷீணித்துப் போவதில் அதிசயம் இல்லை.

போர்த்தளவாடங்களை உற்பத்தி செய்யும் தொழிலதிபர்களிடம் இருந்து பெறும் லாபம் எல்லாம் அமெரிக்காவில் தானே முதலீடு செய்யப்படும் என்று யாராவது கோணலாக ஒரு வாதம் செய்யாமல் இருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

இன்னும் 8 ஆண்டுகள் ரிபப்ளிகன் கட்சி பதவியில் இருந்தால் அமெரிக்கப் பொருளாதாரம் காலாவதி ஆகி விடும். அதற்காக டெமக்ராடிக் கட்சி ஏதோ உன்னத புருடர்களால் ஆனது என்று நான் வாதிடவில்லை.

இருக்கும் பிசாசுகளில் எது நல்ல குழந்தை என்று கேட்டதற்கு, அப்பன் சொன்னானாம், அதோ கூரை மேல் ஏறி நின்று தீப்பந்ததால் வீட்டுக்கு நெருப்பு வைக்க முயல்கிறதே அவன் தான் இருப்பதற்குள் நல்லவன் என்று.

அந்த நிலைதான் அமெரிக்கப் பிரஜைகளுக்கு. ஆனால் வினையை எத்தனை நாடுகளில் விதைத்தார்கள். அதெல்லாம் திரும்பி வருகிறது.

என்ன பிரச்சினை என்றால் தனி மனித அமெரிக்கர்கள் நிறைய நன்மை செய்ய முயன்றிருக்கிறார்கள் அதெல்லாம் எப்படித் திரும்பி வந்து உதவும் என்று எனக்குப் புரியவில்லை.

ஒரு அமெரிக்க ஜனாதிபதிக்கு எல்லாம் தெரிந்திருக்க வேண்டும் என்பதில்லை என்று நீங்களே சொல்லி மெக்கென் இடம் இருக்கும் மைனஸ்களை நீங்களே இல்லாமல் செய்துவிட்டீர்கள்.

புஷ் பொருளாதாரத்தில் ஈராக் யுத்தத்தினால் அமெரிக்காவுக்கு பொருளாதார லாபம் ஏதுமில்லாதது போல் நீங்கள் போட்ட கணக்கு ஒப்புக்கொள்ள முடியாதது. புஷ் ஏதோ வெறி பிடித்து சண்டை ஆரம்பித்து நடத்தியது போன்ற பிம்பம் சரியானதில்லை. யுத்தம் ஒன்றும் நஷ்டகணக்கு அல்ல.

உங்கள் இரண்டு வாதங்களையும் நான் முன்னமே எதிர்பார்த்து அந்த இரு வரிகளையும் எழுதினேன்.

அமெரிக்க அதிபர்களுக்கு அனைத்தும் தெரிந்திருக்க வேண்டாம் என்பது ரானால்ட் ரேகன் காலத்தில் உறுதிப்பட்டுப் போயிற்று.

எல்லாம் தெரிந்த கிளிண்டனால் வலது சாரி செனட், காங்கிரஸ் ஆதிக்கத்தில் ஏதும் உருப்படியாக மக்களுக்குச் செய்ய முடியாமல் பொருளாதாரத்தை ஓரளவு பெரும் பண முதலைகளின் கைப்பிடியில் இருந்து மீட்டு மத்திய தர மக்களுக்கு ஓரளவு நன்மை தரும் நடவடிக்கைகளை எடுத்து விட்டுப் போனதாகப் பல பொருளாதார நிபுணர்கள் கருதுகிறார்கள்.

இவற்றை நான் அவ்வளவு நம்புவதில்லை.

அமெரிக்கப் பொருளாதாரத்தில் புகையும், ஆடிகளும் அதிகம். அமெரிக்கச் சட்டங்களுக்கு அப்பால்பட்ட சானல் தீவுகள் போன்ற இடங்களில் அமெரிக்கப் பண முதலைகள் சேர்த்து வைத்திருக்கும் நிதியின் அளவு ஒரு வேளை அமெரிக்காவின் வருட மொத்த வருமானம் அளவு கூட இருக்கும் என்று ஊகம் .

இதைப் பற்றி மதர் ஜோன்ஸ் என்ற ஒரு சிறப்பான அரை இடது, தொழிலாளர் சார்பு ஆனால் நல்ல ஆய்வு சார்ந்த பத்திரிகை மரபைக் கடைப்பிடிக்கும் பத்திரிகை ஒரு நீண்ட கட்டுரையை இரண்டு வருடம் முன்பு பிரசுரித்தது என்று நினைவு. அதை அந்தப் பத்திரிகையின் வலைப் பக்கத்தில் போய் ஆவணங்களில் தேடினால் கிடைக்க வாய்ப்பு அதிகம். நான் இந்தப் பத்திரிகையின் நாணயத்தையும், நா நயத்தையும் நம்புபவன்.

இப்படித் தனிநபர் ஜனாதிபதி ஒன்றும் பொருளாதாரத்தில் பிரமாதமாகக் கிழித்து விட முடியாது என்ற கருத்தை கருத்தியலில் (ideology) அமைப்பியல் பார்வை என்று சொல்வார்கள். நான் அமைப்பியலுக்கும், தனிநபர் வாதத்துக்கும் இடையில் இருப்பவன்.

தனிநபர் ஏதோ உலகத்தையே புரட்டி விட முடியும் என்ற கருத்து ஓரளவு இளம்பிள்ளைக் கருத்து. அந்த வயதில் தாம் அசாதாரண சக்தி உள்ளவர்கள் என்ற நம்பிக்கை இல்லாவிடில் என்ன பிரயோசனம்? இளைஞர் வளர அந்த நம்பிக்கை அவசியம்.

நடுவயது வரும்போது அமைப்புகளின் இயல்பு புரிந்து தனிநபர் சாகச விழைவுக்கும், அமைப்பின் எளிதில் நகராத் தன்மைக்கும் இடையில் எப்படி ஊடாடி காரியங்களைச் சாதிப்பது என்பது ஓரளவு தெரிந்து கொள்ளலாம்.

இதில் ஓரளவு ஹிலரி வெற்றி பெற்றிருந்தார் சமீபத்து ஏழு எட்டு ஆண்டுகளில். அவரது இந்த அனுபவ முதிர்ச்சி இப்போது வீணாகப் போகிறது என்பதில் எனக்கு வருத்தமே.

ஆனால் மகெய்ன் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக செனட்டில் இருந்து சாதித்தவை மிகக் குறைவு. அவர் தன் வியத்நாம் போர்க்கைதி பிம்பத்தை வைத்துக் கொண்டு இத்தனை நாள் காலம் ஓட்டி இருக்கிறார். ரிபப்ளிகன் நிர்வாகங்கள் அவருடைய காலத்தில் கிட்டத்தட்ட 2/3 பகுதி இருந்ததால் அவருடைய தொகுதிக்கு செலவழிக்க நிறைய பணம் நிர்வாகத்திடம் இருந்து வாங்கி இருக்க வாய்ப்பு இருக்கிறது. இதனால் அந்தப் பகுதி பெரும்தனக்காரர்களிடம் இருந்து அவருக்கு நிதி வசதி கிட்டி இருக்கவும்
வாய்ப்புண்டு.

ஆனால் நிர்வாகத் திறமை என்று பார்த்தால் ஓபாமாவுக்கும் இவருக்கும் எந்த பெருத்த வேறுபாடும் இல்லை. இருவரும் அமெரிக்க அரசியலில் மிகவும் பெருமையாகக் கருதப்படும் executive experience அதாவது மேலாட்சியாளராக இருந்து நிர்வாகம் செய்து வெற்றி பெறுவது என்ற அம்சத்தில் முழு சூனியம். இருவருக்கும் அது கிடையாது.

[ இந்த அனுபவம் என்பதே ஒரு விதமான மாயை என்பதை நாம் இப்போது கருத வேண்டாம். அதற்குள் நுழைந்தால் நான் மிகவும் cynical ஆக இதை அணுகுகிறேன் என்று எல்லாரும் திட்டுவார்கள் என்று ஊகம் உண்டு.]

ஒபாமாவுக்கு எல்லாம் தெரிந்திருக்க வேண்டாம், ஏனெனில் புஷ்ஷே – அவர் நிர்வாகியாக இருந்து எதையும் பிரமாதமாகச் சாதித்ததில்லை. டெக்சாசில் தான் ஏதோ பெருத்த முன்னேற்றங்கள் கொண்டு வந்ததாக அவர் தம்பட்டமடித்தது எல்லாம் ஊடகங்களின் ஒத்துழைப்போடு அவர் நடத்திய மாயை என்று விமர்சகர்கள் புள்ளி விவரங்களை வைத்து பின்னால் நிரூபித்த கட்டுரைகள் பல பார்த்திருக்கிறேன்.

அவருக்குப் பின்னே ஊடகங்களும், கிருஸ்தவப் பேரியக்கங்களும், க்ளிண்டனின் உருப்படா பாலுறவுக் கேளிக்கைகளால் அன்னியப்பட்ட ஒரு பெரும் நடு அமெரிக்க மக்கள் திரளும் இருந்தன. அப்போதும் கூட தில்லு முல்லு செய்யாமல் அவரால் ஜெயிக்க முடியவில்லை.

இப்படிக் கத்தி முனையில் இருந்த ஒரு நாட்டை அனேகமாக ரிபப்ளிகன் கட்சியின் மீது வெறுப்பே வருமளவுக்குத் தள்ளி இருக்கும் பெருமை புஷ் அண்ட் மூத்த ‘தலைவர்களின்’ ஊழல் ராஜ்யம்.

ஊழல் மக்களுக்கு உதவாது என்பதை நான் உங்களுக்கு எடுத்துச் சொல்லத் தேவை இல்லை என்று நினைக்கிறேன். கடந்த பத்தாண்டுகளில் அமெரிக்க அரசு infrastructural investment இல் ஏராளமாகப் பின் தங்கி இருக்கிறது என்பது எத்தனை ஆயிரம் பாலங்கள் இடியும் அபாயத்தில் இருக்கின்றன, அவற்றைப் பற்றிப் புஷ் அரசு கவலையே படவில்லை என்று மத்திய அரசின் ஹைவேஸ் டிபார்ட்மெண்டின் உள்ளாய்வு அறிக்கையே சமீபத்தில் குறை சொன்னதாக ஒரு அறிக்கை படித்தேன்.

மேலும் புஷ் அண்ட் கோ கொள்ளை அடித்தது மக்களுக்கு எப்படியாவது வந்து சேர்ந்து விடும் என்று நீங்கள் நம்புகிறீர்களானால் அதை நான் எப்படி எடுத்துக் கொள்வது என்றே தெரியவில்லை.

  • சாதாரண தொழிலுற்பத்தியால் ஏராளமான தொழிலாளருக்கு வேலை கிட்டும்,
  • உள்நாட்டில் நுகர்பொருட்கள் நிறைய மக்களுக்குக் கிட்டும்,
  • சுழற்சியில் பணமும், லாபமும், முதலீடும் நாட்டுக்குள்ளேயே தங்கும்.
  • மக்களிடம் வேலைத் திறன்,
  • தொழில் நுட்ப அறிவு,
  • ஊக்கம், வாழ்வில் பிடிப்பு,
  • பண்பாட்டில் நம்பிக்கை, மேலெழுந்து வர உழைக்கும் ஆர்வம், தவிர
  • நல்ல வாழ்க்கை வாழ்வதில் கிட்டும் ஒருவித விகாசம் எல்லாம் இருக்கும்.

ராணுவத் தளவாடத் துறையின் பொருட்கள் மக்களால் நுகரப்பட முடியாதவை. அவை சுழற்சி இல்லாதவை. வெறுமே பல இடங்களில் சேமித்து வைக்கப்பட்டு துருவேறிக் கொண்டிருக்கும். இவற்றில் பயன்பாட்டுப் பயிற்சியும் பெறும் மனிதர்கள் சாதாரண வாழ்வுக்கு அந்தத் திறமைகளை மாற்றித் தர சில பத்தாண்டுகள் பிடிக்கும். ராணுவ வீரர்கள் பெருமளவு பாசறைகளில் வாழ்வதால் இந்தத் திறன் எளிதில் மக்களிடம் கை மாற்றித் தரப்படுவதில்லை.

தவிர ராணுவத் தளவாடங்கள் சாதாரண நுகர் பொருட்களைப்போல மலிவு விலைக்குக் கொடுப்பதற்காகத் தயாரிக்கப் படுவதில்லை. அவை நுகர்வாரிடம் விற்கப் படுவது உயர் விலைகளுக்கு, அந்த உயர் விலையை அரசிடம் பெறுவதற்காக நிறைய லஞ்சமும் ஊழல் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு அது அரசை மேலும் மேலும் உளுத்துப் போகச் செய்கிறது, மக்களின் வரிப்பணம் நல்ல ஆக்க பூர்வமான வேலைகளுக்குப் பயன்படாமல் கோடவுனில் தூங்கப்போகும் பொருட்களுக்குச் செலவிடப்பட்டு மக்களின் தேவைகள் பின்னே ஒத்திப் போடப்ப்டுகின்றன.

இதுவும் சுழற்சியில் மக்களின் முதலீட்டு வளர்ச்சியை முடக்குவதே.

இதைக் கொஞ்சம் தீவிரமாக யோசித்தீர்களானால் ஏன் ராணுவச் செலவு அதிகமாக உள்ள நாடுகள் உருப்படாமல் போகின்றன என்பது புரிய வரும்.

ஆக ஒபாமா இளைஞர் ஆனாலும் அறிவு தீர்க்கம் உள்ளவர் என்பதை மனதில் வைத்து, எப்படி ஹிலரியைப் போன்ற் ஒரு வலுவான் எதிராளியை அவர் தோற்கடித்தார் என்பதையும் கருதுங்கள்.

அந்தத் தேர்தல் ஏதோ வெறும் பிரச்சாரத்தால் வெல்லப் படக் கூடியதல்ல. சில ஆயிரம் குழுக்களை நாடு முழுதும் அமைத்து அவற்றை நடத்தி கோணல் ஏதும் இல்லாமல் சமாளித்து இரண்டு வருடம் போல இந்தப் போட்டி நடக்கிறது. கடுமையான உழைப்பு தேவை இதற்கு. அதுவும் அடிமட்டத்தில் இருந்து ஒருவர் எழுந்து வர இந்த உழைப்பு ஏராளமாகத் தேவை.

ஹிலரிக்கு எல்லாம் அனேகமாக ஏற்கனவே வேண்டுகிற இடத்தில் இருந்தன.

மகெய்னுக்கும் பல வருடங்களாக அதிபர் தேர்தலில் போட்டி இட்டுத் தோற்றுத் தோற்று கற்ற பாடங்கள் நிறைய, அமைப்பும் இடத்தில் இருந்தது. எதிர்க்க வலுவான ஆட்கள் யாரும் இல்லாததாலும் அவர் ஓரளவு சுலபமாகவே இந்தப் போட்டியில் வென்றிருக்கிறார். அவரும் பல பத்து வருட நிதி சேமிப்பில் மேலே மிதந்து வந்து வென்றிருக்கிறார்.

மகெய்னுடைய தத்துவமோ, பொருளாதாரக் கொள்கைகளோ புஷ்ஷின் கொள்கைகள், தத்துவம் ஆகியவற்றில் இருந்து அதிகம் மாறக் கூடியவை அல்ல, ஏனெனில் அவருக்குப் பின் நிற்கும் பண பலம் அப்படி ஒரு பெரும் விலகலை அனுமதிக்காது.

ஒபாமாவுக்கு இந்த வகை கட்டுப்பாடுகள் குறைவு. அதுவும் 8 வருடமாக அதிகாரத்தில் இல்லாத ஜனநாயகக் கட்சியில் இருந்து வெளி வருவதால் பணமுதலைகளின் influence அவர் மேல் குறைவு. இல்லை என்று சொல்லவில்லை. குறைவு என்றுதான் சொல்கிறேன்.

மேலும் அவருடைய rhetoric, policy declaration எல்லாம்

  • நடுத்தர மக்களுக்கு நன்மை செய்யும் பொருளாதாரம்,
  • தொழில் உற்பத்தியை நாட்டில் வளர்க்க முயற்சி செய்தல்,
  • ராணுவச் செலவை மட்டுமல்ல, அன்னிய மண்ணில் போய் அட்டகாசம் செய்யும் கருத்தையே ஓரம் கட்டுதல்

என்று பெரிதும் வியர்த்தமான அரசுச் செலவுகளைக் குறைக்க எடுக்கும் நடவடிக்கைகளோடு ஆக்க பூர்வமான செலவுகளை முயலப் போவதாகவும் சுட்டுகின்றன.

இவை ஏதும் பொருளாதாரத்தில் தற்குறியாக இருந்தால் புரியாமல் செய்யவோ அல்லது பேசவோ முடிந்திருக்காது.

என் வாதம் உள்ளீட்டு வலுவோடுதான் முன்வைக்கப் பட்டிருக்கிறது. ஒரு பத்துபக்கம் எழுத விருப்பம் இல்லாமல் கோடி மட்டும் காட்டி விட்டேன். அதை நீங்கள் உள் நுழைந்து உள் தர்க்கம் எப்படி ஓடும் என்று பார்த்துப் புரிந்து கொண்டால் நல்லது.

Srikanth Meenakshi: Obama’s Campaign Finance Pledge & System of Public Financing

ஸ்ரீகாந்த் மீனாக்ஷி கருத்துகளின் தொடர்ச்சி:

3. ஹில்லரி க்ளின்டனையும் சாரா பேலினையும் தாக்கிய விதம் ‘பராக் பெண்களுக்கு எதிரானவர்’ என்னும் பிம்பத்தை உருவாக்க இலகுவாக்கியிருக்கிறது. இதை அவர் எப்படி தடுத்திருக்கலாம்? உதட்டுச்சாயம்/பன்றி போன்ற உவமானங்கள் குறித்த உங்கள் அபிப்ராயம் என்ன?

பதில்: ஹில்லரி க்ளிண்டனையும் சாரா பேலினையும் எதிர்த்துப் பிரசாரம் நிகழ்த்துவது என்பதே ‘தாக்குவதற்கு’ இணையானது என்றால் அது அநியாயம். ‘என்னை எதிர்த்து என்ன சொன்னாலும் அது பெண்களையே அவமானம் செய்வதற்கு ஒப்பு’ என்று சொல்பவர்கள் பொது வாழ்விற்கு லாயக்கற்றவர்கள்.

உதட்டுச்சாயம்/பன்றி விஷயத்தில் அவர் பேலினை மனதில் வைத்துப் பேசவில்லை என்பது பேச்சைக் கேட்ட/படித்த எவருக்கும் தெளிவாகத் தெரியும் விஷயம். வாஷிங்டன் போஸ்ட் இதைக் கிண்டலாக ‘What’s the Pig deal?’ என்று எழுதி, மெக்கெயினைச் சாடியது.

மற்றபடி இந்த உவமானப் பேச்சைக் கண்டிப்பது போன்றவை எதிரிகளுக்கு வாய்ப்பூட்டு போட முயலும் தந்திரம். மெக்கெயினை எதிர்த்தால், ‘ஒரு போர் வீரனை அவமானப்படுத்துகிறார்’, பேலினை எதிர்த்தால், ‘ஒரு பெண்ணை/பெண்ணினத்தை அவமானப்படுத்துகிறார்’. என்ன கயமை, என்ன பேடித்தனம்!

4. ஜனநாயகக் கட்சி மாநாட்டிலும் — ஏடி & டி (AT&T) போன்ற பெருநிறுவனங்கள் எக்ஸ்க்ளூசிவ் விருந்து அளிக்கின்றன. ஒபாமாவும் வீடு வாங்கியதில் சந்தேகாஸ்தபமான நபரின் உதவியை நாடியிருக்கிறார். மற்ற அரசியல்வாதிகளிடமிருந்து பராக் ஒபாமா எப்படி மாறுபட்டு விளங்குவார்?

பதில்: இரு வேறு விஷயங்கள்.
ஜனநாயகக் கட்சி மாநாட்டில் நிறுவனங்கள் விருந்தளிப்பது என்பது கட்சி சார்ந்த முடிவு (வேட்பாளர் எடுக்கும் முடிவு இல்லை). மேலும், இன்றைய அமெரிக்க அரசியலில் இது ஒரு தவிர்க்க முடியாத சடங்கு. இது போன்றவற்றை வேண்டாம் என்று ஒதுக்கி விட்டு ஒரு சமகளனில் போராட முடியாது.

ஒபாமா வீடு வாங்கிய விஷயத்தில் சறுக்கினார் என்றுதான் நினைக்கிறேன். அதை அவரும் ஏற்றுக் கொள்கிறார் (‘A bone-headed decision’). ஒரு ஆரம்பகால அரசியல்வாதி ஆழம் தெரியாமல் காலை விட்ட நிகழ்வு என்று என்னால் இதை ஏற்றுக் கொள்ள முடிகிறது.

5. தேர்தல் நிதி குறித்து முன்பு ஒரு மாதிரி வாக்குறுதி கொடுத்துவிட்டு, அதன்பின் அந்தக் கொள்கையை ஒபாமா மாற்றிக்கொண்டது, ‘அவர் நிலையான நம்பிக்கை உடையவர் அல்ல’ என்பதற்கான உதாரணமா? பொதுமக்களிடமிருந்து அளப்பரிய காணிக்கை பெறுவது பின்வாசல் கதவைத் திறந்து மீண்டும் நிக்சன்களை உருவாக்காதா? பிரச்சார செலவுகளை இப்படி திரைமறைவாக பணம் திரட்டி நடத்துவது குறித்த தங்கள் எண்ணங்கள் என்ன?

பதில்: பொதுமக்களிடமிருந்து நேரடியாகப் பணம் பெறுவது என்பதற்கும் அரசாங்கத்திடமிருந்து (மக்கள் வரிப்பணத்திலிருந்து) பணம் பெறுவதற்கும் பெரிய வித்தியாசம் இல்லை. சில பெரும் நிறுவனங்களிடமிருந்து பெரும்பணம் பெறுவதே தவறானது, ஆபத்தானது. ஒபாமாவின் திறமையான தேர்தல் இயந்திரம் வரலாறு காணாத அளவு ஏராளமான மக்களிடமிருந்து சிறிய நன்கொடைகளைப் பெற்று செயல்படுகிறது. இது போன்ற ஒரு ஜனநாயக ரீதியான தேர்தல் நிதி சேகரிப்பு உலக வரலாற்றிலேயே நிகழ்ந்ததில்லை. இது ஒரு பிரமிக்கத்தக்க சாதனை.

இத்தகைய வெற்றியை, சாதனையை, ஒபாமாவே எதிர்பார்க்கவில்லை என்பதையே அவரது முந்திய வாக்குறுதி உணர்த்துகிறது. அவர் அந்த வாக்குறுதியை மீறியது உண்மையாயினும், அவரது மீறல் எழுத்தளவான மீறலேயன்றி, கொள்கைரீதியான மீறல் இல்லை.