Daily Archives: மே 15, 2023

வனபோசனம்

சென்ற மாதம் லண்டன் சென்ற வர நேரம் வாய்த்தது.
போன சமயத்தில் பத்தாண்டுகளுக்கு மேலாக #சொல்வனம் பதிப்புக் குழுவில் அங்கம் வகிக்கும் பிரபுவையும் கிரியையும் சந்திக்க வாய்ப்பும் அமைந்தது.
அலுவல் நெருக்கடியினாலும் கடைசி நிமிட திட்டமிடலினாலும் சிவாவினால் தலை காட்ட இயலவில்லை.
அவருக்காக இன்னொரு தடவை இங்கிலாந்து போக வேண்டும்.

வழக்கம் போல் சுவாரசியப் பேச்சு.
நிறைய இலக்கிய அரட்டை.
கொஞ்சம் போல் சொந்தக் கதை.

ஒரு தசாப்தம் முன்று சென்றிருந்தபோது ரதசாரதியாக கையில் குழலுக்கு பதில் ஸ்டியரிங் வளையத்தைப் பிடித்து விமானதளத்தில் இருந்து அழைத்துச் சென்ற கிரியின் வீட்டிற்கு சென்று சுவையான தமிழக சிற்றுண்டிகளை வெட்ட முடிந்தது.
இந்த தடவை பிரபுவின் வீட்டிற்கு செல்ல முடிந்தது. இரு வால் பெண்கள். படு சுட்டி. இங்கிலீஷ் டீ. வாயில் கரையும் இனிப்புகள்.

Jeyamohan’s Stories of the True : Translated from the Tamil கொண்டு வந்திருந்தார் கிரி.

Solvanam முன்னூறாவது இதழ் குறித்து ஆக்கபூர்வமான ஆலோசனையை முன்வைத்தார்.

நாள் முழுதும் உழைத்து, பேசிக் களைத்த சோர்வு தெரியாமல் உற்சாகமாக விவாதித்து, ஆரோக்கியமான விஷயங்களை முன்னெடுத்து, நான்கு மணி நேரத்திற்கும் மேல் என் தர்க்கங்களுக்கு செவி மடுத்த பிரபுவிற்கும் கிரிக்கும் நன்றி!

பூன் கேம்பிற்கு உள்ளாவது ஆங்கிலக் கதைகளை வாசித்து விட வேண்டும்.

சொல்வனம் 294ம் இதழ்

சொல்வனத்தின் புத்தம் புதிய இதழில் 23 உருப்படிகள் வந்திருக்கின்றன.
ஆறு கதைகள்; மூன்று நாவல் தொடர்கள்; மூன்று கவிதைகள் – விட்டு விடலாம்.

கட்டுரைகளில்:

  1. அந்நியனின் அடிச்சுவட்டில் – நம்பி
  2. நாடும் சுவை, தேடும் தொல்லியல் – அருணாசலம் ரமணன்
  3. நோயுற்ற சுயத்தின் அரற்றல் – மௌனியின் படைப்புகளை முன்வைத்து – சுரேஷ் பிரதீப்
  4. சர்க்கரை பூஞ்சை – லோகமாதேவி
  5. நவீனப் போர்விமானங்கள் – ஒரு அரிசோனன்
  6. இன்று நேற்று நாளை – பானுமதி ந.
  7. இந்து மதத்தில் தந்த்ரா நெறிகள் – ஷாராஜ்
  8. காசி – லதா குப்பா (தொடரில் இறுதிப் பாகம்)
  9. ஊர்வசி – அரவிந்தரின் பார்வையில் – மீனாக்ஷி பாலகணேஷ்

இரண்டு கட்டுரைகளை அவசியம் வாசிக்க கோருகிறேன்.

ஆல்பர்ட் காம்யூவைக் குறித்த நம்பி கிருஷ்ணனின் அலசல் – அமர்க்களம் + அட்டகாசம் + அன்னியோன்யம்.

https://solvanam.com/category/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-294/


ஸ்ரீ அரவிந்தரின் கரடு முரடான கவிதையை உள்வாங்கிக் கொண்டு அற்புதமாக மொழியாக்கம் செய்துள்ள மீனாக்‌ஷி – திறம்பட செயல்படுகிறார். – தேவையான அளவு புராணம்; கச்சிதமான செதுக்கிய கவித்துவம்; மூலத்துக்கு இம்மியளவும் பிசகாத தமிழாக்கம் – ஆன்மிகமும் தத்துவமும் தொன்மமும் சரியாகக் கலந்த உச்சம்!

அரிசோனனின் சண்டை விமானங்கள் தொடர் இந்த இதழோடு நிறைவடைகிறது. நிறைய தகவல்.
இரு போதைகள் – மனிதன் எவ்வாறு மிதக்கத் துவங்கினான் என்பதை அருணாச்சலம் ரமணனும் லோகமாதேவியும் கோடிட்டு விவரிக்கிறார்கள்.

எல்லாவற்றுக்கும் சிகரம் – வழக்கம் போல் சுரேஷ் ப்ரதீப்பின் மௌனி குறித்த பதிவு.
இதுவரை எழுதிய, வெளியாகிய எல்லா விமர்சனங்களையும் தொகுத்து வைத்துக் கொள்கிறார். அதன் பின் தன் பார்வையை முன் வைக்கிறார்.
தமிழுக்கு சிறப்பே இந்த மாதிரியான காத்திரமான தீவிரமான உரையாடல் எழுத்து தான். செமையாக இருந்தது!

நன்றி!