ரொம்ப நாள் கழித்து நல்ல கதை ஒன்றைப் படித்த திருப்தி பிரஜேஷ்வர் மதன் எழுதிய “தபால் பெட்டி”யில் கிடைக்கிறது.
ஆங்கிலம் வழி தமிழாக்கம் என்பது அமெரிக்க உணவகங்களில் இந்தியச் சாப்பாடு உண்பது போல், “உங்களுக்கு காரம் எவ்வளவு வேண்டும்? மைல்ட்? மீடியம்?? ஹாட் அண்ட் ஸ்பைசி???” என்பது போல் தூவப்பட்ட மசாலாவோடு இருக்கும்.
தலைப்பாகட்டிக்கோ அஞ்சப்பருக்கோ போனால் அதெல்லாம் கேட்கமாட்டார்கள். அவர்களாக இஷ்டத்துக்குப் போட்டுத் தருவார்கள். ஹிந்தி வழி தமிழாக்கம் செய்யும் அனுராதா க்ருஷ்ணஸ்வாமி அந்த வகை லோக்கல். எல்லாம் சரியாக இருக்கும்.
இந்தக் கதை ஏன் கவர்கிறது?
- சும்மா அங்குமிங்கும் பாய்கிறார்: தபால் பெட்டியை வைத்து என்னைக் குறி வைக்கிறார் பிரஜெஷ்வர் மதான்.
- சிந்து பைரவியில் ஜனகராஜ் கதாபாத்திரம் போன்று இதுவும் செம்மையாக செதுக்கப்பட்டிருக்கிறது.
- சம்பிரதாயமான சம்பவங்கள்; முடிவை நோக்கி பயணிக்கும் பாணி இல்லை. அதுபாட்டுக்கு இழுத்துச் செல்கிறது.
- அதற்காக கோணங்கித் தனமாக புரியாமல், நான்கைந்து வாட்டி வாசித்தாலும் குழப்பாமல் சீராகச் சொல்லப்பட்டிருக்கிறது.
- எல்லாம் இரட்டை அர்த்தம்; ஆனால், வலிந்து எல்லாம் திணிக்கவில்லை. எல்லாம் குறியீடு; எனவே, உங்கள் அனுபவத்திற்கேற்ப சொடேர் சொடேரென்று அடிக்கும்.
முன்னுமொரு காலத்தில் மாந்திரீக யதார்த்தம் எல்லாம் உலா வந்து கொண்டிருந்த காலத்தில் இப்படியாகப் பட்ட புனைவுகளை தமிழிலும் சந்தித்து இருக்கிறேன். இன்றைய காலகட்டத்தில் எவர் இப்படி கொடுக்கிறார்கள்?
தபால் பெட்டிக்குள் உங்களால் புக முடிந்ததா?
சொல்லுங்களேன்…