இந்தப் பாடலை கய் டவன்பொர்ட் எவ்வாறு புனைந்திருக்கிறார்? எட்டுக்கால் பூச்சி சிலந்தி வலை பின்னுவது போல் எனலாம். பூச்சியின் திரவ நூல், எவ்வாறு திட நூலாக மாறுகிறதோ, அது போல் இந்தக் கவிதையும் மீளவொண்ணாத மாற்றத்தை நம்மிடம் உருவாக்குகிறது. தாமிரபரணி ஆற்றின் கரையில் விளையும் கோரைப்புல் கொண்டு செய்யப்படும் பத்தமடைப் பாய் போல் நெய்திருக்கிறார் எனலாம். பச்சை பசேலென விற்கப்படும் கொள்கையை அறுத்து, ஈரப்பதமில்லாத சூழலில் உலர்த்துகிறார். கவிதையின் கருத்தை பட்டென்று தறியில் போட்டால் கருத்துவிடும். எனவே, நனைய வைத்து காயப் போடுகிறார். இப்படி உலர்ந்த புல்லை ஓடும் தண்ணீர் என்னும் பத்து அசைகள் கொண்ட பாவின் அடிகளில் அமிழச் செய்கிறார். அப்போது அது மும்மடங்கு பருத்து மனதில் தைக்கிறது. அதன் பின் நுண்புரி நூல் கொண்டு கோரையின் புறவுறையை உரித்து தன் கவிதையைப் புனைகிறார்.
எவ்வாறு புனைகிறார்? யாப்பு என்றால் யாக்கையைக் கட்டுதல். அதாவது நம் உடம்பானது ரத்தம், தோல், எலும்பு, நரம்பு போன்றவற்றால் கட்டப்பட்டிருப்பதைப் போல எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை என்பவற்றால் தமிழ்ப் பாட்டு, கட்டப்பட்டுள்ளது என்பதனால் இதற்கு யாப்பு என்று பெயர். அவ்வாறு இயற்றப்படும் பாக்களில் நமக்கு உறுப்புக்கள் இருப்பது போல, அவற்றுக்கும் உள் உறுப்புக்கள் அமைத்து செய்வதனால், செய்யுள் என்கிறார்கள். இது சோவியத் சித்தரவதையில் துண்டு துண்டாகப் பிரிப்பதை நினைவுறுத்தினால், அதற்கு நான் பொறுப்பல்ல.
ஒரெழுத்து தனித்தோ இணைந்தோ ஒலிப்பது அசை.
அசைகள் பல சேர்ந்து அமைவது, சீர் எனப்படும்.
சீர்கள் ஒன்றுடன் ஒன்று பொருந்த அமைவது தளை எனப்படும்.
இரண்டு அல்லது பல சீர்கள் சேர்ந்து அமைவது அடி எனப்படும்.
அடிகள் இரண்டு முதலியனவாகத் தொடர்ந்து அடுக்கிப் பாடுவது பா எனப்படும்.
உங்களுக்கு குறள், வெண்பா தெரிந்திருக்கும். நம்பி மொழியாக்கம் செய்த இந்தக் கவிதை பத்து அசைகள் கொண்ட பா. குறில் நெடில் ஈரசைச் சீர் கொண்டு எழுதப்பட்ட ஐஞ்சீரடி எனலாம்.
புலவர் நம்பி கிருஷ்ணன் மொழிபெயர்த்த இந்தப் பாடல் அடிமறி மண்டில ஆசிரியப்பாவா அல்லது கொச்சகக் கலிப்பாவா அல்லது பஃறொடை வெண்பாவா என்பதை உங்களின் வீட்டுப்பாடமாக வைத்துக் கொள்ளவும். அதை நான் சொல்லப் போக புலவர் புகழேந்தியை ஒட்டக்கூத்தர் ஜெயிலுக்குள் தள்ளியவாறு என்னையும் நேரசை, நிரையசை கம்பி எண்ண அனுப்பி விடுவீர்கள்.
புலவர் புகழேந்தியை ஏன் இழுக்க வேண்டும்? அபிதான சிந்தாமணியில் புகழேந்திப் புலவரின் வரலாறு வருகிறது. 12ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த குறுநில மன்னன் ‘சந்திரன் சுவர்க்கி’ புகழேந்திப் புலவரை ஆதரிக்கிறான். பின்னர்ப் பாண்டிய மன்னனின் அவைக்களப் புலவராகப் பதவி ஏற்றுள்ளார். பாண்டிய இளவரசி சோழ மன்னனின் மனைவியானபோது புகழேந்திப்புலவர் சீதனமாகச் சோழ நாட்டுக்கு அனுப்பப்படுகிறார். அங்கே சோழநாட்டு அவைப் புலவரான ஒட்டக்கூத்தரின் காழ்ப்புணர்ச்சியால் (பொறாமையால்) வெறுக்கப்பட்டுச் சிறை வைக்கப்படுகின்றார்.
அதே போல் நம்பி கிருஷ்ணன் மொழிபெயர்த்த கவிதை நாயகரான ஓசிப் மண்டெல்ஸ்டம் (Osip Mandelstam) என்பவரும் சிறையில் வதங்கியிருக்கிறார். ஓசிப் மண்டெல்ஸ்டமின் மனைவியை ஒத்த நபர் இந்த ஆக்கத்தில் வருகிறார். பழங்காலப் பெருமிதத்தைக் குறித்துப் பாடுகிறார்; அந்தக் கால நினைவேக்கத்தை காய்ச்சுகிறார்; அவளின் பெயர் நடெஸ்டா மண்டெல்ஸ்டம் (Nadezhda Mandelstam).
இந்த ஆக்கத்தை மூலத்தின் அளவிலும் நேர்த்தியிலும் எந்த சேதமும் இல்லாமல் தமிழுக்குக் கொணர்கிறார் நம்பி. ”அந்த கிழ கரப்பான் பூச்சி” என்னும்போது அப்படியே ஸ்டாலின் நிழலாடுகிறார்.
நடெஸ்டாவின் கணவன் ஓசிப் — “இரும்பு மனிதர்” ஜோசப் ஸ்டாலின் அரசாங்கத்தின் குலாக் வதைமுகாமினால் கொல்லப்பட்டவர். சோசலிச சோவியத் ரஷ்ய தலைவராக விளங்கிய ஸ்டாலின் பல லட்சம் பேரைக் கொன்றவர் என்பது குருஷ்சாவ் போன்ற ருஷியத் தலைவர்களே ஒத்துக் கொண்ட ஒன்று. உக்ரைன் உள்ளிட்ட ரஷியாவின் நட்பு நாடுகளிலேயே செயற்கை பஞ்சங்களை ஏற்படுத்தியவர். சோல்ட்ஸ்னீட்ஸின் எழுதிய குலாக் தீபகற்பம் பல கோடி மக்களின் சித்திரவதையைக் காட்டும். முப்பதாண்டுகள் கொடுங்கோலனாக ஆட்சியில் இருந்த ஒருவன், நீண்ட கொடிய யுத்தத்தையும் சந்தித்து வெற்றிபெற்ற சர்வாதிகாரி — மனிதநேயனல்லாத ஒரு கொடூரன் என்பதற்கு புனைவுகள் தேவையில்லை. அதற்கு சரித்திர ஆதாரங்கள் நிறைய இருக்கின்றன.
இந்தக் கவிதை கணவனை இழந்த நடெஸ்டா மண்டெல்ஸ்டம் பார்வையில் புனையப்பட்டிருக்கிறது. கவிஞரை நாடு கடத்தி, சிறையில் தள்ளி, கொல்லப்பட்டதை எண்ணிப் பார்த்து, தற்கால சோவியத் இராணுவ வீரனிடம் நினைவுகூறும்விதமாக கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அதற்குத் தொட்டுக்கொள்ள மேகரா நாட்டின் தியோக்னி (Theognis of Megara)யும் ஸ்விட்சர்லாந்து நாட்டின் ராபர்ட் வால்ஸர் (Robert Walser)ம் துணைக்கு அழைத்துக் கொள்ளப்படுகின்றனர். வதை முகாமில் வாடுவது ஒரு பொருட்டேயல்ல. அவர்களின் தியாகம் அலட்சியப்படுத்தப்படுவதும் அவர்களின் குரல் சரித்திரத்தில் ஒலிக்காமல் பார்த்துக்கொள்ளப்படுவதும் எவ்வளவு பெரிய குமுறலை எழுப்பும்?
இந்த மாதிரி பத்து அசைகள் கொண்ட பா பாடல்களாக தன் படைப்பை உருவாக்குவது குறித்து கய் டவன்பொர்ட்டிடம் கேட்டபோது:
விகாரப்படுத்துகருவிகள் என்றோ இடர்ப்பாடுகள் என்றோ அதை நான் சொல்ல மாட்டேன். என்னுடைய ஒவ்வொரு படைப்பின் நடையும் சட்டதிட்டங்களுக்குள் இருக்கின்றன. ஒரு நாவலை எடுத்தால் அத்தியாயங்களாகப் பிரிக்கிறோம். அத்தியாயங்களில் உரையாடல்களை போதிய இடைவெளிகளில் நுழைக்கிறோம். அதில் ஒன்றில் என்னுடைய பத்திகளை சமநீளமாக்கி புனைந்திருக்கிறேன். செய்யுள் பத்தி என்பது இடம். அதன் மேல் என் கட்டமைப்பு நிகழ்கிறது. என்னுடைய ஒவ்வொரு ஆக்கத்திலும் கட்டமைப்பு வேறு வேறாக அமைக்கிறேன். அதில் ஒரு லயம் கிடைக்கிறது. அது காப்பியத்தின் தாளத்தை நிகழ்த்துகிறது. பிரபந்தத்தின் சீர் அமைப்பை இயைபாக்குகிறது.
பத்தமடைப் பாய் பார்த்தால் ஓட்டைகள் இருக்கும். பட்டு மெத்தைகள் எல்லாம் அதனிடம் பிச்சை வாங்க வேண்டும். பாயில் இருக்கும் அந்த இடைவெளிகள்தான் இந்தக் கவிதையை உயர்த்துகின்றன. முறுக்கின் நடுவே ஓட்டையே இல்லாமல் இப்போது மெஷின்கள் பிரதியெடுக்கின்றன. அதைப் போல் இல்லாமல், மணப்பாறை முறுக்கு போல் நட்ட நடுவே ஒரு பெரிய சுழியத்தை வைத்து இந்தக் கவிதையை அதன் மூலச்சுவை கெடாமல் மொழிபெயர்த்திருக்கிறார் நம்பி கிருஷ்ணன்.