பெண் பார்ப்பது இப்பொழுது ஆண் பார்ப்பது என அழைக்கப்படுகிறது. பத்தாண்டுகள் முன்பு வரை ”மாப்பிள்ளை முறுக்கு” பிரபலம். இப்பொழுது மணப்பெண் ப்ரெட்ஜல் (pretzel) புகழடைந்திருக்கிறது.
இதற்கான உதாரணங்களை முதலில் காண்போம்.
“பையன் பக்தி சிரத்தையாக இருக்க மாட்டானே? நாள்தோறும் கோவில் கோவிலாக ஏறி இறங்க மாட்டானே? காலங்கார்த்தாலே பூஜை, புனஸ்காரம் செய்ய மாட்டானே?” – இது இன்றைய கால்கட்டிற்கு மணல்கயிறு மாதவிகள் போடும் முதல் கட்டளை.
“அமெரிக்காவா… லாஸ் ஏஞ்சலீஸ்னா சரிப்படலாம். எங்களுக்கு குளிர் ஒத்துக்காது. அங்கே சமையற்காரி வைச்சுண்டா, தேவயானி கோப்ரகாடே மாதிரி அம்மணமாக்கி வேற சோதனை செய்யறா!” – வெளிநாட்டினருக்கு இடமில்லை என்னும் சுதேசிக் கொள்கையும் இப்பொழுது பரவலாகி வருகிறது.
“இருபது லட்சமாவது சம்பளம் வாங்குகிறானா? பொறியியல் மட்டும் இல்லாமல் மேலாண்மையும் பட்டப்படிப்பு பெற்றிருக்கிறானா? கூடவே பி.எம்.பி., சிக்ஸ் சிக்மா, ஜாவா, பி.எச்.பி. பரீட்சை எல்லாம் தேறி சான்றிதழ் இருக்கிறதா?” – அம்மி மிதிப்பதற்கு முன் காலாகாலமாக சம்பந்திகள் முன்வைக்கும் கட்டளையும் உண்டு.
எல்லாப் படமும் மறு ஆக்கம் செய்கிறார்களே… ’மணல் கயிறு’ மறுபடி மருமகள் நிபந்தனைகளைக் கொண்டு வந்தால், “எட்டு வித கட்டளைகள் இட்டு ஒரு லாபமில்லை” பாட எந்தப் பாடகி நீங்கள் தேர்வு செய்வீர்கள்?