சென்னை இராஜாங்கம்: V


அவ்வப்போது அமெரிக்காவில் விழும் ஒரு இன்ச் snow, ஒன்றரை மில்லிமீட்டர் பனியை, வீட்டு வாயிலில் இருந்து தெருவுக்குத் தள்ளிவிடுவதற்கே கண்களாலும் மூக்காலும் அழுபவன் நான். மிக மிக எளிமையாக வாசலைத் தெளித்துக் கோலம் போடுவது போன்ற கைங்கர்யம் அது.

குட்டி எவரெஸ்ட் மாதிரி இருக்கும் மணற்குவியலை, தலைக்கு மேல் இருக்கும் குப்பை வண்டியில் shovel செய்தவரைப் பார்த்தவுடன் மனம் நாணிக் கோணியது. சர்வ சாதாரணமாக, பகல் 41 டிகிரி வெயிலில் தூக்கிப் போட்டார். நீல்மெட்டல் சென்னையை சுத்தமாக மாற்றியுள்ளது.

முப்பது வருடம் முன்பு ரூபவாஹினிக்காக இலங்கை ஆண்டெனாக்கள் மொட்டை மாடிகளை நிறைத்திருக்கும். காக்கைகளும் அவற்றை ஆசையாகத் திருப்பி வைக்கும். ராஜபக்ஸே தமிழ்த் தொலைக்காட்சியை நிறுத்தி விட்டாரா என்று நாராயணனை விட்டு விசாரிக்க சொல்லவேண்டும். இன்றைய மாடிகள் முழுக்க சாடிலைட் டிஷ் ஆக்கிரமிப்பு. காக்கைகளும் காணாமல் போய்விட்டது. வேடந்தாங்கலிலாவது இருக்கிறதா என்று ப்ளாஸ்டிக் பைகளில் சோறு கட்டி சென்று பார்த்துவர வேண்டும்.

ஆட்டோக்காரர்கள் மெமரி கார்ட் கொண்டு பாட்டு போடுகிறார்கள். ஆயிரம் ரூபாய் கொடுத்தால் கிளம்பிய இடத்தில் இருந்து சேரும் இடத்திற்கே கேட்கும் அலறலுடன் கூடிய எம்பி3 ஒலி. வேண்டிய பாடல்களை ஐபாட் shuffle ஆக மாற்றும் வசதி. பண்பலை என்னாச்சு என்னும் கேள்விக்கு ‘போயே போச்சு‘ங்கிறார்.

‘ஏன்’?

கேள்விக்கு பத்ரி மொட்டை மாடியில் பதில் சொன்னார்.

‘எஃப்.எம். ரேடியோக்கள் செய்திகளை ஒலிபரப்ப முடியவில்லை. ஆல் இந்தியா ரேடியா தவிர எவரும் நேரடி நிகழ்வுகளை உடனுக்குடன் சொல்லமுடியாது! ஐ.பி.எல் மாதிரி எத்தனையோ லைவ் விஷயங்கள் வானொலிக்கு வரவேண்டும்’.

மோகம் முப்பது தபா; ஆசை அறுபது ராவு என்பது போல் சிட்டி சென்டரும், எக்ஸ்டென்ஷன்களில் உலவும் ஸ்பென்சரும் பல்கிப் பெருத்தபின் சென்னை யுவன்களுக்கும் காரிகைகளுக்கும் மால் அலுத்துப் போய்விட்டது. அல்லது ஜாகையை மாற்றிக் கொண்டுவிட்டார்கள்.

இன்றளவிலும் ‘சூடிதாரில் நான் வருவேன். சல்வார் கமீஸை நான் மறவேன்’ என்று மதுரை சோமுவாகிறார்கள். லுங்கியைப் போன்ற வண்ணமயமான காற்றோட்டமான ஸ்கர்ட், அதிர்ச்சி மதிப்பீடாக தாவணி, நாகரிகமும் குறையாமல் கற்பும் காக்கும் முக்கால் பேன்ட் எதுவும் காணோம். அதெல்லாம் வந்தால் ‘ராம சேனா’வும் பாரதிய ஜனதாவும் வந்துவிடும் என்னும் பயமோ!

‘கடந்த 48 மணி நேரமாக பெண்களுடன் கலந்துரையாடி, பின்தொடர்ந்து “What women wantனு புரிந்து கொள்வதிலேயே நேரம் போவதாக’ சலித்துக்கொண்டவரிடம்தான் விசாரிக்கவேண்டும்.

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.