Salma – Sila Kavithaigal


சல்மா தொண்ணூறுகளின் இறுதியில் எழுத்தொடங்கிய தமிழின் முக்கியமான இளம் கவிஞர்களில் ஒருவர். காலச்சுவடு வெளியீடாக ‘ஒரு மாலையும் இன்னொரு மாலையும்’ என்ற கவிதை நூலும் உயிர்மை வெளியீடாக ‘பச்சை தேவதை’ என்ற கவிதை நூலும் உட்பட மூன்று கவிதைத் தொகுப்புகளும் சமீபத்தில் ‘இரண்டாம் ஜாமங்களின் கதை’ என்று ஒரு நாவலும் வெளிவந்திருக்கின்றன. சல்மா சிறுகதைகளும் எழுதுகிறார்.

ஏராளமான எதிர்ப்புகளுக்கிடையே பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுக் கவுன்சிலராக இருந்தவர். பொது நூலகங்களுக்குச் சிறந்த நூல்களைத் தெரிவு செய்யும் நூல் தேர்வுக் குழுவில் இடம் பெற்றிருக்கிறார்.

பயண நேரம் – சல்மா

பயணம் நிகழ்கையில்
ஜன்னலோர இருக்கை வாசிகள்
அதிர்ஷ்டசாலிகள்

சீறும் காற்று
முடியைக் கலைக்கவும்
கண்ணில் தூசு விழவுமாய்
அசௌகர்யங்கள் இருந்தாலும் கூட

மனிதருள்,
இயற்கையுள் நுழைய
வேண்டும் ஜன்னலோர இருக்கைகள்

பாதையோரத்தில்
இடிந்து கிடக்கும்
ஒற்றைச் சுவர்
என்னவாய் இருந்திருக்கும்?
அது ஓர்
அச்சம் தரும் நினைவு

முடிவு நேரம் அறிவிக்கப்படாத
பயணம் துரிதப்படுத்துகிறது
எல்லாவற்றையும் முடிக்க

ஏதொன்றுமே
முடிவடைவதில்லை.

பயணம் முடியும் வேளை
தகிக்கும் நிறைவின்மை
அச்சுறுத்துகிறது அனைவரையும்

சமயத்தில் எரிக்கிறது
எல்லாவற்றையும்

நன்றி: ஒரு மாலையும் இன்னொரு மாலையும் – சல்மா –
காலச்சுவடு பதிப்பகம் – விலை ரூபாய் 40

———————————————————

Kalachuvadu

சல்மா
மாலை நேரக்காற்று
முன்னிற்க
மணநாளில் பவ்யமாய்
விடை பெறுகிறாள்
மணப்பெண்

அவளது பர்தாவுக்குள்
முகம் புதைத்தபடி
மலர்களின் வாசனையோடிணைந்த
புணர்ச்சியைப் போதிக்கிறாள்
தமக்கை.

தானே அறிந்திராத
தடித்த புத்தகத்தின் பக்கங்களை
துரிதகதியில் புரட்டுகிறாள்
எந்த நாளில் புணர்ந்து
கருவைத் தள்ளிவைக்கலாம் எனவும்
ஹராமாக்கப்பட்டதெனவும்*
கூடவே
புணர்ச்சிக்குப் பிந்தைய
சுத்த பத்தங்களையும்

தன் குள்ள உருவத்திற்கேற்ற
குற்றக் கண்களில் குறுக்கிடுகிற
வாழ்வின் சுகவீனங்களையும்
நைந்து போன புணர்ச்சியின்
வெற்றுச் சூத்திரங்களையும்
தனக்குள்ளாக ஒளித்தபடி

அவ்வப்போது
வெட்கத்தில் துவண்டு
விழுகிற வார்த்தைகளை
சிறுமியின் அசட்டுத் தன்னம்பிக்கையுடன்
துடிப்போடு கடிவாளமிட்டபடி

தன் காதுத் தொங்கட்டானில்
சிக்கி மடங்கிய ஆலோசனைகளை
நீவி எடுத்து

அன்றைய முழு இரவுக்குமாக
படுக்கையில் படர்த்துகிறாள்
புது மணப்பெண்

* ஹராம்: தவிர்க்கப்பட வேண்டியது.
——————————————————————
மழைக்காலங்களில்
தெருவில் அலையும் சிறுமிகள்
வெண்ணிற மழையையும்

வேனிற் காலங்களில்
வியர்வையை உரித்தெடுத்தபடியே
மஞ்சள் வெயிலையும் உடுத்துகிறார்கள்

தினமும் கருப்பு இரவுகளை உடுத்தி
தெருக்கோடி மூலைகளிடமும்
டூரிங் டாக்கீஸ் மணல் வெளிகளிடமும்
நட்போடு கிசுகிசுக்கிறார்கள்

தம் கட்டற்ற செயல்களால்
பருவங்களை வண்ண உடையாக்கி
காலம் இன்னும் செப்பனிடாத
குட்டி முலைகளின் மீது
உடுத்துகிறார்கள்

பிறகொரு நாளில் மொத்த பருவங்களும்
மொத்த நிறங்களும்
ஒரே நிறமாய் உருப்பெற்று

யோனிக் கிண்ணத்திலிருந்து
உருகி வழிய
அவ்வர்ணத்தை வியந்து சமைகிறார்கள்
சிறுமிகள்

————————————————————————-

இரண்டாம் ஜாமத்துக் கதை

குழந்தைகளைப் பெற்றதற்குப் பிந்தைய
இரவுகளில்
பழகிய நிர்வாணத்திற்கிடையில்
அதிருப்பதியுற்றுத் தேடுகிறாய்
என் அழகின் களங்கமின்மையை

பெருத்த உடலும்
பிரசவக் கோடுகள் நிரம்பிய வயிறும்
ரொம்பவும்தான் அருவெறுப்பூட்டுவதாய்ச்
சொல்கிறாய்
இன்றும் இனியும்
எப்போதும் மாறுவதில்லை எனது உடலென்றும்

நிசப்தத்தின் பள்ளத்தாக்கில்
புதையுண்டிருக்கும் என் குரல்
தனக்குள்ளாகவே முனகிக்கொண்டிருக்கும்

உண்மைதான்
என் உடலைப் போலல்ல
உன்னுடையது
பறைசாற்றிக்கொள்வதில்
வெளிப்படையாக இருப்பதில்

இதற்கு முன்னும்கூட
உன் குழந்தைகள் வேறு எங்கோ
யார் யாருக்கோ பிறந்திருக்கலாம்
உன்னிடம் தடயங்களில்லை என்பதால்
நீ பெருமை கொள்ளலாம்

நான் என்ன செய்ய?
என் நசிவைப் போலத்தான்
இந்தப் பிரசவக் கோடுகளும்
எளிதில் செப்பனிட முடிவதில்லை
வெட்டி ஒட்டிவிட இவ்வுடல் காகிதமில்லை

உன்னைக் காட்டிலும்
மோசமான துரோகத்தினைப் பூ¤ந்திருக்கிறது
இயற்கை எனக்கு
உன்னிலிருந்துதானே தொடங்கிற்று
எனது தோல்வியின் முதலாவது நிலை

முதல் ஜாமத்தைக் காட்டிலும்
விபரீதமானது
கனவுகள் பெருகும் இரண்டாம் ஜாமம்

சுவரோவியத்தில் அமைதியாக
அமர்ந்திருந்த புலி
இவ்விரண்டாம் ஜாமத்தில்தான்
என் தலைமாட்டிலமர்ந்து
உற்றுப் பார்த்துக்கொண்டிருக்கிறது.
-சல்மா

நன்றி:
“ஒரு மாலையும் இன்னொரு மாலையும்” கவிதைத்தொகுப்பு
காலச்சுவடு பதிப்பகம்
———————————————————

பட வீட்டின் தனிமை

சுவா¤ல் தொங்கும்
வரைபட மர நிழலும்
ஒற்றைக் குடிசையும்
கொஞ்சம் பூக்களும்
ஒரு வானமும்.

கண்கள் பூக்கள் மீதிருக்க
மனம் தேடிப் போகிறது
வரைபட வீட்டின்
தனிமையை

-சல்மா
நன்றி:
’ஒரு மாலையும் இன்னொரு மாலையும்’ கவிதைத்தொகுப்பு
காலச்சுவடு பதிப்பகம்
———————————————————

இவ்விடம் – சல்மா

இவ்விடம்
அதிகம் பரிச்சயமில்லையெனினும்
இங்கிருந்து கிளம்புவதென்பது
வீண் துக்கத்தினை உண்டாக்குகிறது

நீ என்னைத்
தீவினையின் எல்லையில் விட்டு
முன்னகர்ந்து செல்வதை அனுசரித்து
தடைசெய்ய மனமின்றி விலகிச் செல்கிறேன்

இடங்களும் மனிதர்களும் உருவாக்கும்
இந்த உறவும் பிரிவும்
படர்வதற்குள் கிளம்புகிறேன்
என் ஆதிகாலக் குகை வாழ்விற்கு

எல்லோருக்கும் போலவே
இங்கிருந்து எடுத்துச் செல்ல
ஞாபகங்கள் உண்டு
விட்டுச்செல்லத்தான் எதுவுமில்லை
விட்டுச் செல்கிறேன்
புறக்கணிப்பின் வெறுமையை
நிராகரிக்கும் வலிமை என்னிடம் எப்போதுமிருந்ததில்லை
என்கிற சிறு குறிப்பை

– சல்மா (தொகுப்பு – ஒரு மாலையும் இன்னொரு மாலையும்)

———————————————————

மெளனத் துரு

சொல்வாய் எனும் எதிர்பார்ப்பில்
இடைவெளியின்றி விழுந்து
நிரம்பிக்கொண்டிருக்கிறது
திடமான மெளனம்

எளிதாகவேயிருக்கின்றது
வார்த்தைகளைப் பற்றிக்கொள்வதைவிடத்
துருவேறியிருந்தாலும் கூட
மெளனத்தைப் பற்றிக்கொள்வது

-சல்மா (பச்சை தேவதை)

———————————————————

இராப்பகலாய்
சலசலக்கிறது அரச மரம்

அதன் மொழியில்
பாடிக்கொண்டிருக்கிறது
அதனுடைய பாடலை

மறந்த காதல்களை
பிரிந்த நண்பர்களை
கழிந்த இனிய நாட்களைத்
தூண்டும் பாடல்கள்

இப்பாடல்கள்
என்னையும் ஒரு பறவையாய்
தன்னிடம் ஓடிவரச் செய்யும்
ஒரு தந்திரமாக இருக்கலாம்

காற்றால்
பறவையால்
பாடல்களால் நிறைந்த
இம்மரம் அறியுமா
என் சிறகின்மைகளை.

— சல்மா.

———————————————————

அவர்கள் – சல்மா

எனது மிருதுவான காலடிச் சுவடின் மீது
மிக கவனமாய் பதியும்

காலடிச் சுவடிகள்
எனது உதடுகளிலிருந்து சிதறும்
வார்த்தைகளைப் பொறுக்க
நிழலாய்ப் பின்தொடரும் செவிகள்.

என் சுவாசக் காற்றை சேகரிக்க
அலையும் சுவர்கள்

உடலின் அசைவுகளில்
மறைக்கப்பட்ட பகுதிகளில்
இமைகளேயற்று
பதியும் கண்கள்

எனது
இந்தக் குறுகிய வாழ்வெல்லைக்குள்
கண்காணிக்கும்
கண்கள்
காதுகள்

எனது பாடல்
பாதியில் நின்றுவிட
எனது காட்சிகள்
எனக்குள்ளேயே திரும்பிவிட

என் அந்தரங்கத்தில்
படர்ந்து கொண்டேயிருக்கின்றன
அந்தக் கண்கள்
அந்தக் காதுகள்
அந்தக் கால்கள்

——————————————————————————-

நீங்குதலின்றி

இன்றிரவையும் தொலைவிலிருந்தபடி
உறிஞ்சிக்கொண்டிருக்கின்றாய்
வியர்வை ஊறும் உடலில்
மீந்திருக்குமுன் ஸ்பரிசங்களின்
தடயங்களை
நினைவுகளால் சுரண்டியபடி
சந்திப்பின் ஞாபகங்களைத்
தடவிக் கரைகிறேன்

பிசுபிசுக்கின்ற இரவை
உலர்த்தி மடிக்கிறது சுவாசம்
பாதி இரவில் ஒரு மிருகமென
என்னை அடித்து வீழ்த்திக்கொண்டிருக்கிறது
உனக்கான இந்தக் காமம்
பிறகது
ஒரு புகைச்சித்திரமாய்
இருளின் வர்ணங்களில்
கூடிநிரம்புகிறது

பிறகு நிலவின் ஒளியில்
எரிமலைக் குழம்பாகி வழிந்தோடி
தெருவின் நிசப்பத்திற்குள் ஊடுருவிப்
படர்ந்து அதன் விதிகளை எரிகிறது
நிலவொளி
நனைத்துக்கொண்டிருக்கிறது
பிறகு பெய்த மழையையும்
எனது காதலையும்

-சல்மா
{பச்சை தேவதை}

——————————————————————————-

அம்மாவின் வீடு – சல்மா

தன் எளிய வீட்டை
தன் செயல்களால்
மேலும் மேலும் எளிமையானதாக ஆக்குகிறாள்
அம்மா
விலங்கின் பணிதலோடு

அவமானத்தினால் பிசுபிசுக்கும்
நேரங்களை உலர்த்தியபடி
மட்கும் மௌனங்களை உதிர்த்தபடி மற்றும்
ஒழுங்குகளின் புதிர்களைப் பேணியபடி

தான் சுமந்திருந்த பொதிகளை
தனக்குள்ளேயே இறக்கி வைக்கிற
அம்மாவின் வீட்டைப் போலல்ல
பறவைகளற்ற பொழுதில் துவங்குகிற
அப்பாவின் வீடு

அது
குரல்களின் உக்ரத்திலும்
உடலின் உஷ்ணத்திலும்
தகிக்கிறது

வார்த்தைகளைக் கொட்டி
அறைகளையும்
அம்மாவின் மூளையையும் நிரப்புகிறது

உடலற்ற குரல்களும்
குரல்களற்ற உடல்களும்
அலைமோத வீடு
ஓங்கிய தோள்களில் உயர்ந்து
நின்று
அம்மாவின் உடலைப் பிழிகிறது

முதிர்ந்த இஇரவுகள் தோறும்
உறக்கத்திலிருந்து தட்டி எழுப்புகிறது
அம்மாவின் யோனியை

இன்றேனும் நான் மடியிலிட்டுத்
தாலாட்டி உறங்கச் செய்ய வேண்டும்
என்னுள் விழித்திருக்கிற
அம்மாவின் வீட்டை.
——————————————————————————-

யாரேனும் ஒருவர்
கொலையாளியாகும் சாத்தியங்களுடன்
ஒன்றாக உறங்குகிறோம்.. .. .. ..
உன்னிடமிருந்து
கலங்கலானதே எனினும்,
சிறிது அன்பைப் பெற.. .. ..
எல்லா அறிதல்களுடனும்
விரிகிறதென் யோனி

-சல்மா (ஒரு மாலையும் இன்னொரு மாலையும்)

9 responses to “Salma – Sila Kavithaigal

 1. தொகுத்துத் தந்ததற்கு நன்றி

 2. பிங்குபாக்: Salma - Links « Snap Judgment

 3. Dear Salma,

  romba nalla irundhadhu… ungal kavithaigal…evvalavu vali, vedhanai,kobam…miga azhagana therivaana vaarththaikal…ungalin irandam jaamathin kathaiyum padiththen….ennai nirambavey paadhiththadhu… ungalin petti with ramesh prabha, kalaignai tv yil paarthen…alattal illaadha oru uraiyaadal adhu… vaazhththukkal…

 4. intha kavithaikalai kathalithu kavithaiyai punarum ennathil vasika murpatal enathu manam udainthu sithari kondirukuthu…
  i love salma

 5. சலசலக்குகிறது அந்த அரச மரம் – எனது பழைய நினைவுகள் றகடித்து சென்றன.அரச மரத்துன் கீழ் படுத்து கனவு காண்கிறேன் . நன்றி சல்மா.

 6. nirakarikkum valimai illai enkira siru kurippu ….. enathu pargithalum athuvae with love lavanya.

 7. எதார்த்தங்கள் வழிந்தோடும் வெள்ளி நீரோடை

 8. சல்மாவின் கவிதைகள், எதார்த்தங்கள் வழிந்தோடும் வெள்ளி நீரோடை

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.